
திரிகடுகம்
கடவுள் வாழ்த்து
கண்ணகன் ஞாலமளந் ததூஉங் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம்- நண்ணிய
மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும்
பூவைப்பூ வண்ண னடி.
பதவுரை: கண்அகல் – இடம்பரந்த, ஞாலம் – உலகத்தை, அளந்ததூஉம்- அளந்ததுவும், காம சீர் – அழகிய புகழையுடைய, தண் – குளிர்ந்த, நறும்பூ குருந்தம் – நல்ல நீ (மணமுடைய) நீ மலர் களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் – வீழ்த்தியதுவும், நண்ணிய – (கஞ்சனால் விடப்பட்டுத்) தன்னைக்கிட்டிய, மாயச் சகடம் – வஞ்சனைச் சகடத்தை, உதைத்ததூஉம் – உதைத்து வீழ்த்தியதுவும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்று செய்கையும், பூவைப்பூவண்ணன் – காயாமலர் போலும் நிறத்தை யுடைய திருமாலின், அடி – அடிகளின் செய்கைகளாம் என்றவாறு.
ஞாலம் ஈண்டு உலகம் என்னும் பொருட்டு. “ஞால மூன்றடித் தாய முதல்வற்கு” (கலி – 1 – 124) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஞாலமளந்தது முதலியன
” மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி.”
” கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்.”
” நின் மாமன் செய்வஞ்ச உருளுஞ் சகடமுதைத் தருள் செய்குவாய்”
எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டன.
” பூவைப் புதுமல ரொக்கு நிறம்”.
என்பது நான்மணிக்கடிகை.
காமரு, உ- சாரியை; காமம் மரு என்பது விகாரமாயிற்றெனக் கொண்டு, விருப்பம் மருவிய என்றுரைத்தலுமாம். அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. இம்மூன்றும் செய்தவை அடிகள் என்றுமாம்.
இம்மூன்று அரிய செயல்களும் செய்தன திருமாலின் அடி களாதலின் அவ்வடிகளை நினைந்து வாழ்த்தி வணங்கின் எல்லா நலமும் எய்தலாம் என்பது கருத்து.
இது பொருளியல்புரைக்கு முறையில் உலகிற்குப் பயனுண்டாகக் கூறிய வாழ்த்தாகும்.



