வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

4. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்

1. சாதாரண நித்திய கரும விதி

காலைக் கடன்

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்துச் சிறிது நேரம் உட் கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக் கொண்டு, முன் ஊறுகிற சலத்தை உமிழ்ந்து, பின் வரும் சலத்தை யெல்லாம் உட்கொள்ள வேண்டும். பின்பு எழுந்து உள்ளே சற்றே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மல சலம் உபாதிகளைக் கழித்தல் வேண்டும். மலங்கழிக்கின்றபோது, வலக்கையால், இடப் பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். சலங் கழிக்கும்போது, இடக் கையால் வலப் பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண் டும். மலமாவது சலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விடயங்களைச் சிறிதும் நினை யாமில், மலசல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னும் தடைபடுமானால், இடப் பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்துகொண்டு, மல் சங்கற்பத்தோடு மலவு பாதி கழித்தல் வேண்டும். சலம் தடைபட்டால், வலப்பக்கமாகச் சற்றே படுத்துப் பிராணவாயுவை இடப் பக்கம் வரும்படி செய்துகொண்டு, சல சங்கற் பத்தோடு சலவுபாதி கழித்தல் வேண்டும்.

மல சலவாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவைகளை அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கை, கால் முதலிய உறுப்புக் களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரால் பற்றறத் துடைத்தல் வேண்டும். பின் வேலங் குச்சி, ஆலம் விழுது இவைகளைக் கொண்டு பல்லழுக் கெடுத்து, அதன்பின் கரிசலாங் கண்ணித்தூள் கொண்டு, உள்ளே சிறிது சாரம் போகும்படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்னி இலை ஒரு பங்கு, தூதுளை இலை முசுமுசுக்கை இலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்துகொண்டு அதில் ஒரு வராகன் எடையை ஒரு சேர் நல்ல சலத்தில் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து அதிலுள்ள ஒரு சேர் சலமும் சுண்டக் காய்ச்சி, இந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

காலை வெய்யில் கூடாது

காலையில் இளம் வெய்யில் தேகத்தில் படாதபடி பொழுது விடிந்து ஐந்து நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் வெகு நேரம் தேகம் மெலிவு வரத்தக்க உழைப்பை எடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந் தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளவெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவ சிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

பகல் ஆகாரம்

பசி கண்டவுடன், தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரம் கொடுக்கும்போது மிகுந்த ஆலசியமுமாகாது; மிகுந்த தீவிரமும் ஆகாது. முதற் பட்சம் சீரக செம்பா அரிசி, அன்றிப் புன்செய்விளை காரரிசியும் தவிர, நேரிட்ட அரிசியின் வகைகளாகும். அது சாதமாகும்போது அதிக நெகிழ்ச்சியு மாகாது; அதிக கடினமும் ஆகாது. நடுத்தர மாகிய சோற்றை அஃனி அளவுக்கு அதிகப் படாமலும் குறைவு படாமலும் அறிந்து உண்ணுதல் வேண்டும். ஆயினும், ஒரு பிடி குறைந்த பட்சமே நன்மை. போசனம் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும். அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

ஆகார வகை

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு கொள்ளுதல் கூடும். பழவகைகள் உண்ணாதிருத்தல் வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்க்கவேண்டும்.

கடுகு சேர்ப்பது அவசியமன்று. உப்புக் குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அன்றி எந்த வகையிலும் உப்பு மிகுதிக் கொள்ளாமல், உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாகும். தாளிப்பதற்குப் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பட்சத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவும் கூடும். வெங்காயம் வெள்ளைப் பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக் காய், பீர்க்கங்காய், கலியாண பூசனிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் இவைகள் பதார்த்தம் செய்தல் கூடும். இவற்றினுள் முருங்கை, கத்திரி, தூதுளை, பேயன் வாழைக்காய் இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்துகொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்துகொள்ளலாம்.

வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் கொள்ளப்படாது. ஏகதேசத்தில் சிறிது கொள்ளவும் கூடும். சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச் சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப் படாது.

புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணி கீரை, தூதுளங்கீரை, முன்னைக்கீரை, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, இவைகளைப் பருப்போடு சேர்த்தும் மிளகோடு சேர்த்தும் புளியிட்டுத் தனித்தும் கறிசெய்து கொள்ளல் வேண்டும். மற்றக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக்கொள்ளவும் கூடும்.

புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளை கட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம் பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல் வேறொன்றில் கூட்டல் முதலியன வாகச் செய்து நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவும் சேர்க்கப்படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமில்லை. ஏக தேசத்தில் நேர்ந்தால் கொள்ளவும் கூடும்.

ஜலம்

சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு மேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரண மாக்கி வைத்துக்கொண்டு நல்ல சலத்தில் கொஞ்சம்போட்டு ஐந்துபங்கில் மூன்று பங்கு நீர்சுண்ட இரண்டு பங்கு நீர் நிற்கக் காய்ச்சி அதைத் தாகம் கொள்ளுதல் வேண்டும். நேராத பட்சத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டு மேயன்றிக் குளிர்ந்த சலம் கொள்ளப்படாது. எந்தப் போசனத்திலும் புலால் எந்த விதத்திலும் புசிக்கப்படாது.

எப்படிப்பட்ட போசனமாயினும், சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத் திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போசனம் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போசனங்களை அறிந்து விடல் வேண்டும். பகலில் நித்திரை கூடாது. பகலில் போசனம் செய்தவுடன் சற்றே படுத்தெழுந்து அல்லது வேறு காரியங்களில் பிரவேசித்தல் கூடாது. ஆயினும், நித்திரைவரும்படி படுத்தல் கூடாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை ஆகாது. சிறிது படுத்து எழுந்தபின் பாக்கு வெற்றிலை யும் குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய சலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப் பின்பு ஊறும் சலத்தை உட்கொள்ளல் வேண்டும். பகற் போசனம் செய்த சுமார் 17) நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப் பழம், ரஸ்தாளி வாழைப் பழம், பங்காள வாழைப் பழமும் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்தால்,நெய் சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். பகலில் பெண்கள் தேக சம்பந்தம் கூடாது. பகற் போசனம் செய்தபின் சற்றுநேரம் கடவுளைத் தியானித்து இருக்க வேண்டும். அதன்பின் எந்த வேலை செய்யினும், தேக கரணங்களுக்கு நெளிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும், சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

மாலைக்கடன்

சாயங்கால வெய்யில்,தேகத்தில் சிறிது படும்படி உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்த திக்கில் அப்போது உலாவப்படாது. அன்றிக் கடின வெய்யில், பனி, மழை இவைகள் தேகத்திற் பட உலாவப்படாது.

இராத்திரி முன்பங்கில் தேக சுத்திசெய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியில் விவகாரஞ் செய்தல் இவை முதலியவை கூடும்.

பின் போசனஞ் செய்தல் வேண்டும். இராப் போசனம் பகற் போசனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும். இரவில், தயிர், கீரை, வாயுவான பதார்த்தம், குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்தரி, முருங்கை, வற்றல் முதலியவை யாம். இரவில் போசனம் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண் டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய் தல் வேண்டும். சுமார் பன்னிரண்டு நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது, தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிக் குடித்தல் வேண்டும். பின் சிலநேரஞ்சென்று சுமார் பதினைந்து நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங்குறைய, வெற்றிலை மிகவும் அதிகப்படக் கலந்து, பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு, முதற் சலத்தை உமிழ்ந்து பின்வருஞ் சலத்தை உட்கொண்டு, திப்பியை உமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

நித்திரை

பெண்களுடன் தேக சம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைச் தேக சம்பந்தத்தில் வையாது, வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். தொடங்கிய போது அறிவு விகற்பியாமல், மனமுதலிய கரண சுதந்திரத்தோடு தேகத்திலும் கரணங்களிலும் சூடு தோன்றாமல், இடப் புறச்சாய் வாகத் தேக சம்பந்தஞ் செய்தல் வேண்டும். புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத் தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் வேண்டும். அவ்வுபாயமானது பிராண வாயுவை உள்ளேயும் அடக்காமல், வெளியேயும் விடாமல், நடுவே உலாவச் செய்துகொள்ளுதலாம். ஒரு முறையன்றி, அதன் மேலும் செய்யப்படாது. தேக சம்பந்தஞ் செய்தபின், தேக சுத்திசெய்து, திருநீறணிந்து சிவத்தி யானம் செய்து, பின்பு படுக்கவேண்டும்.

படுக்கும்போது இடப் பக்கமாகவே படுத்தல் வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்த போதிலும் இடக்கைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும். பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு (மூன்று அல்லது நான்கு மணி நேரம்) நித்திரை செய்தல் வேண்டும்.

அதன்பின் விழித்துக்கொண்டு நல்ல சிந்திப் புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம் பந்தம் நான்கு தினத்திற்கொரு முறை செய்தல் அதமபட்சம் ; எட்டுத் தினத்திற்கு ஒரு விசை செய்தல் மத்திமபட்சம்; பதினைந்து தினத்திற்கு ஒரு விசை செய்தல் உத்தமபட்சம். அதன் மேற்படில், சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும்.

நான்கு தினத்திற் கொரு விசை செய்யில், சுக்கிலம் நெகிழ்ச்சிபட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும். ஆதலின், அதம பட்சமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

எப்பொழுதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேத பயம் இல்லாமலும், இருக்கப் படாது. எப்போதும் மன உற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை,கோபம், சோம்பல், பொய்ம்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப்பேசல், வேகமாய் நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டை யிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி, சாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக் கிட்டு நான்கு நாளைக்கு ஒரு விசை வெந்நீரில் முழுகவேண்டும்.

அன்றி, வாரத்திற்கு ஒரு விசையாவது முழுகுதல் வேண்டும். தூளில் லாத பட்சத்தில், நல்லெண்ணெயைக் காய்ச் சியே முழுகுதல் வேண்டும். புகைக் குடி, கஞ்சாக்குடி, கள்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக் குடிகள் ஆகா.

மலசலத்தைச் சிறிதும் அடக்கப்படாது. சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப் பழக்கஞ் செய்யக்கூடாது.

எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில் நமது ஆன்ம அறிவென்கின்ற கற்பூரத்தில்,கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப்பார்த்து, அதில் பழகிப்பழகிக்கடவுளிடத்து உண்மையாகிய அன்பையும் சீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடை விடாமல் வைத்து, ஓங்கார பஞ்சாட்சர ஞாபகம் செய்தல் வேண்டும்! சிவ பஞ்சாட்சர ஞாபகம் செய்தல் வேண்டும்.

2. பொது விதி

1. ஆறுமாதம் அல்லது மூன்று மாதத்திற் கொருதரம், வெள்ளைக்காக்கட்டான் முதலானவைகளில் விரேசனம் வாங்கிக்கொள்ளுதல்.

2.நாலுமாதத்திற் கொருதரம், மருக்காரை முதலியவைகளால் வமனத்திற்கு வாங்கிக் கொள்ளல்.

3. ஒரு வருடத்திற் கொருதரம், முள்ளி முதலானவைகளால் நசியஞ் செய்துகொள்ளல்.

4. நாலு நாளைக்கு ஒருதரம், அத்தி முத லிய வத்துக்களால் செய்வகைப்படி செய்த மைகளால் கண்ணுக்கு அஞ்சனந் தீட்டல்.

5. ஒரு பட்சம் அல்லது ஒரு வார வட்டத் திற்கு ஒருதரம், சாவதானமாக நல் நினைப் போடு மூச்சு அதிர்ந்து மேலிடாது, மெல்லெனப் பெண்போகம் செய்தல் (இது விருத்தர்களுக்கு விதித்ததன்று.)

6.வாரவட்டம் அல்லது நாலு தினத்திற் கொருதரம் முலைப்பால் பொன்னாங்கண்ணி முதலிய தைல மிட்டுக்கொண்டு செம்பாகமான வெந்நீரில் மெல்லென முழுகல்.

7. இளவெய்யில், கடுவெய்யில், குளிர் காற்று, பனி, மழை, இவைகளால் உடம்பை வருத்தாமற் காத்துக் கொள்ளுதல்.

8. கடுநடை, ஓட்டம், பெருஞ்சொல், பேரோசை, இசை பாடுதல், வழக்காடுதல், பெருநினைப்பு, பெருஞ்சிரிப்பு, பெருந்துயர், மிகுபார்வை, ஊன்றிக் கேட்டல், துர்க்கந்த நற்கந்த முகர்தல், சுவை விரும்பல், பேருண்டி, பெருந்தூக்கம், வீண் செயல், பெரு முயற்சி, விளையாட்டு. மல மடக்கல், சல மடக்கல், தாக மடக்கல், பெரு நீர் குடித்தல், சயன வுணர்ச்சி, பயம், அகங்காரம், இடம்பம், பேராசை, உலோபம், கோபம், மோகம், மதம் இவை முதலியவை தேகேந்திரிய கரண குற்றங்க ளடையா திருத்தல்.

9. பழஞ் சோறு, பழங்கறி, எருமைப்பால், எருமைத் தயிர், மோர், நெய், செம்மறிப் பால், தயிர், மோர், நெய், கேழ்வரகு, வரகு, தினை, சாமை, பருப்புவகை, அதிரசம், அப்பம், சுகியம், முதலிய சிற்றுண்டி; தயிர்ச்சோறு, புளிச் சோறு முதலிய சித்திரான்னம் ; காரரிசிச் சோறு,முளைக்கீரை, அகத்திக் கீரை, முன்னை முதலான இலைக் கறி, சுரை, பூசனை, பறங்கி, பீர்க்கு, புடல், பாகல், கடுகு, நல்லெண்ணெய், புளி, புகையிலை, கள், சாராயம், கஞ்சா, புலால், மாமிசம் முதலிய விலக்குகளை நீக்கி, விதித்த வைகளை யனுசரித்தல்.

3.சிறப்பு விதி

1.நித்தியம் சூரியோதயமாக ஐந்து நாழிகைக்கு முன்னே நித்திரை நீங்கி யெழுந் திருத்தல்.

2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்று நேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.

3. அங்ஙனம் எழுந்து, சிறிதும் தாமதியாமல், மவுனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசல உபாதி நேரிடுகிறதோ, அவ் விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேட்டையில்லாமல், விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.

4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங் கண்ணி இவைகளில் ஒன்றுகொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும், கபநீர் பித்த நீர் வெளியாகவும் தந்த சுத்தி செய்தல்.

5. பின்பு, திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியன் உதயமாகிற வரையில் கடவுளைத் தியானஞ் செய்துகொண்டிருத்தல்.

6.உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.

7. காலையில் உண்ணாமல், சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்

8.காலையில் சூரியோதய மானவுடன் தூதுவளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக்கையாந்தகரை, புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம் வேர் இவைகளில் யாதாயினும் ஒன்றைப் பசுப்பாலிற் சுத்திசெய்து சூரணமாக்கிக் கொண்டு, சர்க்கரையிற் கலந்தாவது, அல்லது சூரணமாகவாவது பசுப்பாலில் அனுபானித் தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.

9. சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது முன் புசித்த போசன முழுதுஞ் சீரணித்ததை நன்றாயூன்றி யறிந்து, பின்பு சீரணித்த அக்கணமே, விருப்பாய் ஏறாமலும், வெறுப்பால் குறையாமலும், தராசு முனைபோல் அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும், அதிக தாமதமுமில்லாதபடி, சமமாகப் புசித்தல்.

10. புசிப்பில் பச்சரிசிச்சாதம், பசுப்பால், பசு நெய்,முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய், பொன்னாங்கண்ணி, முதலிய இளங்கீரை இவைகளில் மிளகு ஒரு பங்கு, சீரகம் காலே அரைக்காற் பங்கு, வெந்தயம் காற் பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு, சேர்க்கப்பட்ட கறியமுது, குழம்பு, இரசம் முதலானவைகளைக் கொண்டு பெருங்காயம், வெங்காயம், வெள்ளைப் பூண்டு முதலானவைகளை புசித்தல்.

11. புசித்தவெலும் மத்தியானந் தொடங்கி இருபத்தைந்து நாழிகை பரியந்தம், சத்துவமான விவகாரங்களை மெல்லென இருந்தபடி நடத்தல், பிறர்க்கு விசேடங் கேளாவகை படித்தல், மெல்லெனப் பேசல் இவையன்றி நல்ல நினைப்போடிருத்தல்.

12. காலை,மத்தியானம், சாயங்காலம் இப்பொழுதுகளிலும் மத்தியிலும் நித்திரை செய்யாதிருத்தல்.

13. மத்தியான போசனம் செய்கிற பொழுது அடிக்கடி தாகநீர் குடியாமல், போசனஞ் செய்த பின்பு, ஒருதரமாக இளஞ்சூடுள்ள வெந்நீரைக் கிரமமாகத்தாகத்துக்குக் கொண்டு, குளிர்ந்தசலம் சிறிதும் கொள்ளாது தள்ளுதல்.

14. மத்தியானத்தில் சுமார் ஐந்து நாழிகை பரியந்தந் செவ்வையாக ஓரிடத்தில் இருந்து, மனத்தை ஒரு வழிப்படுத்தித் தெய்வ சிந்தனை யோடிருத்தல்.

15. காலைப் புணர்ச்சி, பகற் புணர்ச்சி, அந்திப் புணர்ச்சி, இரவு முன்பங்கு புணர்ச்சி, காலைப்போசனம், அந்திப் போசன முதலானவை இல்லாதிருத்தல்.

16. சாயங்காலத்திலும் ஐந்து நாழிகை யாதொரு முயற்சியுமில்லாமல், ஓரிடத்திலசை யாதிருந்து தியானித்தல்.

17. இரவில் பத்து நாழிகைக்குள் மத்தியான போசனத்துக்கு அரைத்தரமாகப் புசித்தல்.

18. அதற்குமேல் இராத்திரி பதினைந்து நாழிகை பரியந்தம் மனத்தையடக்கித் தியானித்திருத்தல்.

19. பதினைந்து நாழிகை தொட்டு இருபத் திரண்டரை நாழிகை பரியந்தம் மெல்லனத் தூங்கல்.

20. படுத்து விழிக்கிறபரியந்தம், இடக்கை கீழிருக்கச் செய்தல்.

21. ஆகாரம் அரை; நித்திரை அரைக் கால்; மைதுனம் வீசம் ; பயம் பூச்சியம் ; ஆகப் பெறுதல்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *