செளந்தர்ய…
லா. ச. ராமாமிருதம்

செளந்தர்ய…

இன்று

அதிகாலை காபி போட்டு சாப்பிட்டு விட்டு –

முப்பத்தி ஐந்து வருடங்களாக நான்தான் காலை காபி போடுகிறேன். நான் போடாவிட்டாலும் எனக்குக் கிடைக்கும். ஆனால் என் மனைவியின் வேளையில் தான் கிடைக்கும். காபி வேளையில் கிடைக்காது. அதனதற்கு அதனதன் வேளை உண்டு. வேளை தட்டினால் ருசியே போச்சு. (வக்கணையைப் பாரு) இதைவிட சுருக்கப் போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. வயதாகிவிட்டதல்லவா?

சாய்வு நாற்காலியில் அமர்ந்து காபி சாப்பிட்டு விட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். “இன்றைய பொழுது எப்படி விடியப்போகிறது. இரவு பரவாயில்லை. நன்றாகவே தூங்கியிருக்கிறேன். இந்த சுக சிந்தனைக்கே, இதுவே காரணமாயிருக்கலாம். நேற்று ஜங்ஷனில் திரு ச. கந்தசாமியின் பேட்டியை படித்த நினைவு வந்தது. அதிலிருந்த ஓரிரு வாக்கியங்கள் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.

“சங்க இலக்கியத்தின் எளிமை பாட புத்தகத்தின் எளிமை. இந்த எளிமை என்னுடைய எழுத்திலும் இருக்க வேண்டுமென விரும்பினேன். இதன் அடிப்படையிலேயே என்னுடைய நாவல்களும் சிறுகதைகளும் அமையலாயின. அண்ணா, கருணாநிதி, லா. ச. ராமாமிருதம் போன்றவர்களைப் படித்ததனால் ஏற்பட்ட விளைவு இது. நம் இலக்கியவாதிகள் லா. ச. ராமாமிருதத்தின் அலங்காரத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். திராவிடப் பாரம்பர்ய எழுத்தை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.”

இந்த ஒரு எழுத்தில் மட்டுமன்று. என்னுடைய அலங்காரத்தைப்பற்றி அவர் துரத்தித்துரத்தி அடித்திருக்கிறார். அவருடைய நோக்கம் நடை தெளிந்த நீரோடை மாதிரி இருக்கவேண்டும் என்பது என்றே நினைக்கிறேன். இது சிரமசாத்தியம் ஆனாலும் அவரைப் பொறுத்தவரை பல இடங்களில் அவர் நடையில் அவர் சாதித்திருக்கிறார். கந்தசாமியும் நானும் தீபம் காலத்திலிருந்தே பழக்கம். மனம் போனவாக்கில் ஜங்ஷனில் அவர் என்னைப் பற்றி எழுதி இருப்பது நினைவுக்கு வந்தது என்கிற வரையில் மட்டுமே இந்தக் கூற்று பொருந்தும். திரு கந்தசாமி எழுத்துத் துறையில் என்னைக்காட்டிலும் மிக்க அனுபவசாலி. பத்திரிகை, கதைத்தொகுப்பு, தொலைக்காட்சித் தொடர், டாகுமெண்டரி – அவருடைய ஈடுபாடுகள் இப்படிப் போகின்றன.

நானோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று எழுத்துடன் சரி. கவிதை கூட முயற்சி செய்ததில்லை. என் எழுத்தைப் பற்றி வேணய விமர்சனங்கள் வந்துவிட்டன. அதில் கவித்வம் இருக்கிறதாம். என் சொல்லாட்சியைப் பற்றித்தான் சொல்கிறார்கள். நான் சொல்லுகிற விஷயமும் குடும்பம் என்கிற வட்டத்தைத் தாண்டவில்லை. இத்தனைக்கும் நான் புரியாத எழுத்தாளன் என்று பெயர் வாங்கி விட்டேன். –

இதுவரை இது எல்லாம் காலை யோசனை!

பெருமூச்செறிந்து, கட்டிலில் அமர்கிறேன். இப்போதெல்லாம் வீட்டுள் மட்டுமே நடமாட்டம். மீண்டும் மீண்டும் யோசனைகள்தாம் என்னைப்பற்றியும் என்னைப் பாதித்தவை பற்றியும். நடமாட்டம் இருந்தபோது மட்டுமென்ன? ஆழ்ந்து யோசிக்கையில் இது சுயநலத்தைச் சார்ந்ததல்ல. என்னிடம் வேறு விஷயம் இல்லை. நான் என்கையில் அதனுள் என் உலகமே அடங்கிவிட்டது. சமுதாயத்திற்காக பாடுபடுபவர்கள் ஆகட்டும், அவர்களின் செயல்களும், செய்கைகளும் இதே உலகில் அடங்கியதுதான் அவரவர்க்கு அவரவர் உலகம்.

ஜனனம், மரணம் இடையில் ஒரு முழமோ இல்லை சாணோ இல்லை எந்த அளவுள் அடங்கியதோ வாழ்க்கை இவை மூன்றும் சேர்ந்ததுதானே உலகம் இப்போது தோன்றுகிறது. இதிலிருந்து எனக்கு விமோசனமே இல்லையா? விமோசனம் என்பதே என்ன?

இன்று வானம் மப்பிட்டிருக்கிறது. மேகங்கள் திரண்டு ஒன்றுடன் ஒன்று குமைந்து நேரம் இருள்கிறது. மழை வேண்டும். வானமே…. பொய்க்காதே.

மனம் சஞ்சலிக்கிறது. அம்மா, அண்ணா, சிவா, அபிதா நீங்கள் எல்லாம் எங்கிருக்கிறீர்கள்? நீங்கள் எங்கும் போயிருக்க மாட்டீர்கள். இங்குதான் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இல்லாவிடின் இத்தனை காலம் கழித்து இன்று வேளை பார்த்து இப்போது இது தோன்றுவானேன்? காலாந்த காலந்தமாய்த் திரும்பத் திரும்ப இதே எண்ணம், இதே ஜனனம், இதே மரணம், இதே வாழ்க்கை. இதுதானே நீங்கள்? இதுதானே நாம்? இதுதானே நான்?

எண்ணமும் சொல்லும் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடுகின்றன. நான் ஜப்பான் விசிறி மாதிரி விரிந்து விசிறித் துளும்புகிறேன்.

நெருப்பு என்றால் வாய் வேகவேண்டும் என்று எப்பவோ எழுதி, அப்படித்தான் என்னையே இன்னும் விளிக்கிறார்கள். சமீப காலமாக நானும் என்னை சௌந்தர்ய உபாசகன் என்று சொல்லிக் கொள்கிறேன். சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். சொல்லிவிட்டேன். அனுபவமும் சொல்லும் அப்படி ஒன்றுபடவில்லை; ஒன்று படுவதற்குமில்லை. சொல் வேறு செயல் வேறுதான் என்று அறிகிறேன். சொல்லைப் பற்றிச் சிந்திக்கையில் செயலுக்குத் தனி பரிமாணம் கூடுகிறது. இப்போது முதலிலிருந்து சொல்கிறேன். உடலுக்கு மூலம் உயிர். உயிருக்கு மூலம் எண்ணம். எண்ணம் முற்றினால் சிந்தனை. சிந்தனைக்குக் கொடுப்பினை இருந்தால் தரிசனம். தரிசனம் காண்பது அழகு. What is beauty? கீட்ஸ் கேட்கிறான். Beauty is Truth. What is Truth? பைலேட் கேட்கிறான். இந்தக் கேள்விக்கு ஜன்மேதி ஜன்மமாய் விடை தேடிக் கொண்டிருக்கிறோம்.

என் வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தாண்டி ஒரு இட்லிக்கடை இருக்கிறது. ஓட்டல் இல்லை. இட்லிக்கடை. காபி கூட கிடையாது. முதன் முதலாகக் கடைக்குப் போயிருந்த போது கடைக்காரர் அடுத்திருந்த தன் வீட்டிலிருந்து இட்லியை சூடாக எடுத்து வந்து இலையில் பரிமாறினார். நாற்பது பைசா வீதத்திற்கு இட்லியின் அளவு சிறியதுதான். ஆனால் அந்த ‘பூ மெத்து’ வீட்டு இட்லியில் இல்லை. சற்று நேரம் கழிந்த பின் அவர் சொன்னார், “நீங்க லா.ச.ரா’தானே?”

ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?

“பேப்பரில் ஃபோட்டோ பார்த்திருக்கிறேன். கலைமகளில் கதை படித்திருக்கிறேன்.” இப்படி எங்கள் சகவாசம் ஆரம்பமாயிற்று. பேச்சுவாக்கில் சொன்னார், “இட்லி நாற்பது பைசா. தோசை எழுபத்தி அஞ்சுபைசா” இரண்டு இட்லி சாப்பிட்ட பிறகு தோசை வார்த்துப் போடச் சொன்னேன். அவர் போன சுருக்கில் திரும்பி வந்து கண்ணைச் சிமிட்டியபடி “மாமிக்கு மூட் அவுட். ரெண்டு இட்லி வைக்கவா? மாவு என்னவோ ஒண்ணுதான்.”

சில நாட்கள் கழித்து படிப்படியாய் எங்கள் தொடர்பு மெதுவாய் நின்றுபோய் ஏனோ தெரியவில்லை ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. போகப்போக எனக்கு ஒடுக்கம் தானே. அப்புறம் ஒருநாள் மராத்தி இட்லி (அவர்கள் மராட்டியர்கள் அதனால் மராட்டி இட்லி) கடைக்குச் சென்றேன். இப்போது இடம் பழைய மாதிரி அடக்கமாக இல்லை. வியாபாரம் பலத்து விட்டது. இட்லிப் பானைகள் மேஜை அருகிலேயே வந்துவிட்டன. மசால் வடை கடாயில் வேகிறது. அவருடைய இரண்டு பெண்களும் பண்டங்களைத் தயாரிப்பதிலும் பரிமாறுவதிலும் மும்முரமாக இருக்கிறார்கள். மகன் ஒத்தாசையாக இருக்கிறான்.

என்னால் படியேறி அதற்கு மேல் மேடையிலிருந்த மேஜைக்குப் போக சக்தியில்லை. “நான் படியிலேயே உட்கார்ந்துக்கட்டுமா?” மாமியைக் கேட்டேன்.

“தாராளமா அப்படியே செய்யுங்கோளேன்.” இட்லி உபசரித்தாள். பையனைக் கேட்டேன், “ஏம்பா நீதானே மின்ட் தெருவுல ஒரு குடோன்ல வேலை செய்கிறாய்?”

“நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே!”

“இப்போ அங்கே இல்லையா?”

“இருக்கிறேன். ஆனால் போகும் வரை இங்கே உதவுகிறேன்.”

“பெரியவர் எங்கே?”

“காலமாயிட்டாரு.”

எனக்குள் மெல்லிய அதிர்ச்சி.

நான்கு நாட்கள் கழித்து மறுபடி போனேன். என்னைப் பார்த்ததும் மாமி ‘பெரியவரை கவனிச்சீங்களா’ என்று பரிவின் அவசரத்தில் விசாரித்தாள்.

நாலு இட்லியும் ஒரு மசால் வடையும் சாப்பிட்டேன். இப்போது இட்லி ஒரு ரூபாய்; மசால்வடை 1 ரூ. (அளவு கொஞ்சம் அநியாயம்தான்) பத்து ரூபாய் நோட்டை நீட்டினேன். மாமி மீதி சில்லறையை எடுத்து விரலைப் பிரித்து – பிடித்துக் கொண்டு உள்ளங்கையில் வைத்தாள்.

“பெரியவரே, இதோ பாருங்க. இதோ மூணு ஒரு ரூபா காயின். இது ரெண்டு ரூபா. ஒரு ரூபான்னு நெனைச்சுக்கப் போறீங்க. சரியாப் போச்சா. ஜாக்ரதை, நான் வேணுமின்னா பாக்கட்லே போட்டுடட்டுமா? ஜாக்கிரதையாப் பாத்து போங்க.”

இந்த வயதில் இதுமாதிரி ஒரு ஆதரவும் எனக்குத் தேவையாய்த்தான் இருக்கிறது. அன்பான சொல், ஸ்பரிசமே ஆன்மாவுக்கு உறுதுணைதான். இந்த சம்பவத்திலேயே அழகு இல்லை.

இந்தப் பேச்சு, அது தரும் தைர்யம், உறுதுணை இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு கம்யூனிகேஷனை உணர்கிறேன். அதன் சௌந்தர்யம் ஆசிர்வதிக்கிறது. உணர்வதற்கு நுட்பமான சொரணை வேண்டும். மோன தடத்தில் ரஸவாதம் நடக்கிறது. உடலுக்குள் தெம்பு பாய்கிறது.

மழைநீரில் அமிழ்ந்த வயல்.

ஒரு நிலை என்னை அழுத்துகிறது. அதை விவரிப்பதற்கு உரிய பாஷையை அதுவே அமைத்துக் கொள்கையில் சௌந்தர்யம் நேர்கிறது.

நம்மைச் சுற்றி சௌந்தர்யம் நேர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் அதன் தரிசனம் பார்க்கிற கண்களுக்குத்தான்.

மௌனம். சௌந்தர்யத்தின் உச்சக்கட்டம். இந்த மோனத்தை அடைவதற்கு ரீம்ரீமாய் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிப்பேசி அளக்கிறோம். நான் சொல்கிறேன் ‘எழுத்தின் சாக்கில் எழுத்தாளன் தான் நிறைய பேசுகிறான்’ பேச்சாளனைக்காட்டிலும்.

இதற்கு விமோசனம் உண்டா? எது விமோசனம்? எதற்கு விமோசனம்? காதில் கேள்வி குறுகுறுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் இருந்தேன். விபரீதம் ஏதும் இல்லை. ஆனால் தொடர்ந்து சில பரிசோதனைகள் நடத்த வேண்டியிருந்தன. ‘குண்டியில் அடித்தால் பல் போச்சு’ என்று ஒரு கேலி வழக்கு. ஆனால் உடம்பு விஷயத்தில் அது பொய் இல்லை அல்லது பொய்க்காதபடி இப்போதைய வைத்தியர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். பல முறைகள் – அக்கு பங்ஞர், யுனானி, ப்ராணிக், யோகா, naturopathy and so on மார்கட்டில் (ஆமாம் எல்லாமே மார்க்கட்தான்!) புழங்குகின்றன. தனித்தனியாகவும், கலந்த கட்டியாகவும் அந்தக் கலப்படமே ஒரு சிஸ்டமாகவும் நடமாடுகிறது. வியாதிக்காரனுக்கும் ஒரு சிஸ்டம், உடம்பில் பிடிக்குமளவிற்குப் பொறுமை கிடையாது. ‘விருந்தும் மருந்தும் மூணு வேளை’ பழமொழியும் அவன் பங்கு பேசுகிறது. உடனே பலன் தெரியாவிட்டால் இன்னொரு டாக்டர். இன்னொரு வைத்தியத்துக்குத் தாவி விடுகிறான். எல்லாம் பயமும் பணமும் படுத்தும் பாடு.

என் சுபாவம் எப்பவுமே கவலைதான். டாக்டரில் எவன் தான் கடைசிவரை நிஜத்தை வெளியிடுகிறான், இல்லை அவனுக்கே நிஜநிலை எம்மட்டு தெரியும்? வியாதியஸ்தனின் உடம்பு அவனுக்குப் பரிசோதனைக் கூடம்.

ஒண்ணுமில்லே. Don’t worry. ஒரு ECG ஒரு X-ray ஒரு barium meal எல்லாத்தையும் மிஞ்சினா surgeory அவ்வளவு தானே. – Unnecessaryயா டென்ஷன் ஆவாதீங்க!

சாயங்காலம் சேர்ந்தேன். மறுநாள் காலை பெரிய டாக்டர் தன் பரிவாரம் (குட்டி டாக்டர்கள், நர்ஸ்கள்) புடைசூழ தன் ரவுண்டில் வந்தார்.

“Hullo young man. How do you? What is the matter with you? சொல்லுங்கோ?” என் கேஸ்-ஷீட்டைக் கண்ணோட்டம் விட்டுக் கொண்டே என்னை நேரே சரியாகப் பார்க்கவில்லை.

“உள்ளே கலகலத்துப் போயிருக்கேன் டாக்டர். உடம்பு உள்ளே கிலுகிலுப்பை மாதிரி ஆடுது. நடந்தால் balance இல்லை.”

“ஏன் தடி வெச்சுக்கறது!”

“இதுவரை வெச்சுண்டதில்லை.”

நிமிர்ந்து பார்த்தார்.

“என்ன இமேஜ் காப்பாத்தறீங்களா? இந்த வயஸுல இன்னும் sight அடிக்கணுமா?”

என்மேல் கேலிப் புன்னகைகள் விழுகின்றன.

“Sight அடிப்பதற்கு வயசு உண்டா என்ன?” – நான் யோசிக்கவில்லை. காத்திருந்தாற்போல் பதில் குதித்து விட்டது.

‘கொல்’லென்று சிரிப்பு அலை. ஓரிரு கைத்தட்டலும் கூட. சிரிப்பில் பெரிய டாக்டர் குலுங்கினார். அவர் முகம் சிவந்து விட்டது.

“High court ஜட்ஜைக்கூட இந்தக் கேள்வியைக் கேட்டுட்டேன். தடுமாறுறாரு. ஏதோ கௌரவம் பாக்கறாங்க உண்மையை ஒப்புக்க மாட்டேன்கறாரு. Sir, நீங்க தைரியமா சொல்றீங்க.”

“தைரியம் என்ன வேண்டியிருக்கு? எங்கள் வயசுல எங்கள் பார்வை வேறு.”

“Oh I know.”

தொடர்கிறேன் – “இதப்பாருங்க. இங்க நர்ஸ், பேசினை ஏந்திக்கிட்டு நிக்கறாளே, அவள்தான் இங்கு மற்றவங்களைக் காட்டிலும் எனக்கு அழகாய்ப் படுகிறாள்.”

எல்லோர் பார்வையும் அவள் மேல் திரும்பியது. அப்போத்தான் அவளைப் புதியதாய் பார்ப்பது போல்.

அவள் கன்னங்களில் நாவல் பழச் சிவப்பு ஏறிற்று.

டாக்டர், “Sure, sure!”

எங்கள் பேச்சு அப்புறம் விஷயம் மாறிவிட்டது. எனக்குச் செய்ய வேண்டிய பரிசோதனைகளைப் பற்றி சிப்பந்திகளுக்கு எனக்குப் புரியாத பாஷையில், சரியாகக் கேட்காத அடங்கிய குரலில் சொல்லிவிட்டு, கோஷ்டி அடுத்த படுக்கைக்கு நகர்ந்தது.

கொஞ்ச நேரம் கழித்து, அந்த நர்ஸ் எனக்கு மாத்திரைகள் கொடுக்க வந்தாள். எந்த ஆஸ்பத்திரியிலும் நர்ஸ்கள் இடையிடையே வந்து போய்க் கொண்டு இருப்பார்கள். திடமாத்திரை வழங்க, ஜுரமானியை வாயில் செருக, ரத்த அழுத்தம் அளக்க, சில சமயங்களில் இடுப்பில் ஊசி போட, அவர்கள் ருட்டீன் ஒன்று தனியாக நடந்து கொண்டிருக்கும்.

அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். உடனேயே அவள் விழிகள் நிறைந்தன. கண்ணீரை விரலால் சுண்டி விட்டு உடனே போய்விட்டாள். நன்றியா? உள்ளே என்ன சோகமோ? கறுப்பாய் பிறந்துவிட்டால் இளக்காரமா? கறுப்பில் அழகில்லையா? அவள் முகத்தை என் தோளில் சாய்த்துக் கொள்ளும் வயதுதான்.

ஆனால் அது முடியுமா?

இதுவும் சௌந்தர்ய உபாசனைதான்.

எண்ணி, எண்ணத்திலிருந்து செயல் விளைந்து, அந்தக் கட்டத்தில் அது நின்றோ முடிந்தோ விட்டபின் அதனுடைய தீர்க்கத்துக்கு ஏற்றவாறு மீண்டும் நினைவில் அதைப் பின்னோக்குகையில்தான் அதன் காவியம் தனியாகத் துளிர் விடுகிறது. அது தனி தடம். உலகமே கூட, ஸ்தூலம் அருவருப்பாய்க் கூட இருக்கிறது. உதாரணமாய் என் சகோதரி ஒருமாதம் படுக்கையில் கிடந்து இறந்துபோன போது – உடலை எடுத்துச் செல்லும் வரை – பின்னரும் நடந்த ஈமச்சடங்குகளைச் செய்யவோ – நான்தான் செய்தேன் – அவைகளின் கொடுமையும் அருவருப்பும் தனிமுறையிலேயே சஹிக்க முடியவில்லை. ஆனால் இந்த மகத்தான விபத்து நாள்கணக்கில் பிறகு வருடக் கணக்கில் ஊனா ஊனா என் தங்கை மரணத்தை எவ்வளவு தைர்யமாகத் தாங்கிக் கொண்டாள். நாக்கு இழுத்துவிட்டது. எல்லோரிடமும் தனித்தனியாக செலவு பெற்றுக் கொண்டாள். என்னைப் ப்ரத்யேகமாக அணைத்துக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணாடி பளபளப்பு ஏறும்வரை எப்படி என்மேலேயே கடைசிவரை நிலைத்திருந்தன! அவளுடைய வார்த்தைகள், செயல்கள், காரியங்கள், அவள் ஃபிடில் வாசித்தது. அவள் கல்யாணமாகாமலே உள்ளூரவே புழுங்கிப் போனாள். அதுவே அவள் மறைவுக்குக் காரணமாயிருந்தது. இப்படி நினைத்து. நினைத்து அப்படியும் அஸ்த்திப்பானையை நான் கடலில் தூக்கி எறிந்ததும் அலை கைபோல் வந்து ஏந்திக் கொண்டு சென்றது.

அப்பவே – அவள் ‘தரங்கிணி’யாக மாறினது.

ராமரத்னம் அவள் மறைந்தபோதிருந்த யவ்வனத்திலேயே உறைந்து போனாள். அவளுக்கு மறைவே கிடையாது. இப்படித்தான் சௌந்தர்யத்திற்கு உண்மையின் பதவியும் மாறுவதில்லை.

ஏற்கெனவே நான் சொல்லியபடி நான் உணர்ச்சி மேம்பட்ட எழுத்தாளன். என்னைப்பற்றி மாத்திரமல்ல, பொதுவாக விமர்சகர்களின் கருத்து. எழுத்தின் இலக்கணப் படி எந்தக் கட்சியும் சாகக்கூடாது. உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டுவதுடன், அதேசமயம் மனோதத்துவ ஆராய்ச்சிப்படி வாழ்க்கையே ஒரு நீண்ட உணர்ச்சி சரடு. அப்போது உணர்ச்சியிலிருந்து எப்படி எழுத்து முற்றிலும் விடுபட முடியும். ‘ஒருமடமாதும் ஒருவனுமாகி’ என்று ஆரம்பித்து –

பரிகாசம் போல் கடித்த பாம்பு

பலபேர் அறிய மெத்த வீங்கி –

பட்டினத்தார் எவ்வளவு அழகாக பிறவியே ஓர் உணர்ச்சிப் பிண்டம் என்று எள்ளி நகையாடுகிறார். எழுத்தை ஒரு தெளிந்த நீரோடையாக முயற்சிக்கலாம். அப்படியும் அதன் ஸ்படிகம் நம் உணர்ச்சியினைத் தூண்டவில்லையா?

இப்படி நினைத்து நினைத்துத் தனி மணம் கொண்டு யக்ஷதேவதையாய் மாறிவிட்டாள். அதாவது, யதார்த்தம், கவிதார்த்தமாகி, கவிதை நிரந்தர சௌந்தர்யத்தை அடைந்து விடுகிறது. சௌந்தர்யத்துக்கும் தத்துவார்த்தம் இருக்கிறது. அது கிட்டுவது சுயமுயற்சியால் மட்டுமன்று. ஒரு தற்செயல், ஒரு பாக்கியம். எனக்கு இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அந்த நிலை அனுமானிக்க முடிகிறது. நாம் அதுவாகி விடுகிறோம். எதைப் பார்த்தாலும் அழகாயிருக்கிறது. மனமே நீரோடை.

அம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை? உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறிவிடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ? கவிதையின் சொறிதல் என்னைச் சூழ்ந்து நிரந்தர கமகம.

இது நடையலங்காரமாக இருக்கலாம். ஆனால் நடைக்காக அலங்காரமில்லை. என் தங்கை மறைவில் நேர்ந்த மார்வெடிப்பின் உக்ரத்துடன் அவளே கவிதையாய் மாறிய சோகம், இன்பசோகமாகக் கலந்து மாறிய கலவையின் விளைவு. அலங்காரமாகத் தோன்றுகிறது. இது ஸ்ருஷ்டியின் ஒரு இன்றியமையாதத்தன்மை. தாய் பிரசவ வலியில் உயிராபத்தில் வீறிடுகிறாள். குழந்தை பூமியில் விழுந்து அதன் முதல் வீறலை ஆரம்பித்ததுமே இவளுடைய அத்தனை வேதனைகளும் தீர்ந்து விடுகிறது. குழவி முகம் பார்த்ததும் மார்பு சுரக்குகையில் அந்த முதல் தரிசனத்திற்கும் அதன் சௌந்தர்யத்துக்கும் எது ஈடாகும்? அதுவே சந்நிதானம்.

‘In the begining there was God, the word and the holy spirit.’

நினைவு தோன்றிய முதல் இந்த வழக்கே சௌந்தர்யத்தின் விளம்பல்தானே? திரும்பத்திரும்ப அலுக்காதவரை திரும்பத் திரும்ப சௌந்தர்யத்தின் சாயைகளில் இதுவும் ஒன்றோ?

சௌந்தர்ய…. முற்றுப் பெறாத தேடல். சௌந்தர்யா எனில் முழுமை.

ஆனால் உண்மை சௌந்தர்ய….

வயதின் நீண்ட நினைவுச்சரடில் பாத்திரங்கள் பவனி வருகின்றன. இதோ ‘மாசு’ தென்படுகிறார். அட எப்படி இப்போது இங்கே? மாசு என் ஹநுமன். நான் அவருக்குத் தகுதியான இராமனோ இல்லையோ.

ஹநுமனை இராமாயணத்தின் இரத்தினக்கண்டி என்று வால்மீகி சொல்கிறார். ஹநுமத் ப்ரபாவத்துக்கென்றே ஒரு காண்டம் ஒதுக்கப்பட்டிருக்கிறது – சுந்தர. சௌந்தர்ய.

ஹநுமனுக்கும் ராமனுக்கும் இடைஉறவு எனக்கு இன்னும் தீராத வியப்பு. அது நட்பா? காதலா? பக்தியா? ம்…ஹும். தலையை உதறிக் கொள்கிறேன். நட்பு காதலினும் உயர்ந்தது. தன்னலமற்றது. தானிழைக்கும் உதவிக்கு பிரதியுதவி எதிர்பாராதது. மதிப்பிட முடியாதது. நட்பு நட்புக்கென்றே. பக்தி என்பதே என்ன? பலமுறைகள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் பக்தி அது கண்டுவிட்ட பொருளோ, இடமோ, ஆளோ, அதன்மேல் அளவற்ற விசுவாசம், அதைப்பற்றி இன்னும் அறிய ஆவல், ஏதோ புரியாத ஒரு சிறு பயம் இவை எல்லாம் எனக்கு மாசு மேல் இருந்தது – இருக்கிறது. மாசுதான் இப்போது இல்லை. மாசு என் ரத்தத்துடன் கலந்து விட்டார். என் கதைகளைப் படித்துவிட்டு அதுகாரணமாக முதன் முதலாக நாங்கள் சந்தித்தோம். எங்கள் உறவு அப்போது ஒட்டிக் கொண்டதுதான். அவர் மறையும் வரை ஏன் அதற்கு அப்பாலும் இருக்கிறது. ஆனால் அவர் இறந்தபோது அவர் பக்கத்தில் நான் இல்லை. எனக்குத் தெரியாது. அவர் கடைசியாக அனுப்பிய கடிதம் என்னைச் சேரவில்லை. நான் சமையலறையில் வேலையாயிருக்கையில் கண்ணன் என் பின்னால் தோன்றி என் தோளைத் தொட்டு “மாசு” என்றான் – தயங்கி.

எனக்கு உடனேயே புரிந்துவிட்டது. ஏன்? எப்படி? அவர் வீட்டுக்குப் போன போது பின்னால் எனக்குத் தெரிந்தது. வாயில் கேன்சராம். கேலப்பிங் கான்ஸர். வெற்றிலையின்றி வெறும் புகையிலை போடுவார். ஆனால் இப்படி உடனேயே அழுத்தும்படி போட்டதாக எனக்குத் தெரிவில்லை. எப்படி இருந்தால் என்ன? அவருக்கு வேளை வந்துவிட்டது. ஆனால் அவருக்கு அழிவில்லை. மாசு மூர்த்தி சிறியது. ஆனால் செயல் பெரியது. கீர்த்திக்கு ஆசைப்படவில்லை. அதில் அக்கறையே இல்லை.

பேச்சு வாக்கில் சொன்னார். “பதினாலு பேருக்கு இடையில் பிறந்தவன்.” ஆனால் அவர் தாய்க்கு எஞ்சியிருந்தவர் இவர் ஒருவர்தான். இப்போது அதுவுமில்லை. அவர் தாயை நான் பார்த்தேன். பேசவில்லை. இது துக்கம் விசாரிக்கற துயரமா? இவளே ஒரு கோவர்த்தனகிரி. இதற்கே அவள் அஞ்சலிக்கு உரியவள். இத்தனை பாவம் பண்ண வேண்டுமா என்று சமுதாயம் சபிக்கிறது. அவள் அதற்கு மேல் மூன்று மாதம் தங்கவில்லை. சமுதாயத்தின் சுயநலத்திற்கு விவஸ்தையும் கிடையாது. இரக்கமும் கிடையாது. முடிவும் கிடையாது. மாசு என் வாழ்க்கையில் நுழைந்திராவிட்டால் ‘ஜனனி’ கதைத்தொகுப்பே ஏற்பட்டிருக்காது. அதன் தொடர்பாக மற்ற நூல்களும் வந்திருக்காது. மந்தையோடு மந்தையாய் அநாமதேயமாய் கலந்து போயிருப்பேன். என் எழுத்தை முன்னுக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். நான் சொல்வது சுயநலப்பார்வை. ஆனால் மாசு என்கிற ஸ்படிகத்திற்கு வேறு முகப்புகளும் (Titles) இருந்தன. வாசகப் பேரவை ஒன்று கூட்டினார். இது பெரிய முயற்சிதான். நான் எதையுமே எதிர்பார்க்கவில்லை. இத்தனை பேர் வந்திருக்கிறார்கள். இதில் மூன்று நான்கு பேராவது தேறட்டுமே.

செய்யவேண்டுமென்று தோன்றியது, செய்தேன். கீதாச்சாரமே இதுதானே. நான் மாசு வீட்டுக்குப் போயிருந்தேன். ஜார்ஜ்டவுனில் இருந்தார். ஒரே வீட்டில் பதினெட்டு குடித்தனங்கள் – இருட்டும் வெளிச்சமும் சின்னதும் பெரியதுமாய். அவர் சொல்லுவார், “ஆனால் ஒரு சண்டை பூசல் கிடையாது. விட்டுக் கொடுத்துக் கொள்வோம். நல்லதோ, பொல்லாதோ குடும்பத்துக்குக் குடும்பம் தோள் கொடுக்கும். முகூர்த்தமானாலும் சரி, அபகாரியமானாலும் சரி, வெளியாரை அழைக்கவே வேண்டாம். இது ஒரு community வாழ்க்கை.” சந்தோஷமாய்த்தானிருந்தது.

அவர் முயற்சியில், உழைப்பில் வெளிவந்த ஜனனி புத்தகம் மிக உயர்ந்த தயாரிப்பு. அந்தப் பேப்பரின் தரத்தில் தற்போது கொண்டுவர முடியாது. கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு proof பார்ப்பார். ஆனால் அதன் வியாபாரத்தில் தோற்றுவிட்டோம். முறை தெரிந்து கொள்ளாததால் எங்கள் தலையைத் தடவிவிட்டார்கள். ஆனால் அது இப்போது collecter’s it ஆகிவிட்டது. ஒரு வீட்டில் பார்த்தேன். குங்குமம், மஞ்சள் பூசி பூப்போட்டு சுவாமி பிறைக்கே ஏற்றி இருந்தது. அதைக் கடன் கேட்கவோ, பிரட்டிப் பார்க்கவோ மனம் அஞ்சிற்று. இதை மாசுவின் சிகரமாகத்தான் நான் பார்க்கிறேன்.

ஓரிரவு. முற்றிய வேளையில் கதவுத்தட்டல் கேட்டுத் திறந்தால் மாசு.

என்ன மாசு?

“ஒண்ணுமில்லை. பார்க்க வேணுமென்றிருந்தது. பார்த்து விட்டேன்.”

அப்படியே படியிறங்கி சரசரவென்று போய்விட்டார். நானும் அவரை நிறுத்தி எப்படி உள்ளே அழைப்பேன்? என் தங்கைக்கு அன்றைய தினம் கொள்ளியிட்டிருக்கிறேன். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடக்கிறாள். நான் யாருக்கும் சொல்லி அனுப்பவில்லை. ஆனால் மாசுவுக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்? மாசு தெரிந்து வரவில்லை. சதையாட்டம். டெலிபதி. அவருக்குக் காரணம் தெரியாது. “என்னமோ தோன்றிற்று. பார்க்க வந்தேன்.” அந்த சூட்சும உணர்வு, பரிவு அவருக்குள் பேசியிருக்கிறது.

அப்போது திருவல்லிக்கேணியில் குடித்தனம் இருந்தோம். முற்றிய இரவில் மாசு டவுனிலிருந்து வருவார். இருவரும் கிளம்பிப் பேசிக் கொண்டே ‘பீச்’ ரோடிற்கு போவோம். அப்படியே அதுவழி ‘வார் மெமோரிய’லுக்கு நடந்து. இரும்புப்பாலம் தாண்டி – முழுநிலா தேய்வது என்பது கிராமத்தை விட்டு அத்தனை நாள் கழித்து அன்று தான் கண்டேன். லேசான இருள்கலந்த வெண்மையின் வெளிச்சம். நிலவு சூரியனிடமிருந்து கடன் வாங்கிய வெளிச்சம். எப்படியிருந்தால் என்ன? வானத்தின் முழு நீளத்தை வெற்றியுடன் சவாரி செய்கிறான். அவன் குளுமையில் எங்கள் இதயம், பேச்சு மலர்ந்தன. ஆமாம். என்ன பேசினோம்? உலகில் எங்களுக்குத் தோன்றியவை எல்லாவற்றைப் பற்றியும்தான் பேசினோம். சினிமா, சங்கீதம், திவ்யப்ரபந்தம், காந்தி, நேரு, செய்கல், துனியா ரங்க ரங்கே, விசிஷ்டாத்வைதம், தேவதாஸ் – இப்படி ஏதேதோ அந்த நள்ளிரவில், அந்த மர்ம இருளில் ஏதேதோ பலகணிகள் திறக்கும். சில ஆச்சர்யமாயிருக்கும். சில பயம்மாயிருக்கும். அப்படியே திரும்பி பாலம் ஏறி கோட்டை ஸ்டேஷன் – மேலும் நட – நடப்பதாகத் தெரிந்தால் தானே வேறு உலகில் தானே இருக்கிறோம். கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் மார்வாரிப் பெண்கள் இரவின் விடுதலையில் பாவாடை சுழல், கொலுசு கிலுகிலுக்க கோலாட்டம் ஆடுகிறார்கள். பிருந்தாவனத்துள் நுழைந்து விட்டோம். பிறகு மனமில்லாமல் பிரிந்து மார்வாடி கடைக்குள் நுழைந்து பூரி, பாஜி, பிரும்மாண்ட வாணலியில் சிவக்க சிவக்க சேறாய் இறுகிக் கொண்டிருக்கும் பால் அதன்மேல் ஏடு (மலாய் மலாய்) மறுபடியும் வந்த வழியே மீண்டு வார்மெமோரியல், கடற் கரைச்சாலை, திருவல்லிக்கேணி என் வீட்டருகே ஒரு ஆயக்கால் போட்டு – மனமில்லாமல் பிரிந்து –

மறுநாள் வேலைக்குப் போகவேண்டும். அக்கிரமம் – ஆனால் அற்புதம். மாசு.

 

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *