
சிறுவர்க்கான செந்தமிழ் மறைமலையடிகள்
1. பகலவன் வணக்கம்
பகலவன் என்னும் தமிழ்ச் சொல் சூரியனைக் குறிப்பதாகும். சூரியன் என்னும் சொல் வடநாட்டில் இருந்த ஆரியர் வழங்கிய வடசொல் ஆகும். இத்தென்னாட்டில் உள்ள தமிழர்கள் பழைய காலத்திலிருந்து பகலவனை ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, என்றூழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன் முதலான பல செந்தமிழ்ப் பெயர்களால் வழங்கி வந்திருக்கின்றனர்.
இராக்காலத்தில் தூக்கத்தில் இருந்த நாம், பகலவன் கிழக்கே தோன்றும் விடியற்காலையில் கண்விழித்து எழுந்து, அவனைப் பார்க்கும் போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தவர்களாய் நிற்கின்றோம். கிழக்கே கடல் மட்டத்திற்கு மேல் ஞாயிறு வட்டமாய்ப் பளபள என்று வருகையில் அஃது ஒரு பொன் உருண்டையைப் போல் தோன்றுகின்ற தன்றோ? அப்போது அதனைச் சூழ அதிலிருந்து பாயும் ஒளி பல்லாயிரக்கணக்கான பொற்கம்பிகள் போல் நீண்டு செல்லுதலைப் பாருங்கள்!
இராப்பொழுதில் எங்கும் பரவியிருந்த இருளைத் துரத்திக் கொண்டு கதிரவன் வானத்தின் மேல் எழும்பும் இந்தக் காட்சியை நாம் காண்கையில், அது சிவந்த திருமேனி உடையனாகிய முருகப்பிரான், கறுத்த உருவத்தினை உடைய அரக்கர் கூட்டத்தின் மேல் பல்லாயிரக்கணக்கான தன் அம்புகளை ஏவி அவர்களைத் துரத்திக் கொண்டு வருவது போல் தோன்றுகின்றதன்றோ? மிகுந்த ஒளியுடன் விளங்கும் அச்சுடரவனுக்குக் கீழே பச்சை நிறத்துடன் காணப்படும் கடலானது அம்முருகப்பிரான் ஏறியிருக்கும் பச்சைமயில் போலவும், அக்கடலில் எழுந்து எழுந்து கீழே விழுந்து உலாவும் அலைகளானவை அந்த மயில் இறக்கைகளை விரித்து அடித்துப் பறந்து வருவது போலவும் தோன்றுதலை நோக்குங்கள்!
இங்ஙனமாக, அப்பரிதி வானவனது தோற்றம், ஒளிவடிவான கடவுளின் தோற்றத்தையே ஒத்திருக்கின்றது. அது அல்லாமலும், அக்கடவுள் எல்லா உயிர்களையும் அறியாமை என்னும் இருளினின்றும் விடுவித்து, அவற்றின் அறிவை விளங்கச் செய்தல் போல, இவ் என்றூழும் உறக்கத்திலிருந்த எல்லா உயிர்களின் அறிவையும் எழுப்பி, அவைகளைப் பலவகை முயற்சிகளில் ஏவுகின்றது பாருங்கள்! கனலி தோன்றுகிற விடியற்காலத்தில் கோழி கூவுகின்றது, காக்கை கரைகின்றது, மாந்தோப்புகளின் உச்சியிலே குயிலின் இனிய ஒலி கேட்கின்றது. இன்னும் எத்தனையோ பறவைக் கூட்டங்களின் எத்தனையோ வகையான ஓசைகளும் தோன்றுகின்றன. இரவெல்லாம் கொட்டிலில் கிடந்த ஆக்கள் (பசுக்கள்) தொகுதி தொகுதியாக வெளி நிலங்களில் புல்மேயப் போகின்றன. உழவர்கள் எருதுகளை ஏரிற்பூட்டி வயல்களை உழத் துவங்குகின்றனர்.
இரவு முழுவதும் தூக்கமயக்கத்துடன் சரக்குவண்டிகள் ஓட்டி வந்த வண்டிக்காரர்கள் அச்சரக்குப் பொதிகளைப் பண்டசாலை முற்றங்களில் இறக்குகின்றனர். பல்வகைப் பொருள்களை விற்கும் கடைக்காரர்கள் எல்லாம் தத்தம் கடைகளை வரிசை வரிசையாகத் திறந்து வைத்து, அவைகளை வாங்க வருவார்க்கு விற்பனை செய்கின்றனர். பல்வகைக் கைத்தொழிலாளர்களும் தத்தம் தொழிற்சாலைகளுக்குச் சென்று தாம்தாம் செய்யும் தொழில்களைச் செய்யத் துவங்குகின்றனர். அரசியல் தொழில் பார்ப்பவர் தத்தம் அரசியல் நிலையங்களுக்குச் செல்லுதலையும், பள்ளிக் கூடங்களில் கல்வி பயிலும் சிறுவர்களும், கல்லூரிகளில், பல்கலை பயிலும் இளைஞர்களும் தத்தம் கழகங்களுக்கு ஏகுதலையும் பாருங்கள்! கடவுள் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களில் எல்லாம் கதவு திறந்து குருக்கள்மார் காலை வழிபாடு செய்வது எவ்வளவு சிறந்த மகிழ்ச்சியினைத் தருகின்றது! இங்ஙனமெல்லாம் நடைபெறும் உயிர்களின் இத்தனை முயற்சிகளுக்கும் காரணமாவது எல்லோனது தோற்றமே என்பது நன்றாய் விளங்குகின்றதன்றோ?
இதுமட்டுமோ! நமது உயிர்வாழ்க்கைக்குக், கட்டாயமாக வேண்டப்படும் நெல், கோதுமை, பயறு, பச்சைக்காய்கறி முதலியவைகளை நாம் விளைத்துக் கொள்ளுதற்கும் வெயிலோனது வெயிலொளியே காரணமாயிருக்கின்றது. வெயில் வெளிச்சம் படாவிட்டால் எந்தப் புற்பூண்டும், எந்த மரஞ்செடி கொடியும் செவ்வையாக வளர்ந்து பயன் தரமாட்டா. இன்னும், மழைக்கால, பனிக்காலங்களில் நமது உடம்பு குளிரால் விறைத்துப் போகாமலும், நாம் புழங்கும் தண்ணீர் பனிக் கட்டியாக இறுகிப் போகாமல் இருப்பதற்கும் வெய்யோனது வெப்பம் முதன்யைக வேண்டியிருக்கிற தன்றோ?
நாம் இருக்கும் இடங்களெல்லாம் பனிமூடிப் போகுமானால், நாம் எந்தப் பண்டத்தையாவது பயன்படுத்திக் கொள்ள முடியுமா? நமதுடம்பு விறைத்துப் போகுமானால் நாம் உயிரோடிருத்தல் இயலுமா? இயலாதே? ஆதலால், நாம் நமது உயிர் வாழ்க்கையைச் செவ்வனே நடைபெறுவித்தற்கும், நமது வாழ்க்கைக்குக் கட்டாயமாக வேண்டப்படும் எல்லாப் பண்டங்களும் நமக்குப் பயன்படும் நிலையிலிருந்து உதவு வதற்கும் வெய்யோனுடைய ஒளியும் வெப்பமும் முதன்மையாக இருத்தலை நாம் கருத்திற் பதித்துக் கொள்வோமாக!
இவ்வாறு, எல்லா உயிர்களுக்கும் அறிவையும் முயற்சியையும் எழுப்புதலிலும், அவ்வுயிர்களை உடம்புகளில் தோன்றச் செய்து அவற்றைப் பாதுகாத்தலிலும், அவ்வுயிர்கள் நுகர்ச்சிக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் விளைத்துத் தருதலிலும் பகலவனுடைய தன்மையும் செயலும் கடவுளின் தன்மையையும் அருட்செயலையும் ஒத்திருத்தலால், அப்பகலவனையே கடவுளாக அல்லது கடவுளின் ஒளி வடிவாகக் கருதிக், காலையில் அவன் கிழக்கில் எழும்போதும், மாலையில் அவன் மேற்கில் மறையும் போதும் அவனை உள்ளம் உருகிக் கைகூப்பித் தொழுவோமாக!
2. உலக இயக்கம்
நாம் உறையும் இவ்வுலகமானது வான் வெளியில் பந்து போல் சுழலும் ஓர் உருண்டை வடிவினதாகும். நாம் இருக்கும் இதன் மேற்பரப்பின் மையத்திலிருந்து இதனை ஊடுருவித் துளைத்துக் கொண்டு அளந்தபடியே நாம் இதன் கீழுள்ள மேற்பரப்பின் மையத்திற் சென்று சேரக் கூடுமாயின், இஃது 7,900 மைல் குறுக்களவுள்ளதாய் இருத்தலை அறிந்து கொள்ளலாம். இதன் சுற்றளவோ 25,000 மைலாகும்.
இஃது உருண்டை வடிவினதென்பது எங்ஙனம் அறியக் கூடுமெனின், நாம் ஒரு கடற்கரையிற் சென்று நின்று, அக்கரையை நோக்கி வரும் ஒரு கப்பலைக் காண்குவமாயின், நெடுந்தொலைவிலிருந்து வரும் அக்கப்பலின் மேலுள்ள பாய்மரங்களே முதன்முதன் கட்புலனாகும். பின்னர் அது இந்நிலச்சரிவில் பரவி நிற்கும் கடல்மேல் ஏறிக் கிட்ட வரவரப் பாய்மரத்தின் கீழுள்ள அதன் முழுவுடம்பும் பையப்பைய நன்கு புலனாய்த் தோன்றும். அங்ஙனமே, நாம் நிற்கும் கரையின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுத் தொலைவிற் செல்லும் ஒரு மரக்கலமானது கடல்நீர் சரிவின் கீழ் இறங்க இறங்க அதன் முழுவுடம்பும் சிறிதுசிறிதாய் மறைந்துபோக, அதன் மேலுள்ள பாய்மரங்களே பின்னும் சிறிது நேரம் வரையில் கட்புலனா கின்றன. பின்னும் பின்னும் அது கீழ் இறங்க அதன் பாய் மரங்களும் மறைந்து போகின்றன. இதனால் இவ்வுலகமானது உருண்டை வடிவினதாதல் பெறப்படுகின்றதன்றோ? இன்னும் நமது இலங்கைத் தீவின் தென்முனைக் கண்ணதான மாத்தளை யிலிருந்து புறப்பட்டுக் கிழக்கு நோக்கியே செல்லும் ஒரு நாவாயானது, மீண்டும் அம்மாத்தளைத் துறைமுகத் திலேயே வந்து சேரக் காண்டலாலும் இந்நிலவுலகம் உருண்டை வடிவினதென்பது விளங்கா நிற்கின்றது. இதற்கு ஒரு பந்தின் நடுவில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து புறப்பட்டு நேரே செல்லும் ஓர் எறும்பு திரும்பவும் அப்புள்ளியிலேயே வந்து சேர்தலை எடுத்துக் காட்டலாம். அதுவேயுமன்றித், திங்கள் மறைவு (சந்திரகிரகண) காலத்தில், அதன்கண் காணப்படும் இவ்வுலகத்தின் நிழலானது வட்டவடிவினதாய்க் காணப்படுவ தாலும் இஃது உருண்டை வடிவினதாதல் தெளியப்படும்.
அவ்வாறாயின் பந்துபோல் உருண்டிருக்கும் இந்நிலமண்டிலம் வான்வெளியில் ஏதொரு பற்றுக்கோடும் இன்றிச் சுழன்று செல்வது ஒரு பெரும் புதுமையாகத் தோன்றுகின்றதன்றோ? எனின்; ஆம்; ஆராய்ந்து பாராதவர்க்கு அது புதுமைதான். ஆராய்ந்து பார்ப்பவர்க்கோ, அதன் உண்மை நன்கு விளங்கும். சிறுமியர் இருவர் எதிர் எதிரே நின்று தம்கைகளைக் கோத்துப் பிடித்துக் கொண்டு பின்னே சாய்ந்த வண்ணமாய்த் தும்பி சுற்றுதலைப் பாருங்கள்! அங்ஙனம் சுற்றுங்கால் பின்னே சாய்ந்திருக்கும் அவ்விருவருங் கீழ் விழாதது ஏன்? அவர்கள் தம் கைகளை நீட்டி இறுகப் பிடித்திருத் தலாலன்றோ? அது போலவே, பகலவன் மண்டிலமானது இந்நிலவுலகத்தை இழுக்க, இஃது அதனை இழுக்க, இவ்வாற்றல் ஒன்று மற்றையதை விட்டுப் பிரியாதாய் வான்வெளியிற் சுழன்று செல்கின்றதென்க. அங்ஙனமாயின், அறிவில்லாத இவ்விருவேறு உலகும் அறிவுடைய சிறுமகாரைப் போல் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டு செல்லுதல் யாங்ஙன மெனின், அறிவுடைய உயிர்கள் மட்டுமே ஒன்றையொன்று இழுப்பன, மற்றைய இழா என்று கொள்ளுதல் பொருந்தாது. அறிவில்லாத பொருள்களும் ஒன்றையொன்று இழுக்க வல்லனவாய் இருக்கின்றன. ஒரு காந்தக்கல் தன் பருமனுக்கு ஏற்பச் சிறிய பெரிய இரும்புத் துண்டுகளை இழுத்தல் காணலாம். அக்காந்தக் கல்லை ஒரு கடிதத்தின் கீழ் பிடித்து, அக்கடிதத்தின் மேல் சில ஊசிகளை வைத்துக் கீழுள்ள காந்தக் கல்லை நெடுக இழுத்தால் மேலுள்ள இரும்பூசிகளும், அதனால் இழுக்கப் பட்டு, அக்கடிதத்தின் மேல் நகருதலைப் பார்க்கலாம். அறிவில்லாத காந்தம் இங்ஙனம் இழுக்கும் ஆற்றல் வாய்ந்ததாய் இருத்தல் போலவே, அறிவில்லாத ஞாயிற்று மண்டிலமும், வானவெளியினூடு இந்நிலவுலகத்தை இழுக்க, இதுவும் அதனையிழுக்க இரண்டும் இடைவெளியிற் சுழன்று செல்கின்றனவென்று ஓர்ந்துகொள்க.
இராக்காலத்தில் நமக்கு நிலவொளியினைத் தரும் திங்கள் மண்டிலமும் இந்நிலவுலகத்தால் இழுக்கப்பட்டு, இதனைச் சுற்றியபடியே ஞாயிற்றினையும் சுற்றிச் செல்கின்றது. இங்ஙனமே, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி முதலான உலகங்களும் ஞாயிற்றினை இழுக்க, அது மற்று இவ்வுலகங்கள் எல்லா வற்றையும் ஒருங்கே இழுக்க, இவை தாமும் தம்முள் ஒன்றை யொன்று சன்னல் பின்னலாய் இழுக்க எல்லாம் வான் வெளியிற் பற்பல பந்துகள் போல் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்லா நிற்கின்றன.
அற்றேல், மற்றை ஆறு மண்டிலங்களும் ஞாயிற்றினைச் சூழ்ந்து செல்கின்றனவென்று கொள்ளுதல் என்னையெனில்; இவ்வேழு உலகங்களிலும், ஞாயிறு ஒன்றுமே மிகப்பெரியது. நாமிருக்கும் இந்நிலவுலகத்தைவிட ஞாயிற்று மண்டிலம் பன்னிரண்டு நூறாயிரம் மடங்கு பெரியதாய் இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாகப் பெரியதாய் உள்ளது வியாழ மண்டிலமே ஆகும்; இவ்வியாழன் நமது மண்ணுலகத்தினும் ஓராயிரத்து நானூறு மடங்கு பெரியது. இதற்கு அடுத்தபடி பெரியது சனி மண்டிலம். இதற்குச் சிறியது நமது மண்ணுலகு. நமது மண்ணுலகுக்கும் சிறியது வெள்ளியுலகு. அதற்கும் சிறியது செவ்வாய் உலகு. அதற்கும் சிறியது புதனுலகாகும். இங்ஙனம் மற்றை ஆறும், பகல் மண்டிலத்திற்குச் சிறியனவாய் இருத்தலால், சிறியவாகிய அவை பெரியதாகிய பகலுலகினால் ஈர்க்கப்பட்டு அதனைச் சூழ்ந்து ஓடியபடியாய் உலவுகின்றன என்றுணர்ந்து கொள்க.
இனி, முருகப்பிரானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் தொண்டர் சிலர், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைச் சுற்றி நிலத்திற்கிடந்து புரண்டுகொண்டே வலம் வருதலை நீங்கள் பார்த்திருக்கலாம். அங்ஙனம் புரண்டு வலம் வருபவர் முதலில் தம்மைத்தாம் சுற்றிப் பின்னர் அக்கோயிலைச் சுற்றி வலம் வருதல் போலவே, இவ்வுலகமும் முதலில் தன்னைத் தான் சுற்றிப் பிறகு ஞாயிற்று மண்டிலத்தினைச் சுற்றி வருகின்றது.
இஃது ஒருமுறை தன்னைத்தான் சுற்றுதலுக்கு இருபத்து நான்கு மணி நேரம் பிடிக்கின்றது. மேற்கிலிருந்து கிழக்கு முகமாய் இஃது இங்ஙனம் தன்னைத்தான் சுற்றுங்கால் ஞாயிற்றினை நோக்கி இயங்கும் இதன் ஒருபாதி பகல் வெளிச்சம் உடையதாகவும், ஞாயிற்றின் முகமாய்த் திரும்பாத அதன் மறுபாதி இருண்ட அல்லது நிலவொளி கெழுமிய இராப்பொழுது உடையதாயும் காணப்படுகின்றன. நாம் உறையும் இத்தென்தமிழ்நாட்டில் பகலவன் உச்சியில் விளங்கும் வேளை நண்பகற் பொழுதாயிருக்கையில், நமக்குநேரே கீழ் உள்ள அமெரிக்கா தேயம் நள்ளிராப் பொழுது வாய்ந்ததாய் இருக்கின்றது; நமது தமிழ்நாட்டிற்கும் அமெரிக்கா தேயத்திற்கும் நடுவில் உள்ளதாகிய இங்கிலாந்து தேயமோ அப்போது விடியற்காலம் உடையதாய்த் திகழ்கின்றது.
இவ்வாறாக இவ்வுலகம் இருபத்துநான்கு மணிநேரத்தில் தன்னைத்தான் சுற்றியபடியாய், தன்னிலும் பன்னூறாயிர மடங்கு பெரிதான பகலவன் மண்டிலத்தை முற்றுஞ் சுற்றி வருவதற்கு முந்நூற்று அறுபத்தைந்தேகால் நாட்கள் ஆகின்றன. இங்ஙனம் இது ஒருமுறை கதிரவனைச் சுற்றி வருங்காலமே ஓர் ஆண்டு (வடமொழியில் வருஷம்) என்று சொல்லப்படுகின்றது. அங்ஙனம் வெய்யவன் உலகினைச் சுற்றிச் சுழன்று வருதல் உண்மையாயின், இதன் இயக்கம் நமக்குப் புலனாகாமையும், பகலவனே இதனைச் சுற்றி வருபவனாகப் புலப்படுதலும் என்னையெனின்; இஃது ஒரு மணிநேரத்தில் ஆயிரம் மைல் விழுக்காடு கதிரவன் மண்டிலத்தை மிகு விரைவாகச் சூழ்ந்து சுழலுதலால், அத்துணை விரைவாகச் செல்லும் இதன்கண் உயிர்வாழும் நமக்கு இதன் இயக்கம் புலனாகாது போக, இதனாற் சுற்றப்படும் பகலவனே இதனைச் சுற்றி வருபவன்போல் புலப்படுகின்றான். ஒரு மணிக்கு முப்பது மைல் விழுக்காடு ஓடும் புகைவண்டியில் செல்லும் நம்மனோர்க்கே அப்புகை வண்டியின் ஓட்டம் புலப்படாமல் அதன் இருபக்கத்தும் நிற்கும் நிலனும், மரஞ்செடி கொடிகளுமே ஓடுவது போல் புலப்படுமாயின், நினைத்தற்கும் அரிய கடுவிரைவுடன் ஒருமணி நேரத்திற்கு ஆயிரம்மைல் விழுக்காடு சுழன்றோடும் இந்நிலவுலகின் இயக்கம் நமக்குத் தென்படுமோ சொல்லுங்கள்! ஆகவே, நிலையில் உள்ளது போல் காணப் படுவது பற்றி இம்மண்ணுலகு நிலம் என்னும் பெயரால் வழங்கப்படினும், ஆராய்ந்து பார்க்குங்கால் வானக்கடலில் இது மிகுதியும் விரைந்து ஓடும் ஓர் ஓடமாகவே காணப்படுகின்றது என்க.
இனி, இந்நிலவுலகத்தின் இயக்கத்தில் வேறொரு முதன்மையான தன்மையும் உளது. இது தெற்கு வடக்கில் செங்குத்தாய் நின்றபடி சுழலாமல் தன் பருமன் 360 பங்கில் சிறிதேறக்குறையப் பதினைந்து பங்கு சாய்ந்தபடியாய் ஞாயிற்றினைச் சுற்றிச் சுழன்று செல்கின்றது. இங்ஙனம் சாய்ந்து சுழல்வதனால் இதன் வடமுனை தென்முனைகள் ஆறு திங்கள் பகலவன் முகமாய் திரும்பியும் பின் ஆறு திங்கள் பகலவனை விட்டுத் திரும்பியும் சுழல்கின்றன. அதனால் அவ்விரு முனைகளில் உள்ள நாடுகள் ஆறு திங்கள் ஒளியும் பின் ஆறு திங்கள் இருளும் வாய்ந்தனவாய் இருக்கின்றன. வடமுனையைச் சார்ந்த நாட்டின் கண்ணதான மேருமலையைச் சூழ்ந்த பகுதிகளில் ஆறு திங்கள் கதிரவன் ஒளியும், மற்றை ஆறு திங்கள் அவன் அங்குக் காணப்படாமையின் இருளும் தொடர்பாய் இருக்கின்றன என்று மாபாரத வனபர்வம் (163, 37, 38) பகர்வதும் நமது நிலவுலகின் சாய்ந்த இயக்கத்தால் அவ்விரு முனைகளில் காணப்படும் அவ்விருவகை நிகழ்ச்சிகளையே குறிப்பிக்கின்றது. ஆதலினால் தான், வடமுனையில் உறையும் மக்களுக்கு ஆறு திங்கள் ஒரு பகற்பொழுதாயும், மற்றை ஆறு திங்கள் ஓர் இராப்பொழுதாயும் இங்குள்ளவரால் கொள்ளப் பட்டு வருகின்றன. வடதேயங்களில் உறையும் மக்களைத் தேவர்களாகக் கொள்ளுதல் இத்தென்னாட்டவர்க்கு வழக்கம். ஆதலால், பகலொளி வீசும் ஆறு திங்களையும், அத்தேவர்கட்கு ஒரு பகற் பொழுதாகவும், அவ்வொளியின்றி இருள்சூழ்ந்த ஏனை ஆறு திங்களையும் அவர்கட்கு ஓர் இராப்பொழுதாகவும் இந்நாட்டவர் பண்டுதொட்டு வழங்கி வருகின்றனர். இந்நுட்பங்கள் எல்லாம் பண்டை ஆரியமக்களின் பழைய உறையுளை நன்காராய்ந்த பாலகங்காதர திலகரால் விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருக்கின்றன. வடமுனையில் உள்ளார்க்கு ஒவ்வோராண்டிலும் பகலவனொளி முதன்முதல் கட்புலனாய் தோன்றும் விடியற்காலம் பங்குனித் திங்கள் ஒன்பதாம் நாள் துவங்குகின்றது. அதிலிருந்து ஆறு திங்கள் வரையில் சுடரவன் ஒளி வானின் கண் துலங்கிய படியாய் இருந்து புரட்டாசித் திங்கள் எட்டாம் நாள் மறைந்து போக, அதிலிருந்து மறு பங்குனி வரையில் அவ்வடநாடுகள் இருள் சூழப் பட்டனவாய் இருக்கின்றன. அங்ஙனம் இருள் சூழ்ந்திருந்தாலும், பகலவன் தோன்றுவதற்கு முன் அறிகுறியாகக் காணப்படும் வைகறைப் பொழுது பங்குனிக்கு மூன்று திங்கள் முன்னரே மார்கழித் துவக்கத்தில் அந்நாட்டவர் கண்கட்குப் புலனாகுதலால்தான் இத்தென்னாட்டவர்கள் தேவர்கட்குப் பொழுது விடியும் காலமாக மார்கழித் திங்களைக் கொண்டாடி வருகின்றார்கள். ஆறு திங்கள் இருளில் கிடந்து மூழ்கும் மக்கட்கு ஒரு வகையில் ஆறுதலும் மகிழ்ச்சியும் தரும் பொருட்டு, இறைவன் அவ்வடமுனை நாடுகளுக்கு ஒரு பெரு மின்னல் ஒளியினைச் சிறிதுகாலம் வரையில் வானின்கண் தோற்றுவித்து வருதலையும் சிறார்கள் கருத்திற் பதித்து, இறைவனது பேரருள் திறத்தை வியந்து வாழ்த்துவாராக!
3. குறிஞ்சி-மலை
நாம் உயிர்வாழும் இந்த நில உலகமானது, மலையும், கடலும், காடும், நாடும் என நான்கு பகுதிகளாக நம்முடைய பழந்தமிழ் நூல்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்நான்கும் அல்லாத வெறு மணல்வெளியும் உண்டு. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சியென்று சொல்லப்படும்.
மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகளெல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு, என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும், ஒன்றன் மேலொன்று அடுக்குஅடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும், எதிரொலி செய்யும் மலையைச் சிலம்பு என்றும், மூங்கிற்காடுகள் உள்ள மலையை வரை என்றும், காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும், சிறிய மலையைக் குன்று, குவடு, குறும்பொறை என்றும், மண் மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும், மலைப் பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ்நூல்கள் கூறா நிற்கும்.
மலைகளின் இயற்கை அழகைக் காணவேண்டுமானால் தெற்கே திருக்குற்றாலம், பாவநாசம் முதலிய இடங்களிலுள்ள மலைகளையும் கிழக்கே கீழ்க்கணவாய் மலைத் தொடரில் உள்ள சேர்வராயன் மலையையும், நடுவே நீலகிரி மலையையும், மேற்கே புனலூர் பக்கமாய் உள்ள மலையாளத்தையும், வடக்கே இமயமலையையும் போய்ப் பார்த்தல் வேண்டும்.
தெற்கேயுள்ள பாவநாச மலையடிவாரத்தில் தனிநிற்கும் சிவபிரான் திருக்கோயிலும், அதன் வலப்புறத்தும் எதிரிலும் ஓடிவரும் பொருநையாறும் (தாமிரபருணி) அவ்வாற்றங்கரையில் வான் அளாவி நிற்கும் மரங்களும், அவ்வாற்றங்கரையின் அப்பக்கத்தே நெடுகத்தோன்றும் மலைத்தொடரின் ஓரிடத்தில் முகடு சிவந்த ஓடுகள் வேய்ந்து உடம்பெல்லாம் வெண்மையாக அமைக்கப்பட்டுத் தோன்றும் பஞ்சாலைக் கட்டிடங்களும், கோயிலின் பின்புறத்தே அவ்வாற்றின்கண் காணப்படும் மண்டபங்களும், அம்மலைத் தொடர் எங்கும் உள்ள அடர்ந்த காடுகளும் புதிது சென்று பார்ப்பவர்களுக்கு அவர் முன்னறியாத ஓர் இன்பவுணர்வினை ஊட்டி அவருள்ளத்தைக் கிளரச் செய்கின்றன.
வைகாசித் திங்கள் முடிவில் அங்கேசென்று, அத்திருக்கோயிலிலிருந்து ஒரு நாழிகை வழி நடந்து சென்றால், அகத்தியர் கோயிலொன்று காணப்படும். மலைப் பக்கத்திலிருந்து விரிந்த வெள்ளாடை தொங்க விட்டாற் போலக் குமுகுமு என்ற ஓசையுடன் கீழ்விழும் அருவியின் காட்சி எத்தகையவர் உள்ளத்தையும் கவரும் தன்மையதாய் விளங்குகின்றது. அவ்வருவிநீர் கீழ்விழும் இடத்தில் மிக ஆழ்ந்ததொரு மடு அமைந்துள்ளது. அம்மடுவுக்குச் செல்லும் ஓர் ஒற்றையடிப்பாதை செங்குத்தான மலைச்சுவரை அடுத்துப் போகின்றது. அப்பாதையில் செல்லுங்கால், கீழ் இறங்கும் அருவி நீர்த் திவலையும் சாரற்காற்றும் செல்வோரின் முகத்திலும் உடம்பிலும் எதிர்த்து அறைவது போற்படும்; அப்போது கண்விழித்துப் பார்த்தாலும் வருத்தமாயிருக்கும். என்றாலும், அதற்கு அஞ்சாது எதிரேறிச் சென்று, அம்மடுவில் மிகவும் விழிப்பாய் இறங்கி முழுகினால், மிகக் குளிர்ந்த அந்நீரின் முழுக்கு மிக்கதொரு மனக்களிப்பினையும் ஆறுதலையும் தரும்; உடம்பின் நலத்திற்கும் மிக ஏற்றது.
அவ்வளவு நடந்து சென்று, அம்மடுவில் முழுக இயலாதவர்கள், அம்மடுவில் நிறைந்து வழிந்து, மேற்சொன்ன அகத்தியர் கோயில் பக்கமாய் விரைந்து ஓடிவரும் பொருநையாற்றிலேயே நீராடலாம். ஆனால், அவ்விடத்தில் அவ்வாறு ஆழம் இன்றி இடுப்பளவிற்கும் குறைந்த நீர் உடையதாய் ஏகுதலால், அதில் படுத்தபடியாயிருந்து முழுகுதலே கூடும். அங்ஙனம் முழுகுங்கால் விழிப்பாயிருக்க வேண்டும். ஏனெனில் அவ்வாற்றின் நீர் மலைமேலிருந்து கீழ்விழுந்து மிகு விரைவாய் செல்வதனால், ஆளை நிலைக்கவிடாமல் புரட்டித் தள்ளிக் கொண்டு போய்விடும். மேலும், அவ்யாற்றின் அடிப்படை யெங்கும் ஒருபெரும் பூசனிக்காய் பருமன் உள்ள உருண்டைக் கற்கள் நிறைந்திருக்கின்றன! அதனால், அதன் அடியிற் காலைப்பதியவைத்து நிற்றலும் முடியாது; சிறிது பிசகி விழுந்தாலும் புரண்டாலும் மண்டை அடிபடும்; உடம்பும் கால்கைகளும் அவற்றில் உரைசிக் காயப்படும். ஆனாலும், விழிப்பாயிருந்து நீராடுபவர்க்குப் பளிங்குபோல் தெளிந்து ஓடும் அதன்நீர் மேனிமேற் குளுகுளுவென்று பட்டுப் பேரினிமை யினைத் தரும்.
நீராடியபின் அவ்வாற்றங் கரையினிடத்தே இருக்கும் அகத்தியர் கோயிலில் சென்று இறைவனை வணங்குவது உள்ளத்தைப் பேர் அருள் இன்பத்தில் அமிழ்த்தும். சுற்றி வானோங்கிய மலைகளும் காடுகளும் அடர்ந்திருக்க, எதிரே உள்ளதொரு மலை முகட்டிலிருந்து பால் ஒழுகுவது போல் ஓவென்ற இரைச்சலுடன் அருவி நீர் விழ, விழுந்த அந்நீர் திரண்ட கற்களின் மேல் விரைந்தோடிச் செல்ல, அங்ஙனம் அந்நீர் செல்லும் பொருநை ஆற்றங்கரைமேல் அவ்அகத்தியர் கோயில் தனிமையில் நிற்க. அதனுள் ஒரு குருக்கள் வழிபாடு செய்யும்போது, அங்கே வணங்கச் செல்வோர் மனம், உலக நினைவுகளை விட்டு, அங்குள்ள இயற்கைக் காட்சிகளின் அழகால் மேல் உந்தப்பட்டு, உயிர்களின் தனித்த துணையற்ற நிலைமையினையும், அந்நிலைமையில் இறைவன் ஒருவனே அவ்வுயிர்கட்கு ஒப்பற்ற துணைவனாய் வாய்த்துள்ள அருமையினையும் நினைந்து நினைந்து நெக்குவிட்டு உருகுகின்றது.
இப்பாவநாசக் காட்சியினை ஒப்பவே, திருக்குற்றால மலை அடிவாரத்திலும் பெரியதொரு பழைய சிவபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் அருகேயும், மலைமேலிருந்து விழும் பெரியதோர் அருவி வீழ்ச்சி காண்டற்கு மிக இனியதோர் அழகினை உடைத்தாய்த் திகழ்கின்றது. வேனிற் கால நடுவில் இவ்வருவியில் தலைமுழுகுதற் பொருட்டுப் பல்லாயிரக்கணக்கினரான மக்கள் இத்தென்னாடு எங்கணு மிருந்து வந்து திரள்கின்றனர்.
இத்திருக்குற்றால மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்லுதற்குத் திருத்தமான அகன்றதொருபாதை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது வளைந்து மேலே சண்பகாடவி வரையில் செல்கின்றது. இதனூடு செல்கையில் இதன் இருபுறத்தும் ஓங்கி வளர்ந்திருக்கும் அடர்ந்த மரக்காடுகளின் காட்சி மனத்திற்கு அச்சத்தோடு கலந்த ஒரு மகிழ்ச்சியினைத் தோற்றுவிக்கும். சண்பகாடவியின் அருகே அழகியதொரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது; அங்கே அருவி விழும் இடத்தின் பக்கத்தே ஒரு குகையும் உளது; இருபது ஆண்டுகளுக்குமுன் யாம் அங்கே சென்றபோது இளம்பருவத்தினரான ஒரு துறவி அக்குகையில் தங்கியிருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றுத், தாம் இருக்கும் அக்குகையின் உள்ளே எம்மை அழைத்து, அதன் உள் அமைப்பை எமக்குக் காட்டினார்.
இருபெருங் கற்பாறைகள் ஒன்றையொன்று தொடுதலால் அஃது ஒரு சிறிய அறைபோல் இயற்கையமைப்பு வாய்ந்திருந்தது. அதனுள் உயரமான ஒருவர் நேராக நிற்றல் இயலாது. குனிந்தபடியாகச் சென்றுதான் இருக்கவேண்டும். நான்கு பேர் இருக்கவும், இருவர் படுக்கவும் போதுமான இடந்தான் உளது. அத்துறவி அக்குகை வாயிலில் சிறு செங்கல் சுவர் எழுப்பி அதில் ஒரு சிறு கதவு பொருத்தி இருந்தார். வெளிக்காற்று உள்ளே நுழைவதற்காக அக்கதவின் மேற் பகுதியில் சிறுசிறுதுளைகள் உண்டு. இராக்காலத்தில் அருவி நீர் குடிக்கவரும் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி முதலான விலங்குகள் உருமும் ஓசையும் அவை ஒன்றை யொன்று சினந்து தாக்கிச் செய்யும் இரைச்சலும் பெருந் திகிலை விளைக்குமென்றும், நிலாக்காலத்தில் அக்கதவின் துளைவழியே தாம் அவ்விலங்குகளின் வடிவத்தைப் பார்ப்பது உண்டென்றும் அவர் எமக்குக் கூறினார். கீழே மலையடி வாரத்தில் விழும் அருவியைப் பார்க்கிலும் மேலே சண்பகாடவியில் விழும் அருவிநீர் குளிர்ந்ததாய் இருக்கின்றது; தண்ணீரின் அளவும் சிறிது குறைந்ததாக இருத்தலால் தலைமேலும் உடம்பின் மேலும் அதனைத் தாங்கி முழுகுவது இங்கே எளிதாயும் மிக இனிதாயும் இருக்கும்.
இனிச் சண்பகாடவியைத் தாண்டி, இன்னும் மேலேறி உயரத்திலுள்ள தேனருவிக்குச் செல்லத் திருத்தமான அகன்ற பாதை இல்லை. இண்டு இடுக்குத் தெரியாமல் அடர்ந்திருக்கும் பெருங்காடுகளின் ஊடே ஓர் ஒற்றையடிப் பாதைதான் செல்கின்றது. அப்பாதை நெடுக உதிர்ந்த இலைச் செத்தைகளும், வேர்களும், கொடிகளும் நிரம்பியிருத்தலால் அவற்றின்மேல் நடப்பது அச்சந்தரும்; இடையிடையே சிறுசிறு மலைப்பிளவுகளும் உண்டு; ஆனாலும், அவைகளை எளிதில் தாண்டிச் செல்லலாம். திடீரென்று, யானை, வேங்கைப் புலி, முள்ளம்பன்றி முதலான மறவிலங்குகள் வந்து குறுக்கிடுதல் உண்டாகையால், மேலே தேனருவிக்குச் செல்வோர் ஒருவர் இருவராய் போதல் கூடாது. ஐந்தாறு பேர்க்குக் குறையாமற் கையில் தடிக்கம்பு தாங்கி இரைச்சல் இட்டுக்கொண்டே பகல் வேளையிற் செல்லவேண்டும். இங்ஙனம் சென்றால் தேனருவியைப் போய் அடையலாம். அடைந்ததும் அங்குள்ள காட்சி கண்ணும் மனமும் கவர்ந்து மேல் ஓங்கி விளங்குதல் அறியப்படும். அங்கே விழும் தேனருவியானது மிகவும் செங்குத்தான ஒரு மலைச் சுவரின் மேலிருந்து வழிகின்றது. அவ் வருவிச் சுவருடன் வலப்புறத்தில் இணைந்திருக்கும் கற்பாறை, மேலே குடைகவித்தாற் போல் அமைந்துள்ளது; மேலிருந்து தேனருவி வழியும் மூலையில் நாலைந்து தென்னைமர உயரத்தில் வட்டமான ஒரு பெருந்தேனடை இருந்தது. அவ்வளவு பெரிய தேன் அடையை யாம் வேறு எங்குமே கண்டதில்லை. அதன் குறுக்களவு சிறிது ஏறக்குறையப் பத்து அடி இருக்கும். அதன் நிறஞ் சிறு சிவப்பாய் இருந்தமையால், அது காலையில் எழும் பகலவன் வடிவை ஒத்திருந்தது. அத்தேனடையின் பக்கத்துள்ள மூலை மேலிருந்து அருவிநீர் வீழ்தல் பற்றியே அதனைத் தேனருவியென வழங்குகின்றனர் என்றும், எக் காலத்துமே அத்தேனடை அங்கு இருக்கும் என்றும் எம்முடன் வந்தார் சொல்லக் கேட்டோம்.
தேனருவி கீழ்விழும் இடம் ஆழ்ந்த ஒரு சிறு குட்டமாயிருக்கிறது. மேலிருந்து விழும் நீரின் கடுமையால் அக்குட்டம் நுரையும் குமிழியும் உடையதாய் ஓயாது நிறைந்து தன்னிலிருந்து மற்றொரு சிற்றருவியினை உண்டாக்க, அச்சிற்றருவியே வரவரப் பெரிதாகிக், கீழே சண்பகாடவியிலும், அதற்கும் கீழே திருக்குற்றாலப் பெருமான் கோயிலின் பக்கத்தும் போய் வீழ்கின்றது. தேனருவியின் கீழ் உள்ள குட்டம் ஒரு கற்பாறையின் குடையில் அமைந்திருத்தலால், அதன்கண் நிரம்பும் நீர் மிக்க தெளிவுடையதாய் தூய்தாய் மிகக் குளிர்ந்து இருக்கின்றது.
4. முல்லை-காடு
மரங்கள் அடர்ந்த நிலப்பகுதியே பெரும்பாலும் காடு என வழங்கப்பட்டு வருகின்றது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லையெனப் பெயர் பெறுமென்று தமிழ் நூல்கள் கூறாநிற்கும். பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறு மரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை அரில், அறல், பதுக்கை என்றும் மிக முதிர்ந்து முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும் அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ்மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர்.
இங்ஙனம் பலவகையால் வழங்கப்படும் காடுகளில் பெரும்பாலான மலைகளின் மேலும் மலைகளின் கீழும் மலைசார்ந்த இடங்களிலுமே காணப்படுகின்றன. சிறுபான்மைய கடல் சார்ந்த இடங்களில் இருக்கின்றன. திருமறைக்காடு (வேதாரணியம்) என்னும் சிவபிரான் திருக்கோயில் உள்ள ஊரையடுத்த காடு கடலடுத்த நிலத்தின்கண் உள்ளது. பனங்காடு உடைவேலங்காடு முதலியன பாண்டிநாட்டில் இராமேசுவரம், திருச்செந்தூர் முதலியவைகட்கு அண்மையவான கடல்சார்ந்த இடங்களில் மிகுதியாய் உள்ளன.
வான் அளாவிய மரங்கள் அடர்ந்து, தொலைவிலிருந்து நோக்குவார்க்குப் பசுந்தழைப் போர்வையுடன் தோன்றி, அவர்தம் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய், அருகே சென்று தம்முள் நுழைந்து நோக்குவார்க்குப் பல்வேறு வகையான பருத்துயர்ந்த மரங்களும் செடிகொடிகளும் வாய்ந்தனவாய், உள்ளே செல்லச்செல்ல இருண்ட இடங்களும் இடையிடையே பகலவன் வெளிச்சம்படும் சந்துவெளிகளும் தம் அகத்து உடையனவாய், நீர் ஊற்றுகளும் சிற்றருவிகளும் ஆங்காங்கு அமையப்பெற்று அவற்றை அடுத்துள்ள மரஞ்செடி கொடிகளில் பலவகைப் பறவைக் கூட்டங்களும் அவற்றின் ஒலிகளும் நிரம்பப் பெற்றவனவாய் தம்முள் செல்வாரின் உள்ளத்தை அச்சுறுத்தும் யானை புலி கரடி பெரும்பாம்புகளின் அடிச்சுவடுகளும் உடற்பதிவுகளும் பொருந்தினவாய், சருகுகள் பூக்கள் கனிகள் வித்துகள் இடங்கள் தோறும் உதிரப் பெற்றனவாய், இடையிடையே பட்டு வீழ்ந்து உள் இயங்குவாரின் வழிகளை மறிக்கும் உலர்ந்த மரங்களும் கோடுகளும் வளார்களும் முட்களும் வேர்களும் கொடிகளும் துதைந்தனவாய் உள்ள பெருங்காடுகளைப் புனலூர், நீலமலை, திருக்குற்றாலமலை, அழகர்மலை, பாவநாசமலை, வெள்ளிமலை, மருதமலை, சேர்வராயன்மலை, இமயமலை முதலான மலைப் பாங்குகளுக்கு யாம் சென்ற காலங்களில் கண்டு, முன்னறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் இறும்பூதும் எய்தினோம். இத்தகைய பெருங்காடுகளைப் பாராதவர்களுக்கு, ஓரறிவு உயிர்களின் அமைப்பில் இறைவன் தோற்றுவித்திருக்கும் வனப்பும் உயர்ந்த காட்சியும் வியப்பும் பயனும் ஒரு சிறிதுமே விளங்கா.
கானகத்தின் கவினைக் கானகத்திலன்றி வெறெங்கும் காணல் இயலாது. எத்தனை வடிவான இலைகள்! எத்தனை நிறமான மலர்கள்! எத்தனை சுவையான காய்கள்! எத்தனை இனிப்பான பழங்கள்! எத்தனை வகையான மரங்கள் செடிகள் கொடிகள்! அம்மம்ம! இறைவன் படைப்பின் பல்வேறு வகையான வியத்தகு அமைப்பும், அழகும் ஒருங்கு பொதுளிய அடவிகளின் விழுமிய தன்மையை எங்ஙனம் கூறுவேம்! எவ்வாறு காட்டுவேம்! கானகங்களின் அடர்ந்துயர்ந்த தோற்றத்தைக் காண்கையில் உள்ளமும் உணர்வும் மேலுயர்ந்து செல்கின்றன! வியப்பும் புதுமையும் கருத்தைக் கவர்ந்தெழுகின்றன!
அவை மட்டுமோ! நின்ற நிலையில் நிற்கும் மரஞ் செடி கொடிகளாகிய ஓரறிவுயிர்கள், இடம் விட்டுப் பெயரும் ஏனை உயிர்களுக்கு எத்தனை வகையிற் பயன்படுகின்றன! நீரும் நிழலும் உணவும் தூய காற்றும் அவைகள் அனைத்துயிர்கட்கும் அளித்து வருகின்றன காண்மின்கள்! காடுகள் இல்லையாயின், வெய்யவன் சுடுகதிர்களால் வெதுப்பப்படும் இந்நிலம் நீர்ப்பசையற வறண்டு விடும்; ஆவியாக மாறி வானின்கண் சென்ற நீர் குளிர்காற்று வீசுதற்கு வழியின்மையால் திரும்ப மழையாகக் கீழ் இறங்காது. ஆகவே, உணவுப் பண்டங்களைத் தரும் மரம் செடி கொடிகளும் ஏனைப் பயிர்களும் உண்டாகா. இவ்வுண்மை, காடுகளை அழித்துவிடும் இடங்களில் மழை அருகிப் போதலால் நன்கு தெளியப்படும்.
உணவே அன்றி, நமதுயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றும், காடுகளில் துவன்றிய மரஞ்செடி கொடிகளினாலேயே நாம் வரப்பெறுகின்றோம். இவ்ஓரறி
வுயிர்த்தொகுதிகள் மிகுந்தில்லாமல், ஏனை உயிர்த்தொகுதிகளே எங்கும் மிகுந்திருக்குமாயின் இவை வெளிவிடும் நச்சுக்காற்றை இவ்வுயிர்களே மீண்டும் மீண்டும் உட்கொண்டு, அதனால் நோய்ப்பட்டுச் சில நாட்களில் இறந்தொழியும். மற்றுக் கானகங்களிலும் பிற இடங்களிலும் உள்ள மரம் செடி கொடிகள் பயிர்களோ ஈரறிவு முதல் ஆறறிவு ஈறாக உடைய ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பனவாகிய சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலான இயங்குமுயிர்கள் வெளிவிடும் நச்சுக் காற்றை உள்ளிழுத்து, அதன் நச்சுத் தன்மையை நீக்கித் தூய காற்றை வெளிவிட்டு அதனை எங்கும் பரவச் செய்கின்றன. இவ்வுண்மை, பயிர் பச்சைகள் இல்லாத நகரங்களில் இருப்பவர்கள் அடுத்தடுத்து நோய்களாற் பற்றப்பட்டு விரைவில் மாய்ந்து போதலாலும், மரம்செடி கொடிகள் நிறைந்த நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நோயில்லா யாக்கையினராய் நீண்டகாலம் நன்கு உயிர் வாழ்தலாலும் இனிதறியப்படும்.
இனி, உலகத்திலே மிகப்பெரிய காடுகள், வட அமெரிக்கப் பெருந்தேயத்தின் ஒரு பகுதியாகிய கனடா நாட்டின் கண்ணேதான் இருக்கின்றன. இங்குள்ள காடுகளின் அளவு முந்நூற்று எழுபத்தைந்து கோடி காணிகளாகுமென்று கணக்கெடுத்திருக்கிறார்கள். தென்னமெரிக்க தேயத்திலும், இத்துணைப் பெரிய காடுகள் இருந்தாலும், அவைகளில் மரங்கள் மிக அடர்ந்திருத்தலாலும், கொடிய காட்டுவிலங்குகளும் நச்சுப் பெரும்பாம்புகளும் மிகுந்திருத்தலாலும் அவற்றினுள்ளே மக்கள் நுழைந்து சென்று பார்த்தலும் அவற்றை அளவெடுத்தலும் இயலவில்லையென்று ஆராய்ந்துபோய்க் காணும் ஆசிரியர்கள் அறிவிக்கின்றார்கள். ஐரோப்பியப் பெருந்தேயத்தின் வடபகுதியில் உளதாகிய உருசியா தேயத்திலும் மிகப்பெரிய காடுகள் இருக்கின்றன என்றும், அவற்றின் அளவும் சிறிதேறக்குறைய முந்நூற்றெழுபத்து ஐந்து கோடி காணிகளாகுமென்றும் இத்துறையில் வல்ல அறிஞர் கணக்கெடுத்துரைக்கின்றனர்.
இனி உயரத்திலும் பருமனிலும் குறைந்த அளவினவான மரங்கள் நிறைந்த குறுங்காடுகள் பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. திருமறைக் காட்டிற்கும் கோடியக்கரைக்கும் இடையிலுள்ள காட்டைக் குறுங்காடு என்றே கூறுதல் வேண்டும். இராமேசுவரத்திற்கும் பாம்பனுக்கும் இடையிலுள்ள காடும் குறுங்காடேயாகும். திருச்செந்தூரையடுத்த நெய்தல் நிலப் பகுதிகளிலுள்ள பனங்காடு உடைவேலங்காடுகளும் குறுங்காட்டில் சேர்ந்தனவேயாகும்.
இனிச், சிறு தூறுகளும் குறுஞ்செடிகளும் பம்பிய காடுகளும் உண்டு. யாமிருக்கும் இப்பல்லவபுரத்திற்கு அருகில் தூறுகளும் சிறு செடிகளும் நிறைந்த ஒரு நீண்டகன்ற காடு உளது. இன்னோரன்ன சிறு காடுகள், மேற்கூறிய பெருங்குறுங் காடுகளைப் போல் காட்சிக்கு இனியனவாய் இல்லாவிடினும், நிலத்தின் வறட்சியைத் தணித்து, ஏழை எளியோர்கள் விறகுவெட்டி விற்றுப் பிழைப்பதற்குப் பெரிதும் உதவியாகின்றன.
இனி, மிக முதிர்ந்து முற்றிப்போனமையால் அடர்ந்தில்லாமல் அலைசலாயிருக்கும் இலைகளையும், அவ்விலைகள் தாமும் இல்லாமல் வெறுங்கோடுகள் கொம்புகளையும் உடைய பெரிய மரங்கள் நிறைந்த காட்டின் பகுதிகளைக் கோயம்புத்தூர்க்கடுத்த வெள்ளிமலைப் பெருங்காட்டின் இடையிடையே கண்டு வந்தோம். தழைந்த பசியமரத் தொகுதிகளைக் கண்டுகளித்த கண்களுக்கு, வற்றலாய் நிற்கும் இம்மரங்களின் தோற்றம் வருத்தத்தை விளைவித்தது. செல்வத்தின் செழுமையால் கிளைஞரும் நண்பரும் சூழ வாழ்ந்து வந்தவர் ஒரு சிலர் சிறிது காலத்தில் அச்செல்வத்தை யிழந்து, சுற்றத்தார் எவருமின்றி, உடம்பின் ஒளியும் உள்ளக் கிளர்ச்சியும் அற்றுத் தனிநிற்றல் போலவும், இளமையும் அழகும் துலங்கத் தலைமையில் வீறி நின்றார், பிறர் சிலர் அவ்விளமையும் அழகும் தலைமையும் மாறி வற்றிய யாக்கையினராய் வருந்தி நிற்றல் போலவும், பச்சென்ற பொதுளிய இளந்தழைகள் உதிர்ந்து புட்களும் அவ்விலங் கினங்களும் அணுகப் பெறாமல் நீர்ப்பசையற்று வளார்களாகிய பழுத்த தலைமயிர்கள் காற்றில் அலையக் கோடுகளாகிய கைகளை நீட்டி விரித்துத் தமது வாட்டத்தைக் குறிப்பவனவாய்க் காணப்பட்ட அம்மரங்களின் தோற்றம், உயர்நிலை விரைவில் மாறப்பெறும் மக்களின் இவ்வுலகவாழ்வின் நிலைமையைக் குறிப்பதொன்றாகவே எமக்குத் தோன்றியது.
இனிக், கரிந்த மரங்களையுடைய பொச்சைக்காடுகள் கதிரவன் வெப்பத்தால் கனன்று கொண்டிருக்கும் மணல் வெளிகளாகிய பாலை நிலங்களிலேதாம் அருமையாய்க் காணப்படும்.
இனி, முதலிற் கூறிய பெருங்காடுகளெல்லாம், பெரும்பாலும் ஆங்காங்கு அரசு செலுத்தும் அரசர்களின் காவலில் வைக்கப்பட்டு, அவர்கட்குப் பல வகையில் ஏராளமான வருவாயைத் தந்து வருகின்றன. காடுகளில் மிகுதியாக வளரும் தேக்கு, பாலை, முதிரை, ஆச்சா முதலான மரங்கள் வீடுகள், தொழிற்சாலைகள், கப்பல்கள், படகுகள் முதலியன அமைப்ப தற்கேற்ற வலிவு வாய்ந்து நீண்டகாலம் கெடாதிருப்பன வாதலால், அவற்றால் அரசர்கட்கு வரும் வருவாய் மிக்க அளவினது. மேல்பால் உள்ள சாலடி நாட்டில் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய அரசர்கள் அமைத்த பெரிய கோயில்களும் அரண்மனைகளும், நமது தமிழ்நாட்டின் மேல்கரைமலைகளில் வளரா நின்ற தேக்கு மரங்களைக் கொண்டே கட்டப்பட்ட பான்மையினைப் பழைய வரலாற்று நூலாசிரியர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இம்மரங்களேயன்றி அகில் சந்தனம் முதலான மணம் கமழ் மரங்களும், விலையுயர்ந்த யானைகளும், யானைக் கொம்புகள் – எலும்புகளும், மான்தோல் – புலித்தோல்களும், மயில் தோகைகளும், தேன் கூடுகளும், அரக்கும், நாவியும், பலவகைக் காய்கனி கிழங்குகள் வித்துக்களும் காட்டின் கணிருந்து நிரம்பப் பெறுதலின், இவைகளாலும் அரசர்கள் மிகுந்த வருவாயை அடைகின்றனர் என்பது.
5. மருதம் – விளைநிலம்
நெற்பயிர் விளையாநின்ற வயல்நிலத்தையும் வயல்சூழ்ந்த இடத்தையும் மருதம் என்று தமிழ்நூலார் பண்டைக்காலந்தொட்டு வழங்கி வருகின்றனர். பழைய காலத்தில் நெற் பயிரிடுதற்கேற்றவைகளாகத் திருத்தப்பட்ட நிலங்கள், மருத மரங்களின் அருகேயிருந்தமையாற்போலும், அவற்றிற்கு மருத நிலம் என அவர் பெயர் அமைத்தனர். வயல்நிலத்தைப் பண்ணை, பணை, செய், செறு, கழனி, பழனம், விளையுள், புலம், வரப்புள் என்னும் பல சொற்களால் தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.
பழைய நாட்களில் மாந்தரின் தொகை பெருகப் பெருக, அவர்களுக்கு வேண்டிய அளவு உணவுப் பண்டங்கள் மலை களிலும், கடல்களிலும், காடுகளிலும் கிடைப்பது அரிதாயிற்று. மலைகளிலும், காடுகளிலும் உள்ள கனிகள், வித்துக்கள், கிழங்குகளையும் மான், மரை, கடம்பை, ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளையும் கடல்களிலுள்ள மீன்களையும் தின்று வந்த மிகப் பழைய முன்னோர்கள், தமது தொகை பெருகப் பெருக அவை போதாமை கண்டு, ஆடு மாடுகளை மிகுதியாக வளர்த்து அவற்றின் பயன்களான நெய், பால், தயிர் முதலியவை களையும் காடுகளில் ஆங்காங்கு இயற்கையாக வளர்ந்து கிடந்த அவரை, துவரை, மொச்சை, காராமணி, உழுந்து, பயறு, கடலை, எள்ளு முதலான பண்டங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள். காலஞ் செல்லச் செல்ல அவர்களின் தொகை பின்னும் பின்னும் பெருகலானமையின், இயற்கையில் கிடைத்த இத்தனை உணவுப் பண்டங்களும் அவர்கட்குப் போதா ஆயின. இதற்கென் செய்வது என்று, அவர்களுள் அறிவால் மிக்க சிலர் எண்ணிப் பார்க்கப் பார்க்க, இயற்கையாக வளரும் கூலங்களின் வித்துக்களை மட்டும் எடுத்து, வேறு மரஞ்செடிகொடிகள் இல்லாத வெளி நிலங்களைக் கீறி அவற்றுள் விதைத்தால், அவை மிகுதியான விளைச்சலைத் தருமெனக் கண்டறிந்தார்கள். அறிந்தபின் அறிஞர்களும் அவரது ஏவல்வழி நின்றவர்களும் வெட்ட வெளியாகக்கிடந்த நிலங்களைக் கோல்களாலும், குந்தாலிகளாலும் கிளறிக் கொத்தி அவற்றின்கண் அவ்விதைகளை இட, அவை வேண்டிய அளவு வெயிலும் மழையும் பெற்று, வேறு மரஞ்செடி கொடிகளின் இடைஞ்சல் இல்லாமையின், ஒன்று நூறாகப் பயன்தரலாயின.
இங்ஙனம் முதன்முதல் செயற்கைப் பயிர் செய்வதற்கு வெளி நிலங்களே பயன்பட்டமையின், அவை வயல், புலம் என்று பெயர் பெறலாயின. வயல் என்னும் சொல்லுக்கு முதற்பொருள் வெளியென்பது ஆகும். புலம் என்னும் சொல்லும் எவை தம்மாலும் மறைக்கப்படாமல் கண்ணுக்குப் புலப்பட்டுக் கிடக்கும் வெளியிடத்தையே உணர்த்தும். மேலும், இயற்கையில் வறிதாய்க் கிடந்த வெளிநிலம் அறிவர் சிலரால் முதன்முதல் கிண்டிக் கிளறிப் பயிர் செய்வதற்கு ஏற்றபடியாகச் செய்யப்பட்டமையின் பின்னர் அது செய் என்றும், பண்ணப்பட்டமையின் பண்ணை, பணை என்றும் செறப்பட்டமையின் அதாவது கீறப்பட்டமை யின் செறு என்றும் வழங்கப்படலாயிற்று.
இவ்வாறு முதலில் தொடங்கிய பயிர்த் தொழிலைச் செய்யச் செய்ய, மேலும்மேலும் அதனைத் திறமாகச் செய்யும் வழி வகைகளை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வல்லென்று கெட்டியாயிருக்கும் நிலத்தில் மென்பதத்தவான நெல்லும், ஏனை மணிகளும் வேர் ஊன்ற மாட்டாமல் பட்டுப் போதல் கண்டு வன்பாலான நிலத்தை மென்பாலாக்கும் முறை கண்டு கொண்டார்கள். நிலத்தைக் கிளறி அதற்குத் தண்ணீர் பாய்ச்சினால் மண்ணும் தண்ணீரும் கலந்து அது மென்பதப் படுதல் அறிந்தனர். இங்ஙனம் கிளறுதலாலும் தண்ணீர் பாய்ச்சுதலாலும் இறுகிய மண் கழன்று நிலம் மென் பதம் அடைதலின், அங்ஙனம் கழன்ற வயல்நிலம் கழனி எனப்பட்டது.
அதன்மேல், பயன்படுத்தப்பட்ட அக்கழனியில் வித்திய நெல் ஒன்று பல்லாயிரமாய் பயன் தந்ததாகலின் பின்னர் அது பழனம், விளையுள் எனப் பெயர் பெறலாயிற்று. பயன், பழம், பழன், விளைவு முதலியன எல்லாம் ஒரே பொருளைத் தரும் சொற்களாகும்.
அங்ஙனம் விளைந்த நிலம் முதலில் பலர்க்கும் பொதுவாயிருந்ததனால், அதன் விளைவை அவரெல்லாரும் தத்தமக்கு வேண்டிய அளவு பங்கிட்டுக் கொண்டு வைத்து வாழ்ந்தார்கள். பிறகு நாள் செல்லச் செல்ல, நன்றாக உழைத்துப் பாடுபடுபவர்களும், பாடுபடாமல் சோம்பலுற்று இருப்பவர்களும் விளைந்த பொருள்களைத் தாம்தாம் வேண்டும் மட்டும் எடுத்துக் கொள்ள விடுதல் முறையாகாதென்று உணர்ந்தனர். உணர்ந்து அவரவர் எவ்வளவு பாடுபடக் கூடுமோ அவ்வளவு பாட்டுக்குத்தக்க நிலத்தை அளந்து வரம்பு கட்டி அவரவர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். முதலில் பலர்க்குப் பொதுவாய்க் கிடந்த நிலப்பரப்பு பின்பு ஒவ்வொருவர்க்கோ அல்லது ஒவ்வொரு குடியினர்க்கோ உரியவாம் பல பகுதிகளாகப் பங்கிடப்பட்டு இடையிடையே வரம்பு உயர்த்தப்பட்டமையின், அவ்வாறு வரம்புக்கு உள்ளடங்கிய வயல்கள் வரப்புள் என்று வழங்கப்படுவ வாயின. வரம்பு என்பது வரப்பு என வலித்தது. இவ்வாறாகத் தமிழில் வயல் நிலத்திற்கு வழங்கும் பல சொற்களையும் ஆராயவே, பண்டைக் காலத்திருந்த தமிழ் முதுமக்கள் முதன்முதல் பயிர்த்தொழில் எவ்வாறு செய்ய அறிந்து, அதனை எவ்வாறு செய்து, எவ்வாறு பயன்படுத்தி இன்று காறும் வாழ்ந்து வருகின்றனர் என்னும் வரலாறு நன்கு விளங்குதல் கண்டுகொள்க.
இனித் தொன்றுதொட்டுப் பயிர்த்தொழிலைப் பெருக்கி வாழும் உழவு வாழ்க்கை, தமிழ் மக்களிடம் மிகுந்து காணப்படுதல் போல், உலகத்திலுள்ள வேறு எந்த மக்களிடத்தும் மிகுந்து காணப்படவில்லை. மற்றை மாந்தர்கள் தத்தம் நாடுகளில் சிற்சில பகுதிகளிலேதாம் உழவுத் தொழிலை நடத்தி வரக் காண்கின்றோம். மற்றும் தமிழ்மக்களோ தாம் உறையும் இத்தென்னாடு முழுதும் நெற்பயிரும், பிறபயிரும் விளைத்து இனிது வாழ்ந்து வருகின்றனர். இத்தமிழ்நாட்டின் வடஎல்லையாகிய திருவேங்கடமலையிலிருந்து, தென்கோடி யாகிய குமரிமுனை வரையிலும் கீழ்கரை, மேல்கரை வரையிலும் எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் நெல் வயல்களே நிறைந்து காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்னென்றால், தமிழ் நாட்டின்கண் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், கால்வாய்களும் மிகுந் திருத்தலே ஆகும்; வேறு நாடுகளிலோ அவை அங்ஙனம் மிகுந்திருக்கவில்லை. வடபெண்ணை, பாலாறு, தென் பெண்ணை, காவிரி, வைகை, பொருநை, நெய்யாறு முதலியன நீர்நிரம்பி ஓடுதலும், இவற்றால் நீர் ததும்பிப் பொலியுங் குளங்களும் தாமரைவாவிகளும் பெரிய பெரிய ஏரிகளும், அவற்றிலுள்ள நீரைக் கொண்டு சென்று கோடிக் கணக்கான வயல்களை ஊட்டும் கால்வாய்களும் இத்தென்னாட்டின்கண் அடுத்தடுத்துக் காணப்படுதல் போல வேறெங்கும் காணப் படுதல் இல்லை. சோழ நாட்டிற்கு ஓர் உயிராய் நின்று நிலவும் காவிரியாறு, நெடுந் தொலைவிலுள்ள மேற்கரை மலை களிலிருந்து திரட்டிக் கொணரும் வண்டல்கள் இந்நாட்டின் வயல்களிலும் படுகைகளிலும் படிந்து நிலத்தை மிகவும் செழுமையுறச் செய்கின்றன. பாண்டிநாட்டில் ஓடும் வைகை, பொருநை முதலான ஆறுகளும், காவிரியாற்றிற்கு அடுத்த படியாக அந்நாட்டின் மருதநிலங்களை வளப்படுத்தும் தன்மையனவாகவே இருக்கின்றன. இங்ஙனமாக இத் தென்னாட்டின் இயற்கை அமைப்புப் பயிர்த் தொழிலுக்குப் பெரிதும் ஏற்ற பல நலங்களும் பொருந்தி இருத்தலால், எத்தனையோ ஆயிர ஆண்டுகளாக இதன்கண் உயிர்வாழும் தமிழ்மக்கள் அத்தொழிலைச் செவ்வையாக நடத்திக்கொண்டு இனிது காலம் கழித்து வருகின்றனர்.
இன்னும், இத்தென்நாட்டின்கண் உள்ள மருத நிலங்களில் நெற்பயிர் மட்டுமே அன்றித் தென்னஞ் சோலைகளும், மாந்தோப்புகளும், கமுகந் தோட்டம் – வாழைத் தோட்டங்களும், எலுமிச்சை, நார்த்தை, பலா, கரும்பு முதலியன செழித்திருக்கும் தோட்டக் கால்களும், இஞ்சி, மஞ்சள், மிளகாய், சேம்பு, கருனை முதலியன வளர்ந்திருக்கும் கொல்லைகளும், கண்ணையும், கருத்தையும் கவரும் வனப்பும், பயனும் மிக்கனவாய் ஆங்காங்கு அடர்ந்து காணப்படுகின்றன. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இத்தனை உணவுப் பண்டங்களும் எளிதிலே விளைத்துக் கொள்ளுதற்கேற்ற வசதிகள் இயற்கையே அமையப்பெற்ற இத்தென்னாட்ட வர்கள், தமக்குச் சிறப்பாக உரிய உழவுத் தொழிலை மேன்மேற் செவ்வையாகச் செய்து வருவார்களானால், அவர்கள் ஏனைநாட்டு மக்களைச் சார்ந்து பிழைக்க வேண்டியதிராது. மற்றைத் தொழில்களைச் செய்யும் மற்றை நாட்டவர்களே இத்தென்னாட்டவர் உதவியை எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டியவராவர்.
சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (திருக்குறள் 1031)
6. நெய்தல்-கடல்
பழைய தமிழ் நூல்களில் கடலையும் கடல் சார்ந்த நிலத்தையும் நெய்தல் என்று அறிவுடையோர் வழங்கியிருக்கின்றனர். கடல் என்னும் சொல் கட்பார்வையினைக் கடந்து நிற்பது என்னும் பொருளைத் தரும். கடலினது எல்லை அதனை நோக்குவாரது கண்ணுக்குப் புலனாகாமையின், அஃது அங்ஙனம் பெயர் பெறலாயிற்று.
இனிக், கடலானது எந்நேரமும் பேர் இரைச்சல் இடுவது பற்றி ஆர்கலி, நரலை, குரலை, அழுவம் என்றும், பரந்திருப்பது பற்றிப் பரவை என்றும், ஆழ்ந்திருப்பது பற்றி ஆழி என்றும், உப்புநீர் உடைமை பற்றி அளக்கர் பௌவம் உவரி என்றும், மழை முகிலை உண்டாக்குதல் பற்றிக் கார்கோள் என்றும், மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மூன்றுக்கும் காரணமாதல் பற்றி முந்நீர் என்றும் பல சொற்களால் வழங்கப்படுகின்றது.
கடற்காட்சியினைக் காணல்வேண்டினால் சென்னை, நாகை, திருச்செந்தூர், தென்குமரி முதலான பட்டினங்களில் கடற்கரையோரங்களில் சென்றிருந்து காணல் வேண்டும். விடியற்காலையில் ஞாயிறு கிழக்கே தளதளவென்று எழும்போது உண்டாகும் கடலின் தோற்றம் பெரிதும் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய்ப் பொலிகின்றது. பகலவன் எழுவதற்கு முன் நீலநிறமாயிருந்த ஆர்கலியின் நீர்ப்பரப்பு அவனது ஒளிபாய்ந்த அளவில் பச்சென்ற நிறமுடையதாக மாறி மிளிர்கின்றது; ஞாயிற்றின் கதிர்கள் அதன்மேல் துள்ளுவது போல் காணப்படுகின்றன. கடலின் பரப்பும் கீழ்பால் வானும் ஒரு பெருவிளக்கமுடையதாய்த் திகழ, அவை இரண்டன் ஓரங்களும் பொருந்தும் இடத்தே கதிரவன் நெருப்புத் திரளைப் போல் தோன்றும் காட்சி இவ்வுலகமே தன்வாயைத் திறந்து தன் அகத்திருந்த ஒரு பெருந் தீக்கட்டி யினைக் கக்குதல்போல் இருக்கின்றது.
அப்போது கடல்நீர் குன்றின் குவடென உயர்ந்து, பிறகு சுருண்டு கீழ்விழுங்கால் வெள்ளை வெளேல் என்ற அலைகளை உண்டாக்க, அவ்வலைகள் ஓவென இரைந்து வருதலைப் பார்க்கும்போது, அவை, போர்முனையில் வரிசை வரிசையாக நிறுத்தப்பட்ட வெள்ளைக் குதிரைகள் தம்முடைய கழுத்தி லிருந்து தொங்கும் வெள்ளிய கூந்தல் அலைய அலையக் கனைப்பொலியுடன் பாய்ந்து வருவது போல் தோன்றுகின்றன.
அந்நேரத்தே பாய்கட்டிக் கப்பல்களும் நீராவிக் கப்பல்களும் கரைகாணப்படாத அப்பரவையினூடு தன்னந்தனியே செல்லுதலைக் காண்கையில், நமதுள்ளத்தே ஒரு வியப்பும் அச்சமும் உண்டாகின்றன. எல்லையும் ஆழமும் தெரியாத இப்பெருநீரிலே இம் மரக்கலங்கள் எங்ஙனம் எல்லைகண்டு செல்கின்றன! இவைதம்மை எல்லைகண்டு செலுத்தி அப்பா
லுள்ள நாடு நகரங்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் மீகாமனுடைய கருத்தும் கூர்ந்த அறிவும் உணர்ந்து பார்க்கும் கால் பெரு வியப்பினை விளைவிக்கின்றன அல்லவோ! ஆழமும் அறியாமல், காற்றுக்கும், மழைக்கும் உள்ளாகிக், கடவுளை யன்றி வேறேதொரு துணையும் இல்லாமல் செல்லும் அக்கப்பல்களைக் காணும்போது அச்சமும் உண்டாகின்றது. கரையிலிருந்து நோக்குவார்க்கே இத்தகைய வியப்பும் அச்சமும் தோன்றுமானால், நடுக்கடலிலே கப்பலிலிருந்து சுற்றி ஒரே வெள்ளக் காடாயிருத்தலை நோக்குவார்க்கு இன்னும் எத்தனை வியப்பும், திகிலும் உண்டாகா நிற்கும்.
ஒருகால் யாம் தூத்துக்குடியிலிருந்து கப்பலேறிக் கொழும்பு மாநகர்க்குச் செல்லா நிற்கையில் இத்தகைய நிகழ்ச்சியால் எமது நெஞ்சம் அசைவுண்டது. யாம் கப்பலேறிய மாலை கப்பல் துறைமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கையில் நள்ளிரவில் எழுந்து கடலையும், வானத்தையும் நோக்கினோம். வானில் வெண்திங்கள் நிலவொளி விரித்து வழங்கியது. அவ்வொளி பட்டுக் கட்புலனுக்கு விளங்கா நின்ற கடலிடமெல்லாம் தூய வெண்பட்டாடை விரிக்கப்பட்டாற் போல் வெளேலென ஒளிர்ந்தது. ஆ! அக்காட்சியின் வனப்பை என்னென்போம்! அதனைக் கண்டு வியந்த வண்ணமாய்ச் சுற்றிலும் பார்வையைச் செலுத்தி எட்டி நோக்கத் தொலைவிலுள்ள பௌவத்தின் பரப்பு வரவர மங்கலாய் இருளோ எனத் தோன்றியது! அருகில் காணப்படும் நிலவொளிப் பரப்பிலிருந்து, தொலைவில் தோன்றும் இருள்மிகு பரப்பினுட் கப்பல் தனியே விரைந்து செல்லும் செலவினைக் கண்டு எமதுள்ளத்தே முன்னறியாத ஒரு நடுக்கம் தோன்றியது!
யாம் ஏறியிருந்த அக்கப்பலின் தனிமையையும், அதனுள்ளிருக்கும் எமது தனிமையையும் நினைத்து, அந்நேரத்தில் எல்லாம் வல்ல ஆண்டவன் துணையை அன்றி வேறேதும் இல்லாமை கண்டு எமது நெஞ்சம் நெக்குருகியது! கடவுள் நம்பிக்கை இல்லாத அறிஞர் எவரேனும் கப்பலேறிச் செல்வராயின், அவர்க்குக் கடவுள் நம்பிக்கை தானே உண்டாகுமென அப்போது நன்கு உணர்ந்தோம். ஆராய்ச்சியும் அறிவும் இல்லாமல் விலங்கினங்களைப் போல் கப்பலேறிக் கடல் கடப்பாரைப் பற்றி இங்கே நினைக்க வேண்டுவதில்லை. ஆராய்ச்சியும் அறிவும் உணர்வெழுச்சியும் உடையாரே மரக்கலச் செலவால் அறிவும் இன்பமும் கடவுள் நம்பிக்கையும் எய்துவர் என்றுணர்தல் வேண்டும்.
இன்னும், கடலுக்கு அருகிலுள்ள ஓர் உயர்ந்த மலை மேலேறிக் கடற்பரப்பினையும், அதனையடுத்த துறைமுகப்பட்டினத்தையும் நோக்குவார்க்கு, இறைவன் வகுத்த இயற்கைக் கடலமைப்பும், மக்கள் வகுத்த ஒரு பட்டினத் துறை முகச் செயற்கை அமைப்பும் ஒருங்கு இணைந்து, ஒருபெரும் புதிய காட்சியினைப் பயந்து, அவரது உள்ளத்தினை இன்னும் ஆழ்ந்த நினைவிலே புகுத்தா நிற்கும். இறைவன் வகுத்த இயற்கையமைப்புகள் எங்ஙனம் அழகும் பயனும் வாய்ந்து திகழ்கின்றனவோ, அங்ஙனமே மக்கள் எழுப்பிய உயர்ந்த மாட மாளிகைகளும் தொழில் நிலையங்களும் அவை தம்முள் பலவற்றின் கொடுமுடிகளும் காட்சிக்கினியவாய்ப் பயன்சிறந்து திகழா நிற்கின்றன. இதனை எண்ணிப் பார்க்கையில் மக்களின் அறிவும், முயற்சியும் கடவுளின் அறிவு முயற்சிக்கு ஒரு புடை ஒத்த தெய்வத்தன்மை வாய்ந்தனவாகவே தோன்றுகின்றன. இயற்கைப் பொருளியக்கங்கள் ஒரோவொருகால் மக்களின் அறிவு முயற்சியைச் சீர்குலைத்துச் சிதைப்பனவாய் இருப்பினும், அவற்றிற்கு அஞ்சித் தமது முயற்சியைக் கை சோரவிட்டு அறிவு குன்றிப் போகாமல், அவர்கள் மேன்மேல் அறிவு மிகப் பெற்று அதனால் அரியபெரிய முயற்சிகள் செய்து அவற்றொடு போராடி வெற்றி கொண்டு நிற்கும் பேராண்மை, மலைமேலிருந்து இவ்விரு வேறு அமைப்புகளையும் நோக்கு தலால் நம் கட்புலனெதிரே நன்கு விளங்கா நிற்கின்றது. அங்கும் இங்குமாய் அலையும் கடலின் எதிரே உயர்நிலை மாடங்களும் தொழில் நிலையங்களும் அலைவின்றி வீறி நிற்கும் காட்சி அறிவுடை மக்களின் அசையா உள்ளப் பான்மையினை அறிவிக்கின்றதன்றோ?
இனிக், கடலின் பரப்பு, இந்நிலத்தின் பரப்பைவிட மும்மடங்கு பெரியதாயிருக்கின்றது. ஆனதனால்தான் தமிழ் மக்கள் அதனைப் பரவை என்று வழங்கி வருகின்றனர். நிலத்தைவிட நீரின் அளவு இத்துணை மிகுதியாய் இருக்க வேண்டுவது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், நிலம் வன் பொருளாயும், நீர் மென் பொருளாயும் இருத்தலினாலும், நிலத்தின்கண் பயிராகும் பயிர் பச்சைகள் முதல் சிற்றுயிர்கள் பறவைகள் விலங்குகள் மக்கள் ஈறான எண்ணிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் கடலின்கண் உயிர் வாழும் அளவிறந்த கோடி உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கு மெல்லாம் நீரின் உதவியே இன்றியமையாததாய் இருத்த லினாலும், நிலமானது தன்னளவில் மாறாமல் நிற்க நீரானது நிலத்தினுள் சுவறுவதோடு மீண்டும் மழையாய் இறங்குவதற்கு ஆவியாக மாறி வானின்கண் முகிலாய் உலவவேண்டி யிருத்தலினாலும், நிலத்தை வளமுடையதாக்கி உயிர்களைப் பல்கச் செய்யும் நீர், நிலத்தினும் மிகுந்த அளவினதாக இறைவனால் அமைத்து வைக்கப்பட்டதென்றும் உணர்தல் வேண்டும்.
இனிக், கடலைவிட ஆழத்தின் மிக்கதொரு நீர்நிலை எங்கும் இல்லாமையால், ஆழி என்னும் பெயர் கடலுக்குரிய தொன்றாகப் பண்டுதொட்டுத் தமிழில் வழங்கி வருகின்றது. நமது இவ்விந்திய நாட்டை அடுத்திருக்கும் இந்தியமாக்கடல் பெரும்பான்மையான இடங்களில் பன்னீராயிர அடி – சிறிதேறக்குறைய இரண்டேகால் மைல் ஆழமுடையதாக இருக்கின்றது; மற்றும் சிற்சில இடங்களில் அஃது இரண்டே கால் மைலுக்கு மேல் நாலே கால் மைல் வரையில் ஆழமுடையதாக ஆராய்ந்தறியப்பட்டிருக்கின்றது.
சாவகத் தீவுக்குச் (Java) தென்னண்டையிலுள்ள கடற் பகுதியோ நாலேகால் மைல் ஆழமுடைய தொன்றாக ஆராய்ச்சி வல்ல ஆசிரியரால் அளந்து காணப்பட்டிருக்
கின்றது. இனி, இவ்விந்திய மாக்கடலினும் ஆழமுடையது ஆட்டுலாந்திகு மாக்கடலேயாம்; தென் அமெரிக்காவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையிலேயுள்ள மேல் இந்தியத் தீவுகளின் வடக்கே நிற்கும் இம்மாக்கடற் பகுதியின் ஆழம் சிறிதேறக்குறைய நாலேகால் மைல் ஆகும். இனி, இப்பெருங் கடலினும் ஆழம் வாய்ந்தது அமைவுப் பெருங்கடலே ஆகும். இஃது அமெரிக்கப் பெருந்தேயத்திற்கும், ஆசியா ஆதிரேலியப் பெருந் தேயங்கட்கும் இடையிலே நிற்கின்றது. இது சிற்சில இடங்களில் ஐந்து மைல் ஆறு மைல் ஆழமும் வாய்ந்த தொன்றாக அளந்தறியப்பட்டுள்ளது. இன்னும் இஃது எவ்வளவு மிகுதியான ஆழமுடையது என்பதனை முற்றும் அளந்து காண்டல் இயலாததாய் இருக்கின்றதென ஆராய்ச்சி வல்ல ஆசிரியர் நுவல்கின்றனர். எனவே, இந்நிலவுலகத்தைச் சூழ்ந்த பேராழியின் ஆழம் ஆறுமைல் வரையில் செல்வ தென்பது நன்கறியப்பட்டிருத்தலால், அக்காரணம் பற்றி அதனை ஆழியென வழங்குவது பெரிதும் பொருத்த முடையதாதல் காண்க.
இனிக், கடலின்கண் உள்ள நீர் உப்பாயிருத்தல் ஏன் என்றறிய அறிஞர் சிலர்க்கு அவா எழும். கடலுக்கு மிக அருகில் உள்ள சில கிணறுகளில் தீஞ்சுவைத் தண்ணீர் கிடைப்ப தாயிருக்க, அவற்றையடுத்திருக்கும் கடலில் மட்டும் உப்பு மிகுந் திருத்தல் வியக்கத் தக்கதன்றோ? இவ்வேறுபாட்டிற்குக் காரணம் என்னையென்று ஆராய்ந்து பார்த்தால், கடலின் நீர் மேல்நீராயிருப்பதும், அதனையடுத்துள்ள நல்ல கிணற்றுநீர் கீழ்நீராயி ருப்பதுமேயாம் என்பது புலனாகும். நிலத்தின் பல பகுதிகளிலும் மலைகள் மேலும் பெய்த மழை நீர் ஆங்காங்கு பலவகை உப்புகளையும் கரைத்தெடுத்து ஆறுகளின் வழியே கொணர்ந்து கடலின்கட் சேர்த்துவிடுகின்றது; விடவே கடல் மேல் நிற்கும் நீர் உப்புடையதாகின்றது. மற்றுக் கடலடுத்த கிணற்று நீரோ கிணற்றின் அடிப்படையிலிருந்து மேலே சுரப்பது; அவ்வடிப்படையிலுள்ள நிலம் உப்பில்லாததாயின் அதன்கட் சுவறிய மழைநீரும் தூயதாய் இன்சுவை மிகுந்து பருகுவதற்குப் பயன்படுவதாய் நிற்கும். அவ்விருவகை நீரும் வேறுபடுவதற்குக் காரணம் இவையேயாதல் கண்டு கொள்க. கடல் நீரில் எழுவகையுப்புகள் கரைந்து கலந்திருக்கின்றன என்று அறிஞர்கள் பகுத்துணர்ந் திருக்கின்றார்கள். இங்ஙனமாகக் கடல் உப்பு நீர் உடையதாதல் பற்றி அஃது உவரி என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறெல்லாம் தமிழ் மக்கள் பண்டுதொட்டுக் கடலுக்கு வழங்கிவரும் பல பெயர் களைக் கொண்டு, அவர்கள் இவ்வையம் சூழ்ந்த கடலின் இயற்கைத் தன்மைகள் பலவும் நன்கு ஆராய்ந்துணர்ந் தவர்களாதல் தெளிந்து கொள்ளப்படுமென்க.
7. பாலை வெளி
பாலைவெளி என்பது புல் பூண்டுகள் மரஞ்செடி கொடிகள் வளராத மணல் நிலமும், பாறை நிலமும் ஆகும். நிலம் நன்றாய் நனைந்து வளம்பெறாததாய் வேண்டும் அளவு மழை பெய்யாமலும் கீழே நீரூற்றுகள் இல்லாமையாலும் பச்சைப் பயிர்கள் சிறிதும் வளராத பெருநிலப் பரப்புகளே பாலை நிலங்கள் என்று சொல்லப்படுகின்றன. உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் எந்தப் பயிரும் இவற்றின்கண் நிலை பெறாமையால், வேறு சிற்றுயிர்களும், விலங்குகளும், மக்களும் இப்பாலைவெளிகளில் காணப்படுவ தில்லை. நிலத்தின் கீழ் ஆழமாக வேர் ஊன்ற வல்லனவும் மழையினுதவியை எதிர்பாராமலே வளரத் தக்கனவுமான சப்பாத்திக் கள்ளி அல்லது நாகதாளி என்னும் முட் செடிகளும் இவற்றை ஒத்த வேறு சில செடிகளுமே சில பாலை வெளிகளில் செழிப்பாகக் காணப்படுகின்றன. எட்டி பழுத் தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன என்னும் பழமொழிப்படி இந் நாகதாளிச் செடிகள் மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் பெரும்பாலும் பயன்படுதல் இல்லாமையால், வறண்டு வற்றிய பாலை நிலங்களுக்கு ஏற்ற செடிகள் இவையே ஆகும்.
மழையும் ஆறும் ஏரியும் குளமும் நீரூற்றும் மலிந்த இத்தென்னாட்டின்கண் வறண்ட பெரிய பாலைவெளிகள் எங்குமேயில்லை. திருச்செந்தூர் இராமநாதபுரப் பக்கங்களில் காணப்படும் நெய்தல் நில மணற் பரப்புகளைப் பாலைவெளி என்று கூறுதல் ஆகாது. ஏனென்றால், அம்மணற்பாங்குகளில் பனை தென்னை உடை கருவேல் முதலான மரங்களும், எல்லா உயிர்களுக்கும் பயன்படத்தக்க ஏனை பயிர்ப் பச்சைகளும் செழுமையாய் வளர்ந்து பயன்தரக் காண்கின்றோம். இத்தென்னாட்டிற்கும், இதனை அகத்தடக்கிய இவ்விந்திய நாட்டிற்கும் புறம்பே உள்ள நிலப்பகுதிகளிலேதாம் எட்டுணையும் பயன்படாப் பெரிய பெரிய பாலை வெளிகள் அமைந்திருக்கின்றன. இப்பாழ் நிலங்கள் பெரும்பாலும் இந்நிலவுலகத்தின் மேல்பால் எல்லையிலேயே காணப்படுதலை நினைவில் வைத்தல் வேண்டும். இந்நிலவுலகத்தில் காணப்படும் பெரும் பாலைவெளிகளாவன; சகாரா, கலகாரி, கொலொராடோ, ஆதகாமா, மேல் ஆத்திரேலியா, கோபி முதலானவைகளே ஆகும்.
இவை தம்முள் சகாரா என்னும் பாலைவெளியே உலகத்தில் மிகப் பெரியது. இஃது ஆப்பிரிக்கா தேயத்தின் வடபகுதியில் உள்ளது. இதன் நீளம் மூவாயிரம் மைல், அகலம் ஆயிரம் மைல் என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் மஞ்சள் நிறமான புதைமணல் வாய்ந்தது. இதன்கண் வீசுங் கடும் சுழற்காற்று இதன் மணலை மலை போல் மேலெழுப்பிச் சுழற்றிக் கொண்டு செல்லும் தோற்றமானது. மஞ்சள் மலையொன்று மேலெழுந்து விரைந்து சுழல்வதையே ஒத்திருக்கும். இங்ஙனம் எழுந்து சுழலும் மணற் குன்றானது ஒரோவொருகால் அப்பாலை வெளியில் வழிச் செல்லும் வணிகர் குழுவை அப்படியே தன்னுட் புதைத்து விடுதலும் உண்டு. அதனால் அவ்வெளியினூடு செல்லும் வணிகர் கூட்டங்கள் அக்காற்று வீசாத காலம் பார்த்தே அதன்கட் செல்வர். மேற்குறித்த சுழற் காற்றினால் ஆங்காங்குத் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கும் மணற் குன்றுகள் இப்பாலை நிலமெங்கும் காணப்படுகின்றன. இவைகளுட் சில கடல் மட்டத்திற்கு மேல் ஆயிர அடி உயரமுள்ளனவாகவும் இருக்கின்றன. இம்மணற் குன்றுகளே அன்றிச் சிவந்த மலைப் பாறைகளும் இவ்வெளியின் இடையிடையே சிதறித் தோன்றுகின்றன. இம்மலைப் பாறைகளுக்கும் மணற் குன்றுகளுக்கும் நடுவே பள்ளத் தாக்குகளும் உள்ளன. நீர்ப்பசை அற்று வறண்டு எந்தப் பக்கத்தில் பார்த்தாலும் மணலும் மணற்குன்றுகளும் மலைப்பாறைகளும் உடையதாய் கதிரவன் வெப்பத்தால் அழன்று கனலாயிருக்கும். இப்பெருமணற் பரப்பானது நோக்குவார்க்கும் தன்னூடு வழிச் செல்வார்க்கும் பெருநடுக்கத்தை விளைவிப்பது எனினும், இஃது இடை யிடையே ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் கொழுமையான பேரீச்ச மரத் தோப்புகளும் இளமரக் காக்களும் வாய்ந்துள்ளன என்றால் எவர்க்குதாம் வியப்புண் டாகாது? இது கொண்டு எத்தனைக் கொடிய இயற்கை யமைப்பிலும் உயிர்களுக்கு இனியவான மென்தன்மைகள் உள்ளடங்கி இருக்குமென்பது இனிது புலனாகின்றதன்றோ? உயிரைக் கொள்ளை கொள்ளும் கொடிய நெருப்புக் காற்றுக்கும் கதிரவன் வெப்பத்திற்கும் அஞ்சாமல் அவற்றையும் ஊடுருவி வரும் அரும் பெருமுயற்சியுடையார்க்கு, ஆண்டவன் தன் தண்ணருளை வழங்கும் அடையாளமாகவே, வளப்பம் மிகுந்த இத்தோட்டங்களைத் தருதல் வேண்டும். இவற்றின்
கண் ஓவாது சுரந்து ஒழுகும் நீர் ஊற்றுகளும் அவற்றால் நீர் நிறைந்து நிற்கும் வாவிகளும் பால்போலுந் தீஞ்சுவை அமிழ்தை, நாவறண்டு உடல் கரிந்து வரும் வழிப்போக்கர்க்கு ஊட்டு கின்றன; இவற்றில் செழுமையாய் வளர்ந்து பச்சைப் பசேலென நிற்கும் பேரீச்ச மரங்கள் அத்தி மரங்கள் நாரத்தை மரங்கள் கொடி முந்திரிக் கொடிகள் முதலியன, தம்மகத்துக் குலை குலையாய் தாமாகவே பழுத்துத் தொங்கும் கற்கண்டு அனைய கனிகளை ஏராளமாய்த் தந்து அவர்தம் கடும் பசியை ஆற்றுகின்றன. இவைகளே அன்றி, நெல்லும் வேறு சில பயறுகளும் கூட அவ்இளமரக்காக்களின் ஊடே ஊடே தாமாகவே செழிப்பாய் வளர்ந்து வழிச் செல்வார்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை உதவுகின்றன.
இப்பெரும் பாலைவெளியினூடு அஞ்சா நெஞ்சினராய் வழிச் செல்லும் வணிகர் யாவர்? அவர் எவ்வாறு அப்புதை மணற்பரப்பைக் கடந்து செல்கின்றனர்? என்னும் வினா இயல்பாக எழுமாதலால், அவற்றிற்கு விடையும் சிறிது இங்கு இயம்புவாம். இப்பாலை நிலத்திற்குக் கிழக்கெல்லை யிலுள்ள அரேபியா தேயத்து அராபிக்கார வணிகர்களே தம் பெண்டு பிள்ளைகளுடன் அம்மணல்வெளியைக் கடந்து செல்கின்றார்கள்.
இவர்கள் அதன் ஊடு செல்வதற்குப் பயன்படுத்துவன ஒட்டகங்களே ஆகும். ஒட்டகத்தைத் தவிர வேறு எந்த விலங்கும் புதைமணலிற் பெருஞ் சுமைகளைச் சுமந்து கொண்டு கடவாது. ஏனென்றால் ஒட்டகத்தின் காலடிகள் அகலமாய் பிளவின்றி உரலடி போல் சப்பையாய் தசை மிகுந்து இருத்தலால் அவை மணலுள் அழுந்தா; மற்றும், குதிரைக் குளம்படிகள் குறுகலாய் கெட்டியாய் இருத்தலாலும், மாட்டின் குளம்புகள் பிளப்புள்ளனவாய் அங்ஙனமே சிறியவாய் கெட்டியாய் இருத்தலாலும் அவ் இருவகை விலங்குகளின் கால்களும் புதைமணலிற் புதைந்துவிடும்; ஆகையால், இவை மணல் வெளிகளில் நடவா. ஆனது பற்றியே அராபி வணிகர்கள் இம்மணல் வெளியினூடு செல்வதற்கு ஒட்டகங்களையே பழக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஒட்டகங்கள் பசுந்தழைகளையும், தண்ணீரையும் தவிர வேறு எதனையும் உட்கொள்வதில்லை; அதனால் அவற்றை வளர்ப்பவர்க்குச் செலவு சிறிதுமே இல்லை. அது அல்லாமலும், ஒட்டகமானது ஓரிடத்தில் தண்ணீர் பருகினால், திரும்பப் பல நாட்கள் வரையில் தண்ணீர் வேண்டாது; ஏனென்றால், அதன் வயிற்றகத்தேயுள்ள தண்ணீர்ப்பை ஒரு பெரிய குடத்தின் அளவுள்ளது; ஓரிடத்திற் பருகிய நீரினால் அஃது அதனை நிரப்பிக் கொள்ளுமாயின், அது நீர்விடாயின்றிப் பல நாட்கள் உயிர்வாழ வல்லது. ஆகவே, நூற்றுக்கணக்கான மைல் வரையில் தண்ணீர் சிறிதும் கிடைக்கப் பெறாத சகாராப் பாலை வெளியில் எத்தனையோ திங்கள் வழிச் செல்ல வேண்டியவர் களான அராபி வணிகர்க்கு ஒட்டகத்தினும் பயன்படும் வேறொரு விலங்குண்டோ! ஆகவே, அராபி வணிகர்கள் தம்முடைய ஒட்டகங்களின் மேல் அம்பாரி கட்டி, அதில் தம் பெண் பிள்ளைகளையும், உணவுப் பண்டங்களையும், வணிகச் சரக்கு களையும் ஏற்றிக் கொண்டு, இப்பாலை நிலத்தினூடு நெடுவழி செல்வார்கள். இவ்வணிகர்கள் இதன்கண் ஒருவர் இருவராய் செல்லார்கள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வணிகர்கள் ஒருங்கு சேர்ந்துகொண்டுதான், அஞ்சத்தக்க இந்நெடுவழியில் செல்வார்கள். ஒட்டகங்களின் மேல் ஒருவர் பின் ஒருவராய் தேர்வடம் பிடித்தாற்போல் இவ்வணிகர் குழாஞ் செல்வதைக் காணுங்காட்சி பெரியதொரு புதுமையாய் வேடிக்கையாய் இருக்கும்.
இவ்வாறு செல்லும் அராபி வணிகர்கள் நூற்றுக்கணக்கான மைல் கடந்து சென்று, இப்பாலைவெளியின் இடையிடையே உள்ள வளவிய பசுமரத் தோட்டங்களில் சில நாட்கள் தங்கித் தங்கி இளைப்பாறிக், கடைசியாகப் பல முகமாய்ப் பிரிந்து, இப்பாலை நிலத்தின் மேல் விளிம்பைச் சூழ விளங்கா நிற்கும் நகரங்களுள் சென்று தாம் கொண்டு சென்ற சரக்கு களை விலைசெய்து விட்டு, அவ்வந்நகர்களில் கிடைக்கும் வேறு பண்டங்களை ஏற்றிக் கொண்டு, சென்ற வழியே திரும்பித் தம் ஊர்க்கு மீள்வர். இங்ஙனமாக இச்சகாராப் பெரும் பாலை நிலமும் அராபி வணிகரின் வாணிகச் செலவுக்குப் பயன்படுதல் கண்டு கொள்க.
இப்பாலைவெளியின் இடையிடையே அமைந்துள்ள கொழுவிய பசுமரத் தோட்டங்களில் கொடிய கொள்ளைக்காரர்கள் குடியிருந்து கொண்டு வழிப்பறி செய்வது வழக்கம். ஆயினும், அராபி வணிகர்கள் படைக்கலன்கள் பூண்டு பெருங் கூட்டமாய்ச் செல்லத் துவங்கிய பின், அக்கொள்ளைக்காரரின் கொட்டம் அடங்கியது. சகாரா நிலத்திற்கும் அதனைச் சூழ்ந்த நகர்கள் பலவற்றிற்கும் உரியவரான பிரஞ்சு அரசியலாரும், அக்கொள்ளைக் கூட்டங்களின் குறும்பை அடக்கி, அப்பாலைவெளி நெடுகப் புகைவண்டி விடுதற்கும், பாட்டை அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இனிச், சகாராவுக்குப் பிற்சொல்லப்பட்டதாகிய கலகாரி என்னும் பாலைவெளி, தென்னாப்பிரிக்காவில் நாரத்தையாற்றிலிருந்து (Orange) அறுநூறு மைல் நீளமுடைய தாகக் கிடக்கின்றது. இதில் உப்பளங்கள் மிகுதியாய் இருக்கின்றன.
இனிக், கொலொராடோ என்னும் பாலை நிலம், வட அமெரிக்காவின் இணையரசு நாடுகளின் மேற் பகுதியில் தொகுதி தொகுதியான மலைத் தொடர்கள் வாய்ந்ததாய்ப் பசுமரம் ஏதுமின்றிப் பாழாய்க் கிடக்கின்றது. ஆனாலும், இதன் மையத்தில் உள்ள மலைகள் மட்டும் அருவி நீரும், அதனாற் செழுமையான காடுகளும் உடையதாய்த் திகழ்கின்றன.
இனி, ஆதகாமா என்னும் பாலைவெளி தென்னமெரிக் காவில் வடசில்லி நாட்டை அடுத்துள்ளது. இதுவும் மலைப் பாறைகளாலும், அவை தம்மிலிருந்து சிதர்ந்த குண்டுக் கற்களாலும் நிறைந்திருக்கின்றது. இதன்கண் அடர்ந்து முளைத்திருக்கும் ஒரு வகை நாகதாளிகள், குதிரைகளையும் குதிரைமேற் செல்லும் ஆடவரையும் தமக்குள் மறைத்து விடத்தக்க அத்துணை உயரமுள்ளன.
இனி, மேல் ஆத்திரேலியாவிலுள்ள பாலைவெளியின் இயல்பை இன்னும் எவரும் சென்று காணவில்லை. மற்றும் நமது இந்திய நாட்டுக்கு வடக்கே நெடுந்தொலைவில் உள்ள மங்கோலியா தேயத்தில் கோபி என்னும் பாலைவெளி இருக்கின்றது. இது, சகாரா வெளியைப் போல் புதை மணல் நிறைந்ததாயும் கொடிய சூறை அனற்காற்றால் திரட்டிக் குவிக்கப்பட்ட மணற் குன்றுகளும், அவற்றினிடையே பல பள்ளத்தாக்குகளும் உடையதாயும் இருக்கின்றது. இது வெயிற் காலத்தில் வெப்பம் மிகுந்தும் குளிர்காலத்தில் குளிர்மிகுந்தும் கிடக்கின்றது.
இனி, நமது தமிழ்நாட்டின் தெற்கே இருந்து கடலுள் அமிழ்ந்து போன பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டின் நடுவே ஒரு பெரும் பாலைவெளி மணல் நிறைந்ததாய் இருந்தமையும், அதனூடு சென்று வணிகம் புரிந்த வணிகர் குழாங்கள் ஒட்டகங்கள் மேல் இவர்ந்தே அதனைக் கடந்தைமையும், அப்பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட அரும் பெருந் தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் குறிப்புகள் கொண்டு நன்குணரப் பெறுகின்றோம்.
8. சிறுவர்க்குரிய நாட்கடன்கள்
சிறுவர்கள் எல்லாரும் காலையில் கிழக்கே வெயில் வெளிச்சம் தோன்றும்போது உறக்கம் நீங்கி எழுதல் வேண்டும். தூக்கம் என்னும் இருளில் அறிவு இழந்து புதைந்து கிடந்த உயிர்களெல்லாம் அவ்விருளினின்றும் மீண்டெழுந்து அறிவு வெளிச்சம் பெறுதற்கு, அப்போது வெளியே தோன்றும் வெயில் வெளிச்சமே உதவியும் அடையாளமுமாய் இருக்கின்றது. ஆதலால், காலைப் பொழுதில் ஒரு நொடியும் வீண்போகாமல் அந்நேரத்தில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும் பழக்கத்தைச் சிறுபருவத்திலேயே பழகிக் கொள்ளுதல் முதன்மையானது.
பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவர் சிலர் இரவின் பிற்பகுதியில் நான்கு மணிக்கெல்லாம் துயில் நீங்கி எழுந்து தம்முடைய பாடங்களை விடியும் மட்டும் ஓதி, அதன்பின் கதிரவன் தோன்றும் விடியற்காலையில் மறுபடியும் உறங்குகின்றனர். மற்றும் சிலர் அங்ஙனம் உறங்காமல் தமக்குரிய முயற்சிகளைச் செய்யப் புகுகின்றனர். இவ்வாறு செய்வது பிசகு. கதிரவன் மேல்பால் மறைந்து மாலைக் காலத்தில் மட்டும் ஒன்பது மணி வரையில் இளஞ்சிறார்கள் தம்முடைய பாடங்களை விளக்கு வெளிச்சத்தில் ஓதலாமேயன்றி, இராக்காலத்தின் பிற்பகுதியில் உறக்கம் நீங்கி அங்ஙனம் ஓதுவது ஆகாது. ஏனென்றால் நூல் ஓதும் மாணாக்கர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் இரவின் பிற்பகுதியிலேதான் அயர்ந்த தூக்கம் நிகழ்கின்றது; அப்போதுதான் அவர்களுடைய மூளையானது இனிதாக ஆறுதலுற்றிருக்கின்றது. மக்கள் மட்டுமேயன்றி எல்லாச் சிற்றுயிர்களும் அந்நேரத்தில் இனிய துயிலில் அமர்ந்திருக்கின்றன. கதிரவன் எழுவதற்கு முற்பட்டதாகிய அவ்வைகறைப் பொழுதில் வீசுங் குளிர்ந்த மெல்லிய காற்றானது, அத்துயிலுக்கு இனியதாய், எல்லா உயிர்கட்கும் பெரியதோர் ஆறுதலைத் தருகின்றது. அவ்வளவு அமைதிக்கு ஏற்ற அந்நேரத்தில் கண் விழித்திருந்து நூல் ஓதிய மாணாக்கர்க்குத் தலைவலியும் மயக்கமும் காய்ச்சலும் வயிற்றுளைச்சலும், அடுத்தடுத்து வருதலை யாம் பலகாற் கண்டிருக்கின்றோம். அதுவேயுமன்றிப், பாரி மாநகரத்தி லுள்ள ஆசிரியர்கள், தம் மாணாக்கர்களை விடிய இரண்டொரு மணிநேரத்திற்கு முன்னமே படுக்கையினின்றும் எழச் செய்து நூல் ஓதப் புரிந்து வந்த காலங்களிலெல்லாம், அவர்கள் பகற்பொழுது முழுவதும் தூக்கமயக்கம் உடைய ராயும் சுறுசுறுப்பு இல்லாதவராயும் இருந்தன ரென்றும், அங்ஙனம் செய்யாது விடியும் வரையில் அவர்கள் அயர்ந்து தூங்குமாறு விடுத்து, விடிந்தபின் அவர்கள் தாமாகவே எழுந்து தத்தம் கடமைகளைச் செய்யுமாறு ஒழுங்கு செய்தபிறகே அவர்கள் தெளிந்த அறிவும் சுறுசுறுப்பு முடையராய் ஒழுகின ரென்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே, பகலவன் கிழக்கே தோன்றும் காலை ஆறு மணிக்கெல்லாம் சிறுவர்கள் தாமாகவே உறக்கம் நீங்கி எழுதலே நன்றென்று உணர்ந்து கொள்க.
அங்ஙனம் துயில் நீங்கி எழும்போதே ஒளி வடிவான கடவுளை நினைந்து வணங்குக. கடவுளை நினைந்து உருகிய பெரியோர்கள் அக்கடவுள்மேல் பாடிய இரண்டொரு பாடல்களை மெல்லிய இனிய குரலில் பாடி அவரை வணங்குதல் மிக நன்று. தன்னினும் சிறந்த தன்னைப் படைத்த ஆண்டவனது அருளொளியை இவ்வாறு காலையில் தன் அறிவு மலரும் காலத்திலேயே நன்றியுடன் நினைந்து குழையும் நெஞ்சுடைய ஒருவனுக்கு அந்நாள் முழுதும் அவன் அகத்தும் புறத்தும் அருள் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். அவனது அறிவு துலக்கமாய் இருக்கும். அவன் எந்த நன் முயற்சியிற் புகுந்தாலும் அது செவ்வனே நிறைவேறும். அவனைக் காண்பவர்கள் எல்லாரும் அவன் மீது அன்புடையராவர்.
இவ்வாறு கடவுளைத் தொழுதபின் குளிர்ந்த நீர்கொண்டு கண்களைக் கழுவித் துடைத்துவிட்டுக், கண்ணாடியில் தன் முகத்தையும், அதன்பின் இரவிவன்மரையொத்த சிறந்த ஓவிய ஆசிரியர் வரைந்த அழகிய ஓவிய உருவங்களையும் உற்று நோக்கி மகிழ்க. உள்ளமானது வேறுநினைவுகளால் கலக்குறாது தெளிவாய் இருக்கும் விடியற்காலையிலே இங்ஙனம் அழகிய உருவங்களைப் பார்த்துவரும் சிறார் நாளேற நாளேற அழகிய உருவும் விழுமிய அறிவும் செழுவிய செயலும் உடையராகுவர்.
அதன்பின் கட்டாயமாகச் செய்தற்குரியது வயிற்றில் உள்ள மலச்சக்கையை வெளிப்படுத்துவதேயாகும். சிறுவர் சிலர் பலர் காலையில் இதனைச் செய்யாமல் ஓதுதல், எழுதுதல் முதலான முயற்சிகளைச் செய்துவிட்டு, அதன்பின் மலங் கழிக்கச் செல்கின்றனர். விடியற்காலையிலேயே வெளிப்பட வேண்டிய சக்கை வெளிப்படாமல் குடலுக்குள் இருக்குமாயின், அது கருகிக் குடரைப் புண்படுத்துவதுடன், இரத்தத்தையும் நஞ்சாக்கும். அதனால் மூலச்சூடும், கண்ணெரிவும், மேனி யெங்கும் சொறி சிரங்கும் ஒவ்வொருகால் வயிற்றுளைவும் உண்டாகும். ஆதலால் காலையிற் செய்யவேண்டிய முதன் முயற்சி மலநீர் கழித்தலேயாம்.
நகரங்களின் உள்ள மாணாக்கர்கள் தம் வீட்டுக்குப் புறம்பே சென்று குடரைத் துப்புரவு செய்தல் இயலாது. ஆனால், நகர்ப்புறங்களிலும் நாடுகளிலும் இருப்பவர்க்கோ அவ்வசதியுண்டு. ஆகையால் அத்தகையவர்கள் காலையில் ஒருகல் தொலைவுக்குக் குறையாமல் நடந்து சென்று, ஒதுக் கிடங்களில் குடரைத் துப்புரவு செய்து திரும்புக. இல்லங்களில் கட்டுப்பட்டு நிற்கும் நச்சுக்காற்றையே எந்நேரமும் உள்ளிழுக்கும் சிறுவர்க்கு, இங்ஙனம் வெளியே செல்வதால் தூயகாற்றை உட்கொள்ளும் சிறந்த நன்மை உண்டாகின்றது. அதனொடு கை கால் முதலிய உறுப்புகள் நன்கு அசைந்து உடம்புக்கும் வலிவையும் நலத்தையும் தருகின்றன. நகரங்களில் உறையும் சிறாரும் இயன்ற மட்டும் காலை மாலை வேளைகளில் உலாவுதல், நடத்தல், ஓடல், குதித்தல், பந்தாடல் முதலிய உடற்பயிற்சிகளில் தமதுடல் நலத்திற்கும் ஒழிவு நேரத்திற்கும் வேண்டுமளவு கட்டாயம் பழகிவரல் வேண்டும்.
குடரைத் துப்புரவு செய்தபின், ஆலங்குச்சி வேலங்குச்சி நுணாஇலை முதலியன கொண்டு பற்களை நன்றாகத் தூய்மை செய்க. இவை அகப்படாக்கால், வெள்ளிய பட்டுப் போன்ற தூய சாம்பலை வடிகட்டி வைத்துக் கொண்டு, அத்தூளை யிட்டுப் பல் துலக்கலாம். அல்லது உப்பும் அடுப்புக்கரியும் சேர்த்து அரைத்த பொடி கொண்டும் பல் தேய்க்கலாம். இவைகளைத் தவிரப் பலராற் செய்து விற்கப்படும் பற் பொடிகளைப் பயன்படுத்துதல் நன்றன்று.
அதற்குமேல் வெந்நீரிலாயினும், தண்ணீரிலாயினும் நீராடுக. சீயக்காய்ப் பொடி கொண்டாவது, வெள்ளை ரோசாச் சவர்க்காரங் கொண்டாவது எண்ணெய்க் கசண்டையும், அழுக்கையும் கழுவிவிடுக. தலைக்கு நெய்ப்பானது ஏதுந் தேய்த்து முழுகல் வேண்டினால், எள்நெய், தேங்காய்நெய், வாதுமைநெய், ஆவின் நெய் முதலியவற்றுள் எது நலந்தருவதாகக் காணப்படுகின்றதோ அதனைப் பயன்படுத்திக் கொள்க. நெய்முழுக்குச் செய்யும்போது வெந்நீரில் முழுகுதலே மிகச் சிறந்தது. நெய் முழுக்கு ஆடிய நாட்களில் நீர்க் கோவையினை விளைவிக்கும் குளிர்ந்த உணவுப் பண்டங்களை விலக்கி விடுக; அங்ஙனமே அந்நாட்களில் மூளைக்கும் உடம்புக்கும் மிகுந்த உழைப்பினைத் தருதல், நூல் ஓதும் மாணாக்கர்க்கு ஆகாது.
நீராடியபின் தோய்த்துலர்ந்த தூய ஆடைகளையே உடுத்துக. முன்நாள் கட்டியிருந்த ஆடையைப் பின்நாளில் உடுத்தல் சிறிதும் ஆகாது. உடம்பிலிருந்து வெளிப்படும் பல்லாயிரக்கணக்கான நச்சுப் பூச்சிகளும், ஊரிலுள்ளார் உடம்புகளிலிருந்தும் தெருப்புழுதி சாக்கடைக் குப்பைகளிலிருந்தும் வெளிப்படும் பல கோடிக்கணக்கான நச்சுப்புழுக்களும் முன்நாள் உடுத்த உடைகளில் ஒட்டியிருக்குமாதலால், அவைகளை அறவே விலக்கித் தூயவைகளையே உடுத்துக.
இவ்வாறு நீராடி வந்த பின்பு இறைவனைத் தொழுது, காலை வேளையில் எளிதாகச் செரிக்கத்தக்க நொய்ய உணவு எஃது இசைந்ததோ அதனை உட்கொள்க. ஆனாலும் காப்பி தேயிலை கொக்கோ முதலிய பருகுநீரில் நோய்க்கு வித்தான புளிப்பு நஞ்சு உளது என்று அறிவில் சிறந்தோர் ஆராய்ந்து உரைத்தலால், அவைகளை முற்றுமே விலக்கி விடுதல் வேண்டும். அவற்றிற்கு மாறாகக் கொத்துமல்லி, நன்னாரிவேர், ஏலக்காய் என்னும் மூன்றும் கலந்து இடித்ததூளை நீரிலிட்டுக் காய்ச்சிக் காய்ச்சிய நீரை வடிகட்டி ஆவின்பாலும் பனங்கருப்பட்டியும் சேர்த்துப் பருகுக. இது மிகவும் குளிர்ச்சி செய்வதாகக் காணப்பட்டால் சுக்குத்தூளும், அவற்றோடு கலந்து கொள்ளலாம். இங்ஙனம் செய்துகொள்ள இயலாதவர்கள் ஆவின்பால் சேர்த்த பச்சரிசிக் கஞ்சி குடிப்பது நன்று. அதுவும் செய்ய இயலாதவர்கள் பழையசோறு சிறிது உட் கொள்ளுதல் நன்று.
இவ்வளவும் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்திற்குள் செய்து முடித்துக் கொள்ளலாம். காலையில் ஆறுமணிக்குத் துயில் நீங்கி எழுந்த ஒரு சிறுவன் ஏழு அல்லது ஏழரை மணிக்குள் மேற்கூறிய காலைக் கடன்களை ஒழுங்காகச் செய்து முடித்துக் கொண்டு, அதன்பிறகு தன் பாடங்களை ஓதத் துவங்கல் வேண்டும். பாடம் ஓதும் போது தன் கருத்தை வேறொன்றிலும் செல்ல விடாமல், எந்தப் பாடத்தில் எந்தப் பொருள் சொல்லப்படுகின்றதோ அதில் தன் நினைவைப் பதித்தல் வேண்டும். நினைவைப் பல இடங்களில் சிதறவிட்டுக் கொண்டு, தவளை போல் எவ்வளவு கூவிப் பயின்றாலும், பாடப் பொருள் மனத்திற் பதியமாட்டாது. உரத்துக் கூவாமல் மெல்லிய குரலிலாவது, அன்றி வாய்திறவாமல் அமைதியா யிருந்தாவது பாடப்பொருளையும் சொல்லையும் பொருள் செவ்வையாகத் தெரிந்து கொண்டு பயிலுதல் முதன்மை யானது. இதற்கு அகராதியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, சிறிதும் சோம்பாது, தெரியாத சொற்பொருள்களை அதன்கண் பார்த்துப்பார்த்துத் தெரிந்து கொள்க. அன்றாடம் பாடத்தில் வரும் அருஞ்சொற்பொருளையும், முதன்மையாக நினைவில் வைக்க வேண்டிய பகுதிகளையும், பாடச் சுருக்கங் களையும் ஒருகுறிப்பேட்டில் அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டு, அவைகளைப் பின் நாட்களில் திருப்பித் திருப்பிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வருக.
கணக்குப் போடுதல், தேசப்படம் வரைதல், ஓவியம் எழுதுதல் முதலான பயிற்சிகளைச் செய்தற்கு நேரம் மிகுதியாய் வேண்டுமாதலால், முதலிலேயே இவைகளைத் துவங்கிவிடாமல், விரைந்து படிக்கக் கூடிய பாடங்களை முதலில் எடுத்துப் பயின்று, அதன்பின் இவைகளைச் செய்து பழகுக. அவ்வாறின்றி, முதலில் கணக்குப் போடுதல் முதலான பயிற்சிகளைச் செய்து நேரத்தைக் கழித்து விடும் மாணாக்கர்கள் பின்னர் ஓதவேண்டிய பாடங்களுக்கு நேரம் இல்லாமையால் அவற்றைப் பயிலாமலேயே பள்ளிக்கூடம் சென்று ஆசிரியரால் ஒறுக்கப்படுவதுடன் ஆராய்ச்சியிலும் தவறிவிடுகின்றனர். ஆதலால், முதலில் எளிதாகப் பயின்று கொள்ளத் தக்கவைகளையே தெரிந்து பயிலுதல் வேண்டும்.
இவ்வாறு ஒன்பது அல்லது ஒன்பதரை மணிவரையில் அன்றாடப் பாடங்களையும் பழம் பாடங்களையும் பயின்ற பின், நேரந்தவறாமல் பத்துமணிக்கெல்லாம் பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்குப் போய்த் தத்தம் வகுப்புகளில் தத்தம் ஆசிரியரை அன்புடன் வணங்கி அமைதியாயிருந்து, அவர் கற்பிப்பவை களை அவாவுடன் கேட்டு உள்ளத்தில் நன்கு பதித்தும், அவர் கேட்கும் வினாக்கட்குப் பொருத்தமான விடைகள் மொழிந்தும், தம்மோடு உடன்பயிலும் மாணாக்கருடன் அன்புடன் கேண்மை கொண்டும் ஒழுகுதல் வேண்டும்.
இக்காலத்தில் பெரும்பாலும் எல்லாப் பள்ளிக் கூடங் களும் காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குத் துவங்கு வதால், அவைகளிற்பயிலும் மாணாக்கர்களுக்கும், அம் மாணாக்கர்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் காலைக் கடன்களை முடித்து அன்றாடப் பாடங்களைப் பார்த்து உள்ளத்தில் அமைத்துக் கொண்டு வருவதற்கு நேரமும் வசதியும் இருக்கின்றன. ஆனால் சிலபல திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டும் காலை எட்டுமணிக்கெல்லாம் துவங்குகின்றன. அப்பள்ளிக்கூடங்கட்குச் செல்லும் பிள்ளைகள் மிகச் சிறிய பருவத்தினராய் இருத்தலால், அவர்கள் மேற்கூறிய காலைக்கடன்களை எல்லாம் தெரிந்து செய்யக்கூடியவர் அல்லர் என்றாலும், அவர்தம் பெற்றோர்கள் அவர் செய்யக் கூடியவைகளை ஒழுங்காகச் செய்து பள்ளிக்கூடம் செல்லும் படி பழக்கி வருதல் முதன்மையானது.
இனிப் பகல் உணவு எடுப்பதற்கென்று கொடுக்கப்படும் ஒரு மணிநேர ஒழிவு நேரத்தில், சிறுவர்கள் உணவு கொண்ட பின், தம் தோழர்களுடன் இனிதாக விளையாடல் வேண்டும். ஒருவரையொருவர் பகைத்தலும் திட்டுதலும் அடித்தலும் கூடா. கெட்ட நடவடிக்கையுள்ள பிள்ளைகளுடன் நேசம் கொள்ளுதலும் ஆகாது; பகைத்தலும் ஆகாது. அவர்களுடன் நேசங்கொண்டால் அவர்களுடைய தீய இயற்கை உமக்கும் படிந்துவிடும்; அவர்களுக்கு வரும் துன்பம் உம்மையும் சாரும். அவர்களைப் பகைத்தாலோ, அவர்கள் உம்மைப் பழிப்பர், ஏசுவர், அடிப்பர், பிறரை ஏவியும் உமக்குத் தீங்கு செய்வர். ஆதலால், அவ்விருவகையிலும் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், அவரைக் காண நேரும் போதெல்லாம் இனிமையாகச் சில சொற்களைப் பேசிவிட்டுப் போய்விடுக.
இனிப், பிற்பகல் முடிவில் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதும் தம் தோழர்களுடன் அமைதியாகத் திரும்பல் வேண்டும். வீட்டுக்கு உடனே திரும்பாமல் மைதானங்களில் விளையாடுதற்கேனும், கடற்கரைகளில் உலவுவதற்கேனும் கடைத்தெருவுகளிற் பண்டங்கள் வாங்குவதற்கேனும், ஏரி குளம் கூவல் கால்வாய் ஆறுகளில் நீராடுதற்கேனும் செல்ல வேண்டியிருந்தால், அங்ஙனஞ் செல்வதைக் காலையிலேயே நும் பெற்றோர் களுக்குத் தெரிவித்து, அவர்கள் நும்மைத் தேடி அலைந்து துன்புறாமல் செய்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட இடங்களில் விளையாடுவதாயிருந்தாலும், மன மகிழ்வாய்ப் பொழுது போக்குவதாயிருந்தாலும், அல்லது நுமக்கு வேண்டுபவைகளை வாங்கிப் போவதாய் இருந்தாலும், உடம்பைப் பழுதுபடுத்திக் கொள்ளாமல் நோயை வருவித்துக் கொள்ளாமல் வண்டி, குதிரை, மாடு முதலியவற்றிற்கு இடையே செல்லாமல், கடைகளில் பண்டங்களைக் களவு செய்யாமல் பொய்பேசாமல் நுமக்கும் நும் பெற்றோர்க்கும் தீங்கும் துன்பமும் உண்டாக் காமல் அறிவாய் நேர்மையாய் நடந்து கொள்க. மாலையில் இருண்டுபோன பின் வெளியிடங்களில் சிலகாலம் இருளில் போக நேர்ந்தால் கையில் விளக்கில்லாமற் போகலாகாது. இன்ன நேரத்தில் வீட்டுக்குத் திரும்புவோம் என்று பெரியோர்களிடம் சொல்லி வந்தபடி, தவறாமல் அந்நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிடுதல் இளைஞர்களுக்குப் பெரும் கடமையாகும்.
இங்ஙனம் மாலையில் வீட்டிற்கு வந்த பின்னாவது அன்றி வருவதற்கு முன்னாவது வயிற்றிலுள்ள மலச்சக்கையைக் கழித்துவிடுதல் வேண்டும். பள்ளிக்கூடப் பிள்ளைகள் காலை மாலை இருபொழுதும் தவறாமல் மலச்சக்கை கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்வார்களானால், அவர்கட்கு எத்தகைய நோயும் வராது. இக்காலத்து இளைஞர்கள் ஆண்டு முதிரா முன்னரே மூக்குக் கண்ணாடி இடுவது, மலச்சக்கையை நீக்கி உடம்பைத் துப்புரவாக வைத்துக் கொள்ளாமை யினாலேதான். மலக்குடலில் அழுக்குச் சேரச் சேரக் கண்ணொளி மங்கும்; மூளை தெளிவாய் இராது. ஆதலால், மாணாக்கர் அனைவரும் தமது மலக்குடலை இரண்டு வேளையும் துப்புரவு செய்வதில் கருத்தாயிருக்க வேண்டும். அதில் கருத்தில்லாத பிள்ளைகளை அவர்தம் பெற்றோர்கள் கருதிப் பார்த்தல் கட்டாயமானது.
மாலையில் இல்லந்திரும்பிய பின் கட்டியிருந்த ஆடைகளைக் களைந்துவிட்டுத் தூயன உடுத்து, இறைவனை வணங்கி நல்ல சிற்றுண்டி அருந்தி, இளைப்பாறி, ஒளி மிகுதியு முள்ளதொரு விளக்கு வெளிச்சத்தில் அதனொளி நேரே கண்ணுட்படாமல் ஒரு பச்சைக் காகிதத்தாற் சிறிது அதனை மறைத்து வைத்துக் கொண்டு பாடங்களை ஓதுதல் வேண்டும். சாய்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், குனிந்து கொண்டும் ஓதாமல் நேரிருந்து ஓதுக. ஒரேயிருப்பாயிருந்து ஓதாமல் முக்கால் மணிநேரத்திற்கு ஒருகாற் பாடத்தை விட்டெழுந்து, கண்களைக் குளிர்ந்த நீராற் கழுவி, ஐந்து நிமிஷம் உலவி, அதன்பின் ஓதுக. இவ்வாறு மாலையில் ஒன்பது அல்லது ஒன்பதரை மணி வரையிற் பாடங்களைச் செவ்வையாகப் பயின்று, அதன்பின் உணவுகொண்டு உலவி உறங்குக.
இங்ஙனமாகப் பகற் பொழுதையும் இரவின் முற்பொழுதையும் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டியிருக்கச், சிறுவர்களிற் பெரும்பாலார் முறைதவறி அப்பொழுதுகளை வீணே கழித்துவிட்டு, இரவில் வயிறுநிறைய உணவு கொண்டபின் கண்விழித்திருந்து பன்னிரண்டு ஒரு மணிவரையிலும், அல்லது விடியும் முன் நான்கு மணியிலிருந்து காலை ஏழுமணி வரையிலும் நூல் ஓதுகின்றார்கள். இப்படிச் செய்பவர்கள் எல்லாரும் கண்ணோய் வயிற்றுநோய் மண்டைக் கிறுகிறுப்பு காய்ச்சல் இருமல் முதலிய நோய்களால் அடுத்தடுத்துத் துன்புறுத்தப்பட்டுக் கல்வியில் தேர்ச்சிபெறாது ஒழிதலுடன், மெலிந்து நரைத்து பழுத்து ஆண்டு முதிரா முன்னரேயும் மாண்டு போகின்றார்கள். ஆதலால், இரவில் வயிறு நிறைய உண்டபின் ஓதுதலும் ஆகாது. ஒன்பதரை மணிக்குமேல் உண்டபின் விழித்திருந்து பயிலுதலும் ஆகாதென்று கடைப்பிடிக்க.
9. ஆலமரமும் நாணலும்
ஓர் ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து அடிபெருத்த ஓர் ஆலமரம் இருந்தது; அதன் அருகே சில நாணல் புற்களும் வளர்ந்திருந்தன. அவ்வாற்றில் வெள்ளம் பெருகியோடும் போது, அந்நீரோட்டத்தின் வழியே அந்நாணற் புற்களும் வளைந்து கொடுத்து, வெள்ளம் குறைந்த பின் முன்போல் நிமிர்ந்து நிற்கும். அங்ஙனமே பெருங்காற்று வீசும்போது அது வீசும் முகமாகவே அப்புற்கள் தலைவளைந்து கொடுத்துக் காற்றுத் தணிந்த பின் முன்போலவே தலைநிமிர்ந்து நிற்கும். இதனை அருகிருந்து கண்ட ஓர் ஆலமரமானது அந்நாணற் புல்லை நோக்கி ஏளனஞ்செய்து, நீங்கள் ஏன் என்னைப் போல் தலைநிமிர்ந்து நில்லாமல் நீருக்கும் காற்றுக்கும் தலைவளைந்து கொடுக்கின்றீர்கள்? என்று வினவியது. ஐயா, உங்களைப் போல் எங்களுக்கு உடம்பில் வலிவில்லை; ஆகையால், தலைவளைந்து கொடுப்பதன்றி வேறு என் செய்ய வல்லோம்! என்றன நாணற்புற்கள். அச்சொற்கேட்டு அவ்வால மரம் தன் வலிமையை வியந்து இறுமாந்து நின்றது. பின்னர் சிலநாளில் ஒரு பெரும் புயற்காற்று வீச, அவ்வாற்றில் வெள்ளமும் பெருகி வந்தது. அப்போது அவ்வாலமரம் வெள்ளத்தால் வேர்கள் மேலே கிளப்பப்பட்டும் கிளைகள் காற்றால் அலைக்கப்பட்டும் கீழே சாய்ந்து விழுந்தது. நாணற்புற்களோ அவையிரண்டுக்கும் தலைவளைந்து கொடுத்து, அவை ஓய்ந்தபின் என்றும்போல் தலைநிமிர்ந்து நின்றன.
ஆகவே, இறுமாப்புடையவர்கள் தமக்கு மேற்பட்ட வலிமையுடையவர்களால் தலைதாழ்த்தப்படுவார்கள் என்பதும், பணிவாய் நடப்பவர்கள் எல்லாராலும் பாராட்டப்
பட்டு என்றும் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்பதும் இதுகொண்டு அறிந்து கொள்க.
10. ஒரு நாயின் அரிய செயல்
இவ்விந்திய நாட்டின்கண் உள்ள இரெயிப்பூருக்குப் பதினொரு கல் தொலைவில் ஒரு நாயினுக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறு கோயில் உண்டு. அதனுள்ளே ஒரு நாயின் சிறுவடிவம் வைக்கப்பட்டிருக்கின்றது. அதனை அங்குள்ள அவ்வூரவர்கள் போற்றி வருகின்றனர். அக்கோயில் அமைக்கப்பட்ட வரலாறு இது:
கூவி விற்கும் வணிகன் ஒருவன் தனக்குக் கடன் கொடுத்த ஒருவனாற் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி ஒரு நாள் நெருக்கப்பட்டான். வணிகன் அப்போது தன் கையில் பொருள் இல்லாமையால் தன்னுடைய நாயையும் ஒரு பொன் கழுத்துப் பட்டிகையையும் அக்கடனுக்கு ஈடாக வைத்துவிட்டுப், பணங்கொண்டுவருவதாகத் தன் ஊருக்குப் போனான்.
பிறகு சிலநாட் சென்றன. ஒருநாள் இரவில் திருடர்கள் கடன் கொடுக்கும் அச்செட்டியாரது இல்லத்தினுள்ளே நுழைய, அது கண்ட நாய் அத்திருடர்களை நோக்கிக் குரைத்தது. திருடர்கள் அந்நாய்க்கு வேண்டிய இறைச்சி உணவினை அதன் முன்னே எறிந்தும், அஃது அவ்வுணவினை ஒரு பொருட் படுத்தாது மீண்டும் மீண்டும் குரைக்கலாயிற்று. இதற்குள் அத்திருடர் சிலர் அச்செட்டியாரது பணப்பெட்டியைத் திறந்து, அப்பொன்கழுத்துப் பட்டிகையையும் பிற நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர். ஆனால், அந்நாயோ அவர்களை ஓடவிடாமல் மறித்துக் குரைத்துப் பேரிரைச்சல் இட்டமையால், அவ்வீட்டவர்களும் அண்டை அயலாரும் விழித்து ஓடிவந்து அத்திருடர்களைப் பிடித்துக் கொண்டனர். அச்செட்டியாரும் தம்முடைய நகைகளை மீண்டும் பெற்றார். இதனால் மிகவும் களிப்படைந்த அச்செட்டியார் அந்நாய் செய்த உதவியைப் பெரிதும் வியந்து, அந்நாயின் தலைவன் பட்ட கடனை விடுவித்து, அங்ஙனம் தாம் விடுவித்ததனை ஒரு துண்டுக் கடிதத்தில் வரைந்து, பின்னர் அக்கடிதத்தினை ஒரு சுருளாக்கி அதன் கழுத்திற்கட்டி, அந்நாயினையும் விடுதலை செய்தார்.
விடுபட்ட நாய் இரவெல்லாம் மகிழ்ந்தோடி வந்து விடியற்காலையில் தன் தலைவன் இருக்கும் இடத்தண்டை அடைந்தது. அதனைக் கண்ட அதன் தலைவன் கடை கெட்டநாயே, நான் கொடுக்க வேண்டிய கடனை வந்து தீர்க்கு முன் நீ ஏன் இங்கு ஓடிவந்தாய்? என்று சினந்து ஒரு தேங்காய் பருமன் உள்ள ஒரு கருங்கல் துண்டை எடுத்து அதன்மேல் உரமாய் வீசினான். அக்கல்லெறி பட்டதும் அந்நாய் சுருண்டு வீழ்ந்து அலறி இறந்தது.
அதன் பின் அத்தலைவன் அந்நாயின் கழுத்தில் ஒரு கடிதச் சுருள் கட்டியிருக்கக் கண்டு, அதனைப் பதைபதைப்புடன் அவிழ்த்துப் பார்க்க, அது தமக்குச் செய்த பேருதவியையும், அதனாற் கடனை விடுவித்து அந்நாயையும் விடுதலை செய்வித்த தமது மகிழ்ச்சியையும் அச்செட்டியார் எழுதியிருத்தல் நோக்கி, அவன் தன் நன்றியறிவுமிக்க நாயை ஆராயாமல் விரைந்து கொன்ற பிழையை நினைந்து நினைந்து ஆற்றாது நெஞ்சம் நெக்குருகலானான். பின்னர் அதன் நன்றியை நினைவுகூர்தற்கு அறிகுறியாகவே அதற்கொரு சிறுகோயிலும், கட்டிவைத்தான்.
11. ஒரு தாயின் நல்லெண்ணம்
ஊமையும் செவிடுமாயுள்ள ஒரு பெண்மகள் ஒருவனுக்கு மணஞ்செய்விக்கப்பட்டுச் சில்லாண்டுகளில் ஒரு பெண் மகவை ஈன்றாள். தான் பிறர் பேசுவதைச் செவியினாற் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் கூடா விட்டாலும், பிறர் தம் வாயின் இதழ்களை அசைத்துப் பேசுவது போல் தான் பேசுதல் இயலா விட்டாலும், காதினால் கேட்பதும் வாயினால் பேசுவதும் நலஞ் சிறந்தனவாக இருக்கவேண்டுமென்றும் தனக்கு அவ்விரண்டும் இல்லாதது ஒரு பெருங்குறைபாடே என்றும் தனக்குள் எண்ணிவந்தாள். ஒருநாள் அவள் தான் ஈன்ற மகவினைத் தொட்டிலிற்கிடத்தி அதன் பக்கத்தே அமர்ந்திருக்கையில் தன்னைப்போலவே தன் பிள்ளையும் ஊமையும் செவிடு மாயிருக்குமோ, அல்லது மற்றவர்களைப் போல் பேசவும் கேட்கவும் வல்லதாய் இருக்குமோ என்று ஐயுறவுகொண்டு கவலைப்படுவாளானாள்.
தன்மகவு வளர்ந்து நடமாடும் போதன்றோ அது பேசவும், கேட்கவும் வல்லதென்பதை அவள் குறிப்பாக அறியக் கூடும். ஆனால், அதுவரையில் தன் மகவின் நிலையை அறியாமலிருத்தல் அவளால் இயலுமோ! மனந்துடிக்கின்றது! என் செய்வாள்! பாவம்! முடிவாக அவள் உள்ளத்தில் ஒன்று தென்பட்டது. உடனே தன் அருகில் கிடந்த ஒரு குழவிக் கல்லை எடுத்துக் கொணர்ந்து தன்மகவு உறங்கும் தொட்டிலின் பக்கத்தே நிலத்தின்கண் திடுமென எறிந்தாள். எறிந்த அக்குழவிக்கல் நிலத்தில் தாக்கி எழுப்பிய பேரோசை கேட்டு உறங்கிய மகவு திடுக்கிட்டு விழித்து வாய்திறந்து அழுதது. அக்குறிப்பினைக் கண்ட அத்தாய் தான் ஈன்ற மகவுக்கு ஓசையைக் கேட்கும் செவியுணர்வும், கேட்டு வாய்திறந்து அழுதமையால் பேசுந்தன்மையும் உண்டென்பதறிந்து மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தினாள்.
12. ஒரு கௌதாரியும் குறவனும்
ஒருகால் ஒரு குறவன் ஒரு சிறு காட்டின்கண் வைத்த கண்ணியில் ஒரு கௌதாரிப் பறவை அகப்பட்டுக் கொண்டது. அதனை அவன் அந்தக் கண்ணியினின்றும் எடுத்துத் தன் உணவுக்காகக் கொல்லப் போகையில், அஃது அவனை நோக்கி, ஐய என்னைக் கொல்லாமல் விட்டுவிடு! யான் உனக்கு வேலைக்காரனாயிருந்து மற்றைக் கௌதாரிப் பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்து உன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும்படி செய்வேன் என்றது. அது கேட்ட அக்குறவன், நின் நண்பர்களை எல்லாம் கொன்று, நீ மட்டும் உயிரோடிருக்க எண்ணுகின்றாய்; ஆதலால், நீ விரைந்தொழியக் கடவாய் என்று விடை பகர்ந்தான்.
13. ஒரு பெண்பிள்ளையும் பெட்டைக்கோழியும்
நாட்டுப்புறம் ஒன்றில் ஒரு மாது பெட்டைக் கோழியொன்றனை வளர்த்து வந்தாள். அக்கோழி நாடோறும் ஒரு முட்டை இட்டு வந்தது. இது கண்ட அப்பெண், எனது கோழி நாடோறும் ஒரு முட்டைதான் இடுகிறது; இனி அது நாள் ஒன்றுக்கு இரண்டு முட்டை இடும்படி செய்வேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பிறகு ஒவ்வொருநாளும் முன் கொடுத்ததற்குமேல் இரண்டத்தனை மடங்கு வாற்கோதுமை அதற்கு இரையாகக் கொடுக்கத் தலைப்பட்டாள். இங்ஙனம் அவள் மிகக் கொழுமையான தீனி கொடுத்துவரவே அப் பெட்டைக் கோழி தன் உடம்பினுள்ளே கொழுப்பு மிகுதியாக வரப்பெற்று ஒரு முட்டை தானும் ஈனாமல் மலடாய்ப் போயிற்று.
14. சுருக்கமான நல்லறிவு
விலையுயர்ந்த கொழுமையான உணவுகளையே மிகுதியாய்த் தின்றுவந்தமையால், கை காற் பிடிப்பு நோய் கொண்டு வருந்திவந்த ஒருவர் தமது நோய்க்கு மருந்து கேட்கும் பொருட்டுப், புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர்பாற் சென்றார். சென்று அவர்க்குத் தமது நோயின் தன்மையை எடுத்துரைக்க, அதுகேட்ட அம்மருத்துவர் நீர் நாடோறும் ஆறு அணாவுக்கு மேற்படாத உணவு கொண்டால் அந்நோய் தீரும் என்று மொழிந்தார்.
15. நரியும் சேவலும்
ஒரு கால் ஒரு நரி சேவல் ஒன்றிருக்கும் இடத்தண்டை வந்து, அதனைப் பிடித்துக் கொண்டு போவதற்குச் சூழ்ச்சி செய்தது. உடனே தன் அறிவிற்பட்டபடி அது சேவலை நோக்கி, உன் தந்தைக்குப் பாட்டுப் பாடத் தெரிந்ததுபோல உனக்குப் பாடத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்! என்றது. அவ்வாறு அது சொல்லியதைக் கேட்ட சேவல் உடனே தன் கண்களை மூடிக் கொண்டு கூவிப் பாடத் தொடங்கியது. அது கண்மூடிய நேரத்தில் நரி அதன் மேற்பாய்ந்து அதனைக் கௌவி எடுத்துக் கொண்டு ஓடலாயிற்று. அவ்வூரில் உள்ளவர்கள் அதனைக் கண்டு, ஐயோ! நரி நம் சேவலைத் தூக்கிக் கொண்டு போகின்றதே! எனக் கூவினர். அப்போது சேவல் நரியை விளித்து, ஐய, ஊரார் சொல்வதை நீங்கள் அறியவில்லையா? தமக்கு உரிய சேவலை நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள் என்கின்றார்களே. யான் உங்களுக்கு உரியேனன்றி அவர்களுக்கு உரியேன் அல்லன் என்பதை அவர்கட்குச் சொல்லுங்கள் எனப் புகன்றது. அங்ஙனம் அது புகன்ற படியே நரி தன் வாயைத் திறந்து, இஃது எனக்குரியது, உங்களுக்கு உரியதன்று எனக் கூறவே, சேவல் நரியின் வாயினின்றுந் தப்பிப் பறந்துபோய் ஒரு மரத்தின் மேல் அமர்ந்தது. அமர்ந்து, யான் அவர்களுக்கு உரியேனன்றி, நினக்கு உரியேன் அல்லன் எனக் கரைந்தது. ஆகவே, நிலையறியாமற் பேசுவது பிசகென்பது இதனால் அறியப்படும்.
16. கல்வியும் ஓய்வும்
கல்வி கற்பவர்களுக்கு இடையிடையே ஆறியிருத்தலும் ஓய்ந்திருத்தலும் பயன் தருவனவாகும். மக்களின் மனமானது, வளைக்கப்படாதவரையில் வலுவுடையதாய் இருக்கும் ஒரு வில்லின் தன்மையை ஒத்ததாயிருக்கின்றது என்றாலும், ஒருவன் தன் உள்ளத்தின் ஓட்டத்தை எப்போது தடுத்தாளல் வேண்டும், அல்லததனை எப்போது விடுத்தாள வேண்டும் எனப் பகுத்துணர்ந்து நடக்கின்றானோ அதுதான் அவனது உணர்வுக்குச் சிறந்த தன்மையாகும்.
இருவகையிலும் ஒரு கட்டுப்பட்டு நடவாமல் மிகமும் முரமாய் நடக்கும் ஓர் ஆண் மகனை யான் அறிவேன்; அவனுக்கு நடுப்பட்ட நிலைமை என்பதொன்றில்லை; தான் செய்யும் கல்விப் பயிற்சியை எப்போது விட்டுவைக்க வேண்டும், மறுபடியும் எப்போது தொடங்க வேண்டும் என்னும் அறிவும் அவனுக்கில்லை. அவன் ஏதாவதொன்றை எழுதப்புகுந் தானாயின், பகற்பொழுதோடு இராப்பொழுதினையும் ஒருங்கு சேர்த்துக் கொண்டு, தானாகவே களைத்துக் கீழ்விழும் வரையில், தன்னை நெருக்கிப் பிழிந்த படியாய்ச் சிறிதும் ஓய்வெடாது அதனைச் செய்வன். பிறகு அதனைவிட்டு வேறுமுகமாய்த் திரும்புவனாயின், எல்லா வகையான விளையாட்டுக்களிலும் அவன் ஒரு வரை துறையின்றிப் புகுந்து ஈடுபட்டிருப்பான்; மீண்டும் அவன் நூல்களைக் கையில் எடுக்கும்படி செய்வது எளிதிற் கூடுவதன்று; என்றாலும் எப்படியோ அவன் திரும்ப நூல் ஓதத் துவங்குவானாயின், அம்முயற்சியில் வரவர அழுந்தி அதனோடு உருகி ஒன்றுபட்டுப் போவான். அப்போது அவனுடைய அறிவாற்றல் கள் முற்றும் புதுக்கப்பட்டுத் தோன்றும்; தன்னளவுக்கு மிஞ்சியே தான் விழைந்ததனைச் செய்திடுவன். அங்ஙனம் மட்டுப்படாது செல்லுதலால், அவனது கல்விப் பயிற்சியையும் அளவுபடுத்துதல் ஏலாது.
தனக்குள்ள அறிவாற்றல்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தல் வேண்டும், அவற்றை எவ்வாறு அளவுபடுத்தி நடப்பித்தல் வேண்டும் என்பதனை அவன் எட்டுணையும் அறியான்; அவனது மட்டுப்படா ஆற்றல் அவனுக்கே மாறாய் நின்றது. அவன் அறிவில் வல்லவனாயிருந்த தொன்றுமட்டும் அன்று; பேசுதலிலும் எழுதுதலிலும் அவனை ஒப்பாரும் மிக்காரும் எவருமேயில்லை. எனினும் அவனது கூர்த்த அறிவு வெளியே புலப்படுவதில்லை; அது புலப்படுவது ஒரு குற்றமாக அவனது பகுத்தறிவுக்குத் தோன்
றியது; ஏனென்றால், ஒளிக்கப்பட்டதைவிட ஒளிந்திருப்பதே தீங்கு பயப்பது. அவன் தான் பேசும் மொழிகளை உழைப்பெடுத்துப் பேசுவதில்லை. கட்டாயமாக இருந்தால் அல்லாமல், அல்லது ஏதேனும் ஊதியம் வருவதாய்க் காணப்பட்டால் அல்லாமல், அவன்தான் வழக்கமாய்ப் பேசும் பெரும்பாட்டையை விட்டுப் பிசகிப் போவதில்லை. எதனாலெனின், தான் பேசும் பொருளை விளக்குதற்குத் துணையாயின் அல்லது, வெறும் வனப்புக்காக உவமை உருவகங்களைக் காட்டிச் சொல்லுதல் ஆகாதென்பது அவன் கருத்து. ஒழுங்காக இருக்கவேண்டுவதொன்றனைத் திரிபு செய்தலும் பிணித்தலும் அளவுக்கு மிஞ்சி வெறிபிடித்தவர் தம்செய்கையேயாமென்று அவன் எண்ணினான்.
17. வறுமை
வறுமையானது தகாத செயல்களைச் செய்யும்படி மக்களை ஏவுகின்றது; ஆயினும், நேர்மையுள்ளவர்கள் அத்தகைய செயல்களைச் செய்தல் ஆகாது. வறுமை வந்த காலத்திலேதான் அவர்கள் தமது மனநிலையை உரப்படுத்துதல் வேண்டும். ஒருவன் பசித்து வருந்தினாலும் பிறரைச் சார்ந்து பிழைத்தல் தக்கதன்று.
18. வாழ்க்கையே நாடகம்
நமது உயிர்வாழ்க்கை முழுதும் ஒரு நாடகமே எனக் கருதுகிறேன். அதில் ஒவ்வொருவனும் தன்னை மறந்து பிறன் ஒருவனைப் போல் நடக்கப் பாடுபடுகின்றான். நாம் நம்முடைய உண்மை நிலைக்குத் திரும்பமாட்டாதவர்களாய்ப் பிறரைப் பார்த்து அவர்களைப் போல் நடப்பதிலேயே உறைத்து நிற்கின்றோம். இஃது எதனை ஒத்திருக்கிறதென்றால், இளஞ்சிறார் தெற்றுவாய் உடைய சிலரைப் பார்த்து, அவரைப் போல் தாமும் தெற்றித் தெற்றிப் பேசுதலையே ஒத்திருக் கின்றது. அங்ஙனம் அச்சிறுவர் தெற்றித் தெற்றி நெடுகப் பேசிவரவே, சிறிது காலத்தில் அவர்களும் தெற்றுவாய் உடையராகின்றனர். முதலிற் பழகிய அத்தீயபழக்கம் பின்னர் எக்காலும் மறக்கப்படாத வேறோர் இயற்கையாய் விடுகின்றது என்று நாடக நூலாசிரியரொருவர் (Ven Jonson) அறிவுரை புகல்கின்றார்.
19. ஒரு கிண்ணம் தண்ணீர்
முதலில் ஆடுமேய்க்கும் இடையனாயிருந்து பின்னர்க் கடவுளின் திருவருளால் அரசியல் நிலைக்கு உயர்த்தப்பட்டுச் செங்கோல் செலுத்திய பண்டைக்காலத்து மன்னன் ஒருவன் (David) தன்மேற் பகைகொண்ட வேறொரு கொடுங்கோல் மன்னனாலும் நாகரிகமில்லாக் கொடிய கூட்டத்தாராலும் இருபக்கமும் துன்புறுத்தப்பட்டு, அதனால் தனது அரச வாழ்க்கையைத் துறந்து, தன் அருமைப் பெற்றோர்களைப் பாதுகாவலான ஓரிடத்திற் கொண்டு போய் வைத்துத் தான் மேய்ப்பனாயிருந்தபோது, அறிந்திருந்த ஒரு சுக்கான் கல்மலைப்பாங்கு சென்று அங்குள்ள குகைகளையே தனக்கு உறைவிடமாய்க் கொண்டிருந்தான். கடவுளின் அருளுக்கு உரியனான இம்மன்னன் இங்ஙனம் ஏழ்மை நிலையை அடைந் தானாயினும், அவனது தெய்வத் தன்மையானது அவன்றன் படைவீரர் பலரை அவன்பால் வருவித்தது; மனத்துயர் கொண்டோரும், கடன்பட்டு நொந்தோரும், மனக்குறை யுடையோரும் அவன்பால் இருத்தலை விரும்பி அவனிடம் வந்து குழுமினர்; இவர்களுட் சிலர் படைஞராய் இருந்த காலத்து வென்றியில் சிறந்து முதன்மை பெற்று விளங்கி னோராவர். இவர்கள் எல்லாரும் தம் இளைய மேய்ப்ப மன்னன் சொல்வழி நடப்பவராய், எவர்க்கும் எந்த வகையிலும் தீங்கு செய்யாது ஒழுகினோராவர். அவ்விளைய மன்னனோ மிடிப்பட்ட இந்நிலையிலும் இறைவனை மறவாத வனாய்த் தனது யாழையியக்கிப் பல அருட் செம்பாடல்களை உளங்கரைந்து பாடும் வழக்கம் மேற்கொண்டான். அன்பும் அருளும் ததும்பும் அவ்விசைப்பாட்டுகளைக் கேட்ட அப்படை வீரர்களெல்லாரும் தமது வறுமையையும் துன்பத்தையும் மறந்து, கடவுள்பாற் கசிந்த உள்ளத்தினராகித் தம் மன்னன்பால் நிலைபெற்ற பேரன்புடையரானார்.
இம்மன்னனும் இவன்தன் படைஞரும் அடைக்கலம் புகுந்த அவ்வெறுமலைப்பாங்கு கதிரவன் வெப்பத்தால் அழற்சி மிக்கதாயிருந்தது. அம்மலை முகட்டினூடு இருந்த ஒரு பெரும் பிளவின் அடியிடமெல்லாம் உடைந்த கற்பாறைத் துண்டுகள் இறைந்து கிடந்தன. அதன் இருபுறத்தும் செங்குத் தாய் நின்ற சுற்றுச் சுவர்களின் கரை ஓரத்தில் மலையாடுகள் அடிவைப்ப தற்கும் போதுமான இடம் கிடையாது. இத் தன்மைத்தாகிய மலைப் பிளவின் கண் உள்ள ஒரு செங்குத்தான குன்றின் உச்சியிலேதான் அவ்விளைய மன்னன் புகலிடமாய்க் கொண்ட ஒரு கொடுமுடி இன்றும் காணப்படுகிறது. அதன் குறுகிய வாயினுள்ளே நுழைந்து சென்றால், படியடுக்குகள் உடைய குகையொன்று சிறுகிய வழிகளும் பெருகிய மண்டபங்களும் மாறிமாறி வாய்ந்தனவாய் அமைந்திருத்தல் காணப்படும். என்றாலும், அவ்விடம் நெருக்கமாய் வெப்பம் மிக்கு இருந்தது. ஒரு செடிதானும், மரந்தானும் இல்லாமல், ஆள்வழக்கம் அற்றுப் பாழாய் வெய்தென நிற்கும் அவ்விடத்தைத் தனக்குப் புகலிடமாய்க் கொண்ட அவ்இளைய மன்னன், தான் முன்னே அரசாண்ட இனிய செழுமையான நாட்டையும், அதன்கண் ஆங்காங்குப் பச்சைப் பசேலென வளர்ந்திருக்கும் கோதுமைப் பயிர் களையும், சன்னல் பின்னலாய்ப் படர்ந்திருக்கும் கொடி முந்திரிக் கொடி களையும், குளிர்ந்த தீஞ்சுவைத் தண்ணீர் சுரந்து ஒழுகப் பெறும் வாவிகளையும், அவ்வாவிகளின் நீர்பாய் மடைகளின் பாங்கரிருந்து தான் முன்னர் இறைவன் மேல் இசைப்பாட்டுகள் மிழற்றின வகைகள் எல்லாம் நினைந்து பெருமூச்செறிந்தான்! எறிந்து ஐயோ! யான் இருந்து இசைமிழற்றின அந்நீர் நிலையிலிருந்து ஒரு கிண்ணம் தண்ணீர் எவரேனும் எனக்குக் கொணர்ந்து கொடார்களா! என்று ஆற்றாது கூறினான்.
அச்சொற்கேட்ட அவன்றன் படைஞரில் மூவர் தம் மன்னனது வேட்கையை நிறைவேற்றத் தீர்மானித்தனர். அவர்கள் புகலிடமாய்க் கொண்ட அம்மலையரணுக்கும், அரசன் அத்துணை ஆவலொடு வேண்டிய நீரினையுடைய வாவிக்கும் இடையே அவர்க்குப் பெரிதும் தீங்கிழைத்த கொடிய காடவர் கூட்டம் படை கொண்டிருந்தது. என்றாலும், தம் தலைவன் மேல் அவர்கள் வைத்த பேரன்பானது அப்பகைவர் கூட்டத்திற்கு அஞ்சுமா! உடனே அம்மூவரும் தாமிருந்த உச்சிமலைப் பிளவினை விட்டுக் கீழிறங்கினர். எப்படியோ அவர்கள் அப்பகைவர்தம் படையினூடே சென்று, தம்மரசற்கு விருப்பமான நீரூற்றிலிருந்து நீரை முகந்தெடுத்து, அதனைச் சுமந்த வண்ணமாய் அப்பகைவர் படையினூடே தானே திரும்பிப் போந்து, தமது மலையுச்சியின் கொடுமுடியில் அதனைக் கொணர்ந்து சேர்ப்பித்தனர். தம் தலைவனது வேட்கையை ஆற்றும் பொருட்டுத் தம்முயிரையும் பொருட் படுத்தாது பகைவரூடு சென்று அவர்கள் அந்நீரினைக் கொணர்ந்த செயற்கருஞ் செயலை நோக்கவே, அம்மேய்ப்ப அரசனது நெஞ்சம் நெக்குருகலாயிற்று. அத்துணை அரிதிற் போந்த அந்நீர் மிகவும் புனிதமானதென்றும், அதனைத்தான் பயன்படுத்திக் கொள்ளுதல் தகாதென்றும் அவன் எண்ணினான். எண்ணி அந்நீரினை எடுத்து இறைவன் அருட்குறி மேற் சொரிந்து, தன் பேரன்பிற்கு அறிகுறியான கண்ணீரும் வார்ந்தொழுகிப் பேரின்ப வெள்ளத்தில் படிந்திருந் தான் என்பது.
20. ஒரு பொன் மீன்
பேரன்பினனான அவ் இளைய மன்னன் நம் தமிழ்நாட்டுக்கு அயலதான மேல்நாட்டில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தவன் ஆவன். அவனை
யொப்ப இறைவன் பாற் பேரன்பு பூண்டு ஒழுகினோர் இத்தமிழ் நாட்டகத்தும் பலர் பழங்காலத்திருந்தனர். அவருள் ஒருவர் செய்த செயற்கருஞ் செயலை ஈண்டு எடுத்துக்காட்டுவாம். சோழ வேந்தர்களின் தலைநகரங்களில் ஒன்றான நாகபட்டினம் என்பது கடற்கரையை அடுத்துள்ளது. அந்நகரத்தின் கடற் கரையோரத்தின்கண் உளதாகிய செம்படவர் குப்பத்தில், இன்றைக்கு ஓராயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் செம்படவர் தலைவனான ஒருவர் எல்லாம் வல்ல இறைவன் பால் அளவிறந்த அன்புடையராய் உயிர்வாழ்ந்து வந்தனர். அவர் தம் ஏவல்வழி நிற்கும் செம்படவர்களை எல்லாம் கடல் மேல் கட்டுமரங்களில் செலுத்திக் கொண்டு சென்று, வலைவீசுவித்துப் பிடிப்பிக்கும் மீன்குவைகளை விற்றுப், பெற்ற பொருளைத் தம்மவரும் தாமுமாகப் பங்கிட்டுச் செல்வம் உடையராயிருந்தனர்.
இவர் மீன் பிடிக்கும் வாழ்க்கையில் இருந்தனராயினும், எல்லாம் வல்ல இறைவன் நிலையினை உணர்ந்து, அவன் திருவடிக்கண் அழுந்தின அன்பு வாய்ந்தவர். ஆகவே, தம்மவர் பிடித்துக் கொணரும் மீன் தொகுதியுள் ஒரு தலை மீனையெடுத்து அஃது இறைவனுக்குரியதென நினைத்து, அதனைக் கடல்நீரில் மீண்டும் செல்கவென விட்டுவருதலை நாடோறும் மாறாமல் செய்து வந்தார்.
இங்ஙனம் செய்து வருகையில், ஏது காரணத்தாலோ மீன்கள் மிகுதியாய் அகப்படாமல் செம்படவர் தமது வலைவளம் சுருங்கிப் பட்டினியும், பசியுமாகக் கிடந்து துன்புறலாயினர். அங்ஙனம் தம்மவர் துன்புறுங்காலத்தும், அவர்தம் தலைவரான அன்பர் முதல் வலையில் ஒரு மீனே அகப்பட்டாலும், அஃது இறைவற்கே உரியதென அன்பொடு நினைந்து, அதனைக் கடலின்கண் உயிரொடு விடுத்து வந்தார். நாளேற நாளேற இவரது செல்வமும் சுருங்கிவிட, இவர் உடல் தளர்ந்து வருந்தினாலும், மனம் சிறிதும் தளராராய் மகிழ்ந்து, முதலில் அகப்படும் ஒரு மீனையும் ஒவ்வொரு நாளும் கடலின்கண் உய்த்தலில் சிறிதும் வழுவாது ஒழுகலாயினர். கடைமுறையாக வீசுவித்த பல வலைகளுள் ஒரு வலையிற்பட்ட ஒரு மீனைத் தவிர, வேறொரு சிறு மீன் தானும் வேறு வலைகளுள் அகப்பட்டிலது. எனினும், ஒரு வலையில் அகப்பட்ட அவ்வொரு மீனையும் அவர் மிக்கதொரு களிப்புடன் எடுத்துப் பார்க்க, அஃது ஒரு பெரிய தேயத்தையே விலைகொளத்தக்க சுடர்விரி பசும்பொன் வடிவினதாய்த் திகழ்ந்தது.
அப்பொன்மீன் அகப்பட்ட நேரம் எத்தகைய மனவுறுதியுடையார் மன நிலையினையும் கலைக்கும் வலிமை வாய்ந்தது. செம்படவர் தலைவனான அவ் அன்பரோ மிகவும் மிடிபட்டுத் தம் குடும்பத்தவரோடு பல நாட்கள் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து இடருழந்து வருகின்றார். தம்முடைய துன்பத்தை ஒரு பொருட்டாகக் கருதாது, தமது ஆளுகைக் கீழுள்ள செம்படவர் படும் துயரத்தைக் கருதும் அருள் மாட்சியுடையராகலான் அவர் பொருட்டாகவாவது அப்பொன்மீனை விலை செய்து, அவர் அச்செமபடவரது மிடிவாழ்க்கையை மாற்றப் பாலார். மற்று, அச்செம்படவர்களோ தாங்குதற்கரிய தமது வறிய நிலையினைக் கருதித் தம் தலைவன் இப்போதாயினும் இவ்வொரு மீனை விற்றுத் தம்மைப் பாதுகாப்பரோ, அன்றி என்றும்போல இதனையும் கடற்கண் விடுத்திடுவரோ என்னும் ஐயத்தால் ஏங்கிய நிலையினராய், அவர் இனிச் செய்யப் போவதனை எதிர்பார்த்துக் கண் இமையாது நிற்கின்றனர். அப்பொன் மீனைக் கையிலெடுத்த சில்லிமைப் போழ்தில் எத்தனையோ பல எண்ணங்கள் மின்னொளியினும் கடுகி அவர்தம் தலைவன் உள்ளத்தை ஊடுருவிச் சென்றன. என் கீழ்க்குடிகளான இச்செம்படவர் எத்தனையோ பல நாட்களாக வலைவளந் தப்பிப் பட்டினியும், பசியுமாய்க் கிடந்து வருகின்றார்கள்! என்கொள்கை தவறாமல், நாடோறும் அகப்படும் ஒரு மீனையும் இறைவற்கென்று கடலின்கண் யான் விடுத்து வருதலைக் கண்டும் என்னை வெறுத்திலர்! இவ்வொரு மீன் விலையால் இவர்கள் எல்லாரின் மிடியும் அற்றுப்போவது திண்ணமே. ஆனாலும், இஃது இறைவற்கு உரியதன்றோ? இதனை விற்றற்கும், இவர்களைப் பாதுகாத்தற்கும் யான் யார்? யான் பிறக்கும் முன்னும் யான் இறந்த பிறகும் இவர்களைப் பாதுகாத்தவர், பாதுகாப்பவர் கடவுளா? யானா? என் மனைவி மக்கள் பெற்றார் உற்றாரெல்லாம் என்கீழ்க் குடிகளைப் போல் அல்லர்; முற்றும் என்னைச் சார்ந்து பிழைப்பவர். இவர்கள் பொருட்டு இதனை விற்றல் இறைவன் திருவுளத்திற்கு இசையுமா? கண்ணெதிரே என் உதவியைப் பெரிது வேண்டி நிற்கும் இவர்கட்கென்று இதனைப் பயன்படுத்தாமல் கட்புலனாகாக் கடவுட்கென்று இதனைக் கடலின்கண் விடுத்தல் பயன் தருமா? இத்தனை நாளாக மிடிப்பட்டு வருந்தும் இவர்கள் அனைவரின் நிலையையும் ஓராமலே இறைவற்கென்று அரிது அகப்பட்ட ஒரு மீனையும் விடுத்து வந்த யான் இன்றைக்கு மட்டும் இப்பொன்மீனைக் கண்டு பேரவாக் கொண்டு இறைவனை மறந்து இவர்களை நினைதல் பிழையன்றோ? இவர்கள் துயர் ஒருபுறம் இருக்க, எனக்கு அரிதிற் கிடைத்த இம்மக்கள் யாக்கை இறைவன் தந்ததன்றோ? இதனைப் பாதுகாவாது, யான் ஏதோ விடாப்பிடியாக் கொண்ட ஒரு கொள்கைக்காக மிடியால் இதனை அழித்து விடுதல் ஐயன் அருளுளத்திற்கு அடுக்குமா? எனக்கும் என்னைச் சேர்ந்தார்க்கும் என்கீழ்க்குடிகட்கும் பிறர்க்குமெல்லாம் வந்த இத்தீரா வறுமையினை இவ்வொரு பொன் மீன் தீர்த்து எல்லாரையும் இன்பவாழ்வில் வைக்குமென்றால், இதனைக் கடலின்கட் போக்குதல் தக்கதாமா? நல்லது, இவ்வெல்லார் வறுமையையும் தீர்த்து, அவர்கள் எல்லாரையும் பாதுகாத்தல் வேண்டி, என்கொள்கைக்கு மாறாக இப்பொன்மீனை விற்கத் துணிவேனாயின், இதனை விற்கப் போம்போதோ, விற்றுப் பொருளொடு திரும்பும் போதோ, திரும்பி எல்லார் வறுமையும் தீர்க்கும்போதோ, அது தீர்ந்து எல்லாரும் களித்திருக்கும் போதோ ஒரு கடும் புயற்காற்றும் விடாப் பெருமழையும் கதுமெனத் தோன்றி, எமது மணற்குப்பத்தை வாரிக் கரைத்துக் கொண்டு போய்க் கடலின்கண் எம்மை அடங்க அமிழ்த்தி அழித்தால், அவரும் யானும் என் செய்யக் கூடும்! அல்லது இக்கடல் நீரே காற்றாலும், மழையாலும் வரை கடந்து பொங்கி எழுந்து போந்து எம்மையெல்லாம் ஒருங்கே அழித்துச் சென்றால், யான் என்னைக் காப்பதும் எம் உறவினர் சுற்றத்தாரைக் காப்பதும் எங்ஙனம் கைகூடும்! எல்லா மக்களையும், மக்களினும் தாழ்ந்த எல்லா உயிர்களையும் எவன் படைத் தானோ, அவனே அவர்களையும் அவைகளையும் காத்தற்கும் அழித்தற்கும் உரியவன். எல்லா உயிர்களையும் காத்தற்கு ஏற்ற பேராற்றல் எம் ஆண்டவன் ஒருவனுக்கு இருக்கப் பிற உயிர்களின் உதவியும் துணையும் இன்றிப், பிறபொருள்களின் சேர்க்கையும் பயனுமின்றி என்னையே காத்துக்கொள்ள மாட்டாத யான், என்னவரைக் காக்கும் கடமையுடையேன் எனப் பிழைபட எண்ணி, எல்லாம் வல்ல எம்பெருமானுக்கு இத்தனை காலமாகச் செய்துவந்த செயலினின்று இப்போது மாறப் பெறுவேனோ! எனத் தொடர்பாக நினைந்தொரு முடிவுக்கு வந்தவுடனே, என்றும் போல இன்றும் இப்பொன்மீன் எல்லாம் வல்ல பெருமான் திருவடிக்கே உரித்தாகற்பாலது! என நெஞ்சம் குழைய மொழிந்து, அதனைக் கடலின்கண் விடுத்திட்டார்.
21. நீண்டகாலக் கடன்
நூலாசிரியர் ஒருவரை ஒருநாள் ஓர் இரவலன் எதிர்ப்பட்டனன். உடனே அவன் தனக்குக் கால்ரூபா உதவி செய்யும்படி அவரை விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கேட்டு நெருக்கினான். அவர் தமது சட்டைப் பையினுட் கையை நுழைத்துத் தடவ, அதன்கட் சில்லறையில்லாமல் ஒரு முழு அரை ரூபா மட்டும் இருக்கக் கண்டார். அவர் அதனை எடுத்து அவ்விரவலனுக்குக் கொடுத்து நீ எனக்கு மிச்சங்கால் ரூபா கடன் கொடுக்கவேண்டியிருப்பதை மறவாதே. என்று கூறிப் புன்னகை புரிந்தார். அதற்கு அவன் அப்படியே, பெருமானே, யான் அக்கடனைத் தங்கட்குத் திருப்பிக் கொடுக்கும் வரையில் உயிரோடிருப்பீர்களாக! என்று மறுமொழி நுவன்று சென்றான்.
22. ஞாயிறும் திங்களும்
ஒருகால் நண்பர் இருவர் ஞாயிறு (சூரியன்), திங்கள் (சந்திரன்) என்னும் இரண்டில் எது பயன்மிகவுடையது என வழக்கிடலாயினர். முடிவாக அவ்விருவரில் ஒருவர், ஓ! எனக்கு அது தெரியும். திங்களானது ஞாயிற்றினும் இரு மடங்கு பயன் உடையது; ஏனென்றால், அது தனது விளக்கத்தை எல்லாரும் வேண்டும் இராக்காலத்தே ஒளிவீசுகின்றது; மற்று, ஞாயிறோ தன்னை எவரும் வேண்டாத பகற்காலத்தில் ஒளிர்கின்ற தன்றோ! என்றான்.
23. உதவிச்சம்பளங் கேட்டல்
தன் அரசனுக்காக உற்ற நேரத்தில் போர்புரிந்து வெற்றி பெற்ற அஞ்சா ஆண்மையனான படைஞன் ஒருவன், தனக்கு உதவிச் சம்பளம் அளிக்கும்படி கேட்கத் தன் அரசன்பால் போந்தனன். போந்து அரசற்குத் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க, அரசன் நல்லது பார்ப்போம் என்றான். உடனே அம்மறவன், அதற்காகத் தேவரீர் காக்கவேண்டுவதில்லை, தாங்கள் இப்போதே பார்க்கலாம் என்று சொல்லி, உடனே தன் உடம்பின்மேல் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டுப், போர்த்தழும்புகள் நிறைந்த தன் மார்பினைக் காட்டினான். அதனை அரசன் கண்டதும் இனிப் பார்க்கலாம் என்று சொல்ல மாட்டானாய், உடனே அவற்கு உதவிச் சம்பளம் கொடுக்குமாறு கட்டளையிட்டான்.
24. ஒரு மீகாமனது கனவு
கனவு காண் காலத்தும் பிறர்க்குதவிசெய்வதே அழகிது, நல்லது என்றார் மேனாட்டு நாடக நூலாசிரியர் ஒருவர். ஒருகால் ஒரு சிறந்த மீகாமன் தனது கப்பலில் தன் அறையினுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனது மரக்கலம் அப்போது சென்று கொண்டிருந்த நடுநிலக்கடல் அமைதியாகவே இருந்தது; வானத்திலும் மப்பு இல்லை. ஆனால் உறங்கிக் கொண்டிருந்த அக்கப்பல் தலைவனோ தனது கப்பல் கடலுள் அமிழ்வதாகக் கனவு கண்டு, அக்கனவு நிலையிலேயே அறையைவிட்டு வெளியே நடந்து வந்து, சுக்கான் திருப்புவோன் வேலையைக் கைக்கொண்டு தன் கப்பலாட்களை யெல்லாம் விழிப்பாய் இருக்கும்படி கூவினான்; தூக்கத்திலிருந்த வாறே தம் தலைவன் செய்யும் செயல்களைக் கண்டு இறும் பூதுற்ற அவ்ஆட்களெல்லாரும் நகையாடினர்; அவர்தம் நகையொலியைக் கேட்டு விழித்துக் கொண்ட அம்மீகாமன் மீண்டும் தன் அறைக்குட் சென்று மனக் கலக்கத்துடனேயே தூங்கலாயினன். அங்ஙனம் தூங்கிய சிறிதுநேரத்தின் பின் திரும்பவும் அவன் விழித்தெழுந்து பார்க்கப், புயற்காற்று அறிவிக்கும் கருவி, வரப்போகும் சூறாவளியினை அறிவித்தது. உடனே அவன் மேல் தட்டின் மேலோடித் தன் ஆட்களை கூவியழைத்தனன்.சுக்கான் திருப்பிக் கொண்டிருந்த ஆடவன் ஐய, மறுபடியும் கனவோ? என வினவினான். என்றாலும், அவன்றன் ஆட்கள் அவன் சொற்படியே சென்று அக்கப்பலின் பாய்களை உடனே சுருக்கிக் கட்டினர். சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு பெருஞ்சூறைக் காற்று வந்து வீசியது. ஆயினும், பாய்கள் மடக்கிக் கட்டப் பெற்றமையால் இக்கப்பல் ஏதோர் இடருமின்றிச் சென்றது; முன்னதாகவே பாய் மடக்கிக் கட்டப்பெறாத மற்றக் கப்பல்களோ, அப்பெருங்காற்றினால் அலைக்கப்பட்டுக் கடலுள் அமிழ்ந்து போயின. கனவிலும் தன் கடமையைச் செலுத்திய தம் தலைவனுக்கு அக்கப்பலாட்கள் எல்லாரும் நன்றி செலுத்தினர்.
25. ஒரு கடல் மனிதன்
1725-ம் ஆண்டு ஒரு கப்பல் மேல்கடலில் நூற்றெண்பதடி ஆழமுள்ள ஒரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கையில் காலை பத்துமணிக்கு மக்கள் வடிவம் வாய்ந்த ஒருவன் அக்கடல் நீரினின்றும் மேலெழுந்து அக்கப்பலின் இடப்பக்கத்தே காணப்பட்டனன். அவனைக் கண்ட அக்கப்பல் தலைவன் உடனே அவனை மேலே தூக்கிக் கப்பலிற் சேர்த்தற் பொருட்டு ஒரு கொளுக்கியை எடுத்தான். அது கண்ட அக்கப்பல் மீகாமன், அத்தலைவனைத் தடுத்து அவன் உண்மையான மனிதன் அல்லன். கடல்நீரில் உயிர்வாழும் மனிதனாவான்; அவனை நீங்கள் மேலிழுக்க முயன்றால், அவன் உங்களைக் கீழ் இழுத்து விடுவன் என்றான். அதுகேட்ட தலைவன், அக்கடல் மனிதனின் வடிவம் முழுமையும் பார்க்க வேண்டி ஒரு சிறுகோலை எடுத்து அவனது முதுகின்மேல் எறிந்தான். எறிந்தகோல் தன்மேல்படவே அவன் சினங் கொண்டான் போல் தன் இருகைகளையும் மடித்துக் கொண்டு தன் முகத்தைக் காட்டினான். அதன்பிறகு அவன் அக்கப்பலைச் சுற்றிச் சென்று அதன் பின்னணியத்திலுள்ள சுக்கானைத் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டான். அதுகண்ட அக்கப்பல் ஆட்கள், அவன் அச்சுக்கானைப் பழுது படுத்தி விடுவன் என்று அஞ்சி அதனை இறுக்கி வைக்க வேண்டியவர்களானார்கள். பின்னர் அக்கடல் மகன் அங் கிருந்து, மக்கள் நீந்துதல் போலவே நீந்திக்கொண்டு கப்பலின் முன்பக்கத்திற் போய், அதன் முன்னணியத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஓர் அழகிய பெண்ணுருவைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பால் அவன் அப் பெண்ணுருவைப் பற்றிக் கொள்ள விழைந்தான்போற் கடல்நீரினின்றும் மேல் கிளம்பினான். இவ்வளவும் அக்கப்பலில் இருந்தார் எல்லார் கண்ணுக்கும் எதிரே நிகழ்ந்தன.
திரும்பவும் அந்நீர்மகன் அக்கப்பலின் இடப்பக்கமாய்ப் போந்தனன். கப்பல் மேலிருந்தவர் ஒரு கயிற்றில் ஒரு கடல் மீனைக் கட்டி அதனை அவன் முன்னே தொங்க விட்டனர். அவன் அதனைப் பிடித்துப் பார்த்தனனேயன்றி வேறொன்னும் செய்திலன். பின்னர் அவன் அதனைவிட்டு நீந்திப் போய் அம்மரக்கலத்தின் பின்னணியத்திற்கு வந்தான்; வந்து மறுபடியும் சுக்கானைப் பற்றிக் கொண்டனன். அதுகண்ட மீகாமன் ஓர் இருப்பு வல்லயத்தை எடுத்து அதனை அவன் மீதெறிந்து அவனைக் கொல்லுதற்கு முனைந்தான். ஆனால், அவ்வல்லயமோ அக்கப்பல் கயிறுகளிடையே சிக்கிக் கொண்டமையால், அக்கடல் மகனது முதுகில் பட்டதேயன்றி அஃது அவனை ஊறுபடுத்தவில்லை; தன் முதுகிற்பட்டதும் அவன் திரும்பி முன்போலவே தனது முகத்தைக் காட்டினான். அதன்பிறகு, அவன் மறித்தும் முன்னணியத்திற்குப் போந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பெண்பாவையை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான். அதன்மேல் மீகாமனின் துணைவன் அவன் மேலெறிவதற்கு அவ்வல்லயத்தை எடுத்து வருகவென்று கூவினான். ஆனால், முன்னொருகால் அதே கடல் வழியில் அதே மரக்கலத்தில் மேலேறிப் போந்து தன்னைத் தானாகவே மடித்துக் கடலில் எறியப்பட்ட புதுமையான ஓர் உயிராய் அவன் இருக்கலாமோ என ஐயுற்று அஞ்சி, அத்துணைவன் அவ்வல்லயத்தால் அவனைக் கொல்லாமல், அதனால் மெல்ல அவனை முதுகிற் குத்தித் தள்ளினான். அங்ஙனம் குத்தவே, அக்கடல்மகன் முன்போலவே தன் முகத்தைச் சினந்து காட்டி, அக்கப்பலின் மேல் தட்டு வரையில் ஏறிவந்தான். வந்தவன் கப்பலாட்களில் இருவர் பிடித்திருந்த கயிறு ஒன்றைத் தானும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். அவ்விருவரும் அக்கயிற்றை அவன் கையினின்றும் வலிந்து இழுக்கவே, அந்நீர்மகனும் அக்கயிற்றொடு கூடவே கப்பலின் மேல் தட்டிற்கு இழுக்கப்பட்டனன். ஆனால், மேல்தட்டிற்கு வந்தவுடனே அவன் உடனே கடலில் குதித்துத் தொலைவில் நீந்திப் போயினன். மீண்டும் சிறிது நேரத்தில் அக்கடல்மகன் நீந்திக் கொண்டு கப்பலருகில் வந்தான். இப்போது அவன் தண்ணீருக்குமேல் கொப்பூழ் வரையில் உயர எழுந்தமையால், அம்மரக் கலத்திலிருந்தவர்கள் அவனது உடம்பின் மேற்பகுதியை நன்கு பார்க்கக் கூடியவர் களானார்கள். அவனது மார்பு சிறந்த ஒரு பெண்மகளின் மார்புபோற் பெரிதாய் அழகிய தாய் இருந்தது. ஆனால் அவன் முதுகைத் திருப்பிய போது ஆண்மகனாகவே காணப்பட்டான். அதன் பின்னர் அவன் அக்கப்பலைச் சுற்றி நீந்தி மறைந்து போய்விட்டான். அதற்குப் பிறகு அக்கப்பலி லுள்ளவர்கள் அவனைப் பார்க்கவில்லை.
காலை பத்து மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரையில் அக்கடல்மகன் அம்மரக்கலத்துடனேயே வந்தனன். அம்மரக்கலத்திருந்தவர்கள் அவனைக் கண்டு அச்சமுறா திருந்தால், அவனைக் கப்பலின் மேல்தட்டுமேற் பலகாலும் ஏற்றியிருக்கலாம். அவனதுடம்பின் நீளம் ஏறக்குறைய எட்டடி; தோலின் நிறம் பழுப்பு; அத்தோலின் மேற்செதிள் ஏதும் இல்லை; அவனுடைய நடையெல்லாம் மக்கள் நடைகளையே ஒத் திருந்தன; கண்கள் இருக்கவேண்டிய அளவுப்படியே அமைந்திருந்தன; வாய் சிறு அளவினது; மூக்குப் பெரிதாயும் தட்டையாயும் இருந்தது; பற்கள் மிகவும் வெண்மையாய்த் தோன்றின; மயிர் கறுப்பு; மோவாயிற் பாசிபடர்ந்தாற்போல் மயிர்கள் இருந்தன; மூக்கின் கீழ் ஒருவகையான மீசை; காதுகள் மக்களின் காதுகளைப் போலவே காணப்பட்டன; ஆனால், அவனுடைய கைவிரல் கால்விரல்களுக்கு இடையில் மட்டும் தாராப் பறவைகளுக்குள்ளது போல் செலு இருந்தது. சுருங்கச் சொல்லுங்கால் அவன் திருத்தமான அமைப்பு வாய்ந்த ஓர் ஆண்மகனாகவே காணப்பட்டான். இங்ஙனங் காணப்பட்ட அக்கடல் மகனைப் பற்றிய செய்தி முற்றும் உண்மையென்று அக்கப்பல் தலைவனும் மீகாமனும் அதில் வேலைசெய்த முப்பத்திரண்டு ஆட்களும் உறுதிமொழி புகன்றார்கள்.
26. உற்றுநோக்கி ஆராய்தல்
உலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறியவாய் இருப்பினும் பெரியவாய் இருப்பினும், அவைதம்மை உற்றுநோக்கி ஆராய்ந்தவர்களே அறிவில் பெரியராகிப், பல அரும்பெரும் புதுமைகளைக் கண்டறிந்து, நம்மனோர்க்கெல்லாம் அளப்பிலா நன்மைகளைச் செய்திருக்கின்றார்கள். எதனையும் உற்றுநோக்கி ஆராய்தலின்றி, ஆடு மாடுகளைப் போல் பொதுநோக்காய்ச் சென்றவர்கள் தாமும் அறிவு விளங்கப் பெற்றதில்லை; பிறர்க்கும் நன்மையாவன செய்ததில்லை. சோற்றுக்குக் கேடும், மண்ணுக்குப் பொறையுமாய் இருந்து அவர்கள் தம் வாழ்நாளை உண்டு உடுத்து உறங்கிக் கழித்தவர்களேயாவர். இலந்தை மரத்திலிருந்து நன்றாய்ப் பழுத்த பழங்கள் உதிர்ந்து கீழ் விழுவதனை எத்தனைகோடி மக்கள் முற்காலத்தும், பிற்காலத்தும் பார்த்திருக்கின்றார்கள்! அவர்களுள் எத்தனை பேர் அவைகள் ஏன் அங்ஙனம் கீழ் விழுகின்றன என்று ஆராய்ந்து பார்த்தவர்கள்? நியூட்டன் என்னும் ஒருவரைத் தவிர ஏனைக் கோடியான மக்கள் எவரும் அதன் உண்மையை அறியவில்லையே! ஏன்? உற்றுநோக்கி ஆய்ந்துபார்க்கும் அறிவும் முயற்சியும் அவரைத் தவிர மற்றையோர்க்கு இல்லாது போனமையாலன்றோ? மற்று, நியூட்டன் என்னும் பேராசிரியரோ இவ்உலகியற் பொருண்மைகளை எந்நேரமும் உற்று நோக்கியபடியாகவும், உற்றுநோக்கி ஆராய்ந்தபடியாக வுமே தமது அரிய வாழ்நாளை எந்நேரமும் பயன்படுத்தி வந்தார். ஒருகால் அவர் ஓர் இலந்தை மரத்தினடியில் அமர்ந் திருக்கையில், அதில் நன்றாய்ப் பழுத்திருந்த ஒரு பழம் காம்பு கழன்று அவரது காலண்டையின் கீழ் விழுந்தது. அதனைக் கண்ட அவர், உடனே, அஃதேன் அங்ஙனம் கீழ் விழலாயிற்று என ஆராயப் புகுந்தார். அந்நிகழ்ச்சியினைப் புல்லியதென்று விலக்கிவிடாமல், அல்லும்பகலும் அவர் அதனைப் பலவாற்றான் ஆராய்ந்து பார்க்க, மேலுள்ள பருப்பொருள்களைக் கீழே தன்கண் இழுத்துக்கொள்ளும் ஓர் ஆற்றல் இந்நிலவுலகத்திற்கு உண்டென்னும் அரும்பேருண்மையினை அவர் கண்டு கொண்டார். இந்நிலவுலக மாகிய பருப்பொருளுக்கு உள்ள இவ் இழுக்கு மாற்றலை அவர் கண்டறிந்த பிறகுதான், வான் வெளியிற் பந்துகள் போல் சுழலா நிற்கும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏழு உலகங்களும், அவற்றோடொத்த அளவிடப்படாத எண்ணிறந்த வான்மீன் மண்டிலங்களும் தத்தம் பருமனுக்குத் தக்க தொலைவில் நின்று ஒன்றையொன்று இழுத்தபடியாய் ஒன்றையொன்று சுற்றிச் செல்லும் வியப்பான உண்மை நிகழ்ச்சியினையும் இன்னும் இதுபோன்ற வேறு பல புதுமைகளையும் கண்டு வெளியிட்டார்.
இப்பேராசிரியரது அறிவு வரலாற்றை எண்ணிப் பார்க்குங்கால் பகுத்தறிவொடு கூடாத கட்பார்வை பயன் இலதாதலை உணர்கின்றனம் அல்லமோ? மக்களெல்லாரும் கண்ணினாற் பொருள்களையும் பொருள் நிகழ்ச்சிகளையும் பார்த்துண்டாகிய ஓரளவான பகுத்தறிவு கொண்டே வாழ்க்கை செலுத்தி வருகின்றனரென்பது உண்மையே. என்றாலும், ஒருபொருள் தன்மை மற்றொன்றின் வேறாதலும், அன்றி ஒன்று மற்றொன்றை ஒத்திருத்தலும், அவ்வாறெல்லாம் அமைந்த அமைப்புகளின் கீழ் அவை தம்மை அமைத்த முதற்பேரறிவு ஒன்று மிளிரும் பான்மையும் எல்லாம் கருத்து ஒருங்கி ஆராய்ந்து பார்ப்பவர் அம்மக்களுள் எத்தனை பேர் உளர்? ஒரோவொரு காலங்களில் ஒரோவொருவரே மிக அரியராய் ஆங்காங்குக் காணப்படுகின்றனர். ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் ஓர் எடைக்கல் அங்கும் இங்குமாய் ஊசலாடுவதை எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னும் பின்னும் பார்த்திருக்க வேண்டும்! அதிலிருந்து நாழிகை அறிவிக்கும் கடிகாரக் கருவியினை அமைக்கும் நுண்ணறிவு கலிலீயோ என்னும் வான்நூலாசிரியர்க்கன்றி வேறெவர்க்கேனும் தோன்றியது உண்டா? இல்லையே!
பின்னும் ஒரு கால் அவ்வான்நூலாசிரியர் தொலைவு நோக்கி என்னும் ஒரு வியத்தகு கண்ணாடியினை அமைக்கும் முறை கண்டறிந்ததும் மிகவும் வியக்கற்பாலதாயிருக்கின்றது. மூக்குக் கண்ணாடி செய்யும் ஒருவர், தொலைவிலுள்ள பொருள்களைக் கட்புலனுக்கு அருகே காட்டும் ஓர் அரிய கருவியினை அமைத்து அதனை ஒரு செல்வர்க்கு வழங்கிய செய்தியைக், கலிலீயோ என்னும் அப்பேரறிஞர் ஒரு நாள் தற்செயலாகக் கேள்வியுற்றார். கேட்ட அந்நாள் முதல் அவர் அங்ஙனம் தொலைவில் உள்ளவைகளை அருகில் காட்டும் கருவியின் அமைப்பைத் தொடர்பாக ஆராய்ந்து செய்து செய்து பார்த்துக் கடைசியாகத் தொலைநோக்கி (Telescope) என்னும் புதுமையான கருவியை அமைத்து முடித்தார். அக்கருவியானது அமைக்கப்பட்ட பிறகுதான், எத்தனையோ கோடி மைல் களுக்கு அப்பால் உள்ள ஞாயிறு, திங்கள் முதலான உலகங்களின் இயல்புகளையும், அவை தமக்கும் எட்டாத் தொலைவிலுள்ள ஏனை வான்மீன் மண்டிலங்களின் இயல்பு களையும் எல்லாம் அவரும் அவர் வழி வந்த மற்றை வான் நூலாசிரியர்களும் நன்கறிந்து கண்டு நம்போல்வார்க்கெல்லாம் அவ்வுண்மைகளை நன்குவிளக்கி வருகின்றனர். கலிலீயோ என்னும் அவ்வறிஞர் பெருமானுக்கு அத்துணை விழிப்பான கருத்தும் ஓயாத ஆராய்ச்சியறிவும் ஆராய்ந்தவைகளைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியும் இல்லாதிருந்தால், நாம் அம்மேலுலகங்களின் உண்மைகளை உணர்ந்து கொள்ளல் இயலுமோ? அவ்வுண்மைகளை அறியாமல் அவ்வுலகங் களைப் பற்றிய வெறுங் குருட்டு நம்பிக்கைகளிலும் பொய்க் கதைகளிலுமன்றோ நம் வாழ்நாளை நாம் விலங்கினங்களைப் போல் கழிக்க வேண்டும்?
இன்னும் பாருங்கள்! கூவல் ஆமை, குரை கடல் ஆமையைப் பார்த்துப் பழித்தது போலத் தாம் இருக்கும் நாட்டையும் தம் நாட்டிலுள்ள மக்களையும் தவிர வேற்று நாடுகளையும் அந்நாடுகளில் உள்ள மக்களையும் பற்றிச் சிறிதுமே உண்மை தெரியாமல் அந்நாடுகளையும் அம்
மக்களையும் இழித்துப் பேசுவோர் நம்மில் மிகச் சிலராகவே காணப்படுகின்றனர். தாமிருக்கும் ஊரில் தாம் உயிர் வாழ்வதற்கு வேண்டும் கருவிகள் கிடைக்கப் பெறாமல் வறுமைப்பட்டுத் துன்புறுவோரே அயல்நாடுகள் சென்று குடியேறக் காண்கின்றோம். இவ்வாறாக நம்மனோர் பெரும்பாலும் தாமிருக்கும் இடத்தைவிட்டுப் பெயராத சோம்பர்களாயும், உலகத்தின் பல பகுதிகளையும் கண்டு அறிவை அகலமாக்கும் விரிந்த நோக்கம் இல்லாதவர்களாயும் இருத்தலறிந்தே நம் பண்டை ஆசிரியர்கள் இந்திய இலங்கை நாடுகள் எங்கும் கடவுளை வணங்குவதற்கென்று மாபெருங் கோயில்கள் அமைத்து, அம்முகத்தால் ஓர் ஊரவர் வேறு ஓர் ஊர்சென்று அன்பிலும், அறிவிலும் விரிந்த நோக்கத்திலும் மேன்மேற் பெருகுதற்கு, வழிசெய்து வைத்தனர். வைத்தும், கடற்கப்பால் உள்ள நாடுகளுக்குக் கப்பலேறிச் சென்று ஆங்காங்குக் குடியேறக் கருதும் மனத்திட்பம் உடையார் நம்மில் இன்னும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். கப்பலேறிச் சென்றால் கடலுக்கு இரையாவோம் என்னும் அச்சம் அவர்கள் உள்ளத்திற் குடிகொண்டிருக்கின்றது! அதுவேயுமன்றிக், கப்பலேறிச் செல்வாரைத் தமது சாதிக்குட் சேர்க்கலாகாது என்னும் கட்டுப்பாடும் சில வகுப்பில் கடுமையாய் இருக்கின்றது! இதனாலேயே, நிலவளம், நீர்வளம், பொருள் வளம் நிரம்பிய பெரிய நாடுகளில் சென்று குடியேறி இனிது உயிர்வாழும் பெரும்பேற்றையும் உரிமையையும் இழந்து, நம் இந்து மக்களில் பெரும்பாலார் சிறிய சிறிய வெற்றூர்களிலிருந்து மிடிப்பட்ட குறுவாழ்க்கை செலுத்து கின்றனர்!
ஆனால், மேல்நாட்டவரான வெள்ளைக்கார நன்மக்களோ தாம் பிறந்த ஊர்களில் இருக்குமளவில் மன அமைதி பெறாத பெருநோக்கமும் பேரறிவும் பெருமுயற்சியும் பேரூக்கமும் அஞ்சா ஆண்மையும் வாய்ந்தவர்களாய் இந்நிலவுலக மெங்கும் உள்ள பெருநிலப் பரப்புகளை எல்லாம் கடல் தாண்டிக் கண்டு கைக்கொண்டு அவைதம்மையெல்லாம் தமக்கு நீங்கா உரிமைகளாக்கி இன்பவாழ்க்கை செலுத்தி வருகின்றனர். இவர்கள் இவ்வாறு இந்நில உலகமெங்கும் பரவி இனிது வாழ்வதற்கு, இவர்கள் முன்னோரிற் சிலர் அறிவும் ஆராய்ச்சியும் எதனையும் உற்று நோக்கி எண்ணுதலும் அஞ்சா மன உறுதியும் விடாமுயற்சியும் வாய்ந்திருந்தமையே காரண மாகும். தாமிருக்கும் ஊரையும் அதற்கு அருகிலுள்ள வேறு சில ஊர்களையும் அன்றிச் சேய்மையிலுள்ளவைகளைச் சிறிதும் அறியாதவர்களாய் நம் இந்துமக்கள் மிடிப்பட்ட வாழ்க்கையில் இருக்க, மேல்நாட்டவரின் முன்னோர்களில் ஒருவரான கொலம்பசு என்பவரோ தாமிருந்த பெயின் தேயத்தை
யடுத்த பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உளதென்றறிந்து, மூவாயிரத்தைந்நூறு மைலுக்கு மேல் அதனைக் கடந்து சென்று, கி.பி. 1492-ம் ஆண்டில் அமெரிக்க தேயத்தைக் கண்டுபிடித்தார். அப்பெரும்புறக் கடலுக்கும் அப்பால் ஒரு பெருந்தேயம் உண்டென்பதைக் கண்ட அவரது ஆராய்ச்சி அறிவின் தெய்வத்தன்மையை என்னென்றுரைப்போம்! அதன் உண்மையை ஆராய்ந்து கண்ட அளவில் இராமல், தம் நாட்டு அரசற்கும் அரசிக்கும் அதனை மெய்ப்படுத்திக் காட்டி, மூன்று மரக்கலன்களும் நூற்றிருபஃது ஆட்களும் தாம் அக்கடல் கடந்து செல்லுதற்கு உதவியாகத் தம் அரசர்பாற் பெற்றுக்கொண்டு, முன் எவருமே சென்றறியாத அப்பேராழியில் வழிகண்டு சென்ற அவர்தம் அறிவாற்றலையும் அஞ்சா ஆண்மையினையும் எண்ணுந்தோறும் எம் நெஞ்சம் அளவிலடங்கா இறும்பூதும் திகைப்பும் அடைகின்றது!
இங்ஙனம் அப்பெரும்பௌவங் கடந்து சென்ற கொலம்பசுப் பெரியாரின் பேரறிவின் திறம், அவர்தாம் மேற்கொண்டு சென்ற அவ்வருஞ்செயலை எவ்வாறு பயன்
பெறச் செய்ததென்பதும் நினைவுகூரற்பாற்று. பிறர்க்கு வழிதிசை தெரியாப் பெருவெள்ளக் காடான அப்பேராழியினூடே அவர் எவ்வாறு வழிதெரிந்து சென்றார் என்பதை நினைத்தால் எவர்க்குத்தான் வியப்பெழாது! எவர்க்குத்தான் நெஞ்சம் திகில் கொளாது! இவ்வளவு தெரிந்து சென்றதே ஒரு தெய்வத்தன்மை! இதனினும் சிறந்த ஒரு தெய்வ அறிவும் இவரை அந்நடுக்கடலில் காப்பாற்றியது. இவர் ஐந்து கிழமை களாக அல்லது முப்பத்தைந்து நாட்களாக அப்பெருநீரில் அம்மூன்று கப்பலையும் கொண்டு செல்கின்றார். வழிதுறை ஒன்றும் தெரியவில்லை! நாற்புறமும் சூழ ஒரே வெள்ளக்காடு! தேடிச் செல்லும் தேயம் சிறிதும் தென்படவில்லை! அம்மூன்று மரக்கலங்களிலும் அவருக்கு உதவியாய்ச் சென்ற ஆட்க ளெல்லாரும் இனி நிலத்தைக் காண்போமா என்று ஏங்கி நம்பிக்கை இழந்தார்கள். தம்மை அப்பெருநீருக்கு இரை யாக்கவே அவர் கொணர்ந்தாரென எண்ணி, எல்லாரும் அவரைத் துன்புறுத்தத் தொடங்கிவிட்டனர்!
அந்நேரத்தில், எல்லை சிறிதும் தெரியாத அப்பெருநீர்ப் பரப்பில், தமக்கு உதவியாய் வந்த துணைவர்களே நம்பிக்கையற்று மனம் கலங்கித் தம்மைத் துன்புறுத்துவராயின் அப்போது எத்தகைய நெஞ்சழுத்தம் உடையாரும் தம்நெஞ்சம் தடுமாறாதிருத்தல் ஏலுமோ? ஏலாதே; ஆனாலும், கொலம்பசுப் பெரியார் அந்நேரத்திலும் உளம் சிறிதும் தடுமாறிற்றிலர்! தமது கப்பலுக்கருகே கடற்பாசிகள் மிதந்து செல்வதை அவர் உன்னிப்பாய்ப் பார்த்து, இதோ! நாம் தேடிச் செல்லும் தேயம் அண்மையில் வந்துவிட்டது. அஞ்சாதீர்கள்! என்று அவர்கள் எல்லார்க்கும் ஆறுதல் மொழிந்தார். அவர் மொழிந்த வண்ணமே சில நாட்களில் அமெரிக்க தேயக்கரை அம்மரக்கலங்களிற் சென்றார் எல்லார் கண்களுக்கும் புலப்படலாயிற்று! அப்பெருநீர்ப் பரவையில் ஆழாது தப்பிய அவரெல்லாம் உவகைக் கடலுள் ஆழ்ந்தனர்! அமெரிக்கக் கரையோரங்களில் உள்ள மலைப் பாறைகளில் ஒட்டி வளர்ந்த கடற்பாசி மிதந்து வருதலைக்கண்டு, அத்தேயத்தின் அருகே தாம் வந்துவிட்டதைக் கொலம்பசுப் பெரியார் அறிந்த அறிவு, அவருடன் சென்ற ஏனைமக்கட்கு இல்லாது போயிற்றே! இதனால் எத்துணைச் சிறிய, எளிய, புல்லிய பொருளையும் புறக்கணித்து விடாமல், அதனையும் அதனதன் தொடர்பையும் உற்றுநோக்கி ஆராயும் அறிவுடையாரே எல்லா வகையிலும் சிறந்தவராவர் என்றறிதல் வேண்டும்.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (குறள் 430)
27. ஓநாயும் கொக்கும்
ஓர் ஓநாயானது தன் தொண்டைக்குக் குறுக்கே மாட்டிக் கொண்ட ஒரு எலும்பை எடுத்து விடும்படி, அங்கும் இங்குமாய் மிகவும் துன்புற்று ஓடித் தான் எதிர்ப்பட்ட ஒவ்வொரு விலங்கையும் கெஞ்சிக் கேட்டது. அங்ஙனம் கெஞ்சிக் கேட்கும்போது எல்லாம் தனக்கு அவ்வுதவியைச் செய்யும் உயிர்க்குத் தான் தன்னாலான கைம்மாறு ஒன்றும் செய்வதாகக் குறிப்பித்தது. கடைசியாக ஒரு கொக்கு அதன் துன்பத்தையும், வேண்டுகோளையும் சொல்லுறுதியையும் கண்டு மனம் இரங்கித், தனது நீண்ட கழுத்தோடு கூடிய அலகை அவ் ஓநாயின் தொண்டைக்குள் துணிவாக நுழைத்து, அங்கே மாட்டிக் கொண்டிருந்த எலும்பை வெளியே இழுத்துவிட்டது. அவ்வாறு செய்த பிறகு அது தனக்கு ஓநாய் கைம்மாறாகத் தருதற்கு இசைந்ததனைத் தரும்படி அடக்க மாய்க் கேட்டது. உடனே அவ் ஓநாய் பல்லை இளித்துக் கொண்டு, நன்றிகெட்ட உயிரே! ஓர் ஓநாயின் வாய்க்குள்ளே நுழைந்த உனது கழுத்துத் துண்டாக்கப்படாமல் நல்லபடியாய் வெளியே வந்ததே போதாதோ! இதனிலும் சிறந்த கைம்மா றொன்றும் உனக்கு வேண்டுமோ! என்று சினத்துடன் கூறியது.
தீயவர்கட்கு உதவி செய்பவர்கள், அவ்வுதவிக்குக் கைம்மாறாக அவராற் பழிக்கப்படுவரே அன்றி வேறு எதிருதவி ஒன்றும் பெறார்.
28. ஒரு பருந்தும் சில புறாக்களும்
சில புறாக்கள் நெடுநாளாக ஒரு பருந்துக்கு அஞ்சியபடியாய்க் காலங்கழித்து வந்தன. அவை தாம் உறையும் கூட்டை விட்டுத் தொலைவில் செல்லாமல் அங்கு அருகிலேயே மேய்ந்து கொண்டு விழிப்பாய் இருந்தமையால், அவை அப்பருந்தின் பிடியுள் அகப்படாமல் உயிர்தப்பி வாழ்ந்தன. அப்பருந்தோ தனது விருப்பம் நிறைவேறாமை கண்டு, அவற்றைத் தனக்கு இரையாக்கிக் கொள்ள ஒரு சூழ்ச்சி செய்து அப்புறாக்களை நோக்கி, நீங்கள் ஏன் இவ்வாறு எந்நேரமும் கவலையிலும் கலக்கத்திலும் நாட்கழித்து வருகின்றீர்கள்? நீங்கள் என்னை உங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்டால், எத்தகைய இடையூறும் உங்களுக்கு வராமல் உங்களைப் பாதுகாப்பேன், என மொழிந்தது. அப்பருந்தின் சொற்களை நம்பிய அப்புறாக்கள், அதனைத் தமக்கு அவ்வாறே அரசனாக்கிக் கொண்டன. அங்ஙனம் அரசனான பிறகு அப்பருந்து ஒருமிக்க அவைகளை இரையாக்கிக் கொள்ளாமல், நாடோறும் ஒவ்வொரு புறாவாகப் பிடித்துத் தின்று வந்தது. நாளடைவில் எல்லாப் புறாக்களும் இங்ஙனம் அதற்கு இரையாகிப் போகக் கடைப்படியாக எஞ்சிநின்ற புறவு அதற்கு இரையாகிப் போகும் தருவாயில், ஆ! நாங்கள் செய்த ஏற்பாட்டுக்குத் தக்கது எங்கட்குக் கிடைத்தது! என்று சொல்லி உயிர் துறந்தது.
ஆகவே, கொடியோன் ஒருவனைத் தாமாகவே தெரிந்தெடுத்து அவற்குப் பெருவல்லமையைத் தந்து வைப்பவர்கள், பிறகு அவனால் துன்புறுத்தப்பட்டால், அதற்காக அவர்கள் வியப்படைதல் எதற்கு?
29. இரண்டு பண்டப் பைகள்
ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்கவிட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்டங்களே நிறைந்திருக்கின்றன. அவ்விரண்டில் அவன் மார்பின் முன்னே தொங்கும் பையில் பிறருடைய குற்றங்களே நிரம்பியுள்ளன. அவற்குப் பின்னே அவன் முதுகில் தொங்கும் பையிலே, அவனுடைய குற்றங்களே நிறைந்திருக் கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கண்பார்வை உடையராயும், தம்முடைய குற்றங் களைப் பாராக் கண்ணில் குருடராயும் இருக்கின்றனர்.
30. குடியானவனும் பாம்பும்
மழைக்காலத்தொருநாள் ஒரு குடியானவன் தன் வீட்டுக்குத் திரும்பி வருகையில் வேலியருகே ஒரு பாம்பு குளிரால் விறைத்துக் குற்றுயிருங் கொலையுயிருமாய்க் கிடத்
தலைக் கண்டான். கண்டவன் அதன்பால் இரக்கம் உடையோனாய், அதனையெடுத்துத் தன் மார்பில் அணைத்தபடியாய்த் தன் வீட்டுக்குக் கொணர்ந்து, அடுப்பருகில் வைத்து அதற்குச் சூடேற்றினான். உடம்பில் சூடேறியவுடன் அது சுறுசுறுப்பு வாய்ந்ததாகி,அக்குடிசை வீட்டிலிருந்த அவன் பிள்ளைகள் மேல் சீறிச் செல்லலாயிற்று. அதுகண்ட அக்
குடியானவன் அந்நச்சுயிருக்குத் தான் இரங்கியது தப்பாதல் உணர்ந்து, உடனே ஒரு தடியால் அதனை அடித்துக் கொன்றான்.
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
31. உறை நீர்க்கட்டிமேல் உடல் பருத்த மாது
உருசியா தேயத்தின் வடபகுதிகளில் பனியின் கடுமை மிகுதியாய் உண்டு. அதனால் அந்நாட்டின் நிலமும் ஏரியுமெல்லாம் பனி நிறைந்து இறுகி இருக்கும். பனிக்கட்டி நிறைந்த நிலமும் ஏரியும் கெட்டியாய் வழுவழுப்பாக இருத்தலால், அவற்றின்மேல் அந்நாட்டு மாந்தர்கள் சறுக்கி நடக்கும் விளையாட்டு விளையாடுதல் வழக்கம். ஒருகால் உடல்பருத்த மாது ஒருத்தி ஓர் ஏரியின் தண்ணீர் உறைந்து கெட்டியாகி அதன் மேற்பரப்பு வழுவழுப்பாய் இருக்கப் பார்த்து, அதன்மேற் சறுக்கி விளையாடச் சென்றாள். அங்ஙனம் அவள் விளையாடத் தொடங்கிய சிறிது நேரத்திலெல்லாம் கால்வழுக்கி அதன்மேற் பொதீரென வீழ்ந்தாள். வீழ்ந்தவள் தன் உடலின் சுமையால் எழுந்து நிற்கமாட்டாமல், அப்பனிப்பரப்பின் மீதே துயரத்தோடு உட்கார்ந்திருந்தனள். அப்போது அவள் பக்கமாய் அங்கே சறுக்கி விளையாடிக் கொண்டு வந்த ஒருவன் அவளைக் கண்டு இறங்கி, அவள் எழுந்திருக்குமாறு தூக்கி உதவி செய்து, அம்மே, இதுதான் முதன்முதலாக நீங்கள் சறுக்கி விளையாடியது போலும்! எனக் கூறினான். அதற்கு அம்மாது, இல்லை, இது முதன்முறை அன்று; இதுதான் எனக்குக் கடைசிமுறை! என்று மொழிந்து அவருக்கு நன்றி செலுத்திப் போனாள்.
32. பன்றி எண்ணிக்கை
இருபது பன்றிகள் வைத்து வளர்த்து வந்த ஓர் ஒட்டன் ஒருநாள் தன்கீழ் வேலைபார்க்கும் ஒருவனையழைத்துப், பன்றிக் குடிசையில் பன்றிகள் இருபதும் இருக்கின்றனவா, என்று பார்த்துவரும்படி ஏவினான். அவ்ஏவலன் அங்ஙனமே சென்று, திரும்பி முகத்திலே திகைப்புக்குறி தோன்றத் தன் தலைவனிடம் வந்தான். வந்தவனைத் தலைவன், நல்லது, பன்றிகள் எல்லாம் தவறாமல் இருக்கின்றனவா? என வினவினான். ஆ! ஐயா, பத்தொன்பது பன்றிகளைப் பிசகாமல் எண்ணினேன்; ஆனால், ஓர் இளம்பன்றி மிக விரைந்து ஓடினமையால், அதனை யான் எண்ணக் கூடவில்லை என்றான். அச்சொற் கேட்ட தலைவன் அவ் ஏவலனது மடமையைப் பார்த்து நகை புரிந்தான்.
33. திறமையுள்ள நாய்
ஒருகால் ஒரு செல்வர் தாம் வளர்க்கும் நாயைத் தமது பக்கத்தில் வைத்துக்கொண்டு தமது குதிரை வண்டியில் ஒரு கடைக்குச் சென்றார். கடையருகே சென்றதும், வண்டியை நிறுத்தி, நாயை வண்டியிலேயே இருக்கும்படி செய்துவிட்டு அவர் அக்கடையினுள்ளே நுழைந்தார். அப்போது குதிரை தெருவில் எதனையோ கண்டு மிரண்டு, வண்டியை இழுத்துக் கொண்டு நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயிற்று. அதன் கடிவாள வார் தெருநெடுகக் கூடவே இழுப்புண்டது. வண்டிக் குள்ளிருந்த நாயோ தன் வண்டிக்குதிரை தலைகால் தெரியாமல் ஓடுதலைக் கண்டதும் திடுமெனக் கீழே குதித்து, நிலத்தே இழுபட்டுச் செல்லும் கடிவாள வாரைத் தனது வாயினாற் கௌவிப் பிடித்துக் கொண்டது. குதிரை சிறிது வழி அந்நாயையும் இழுத்துச் சென்றதாயினும், நாய் தான் கௌவிய கடிவாள வாரை விடாப்பிடியாய்ப் பிடித்து இழுத்தமையால் குதிரை கடைசியாக நிற்க வேண்டுவதாயிற்று. இங்ஙனம், அந்நாய் செய்யாதிருந்தால், அக்குதிரை தான் வெருண்டோடும் ஓட்டத்தால் தான் இழுத்துச் செல்லும் வண்டியை எங்காயினும் மோதிச் சுக்கல்சுக்கலாய் உடைத்திருக்கும்; தானும் எங்காயினும் தடுமாறி விழுந்து கால் முறிந்திருக்கும். இடர்ப்பட்ட நேரத்தில் தன் நாய் செய்த இப்பேருதவியை நினைந்து நினைந்து வியந்து அதன் தலைவன் அதனைப் பெரிதும் பாராட்டினான்.
34. பழக்கத்தின் வலிவு
இவ் இந்திய நாட்டின் ஒரு கடற்கரைப் பக்கத்து மேட்டுக் குப்பத்தில் உயிர்வாழும் கரையாளப்பெண்கள் சிலர் தாம் கொண்டுபோன மீன்களை ஓர் அங்காடியில் விற்பனை செய்து விட்டுத், தமது இல்லம் நோக்கி மாலைப்பொழுதில் திரும்பி வருகையில், இடியும் காற்றும் மழையும் வந்துவிட்டன. நடு வழியில் இவ்வாறு நேரவே, அவர்கள் அவ்வழியின் ஓரமாய் இருந்த ஒரு பூந்தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அத்தோட்டக்காரன் அப்பெண்கள் மழையிலும் காற்றிலும் அகப்பட்டு வருந்துதல் கண்டு கொஞ்சம் இரங்கித், தனது ஓலை வீட்டினுள்ளே நறுமணம் கமழும் மலர்கள் குவிக்கப்பட்டுள்ள ஓர் அறையின் ஒரு பக்கத்தே அவர்கள் தங்கியிருக்கும்படி உதவி செய்தான். சுமைசுமந்து நடந்தமையால் அலுப்புற்ற அச்செம்படவ மாதர்கள் உறங்குவதற்காகக் கீழே படுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அருகில் குவிக்கப்பட்டிருந்த மலர்க் குவியலிலிருந்து எழுந்த மணம் அவர்களது மூக்குக்குப் பிடிக்காமையால் அவர்கள் தூங்கக் கூடவில்லை. சிறிது நேரம் வரையில் பார்த்துவிட்டுப், பிறகு அப்பெண்கள் முடைநாற்றம் நாறும் தம்முடைய மீன் கூடை களைக் கொணர்ந்து தமது மூக்கருகே வைத்துக் கொண்டு நன்றாய்க் குறட்டை விட்டுத் தூங்கலாயினர். பழக்கம் கொடிய தென்பது இதனால் நன்கு புலப்படுகின்றதன்றோ?
35. அருளுடை ஊழியம்
ஏழைப் பெற்றோர்களுக்குப் பிள்ளையாய் பிறந்த பாரி என்னும் பிரஞ்சுக்கார இளைஞர், பாரிசு மாநகரத்திலுள்ள மருத்துவக்கழகத்தில் கலைபயின்று தேர்ந்தபின் ஓர் ஏனாதி மருத்துவரின் கீழ் மருத்துவ ஊழியம் செய்ய அமர்ந்தனர். அமர்ந்து சிறிது காலம் சென்ற பின், தனது நாட்டுப் படைஞர்களுக்குப் புண் மருத்துவம் பார்க்கும் தொழிலில் அவர் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில், அதாவது அவர் உயிர்வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில், வெடிகுண்டுபட்ட படைஞரின் புண்களுக்குக் கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைவிட்டு, அவற்றை ஆற்றுவது வழக்கமாய் நடந்து வந்தது. முன்னமே வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்டு ஆற்றொணாத் துயர் உழக்கும் படைஞரின் காயங்
களுக்குக் கொதிக்கக் காய்ச்சிய எண்ணெயைச் சுடச்சுடச் சொரிந்தால், அது பின்னும் அவர்கட்கு எவ்வளவு கொடிய துன்பத்தைத் தந்திருக்கும்! இத்தகைய அருள் இல்லாக் கொடிய மருத்துவத்தைத் தமது கண்ணெதிரே கண்ட பாரி என்னும் அவ்விளைஞர்க்கு நெஞ்சம் நீராய் உருகியது! இக்கொடிய முறையை அறவே ஒழித்துவிட்டுப், படைஞர்க்குத் துன்பம் பயவாமல் செய்யும் மருந்து முறை எதுவென்று ஆராய்வதில் அவரது உள்ளம் இரவும் பகலும் ஈடுபட்டது. இரக்க நெஞ்சம் வாய்ந்தாரது எண்ணம் நிறை வேறுதற்கு இறைவனே துணை நிற்பன். ஒருநாள் வழக்கம்போலப் படைஞரின் புண்களுக்கு இடும்பொருட்டு எடுத்துக் காய்ச்சிய எண்ணெய் எல்லார்க்கும் போதாமல் ஒரு சிலர்க்கே போதுமாய் இருந்தது. அதனால் மற்றைப் பலரின் காயங்கள் எண்ணெய் இடாமலே விடப் பட்டன. அங்ஙனம் எண்ணெய் இன்றி விடப்பட்டவர் களைப் பாரி மருத்துவர் அடுத்த நாட்சென்று உற்று நோக்குகையில் எண்ணெய் இடப்பட்டவர்களை விட அஃது இடப்படாதவர் களே நல்ல நிலையில் இருக்கக் கண்டார். அது முதல் கொதிக்கும் எண்ணெயை இட்டுக் கட்டும் அக்கொடிய முறையை ஒழித்து, வேறு இனிய வகைகளால் ஆற்றும் முறைகளைக் கையாண்டு, அவர் படைஞரின் புண்களை விரைவில் இனிதாக ஆற்றியதுடன், தாம் கையாண்ட இனிய புதுமுறைகளை விளக்கியும் அவர் அரியதொரு நூல் இயற்றினார்.
இன்னும் அக்காலத்தில் கைகால் முறிந்துபோன படைஞர்க்கு, முறிந்த உறுப்புகளைத் தறித்தபின், மிச்சமாய் நிற்கும் உறுப்பின் முனைகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை வைத்து, அவற்றைத் தீய்க்கும் அறக்கொடிய மருத்துவமும் வழக்கமாய் நடந்து வந்தது! உயிரைப் பெருந்துன்பத்தில் படுப்பிக்கும் இக்கொடிய முறையைக் கேட்பினும் எம் குலை நடுங்குகின்றது! அதனை நேரிருந்து கண்ட மெல்லிய உள்ளத்தினரான பாரி மருத்துவர்க்கு அக்கொடுமை எவ்வளவு துடிதுடிப்பினைத் தந்திருக்கும்! இக்கொடிய முறையினையும் அவர் உடனே நிறுத்தித், தறிபட்டு எச்சமாய் நிற்கும் உறுப்புகளின் இரத்த நரம்புகளிலிருந்து இரத்தம் வெளியே பெருகி விழாதபடி அவைகளைப் பட்டுக்கயிறு கொண்டு கட்டி மருந்திட்டு இனிதாக விரைவில் ஆற்றினார்.
இன்னும் ஒரு கால் ஒரு மறவர் தமது உடம்பிற் பத்து இடங்களில் கத்தி வெட்டுப் பட்டு உணர்விழந்து கிடந்தார். அவரைக் கண்ட பிறர் அவர் இறந்து போனாரெனவே கருதி, அவரைப் புதைத்து விடுவதற்கு வேண்டும் ஏற்பாடுகளெல்லாம் செய்யலாயினர். ஆனால், அம்மறவரைச் சென்று உற்றுநோக்கிய பாரி மருத்துவரோ, அவர்க்கு உயிர் போகவில்லை என உறுதிமொழி புகன்று, சிறிது நேரத்தில் எல்லாம் அவரை உயிர்ப்பித்து, அவருடைய வெட்டுக் காயங்களையும் சில நாட்களில் ஆற்றினார்.
இங்ஙனம் எல்லாம் பாரி மருத்துவர் தமக்குச் செய்து வந்த அருள் மருத்துவ முறைகளுக்காக நன்றி செலுத்த விழைந்த அப்படைஞர்கள் தாந் தாமும் மனம் உவந்து கொடுத்த பொருளைத் திரட்டித், திரட்டிய பெரும் பொருளை அவர்க்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.
36. கோட்டையைக் காத்த கோதை
கனடா நாட்டின் பிரஞ்சுக்காரர்க்கு உரிய வேர்ச்சேரி என்னும் கோட்டையை 1690-ஆம் ஆண்டில் இருக்கோய வகுப்பினர் சிலர் வந்து தாக்கலாயினர். தாக்கவந்த அவர்கள் ஏதோர் அரவமும் செய்யாமல் மதின்மேல் ஏறி எளிதிலே உட்குதித்து விடுதற்கு ஏற்பாடு செய்துகொண்டு, அதன்படியே மதில்மேல் ஏறினர். ஏறியதும், உள்ளிருந்து போந்த துப்பாக்கிக் குண்டுகளைக் கண்டு, அவர்கள் வியப்புற்று, மதிலைக் கடக்கமாட்டாதவர்களாய்ப் பின்னடைந்தனர். திரும்பவும் அவர்கள் அம்மதின்மேற் செல்லத், திரும்பவும் போந்த துப்பாக்கிக் குண்டுகளின் முன் நிற்கமாட்டாதவர்களாய்த், திரும்பவும் பின்முதுகு காட்டினர். அக்கோட்டையின் அகத்தே எவ்விடத்துங் காணப்பட்ட மாது ஒருத்தியைத் தவிர வேறுபடைஞர் ஒருவரும் அதனுட் காணப்படாமையும், அங்ஙனமிருந்தும் பலமுகமாகத் துப்பாக்கிக் குண்டுகள் வந்து வீழ்ந்தமையும் நினைந்து அவர்கள் பெரிதும் இறும்பூதுற்றனர். பெண்பாலரைத் தவிர வேறு எவராலும் அக்கோட்டை காக்கப்படவில்லை என்னும் செய்தியே, அவ் இருக்கோய வகுப்பினர் அடுத்தடுத்துப் படைமேற் கொண்டு வந்து அக்கோட்டையைத் தாக்கும்படி செய்தது. தாக்கியும் என்! தாக்கிய ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியடைந்தனரே அன்றிச் சிறிதும் வெற்றி பெற்றிலர். கடைசியாக அவர்கள் இரண்டு நாள் வரையில் அக்கோட்டையை முற்றுகையிட்டும், அதனைப் பிடித்துக் கொள்ள மாட்டாதவர்களாய்ப் பின் வாங்கியே போயினர். இவ்வாறு மறித்து மறித்தும் வந்து அக்கோட்டையைத் தாக்கிய அவர்களை உட்புகவிடாமல் உள்நின்று எதிர்த்து முதுகுகாட்டி ஓடச் செய்தவள் கோதை ஒருத்தியே ஆவாள். இந்த அம்மை, ஒரு முழுப்படையின் துணை கொண்டவள் போல் அஞ்சா ஆண்மையுடனும் மனத்திட்பத்துடனும் தான் ஒருத்தியே அக்கோட்டையின் பல விடங்களிலும் தோன்றித்தோன்றி நின்று பகைவரை மிகவும் அச்சுறுத்தினள்.
மறுபடியும் இரண்டாண்டுகள் கழித்து அவ் இருக்கோய மக்கள் அக்கோட்டையைத் தகர்க்க வந்தபோது, அக்கோட்டைத் தலைவரின் மகளான பதினான்கு ஆண்டுடைய சிறுமி ஒருத்தியே, அவர்கள் உள்நுழைய ஓர் அடி எடுத்து வைக்கும் நேரத்திற்குள் ஓடிச் சென்று அதன் வாயிற்கதவைச் சாத்திச் செவ்வையாக அடைத்து வைத்தவள் ஆவாள். இந்தச் சிறுமியும் ஒரு மறவரும் அல்லாமல் பிறர் எவரும் அதனை அப்போது காத்தற்கு அங்கிலர். அங்ஙனமிருந்தும், அச்சிறுமி வேளைக்கு வேளை தன் உடையை மாற்றி, அக் கோட்டையினுள் பல முகத்தும் சுற்றிச் சுற்றிச் சென்று, பகைவர்கள் மேல் துப்பாக்கிக் குண்டுகளை நேரமும் குறியும் தவறாமல் ஏவி வந்தமையால், உள்ளே ஒரு பெரும்படை யிருந்து தம்மை எதிர்ப்பதாகவே கருதி, அப்பகைவர்கள் நெஞ்சம் தளர்ந்து வெற்றி பெறாமல் மறித்துத் திரும்பிப் போயினர். இங்ஙனமாக அச்சிறுமி செய்த செயற்கருஞ் செயலன்றோ, அவ்அரணத்தைக் காப்பாற்றியது!
37. மறைபொருட் காட்சி
1725-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசிய மாது ஒருத்தியைப் பற்றிய செய்தியானது, இயற்கைப் பொருள் அறிஞர்க்குப் பெருந்திகைப்பையும் பெருங்குழப்பத்தையும் உண்டு பண்ணியது. அம்மாதுக்கு மறைந்துள்ள பொருள்களைக் கண்டறிந்து உரைக்கும் ஆற்றல் நிரம்ப உள்ளதென்னும் செய்தி எங்கும் பரவியது. அந்த அம்மை வேறோர் உதவியும் நாடாது தன் கண்களால் நிலத்தை உற்றுநோக்கிய அளவில், அந் நிலத்தின் கீழ் உள்ள மண்ணடுக்குகளையும், அவை ஒன்றுக் கொன்று எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதையும் சிறிதும் பிழைபடாமற் சொல்லிவிடுவள். அது மட்டுமே அன்றி, அவள் ஒருவரது உடம்பை உற்றுப் பார்ப்பாளாயின், அவ் வுடம்புக்குள் ஓடும் இரத்தத்தையும், இரத்த நரம்புகளையும், எலும்புகளையும், உள்ளே அங்கங்கு நோய்ப்பட்டிருக்கும் இடங்களையும் தெளிவாய்க் கண்டு, அவைகளைப் பிறர்க்கு நன்கெடுத்துரைப்பள். கருக்கொண்டிருக்கும் மங்கையர் அவள்பால் சென்று, தமக்குப் பிறக்கும் பிள்ளை ஆணோ பெண்ணோ என்பதைத் திட்டமாய்த் தெரிந்துகொள்வர்; பிறந்த பிள்ளையும், அவள் முன் அறிந்து சொன்னபடியேதான் இருக்கும்.
அஞ்ஞான்றிருந்த போர்த்துக்கல் தேய அரசர் தாம் புதிதாகக் கட்டுவித்த அரண்மனைக்கு வேண்டிய அளவு நல்ல தண்ணீர் பெறுதற்பொருட்டுப் பல இடங்களை அகழ்ந்து பார்த்தும் தண்ணீர் கிடைத்திலது. அதனால் அவர் உள்ளங் கலங்கி வருந்துகையில், அறிந்தார் சிலர் சொல்லக் கேட்டு, மேற்குறிப்பிட்ட மாதைத் தம்பால் வருவித்துத், தமதரண் மனைக்கு வேண்டுமான செழும் புனல் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுக என வேண்ட, அவளும் மிகுந்த தீம்புனல் ஊறும் ஒரு நீர்ஊற்று நிலத்தின் கீழ் இருக்கும் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினாள். அவ்விடத்தை உடனே அவ்வரசர் அகழ்விக்க, மிகுதியான இனியநீர் கீழிருந்து சுரந்து மேலே பெருகியது. அதுகண்ட அரசர் பெருங்களிப்புற்று அவ்வம்மைக்குப் பெருஞ்சிறப்புகள் செய்து சமயப் பட்டம் அளித்து உதவிச் சம்பளமும் வழங்கினார்.
அவளது வியத்தகும் ஆற்றலை நேரே கண்டறிந்த அஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார் பெரிதும் திகைத்து, அவ்வாற்றலின் உண்மையைத் தெரிதல் வேண்டி, முன்னுள்ளோர் நூல்களை எல்லாம் ஆராயத் துவங்கினர். ஆராய்ந்து கடைசியாக இயற்கைப் பொருள் ஆராய்ச்சியில் பல பெரு நுட்பங்களைக் கண்டறிந்து உலகத்திற்குப் பேருதவி செய்தவராகிய ஊசினர் (Huygens) என்பார் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைத் தெரிந்தெடுத்தனர். போரிலிருந்து சிறையாகப் பிடித்துக் கொணர்ந்து அந்துவர்ப்பு (Antwerp) நகரின் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒருவர், எவ்வளவு தடிப்பான மட்டிப் பொருள்களையும் உற்றுநோக்கி, அவை செந்நிறம் வாய்ந்திலவாயின், அவற்றால் மறைக்கப்பட்ட பண்டங் களைத் தெளிவாகக் கண்டறிந்துரைக்கும் அறிவாற்றல் உடையராயிருந்தனர் என்னும் வியக்கத்தக்க வரலாறு அக்கலைஞர் வரைந்த அக்கடிதத்திற் குறிக்கப்பட்டிருந்தது. அதனைத் தெரிந்த பிறகுதான் அவ்வியற் பொருளறிஞர் உள்ளம் அமைதியுற்றது.
மேற்சொன்ன போர்த்துகேசிய மாது தமக்குள்ள அவ்வறிவாற்றலைப் பயன்படுத்த நேரும் காலங்களில் எல்லாம் ஏதோர் உணவும் உட்கொள்ளாமல் கடும் பட்டினி கிடப்பர்; ஏனென்றால் தமது வயிற்றில் செரியாக்குணம் சிறிதிருப்பினும் தமக்குள்ள அவ்வியத்தகும் ஆற்றல் மங்கிப் போதலை அவர் நன்குணர்ந்து இருந்தனர்.
எனவே, நுண்ணறிவை வளர்க்க வேண்டும் சிறார்கள் கண்ட கண்ட உணவுப் பண்டங்களை எல்லாம் வேளையும் நேரமும் அறியாமல் உட்கொள்வது எவ்வளவு பிசகானது என்பது இனிது புலப்படுகின்றதன்றோ? ஆதலால், சிறாரும் அவர்தம் பெற்றோரும் உணவுப் பண்டங்களை மிகுதியாக அருந்தாமல் விழிப்பாய் இருத்தலுடன், இடையிடையே பட்டினி கிடக்கவும் பழகுதலைக் கடைப்பிடித்தல் வேண்டுமென்று உணர்ந்து கொள்க.
38. மதிப்பரிய மணிக்கலன்
அவன்சுவர்க்கர் (Abensberg) என்னும் தேயத்துச் செல்வர் ஒருவர் முப்பத்திரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்கள் எல்லாரையும் மிக அருமையாக வளர்த்து வந்தனர். ஒருகால் செர்மன் தேய அரசன் தம்முடைய நாடு நகரங்களைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில், ஆங்காங்குள்ள சிற்றரசர்களும் அரசியல் தொழிலில் அமர்ந்திருப்பவர்களும் செல்வர்களும் பிறரும் மணிகள் பதித்த பொன்னணிகள் பொற்கலன்கள் பொற்பட்டாடைகள் முதலான விலையுயர்ந்த பொருள்களைத் தத்தம் காணிக்கைகளாக் கொணர்ந்து வைத்து அரசனை வணங்கி வாழ்த்தினர். ஆனால், அவன்சுவர்க்கரோ அரசன் தம் ஊர்க்கு அணித்தாக வருகையில், தாம் பெற்ற முப்பத்திரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்று, அரசனை வரவேற்று, அரசர்க்கும், தமது நாட்டிற்கும் தாம் செலுத்துதற்குத் தக்க காணிக்கைகள் தம் முப்பத்திரண்டு பிள்ளைகளாகிய மதிப்பரிய மணிக்கலன்களே என மொழிந்து, அப்பிள்ளைகள் எல்லாருடனும் அரசனை வணங்கி வாழ்த்தினர். அதுகண்ட அரசன் அவரது உள்ளத்தின் உண்மையையும் அவர் செலுத்திய காணிக்கைகளின் மதிப்பரிய தன்மையையும் நன்குணர்ந்து வியந்து, அவர்க்கும் அவர் தம் புதல்வர், புதல்வியர்க்கும் பல் பெருஞ்சிறப்புகள் செய்து மகிழ்ந்தான்.
இங்ஙனமே நிகழ்ந்த மற்றொன்று வருமாறு: கருநீலியாள் (Cornelia) என்னும் ஒரு பெருமாட்டியாரைக் காண வந்த மற்றொரு பெருமாட்டி தனக்குள்ள செல்வப் பெருக்கையும் தான் அணிந்திருந்த நகைகளின் விலையுயர்ந்த தன்மையையும் தானாகவே புகழ்ந்து பேசி முடித்த பின்னர், கருநீலியாளை நோக்கி, அம்மே, உங்களுக்கு எவ்வளவு செல்வம் உளது? உங்களுக்கு எத்தனை விலையுயர்ந்த நகைகள் உள்ளன? என்று வினவினாள். அது கேட்ட கருநீலியாள் தமது இல்லத்தின் பின்கட்டினுள்ளே சென்று தம் பிள்ளைகள் இருவரையும் கொண்டுவந்து அந்த அம்மைக்குக் காட்டி, இவர்கள் இருவருமே எனக்கு இரு பெருஞ் செல்வத்திரள்கள்! இவ்விருவருமே எனக்கு மதிப்பரிய மணிக்கலன்கள்! என மொழிந்தனள். இச்சொற்கேட்ட அந்த அம்மை தனது செல்வத்தின் போலித் தன்மையையும் கருநீலியாளுக்குள்ள செல்வத்தின் உண்மையையும் உணர்ந்து வெட்கிச் செருக்கழிந்து தனது பிழையைப் பொறுக்கும்படி கருநீலியாளை வேண்டினள்.
39. ஓர் அரசியல் தலைவரின் அரிய இயற்கை
மிகவும் ஏழ்மையான நிலைமையிலிருந்து தையல் வேலை செய்து பிழைத்து வந்தவரான அந்துரு சான்சன் (Andrew Johnson) என்னும் ஆண்மகனார் தமது அறிவாற்றலாலும் தமது நல்லியற்கையின் விழுப்பத்தாலும் படிப்படியே தமது வாழ்க்கை நிலை உயரப் பெற்று கடைசியாக வட அமெரிக்காவின் கண்ணதான இணைக்கப்பட்ட நாட்டரசுக்குத் தலைவராம் சாலப் பெரிய நிலையை அடைந்தனர். ஒருகால் ஓர் ஊரின்கண் ஒரு பெருங்கூட்டத்தின் இடையே அவர் ஒரு பேரூரை நிகழ்த்துங்கால், தாம் அரசியல் துறைகளில் எவ்வெவ்வாறு ஊழியம் செய்து எவ்வெவ்வகையில் மேலுயர்ந்து வந்தனரோ அவ்வரலாறுகளையெல்லாம் முறையே சொல்லிக் கொண்டு வந்தனர். அப்போது அக்கூட்டத்திலிருந்து ஒரு குறும்பன் தையற்காரனாயிருந்து மேல் வந்தோ! எனக் கூவினான். அதுகேட்ட அத்தலைவர் அவ்விகழுரைக்குச் சிறிதும் வருந்தாராய், அதனைச் சிறந்த பொருள் உடையதாகத் திருப்புவான் புகுந்து எவரோ ஒரு துரைமகனார் யான் தையற்காரனாயிருந்ததைக் குறிப்பிடு கின்றார். அவரது சொல் என்னைச் சிறிதும் வருத்தாது; ஏனென்றால், யான் தையற்காரனாயிருந்த ஞான்று அத் தொழிலில் மிக்க திறமையுடையேன் என்று புகழ் படைத் துள்ளேன்; யான் தைத்துக் கொடுத்த உடுப்புகள் திருத்தமாய்ப் பொருத்தமாய் நறுவியவாய் இருந்தன; எனக்குத் தையல்வேலை கொடுத்தவர்கட்கெல்லாம் யான் சொன்ன சொற்படியே செய்து குறிப்பிட்ட நாளில் தவறாமல் கொடுத்து வந்தேன் என எடுத்துரைத்தனர். இவரது பொறுமையுரையைக் கேட்டு அதன் அருமையை உணர்ந்த அப்பெரும் கூட்டத்தவர் எல்லாரும் அவரை மேலும் மிகுதியாய் கொண்டாடினரேயன்றி, அவரை அது பற்றிச் சிறிதும் குறைவாக நினைத்திலர்.
40. உழைப்பினால் உயர்ந்த ஒரு கதை நூலாசிரியர்
உழைப்பினாலும் விடாமுயற்சியினாலும் மிகச் சிறந்த நிலையை அடைந்தார் சிலரில் திசிரேலியர் (Disraeli) என்பவரின் வரலாறு மிகவும் வியக்கத்தக்கது. இவர் தமது இளமைக்காலந்தொட்டே கல்விகற்பதிலும் தாம் கற்றறிந்தவைகளை நூல்களாக எழுதி வெளியிடுவதிலும் கருத்து அழுந்தி நின்றனர். இவர் முதன்முதல் எழுதி வெளிப்படுத்திய கதைநூல் ஒன்றைப் பார்த்தாரிற் பலர் இவரை ஏளனஞ் செய்து நகையாடியதுமன்றி, இவரை வெறிபிடித்தவர் எனவும் ஏசிப் பேசினர். ஆயினும், அவர்களின் இகழுரை ஏச்சுரைகளைக் கேட்டு இவர் சிறிதும் மனங்கலங்காதவராய்த், தாம் மேற் கொண்ட நூல் இயற்றும் முயற்சியை விடாப்பிடியாய்ச் செய்தே வந்தனர். கடைசியாக இவர் இயற்றி வெளியிட்ட கானிங்குசுபி (Coningsbuy), சிபில் (Sybil), தான்கிரேடு (Tancred) என்னும் கதை நூல்கள் மூன்றும் முதிர்ந்த கதைச் சுவையானும் சொற்சுவையானும் பயில்வார் உள்ளத்தைக் கவர்ந்து அவரைப் பெரிதும் இன்புறுத்தி ஆக்கியோனுக்கும் அழியாப் பெரும்புகழை நிலைபெறுத்தலாயின.
பின்னர், இவர் இலண்டன் மாநகரில் குடிமக்கள் மன்றத்தில் விரிவுரை நிகழ்த்துதற்கு முதன்முதல் தோன்றி நின்றபோது, அங்கிருந்தவரில் பெரும்பாலோர் இவரைக் கண்டு நகையாடிக் கூவிப் பேரிரைச்சல் இட்டதுமன்றி, இவர் பேசிய விரிவுரையின் ஒவ்வோர் அழகிய சொற்றொடரையும் பகடி செய்து கொண்டும் இருந்தனர். ஆனால், இவரோ அத்துணை இழிவுகளையும் மனவமைதியோடு பொறுத்துக் கொண்டு முடிவில் யான் பலவற்றைப் பலகால் துவங்கியிருக்கின்றேன்; இறுதியில் அவைகளை நன்கு முடித்து நன்மை அடைந் திருக்கின்றேன். இப்பொழுது என் பேச்சை நிறுத்தி அமர்ந்து விடுகிறேன்; ஆனால், நீங்கள் எனது விரிவுரையை ஆவலோடு கேட்கும் காலம் வரும் எனக் கூறித் தமது இருக்கையில் அமர்ந்தனர்.
இவர் கூறியவண்ணமே அக்காலமும் வந்தது. உலகத்தில் மிகச் சிறந்த அறிஞர்கள் ஒருகால் ஒருங்கு குழுமியிருந்த போது அம்மன்றத்தில் இவர் நிகழ்த்திய அரும்பெருஞ் சொற் பொழிவானது அவரெல்லாருள்ளத்தையும் ஒருமிக்கக் கவர்ந்து விட்டது. எல்லாரும் இவருடைய சொல்லாற்றல் பொருளாற்றலை மிக வியந்து பேசிப் புகழ்ந்தனர். அதிலிருந்து இவரது புகழ் நாளுக்குநாள் ஓங்கி வளர்ந்து ஒளிர்வதாயிற்று. பின்னர் இவர் பாராளுமன்றத்தில் சிறந்த ஒரு விரிவுரை யாளராய் எல்லாராலும் மேலும்மேலும் கொண்டாடப்பட்டுத் திகழ்ந்தனர்.
இத்துணை மேலான நிலையைத் திசிரேலியர் எய்துதற்கு ஏதுவாய் நின்றவை யாவை? இவர்தம் முயற்சியும் மனத்திட்பமும் அல்லவோ? இளைஞரில் பெரும்பாலார் தாம் துவங்கிய ஒரு நன்முயற்சியில் ஒருகால் தவறிவிட்டனராயின் அதனால் மனம் உடைந்து ஒரு மூலையில் போயிருந்து வருந்தி அவிந்து போகின்றனர். மற்றுத் திசிரேலியரோ அத்தகைய இளை ஞரைப்போல் ஒருகாலும் மனம் மடிந்து இருந்தவர் அல்லர். தாம் எடுத்த முயற்சியில் தாம் தவறியது எதனால் என்று ஆராய்ந்து அதற்குக் காரணம் இன்னது என்று கண்டதும், அதனைக் களைந்து தம்மைச் சீர்திருத்திக் கொண்டு வந்ததுடன், தமது சொற்பொழிவைக் கேட்பாரின் அகநிலை புறநிலை களையும் நன்காராய்ந்து தம்மைச் சீர்திருத்திக் கொண்டு வந்ததுடன், அந்நிலைகளுக்குத்தகத் தம்மையும் இசைவித்துக் கொண்டு வந்தனர். ஒரு நோய் கொண்டவர் அந்நோயின் மூலத்தை நன்காராய்ந்து பார்த்து அதனைக் களைந்தால் அல்லாமல், எவ்வளவுதான் மருந்துகளை உட்கொண்டு வந்தா ராயினும் அந்நோய் நீங்குமோ? அதுபோலவே, ஓர் அரும்பெரு முயற்சியை மேற்கொண்டவர் அதில் தாம் நன்மையடையாமல் பிழைபடுதற்குரிய காரணத்தைத் தெரிந்து அதனை விலக்கி னாலன்றி, அவர் அதனைக் கடைபோக முடித்துப் பயன் பெறார். இந்நுட்பத்தை நன்குணர்ந்து அதற்கேற்ப ஒழுகி னமையே திசிரேலியரின் உயர்நிலைக்கு உறுபெருங் கருவியா யிருந்தது. இதனை இளைஞர்கள் தமதுள்ளத்தில் பதித்து நடத்தல் வேண்டும்.
41. ஒரு வணிகனும் குறளியும்
வணிகம் செய்து பெரும்பொருள் தொகுத்த ஒரு வணிகன், தான் தொகுத்த அப்பெரும்பொருளளவில் அவா அடங்கப்பெறானாய், மேலும்மேலும் இன்னும் பொருள் திரட்டுதற்கு வழி யாது? என்று அல்லும்பகலும் எண்ணிக் குறிசொல்வாரையும் மந்திரக்காரரையும் வினவி வந்தனன். தான் பெரும்பொருள் திரட்டிக் கொள்வதற்கு வழிகாட்டுபவனாகத் தன்னால் கருதப்பட்ட எந்தக் குறிகாரனைக் கண்டாலும், எந்த மந்திரக்காரனைக் கண்டாலும் செம்பைப் பொன்னாக்கும் எந்த இரசவாதியைக் கண்டாலும் அவர்கட்கெல்லாம் தனது பொருளை வாரிவாரிக் கொடுத்து வந்தான். அங்ஙனம் தன் பொருளையெல்லாம் அவர்கட்காகச் செலவழித்து வந்தனனே அல்லாமலே, அவர்களால் ஓர் இம்மி அளவு பொன்னாவது இயற்கைக்கு மாறாகப் பெறும் வழி ஏதும் தெரிந்தானில்லை. தொடர்பாகத் தன் பொரு ளெல்லாம் இங்ஙன் தொலைந்து போவதை இவன் தன் கண்ணெதிரே கண்டு வைத்தும் தக்கதல்லா வழியில் பொன் பெறுதற்குத் தான்கொண்ட பேரவாவை இவன் சிறிதும் விட்டானில்லை. கடைசியாக இவனிடம் வந்த ஒரு மந்திரக்காரன் குறளியை அழைத்து ஏவல்கொள்ளும் மந்திரமுறை தனக்குத் தெரியுமென்றும், அதனை வசப்படுத்திக் கொண்டால் அதன் உதவியால் திரள்திரளாகப் பொன்பெறலாமென்றும் கூறித் தான் கூறியதை மெய்ப்படுத்தப் பலவகைப் பழங்களும், உணவுப் பண்டங்களும் இடைவெளியினின்றும் வருவித்துக் காட்டி, அவ்வணிகனுக்கு மிக்கதோர் இறும்பூதினை உண்டாக்கினான். தான் பாடுபட்டுத் தேடிய பெரும் பொருளையெல்லாம் நாளடைவில் இவ்வழியே தொலைத்து விட்ட அவ்வணிகன், இனித்தான் தனக்கு நல்லகாலம் வரப்போகின்றது எனக் கருதி, மிச்சமிருந்த பொருளையும் அம்மந்திரக்காரனுக்குக் கொடுத்துக் குறளியை அழைக்கும் மந்திரத்தை அவனிடமிருந்து கற்றுக் கொண்டான்.
அவன் அதனைக் கற்று உருவேற்றவே குறளிப்பேய் அவனிடம் போந்து, இறைச்சியும் இரத்தகாவும் தான் வேண்டும் போதெல்லாம் தனக்குக் கொடுத்தால் அவன் ஏவியது செய்யலாம் என்றது. அங்ஙனம் அவன் ஆடு மாடு பன்றி முதலிய விலங்குகளின் ஊனும் குருதியும் மிகுவிலைகொடுத்து வாங்கி அக்குறளிக்குச் சிலநாட்கள் வரையில் காவுகொடுத்து வந்தான். அவன் தனக்கு வேண்டிய பண்டங்களைக் கொணர்ந்து தரும்படி அப்பேயைக் கேட்ட காலங்களிலெல்லாம், அஃது அப்பண்டங்களின் விலையைக் கொடுத்தால் அல்லாமல் அவைகளைக் கொண்டுவருதல் தன்னால் இயலாதென்றது. அதன்மேல் அவன் அப்பண்டங்களின் விலையைச் சிலமுறை கொடுக்க அஃது அவ்விலைப் பொருளை அப்பண்டங்கட்கு உரியவன்பால் சேர்ப்பித்து, அப்பண்டங்களை ஒரு நொடிப் பொழுதில் எலாங்கொணர்ந்து இவனிடம் சேர்ப்பித்தது. இதனைக்கண்ட அவ்வணிகன், ஒரு வேலைக்காரன் செய்யும் வேலையை விரைந்து அஃது ஒரு புதுமையான வகையில் செய்யும் அவ்வளவேயன்றி, அதனால் வேறு ஏதொரு பயனும் உண்டாகாமையும், ஒரு வேலைக்காரனுக்குக் கொடுக்கும் சம்பளத்திலும் பதின்மடங்கு மிகுதியான பொருள் அக்
குறளிக்கு அடுத்தடுத்து வேண்டும் ஊனுக்கும் குருதிக்கும் கள்ளுக்கும் செலவாகுதலையும் கண்டு மிகவும் கவலை கொள்வானானான். பலநாள் இங்ஙனம் வருந்திப் பின்னர் ஒருநாள் அக்குறளிக்கு வேண்டும் உணவு கொடுத்துத், தனக்குப் பெரும்பொருள் கொணர்ந்து தரும்படி அதனை வேண்டினான். அதற்கு அக்குறளி, பிறர்க்குரிய பொருளைக் கவர்ந்து கொடுத்தல் ஆவியுலகில் உலவும் எந்த உயிர்க்கும் இயலா தென்றும், ஆனாலும் இம்மண்ணுலகில் உயிரோடிருந்த காலத்தில் தான் தேடிக் குவித்த பெரும்பொருளை நிலத்தின்கீழ் புதைத்து வைத்து மாண்டுபோன ஒருவனது ஆவி அப் புதையலை எவரும் எடாதபடி காத்து நிற்கின்றதாகலின் அதனை வேண்டினால் அஃது அப்பொருளைத் தரக்கூடு மென்றும் நுவன்று அவ்ஆவியையும் அவன்பால் அழைத்து வந்துவிட்டது. பொருள் அவாவினால் பிடியுண்ட அவ்வாவி பெருங்கவலையும், பெருந்துன்பமும் உடையதாய்ப் பார்ப்ப தற்குப் பேரச்சத்தை விளைவிக்கும் இருண்ட கொடிய உருவுடன் அவன் முன்னே நள்ளிரவில் தோன்றி அலறலாயிற்று. அதனைக் கண்டதும் பெருந்திகில் கொண்ட அவ்வணிகன் தன் இருகண் களையும் மூடிக்கொண்டு அசைவற்ற மரம்போல் இருந்தனன். அதுகண்ட குறளி யான் அழைத்து வந்த அவ்ஆவிக்கு நின் கருத்தை அறிவித்து அது வேண்டியது செய்யாவிட்டால் நினக்கு அது தீது செய்யும் என்று உரைக்க, அவன் ஒருவாறு மனந்தேறி, நீ வைத்திருக்கும் புதையலை எனக்குத் தருவையோ? என வினவினான். அச்சொற் கேட்டதும் அது மிகவும் சினம் கொண்டு அலறி, கருக்கொண்ட ஓர் அழகிய மங்கையை யான் புதையல் வைத்திருக்கும் இடத்தில் கொணர்ந்து வெட்டிக் காவு கொடுத்தால், அதனை நீ எடுத்துக் கொள்ள விடுவேன் என்று சொல்லி மறைந்து போயிற்று.
அச்சொற் கேட்ட பொருட்பேயனான அவ்வணிகன் தனக்குப் பெரும்புதையல் கிடைக்கப் போவதை எண்ணிப் பெருமகிழ்ச்சியும், ஆனால் அதற்காகக் காவு கொடுக்கும் பொருட்டுக் கருக்கொண்ட அழகிய ஒரு மங்கையை எங்ஙனம் தேடிப்பிடிப்பது என்பதை நினைத்துப் பெரும் கவலையும் கொண்டவனாய் அதைப் பற்றிப் பேசும் பொருட்டு, உறங்கிக் கிடக்கும் தன் அழகிய மனையாளை எழுப்பினான். அவள் திடுமென அச்சத்துடன் எழுந்து யாது செய்தி? என வினவச், சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்த அந்நிகழ்ச்சியைச் சொல்லிக், கருக்கொண்ட அழகிய பெண் ஒருத்தியை எங்கே எப்படிப் பெறலாம் என அவளைக் கேட்டான். அந்நிகழ்ச்சியைக் கேட்ட அம்மாது பெருந்திகில் கொண்டவளாய்த், தன் கணவன் தான் பாடுபட்டுத் தேடிய பெரும்பொருளை எல்லாம் தனக்குள்ள பேரவாவினால் தொலைத்துவிட்டு வறுமைப்படுதலையும், மீண்டும் பொருள் பெறும் பொருட்டுத் தகாத வழியில் அவன் முயலுதலையும், தான் அழகில் மிக்கவளாய் சூல்கொண்ட வயிற்றினளாய் இருத்தலையும் நினைத்துக், கருக்கொண்ட வேறு ஓர் அழகிய மாது கிடைத்திலளாயின் தன் கணவன் தன்னையே வெட்டிக் காவு கொடுக்கப் பின் வாங்கானென நடுங்கினாள். அந்நடுக்கத்தை உணர்ந்த அவன் அவளுக்கு அது நீங்குமாறு ஆறுதல் சொல்லி, எங்காயினும் ஓர் ஏழைப் பெண்ணைத் தேடிப் பிடித்து அவளால் தான் கொண்ட கருத்தை முடித்துக் கொள்வதாக உறுதிமொழி புகன்றான். ஆனால், உண்மையில் அவன் மனையாள் எண்ணியபடி அவளையே அப்பேய் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் வெட்டிக் காவு கொடுத்து அப்புதையலை எடுத்துக் கொள்ளவே தனக்குள் தீர்மானம் செய்தான். பிறகு சிலநாட் சென்றன. சென்றபின் ஒருநாளிரவு தன் மனையாளை அழைத்துச் சூல்கொண்ட அழகிய ஓர் ஏழைப் பறைப் பெண் தனக்குக் கிடைத்திருக்கின்றனள் என்றும், அவளை இந்நள்ளிரவில் கொண்டுபோய்க் குறிப்பிட்ட இடத்திற் காவு கொடுத்தவுடனே கிடைக்கும் பொற்றிரளைப் பிறர் அறியாமல் வீட்டிற் கொணர்ந்து சேர்ப்பித்தற்கு நீயும் என்னுடன் வந்து உதவிசெய்ய வேண்டு மென்றும் அவளைக் கெஞ்சிக் கேட்டுத் தன்னுடன் வரும்படி வேண்டினான். பறைப்பெண் கிடைத்தனள் என்பது பொய் மொழியே என்றும், தன்னையே தன் கணவன் அங்ஙனம் காவு கொடுக்கப் போகின்றனன் என்றும் அவன் மனையாள் உள்ளுணர்ந்து கலங்கினளாயினும், அவன் சொல்லுக்கு மாறுசொல்ல வகையறியாளாய்த், தெய்வம் விட்டபடி ஆகுக என்று மனந்துணிந்து, அந்நள்ளிரவில் அவனுடன் அவன் குறிப்பிட்ட இடத்திற்குப் போயினாள்.
அவ்விருவரும் போய்ச் சேர்ந்த இடம் இடிந்து பாழாய்க் கிடக்கும் ஒருபெரு வீடு ஆகும். அஃது அவர் இருக்கும் ஊருக்கும் ஒரு கல் தொலைவில் நாகதாளிப் புதர்களுக்
கிடையே இருந்தது. அதற்கு அருகில் சுற்றி இருப்பை மரத்தோப்பு ஒன்று இருந்தது. அவர்கள் புறப்பட்ட அந்நாள் முன் நிலாக் காலமாதலால், அவர்கள் வீட்டைவிட்டுச் செல்கையிற் சிறிது நிலவொளி காணப்பட்டது. அவர்கள் அவ்இடிந்த வீட்டருகே வந்ததும் நிலவொளி மறைந்து போயது. அப்பாழிடத்தில் இருள் மிகுந்திருந்தமையால் அவ்வணிகன் தன் கையில் கொண்டு சென்ற ஒரு சிறு கண்ணாடி விளக்கை ஏற்றினான். அச்சம் தரும் அவ்விடத்தைச் சுற்றி எத்தகைய மக்களும் இயங்காமல் ஓவென்றிருத்தலையும், தன் கணவனது எண்ணத்தையும் கண்டுணர்ந்த அப்பெண்ணின் துணையற்ற உள்ளநிலை அந்நேரத்தில் எத்தகையதாய் இருக்கும் என்பதை நாம் சொல்வதைவிட இதனைப் பயில்வோரே உணர்ந்து பார்த்தல் வேண்டும்! அவள் ஏறக்குறைய உயிரற்ற மரப்பாவையே ஆனாள். தன் கணவனைத் திகிலோடு நோக்கி, நீங்கள் சொல்லிய பறைப்பெண் எங்கே? என நாக்குழறிக் கேட்டாள். அதற்கவன், இதோ சிறிது நேரத்தில் வருவாள்! என்று சொல்லியபடியாய், தான் கொணர்ந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து, அப்பேய்க்குப் படைத்தற்காகக் கொண்டுவந்த கள்ளும் கருவாடும் புகையிலையும் தென்னம்பாளைப் பூவும் எல்லாம் எடுத்துவைக்கக், கடைசியாகப் பளபளவென மின்னும் கருக்கான ஒரு வெட்டரிவாளையும் எடுத்து வைத்தான். அவன் மனையாளாகிய அவ்வேழைப் பேதை பின்னதைக் கண்டதும் முக்கால்வாசி உயிர் நீங்கிய உடலத்தினளாய் நிலத்திலே அயர்ந்து விழுந்தாள்.
இந்நேரத்தில் எவரோ ஒருவர் வரும் அரவம் தென்பட்டது. அஃதுணர்ந்த அவ்வணிகன் தன் நோக்கத்திற்கு இடையூறாக வருவார் எவரென அச்சத்துடன் சுற்றிப் பார்த்தான். அருளொளி ததும்பும் திருமுகமும் நீண்ட சடை முடியும் நீறு துலங்கும் நெற்றியும் உடையராய்க் காவியாடை பூண்ட ஒரு துறவி தன்பால் விரைந்து வரக்கண்டான். கண்ட ஒரு நொடிப் பொழுதில் அவர் அவனை அணுகி அடா பேதாய்! கருக்கொண்ட அழகிய நின் அருமை மனையாளைப் பாழும் பொருளுக்காக வெட்டிப் பலிகொடுக்கத் துணிந் தனையே! உன்னைப் போல் அறிவில்லாத் தீய கொடிய பொருட்பேய் வேறுண்டோ! நீ நின் மனையாளைப் பலிகொடுத்தவுடனே உன்னை இரண்டு துண்டாய் வெட்டி வீழ்த்தி, நீயெடுத்த புதையலைக் கொண்டு போகக் கொடிய கள்வர் சிலர் இதோ வந்து கொண்டிருக்கின்றனர்! இதோ தோன்றும் இருப்பை மரத்திற்போய் ஏறிக்கொள்! தாழாதே! நின் மனையாளை யான் வேறு ஓரிடத்திற் கொண்டு போய் மறைத்துவைத்து, அக்கள்வர் திரும்பிச் சென்றதும் அவளை மீண்டும் நின்பாற் சேர்ப்பிக்கின்றேன் எனவிரைந்து அருளோடு மொழிந்தார். அப்பெரியாரின் அமுதவுரை செவியிற் பட்டதும் போன உயிர் மீளப் பெற்ற அவ்வணிகனின் மனைவி திடுமென எழ அவர் அவளை அழைத்துக் கொண்டு சடுதியில் மறைந்துபோயினார். அவ்வணிகனும் திகில் கொண்ட வனாய் அவ்விடிந்த இல்லத்திற்குச் சிறிது எட்டியிருந்த இலை அடர்ந்த ஓர் இருப்பை மரத்தருகில் விரைந்தோடி அதன் மேல் ஏறிக்கொண்டான்.
அவன் அங்ஙனம் ஏறிக் கொண்ட சில நொடிப் பொழுதிலெல்லாம் நாலைந்து கொடிய கள்வர்கள் கண்டவர் கலங்கத்தக்க கரிய திண்ணிய வடிவினராயும், கூரிய கொடுவாள் பிடித்த கையினராயும் விரைந்துபோந்து, அவ்விடிந்த பாழ்வீட்டிலே அவ்வணிகன் விளக்கும் மற்றைப் பொருள்களும் வைத்துப் போன இடத்தில் புகுந்துநின்றனர். அவ்விடத்திற்குச் சிறிது தொலைவிலே இருப்பை மரத்தின் மேல் ஏறியிருந்த அவ்வணிகன், தான் அங்கு வைத்த விளக்கு வெளிச்சத்தின் உதவியால் அக்கள்வர்களையும் அவர்களது இயக்கத்தையும் அதன் அருகில் கண்டு வெருக்கொண்டு, ஐயோ! அருளுடைய அத்துறவியார் சில நொடிப்பொழுது முன் வராதிருந்தால் என் அருமை மனைவியையும் தீவினையேன் கொன்றிருப்பேன்! அவளைக் கொன்ற சிறிது நேரத்திலெல்லாம் யானும் இக்கொடிய கள்வர்களால் கொல்லப்பட்டிருப்பேன்! என் மனைவியும் யானும் மடிந்த பின் பொருளோ பொருள் என்று அலைந்த எனது தீய அவா எப்படியாம்? பொருள் அவாத் தொலைத்த அத்தூய பெரியவ
ராலன்றோ என் மனைவியும் யானும் உயிர் பிழைத்தோம்! யான் தீவினைக்குத் தப்பினேன்! அப்பெரியாரை இந்நேரத்தில் விடுத்த சிவமே நீதான் எமக்குப் பெருஞ்செல்வம்! என்று நெஞ்சம் நீராய் உருகிக் கண்ணீர் உகுத்தான். அவ்விடத்திற் போந்து நின்ற கள்வர்கள் அன்றிரவு விடியுமட்டும் அங்கிருந்து, அவ்வணிகனையும் அவன் மனைவியையும் காணாமல் அவன் அங்கே கொணர்ந்து வைத்த பொருள்களை மட்டும் கண்டு வியப்புற்றுக் காக்கை கரையக் கேட்டு, அங்கிருந்த விளக்கு, அரிவாள், பெட்டகம் முதலியவைகளை எடுத்துக் கொண்டு போய் ஒழிந்தனர்.
கதிரவன் புறத்தே பரவிய இருளைப் பருகி எங்கும் பேரொளி விரியக் கீழ்பால் தளதளவெனத் தோன்றினான். அத்துறவியரும் அவ்வணிகனின் அருமை மனைவியை அழைத்துக் கொண்டு அவனது அகத்தே பரவிய அறியாமை அவா இருளையொழித்து அறிவொளி பரப்புவாராய் அவன் ஏறி இருந்த இருப்பை மரத்தருகே வந்தார். அவரது அருமைத் திருவுருவைக் காண்டலும் அவன் அம்மரத்திலிருந்து கீழிறங்கிப் போந்து அவர் திருவடிகளில் வீழ்ந்து தேம்பித் தேம்பி அழுது, தீவினையேனைக் காக்கப் போந்த தெய்வப் பெருமானே! தேவரீர் செய்யாமல் செய்த அருளுதவிக்குப் பாவியேன் எங்ஙனம் நன்றி செலுத்த வல்லேன்! எவ்வாறு தேவரீரை வாழ்த்துவேன் வணங்குவேன்! யானும் என் மனைவியும் என் மக்களும் என் வழியுமெல்லாம் தேவரீர் திருவடிக்கே அடிமை! என்று கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுதழுது உரைத்தான்.
அதுகண்ட அப்பெரியார் மகனே! நீ உள்ளம் திருந்தியதற்கு மகிழ்ந்தேன்! உயிர்மீண்ட நின் அருமை மனைவியைத் தழுவிக்கொள்! இந்நல்லாளினும் இவள் வயிற்றில் பிறக்கும் மக்களினும் சிறந்த செல்வம் உனக்கு வேறுளதோ? இவளையும் இவள் மக்களையும் நின்னையும் ஏழை எளியவர்களையும் கற்றாரையும் துறந்தாரையும் ஓம்புதற்கே செல்வம் வேண்டுமல்லாமல், இவர்களை இழத்தற்கா அது வேண்டும்? நல்லெண்ணமும் நன்முயற்சியும் இருந்தால் உனது வாழ்க்கைக்கு வேண்டுமளவு செல்வமும் சிவத்தினருளால் உனக்குத் தானே திண்ணமாய் வரும்! இனிப் பொருளில் அவா வையாதே! நீ இப்போதிருக்கும் இல்லத்தில் மீண்டும் அக்கள்வர்கள் புகுந்து நின்னைத் துன்புறுத்தக் கூடுமாதலால், நீ அதனைவிட்டு, வேறோர் ஊரில் வேறோர் இல்லிற் குடிபுகுந்து, நின் வாழ்க்கையை அன்புக்கும் அறத்திற்கும் இடமாக நன்கு நடத்து! எனச் சொல்லிச் சடுதியில் அவனை விட்டு மறைந் தேகினர். அவ்வணிகனும் தன்மனையாளுடன் அவர் கற்பித்த வண்ணமே வேறொர் ஊரில் சென்று வைகி நன்கு வாழ்ந்தனன்.
42. ஓர் அரசிளம் செல்வியின் வைரமணிகள்
சுவீடன் தேயத்து அரசரின் தங்கையான ஊசினி என்னும் நங்கையார் ஏழை எளியவர்கட்கு ஒரு மருத்துவ விடுதி அமைக்கும் பொருட்டுத், தாம் பூண்டிருந்த வைர
மணிகளை விலை செய்வித்துத் தாம் விரும்பியவாறே அதனை மிகவும் சீரியதாக அமைப்பித்து வைத்தனர். அங்ஙனம் அதனை அமைப்பித்து அதன்கண் வந்து சேரும் நோயாளிகளுக்கு வேண்டுவனவெல்லாம் செவ்வனே செய்யும்படி ஒழுங்குபடுத்திய பின் ஒருநாள் அவ்வரசிளஞ் செல்வியார் அங்குள்ள நோயாளிகளைப் பார்க்கச் சென்றார். சென்று ஒரு நோயாளியின் படுக்கை அருகே அவர் நின்று கொண்டிருக்கையில் அதன்கணிருந்த அவன் அந்நங்கையர் செய்த செயற்கரிய அருட்செயலை எடுத்து மொழிந்து அவரை வணங்கி வாழ்த்தி நெஞ்சம் கரைந்து தன் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் சிந்தினான். அந்நீர்த்
துளிகளைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த அச்செல்வியார் ஆ! இப்போது மறுபடியும் என்னுடைய வைரமணிகளை நான் காண்கின்றேன் என்று வியந்துரைத்தார்.
43. ஏழைக்குடிகளும் அரசனும்
இவ்விந்திய நாட்டின் வடக்கே இமயமலைக் கண்ணதான காசுமீர தேயத்தில் காரகோரம் என்னும் பனிமலைப் பகுதிகளில் உறையும் ஏழைமக்கள் அங்குள்ள கடுங்
குளிரினாலும் பனிக்கட்டிகளின் வீழ்ச்சியினாலும் பெரிதும் துன்புற்று வந்தனர். அந்நாட்டுக்கு அரசனான இராமசிங்கு என்பவன் அவர்களது துன்பத்தை நீக்குவதற்கு ஏதோர் ஏற்பாடும் செய்தான் அல்லன். அவர்கள் குளிருக்குத் தப்பிக் கதகதப்பாய் இருக்கத் தக்க விடுதிகளாவது, உடுத்துக் கொள்ளத்தக்க உடைகளாவது, உண்ணுதற்குச் சிறிது இசைந்த வெய்ய உணவாவது கிடைக்கப் பெறாமையால் பாழடைந்த இடங்களில் இருந்து தொடர்பாகத் துன்ப வாழ்க்கையே நடத்தி வந்தார்கள். அதனால் அவர்கள் தங்கிய இடங்கள் பார்ப்பதற்கு அச்சமும் அருவருப்பும் தருவனவாய்த் தோன்றின. எப்படியோ ஒருகால் அவ்விராமசிங்கு மன்னன் அவ்ஏழைக்குடிகள் இருக்கும் அவ்விடத்திற்குப் போகலானான். அவன் போன நேரம் பட்டப் பகலாயிருந்தும், அங்குள்ள அவ்வெளிய மக்கள் கையில் கண்ணாடி விளக்குகள் பிடித்துக்கொண்டு, கிழிந்த கந்தைத்துணி உடுத்துக் குளிரால் நடுங்கும் உடம்பினராய் அவன் முன்னே வந்தனர். அந்நிலையில் அவர்களைக் கண்ட அம்மன்னன் அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் இந்நண்பகல் வேளையில் விளக்கு வெளிச்சத்துடன் வந்தீர்கள்? என வினவினான். அதற்கு அவர்களில் ஒருவன், மன்னர் பெருமானே; எங்களுடைய பெருந்துன்பமாகிய இருள் நிறைந்த இவ்விடத்திற்குத் தாங்கள் வந்திருத்தலால் எங்களுடைய அத்துயரநிலையைத் தாங்கள் கண்ணாற் கண்டு அதனைப் போக்குதற்காகவே இவ்விளக்கு வெளிச்சம் கொணர்ந்தோம் என்றனன்.
கண்ணிருந்தும் பிறர்துயர் காணாதவர்க்கு அதனைக் காண விளக்கு வெளிச்சமும் வேண்டுமன்றோ?
44. சேவலும் கழுகும்
சினங் கொண்டு போர் புரியும் இரண்டு ஆடவரைப் போல், இரண்டு சேவல்கள் பெருஞ்சீற்றத்துடன் நெடுநேரம் சண்டையிட்டன. கடைசியாகத் தோல்வியடைந்த சேவல் ஒரு கோழிக் கூட்டின் மூலையில் போய் ஒளிந்து கொண்டது. வெற்றியடைந்த சேவலோ, ஒரு வீட்டின் கூரைமேற் பறந்து சென்று வைகித், தான் பெற்ற வெற்றிக்கு அறிகுறியாகத் தன் செப்பட்டைகளை அடித்துக் கொண்டு, பெருங் கிளர்ச்சியுடன் கொக்கரித்தது. அந்நேரத்தில் அப்பக்கமாய்ப் பறந்துவந்த ஒரு கழுகு தன் காலின் நகங்களால் அச்சேவலை அறைந்து இறாஞ்சிக் கொண்டு போயிற்று. ஒளிந்திருந்த மற்றைச் சேவலானது அதன்பின் அச்சமின்றி வெளியே போந்து, தான் போராடிய இரையை மகிழ்வுடன் பொறுக்கித் தின்றது.
45. நாட்டு எலியும் நகரத்து எலியும்
நாட்டிலே உயிர்வாழ்ந்த ஓர் எலியானது தனக்கு நேயமாய் உள்ள ஒரு நகரத்து எலியைத் தான் இருக்கும் ஒரு குடிசைக்கு வரவழைத்தது. நாட்டெலியானது கள்ளம் அற்றதாயும் நாகரிகம் குறைந்ததாயும் செட்டாகவே வாழ்க்கை செலுத்துவதாயும் இருந்தாலும், விருந்து வந்த தன் பழைய நண்பனிடத்தில் எவ்வளவு சிறப்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வளவும் நடந்து, தன்னிடம் உள்ள உணவுப் பண்டங்களை எல்லாம் ஒளியாமல் அதன் முன்னே கொணர்ந்து வைத்தது. தன் நண்பனான நகரத்தெலி நகரத்திலுள்ள உயர்ந்த இனிய உணவுப் பொருள்களைத் தின்று சுவை கண்டதாத லால், அதன் நாவுக்குத் தான் படைக்கும் நாட்டுப்புறத்துப் பொருள்கள் இனிமை தாரா என அஞ்சிச் சுவையிற் குறைந்த அவைகளை அளவில் மிகுத்துப் படைத்தால் அது மனம் மகிழும் எனக் கருதி, அப்பண்டங்களை மிகுதி மிகுதியாகக் கொணர்ந்து அதன் முன் வைத்தது. நகரத்து எலியோ தனக்கு அவை பிடியா வாயினும் தன் நண்பன் பொருட்டு வேண்டா விருப்பாய் அதில் சிறிதும் இதில் சிறிதுமாக அப்பண்டங்கள் ஒவ்வொன்றையும் கடித்துக் கொறித்தது; நாட்டெலியோ தன் நண்பன் எதிரே இருந்து வாற்கோதுமை வைக்கோலை மட்டும் கொறித்தது.
அதனைக் கண்ட நகரத்தெலி, நண்பனே, நாகரிகமும் கிளர்ச்சியும் இல்லா இவ்வாழ்க்கையை நீ எங்ஙனம் பொறுத்துக் கொண்டிருக்கின்றாய்? இண்டு இடுக்குகளில் உறையும் தேரையைப் போல் தனித்த இம் மலைப்பாறைகளிலும் காடுகளிலும் நீ இருக்கின்றனையே! வண்டிகளும் மக்களும் குழுமிய நகரத்தின் தெருக்களுக்கு இம்மலைகளும் காடுகளும் ஒப்பாகுமா? நீ வீணே இங்கிருந்து நின்வாழ் நாளைத் துன்பத்தில் கழிக்கின்றாய். உயிரோடு இருக்கையிலேயே நாம் எவ்வளவு இன்பத்தை நுகர வேண்டுமோ அவ்வளவும் நுகர்ந்துவிடல் வேண்டும். நம் எலியினமானது நீண்டநாள் உயிர்வாழ்வ தில்லையே! ஆதலால், நீ என்னுடன் வந்தால் வாழ்க்கையின் நலத்தையும் நகர வாழ்க்கையின் சிறப்பையும் நினக்குக் காட்டுவேன் என நவின்றது.
அவ் இனியசொற்களினாலும் சுயமான அதன் தன்மையினாலும் உள்ளம் கவரப்பெற்ற அந்நாட்டெலி அதனுடன் செல்லுதற்கு இசையவே, இரண்டும் ஒன்றுசேர்ந்து நகரத்தை நோக்கிச் சென்றன. அவை மறைவாக நகரத்தினுள் நுழைந்த நேரம் மாலைப் பொழுதாகும். அந்நகரத்தெலி தான் இருக்கும் வீட்டினுள்ளே அதனை அழைத்துப் போதற்கு நள்ளிரவாயிற்று. அவ்வீடோ செல்வர் ஒருவர்க்கு உரியதாதலால், அதன் உள்ளகன்ற சிறந்ததோர் உணவுச்சாலையில் பஞ்சுவைத்துப் பல்நிற மென்பட்டுத் தைத்த நாற்காலிகளும் கட்டில்களும் கம்பளி விரித்த மேசைகளும் இடப்பட்டிருந்தன; வெள்ளிய யானைக் கொம்புகளை ஈர்ந்து செய்த கலங்களும், இன்னும் இவை போலச் செல்வத்தின் செழுமையைக் காட்டும் ஏனைப் பண்டங்களும் ஆங்காங்கு அழகுற வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த மேசைகளின் மேல் மிகச் சிறந்த உணவுப் பொருள்கள் ஓர் உண்டாட்டின் பொருட்டுப் பல கடைகளிலிருந்தும் திரட்டிக் கொணர்ந்து வெள்ளித் தட்டுகளிலும் வெள்ளிப் பாண்டங்களிலும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டுத் துலங்கின.
இப்போது நாகரிகமுள்ள அந்நகரத்தெலி தன் நண்பனுக்கு விருந்து செய்யத் துவங்கி, அதனைப் பட்டுமெத்தைமேல் அமரச் செய்து, தான் அங்கு இங்குமாய் ஓடி, ஒவ்வொரு தட்டிலும் கலத்திலும் உள்ள கொழுமையான உணவுப் பண்டங்களை எல்லாம் முதலில் தான் ஒவ்வொன்றாய்ச் சுவை பார்த்து, மணமும் இனிமையும் மிகுந்தவைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வந்து அதன் முன்னே வைத்து, அவைகளைத் தின்னும்படி வற்புறுத்தியது. நாட்டெலியோ தன் இல்லத்தினுள் இருப்பது போல் காட்டிக் கொண்டு தனக்குச் சடுதியில் வந்த இந்நல்வாழ்வை எண்ணித் தனக்குள்ளே மகிழ்வதாயிற்று. தான் தனது நாட்டுப்புற வாழ்க்கையில் தின்றுவந்த எளிய உணவுகளை இகழ்வாய் நினைத்து, இப்போது தனக்குக் கிடைத்த கொழுவிய பண்டங்களைத் தின்று இன்புற்றபடியாய் இருந்தது.
இங்ஙனம் அவ்விரண்டும் இருக்கையில் திடீரென அவ்வுணவுச் சாலையின் கதவுகள் திறந்தன. உடனே உண்டாட்டுக் கூட்டம் ஒன்று உள்ளே புகுந்தது. அங்ஙனம் புகுந்த அக்கூட்டத்தவரைக் கண்டு வெருக்கொண்ட அவ்விரண்டு எலி நண்பர்களும் பெருந்திகிலுடன் கீழே குதித்தோடி அண்டையிற் கிடைத்த ஒருமூலையில் பதுங்கின! பின்னர் அவை அச்சாலையின் வெளியே போய் விடுவதற்கு நகர்ந்துசெல்லப், புறத்தே இருந்த நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டு, அவைமேலும் பேரச்சங்கொண்டு திரும்பவும் உள்ளே செல்லலாயின. கடைசியாக அங்கு நடைபெற்ற உண்டாட்டு முடிந்து அரவம் அடங்கினபின், அந்நாட்டெலி தான் ஒளிந்திருந்த இடத்தைவிட்டுப் புறத்தேவந்து, ஓ, என் அன்புள்ள நண்பனே, இந்த நாகரிக வாழ்க்கை அதனை விரும்புவார்க்கே தக்கது. அச்சமும் கவலையும் சூழக் கொழுவிய உணவுகளை உட்கொள்ளுதலினும், அச்சமின்றி அமைதியாய் அரிசிச்சோறு உண்பதே மேலானது என்று சொல்லிவிட்டுத் தனது நாட்டுப்புற வீட்டிற்குச் சென்றது.
46. கவித்தலை மலைக்கோட்டை
இவ்விந்திய நாட்டுக்கு மேற்கே நெடுந்தொலைவு கடல் தாண்டிச் சென்றால் இத்தாலி தேயத்தின் தலைநகராயுள்ள உரோம் பட்டினத்தை அடையலாம். இது தைபர் என்னும் ஆற்றங்கரையில் மிகவும் அழகியதாக அமைந்திருக்கின்றது. இதனைச் சூழவுள்ள மேல்நாடுகளிலும் இதன்கண்ணும் வாழும் மக்கள் பெரும்பாலும் நம் ஆங்கில மக்களைப் போல் வெண்மைநிறம் மிக்கு நீண்டுயர்ந்த திண்ணியயாக்கை வாய்ந்தவர்களாய் நாகரிகத்திற் சிறந்து விளங்குதலால், இவர்களை நம் பண்டைத் தமிழ் மக்கள் தேவர்கள் என வழங்கி வந்தனர். பண்டிருந்த நம் பாண்டிய மன்னன் ஒருவன், அந்நாளில் உரோம் நகரின்கண் அரசு வீற்றிருந்த அகத்திய (Augustus) வேந்தனுக்குத் தூதுவிடுத்த செய்தியைக் குறிக்கும் ஒரு கல்வெட்டானது, பாண்டியன் தேவர்கள் பால் தூது விடுத்தனன் என்றே நவில்கின்றது. ஆகவே, மேல்நாட்டவர்கள், இங்கிருந்த நம் முன்னோர்களால் தேவர்களாகவே கருதப்பட்டமை தெற்றென விளங்குகின்றதன்றோ? இங்ஙனம் தேவருலகாகக் கருதப்பட்ட அம்மேனாட்டின் தலைநகரான உரோம் பட்டினத்தில் இற்றைக்கு இரண்டாயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அரியபெரிய ஒரு நிகழ்ச்சியை இங்கெடுத்துக் கூறுவோம்.
உரோம் நகரமானது முதன்முதல் உண்டாகியபோது அதிலிருந்த மக்கள் செல்வம் உடையவர்கள் அல்லர். ஒவ்வொருவர்க்கும் இரண்டு மூன்று காணி நிலங்கட்கு மேல் வேறில்லை. அந்நிலங்களை அவர்களே தாமும் தம் குடும்பத்தவருமாகத் திருத்திப் பயிரிட்டு, அவற்றின் விளைவைக் கொண்டு வாழ்க்கை செலுத்தி வந்தனர். அந்நகரத்தைச் சூழவுள்ள வயல் நிலங்களும், ஆடுமாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களும் நாற்புறமும் சுற்றியிருக்கும் மலைகளுக்கு இடையே பச்சைப்பசேலெனக் கொழுமையாய் விளங்கும் காட்சியானது பொற்றகட்டின் நடுவே பதிக்கப்பட்ட முழுப்பச்சை மணியைப் போல் சேய்மையிலிருந்து காண்பார்க்குத் தோன்றா நிற்கும். இவ்வாறு உரோமர்கள் தமது விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் நாளடைவில் பெருஞ் செல்வத்தை அடையலாயினர். அதனால், அந்நகரமானது மிக அழகிய ஏழடுக்கு மாளிகைகளால் வரவரப் பெருகலாயிற்று. இங்ஙனம் நாளுக்குநாள் செல்வத்திலோங்கி வந்த இந்நகரத்தின்கண்ணே கவித்தலை (Capitol) என்னும் ஒரு பாறைமலை உளது. அம்மலையின் உச்சியிலே மிகவும் வலிவான ஒரு கோட்டையும் அக்கோட்டையின் நடுவே சிவத்த (Jupiter)¡ கடவுளுக்கும் அவர்தம் தேவியாரான சிவனை (Juno) அம்மைக்கும் எடுப்பித்த சிறந்த திருக்கோயிலும் அமைக்கப் பட்டுத் திகழ்ந்தன. இம்மலைக் கோட்டையே உரோம் நகரத்திற்குப் பெரியதோர் அரணாய் வயங்கிற்று.
அப்பழையநாளில் உரோமர்களுக்குத் தனி அரசன் இல்லை. அவர்கள் தம்மால் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரைத் தலைவராக நிறுத்தி, அவர்களைக் கொண்டு செங்கோல் செலுத்தி வந்தார்கள். ஆகவே, அவர்களது அரசு குடியரசு என்றே சொல்லல் வேண்டும். உரோமர்கள் தம் அரசியல் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் இடம், அந்நகரத்து மக்கள் ஒருங்கு திரளும் அங்காடி (சந்தை)ப் பக்கமே ஆகும். அங்ஙனம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாட்களில் மட்டும், அவர்கள் தாம் உழவுத் தொழில் செய்யுங்கால் மேற் கொண்டிருந்த பரும்படியான உடைகளைக் களைந்தெறிந்து, விளிம்புகளில் ஊதாக் கரையுள்ள வெண்மையான வேறு ஆடை பூண்டு தொகுதி தொகுதியாகச் செல்வார்கள்.
இவர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இருவரும், யானைமருப்பிற் செய்த அரியணை மீது அமர்ந்து அரசு செலுத்துவர். கோடரிகோத்த கோல்களைச் சேர்த்துப் பிணைத்த கட்டுகள் ஏந்திய கையினராய் மெய்க் காப்பாளர் சிலர் இத்தலைவர்களுடன் அருகுசெல்வர், அருகுநிற்பர். இவ்வுரோம் நகரத்தையடுத்துச் சூழ வேறுசில சிறுசிறு குடியரசு நாடுகளும் இருந்தன. அந்நாடுகளிலிருந்த மக்களும் ஏறக்குறைய உரோம் நகரத்து மக்களை ஒத்த பழக்க வழக்கங்கள் வாய்ந்தவர்களே, என்றாலும், வயல்நிலங்கள் நன்கு விளைந்து, அறுப்பு அறுத்து விளைபொருள்களைத் தொகுத்துக் கொள்ளும் காலங்களில், உரோமர்க்கும், அச்சிறு குடியரசுகளுக்கும் போர் மூள்வதுண்டு. அப்போது அரசியல் தலைவர்கள் தீர்மானம் செய்தபடி, மேற்சொல்லிய கவித்தலை மலைக் கோட்டையில் உரோமர்கள் தம்பெண்டிர் பிள்ளைகளையும் ஆடுமாடுகளையும் பாதுகாத்து வைத்துத் தம் பகைமேற் செல்வர். அங்ஙனம் பகைமேற் செல்லும் காலங்களிலெல்லாம் உரோமர்கள் வெற்றி
யடைபவர் அல்லர். ஆனாலும், தோல்வியடைந்ததனால் மனவெழுச்சி அவிந்து போகாமல் அவர்கள் மேலும் மேலும் பகைவரை விடாமல் தாக்கிக் கடைப்படியாக வாகைமாலை சூடுவர். இங்ஙனம் பண்டை உரோமர்கள் தமது நகரத்தின் பால் அளவிறந்த பற்றுவைத்துத் தமக்குள்ள ஒற்றுமையும் அன்பும் மிக்கு அஞ்சா ஆண்மையினராய் எதிர் நின்று கடும்போர் புரிந்து வந்தமையால், அவர்கள் சிலகாலத்தில் தமக்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் ஒருங்கே வென்று, தமது அரசாட்சியினை இத்தலி தேயத்தின் நடுப்பகுதி எங்கும் வீசிவிளங்கச் செய்தனர்.
இவ்வாறாக ஒருநானூறு ஆண்டுகள் வரையில் உரோமர்களின் அரசு தனக்கு ஒப்பதும் மிக்கதுமின்றித் தனிச்சிறப்பு வாய்ந்து துலங்கிற்று. இத்துணைப் பேராற்றல் படைத்த இவ்வரசுக்கும் பின்னர் ஒருபெருங் கொடும்பகை தோன்றிற்று. காலவர் (Gauls) என்னும் மலைநாட்டவர் கூட்டம் ஒன்று நாளுக்குநாள் ஐரோப்பாப் பெருநிலப் பிரிவின் நடுப் பகுதியில் பெருகி வந்தது. இவர்கள் நீளமான கைகால்களும் செம்பட்டை மயிர்களும் உடையவர்கள்; நீண்டுயர்ந்த வலிய யாக்கை வாய்ந்தவர்கள்; அஞ்சா நெஞ்சினர்கள்; ஆலூப்பு (Alps) மலைகளையே தமக்கு உறைவிடமாய்க் கொண்டவர்கள். இத்தலிதேயத்தின் வடக்கிலுள்ள வயல்நிலங்கள் நன்கு விளைந்து பயன் தரும்காலங்களில் இக்காலவர்கள் அங்கே புகுந்து கொழுவிய விளைபொருள்களைக் கொள்ளை கொண்டுபோகத் தொடங்கிய தல்லாமலும், தாம் புகுந்த அந்நாடுகளில் உள்ள ஊர்களைக் கொளுத்தியும், அவ்வூர் களிலிருந்த மக்களைப் படுகொலைசெய்தும், அங்குள்ள ஆடு மாடுகளைக் கவர்ந்தும் பெருங்கேடு செய்து வந்தார்கள். அங்ஙனம் தாம் பாழ்செய்த ஊர்களில் தாம் குடியேறியும் வந்தனர். இங்ஙனம் இத்தலிக்கு வடக்கே பெருந்தீது இழைத்து வந்தவர்களாகிய காலவர்களும், அதற்குத்தெற்கே ஆற்றலிலும் உழைப்பிலும் நாகரிகத்திலும் மேன்மேல் ஓங்கித் தனியரசு புரிந்த உரோமர்களும் கடைசியாக ஒருவரையொருவர் எதிர்க்கும் காலம் அண்மிற்று. பழைய உரோமர்களைத் தேவர்களாகக் கொண்ட வடமொழிப் புராண நூலார், இவ்வுரோமர்கள் மேற்படை திரண்டு வந்து அவர்கட்குப் பெருந்தீது செய்த காலவர்களையே காலகேயர் என்னும் அரக்கர் கூட்டமாகக் கருதிக் கதையெழுதி வைத்தனர். அது நிற்க.
மேற்சொன்ன கொடிய காலவர் கூட்டத்திற்குப் பிரான் எனப் பெயரிய ஒருவன் தலைவனாய் நின்றனன். இவன் பிறர் எவரிடத்தும் காணப்படாத ஒரு தனித்திறமை வாய்ந்தவன். இவன் தன் கூட்டத்தில் ஒரு பெரும்பகுதியினரைப் படைஞராகத் திரட்டிக்கொண்டுவந்து, இத்தலியின் வடக்கில் இருந்து குளூசியம் என்னும் பட்டினத்தைத் தாக்கினான். அப்பட்டினத்தில் உள்ளவர்கள் அக்கொடிய பெருங்கூட்டத்
தவர்களைத் தனியே எதிர்க்கமாட்டாதவர்களாய், உரோம் நகரிலுள்ள அரசியல் தலைவர்கள் தமக்குத் துணைப்படையொன்று விடுத்து உதவி செய்யுமாறு கேட்டு அவர்கட்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கிசைந்து அத்தலைவர்களும் அரச குடும்பத்திற்சேர்ந்த மூவரை முதலில் அவர்கள்பால் தூதாகப் போக்கினர். தூதுபோன மூவரும் அக்காலவர் தலைவனான பிரானிடம் சென்று, தம்மட்டில் அமைதியாக வாழ்க்கை செலுத்திவரும் குளூசிய நகரத்தார்மேல் நீங்கள் ஏன் வலிந்து வந்து போர் தொடுக்கின்றீர்கள்? அவர்கள் தங்கட்கு யாது தீங்கு செய்தனர்? என வினவினர். அதற்கு அப்பிரான் தலைவன், குளூசியர்கள் கொழுமையான நிலங்கள் வைத்திருக் கின்றனர். அந்நிலங்கள் காலவர்களாகிய எங்கட்கு வேண்டும். அவற்றை எங்கட்குக் கொடாமல் அவர்கள் தாமே வைத் திருப்பதே எமக்குத் தீங்கு செய்வதாகும். உரோமர்களாகிய நீங்களும் இங்ஙனமே அயலவர் நிலங்களைக் கைப்பற்றினீர்கள் அல்லிரோ? ஆதலால், யாம் அங்ஙனம் செய்வது கொடுமையும் அன்று. முறைதவறியதும் அன்று. எவர் வலியரோ அவர் தமக்கு வேண்டுவதைப் பிறர்பாலிருந்து கைக்கொள்வதே பழைய முறையுமாகும். எமக்கு வேண்டுவதைக் கொடாமல் வைத்துக் கொள்ள வல்லர்கள் அங்ஙனமே அதனை வைத்துக் கொள்ளட்டும், பார்க்கலாம், என்று விடை கூறினான்.
அவன் கூறிய அம்மறுமொழியைக் கேட்டுச் சினம் கொண்ட அத்தூதுவர் மூவரும் குளூசியரிடம் சேர்ந்து கொண்டு காலவர்களுடன் போர்புரியத் தொடங்கினர். அம்மூவரில் ஒருவர் அக்காலவர் தலைவனைச் சேர்ந்த வலிய ஒருவனோடு தனிச் சண்டையிட்டு அவனைக் கொல்லுதலும் செய்தனர். தூதுவர்களாய்ச் செல்பவர்கள் தமக்குரிய கடமையை மீறி அங்ஙனம் ஒரு பக்கத்தவருடன் சேர்ந்து மறு பக்கத்தவரைத் தாக்குதல் ஆகாது. முறைகடந்த இச்செயலைக் கொடிய காலவர்களும் செய்தவர். அல்லர். ஆகவே, அவர் தலைவனான பிரான் தன் தூதுவர்களை உரோம் நகர்த் தலைவரிடம் போக்கித்… தூதுநெறி பிழைத்த அம்மூவரையும் தான் ஒறுத்தற்காக அம்மூவரையும் அவனிடம் ஒப்புவித்து ஒறுத்தல் தக்கதே – எனக் குருமார்களும் சூழ்ச்சித் துணைவர் களும் இசைந்துரைத்தனராயினும், அத்தூதுவரின் தந்தையார் அவர்களை அங்ஙனம் செய்தல் ஆகாதெனத் தடுத்து, இனி மூளும் போருக்கு அம்மூவருமே தலைவராய்நின்று படை செலுத்த வேண்டுமென வற்புறுத்தித் தம் புதல்வர் செய்த குற்றத்திற்கு உரோம் மக்கள் அனைவருமே உடன்படுமாறு சொல்லிவிட்டனர். இதனால் உரோமர்கள் எல்லார்க்குமே ஓர் அலைப்பு வந்தது.
முறைசெய்யத் தவறிய உரோமர்கள்மேற் காலவர்கள் கடுஞ்சினமும் சீற்றமும் கொண்டனர்; அதனால் தாம் புகுந்த வடக்கிடங்களில் கொள்ளையிடுதலை விட்டு, உரோமர்களைத் தவிர வழியிலுள்ள ஏனைக் குடியரசுக்கெல்லாம் தாம் நண்பரே எனப்புகன்று, நேரே உரோமரைத்தாக்குதற்கு மிக விரைந்து போந்தனர். உரோமர்கள் தாம் முறைபிசகி நடந்ததை உன்னி வருந்தினராய்க், கடுகெனத் தம்முடைய படைகளைத் திரட்டலாயினர். தாம் போர்க்குச் செல்லுமுன் கடவுளர்க்கு வழிபாடு செய்யும் வழக்கத்தினராயிருந்தும் தாம்தம் குருமார் சொல்லைக் கேளாமல் நடந்தமையால், உரோமர்கள் இப்போது கடவுள் வழிபாடு செய்யாமலே போருக்கு எழுந்தனர். குற்றம் செய்த நெஞ்சம் குறுகுறு என்னும் பழமொழிப்படி, போர்செய்யும் முன்னம் அவர்கள் நெஞ்சமே வலியழித்ததாயின், அவர்கள் காலவருடன் செய்த போரில் தோல்வி அடைந்தனரெனவும் வேண்டுமோ? உரோம் நகருக்குப் பதினோருகல் எட்டியுள்ள அலியா ஆற்றங்கரையில் காலவர்களால் முறிவுண்ட உரோமர்கள் சின்னபின்னமாய்ச் சிதைந்து பின்முதுகு காட்டித் தம்நகர் நோக்கி ஓடிவருகையில் பெரும்பாலார் தைபர் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டு அமிழ்ந்து இறந்தனர். எஞ்சிய மிகச்சிலரே தம் நகரில் வந்து சேர்ந்தனர்.
அங்ஙனம் முறிந்தோடிய உரோமர்களைக் காவலர்கள் உடனே பின் தொடர்ந்திருந்தனராயின், உரோமரென்ற பெயரும் உரோமரினமும் அவர்தம் கத்திக்கு இரையாகி அடியோடு அழிந்தும் போயிருக்கும். ஆனால், அக்காலவர்கள் அவர்களைப் பின் தொடராராய் அவர்களிடமிருந்து கொள்ளை கொண்ட பொருள்களைத் தாம் பங்கிட்டுக் கொள்வதிலும் விருந்தாட்டு அயர்வதிலும் மூன்றுநாள் கழித்தனர். அதனால், உயிர் தப்பிய உரோமர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிகளை அம்மூன்று நாட்களிற் செய்து கொண்டனர். உரோமரின் படையாட்கள் கலைந்து போய் விட்டமையால் நகரத்தைப் பாதுகாக்கும் கருத்து எவர்க்குமே இல்லையாயிற்று. எஞ்சி நின்றவர்களில் மனத்திட்பம் உடையவர்கள் தாம் எடுத்துக் கொள்ளக் கூடிய பண்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கவித்தலை மலைக்கோட்டையில் போய்ச் சேர்ந்தனர். அங்ஙனம் அதனுட் சேர்ந்த உரோமர்கள், அதனைப் பகைவர்கள் வந்து தாக்குவரேல் அதனை முடிவு வரையில் தாம் காத்து நிற்பதென்றே உறுதி செய்தனர். கலைந்துபோன தம் படைஞர்கள் இதற்கிடையில் மீண்டும் ஒருங்கு கூடிவந்து தமக்கு உதவி ஆற்றுதல் கூடுமெனவும், அல்லது காலவர்களே தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டபின் உரோம் நகரைவிட்டு அகலுவர் எனவும் அவர்கள் எண்ணினர்.
சண்டைசெய்ய வலியில்லாதவர்கள் உரோம் நகருக்குப் புறம்பே வெளியிலுள்ள ஓர் ஊரில் போய் அடைந்தனர். அவ்வாறு சென்றவர்களில் வெள்ளாடையுடுத்த கன்னிப் பெண்களும் பலர். இவர்கள் என்றும் அவியாது ஒளிவிடும் நெருப்புள்ள தடவுகள் (தூபக்கால்கள்) ஏந்திய கையினராய் நெடுவழி நடந்து செல்கையில் இவர்களுடைய அடிகள் புண்பட்டதும் அல்லாமல், இவர்கள் தாம் சுமந்து சென்ற கோயில் தட்டு முட்டுகளாலும் மிகவும் களைத்துப் போனார்கள். இவர்களுக்குச் சிறிது முன்னே தன் குடும்பத்தவரை வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ற அலுவினியன் என்பான், இப்புனித மாதரார் அங்ஙனம் களைத்துத் தள்ளாடி வருதலைக் கண்டு நெஞ்சம் இரங்கித் தன் குடும்பத்தவரைக் கீழ் இறக்கி விட்டு, இக்கன்னி மகளிரைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனன். ஒவ்வொருவரும் தம் உயிர் பிழைக்க ஓடும் அந்நேரத்தில் தன் நலத்தையும் குடும்பத்தினர் நலத்தையும் ஒரு சிறிதும் பாராது, இக்கன்னிமாரைத் தனது வண்டியிலேற்றிக் கொண்டு சென்ற அவ் ஆண் மகனது அரிய இரக்கச் செயலைக் கேட்டவரெல்லாம் அவனைப் பெரிதும் வியந்து கொண்டாடினர்.
அவ்வாறு உரோம் நகரை விட்டுச் செல்லாதிருந்தவர்கள் பழைய அரசியல் சூழ்ச்சித் துணைவர்கள் எண்பதின்மரும் குருமார் சிலருமேயாவர். ஓடவலியற்ற சிலர் தாம் கவித்தலை மலைக் கோட்டையினுள் சென்று சேர்ந்தால், அங்கே போர் செய்ய வல்லவர்களாய் உள்ளார்க்குப் பயன்படும் அரிய உணவுப் பொருள்களில் தாமும் பங்குபெற நேரும் என உன்னித் தாம் அங்குச் செல்ல மனம் ஒருப்படாமல் பகைவரின் கத்திக்குத் தம்மை இரையாக்கித் தூது நெறி பிழைத்தாரால் தமது நாட்டுக்கு வந்த ஏதத்தை அவ்வாற்றால் நீக்கிவிடத் துணிந்தனர்! ஈதன்றோ தனக்கென வாழாத் தாளாளர் செயல்!
மூன்றுநாட் சென்றபின் காலவர்கள் முன்னேறிவந்து உரோம் நகரிற் புகுந்தனர். மதில்வாயில் பெருங்கதவுகள் திறந்தபடியாய் நின்றன; தெருக்களில் அரவம் ஏதுமே இல்லை; தெருக்களிலுள்ள இல்லங்களின் வாயிற் கதவுகளும் திறந்திருந்தன; ஆனால், அவ்வில்லங்களினுள் எவருமே காணப் படவில்லை. அதனால், அக்காலவர்கள் வெறும் தெருவு களினூடே விரைந்து நடந்து, அரசியல் மண்டபத்தில் போய்ச் சேர்ந்தனர். அம்மண்டபத்தில் உயர எழுப்பிய ஒரு பலகைமேல் ஒரு வரிசையாக இடப்பட்டிருந்த யானை மருப்பில் செய்த நாற்காலிகள் ஒவ்வொன்றிலும், நரைத்த தலை மயிரும் நரைத்த தாடிமயிரும் உடையவராய்த் திறப்பாக விடப்பட்ட கைகால் களுடன் ஊதாச் சரிகைக் கரைகோத்த விளிம்புகள் வாய்ந்த வெள்ளைக் குப்பாயம் பூண்டு, கையில் வெள்ளிய செங்கோல் பிடித்த உருவங்கள் ஆடாத அசையாத முகத்துடன் பெருந் தன்மையோடு அமர்ந்திருத்தலை அக்காலவர்கள் கண்டார்கள்.
கண்ட அவ்வுருவங்களின் கண்களைத் தவிர மற்ற உறுப்புக்களினால் அவை உயிருள்ளவென்று நம்புதற்கு இடம் இல்லாமலேயிருந்தது. அதனால், அக்காலவர்கள் அவை உயிர் உள்ளவைகளா இல்லாதவைகளா எனத் தம்முள் ஐயுற்று, அவ்விழுமிய காட்சியைக் கண்டு திகைப்புற்று அவற்றின் முன்னே வாய்வாளாது நின்றனர். அவ்வுருவங்கள் தெய்வ வடிவங்களா அல்லது அவ் உரோம் நகரத்தில் அரசு செலுத்தும் தலைவர்களின் குழுவா என்று இறும்பூதுற்று எண்ணினர். கடைசியாக அவர்களில் முரடனான ஒருவன் அவ்வடிவங் களின் உண்மையைத் தெரிதல் வேண்டி, அவற்றுள் ஒன்றன் தாடி மயிரைப் போய்த் தடவினான். நாகரிகமற்ற ஒரு காலவன் அங்ஙனம் தம்மைத் தொடுதற்கும் பழித்தற்கும் உரோமரது உள்ளம் பொறுக்குமோ! உடனே, தொடப்பட்ட அவ்வுருவம் தன் கையில் பிடித்திருந்த வெள்ளைக் கோலால் தன்னைத் தொட்டவன் தலையைப் புடைக்கவே, காலவர் கொண்ட ஐயம் ஒழிந்தது. அங்கு அமர்ந்திருந்த அவ்வுருவங்கள் உரோம் நகரின் அரசியல் தலைவர்களே எனத் தெளிந்தனர். தெளிந்ததும், அத்தலைவரின் மாட்சி வடிவம் கண்டு அக்காலவர்கட்குண்டான வணக்க ஒடுக்கமெல்லாம் பறந்து போயின. உடனே அக்கொடியவர்கள் பெருஞ்சீற்றத்துடன் அவர்கள்மேல் பாய்ந்து, ஒவ்வொருவரையும் நாற்காலியிலிருந்தவாறே வைத்துக் கத்தியால் குத்திக் கொன்றார்கள்! அதன்பின் அவர்கள் அந்நகரமெங்கும் பரவி வீடுகளில் புகுந்து கொள்ளை யிட்டும், அவைகளைத் தீக்கொளுவியும் அழித்தனர்.
ஆனாலும், அவர்கள் கவித்தலை மலைக்கோட்டையைக் கைப்பற்றுவது தம்மாலியலாதென்று கண்டார்கள். கண்டு அதனுள் இருந்தவர்களைப் பட்டினி கிடத்தி அழிக்க முனைந்தனர். அதற்கிடையில் அந்நகரத்தின் புறமதில்களையும், நெருப்புக்குத் தப்பின வீடுகள் கோயில்களையும் அழிக்கும் கொடு முயற்சியில் தலையிட்டனர். கவித்தலை மலைக்கோட்டையின் உயரத்திலிருந்து உரோமர்கள், கீழே தமது நகர்முழுதும் கரிந்து பாழாதலையும் கொடிய காலவர்கள் ஆங்காங்கு வெறிகொண்ட வேங்கைப் புலிகள் போல் அலைதலையும் கண்டு உள்ளம் வெதும்பினர். இப்பொல்லாத நேரத்திலும் அவர்கள் தாம் இறைவன்பால் வைத்த உறுதியான அன்பில் சிறிதும் நெகிழ்ந்திலர். இத்தனை தீங்கும் தூதுநெறி பிழைத்தார்க்கு உதவியாயிருந்தமையால் வந்த முறையான திருவருளொறுப்பே என நினைந்து, அதன் ஆணைக்கு அடங்கி ஒழுகவே தீர்மானித்தனர்.
தாம் உடன்கொண்டுவந்த உணவுப் பண்டங்களின் தொகை நாளுக்கு நாள் சுருங்கித் தாம் பட்டினி கிடக்க வேண்டிய நாள் அருகியும் தாம் சிவனையம்மைக்கு நேர்ந்துகொண்டு ஆங்குள்ள அவளது திருக்கோயிலில் விட்டு வைத்த தாராப் பறவைகளை உரோமர்கள் சிறிதும் தொடவேயில்லை. இடுக்கட்பட்ட இவ்வேளையில் அவர்களில் ஒருவ
னான பேவியன்றார்சன் என்பான் செய்த செயற்கருஞ்செயல் பெரிதும் நினைவு கூரற்பால தொன்றாய் நிலவுகின்றது. தான் வழிபடும் குலதெய்வத்திற்கு ஆண்டிற்கு ஒருகால் எடுக்கும் திருவிழாநாள் வந்தது; அஃது அந்நகரத்திலுள்ள ஒரு சிறிய குன்றின்மேல் செய்யப்படுவதாதலால், அவன் வெள்ளை உடை பூண்டு கையில் வழிபடு பொருள்களும் அத்தெய்வத்தின் வடிவமும் ஏந்திக் கவித்தலை மலைக் கோட்டையிலிருந்து புறம்போந்து கீழ்இறங்கி அங்கே குழாங்கொண்டிருந்த கொடும்பகைவர் கூட்டத்தூடே அஞ்சாது வழிநடந்து சென்று, அச்சிறியகுன்றின்மேல் அவ்வழிபாட்டினைச் செய்து முடித்து, மீண்டும் செவ்வனே கவித்தலை மலைக்கோட்டை யினுள் போய்ச் சேர்ந்தான். அங்ஙனம் தெய்வவணக்கத்தின் பொருட்டு அவன் வருதலையும் போதலையும் கண்டு, அக்காலவர்கள் அவனுக்கு ஏதும் தீது செய்திலர் பாருங்கள்! தெய்வ வழிபாட்டில் உறைத்துத் தன்னுயிரையும் ஒரு பொருட்டாய் எண்ணாத அவ்வுரோமனைக் கண்டு, அத்தீயவர்களும் அடங்கி, அவனுக்கு ஏதுமே ஊறு செய்திலர் என்றால் தெய்வத்தின் அருளொளியிலேயே முழுதும் தோய்ந்து நின்ற நினைவுடையார்க்கு எவராலும் எதனாலும் எத்தகைய இடரும் நேராதென்பதனை நாம் விண்டு சொல்லுதலும் வேண்டுமோ அறிக!
இனிக், கவித்தலை மலைக்கோட்டையினுள்ளிருந்து பசித்து வருந்தும் உரோமர்கள் எவ்வாறாயினர்? அவர்கட்குக் கோட்டையின் வெளியேயிருந்து எவ்வாறு உதவி வந்தது? என்று கூறுவாம். அவ்வுரோம் நகரிற் போராண்மையில் சிறந்த காமிலியன் என்பான் ஒருவன் இருந்தனன். அவன் அத்தலைநகரைச் சூழ இருந்த பட்டினங்களில், உரோமர்க்குப் பகைவராயிருந்தார். அனைவரையும் வென்று அடக்கினவன் ஆவான் என்றாலும் தற்பெருமையும் செருக்கும் அவன்பால் மிக்கிருந்தமையால், அவனை எல்லாரும் வெறுத்து அவன்மேல் இல்லாத குற்றம் சுமத்தி, அவன்பாலிருந்த பெருந்தொகைப் பொருளையெல்லாம் பிடுங்கப் பார்த்தனர். அதனால் அவன், அயலிலுள்ள ஆரதியம் என்னும் ஊரில் போய்க் குடியேறி வாழ்ந்து வந்தனன்.
ஈதிங்ஙனமிருக்கக் காலவர் தலைவனான பிரானது படையில் பாதி மேற்சொன்ன ஆரதிய ஊரைத் தாக்க வரும் செய்தி அதன்கண் உள்ளார்க்கு எட்டியது. அதுகேட்ட காமிலியன் உடனே அவ்வூர்த் துரைத்தனத்தாரிடம் சென்று, தான் அவ்வூரைக் காப்பதற்கு முன் நிற்பதை அறிவிக்க, அவர்களும் அதற்கு மகிழ்வுடன் இசைந்து, அவ்வூர்ப் படையை அவன்பால் ஒப்புவிக்க, அவனும் படைக்கலம் பிடிக்கத்தக்க பொருநரையெல்லாம் ஒரு மிக்கத் திரட்டிக் கொண்டு போய், எதிரேறி வந்த காலவர்படையை நள்ளிரவில் தாக்கி அதனைச் சின்னபின்னமாகச் சிதற வடித்துச் சவட்டித், தனதூரைக் காத்தான். இவன் செய்த போராண்மைச் செயல், சிதைவுண்டு சிதறிய உரோமர்களின் செவிக்கு எட்ட அவர்கள் அதனால் மனக் கிளர்ச்சி மிகப் பெற்றுத் தமக்குக் காமிலியன் படைத்தலைவனாக நிற்க ஒருப்பட்டால், தாம் கவித்தலை மலைக்கோட்டையில் உள்ள தம்மவர்க்கு உதவிசெய்து, திரும்பவும் உரோம் நகரின் பெரும்புகழை மீட்டு நிலைபெறுத்துதல் கூடுமென நினைந்து, காமிலியனுக்குத் தம்முடைய கருத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்துத் தூதுவிடுத்தனர். காமிலியன் வணங்காமுடியனும் இறுமாப் புடையனுமாதலால், தான் தனது நகரினின்றும் துரத்தப் பட்டவனாதலால், உரோம் அரசியல் தலைவரின் உடன்பாடும் கட்டளையும் இன்றித் தான் அவர்க்குத் தலைவனாய் நின்று படை நடத்துதல் இயலாதென மறுமொழி போக்கினான். உரோம் அரசியல் தலைவர்களோ இப்போது கவித்தலை மலைக் கோட்டையினுள் அடைபட்டிருக்கின்றனர். அவர் கட்கு வெளியேயுள்ள உரோமர்கள் செய்தி விடுத்து அவர்களைத் தமது கருத்துக்கு ஒருப்படுவிக்குமாறு யாங்ஙனம்? கொடிய காலவர்களோ அக்கோட்டையைச் சூழப் படைவீடு கொண்டிருக்கின்றனர்! என் செய்வதென்று எல்லாரும் பெரிதும் தயங்கினர்.
இந்நிலையில் கோமினியன் என்னும் ஓர் இளைஞன் தம்மவர்க்காகக் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் பால் தூது செல்லுதலை மேற்கொண்டான். தான் தைபர் ஆற்றின் பாலத்தைக் கடந்து செல்லக் கூடாவாறு காலவரின் காவலாள் அதனைக் காத்துநின்றால், தான் ஆழம் மிகுந்து அகன்ற அவ்வியாற்றை நீந்திச் செல்லவேண்டுமே என எண்ணி, ஒரு குடியானவனுக்குரிய உடை உடுத்தித் தான் நீரில் அமிழ்ந்தி விடாமல் மிதத்தற்கு உதவியாகப் பெரியபெரிய நெட்டித் துண்டுகளை அவ்வுடையின்கீழ் இணைத்துக்கொண்டு, நாள் முழுதும் கால்நடையாகவே நடந்து, இராப்பொழுதில் அவ்வியாற்றின் அருகுற்றான். தான் முன் எண்ணியவாறே காலவரின் காவலாள் அதன் பாலத்தைக் காத்து நிற்றல் கண்டு, அதனை விலகிப் போய்த் தனதுடம்பின் மேற்புறத்தில் நெட்டியோடு பிணைத்த துணியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அவ்வியாற்றில் இறங்கி நீந்தியபடியாய்க் கவித்தலை மலையடி வாரத்தினருகே சேர்ந்து கரையேறினான். அவ்வடிவாரத்தில் விளக்கு வெளிச்சம் காணப்பட்ட இடங்களையும், மக்கள் பேசும் ஒலிகேட்கும் இடங்களையும் விழிப்பாக விட்டகன்று, பகைவர் இல்லாத இடமாகத் தோன்றிய அம்மலையின் செங்குத்தான ஒரு பக்கத்தைத் தெரிந்தடைந்தான். அப்பக்கம் மிகவும் செங்குத்தாய் இருந்தமையால் அதனூடு எவருமே ஏறி அம்மலைமேல் செல்லல் முடியாதென்று கருதிக் காலவர் படைஞர் எவரும் அங்கே காவலாக வைக்கப்படவில்லை.
மெய்யாகவே அச்செங்குத்தானபக்கம் மேலேற விரும்புவார் எவர்க்கும் பேரச்சத்தை விளைப்பதொன்றாகவே தோன்றியது. ஆனால் தன்னுயிரையும் ஒரு துரும்பாய் எண்ணித் தான் முடிக்கக் கருதிய அருவினையிலேயே கண்ணும்கருத்தும் உடைய அவ்வாண் மகனுக்கோ அஃதொரு தடையாய்க் காணப்படவில்லை. அவன் இருள் சூழ்ந்த அவ்விரவில் அம்மலைப் பக்கத்திற் படர்ந்திருந்த வேர்களைக் கைகளாற்பற்றிக் கொண்டும், பைம்புற் பொழிகளின் அடியில் காலடிகளை உதைந்துகொண்டும் தொற்றித்தொற்றி இவர்ந்து, அம்மலையுச்சியில் போய் அக்கோட்டைக் கொத்தளத்தின் மேல் நின்றான். நின்றவனைப் பகைவனென்றோ நண்பனென்றோ அறியாமையால் அங்கிருந்த காவலாளர் விரைந்து போந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். அங்ஙனம் சூழ்ந்தார்க்கு அவன் தன் பெயரை எடுத்துச் சொல்லி இலத்தீன் மொழியில் பேசவே, ஆறு திங்களாகத் தம்மவரின் ஒரு புதியமுகத்தையும் காணப் பெறாமல் பட்டினியும் பசியுமாய் அதனுட் கிடந்து மாழ்கிய உரோமர்கள் அவன் முகத்தைக் கண்டும் அவன் தமது தாய்மொழியில் பேசிய சொற்களைக் கேட்டும், போன உயிர் மீண்டவர்களாய் அளவிலாக் களிப்பெய்தினர்.
அங்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த அரசியல் தலைவர்களும் கடிதில் எழுப்பப்பட்டு அவன்பால் வந்து குழுமினர். ஆரதியத்தைக் காலவர் வந்து தாக்கினமையும், காமிலியன் உடனே தம்மூராரைப் படைதிரட்டிக் கொண்டு சென்று, அவரை எதிர்தாக்கி மாய்த்தமையும், இப்போது அரசியல் தலைவர்கள் ஒருங்கிசைந்து அக்காமிலியனைப் படைத்தலைவனாக ஏற்படுத்திக் கட்டளை தந்தால் சிதர்ந்து போன உரோமர்கள் அத்தனை பேரும் அவன்கீழ் ஒருங்குதிரண்டு வந்து பகைவரை அழித்துக் கவித்தலை மலைக்கோட்டையை மீட்க முனைந்து நிற்றலையும் அவன் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் அவர்கட்கு எடுத்துரைத்தான். உடனே அரசியல் தலைவர் அனைவரும் மறுமாற்றம் இன்றி ஒத்து ஒருமுகமாய் காமிலியனையே நம்மவர் எல்லார்க்கும் ஒப்புயர்வில்லாப் படைத்தலைவனாகத் தந்தோம் என்று உறுதிமொழி பகர்ந்தனர். அம்மகிழ்வான செய்தியைப் பெற்றுக் கொண்ட கோமினியன் சிறிதும் தாழாது அவ்விரவே அம் மலையை விட்டுப் பெரியதோர் இடர்ப்பாட்டுடன் கீழிறங்கித் தம்மவர்பால் சென்று அதனை எல்லார்க்கும் பெருங்கிளர்ச்சி உண்டாகத் தெரிவித்தனன்.
மறுநாட்காலையில், அம்மலையைச் சூழ்ந்திருந்த காலவர்கள் முன்நாள் இரவு செங்குத்தாய் நின்ற அதன் பக்கத்தில் எவரோ ஏறிச் சென்ற அடையாளங்களைக் கண்டார்கள். ஏனென்றால், அங்கங்கே அப்பக்கத்தில் வளர்ந்திருந்த சிறு தூறுகளும் படர்கொடிகளும் அலைக்கப்பட்டு இடையிடையே முறிந்து காணப்பட்டன; கற்பாறைகளில் பிடித்திருந்த பாசிகள் கைகால் உரைசித் தேய்வுண்டிருந்தன; புதிய உருண்டைக் கற்களும் மண்ணும் மேலிருந்து கீழ் உதிர்ந்து சிதறிக் கிடந்தன. இவ்வடையாளங்களைக் கண்டதும் காலவர்கட்குச் சினம் மூண்டது. நகரவாழ்க்கையிலிருந்து மென்மையாய் வளர்ந்த ஓர் உரோமன் இருள்செறிந்த அவ்விரவில் செங்குத்தான அம்மலைப் பக்கத்தே ஏறிச் சென்றனனென்றால் பனிக்கட்டி நிறைந்த மலைக் குவடுகளிலும் இருண்டு ஆழ்ந்த மலைப் பிளவுகளிலும் ஆலங்கட்டிகள் குவிந்த ஆலூப்பு மலைகளிலும் வாழ்க்கை செலுத்தும் முரடராய் வளர்ந்த காலவர்கள் அம்மலை மேல் ஏறுதற்குப் பின்வாங்கலாமோ எனப் பிரான் தலைவன் எண்ணினான். பிறகு, தம் மலை வாணரில் மிகவும் திண்ணியரா யுள்ளாரைத் தெரிந்தெடுத்து, நள்ளிராப் பொழுதில் சிறிதும் அரவம் இன்றி அவர்கள் ஒருவர்பின் ஒருவராய் அம்மலை மீதேறி, உரோமரைத் திடுமெனத் தாக்கி, அவர்கட்கு வை என்னும் ஊரிலிருந்து உதவிப்படை வருமுன் அவர்கள் அனைவரையும் வெட்டிக் குவித்து வெற்றிகொள்க என அவன் அவரை ஏவினான்.
அவன் ஏவியபடியே திண்ணிய காலவர்கள் ஒரு சிறிதும் ஓசையுண்டாகாமல் ஏறியதனால், அக்கோட்டையில் காவலாய் நின்ற நாய்களும் அவரது வருகையினை அறிந்தில. மதின்மேற் காவலாய் நின்ற படைஞனோ பசிக்களைப்பில் உண்டான கடும் தூக்கத்தில் தன்னைமறந்து கிடந்தான். என்றாலும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்னும் மூதறிஞர் உரைப்படி, கோட்டையின் உள்ளிருந்த உரோமர்க்கு அங்கிருந்த சிவனையம்மை கோயிலிலிருந்து ஒரு முன்னறிவிப்பு எழுந்தது. அவ்வம்மைக்கு நேர்ந்து கொண்டு அக்கோயிலில் விட்டு வைத்திருந்த தாராப் பறவைகள் எங்ஙனமோ அவ்வேற்று ஆட்களின் வருகையை அறிந்து தம் இறக்கைகளை அடித்துக் கொண்டு கத்திக் கெக்கெலி செய்து பேரொலியை உண்டாக்கின. தாம் கடும்பசியால் வாடிவதங்கும் காலத்தும் உரோமர்கள் அப்பறவைகள் அம்மைக்காக விடப்பட்டன வென்று அன்புடன் கருதி அவற்றைத் தாம் உணவுக்காகக் கொல்லாது விட்டு வைத்தமையாலன்றோ அவர்கள் இப்போது அப்பறவையினங்களால் காக்கப்படு வராயினர்? அவை செய்த பேரிரைச்சலைக் கேட்டு அங்கே உறங்கிக் கிடந்த உரோமர்கள் உடனே விழித்துக் கொண்டனர். விழித்துக்கொண்டவர்களில் மானிலியன் என்பவனே உற்ற நேரத்தில் முதன்முதல் விரைந்து போந்து, அக்கோட்டையின் புறமதிலில் அப்போதுதான் ஏறி வந்து கால் வைத்த காலவர்களைத் தாக்கினான். அவன் முன்னதாக வந்து நின்ற காலவன் ஒருவன் வெட்டுதற்குத் தனது மழுப்படையை ஓங்கிய காலையில், அம்மானிலியன் தன் கைவாளால் அவனது கையைத் துணித்துப், பின்னர் அவனையும் அச்செங்குத்தான மலைப்பக்கமாய்க் கீழே தள்ளிவிட்டான். வீழ்ந்தவன் பின்னே ஏறிவரும் காலவனையும் அங்ஙனமே தொலைத்தற்கு முனைந்து மானிலியன் அம்மதின்மேல் தனிநின்றான். இதற்குள்ளாகக் கோட்டையின் உள்ளிருந்த படைஞர்கள் அத்தனை பேரும் காலவரை எதிர்தாக்குதற்கு மதிலண்டை வந்து சேர்ந்தார்கள். ஏறிவந்த காவலரெல் லாரும் உடனே கீழ் வீழ்த்தப் பட்டனர். மதின்மேல் தன் காவலில் கருத்தின்றி உறங்கிய படைஞனையும் உரோமர்கள் உருட்டிக் கீழே தள்ளிவிட்டனர். தனிநின்று காலவரை மதின்மேல் எதிர்த்துத் தொலைத்த மானிலியன்பால் படைஞரெல்லாரும் நன்றி மிக்கவராய்த் தாம் மிகுத்து வைத்திருந்த அரிய சிறிது உணவினையும் பருகு நீரினையும் கொணர்ந்து தந்தனர்.
இந்நேரத்தில் கவித்தலை மலைக்கோட்டையிலுள்ளார் நிலை கவலைக்கு இடமாகவேயிருந்தது. கீழூர்களிலிருக்கும் தம்மவர் பாலிருந்து தூதுவந்த கோமினியன் இருண்ட அவ்விரவில் பகைவர்களுக்குத் தப்பித் திரும்பிச் செவ்வனே அவர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கக் கூடுமா என்று அவரெல்லாரும் ஐயுற்றுக் கலங்கினர். அவன் அச்செங்குத்தான பக்கத்தே ஏறி மேல்வந்த அடையாளத்தைக் கண்டன்றோ காவலரும் அவ்வழியே ஏறித் தம்மைத் தாக்க வந்தனரென்று உரோமர்கள் நினைத்தனர்; அதனால் அவன் அவர்களால் பிடிபட்டிருப்பனெனவே அவர்கள் கருதலாயினர்.
இங்ஙனம் எல்லாம் கலங்கிக்கொண்டிருக்கையில் அவர்களுள் ஒருவற்கு ஒரு கனவு தோன்றிற்று. அம்மலைத் தலைக்கோயிலில் உள்ள சிவத்தர் என்னும் கடவுளின் திருவுருவம் அவன் முன்னே தோன்றியது. தோன்றிய அஃது அவனை நோக்கி, நீங்கள் எல்லீர்க்கும் உணவாக மிச்சமிருக்கும் கோதுமைமா அவ்வளவும் எடுத்து அப்பமாகச் சுட்டுக் கீழே சூழ்ந்துகொண்டிருக்கும் தங்கள் பகைவர்களின் நடுவே அவ்வப்பங்கள் எல்லாவற்றையும் எறிந்து விடுங்கள்! என்று கட்டளையிட்டு மறைந்து போயது. சிறிதிருக்கும் உணவையும் இங்ஙனம் எறிந்துவிடின் எவ்வாறு உயிர் பிழைப்பதென அங்கிருந்த உரோமர் அனைவரும் எண்ணினரேனும், அச்சிவத்தப் பெருமான் இட்ட கட்டளையை மீற எவரும் உள்ளம் துணிந்திலர். உயிர் ஒழிந்தாலும் இறைவன் கற்பித்தபடி செய்வதே தக்கதென அவரெல்லாரும் ஒருங்கியைந்து, தம்மிடம் மிச்சமாயிருந்த மாவையெல்லாம் எடுத்துப்பிசைந்து அப்பமாகச் சுட்டுச், சுட்ட அப்பங்களை எல்லாம் கீழுள்ள பகைவரது குழுவில் வீசினர். மேலிருந்து கீழ்விழுந்த அவ்வப்பங்களைப் பசியால் வாடிவதங்கித் தத்தளிக்கும் தமது பசிவருத்தம் கண்டு இரங்கிப் பகைமை பாராது உணவு தந்த அவ்வுரோமர்கள் பால் நன்றியும் அன்பும் இயற்கையாகவே தம்முள்ளத்தே கொள்ளப் பெற்றனர்.
அதுவேயுமன்றி அக்காலவர் தலைவனான பிரானும் தம்மவர் அத்தனை பேர்க்கும் அத்தனை மிகுதியான உணவு தந்த உரோமர்கள் இன்னும் எவ்வளவு மிகுதியான உணவுப் பண்டங்கள் வைத்திருக்க வேண்டும்! அவ்வளவு மிகுந்த உணவு வைத்துக் கொண்டு மலைமேல் கோட்டையில் வலியரா யிருக்கும் அவர்களைக் கீழே உணவின்றிப் பசித்து வருந்தும் தம்மவர் தொடர்ந்து முற்றுகை செய்திருத்தல் பயன்தராவென எண்ணினான். எண்ணி அவர்களுடன் ஒத்துப் போகும் கருத்துடையனாய், அவர்களின் தலைவர்பால் ஒரு தூதுவனை விடுத்தான். அதற்கிசைந்து அவர்கள் சொல் விடுப்பவே, பிரான் அம்மலைமேற்போந்து அத்தலைவரில் ஒருவருடன் அமைதி பேசி, அவர்கள் தனக்கு முந்நூற்று முப்பத்துமூன்று வீசை எடையுள்ள பொன்னை நிறுத்துத் தந்தால், தான் தம்மவருடன் உரோமருடைய நகரத்தையும் நாட்டையும் விட்டுப் போய்விடுவதாக உறுதிமொழி புகன்றான். அதற்கு அவ்வுரோம் தலைவர் இணங்கவே, காலவர் தம்மிடம் இருந்த வீசைக் குண்டுகளைக் கொண்டுவந்தனர். உரோமர்கள் தம்மவர் பாலிருந்து திரட்டிக் கொணர்ந்து தொகுத்த பொற்பணிகள் காவலர் கொணர்ந்த எடையினும் மிகுதியாக இருந்தன. அப்பொற்குவியலைக் கண்ட பிரான் அவ்வளவையும் தான் கவர்ந்துகொள்ள அவாக்கொண்டு, தூக்குத்தட்டில் எடை குண்டொடுகூட நிறைமிகுந்த தனது கொடுவாளையும் இட்டான். அதுகண்ட உரோமர்கள் கேட்ட அளவுக்குமேல் பொன் கொடுக்க இசையோமென மறுக்கக் காலவர்களும் உரோமர் களும் பெரும் சீற்றத்துடன் வழக்குப் பேசலாயினர்.
இவர்கள் இவ்வாறு வழக்காடிக் கொண்டிருக்கையில், கீழிருந்த காலவர் குழாத்திலிருந்து ஒரு பெருங்கூக்குரல் மேலெழுந்தது. அதனையடுத்துக் காமிலியனைத் தலைவனாய்க் கொண்டு உரோமரது பெரும்படையொன்று மலைமேல் பாட்டையில் ஏறிவந்தது. அதைக் கண்டதும் அக்கவித்தலை மலைக்கோட்டையிலிருந்த உரோமர் அனை
வரும் பெருங்களிப்பும் பெருங்கிளர்ச்சியும் உடையராகி, அங்கே தாம் கொணர்ந்து குவித்த பொற்றிரளையெல்லாம் மீண்டும் தமது களஞ்சியத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்கும்படி, தம்மவர்க்குப் பணித்தனர். அவர்களின் தலைவரும் பிரானை நோக்கி, உரோமர்கள் தமது நாட்டை இருப்பினாற் காப்பவரேயல்லால் பொன்னினாற் காப்பவரல்லர் என்று ஆண்மையுடன் கூறினர். அதுகேட்ட பிரான், செய்து கொண்ட உடன்படிக்கையில் வழுவிக் கொடுக்க இசைந்த பொன்னைக் கொடாது மறுத்தல் நம்பிக்கைக்கு மாறு அன்றோ? என வினவினான். உரோமரைப் படை திரட்டி வந்த காமிலியன், யான் இல்லாத வேளையில் செய்த உடன்படிக்கை செல்லாது; எவரும் அது செய்தற்குரியரல்லர் என வற்புறுத்திக் கூவினான். அதனால், காலவர்க்கும் உரோமர்க்கும் போர் மூண்டது. உரோமரது படைஞர் நாற்பதினாயிரம் பேர் மேலுக்கு மேல் வந்தமையால், பசியாலும், நோயாலும் மெலிந்த தன் படைஞர் அத்துணைப் பெரிய படையை எதிர்த்தல் இயலாதென்று கண்ட பிரான், தன் காலவர் கூட்டத்தை அழைத்துக் கொண்டு மறுநாள் விடியற்காலையிலே காமிலியன் நகரைவிட்டுப் பின்னிடைந்து ஏகினான். ஆனால், காமிலியன் அவனையும் அவன் படைஞரையும் விடாது பின்தொடர்ந்து தாக்கி, உரோமிலிருந்து எட்டுக்கல் வரையில் காலவர்களைக் கொன்று குவித்துப் பெருவென்றி எய்தினான்.
கொடியரான காலவரது படையெடுப்பினால் ஒளியிழந்த உரோம் நகரும், நாடும், அப்பேரிருள் ஒழிந்தபின் முன்போல் பேரொளிமிகுந்து துலங்கலாயிற்று. அப்பேரிடுக்கண் நேர்ந்த காலத்தில் செயற்கருஞ்செயல் செய்த அலுவினியன், பேவியன்றார்சன், கோமினியன், மானிலியன், காமிலியன் என்னும் அருந்திறலாளர்க்கெல்லாம் உரோமர்கள் பெருஞ்சிறப்புகள் செய்து அவர்களைப் பெரிது கொண்டாடினர் என்க.
ஆயிரத்துத் தொளாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் காலத்திருந்த மேல்நாட்டாசிரியர் செனீகரின் அறிவுமொழிகள்:
பலகாலும் காற்றினால் அலைக்கப்படாத எத்தகைய மரமும் வலுவாய் உறுதியாய் நிலைப்பதில்லை; ஆனால் அடுத்தடுத்துக் காற்றினால் அசைக்கப்படும் மரமோ உரம் ஏறப்பெற்று நிலத்திலே அழுத்தமாக வேர் ஊன்றுகின்றது.
நாற்புறமும் அடைப்பாக உள்ள பள்ளத்தாக்குகளில் வளரும் மரங்கள் எளிதிலே முறிந்துவிடும் இயல்பின. ஆகவே, அச்சத்துக்கு ஏதுவாக நிகழ்ச்சிகளின் நடுவே உயிர்வாழப் பெறுவதே நல்லோன் ஒருவனுக்கு நன்மையை அளிக்கின்றது; ஏனென்றால் அவற்றின் நடுவிலிருந்து பழகப் பழக அவன் அஞ்சா நெஞ்சினன் ஆகின்றான். மேலும், எந்தத் துன்பத்தையும் துன்பமாகக் கருதாமையால் எத்தகைய இடர்வரினும் அதனைப் பொறுக்கவும் கற்றுக்கொள்கின்றான்.
இறப்பில்லாக் கடவுள் நமதுள்ளத்தைத் தாற்றுக் கோல் இட்டு எழுப்புவது போல், வருவிக்கும் இடர்களைக் கண்டு வெருக் கொளாதேயுங்கள்! ஏனென்றால், தீதுவரும் காலத்திலேதான் ஒருவனது உள்ளத்தின் நன்மை புலனாகின்றது.
நிறைந்த ஐம்பொறியின்பத்தில் சிக்கி அறிவுமயங்கி யிருப்பவர்களை நல்லவினையற்ற வர்களென்றே சொல்லல் வேண்டும். ஏனெனில், அவர்கள் அவ்வின்ப வயப்பட்டு அறிவின் சுருசுருப்பிழந்து அதன்கண் ஆழ்ந்து விடுகின்றனரல்லரோ?
அத்தன்மையினர்க்கு ஏதேனும் இடர்வரின் அவர் அதனைத் தாங்கார். மெல்லிய கழுத்துடையது நுகத்தடியைத் தாங்குமோ?
கடவுள் தாம் அன்பு பாராட்டும் அடியர்க்காகப் பலவகை அல்லல்களில் படுப்பிக்குமாற்றால், அவர்களைப் பழக்கி உரமேற்றி உறுதிப்படுத்துகின்றார்.
சிறுவர்க்கான செந்தமிழ்
– முற்றும் –
★ ★ ★



