ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்

சத்திய லோகம்

அடுத்த நாள் சத்திய லோகம் சென்றேன். அங்கே மாசற்ற சூரியப் பிரகாசம்
போன்ற ஒளியொன்று பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். ஆனால்
வானத்தில் சூரியனில்லை. அவ்வுலகத்தின் கண் மத்திய பாகத்தில் ஓர் திவ்ய
வடிவம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அதன் முகத்திலிருந்தே கிரணங்கள் பொங்கி
வெளிப்பட்டன. அக்கிரணங்களின் ஒளியே வானத்திலுஞ் சென்று மோதுவது
கண்டேன். பல பல திசைகளிலே என் ரதத்தைத் திருப்பிவிட்டேன். அந்நாட்டு
ஜனங்களெல்லாம் அவரவர்கள் பாட்டில் மிகுந்த முயற்சியுடையவர்கள் போலப்

போகிறார்கள். சிற்சில ஜனங்கள் வெயர்க்க வெயர்க்கக் கஷ்டத்துடன் நடந்து
செல்கிறார்கள். வேறு சிலர் சிறகு புடைத்துக்கொண்டு அதி வேகமாய்ப்
பறக்கிறார்கள். சிலர் மலர்ந்த முகத்துடன் போகிறார்கள். சிலர் மிகக்
களைப்படைந்தவர் போலக் காணப்படுகிறார்கள். சிலர் திடீர் திடீரென்று வந்து
தோன்றி அவ்வொளி பொறுக்கமாட்டாமல் கண்ணைக் கையால் மூடிக்கொண்டு
அவ்வப்பொழுதே மறைந்து விடுகிறார்கள். இங்ஙனம் மறைந்து செல்வோர்
என்னைப்போலப் புதிதாகப் பார்க்க வந்தவர்களென்றும், இங்கிருக்க முடியாமல் ஓடி
வேறு வேறு உலகங்களுக்குப் போகிறார்களென்றும் தெரிந்து கொண்டேன்.

சிலர் தேவர்களைப் போலிருந்தனர். அவர்களே மலர்ந்த முகத்துடன்
உல்லாஸமாகவும் வேகமாகவும் சுற்றித் திரியும் கூட்டத்தார். என்போன்ற மனித
உருவ முடையோர்களிலே தான் பலர் களைப்புக் காட்டினர். கந்தர்வ லோகத்திற்கு
வந்தவுடன் எனக்கு உருவ மாறுபாடு தோன்றியது போல இங்கே
உண்டாகவில்லை. ஓடிப் போனவர்களும் மனித வர்க்கத்தினரேயாம். பருத்த
தொந்தியுடன் கையில் பொற்காப்புப் போட்டுக் கொண்டு ஒருவன் வந்தான். அவன்
ஓவென்றலறிக் கொண்டு ஓடிப்போய் விட்டான். ஒருவன் மனைவி மக்களுடன்
வந்து சேர்ந்தான். “இங்கேன்காணும் கூட்டிக் கொண்டு வந்தீர்” இங்கே, கடைத்
தெருவா, கிடைத் தெருவா, கோயிலா, குளமா, வேடிக்கையா, விளையாட்டா? ஒரு
மண்ணையுங் காணவில்லை. அவனவன் பைத்தியம் பிடித்தது போல
ஓடிக்கொண்டு திரிகிறான். நான், குழந்தைகளையுங் கொண்டு இங்கே ஒரு
க்ஷணங்கூட இருக்க மாட்டேன்.

ஊருக்குப் போகலாம் வாரும்” என்று பொதிமாட்டைப் போலிருந்த அந்த
ஸ்திரீ கத்தினாள். அந்த மனிதன் – “இருடி, இரு. இந்த ஒரு கிரணத்தை மட்டிலும்
பார்த்து விட்டு வருகிறேன், அவசரப்படாதே” என்றான். “கிரணமுமாச்சு,
மரணமுமாச்சு. புறப்படும்” என்று அவள் ஏதோ கூச்சலிட்டாள். அவன்
மனமில்லாவிடினும் அவள் செய்யும் தொல்லையை எதிர்க்கத் திறனற்றவனாய்
மறைந்து விட்டான். இன்னுமொருவன் எட்டு மூட்டைகளை ஒரு வண்டியில்
சுமத்திக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். மற்றவர்களெல்லாம் என்னிடம்
பேசாமலிருக்க, இவன் மட்டிலும் என்னருகே வந்து, “ஏனையா. ஏடுகளெல்லாம் மிக
விசேஷமானவை. ஏதேனும் உமக்கு வேண்டியதைப் பரிசோதனை செய்து பார்த்து
விலைக்கு எடுத்துக் கொள்கிறீரா?” என்று கேட்டான். அவன் பேசிக்
கொண்டிருக்கும்போதே, பின்னே நின்ற வண்டியில் நெருப்புப் பிடித்து ஏடுகள்
சாம்பாவது கண்டு நான், “அதோ, பாரையா?” என்றேன். அந்த மனிதன் வயிற்றிலும்
வாயிலும் அடித்துக் கொண்டு சத்திய லோகத்தை நிந்தனை செய்து கொண்டே
போய் விட்டான்.

இன்னும் எத்தனையோ ஜனங்கள் – மனவுறுதியில்லாதோர், சித்தத்தைப்
புலன் வழியிலே சிதறவிட்டோர், சத்தியத்தில் மெய்யன்பில்லாது போலியன்பு
பாராட்டும் வேஷதாரிகள், இவர்களனைவரும் வந்து வந்து மறைந்து விட்டார்கள்.
இது நிற்க, மேற்கூறப்பட்ட ஒரு மனிதனைத் தவிர வேறெவருமே என்னிடம்
வார்த்தையாடவில்லை யென்று சொல்லியிருக்கிறேன். கல்விப் பயிற்சிக்குத்
துணைவேண்டுமென்று பெரியார் சொல்லுகிறார்கள். அது மெய்யே. ஆனால்
உண்மைத் தேட்டத்திற்குத் தனித்தனியே போக வேண்டூமென்று இப்பொழுதுதான்
கண்டேன். உண்மை தேடப்போகும்பொழுது துணை கூட்டிக்கொண்டு போகலாகாது.
உண்மையைக் கண்டு மீண்ட பின்பு அதைப் பிறருக்குக் கூறலாம், கூறுதல் கடமை.
ஆனால், ஆரம்பத்தில் தன்னந்தனியாகச் செல்ல வேண்டும். இன்னொருவனைத்
துணையாக அழைத்துச் செல்வாயாயின், அவனுக்கும் உனக்கும் விவாதங்கள்
உண்டாகும். மாறுபடு தர்க்கம் தொடுப்பதனால் அறிவிலே கலக்க
முண்டாகுமல்லாது, தெளிவு ஏற்படாது அறிவுத் தெளிவிலேதான் உண்மை
தோன்றும். மேலும் இன்னொருவனோடு சேர்ந்து உண்மை தேடப் போவாயானால்,
அவன் ஒரு பாதையில் இழுப்பான். நீ மற்றொரு பாதையிலே இழுப்பாய்.
இரண்டிலொன்று யதார்த்த வழியாக இருக்கும். ஆனால் உங்களுக்குள் விவாதம்
தீரும் பொருட்டு, நீங்கள் பெரும்பாலும் என்ன செய்வீர்களென்றால், “அப்பா நீ
சொல்லியதும் வேண்டாம். நான் சொல்லியதும் வேண்டாம். இரண்டுக்கும் நடுவாக
ஒரு வழியிலே போவோம்” என்று பொது உடன்பாடு செய்து கொள்வீர்கள்.

இந்தப் பொது உடன்பாடு செய்தாலொழிய இருவருக்கும் திருப்தியேற்படாது.
இந்தப் பொது உடன்பாட்டுப் பாதை உங்களைக் கழுத்து வரை சேறுள்ள
குழிகளிலும், ஏரிகளிலும், மடுக்களிலும், முள்ளிலும், கல்லிலும் பொதி
மணலிலுங்கொண்டூ இறங்கச் செய்யும். ஆரம்பத்திலே உங்களுக்கு இயற்கையாகக்
காணப்படும் இரண்டு பாதைகளில், யதார்த்தப் பாதையை நீக்கிப் பொய்ப்
பாதையிலே போனபோதிலும், ஒருவேளை நல்லது. இறுதி வரையில் போய்,
அங்கே தேடிய உண்மையில்லா திருத்தல் கண்டு, மறுபடி மீண்டு நல்ல
மார்க்கத்திலே புகலாம். நீங்கள் அப்படிச் செய்யமாட்டீர்கள்.
உடன்பாட்டுப்பாதையொன்று கொண்டு அதிலேதான் போவீர்கள். அந்த வழி
சூனியத்திலேதான் கொண்டுவிடும். ஞானிகளுடைய “சமரஸம்” பிழையென்று நான்
கூறியதாகக் கொள்ளவேண்டாம். சாமானியர்கள் செய்துகொள்ளும் ‘ஒப்பு’ அதாவது
உடன்பாடு எப்போதும் பிழைஎன்பதையே வற்புறுத்திச் சொல்லுகிறேன். எனவே,
சத்தியலோக யாத்திரை செய்வோர் யாரும் வீண் சம்பாஹணையிலே காலங்
கழிப்பதில்லை யென்பதை அறிந்து கொண்டேன். ஆதலால், நானும் பிறர்களைத்
தொந்தரவு செய்யலாகாதென்று சும்மா இருந்து விட்டேன்.

கிரண பரிசோதனையிலே எனக்குப் புத்தி செல்லவில்லை. மத்ய
பாகத்திலேயிருந்த திவ்ய வடிவத்தினருகே நேராகப் போய்விட வேண்டுமென்று
எனக்குத் தோன்றியது. அப்போது உயர ஓர் தொனி பிறந்தது. அதிலே கவனம்
செலுத்தினேன். அது சொல்லிற்று: – “நடுவே யிருக்கும் உருவமே பிரமன். அது
சத்திய ஸ்வரூபம். திடீரென்று அதனருகே பாய்ந்து விடுதல் யாராலும் முடியாது.
ஒரு கிரணத்தைப் பற்றிக்கொண்டு, அதன் வழியே அணுவணுவாக நகர்ந்து
செல்லவேண்டும். ஒரே பாய்ச்சலாகப் பாய முயற்சி செய்து நீ வீணே ரதத்தை
உடைத்துக் கொள்ள வேண்டாம்” என்று.

எனக்குச் சோம்பர் அதிகம். கிரணங்களோ நெடியவை. இவற்றின் வழியாய்
மெல்ல மெல்லப் புழு ஊர்வதுபோல ஊர்ந்து செல்ல எனக்கு மனம்
இணங்கவில்லை.

“நன்று. இப்பிரமன் விஷயத்தைப் பின்பு பார்த்துக் கொள்ளுகிறேன். இப்போது
இந்நாட்டைச் சுற்றி ஓரமாக ஓர் வளையமிட்டு வருகின்றேன்” என்றெண்ணித்
தேரைப் பிரதக்ஷிணமாகச் செலுத்தினேன்.

சிறிது தொலைவு கடந்தவுடனே வேறு வர்ணங்கொண்ட ஒளி கண்டேன்.
அவ்விடத்தினின்று எங்கே பார்த்தாலும் அந்தப் புதிய வர்ணமே காணப்பட்டது.
“இதென்ன விந்தை!” என்று பிரமிப்பு அடைந்து அப்பால் சென்றேன். போகப் போக,
புதிய புதிய வர்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தன.

உண்மை பல வர்ணங்களுடையது என்று தெளிந்துகொண்டேன்.
நெடுநேரத்தின் பிறகு வடக்குக் கோட்டை வாயிலருகே வந்து சேர்ந்தேன்.
அங்கிருந்து பார்க்கும்போது மறுபடியும் பிரமனுடைய தெய்வீக வடிவம் என்
கண்ணுக்கு நேரே எதிர்க்கெதிராக விளங்கிற்று. இதென்ன செய்தியென்று
யோசனை செய்தேன். முகம் முன்பு தோன்றியது போலவே தானிருக்கிறதா என்று
கூர்ந்து பார்த்தேன். அப்போது ஒரு புதிய அற்புதங் கண்டேன். நான் எவ்வளவுக்குக்
கூர்மையாகப் பார்க்கிறேனோ அவ்வளவு அத் திருமுகத்தின் ஒளி அதிகரித்து
வரலாயிற்று. சிறிது பொழுதுக்கப்பால் என் கண்கள் கூசத் தொடங்கிவிட்டன.
அதினின்றும் கண்களை மீட்டுக்கொண்டேன். மறுபடியும் முன் கேட்டது போன்ற
ஓர் தொனி பிறந்தது:-

“மானிடா! உண்மை தொடக்கத்தில் தெளிவாகத் தெரிவது போலத் தோன்றும்.
கொஞ்சம் கவனம் செலுத்துவாயானால் கண் கூசத் தொடங்கிவிடும். நீ தளர்ச்சி
பெறாமல் ஓர் கிரணத்தைப் பற்றிக்கொண்டு நெருங்கி நெருங்கிப் போவாயாயின்,

பிறகு கண் வருத்தம் தீர்ந்துவிடும். இறுதியில் நீ அருகே வந்த பிறகு உண்மை
உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெற்றெனத் தெளிந்து புலப்படும்.”

இதைக் கேட்டவுடனே, எனக்கு ஓர் கிரணத்தைத்தான் பற்றிச் செல்லலாமா
என்ற விருப்பம் நிகழ்ந்தது. மறுபடியும் எனது சோம்பர்க்குணம் மனதிலே
பிரதானமாய் விட்டது. “ஐயோ! இந்தச் சோம்பர் என்ற பாவி! மண்ணுலகத்துப்
பெருமையையும். பொருளையும் நான் விரும்பிய காலத்தில் இதுதான் வந்து
குறுக்கிட்டது. இப்பொழுது விதிவசத்தால் அவ்வித விருப்பங்களெல்லாம்
அகன்றுவிட்டன. எனவே சத்தியலோகத்திற்கு உண்மைத் தேட்டத்தால் வந்து
நிற்கும் போதும் அத் தீய சோம்பர் வந்து கெடுக்கின்றது” என்று பலவாறு வருத்த
மடைந்தேன்.

அழுதாற் பயனென்ன, நொந்தாற் பயனென்ன? ஒன்றும் ஆவதில்லை.
முன்னர்ச் செய்தது பின்னை விளையும். அவரவர் செய்கைகளின் பயனையே
அவரவர் நுகர்தற்குரியர். தர்மதேவதையின் ஆட்சிக்குட்பட்ட இவ்வுலகில் தத்தம்
செய்கைப் பயனுக்குமேல் ஓரணுக்கூடவேனும் அன்று அதற்கு ஒரணுக்
குறையவேனும் உயிர்கள் பெறவொண்ணாது. எனது இயற்கையிலே சோம்பரை
வளர்த்து விட்டேன். இப்போது அதன் பயனை நுகர்கின்றேன். மண்ணுலகத்துப்
பொருளும் பெருமையும் மிக இழிவுடையன வாயினும், அவற்றைக்கூடச்
சோம்பரால் துறந்திருப்பவன் நற்கதியடைய மாட்டான். உழைத்துத் தேடி
அவற்றின் இயற்கையை அனுபவித்துப் பார்த்துப் பின்பு துறக்க வேண்டும்.
பாடுபட்டுத் தேடிப் பணத்தை அடைபவனைக் கவி நிந்தனை செய்யவில்லை!
அதைப் போற்றுதற் குரியதோர் பெருமையுடைய தென்றெண்ணிப் புதைத்து
வைப்பவனையே நிந்தை செய்கின்றார். அதை நன்கு செலவிடுகிறானா அல்லது
துர்வினியோகம் செய்கிறானா என்பதைப் பற்றி இங்கு விவகாரமில்லை. அது
வேறு விஷயம். அதைத் தேடிக் கண்டு அனுபவித்துணர்ந்த பிறகுங்கூட அதன்
சிறுமையை அறிந்து வெறுத்துத் தள்ளிவிடாமல், அதில் மேன்மேலும் ஆசை
கொண்டு ஆதரிப்பவனே, கேடுகெட்ட பாவி யாவானென்று கவி சொல்லுகிறார்.

ஆம். மண்ணுலகத்துப் புலைப்பொருளைக்கூடச் சோம்பரால் பிரிந்திருப்பவன்
புகழ்ச்சிக் குரியவனாகமாட்டான். இடைவிடாத உழைப்பினாலேதான் அண்ட
பஹிரண்டங்கள் இயங்குகின்றன. தமோகுணம் நாசத்துக்கு முற்குறி. சோம்பர்
அழிவுக்குக் காரணம். யமபடர்கள் மூதேவியின் மக்கள்.

சிறிது நேரம் ஆலோசனை செய்துகொண்டிருந்து விட்டு, “இந்த மூடத்
திகைப்புக்கும், சித்த சலனத்திற்கும், சோம்பருக்கும் இடந்தரலாகாது. இனி நமது
வாழ்நாளை சத்திய நாட்டத்திலேதான் செலவிடவேண்டும்” என்ற நிச்சயம்

செய்துகொண்டேன். அப்போது மனம் சொல்வதாயிற்று: – “கந்தர்வ
லோகத்திலேயிருந்த சுகம் இங்கே உண்டா? ஆகா! அதிலே நாம் சலிப்படைந்தது
பிசகென்று இப்பொழுதுதான் தெரிகிறது. மீண்டும் அங்கே போகலாம் வா, உனக்கு
அந்நாட்டு இசையும், வானும். நீரும், ஒளியும், மலரும், மாதரும் தந்த இன்பங்களைக்
காட்டிலும் அதிகமாகவா இந்தக் கிரணமூர்கின்ற ஆமைத்தொழிலிலே
கிடைக்கப்போகின்றது?” இது கேட்டு, ஒரு க்ஷணம் மறுபடி சலனமடைந்தேன். பின்
பூர்வ தர்மப் பயனால் எனக்கு என்றுமறியாத தைரியம் பிறந்தது.

“மனமே! உன்னை அறிந்து விட்டேன். எனது நன்மைக் கெல்லாம் நீ கேடு
சூழ்வாய். எனக்கு வருந் தீமைகளுக்கெல்லாம் நீ உபகாரம் செய்வாய். இதோ
உன்னைக் கொன்றுவிடுகிறேன். பார்” என்று, அதன் கழுத்திலே கைபோட்டு
விட்டேன். மனம் கோகோ வென்றலறிற்று. அப்போது மறுபடியும்
ஆகாசத்திலிருந்து பின்வரும் வாக்குப் பிறந்தது: – “மானிடா, வீண் முயற்சி
செய்யாதே. மனதை உன்னால் கொல்ல முடியாது. மனங்கடந்த நிலையிலே நீ
தாகத்துடன் பாயும்போது அது தானாகவே மடிந்து கனியமாகிவிடும். அதற்குப்
உனக்குப் பக்குவம் வரவில்லை. அதுவரை நீ எது செய்தாலும் மனம் சாகாது.
மேலும் நீ உனது யாத்திரையை வினோதார்த்தமாகத் தொடங்கினாய். வேடிக்கை
பார்க்க வந்தவனுக்கு சத்தியம் புலப்படாது. கந்தர்வ நாட்டிலே போய் இன்பங்
கண்டது போல இங்கும் உண்மையை எளிதில் கண்டு விடலாமென்ற பேதமை
யெண்ணத்தை விட்டுவிடு. நீ பாக்கியவானாதலால், உனது தேர் நீ முன்கண்ட
வேறு பலரின் தேர்களைப்போல, இங்கிருந்து துரத்துண்ணாமல், இங்கே நிற்பதற்கும்,
சஞ்சரிப்பதற்கும் வலிமையுடையதாயிருக்கிறது.

மேலும், பூ, புவ, ஸ்வ, மஹ, ஜன, தப என்ற ஆறு உலகமும் கடந்துவந்த
ஜீவர்களே சத்திய லோகத்தில் தரித்து நிற்க முடியும். நீ வர புருஷனாதலால்
உனக்கு அத்தனை கஷ்டம் வேண்டுவதில்லை. நீ ஒருமுறை தர்மலோகத்திற்குப்
போய், அங்கே உள்ள அனுபவங்களை அறிந்து வா. அப்பால் உனக்கு இப்போது
நேர்ந்துள்ள உண்மை நாட்டம் பயன்பெறும். தர்மலோகத்தில் மனம் இறந்து
போகாவிடினும், நீ விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அடங்கி உனக்குத்
தொண்டுபுரியும். பின் இங்கு வந்தாயானால், மேல் நடக்கும் செய்திகளை நீயே
அனுபவத்தில் தெரிந்துகொள்வாய். போய் வா” என்றது.

கண்கள் சுழன்றன. சிறிது நேரம் மயக்கமுண்டாயிற்று. பின்
மயக்கமுண்டாயிற்று. பின் மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தேன்.
மறுபடி மண்ணுலகத்திலே, திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில்,
கிழக்கு முகமுள்ள விட்டூ மேன்மாடத்தில், நானும் என் பக்கத்திலே சில

வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலை, பாக்கு முதலிய என்னுடைய
பரிவாரங்களும் இருப்பது கண்டேன்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *