வள்ளலார் வகுத்த வழிகள்
பாலூர் கண்ணப்ப முதலியார்

3. மெய்ம் மொழியும் ஒழுக்கமும்

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறியவேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாவெனில், இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையில்தானே உள்ளவராய் விளங்கு கின்றவரென்றும், இரண்டுபடாத பூரண இன்பமானவரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத் தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளை யும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன் களையும்,எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சக்தியால் 1.தோற்றுவித்தல், 2. வாழ்வித்தல், 3.குற்றம் நீக்குவித்தல், 4. பக்குவம் வருவித்தல், 5.விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவெரென்றும், எல்லாம் ஆனவ ரென்றும்,ஒன்றும் அல்லாதவரென்றும், சர்வ காருண்யரென்றும், சர்வ வல்லவரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெருந் தலைமை அருட்பெருஞ் சோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்க மின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவழியில், அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை, இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளையடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளால் பலவேறு சமயங்களிலும், பலவேறு மதங்களிலும், பல வேறு மார்க்கங்களிலும், பல வேறு லட்சியங்களைக் கொண்டு, நெடுங்காலம், பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி, விரைந்து, விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி, இறந்து இறந்து, வீண்போயினோம்; வீண்போகின்றோம்.

ஆதலால், இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து, விரைந்து இறந்து, இறந்து, வீண்போகாமல், உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க் கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெரு வாழ்வில், பெருஞ்சுகத்தையும், பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற் குறித்த உண்மைக் கடவுள், தாமே திரு உள்ளங் கொண்டு, சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய, உண்மை விளங்கச் செய்கின்ற, ஒரு ஞான சபையைச், சித்திவளாகம் என்னும், இச் சந்நிதானத்திற்கு அடுத்த உத்தரஞான சிதம்பரம், அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில், தமது திருவருட்பா சம்மதத்தால் இயற்றுவித்து, இக்காலந் தொடங்கி அறிவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க, யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்,” என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந் தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட்பெருஞ்சோதி சொருப ராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை, சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந் தருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு, அருளரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளிய நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, “இஃது என்னை? இஃது என்னை?” என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம், அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால், அங்ஙனம் வெளிப்படுந் திருவரவு பற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும். அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்பு தத்திரு வரவு நேரிட்ட கணத்தில்தானே, சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்தம் அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம், என்னும் சாகாக்கலா னுபவ சொரூப சித்தித் தேகங்களும், தன் சுதந்தரத்தால், தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப் பெருவல்லபமும் கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று, வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெருநெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங் களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாதலில், அவ்வொழுக்கங் கள் இவை என உணர வேண்டுவது இன்றியமையாததாகும்.

சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள்

(1) இந்திரிய ஒழுக்கம், (2) கரண ஒழுக்கம், (3) சீவ ஒழுக்கம், (4)ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும். அவற்றுள்,

1. இந்திரிய ஒழுக்கம்

நாதமுதலிய தோத்திரங்களை உற்றுக்கேட்டல், மற்றவைகளைக் கேளாதிருத்தல், கொடுஞ் சொல் முதலியவை செவி புகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின் மீது விருப்பமின்றி இருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல் என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்த்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவ இம்சை நேரிடுங்கால் எவ்விதத்திலும் தந்திரத்திலாவது தடை செய்தல், பெரியோ ரிடத்திற் செல்லுதல் என்றால், சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல், உயிர்க்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலசல பாதைகள் அளவு மீறாமலும், சிரமங் குறையாமலும் அளவை போல் தந்திர ஒளஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும், பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கம் ஆகும்.

2.கரண ஒழுக்கம்

சிற்சபையின்கண் மனத்தைச் செலுத்துவது தவிர, மற்றெந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்; தன்னை மதியாதிருத்தல்; செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கை யாகிய சத்துவமயமாயிருத்தல்; பிறர்மேற் கோபியா திருத்தல்; தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்; அக்கிரம அதிக கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.

3. ஜீவ ஒழுக்கம்

எல்லா மனிதரிடத்தும் ஜாதி,சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு, முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.

4. ஆன்ம ஒழுக்கம்

எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்தும் உள்ள ஆன்மாக்களிடத் தும் இரங்கி,ஆன்மாவே சபையாகவும், அதன் உள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து

பூரணமாக நிற்றல் முதலியவாம்.

இங்ஙனங் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம் என்னுமிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண் டும்; ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்கள் திருவருள் துணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா; ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழகவேண்டும்.

அன்றியும், இவ் வண்ணமான ஒழுக்கங்களில், இயன்றமட்டில் ஒழுகப் பெற்று, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க் கிரங்கல், பெருங் குணம் பற்றல், பாடிப் பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப் பழகி இருத்தல் வேண்டும்.

அன்றியும், சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங் களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவ சித்தி விகற்ப பேதங்களென் றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பல பட விரிந்த மதங்களும் மார்க்கங்களும், சுத்த சன்மார்க்கானுபவ லேச சித்தி பேதங்களென் றும், கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆதலில், அத்திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று, அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்திய உணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும், உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும், நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பக்தி,உயிரிரக் சும், பொதுநோக்கம், திரிகரண அடக்கம், முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று, உண்மை உரைத்தல்,இன்சொல்லாடல், உயிர்க்கு உபகரித்தல், முதலியவாகக் குறித்த நற்செய் கைகளையும் உள்ளபடி பெற்றுச் சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்தில் தானே தரிக்கப் பெறவும், உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்துவிடாமலும், நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய், எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்தருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை, அல்லது மங்கலம் புனைதல், முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத் துடன் விந்து விளக்கம், நாத ஒலி, என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும், ஆண்டவனாரது அருளற்புத ஞான சித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண் காட்சி யாக, உடல் குழைய, உள்ளங்குளிர, ஆனந்தக் கண்ணீர் கொண்டு, பரவசத்துடன், தரிசிக் கப் பெறும், பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும், நின்றோமேயானால், நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவு வந்த கால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளை யும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தற யாத அற்புத செயல்களையும், அனுபவித் தறியாத அனுபவங்களையும், வெளிப் படத் தரிசிக்கும் அதே கணத்திலுள்ளே பெற்றுப் பெருங்களிப்புடன் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித் திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம், சத்தியம் சத்தியம்.

நேரிசை வெண்பா

ஏமாந் திருக்கும் எமரங்காள்! இவ்வுலகில்
காமாந்த ராகாத் தரம்பெறவே காமரந்த
காரத்தை விட்டுக் கருதுமினோ; வித்தருணம்
நீரத்தைச் சேர்வீர் நிசம்.

போற்றி உரைக்கின்றேன்; பொய்யென் றிகழாதீர் ! நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் ; ஆற்றலருள் !
அப்பன் வருகின்றான் அருள்விளையாட்டாடுதற்கென் றிப்புவியில் இத்தருணம் இங்கு.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *