
மாங்காய்த் தலை
ந. பிச்சமூர்த்தி
மாய மான்
நேற்றுத் தபாலில் ஒரு பளுவான கவர் வந்து சேர்ந்தது. அவ்வளவு கனமான கவர் அதுவரையில் எனக்கு வந்ததில்லை. என்றாலும் அதை உடனே பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆத்திரம் உண்டாகவில்லை. எலி தப்பி ஓட முடியாதென்று நிச்சயமாகப் பூனைக்குத் தெரியும்பொழுது தானே பூனை வேட்டையின் முன் விளையாடிப் பார்க்கிறது ! அதைப்போல உறையை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன். விலாசத்தை யார் எழுதி இருக்கலாம் என்று எண்ணி எண்ணிப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லை.
விளையாட்டு வினையாயிற்று. உறையைக் கிழித்தேன். மணி மணியான எழுத்தில் எனக்கென்று ஒரு கடிதம் எழுதியிருந்தது; அதுவும் முன்பின் அறியாதவருடைய கையெழுத்தாக இருந்தது. அதைத் தவிர, கச்சிதமாக மடித்துவைத்த சில தாள்கள் இருந்தன. கடிதத்தைப் படித்தேன்; வெகு ரசமாக இருந்தது. வெளியிடத் தேவை இல்லை. சில வரிகளையாவது வெளி அதை முழுவதும் யிடத்தான் வேண்டும்.
“தன்னை அறியப் பல வழிகள் உண்டு. எழுத்தும் ஒரு வழி. இந்த உண்மையை நமது முன்னோர்கள் அதிகமாக வற்புறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கவனமெல்லாம் கர்மம், பக்தி, ஞானம் முதலிய மார்க்கங் களைப் பற்றியே சென்றது. மார்க்கத்தில் செய்கைக்குத் தானே முதன்மை? எழுத்தென்னும் வழியில் சொல்லே செய்கை. இந்த அடிப்படைகளுக்கு மாறாகச் சொல்லைக் கையாள்வது குற்றம்.?
“அதனால்தான் பணத்திற்கோ வற்புறுத்தலுக்கோ தயா தாட்சிண்ணியத்திற்கோ எழுத்தை ஆளாக்கக் கூடாது. கொடாப்புப் போட்டுப் பழுக்கவைத்த பழத்தின் ருசி எப்படி இருக்கும்! எவ்வளவு சீக்கிரத்தில் பழம் கெட்டு விடும்! தன்னை அறியவும், தன்மையை விளக்கவும் பிறந்தது எழுத்து. அவ்வெழுத்தில்தான் அழியாமை தங்கும்.”
எனவே எழுத்தை அகவாழ்வின் பாலம் எனலாம். மெய்யறிவின் ஏணி எனலாம். இந்தக் குணங்களுக்காகத் தான் எழுத்தின் மீது நமக்கு மோகம் உண்டாகிறது.
”சோம்பேறிகளுக்காகப் பைத்தியங்கள் கற்பனை செய்வதற்குப் பெயர் கலை என்று யாராவது நையாண்டி செய்தால் கூட நாம் வருந்த வேண்டியதில்லை. ஏனென்றால் பெருத்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதானே இந்தச் சோம்பேறி உலகம்!”
“இத்துடன் ‘மாய மானை’ அனுப்பியிருக்கிறேன். உங்களைச் சுற்றிப் பல வேடர்கள் திரிகிறார்கள் – இலக்கிய வேடர்கள். வேடர்கள் என்ற சொல் வேடதாரிகள் என்ற பொருளுடன் தொனிக்காதென்பது எனக்குத் தெரியும். தொனித்தால் நல்லது! அவர்களில் யாருக்காவது ‘மாய மானை’ இலக்காக்கி விடுங்கள். அச்செய்கைக்கு நன்றி! இல்லாவிட்டாலும் நன்றி! ஒரு சோம்பேறியாவது இந்தப் பைத்தியத்தைப் படித்துத் தன் இயலை அறிந்துகொண்டிருப்பான் அல்லவா?”
இவைகளைப் போன்ற பிற விசித்திரமான கருத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தைப் படித்தேன் ! இரண்டு மூன்று முறை படித்தேன். யானைக்கு அங்குசம் போல் என் அறிவுக்குக் கடிதம் அமைந்தது. பின்னர் மானை எடுத்தேன். ஆனால் அதைப்பற்றி நான் சொல்வானேன்? நீங்களே பார்த்துக்கொள்ளலாம்:
மாய மான்
பாழ்! வெறும் பாழ்! இவ்வளவு பொட்டலாக என் மனம் இருந்ததே இல்லை. ஒன்றிலும் ஊக்கமில்லை: உணர்வில்லை. காலையில் எழுவதும், வெந்ததும் வேகாதது மாக எதையோ சாப்பிடுவதும், ஆபீசுக்கு ஓடுவதும், திரும்புவதும், தூங்குவதும் வாழ்வின் கொடுமையைப் பகலில் தாங்குவது போதாதென்று கனவில் காண்பதும்- இதுவா வாழ்வு? இதற்கா பிறந்தோம்? வருஷம் முழுவதும் இதே கதையானால் மனத்தில் அமைதி நிலைக்குமா? தொழிலில் இன்பம் தெரியுமா? உயிரில் ஊக்கம் இருக்குமா? அந்த மாதிரியான சோர்வும் சலிப்பும் நிறைந்த நிலையில் இருந்தேன். இதற்கு மாற்று? இன்பத்தின் ஊற்றுக் கண் எனக்கு அகப்பட்டால் அல்லவா ? அமைதியின் அடித்தளம் அண்டினால் அல்லவா?
யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எந்த விதமான வேதனை உண்டானாலும் ஒரு தெய்வத்தைத்தான் சரணடைவது வழக்கம். அந்தத் தெய்வத்தைச் சரணடைந்தால் இந்தச் சலிப்பும் அயர்வும் மாறலாம் என நினைத்து ஒரு வாரம் ரஜா எடுத்துக் கொண்டேன். செய்கிற தொழிலைச் செய்து கொண்டிருப்பது மட்டும் நமது அலுப்பிற்குக் காரணமாகாது. ஒரே இடத்தில் இருந்து கொண்டு போன தெரு வழியே போய்க் கொண்டு, பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டு நாளைக் கடத்த வேண்டிய தலைவிதி ஏற்பட்டிருப் பது மற்றொரு முக்கிய காரணம்.
ஆகையால் சென்னைக்குக் கிளம்பினேன். நான் இருக்கும் ஊரைவிட்டு ரெயிலேறினால் செங்கற்பட்டில் இறங்கி ஏறாமல் சென்னைக்குச் செல்ல முடியாது. ஜங்க்ஷனை அடைந்த பொழுது சென்னை செல்லும் ரெயில் வரவில்லை. விசாரித்ததில், வர மூன்று மணி தாமதமாகும் என்று தெரிந்தது.
என்ன செய்வது? உத்தியோகம் பார்த்துப் பழக்கம் ஆகிவிட்டதால் கீழே உட்கார மனம் வரவில்லை. அங்கே கிடந்த ஒரு பெட்டியின் மேல் உட்கார்ந்தேன். என்னுடன் பொழுதும் உட்கார்ந்து விட்டது. உட்கார்ந்தால் தான் என்ன? சும்மா இருக்கக் கூடாதா? பெருமூச்சு விட்டுக் கொண்டே இருந்தது. காற்றுப் பட்டால் காற்றாடி சும்மா இருக்குமா? மனத்திலுள்ள காற்றாடியின் மீது பெருமூச்சுப் படப்பட அது சுழன்றுகொண்டே இருந்தது. என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்தன.
பகலுக்குப் பின் இரவும், விழிப்புக்குப் பின் தூக்கமும் வெறும் பௌதிக உலகத்து நிகழ்ச்சிகளா? அல்லது ஓவியனைப் போல் சித்திரம் ஒன்று எழுதி வேறொரு மறை பொருளைச் சுட்டிக்காட்டும் தந்திரமா? பகலென்னும் உருவெடுத்துக் காண இயற்கை முயல்கிறதா? தொழிலில் கிட்டாத அமைதி ரஜாவில் கிட்டிவிடுமா? கர்மத்தில் காணாத இன்பம் பக்தியில் காணுமா? ஸ்தல யாத்திரை யின் மர்மம் இதுதானா? அயர்வும் சலிப்பும் சிருஷ்டி வேதனையா அல்லது சீரழிவின் தொடக்கமா?….
இந்த மாதிரியான பல எண்ணங்கள் எழுந்து கொண்டே இருந்தன. பக்தி, ஸ்தலயாத்திரை என்ற விஷயம் நினைவுக்கு வந்தவுடன் கவனம் பிளாட்பாரத்துக்குத் திரும்பிவிட்டது. அங்கே ஏராளமான யாத்திரிகர்கள். அவர்களுடைய மூட்டைகளையும் முடிச்சுகளையும் பார்த்த பொழுது எனக்கு ஒரு பைத்தியக்கார விருத்தி தோன்றிற்று. தங்களிடமுள்ள எல்லாவித அழுக்குகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, வெளுப்பதற்காக என்று புண்ணிய ஸ்தலங்களைத் தேடிச் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அவ்வளவு அழுக்கு! எண்ணெய்ப் பிசுக்கு! நாற்றம்!
யாத்திரிகர்களில் சில ஸ்திரீகள் ஓய்யாரமாகச் சுருட்டைப் பிடித்துக் கொண் டிருந்தார்கள். இரண் டொருவர் பொட்டுக் கடலையும் பொரியுமாகக் கலந்து இடது கையால் வாயில் அறைந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் எல்லாருமே என்னைப்போலத்தான்! நான் ஒரு பித்தில் கிளம்பியிருக்கிறேன்; ஏறக்குறைய அதே மாதிரிப் பித்தில்தான் அவர்களும் கிளம்பியிருக்கிறார்கள். இந்தப் பித்தே தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு மனிதனையும் பிடித்துக் கொண்டு வாழ்வைப் பாழாக்குகிறது. இந்தப் பித்தைத் தெளியவைக்கும் மருந்தின் விஷயத்திலாவது தெளிவு இருக்கக் கூடாதா? இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது எனக்குப் பின்புறத்தில் பேச்சுக் குரல் கேட்டது. ஆணும் பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை.
பேச்சைமட்டும் கவனித்தேன். ஜனன விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும், இல்லா விட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் விஷயத்திற்கும் பேசிய நூல்களுக்கும் சற்றும் பொருத்தமில்லை. இந்த வியப்பில் திரும்பி ஜன்னல் வழியாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் ! கணவனும் மனைவியும் என்று மனம் பதிவு செய்துவிட்டது. குழந்தைகள் கிடையாதென்றும் மனம் பதிவு செய்துவிட்டது. எந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த மாதிரி பதிவு செய்தாய்?’ என்று கேட்டால் மனம் நிச்சயமாக விழிக்கும். பதிவுதான் ஆகிவிட்டதே, சும்மா இருக்கலாகாதா? ‘சாத்திரத்தில் சோறில்லை என்றால் இலை பொத்தல்’ என்ற பழமொழியை நினைத்துக் கொண்டது. அந்தப் பழமொழியைப் போட்டு நாய் எலியைக் குதறுவதுபோல் குதறத் தொடங்கிவிட்டது.
இந்த மாதிரியான பிளாட்பாரக் காட்சிகளை மனம் பதிவு செய்துகொண்டிருந்த போதிலும் சலிப்பு மட்டும் அடங்கவில்லை. பத்தடி தள்ளிப் பிளாட்பாரத்தில் ஹிக் கின்பாதம்ஸ் புத்தகக் கடை தென்பட்டது. என் கை தானாகச் சட்டைப் பைக்குள் சென்றது. அங்கே கிடந்தது மூன்று ரூபாய். கனவுக்குள் கனவைப் போல மற்றொரு யோசனை தோன்றிற்று. சலிப்பையும் அயர்வையும் போக்கப் பிரயாணத்தைத் தொடங்கினோம்.
பிரயாணமோ தடைப்பட்டு விட்டது. ‘ஏதேனும் நல்ல புஸ்தக மாகக் கிடைத்தால் பொழுதையும் ஓட்டிவிடலாம்’ என்று நினைத்தேன். ஒரு ருஷியக் கதைப் புத்தகத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு அதே பெட்டிமேல் வந்து உட்கார்ந்தேன். மொத்தம் மூன்றே கதைகள்; 205 பக்கம். ‘பாலை வனத்தில் பிரயாணம் செய்கிறவர்கள் தோல் பைகளில் தண்ணீரை எடுத்துச் செல்வார்களே; அந்த மாதிரி இந்த ஒரு புத்தகம் ரெயில் பிரயாணம் முடியுமட்டும் போதுமானது என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன்.
சுமார் இரண்டு மணி நேரந்தான் கழிந்திருக்கும். புத்தகத்தின் கடைசி ஏடு வந்துவிட்டது.
ரஸமான புத்தகம். புத்தகம் முடிந்ததும் கூட்டுக்குத் திரும்பும் குருவி போல் பழைய சூனியம் வந்தடைந்தது.
கண்ணை மூடினேன். ஒரு சல்லடையும் அதன் மீது ஒரு புஸ்தகம் உருகி நீராகக் கொட்டுவது போன்ற சித்திரமும் தெரிந்தன. ‘எதற்காகப் பணத்தை வீணாக்கிப் புத்தகம் வாங்கினாய்? சல்லடையில் ஜலம் நிற்குமா? என்ன இன்பம் மிஞ்சிற்று?’ என்று அந்தச் சித்திரம் குத்திக் காட்டுவது போல் இருந்தது.
அப்பொழுது “யாரையா பெட்டி மேலே? அதென்ன நாற்காலியா?” என்று ஒரு குரல் அதட்டவே, திரும்பிப் பார்த்தேன். ரெயில்வேச் சிப்பந்தி! அதிகாரத்தின் முன் அகப்பேய்ச் சித்தர் கூட என்ன செய்யமுடியும்? அவன் அதட்டலைக் கேட்ட என் தத்துவ விசாரமெல்லாம் நண்டு போல் வளைக்குள் பதுங்கிவிட்டது. விட்டு நகர்ந்தேன். ஆனால் பொழுதும் அந்தச் சுமையும் அந்த இடத்தை என்னை விட்டு நகரவில்லை.
இப்படியே நரக வேதனையாக அரை மணி கழிந்தது. அதற்குப் பிறகு சொர்க்கவாசல் திறந்தது. ரெயில் ஆரவாரத்துடன் எதிரில் வந்து நின்றது. வெகு ஆறுதலடைந்து அதில் ஏறினேன்.
சென்னை சேரும் வரையில் அதிகச் சங்கடம் இல்லை. ஸ்டேஷனை விட்டு என் நண்பன் வீட்டுக்குச் சென்றேன். ஆபீஸ் தவளை என்று நண்பன் என்னைப் பரிகாசம் செய்வதுண்டு. ஆகையால் என்னைப் பார்த்தவுடன் எதிர் பாராத மழையை வரவேற்பதுபோல், உத்ஸாகம் பொங்க “வா ரிசியசிருங்கா!” என்று வரவேற்றான்.
பிறகு சிறிது நேரம் குடும்ப சுகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். காலை உணவு ஆயிற்று. பொழுது அப்பொழுதும் சுமையாக உட்கார்ந்திருந்தது. ஆபீஸ் இல்லை. வேறு வேலையும் இல்லை. என்ன செய்வது?
நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே புறப்பட்டேன். ஒரு திட்டமும் இல்லை, ஒரு குறிப்பும் இல்லை. சுற்றினோம், சுற்றினோம், அப்படிச் சுற்றினோம்! பகல் பன்னிரண்டு மணிக்குக்கூடக் கடற்கரையில் இருந்தோம்.
திரும்பி வரும்பொழுது அதுவரையில் சும்மா வந்த நண்பன் கால் கண்டைச்சதையைப் பிசைந்துகொண்டே கேட்டான்:
“ஏழு மைலாவது நடந்திருப்போமே; எதற்காக?”
“சும்மாத்தான்.”
நண்பன் நல்ல மதியூகி.
“சும்மாத்தானா? அதாவது வாழ்வில் பிடிப்பு விட்டுப் போய் அயர்வு தோன்றிவிட்டதென்று பொருள். மாய மான் சிக்கவில்லை என்ற வருத்தம். வண்டு, தேனைத் தேடுவது போல் பித்துப் பிடித்து அலைகிறாய். மோட்டார் வண்டியும், தார் போட்ட வீதியும், சிமிட்டி மாடியும், வீடில்லா அநாதையும், டிராம் வண்டியும், ஒண்டுக் குடித்தனங்களும், ஆலைகளும் தரித்திரமும் நிறைந்த நகரம் புஷ்பமா என்ன – உனக்குத் தேன் அளிப்பதற்கு? நீ டாக்டரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என்றான்.
எனக்கு ஒரு குலுக்குக் குலுக்கிற்று; இந்த அயர்வென்னும் வியாதியைக் கண்டுபிடித்து விட்டானே என்று.
பிறகு வீடு வந்து சேர்ந்தோம். சாப்பாடு முடிந்ததும் எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்காவிட்டால் மனத் திகிரியிலிருந்து என்ன என்ன விதக் கருத்துக்கள் உரு வெடுத்திருக்குமோ?
இரண்டரை மணிக்கு எழுந்தேன். அப்போது கூடப் பொழுதென்னும் வௌவால் எனக்குள் தலைக் கீழாகத் தொங்கிக் கொண் டிருந்தது. “நல்ல சினிமாவாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டேன். ஒரு படத்தின் பெயரைச் சொல்லிவிட்டு, “முதல் ஆட்டத்துக்குப் போகலாம்” என்றான்.
“மூன்று மணி ஆட்டம் இல்லையா”
”உண்டு; என்ன அவசரம், வெயில் வேளையில்?”
“சும்மாத்தான்.”
அதற்குமேல் நண்பன் தர்க்கம் செய்யவில்லை. ஆட்டத்துக்குக் கிளம்பினோம். ஆட்டம் அரை மணிக்குமேல் ரஸிக்கவில்லை. எழுந்து போய்விடலாமா என்றுகூட தோன்றிற்று. ஆனால் டிக்கெட்டுக்குப் பணம் நான் கொடுக்கவில்லை என்ற நினைப்பு அதற்கு ஒரு தடை செய்தது. சும்மா உட்கார்ந்திருந்தேன். பெரிய மாம்பழத்தை அணில் கொறிப்பது போல் மனத்தைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிந்து வீடு திரும்பினோம்.
இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு தனியாகக் கடற்கரைக்குச் சென்றேன். நிலவின் ஒளியில், அலையின் ஏற்றத்தாழ்வில் ஒரு சுடர் தெரிந்தது வீடு திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். படுத்ததும் சிந்தனை ஓடிற்று.
கஸ்தூரி மான் என்கிறார்களே, அது உண்மையா? கஸ்தூரி வாசனையைத் தேடிக் காடு முழுவதும் மான் அலைகிறது என்பதும் உண்மையா? அந்த மாய மானைப் போலத் தான் மனமா? தனக்குள் இருக்கும் நிலையான ஊற்றை அறியாது அதைத் தேடிப் பிரயாணத்தையும், ஸ்தல யாத்திரையையும், புஸ்தகப் படிப்பையும், சினிமா பார்ப்பதையும் மேற்கொள்வது சரியா?”
இதே சந்தேகத்துடன் மறுநாள் காலையில் எழுந்தேன். ராஜாவை ரத்துச் செய்துவிட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரே எண்ணம் மேவி நின்றது. நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.
ஊருக்கு வந்த மூன்றாம் நாள் நண்பனிடமிருந்து கடிதம் வந்தது. நான் புதுப் புஸ்தகம் ஒன்றை மறந்து வைத்து விட்டுத் திரும்பியதாக எழுதியிருந்தான்.
புஸ்தகத்தை ஞாபகம் இல்லாமல்தான் வைத்து விட்டுத் திரும்பியிருந்தேன். ஆனால் இப்பொழுது அந்த மாதிரி தோன்றவில்லை. ‘பிரயாணத்தில் இன்பம் தெரியவில்லை. சினிமாவில் தெரியவில்லை. புஸ்தகத்திலும் தெரியவில்லை; இவைகளால் என்ன பயன்?’ என்று எனக்குள் இருக்கும் எதுவோ ஒன்று கருதி, அந்த அறிவின் அறிகுறியாகப் புஸ்தகத்தை வேண்டுமென்றே மறந்துவிட்டு வந்ததாகத் தோன்றிற்று.
இந்தத் தெளிவான ஞானம் வந்ததும் நண்பனுக்குக் கடிதம் எழுதினேன். “மான் கஸ்தூரியைத் தேடி இனி மேல் அலையாது. இனிமேல் புஸ்தகம், சினிமா ஒன்றும் தேவை இல்லை. டாக்டரும் தேவை இல்லை. இந்த முடிவின் விளைவாகத்தான் புஸ்தகத்தை விட்டு வந்தேன். இனிமேல் செய்யும் தொழிலில் இன்பம் காணப்போகிறேன்” என்று ஒரு பதில் எழுதினேன். சரிதானே?
இப்பொழுது மாய மானின் குளம்போசை நெஞ்சிலே கேட்கிறது.



