வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

2. வந்தனை முறை

ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள், யோகிகள், சாந்தர்கள், வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாவெனில், வந்தனஞ் செய்வது ஆயுள் விர்த்திக்கும், அறிவு விளக்கத்திற்கும், ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோ ருக்கும், ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விர்த்தியும், அறிவு விளக்கமும் குறைவாகும். இதற்குச் சம்பந்தம் யாதெனில் ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தம் இருக்கின்றது. எப்படியெனில், ஒரு திரு விளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல், ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரகங்காரம் என்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி, விளக்க வைக்க வேண்டியது. ஆனால், மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக் கும்போது, நோக்கமான கெட்ட உஷ்ணத் தைச் சம்பந்தப்படுத்தினால், லாபஞ் செய் யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அது போல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும், இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், அது கெட்டுப்போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறது அல்லவா?

இவற்றால் ஆசாரியனையும், பெரியவர்களையும், சிஷ்யனும், சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும், சிறுவர்களையும், ஆசாரியரும், பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படி யெனில், திருவிளக்கு எரியச் சாதாரண காலத்தில் அதம பட்சத்திற்குரிய கொட்டை எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவற்றால் விளக்கு வைக்கின்றதும், கொஞ்சம் விசேட காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும், ஞானாசிரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேட விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல், கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன், அதமபட்சம் மத்திம பட்சத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக்கொள்வதில், ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய்க் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய் விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரகங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில், ஜீவவிர்த்தியும் உண்டாகின்றது. திரு விளக்கு அதன் உஷ்ண சம்பந்தமான தைலங் விட்டுக்கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய், நெய் முதலியவைகளை விட்டெரிப்பதில், விசேடப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும், ஜீவனுக்கு அதன் உஷ்ண சம் பந்தமான மும்மலப் போக்கையுண்டு பண்ணுவ தில், ஜீவிப்பு விர்த்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரகங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக்கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்துக்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும், இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விர்த்தியாவது போல, மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விர்த்தியடைகின்றது. ஆதலால், ஆசாரியரையும் பெரியவர் களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்கு வதில் நிரகங்கர சக்தி பெறுவதனால், ஜீவனுக்கு ஆயுள் விர்த்தி உண்டாகின்றது.

சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில், ஆயுட்குறைவு எப்படி உண்டாவதெனின், ஒரு மணி வரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில், ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், ஒரு மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷணத்தைப் பெரிய தீபம் கிரகித்துக் கொள்வதில், ஒரு மணி நேரம் எரிய வேண்டிய தீபம் அரைமணிக்குள் எரிந்து விடுவது போல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும், சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியார் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மலரகிதமான நிரகங்காரம் என்கின்ற மத்தாப்புக்கு ஒப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப் போல் ஜீவனுடைய ஜீவ விர்த்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும், சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாயிருக்கிறது.

ஆசாரியோன், பெரியோர், ஞானி, யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால், ஆயுள் குறைவு வரமாட்டாது என்ற தெப்படி யெனின், மேற்குறித்தவர் களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால், ஆயுள் விர்த்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம் சமயச்சார்பில் பரமசிவம், சுப்ரமணிய சுவாமியிடத்தில் அநுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும், அப்பர் சுவாமி முதலியோரும் வணங்கியதும் உணர்க. மேலும் சமய, மதாதீத ஞானிகளுக்கும், சமய மதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும், இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேகமாதியாவும், தமது பதியின் தூலசூக்கும் ஆதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கை உண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட் குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும், இவர்கள் சென்ற இடமெல்லாம் கண்டு, சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கைகூப்புவது இயற்கை. ஆதலால், மல சகிதர்களான ஜீவர்கள், மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்யபாவத்தில் வணங்கலாதி தொழிலால், ஜீவிப்பின்மையும் விர்த்தியும் உண்டாகின்றன. மகான்கள் கைகூப்பு வதில் ஆன்மவிர்த்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில், அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *