செளந்தர்ய…
லா. ச. ராமாமிருதம்

சௌந்தர்ய காண்டம்

யோசிக்கையில் சௌந்தர்ய உபாசனை என்று தனிப் படிப்போ, விதிகளோ, சிகிச்சையோ இல்லை. அப்போது அவனவன் தன்மைக்கு ஏற்ப (தோன்றியது தோன்றியபடி) எதிர்பாராத சமயத்தில் உடலுக்கும் மனதிற்கும் தேன் இனிக்குதடா. இது காதலாய் இருக்க வேண்டுமா. திடீரென்று விழித்திரையிலிருந்து ஒரு தோல் உரிகிறது. எங்கு பார்த்தாலும் ஒரு துலக்கம் ‘பளிச்.’ அதன் அடுத்த கட்டத்திற்குப் போகும் வரை இந்தப் புது விழிப்பு இருக்கும். இன்னொன்று ஒப்புக் கொள்ள வேண்டும். சௌந்தர்யத்தின் ஆழ்மன ஆராய்ச்சிக்கு, வயதிற்குப் பெரும் பங்கு உண்டு. தனி உற்சாகம். அடுத்தடுத்து என்ன என்ற அவர், என்னை நான் வெளியிட்டுக் கொள்ள எனக்கு நேர்ந்த புது விடிவைப் புகழச் சொற்கள் கிடைப்பதற்கு உடல் பலமும், ஒத்தாசை செய்யும். ஆனால் இது அத்தனையும் இருந்து என்ன பயன்? என்று ஒரு விரக்தியும் சேரும். இதுவும் இன்றியமையாததே எங்கேனும் எதிலேனும் அழகை வெளிப் பார்வையிலோ, உள்ளுணர்விலோ அதிலேயே எப்போதும் திளைத்துக் கொண்டிருப்பது என்பது சாத்தியமில்லை. நான் சிட்டுக் குருவி ஆகிவிட்டேன். வானமே என் ஆட்சி ‘வானத்தில் குயில் பாடக்கண்டேன். குயிலும் மயிலாச்சுதடி.’ இதைத் தான் பாரதி குறிக்கிறானோ?

அபூர்வமான சமயங்களில் விஸ்வப்ரேமையை அனுபவித்துப் பின் விடுதலையான மனத்தைத் தனி விசுவாசத்துள் எப்படி அடைப்பது? என்னவோ பிதற்றுகிறேன். ஆனால் மனம் துள்ளுகிறது. ஒரு அதிசய மோனம் உள்ளே ரீங்கரிக்கிறது.

என் பிள்ளைப்பருவம் கிராமத்தில் கழிந்தது. அப்பா ஐந்தாம் வகுப்பு வாத்தியார். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரும் கூட. கிராமத்து போஸ்ட் மாஸ்டரும் அவரே. எனக்குத் தனி வாத்தியார். அந்த நொந்த உடம்பில் எத்தனை மூர்த்தங்கள் ஏற்றார். கிராமத்தில் மொத்தம் 500 வீடுகள் இருக்கலாம். அதில் நாலு குருக்கள் வீடு. அதுவே அந்த ஊருக்கு அக்ரஹாரம். கிராமத்தின் முக்கியத் தொழில் நெசவு. குயவர் தெருவில் மொத்தம் ஒன்பது வீடுகள்தாம். கோடி வீடு எங்களது. பெரிய வாசல் குறடு. உள்ளே பெரிய முற்றம். ஒரே ஒரு அறை. அறையின் பக்கத்தில் இரு சுவர்கள் தடுக்கப்பட்டு சமையலறை. மிச்சமெல்லாம் கூடம். இரவில் ஓடுவழி முற்றத்தில் கள்ளன் இறங்கினால் – கடவுள் எங்களை ரட்சிக்கட்டும். மாதம் இரண்டு ரூபாய் வாடகையில் அங்கு கழித்தோம்.

கோடைமழையில் முற்றம் மிதக்கும். மழைக்கால, ஓயாத தூறலில் சிணுங்கும். நள்ளிரவில் இடி ஓட்டின் மேல் நொறுங்குகையில் அம்மா எங்களை அணைத்துக் கொண்டு ‘அர்ச்சுனபற்குணக்ரீடி’ சொல்லிக் கொண்டிருப்பாள். அப்பாக்கு மட்டும் எப்படி இந்த ஆழ்ந்த தூக்கம். ஜகன் மாதா இப்படித்தான் நம்மை அணைத்துக் கொள்கிறாளோ? அதே சமயத்தில் இடம் காலம் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு fairy landல் இருப்பதுபோலத் தோன்றும். இது முழு நிஜமும் அல்ல. ஆனால் பொய்யுமல்ல. மக்கள் நேர்மையானவர்கள். படிப்பு இல்லை. ஆனால் வாழ்க்கை ஞானம் அவர்களின் ஊடே பிறந்து இருந்தது. கள்ளங்கபடமற்றவர்கள். ஆனால் அவர்களை ஏமாற்றிவிட முடியாது. விசுவாசமிக்கவர்கள். பையன்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் படுமக்குகள். அவர்களுக்குப் படிப்பு வரவில்லை. படிப்பை தேவையாக நினைக்கவுமில்லை. பானை செய்தல் பரம்பரைத் தொழில். ஆனால் அதைவிட முக்கியம் அவர்களுக்கு விவசாயம்.

பொங்கல் சீசனின் போது அவர்களுக்கு பானை செய்ய நேரம் பத்தாது. இரவு இரண்டு மூன்று மணிவரை லொட்டு லொட்டு. எங்களுக்குத் தூக்கம் போய்விட்டாலும் மூடிய விழிகளின் அடியே அச்சத்தம் மெத்து மெத்தென ஓர் இசை பாடும். அந்தந்தத் தொழிலில் அதனதன் கஷ்டமும், சோதனைகளில் தத்துவமும் அடங்கியிருக்கிறது. களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருவார்களோ, எதையும் காசு கொடுத்து வாங்கிவிட மாட்டார்கள். காசு அவர்களிடம் இல்லை. காசு அவர்கள் கொள்கையும் இல்லை. தண்ணீர் விட்டு சேறைச் சக்கரத்துக்குப் பதமாகும் வரை மிதிப்பார்கள். வெகு ஜாக்கிரதையாகப் பொடிக்கற்களைத் தேடி எடுத்து விலக்குவார்கள். சேறு உரிய பதத்தில் இறுகியபின் சக்கரத்தின் நடுவில் ஏற்றி சக்கரத்தைச் சுற்றுவார்கள். சக்கரம் சுற்றிக் குயவன் கைகளிடையே பானை அதன் மூல உருவில் எழுவதைப் பார்ப்பதே எனக்கு அலுக்காத ஆச்சர்யம். அதை அறுத்துத் தரையில் வைக்கும் போது அடிப் பாகம் திறந்துதான் இருக்கும். அப்புறம் லொட்டு லொட்டு.

நாலுவித லொட்டுக்கள் அப்படி லொட்ட நாலுவிதக் கட்டைகள். மண்ணை இழுத்துத் தட்டி இழுத்துத் தட்டி அடிப்பாகத்தை மூடுவார்கள். அதிகப்படி மண்ணைக் கிள்ளி எறிவார்கள். படிப்படியான தட்டலில் பானையின் ஈரம் படிப்படியாகக் குறைந்து காய்ந்து நாம் கடைசியாகப் பார்க்கும் அதன் உருவத்தை அடையும் வரை லொட்டு லொட்டு தட்டு தட்டு நாசூக்கு…. நாசூக்கு. அந்த ஓசையில் ஒரு சுகபாவம் சுகானுபவம். இந்த நுட்பங்களை எத்தனை தடவை விஸ்தரித்தாலும் படிப்பில் பாய்ச்ச முடியாது. கேள். அனுபவி. ஆச்சர்யப்படு.

பிறகு சூளை. அழகாகப் பானைகளை அடுக்கி மேலே வைக்கோலைப் போர்த்தி வைக்கோல் மேல் சேறு பூசி பற்ற வைத்து, புகை மண்டலம் சூளையை மட்டுமில்லாது எங்கள் வீடுவரை சூழும். இரவு பூரா பானை வேகும்.

பரிகாசம் போலவே கடித்த பாம்பு
பலபேர் அறிய மெத்த வீங்கி
ஈரைந்து மாதமாக சுமந்த சூளை.

காலையில் எழுந்து குயவர் சூளையைப் பார்க்க வருவார். சூளையினுள்ளே கணகணப்பு. சிவனின் நெற்றிக் கண்ணின் சிவசிவப்பும் தெரியும். லேசாக ஒரு குச்சியால் பிரட்டினால் உடைந்த பானை விள்ளல்கள் உதிரும். எத்தனை உடைந்த பானைகள். மண் தன் நிறம்கூட மாறாமல் ‘அரைவேக்காடுகள்’ எத்தனை விரிசல்கள். ஜன்மாவின் அருமையை இந்தச் சூழலில் இருந்தே தெரிந்து கொள்கிறேன். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அத்தனை பாடுபட்டும் இந்தச் சூளை கொடுத்த முழுப் பானைகள் எவ்வளவு தேறுகின்றனவோ? அதுதான் கணக்கு. ஆனால் அவர்களுக்கு அதனால் கசப்பு இல்லை. அதுதான் ஆத்மாவின் அழகு. பொங்கல் வந்ததும் வீட்டிற்கு பெரியவர் வையாபுரி உடையார் அடித் தொப்புளிலிருந்து கத்துவார். தொப்புள் உள்வாங்குவது தெரியும். “அடேய் ஐயறு வீட்டுக்குப் புதுப்பானை, பச்சரிசியும், பருப்பும், காய்கறியும் அனுப்பிச்சீங்களாடா? அந்த மகாலட்சுமி நம்ப தெருவுக்கு வந்த ஆசீர்வாதத்தால் தான் நாம நல்லாயிருக்கறோம். அம்மாகிட்டே சொல்லு. இந்த பருப்பு வாங்கினதில்லே, வயல்லே வரப்புலே போட்டது.”

ஆனால் நாங்கள் இந்தப் பானையை உபயோகிக்க மாட்டோம். பழக்கமில்லை. பரம்பரை வெங்கலப்பானை தான். அரிசியும் உபயோகிக்க முடியாதவாறு புதுசு. ‘மொழுக்’ ‘மொழுக்’ என மொத்தையாகிவிடும். அவர்கள் நடுமுற்றத்தில் அடுப்பு மூட்டி பொங்கலிட்டு (அப்படி என்றால் என்ன?) வேக வைத்துப் புதுப்பச்சரிசியில் தண்ணிப்பாலை ஊற்றி பெரிய மடக்கில் சாதத்தை வட்டித்து, சூரியனுக்குக் காட்டி ‘பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்’ என்று பலமுறை கூவுவார்கள். அம்மா அவள் சமைத்த சர்க்கரைப் பொங்கலை ஒரு பாத்திரத்தில் போட்டு அவர்களுக்கு அனுப்புவாள்.

இவ்வளவு விவரமாக என்னைச் சொல்லத் தூண்டியது யாதெனில் என்னுடைய பிள்ளைப்பருவம் ஒரு faily land. இதில் முழு நிஜமுமில்லை. முழுப் பொய்யுமில்லை. இதில் கவிதை ஊடுருவுகிறது. நான் கொடுத்து வைத்தவன். என் பின் சந்ததிகளுக்குக் கிடைக்காது. உங்களுக்கும் கிடைக்காது.

மின்சாரமும் ரேடியோவும் புகுந்த பின்னர் உண்மையான கிராமம் போய்விட்டது. இன்றைய பண்ணையார்களுக்கும் நான் வாழ்ந்த fairy land இல்லை.

பத்து வருடங்கள் கழித்து நாங்கள் இருந்த இடத்தை யாரோ வாங்கிவிட்டதனால் நாங்கள் குடிபெயரும்படி ஆகிவிட்டது. எங்கள் மறுவாசம் நெசவாளர்கள் இடையே தொடங்கியது. இது குயவர்கள் வாழ்க்கை போல் அவ்வளவு எளிமை இல்லையேயொழிய சிக்கலுக்குக் குறைச்சலே இல்லை. இன்னும் கூடுதலே. நூல் நிலையிலிருந்து தறி ஏறும்வரை அந்த நூல் பல பதங்களில் புகுந்து புறப்பட வேண்டியிருக்கிறது. அதுவரை அண்டைவீட்டார், எதிர் வீட்டார், தெருவோர் என்று யாவரும் அவசியமாய் பங்கு கொள்ளும் கூட்டுத்தொழில். தறி ஏறின பிறகு நெசவாளி தறிக்குழியில் இறங்கினதும் குடும்பத் தொழிலாக மாறி விடுகிறது.

நானிருந்த இடத்தில் வேட்டி நெய்யவில்லை. கைலி தான். கட்டானுக்குக் கட்டான் கண்ணாலேயே அளந்து நெய்ப்பாரும் உண்டு. அனுபவம் இல்லாதவர் குச்சியை வைத்து அளப்பார்கள். பேச்சில் கவனம் போச்சு என்றால் குறுக்கே ஏதேனும் நூல் அறுந்தால் – கரணம் தப்பினால் மரணம். அதனால் இந்தத் தொழிலில் மௌனம் அவசியம். அந்த அவசியமே அதன் அலங்காரம்.

இப்படித்தான் குறுக்கே நாடா பாய்ச்சிக் கொண்டு ஒவ்வொரு வீச்சுக்குமிடையே ஒவ்வொரு குறளாய் நெய்து ஐந்தாம் வேதம் உருவாகியிருக்கும். என் சௌந்தர்ய உபாசனை இப்படித்தான்.

தவங்கிடந்து தேடிச் செல்லும் தரிசனத்தை விட தற்செயலில் தன்னைக் காட்டிக் கொள்ளும் பிரத்யட்சம்தான் மகத்தானது. நம்மிடம் அது ஏமாந்து போய் அதன் சுயரூபம் தோலுரிந்து போய்விட்டதால் நாமே ஆச்சர்யப்படுமாறு அந்தத் தாக்கம் நம்மைக் காலை வாரிவிடும். இது நம்முடைய குறையே ஒழிய அழகுக்குப் பழுதே கிடையாது. அதன் நிரந்தரத்தை நாம் உணராததை அம்பலப்படுத்துகிறது. அந்த சமயம் ஆண்பெண் உறவில் தான் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று இல்லை. இதற்கு சென்று போன பக்கங்களில் நீங்கள் படித்த ‘மாசு’விற்கும் எனக்கும் இடை உறவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. Domon and Pythias, கர்ணன் – துரியோதனன், அர்ச்சுனன் – கிருஷ்ணன் காவியங்கள் இப்போதும் நம் கண் எதிரிலேயே நமக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காணக் கண் இருந்தால், நுகர நுட்பமான உணர்வு இருந்தால் ஸ்தோத்திரப்ரியாயனமஹா – லலிதா ஸஹஸ்வரநாமத்தில் இப்படி நாமம் வருகிறது. அதாவது தெய்வம் நமக்கு எப்படித் தேவையோ அப்படி பக்தனும் தெய்வத்துக்குத் தேவைப்படுகிறான். இதுதான் இந்த நாமத்தின் சூட்சுமம்.

பயனற்ற ஈடுபாடுகளில் வயது தேய்ந்து கொண்டிருக்கையில் ஆழ்மனத்தின் அழகு மட்டும் அதன் தன்மையான மெருகை ஆங்காங்கே அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில் சென்றுபோன நாட்களுக்கு ஏங்குவதற்கு நேரமில்லை. கிடைத்ததை கண்ட மட்டும் உன் சக்திக்கு முடிந்தவரை பற்றிக்கொள். மனம் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும் ஓயாத இயந்திரம். அந்த விசித்திரமே அதன் அடுத்த கட்டமான – உருவெடுப்பது அதற்குரிய பாஷை. அந்த பாஷை ஓசைப்பட செய்த முயற்சியில் தோன்றியது சொல். சொல் செயலாகும் முயற்சி, முயற்சியின் நேர்த்தி அவைகளின் வேறுபாடுகள், வேறுபாடுகளின் பாகுபாடுகள், பதங்கள், பதங்களின் வெற்றி தோல்வி இத்தனைக்கும் ஊடுருவும் மோனத்தின் த்வனி. இந்த ஒட்டு மொத்தமான Process அதன் தனி எடையே ஓர் ஆச்சர்யம்தான்.

ஆச்சர்யப்பட்டுக் கொண்டேயிரு. ஆச்சர்யமே அழகுக்கு அற்புத அர்ச்சனை.

என்னிடம் எழுத்தின் ஆக்கநாட்களில் ஏதேதோ வார்த்தைக் கோர்வையில் நான் எழுதாத நேரங்களில் கூட – ஸ்நானம் செய்கையில் – காலைக்கடன்களில் – சாப்பிடுகையில், ஆபீசுக்கு பஸ்ஸில் போகையில் இன்னும் சம்பந்தா சம்பந்தமற்ற நேரங்களில் உற்பத்தி ஆகிக் கொண்டேயிருக்கும். தம்மைத் தாமே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கும். பல சமயங்களில் என்னை மறந்து வாய் திறந்தே உளறிக் கொட்டியிருக்கிறேன். வீட்டார் ஆச்சர்யத்தில் திரும்பிப் பார்ப்பார்கள். “என்னடா சொல்றே? நம் வீட்டில் தமக்குத்தாமே பேசிக்கொள்ளும் சுபாவம் உண்டுதான். ஆனால் இது என்ன தத்துப்பித்து.” பதில் சொல்ல இயலாமல் விழிப்பேன். பீஷ்மன் தொடுத்த சரமழையில் வானமே இருண்டதாம். அதுபோல் இந்த சொல் ஈசல் கூட்டத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். பிறகு நான் முதிரமுதிர அவை அவை தம் தம் இடத்தினைக் கண்டு கொண்டு அங்கு பதிந்து விட்டன என்றுதான் கொள்ள வேண்டும். என் பேரக்குட்டி இன்னும் ஐந்து நிரம்பவில்லை. திடீர்திடீர் என சுவர்மேல் கோபித்துக் கொள்கிறான். “டேய் என்னடா நெனைச்சுண்டிருக்கே. நிறுத்து. டீச்சர்கிட்டே சொல்லிவிடுவேன். கீதா டீச்சர்கிட்டே சொல்லிவிடுவேன் ஆமாம்.” அவன் புருவங்கள் நெரிகின்றன. உதடுகள் மொக்கு கட்டுகின்றன. அழகாயிருக்கிறான். நான் சந்தோஷத்தில் ஆழ்கிறேன். அவன் வரையில் அவன் கோபம் நிஜம்.

“நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். உங்கள் உளறல்கள் எனக்கு மழலைகள். நான் சந்தோஷப்படாமல் எப்படி இருப்பேன்?”

அவள் புன்முறுவலை நம் மழலையில் பார்க்க முடியவில்லையா?

உவமானங்களும், உபமேயங்களும், உருவங்களும், உருவகங்களுமாய் நாம் பாஷையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஷை நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அம்சமே இல்லாது எந்த நாட்டிலுமே எந்த பாஷையுமே ஏது?

உதாரணங்களாக –

“உனக்கென்னடா ராஜாமாதிரி இருக்கே?”

“இது வயறா? வண்ணான் தாழியா?”

வயிற்றைக் கட்டிக் கொண்டு அழுதால் படிப்பு எப்படி சோபிக்கும்?

“வண்டையம் மாதிரி விழிகள்”

எங்க ஜாதியிலே உன்னை மாதிரி ஒருத்தன் இருந்தா கோயிலே கட்டிடுவோம்.

“அவனிடம் மகமாயி குளிர்ந்து போயிட்டா.”

“அவள் மங்கலம் எய்தினாள்.”

“சாமி விளக்கை மலையேத்து.”

ஒருசமயம் நான் வழக்கமாய் வாங்கும் மளிகைக் கடைக்காரரிடம் மிளகின் விலையை ஆட்சேபிக்க முயல்கையில் அவர் சொல்கிறார்: “மிளகின் மேல் மார்க்கட்டு பிரியமாயிட்டுதுங்க.”

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்புறம் பேச்சில், சமையலில், சங்கீதத்தில், பழக்க வழக்கங்களில் அந்த ஊர்பாணி, இந்த ஊர்பாணி என்கிறோம். இந்த மாதிரி சொல்லிக் கொண்டே போகலாம். என்னைப் பொறுத்தவரை இந்த விசேஷமின்றி என்னால் இருக்கமுடியாது. “பத்து மாசம் சுமந்த வயிறாச்சே கொதிக்காமல் எப்படி இருக்கும்.” இதையெல்லாம் பாஷையின் அலங்காரம் என்று சொல்வதா? தொப்புளிலிருந்து வந்த வீரலாகவே இருக்காதா? உள்ளது உள்ளபடி நீரோடை பாஷை என்பதை எல்லாம் மீறி ஆதிமூலம் தன் சொரூபத்தைக் காட்டவில்லையா? ஆகையால் சகஜத்திற்கு ஒரு தடம் உயர்ந்து பாஷையின் உக்ரஹம் உலாவுகிறது.

பாணி என்கிறோமே அது எந்தத் துறையில் இருந்தாலும் அதன் உச்சரிப்பில் அடைந்துவிட்ட நாஸுக்கு – நேர்த்தி – முசிறி சுப்ரமணிஐயர் பாணி, மதுரை மணி பாணி, மகாராஜபுரம் பாணி, செம்மங்குடி பாணி, செம்பை பாணி, அரியக்குடி பாணி, மதுரை சோமு பாணி – இப்படி அந்தந்த பாடகர்களின் தனிச்சிறப்பு அவர்கள் ஊரைச் சொன்னாலே பேரை அடையாளம் காட்டும் அளவிற்கு வழக்கில் வந்து விட்டன.

சில பிரசித்தங்களை அவர்கள் பெயர்களின் முதல் மூன்று எழுத்துக்களைச் சொன்னால் போதும். டி.கே.சி., ஜி.என்.பி., ஏ.வி.எம். எம்.ஜி ஆர் – சொல்லப் போனால் இந்த உதாரணங்களை பாஷையின் அலங்காரத்துக்கு எடுத்துக் காட்டாக சொல்லப் பிடிக்கவில்லை. ஆயினும் தற்காலத்திற்கு அவ்வப்போது வரவேண்டியிருக்கிறது.

பொதுவாக நாம் அறிய வேண்டியது யாதெனில் அலங்காரமின்றி பாஷையே இல்லை.

தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு. பாஷைகள் தோறும் அலங்காரம் வேறு. அவை இல்லாமல் அவளே இல்லை.

என் செயல் ஆவது ஒன்றுமில்லை. ஈசனே யாவதும் உன் செயலே.

ஓடி அலைந்து தேடி சோர்ந்துவிட்டபின் வந்த அந்த சொற்கள் – எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? கச்சேரி முழுக்கப்பாடி, கனராகம், ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், சங்கதிகள், ஆவர்த்தனம் அந்த நாட்களின், அந்தக்கால – காலப் பிரமாணப்படி பாடி ஓய்ந்து குரல் ஒருவிதமான நெருப்பு நகநகப்பில் நாதத்துடன் ஐக்யம் ஆய சரணாகதம் கவிதையின் உச்சக்கட்டம். என் செயல் ஆவது ஒன்றுமில்லை எனும் நிலையில் கைகள் தொங்கிவிட்டமையால் ஆள் ஆஜானுபாகு. இதுவே சரணாகதத்தின் சௌந்தர்யம்.

ஒரு வானொலியில் பேட்டி கண்ட பெண் பேட்டி வாக்கில் கேட்டாள்: “நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? காதலைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?” அவள் கேள்வியுடன் எனக்கு சண்டையில்லை. நல்ல கேள்வியும் கூட. ஆனால் அதற்கு நேரிடையான பதிலை அவளிடம் சொல்ல எனக்குச் சங்கடம். நான் நழுவப் பார்த்தும் அவள் விடுவதாயில்லை. யாரைக் காதலித்தீர்கள்? உன்னையேதான் – (அது உண்மையும் கூட) அடுத்த நொடி ரிக்கார்டிங் ரூமிலிருந்து ‘ஆஹா’ங்காரம். பொடி நேரம் அவள் கண்கள் என்னைச் சந்தித்தன. அதற்கு நான் எவ்வளவு பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்? அதுவும் நிஜம்தான் என்று எனக்குப் பட்டது. நான் கிழவன். அவள் யுவதி. நாங்கள் பேசிய கருத்தில் இது ஒரு பரஸ்பரம். பரஸ்பரத்துக்கு வயது வித்தியாசங்கள் கிடையாது. அலசினால் கசங்கிவிடும். அதை உணர்ந்தவர்க்கு லலிதமும் நளினமும் தாண்டி ஒரு மறவாத நறுமணம் நினைவில் பிறந்தாச்சு.

அலைபாயும். அலை மீளும். அலை ஓய்வதில்லை. காதலும் ஓய்வதில்லை. காதல் ஒருவர் மேல் தான் நிலைத்திருக்கும் என்பது சாத்தியமில்லை. நியாயம் இல்லை.

Beause I am in love with the world itself. விஸ்வ ப்ரேமைக்கு அணைத்துக் கொள்ள அதன் கைகள் போதா. என் செயல் ஆவது யாதுமில்லை. யாவும் உன் செயலே. கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்துக் கொண்டார். இது போல ஏதேதோ மேலெழுந்தவாரியில் சம்பந்தமற்று ஆனால் மிக்க நெருக்கம் படைத்த அர்த்தத் தகடுகள் பொன்னில் உதிர்கின்றன. எல்லாவற்றையும் புரிந்து கொள்ளாமல் மனம் நினைவுறுகிறது. ஆகவே புரிவது அவசியமில்லை என்பது புரிகிறது. அடைய வேண்டியது நிறைவுதான்.

என் கற்பனை வழி மடையுடைந்த காட்டாறு போல் அன்று கண்ணீரின் தாரை போன்று மெதுவாக அதன் வழியில் வழிவது – ரிஷிகேசத்தில் சிவானந்தா ஆஸ்ரமத்துக்கு சிற்றருவிகள் இம்மாதிரி ஓடுகின்றன. பாறை உச்சியிலிருந்து ஒரு வெள்ளி ஜரிகை நாடா தன் இஷ்டத்திற்குக் கிளை பிரிந்து ஆங்காங்கே கோலம் இழைத்துக் கொண்டு ஸ்படிகம் வழிகிறது. பாறை உச்சியின் குறுகிய விளிம்பில் தன் அச்சமற்ற அப்பாவித்தனத்தில் ஒரு மான் குட்டி நின்று கொண்டு அடிவாரத்தில் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதனால் இந்த மானை சாது என்று சொல்லிவிட முடியுமா? இது ஒரு இன்ப வியப்பு. என் கற்பனையின் தன்மை மெதுவானது. ஆனால் அழுத்தம் என்று நினைக்கிறேன். ஓயாமல் எழுதும் பழக்கத்திற்கு அதன் தன்மையிலேயே கட்டுப்பட்டதால் வேறு எப்படியும் இருக்க முடியவில்லை என்று தோன்றுகிறது. ‘Slowness is beauty’ – Rodin சொல்கிறான். என் உளியின் உழைப்பில் இதனால் தான் அதிகம் தேசல் காணவில்லையோ என்னவோ?

 

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *