
திரிகடுகம் மூலமும் உரையும்
1. அருந்ததிக் கற்பினார் தோளுந் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் – சொல்லின்
அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுந்
திரிகடுகம் போலு மருந்து.
பதவுரை: அருந்ததி கற்பினார்- அருந்ததி போலும் கற்பினை யுடைய மகளிரது, தோளும் – தோளின் சேர்க்கையும், திருந்திய – குற்றமற்ற, தொல்குடியின் – பழைமையாகிய குடிப்பிறப்பின் கண், மாண்டார் – மாட்சிமையுற்றாரது, தொடர்ச்சியும் – தொடர்பும், சொல்லின் – சொல்லின்கண், அரில் அகற்றும் – பிணக்கை நீக்கும், கேள்வியார் – நூற்கேள்வியுடை யாரிடத்துக் கொண்ட, நட்பும் – நட்பும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், திரிகடுகம் போலும் மருந்து – (ஒருவர்க்கு) திரிகடுகையொக்கும் மருந்துகளாம். எ-று.
அருந்ததி – வசிட்டன் மனைவி; கற்பிற்கு எடுத்துக் காட்டாயவள்.
” தீதிலா வடமீனின் றிறமிவள் திறம்”
என்று சிலப்பதிகாரத்தும்,
” அருந்ததிக் கற்பினாளை யடிபணிந் தவனுங் கண்டான்”
என்று சிந்தாமணியிலும்,
“சீலமின்ன தொன்ற ருந்ததிக் கருளிய திருவே.”
என்று கம்பராமாயணத்திலுங் கூறப்பெற்றமை காண்க.
அரில் – மாறுபாடு, குற்றம். திரிகடுகம் – மூன்று கார்ப்புடைய மருந்துப் பொருள்கள், சுக்கு, திப்பிலி, மிளகு என்பன; திரிகடுகம் உடலின் பிணி நீக்கி இன்பம் பயத்தல் போல இம்மூன்றும் உடல் உயிர்களின் பிணிகளை நீக்கி இன்பம் விளைப்பனவாகுமென்க. சொல்லின் இம்மூன்றும் மருந்து எனக் கூட்டியுரைத்தலுமாம். மாண்டார் – மாண் பகுதி.
2. தங்குணங் குன்றாத் தகைமையுந் தாவில்சீர்
இன்குணத்தா ரேவின செய்தலும் – நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவு மிம்மூன்றும் மேன்முறை
யாளர் தொழில்.
பதவுரை: தம்குணம் குன்றா – தமது குடிமைக்கும் நிலைமைக்கு மேற்ற பண்பினின்றும் வழுவாத, தகைமையும் – தன்மையும், தாஇல்- கேடில்லாத, சீர் – புகழையுடைய, இன்குணத்தார் – இனிய குணத்தினையுடையவர், ஏவின – பிறர் ஏவினவற்றை, செய்தலும்- செய்வதும், நன்கு உணர்வின் – நன்றாகிய உணர்வினையுடைய, நான்மறையாளர் – நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் கூறிய நெறியில், செலவும் – ஒழுகுதலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், மேன்முறையாளர் – மேலாகிய முறையினையுடையாரின், தொழில் – செயல்களாம். எ-று.
தகைமை – பெருமையுமாம். ஏவின – வினையாலணையும் பெயர். மேன்முறையாளர் – மேலோரின் ஒழுக்கமாகிய முறையைக் கையாளுபவர்.
3. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்கொண்ட
இல்லாளைக் கோலாற் புடைத்தலும் – இல்லஞ்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியா மையான்வருங் கேடு.
பதவுரை: கல்லார்க்கு – (நூல்களைக்) கற்றறியாதார்க்கு, இனன் ஆய் – இனமாகி, ஒழுகலும் – நடத்தலும், காழ் கொண்ட – வயிரங்கொண்ட, இல்லாளை – மனையாளை, கோலால் புடைத்தலும் – கோல் கொண்டு அடித்தலும், இல்லம் – (தம்) மனையின்கண், சிறியாரை – சிறுமைக் குணமுடைய காமுகரை, கொண்டு புகலும் – உடன் கொண்டு செல்லுதலும் , இம்மூன்றும் – (ஆகிய) இந்தமூன்றும், அறியாமையான் வருங்கேடு – பேதமை காரணமாக வருங்கேடுகளாம். எ-று.
இனன் – சுற்றம், காழ்கொண்ட – செற்றங்கொண்ட
” காழ்த்த பகைவர் வணக்கமும்”. (திரிகடுகம் – 24)
என்புழிக் காழ்த்தல் இப்பொருட்டாதல் காண்க.
காழ்கொண்டவள் எறியென்று எதிர்நிற்பாளாவள். காழ் கொண்ட என்பதற்குக் கற்பின் உறுதியைக் கொண்ட என்றுரைப் பாருமுளர். சிறியார் காமுகராதலை “செருக்குஞ் சினமுஞ் சிறுமையுமில்லார்”. என்னுங் குறளுரை நோக்கியுணர்க. கேடு பயப்பனவற்றைக் கேடு என உபசரித்தார்.
4. பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற
பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் – முற்றன்னைக்
காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்மூன்றுஞ்
சாவ வுறுவான் றொழில்.
பதவுரை: பகைமுன்னர் – தன்பகைவரிடத்துக்கு அணிமையில், வாழ்க்கை செயலும் – (குடியிருந்து) வாழ்க்கை நடத்துதலும், தொகைநின்ற – கூட்டமாக நின்ற, பெற்றத்துள் – எருதுகளின் நடுவில், கோல் இன்றிச் சேறலும் – கோல் இல்லாமல் செல்லுதலும், முன் தன்னைக் காய்வானை – காலம் நேர்ந்துழித் தன்னை வருத்தும் உட்பகையுடையவனை, கைவாங்கிக் கோடலும் – (பகையிலனென்று) தழுவிக் கொள்ளுதலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், சாவ உறுவான் தொழில் – சாதற்கு அமைந்தவனுடைய செயல்களாம். எ-று.
வாழ்க்கை செயல் என்பதற்குச் செல்வத்துடன் வாழ்தல் என்று கூறுதலுமாம். முன் என்பது எதிர்வையுணர்த்திற்று. கைவாங்கி என்பதற்கு நீங்கி எனப் பொருள் கொண்டு, தன்னைப் பகைக்கு மியல்புடையளைவனை முன்னே கைவிட்டு நீங்கிப் பின் நட்புக் கொள்ளுதலும் என்று உரைப்பாருமுளர். இவை சாதலை விளக்கு மென்பார், ‘இம்மூன்றும் சாவவுறுவான்றொழில்’ என்றார்.
5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப
விழைவிலாப் பெண்டிர்தோட் சேர்வும் – உழந்து
விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும்
அருந்துயரங் காட்டு நெறி.
பதவுரை: வழங்கா – (பலரும் இறங்கிச்) செல்லப் பெறாத, துறைஇழிந்து – துறையின்கண் இறங்கி, நீர்ப்போக்கும் – நீரில் நடந்து செல்லுதலும், ஒப்ப – தன்னையொப்ப, விழைவு இலா – விருப்பமில்லாத, பெண்டிர்தோள் – மகளிரின் தோள்களை, சேர்வும் – அணைதலும், உழந்து – வருந்தி, விருந்தினனாய் – விருந்தினனாகி, வேற்றூர் – அயலூரில், புகலும் – செல்லுதலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், அருந்துயரம் – அரிய துன்பத்தைக், காட்டும் நெறி – உண்டாக்கும் வழிகளாம். எ-று.
ஒப்ப விழைதல் – ஒத்த அன்புடைத்தாதல்; விழைவு என்பதற்கு விரும்பப்படும் அழகும் குணனும் என்றுரைத்தலுமாம். உழந்து என்பதற்குச் செல்வத்தையிழந்து வருந்தி என்று பொருள் கொள்க. அருந்துயரம் – சாக்காடு முதலியன; துயர் என்பது சாதலையும் சாதல் என்பது வருந்துதலையும் உணர்த்துதலை,
” காதலனுற்ற கடுந்துயர் பொறாள்”
என மணிமேகலையும்,
” சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம்.”
என நான்மணிக்கடிகையும் கூறுவனவற்றால் முறையே அறிக.
6. பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும் – அறவினையைக்
காராண்மை போல வொழுகலு மிம்மூன்றும்
ஊராண்மை யென்னுஞ் செருக்கு.
பதவுரை: தன்னை – தன்னை, பிறர் பேணுங்கால் – பிறர் நன்கு மதிக்குமிடத்து, நாணலும் – தான் அதற்கு நாணுதலும், பேணார் – மதியாராய், திறன் – தன்றகுதியை, வேறுகூறில் – வேறுபட இழித்துக் கூறில், பொறையும் – அதனைப் பொறுத்தலும், அறம் வினையை – அறமாகிய நற்செய்கையை, கார் – மழையானது, ஆண்மை போல – (கைம்மாறு கருதாது) ஆளுந் தன்மைபோல, ஒழுகலும்- வளர்த்து ஒழுகலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், ஊர் ஆண்மை என்னும் – ஊரை ஆளுந்தன்மை என்று சொல்லுகின்ற, செருக்கு – செல்வங்களாம். எ-று.
பேணுதல் – மதித்துப் புகழ்தலும் உபசரித்தலும். பேணார், முற்றெச்சம்; பெயராக்கிப் பகைவர் என்றுரைப்பாருமுளர். வேறு திறன் என மாறுதலுமாம். காராண்மை என்பதற்குப் பயிர்த் தொழில் என்றுரைத்தலும் பொருந்தும்.
இன்சொல் விளைநிலனா வீதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர் பாய்ச்சி பறக்கதி ரீனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்.
என்றார் முனைப்பாடியார். ஊராண்மையாவது ஊரிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல்; பிறரின் மேம்படும் ஆண்மை எனலுமாம். இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். செருக்கு, செல்வத் திற்கு ஆகுபெயர்.
“வேண்டாமை யென்னுஞ் செருக்கு.” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக.
7. வாளைமீ னுள்ள றலைப்படலு மாளல்லான்
செல்வக் குடியுட் பிறத்தலும் – பல்லவையுள்
அஞ்சுவான் கற்ற வருநூலு மிம்மூன்றுந்
துஞ்சூமன் கண்ட கனா.
பதவுரை: வாளைமீன் – வாளைமீனை, உள்ளல் – உள்ளான் என்னும் பறவை, தலைப்படலும் – வௌவுதற்கு முயறலும், ஆள் அல்லான் – ஆளுந்திற மில்லாதவன், செல்வக் குடியுள் – செல்வ முடைய குடும்பத்தில், பிறத்தலும் – பிறப்பதும், பல் அவையுள் – பல அவையின் கண்ணும், அஞ்சுவான் – (எடுத்துச் சொல்லுதற்கு) அஞ்சுபவன், கற்ற – கற்றறிந்த. அருநூலும் – அரிய நூற்கல்வியும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், துஞ்சுஊமன் – தூங்கிய ஊமையன், கண்ட கனா – கண்ட கனவினை யொக்கும்; எ-று.
உள்ளல் என்பது உள்ளு எனவும் உள்ளான் எனவும் வழங்கும். சிறுபறவையாகிய உள்ளல் பெருமீனாகிய வாளையை அடைய வொண்ணாதென்றபடி. வாளை மீனுள்ளல் தலைப் படல் என்னுந் தொடரை எழுவாயும் இரண்டாம் வேற்றுமையும் மயங்கி வந்ததற்கு உதாரணமாகக் காட்டினர் மயிலைநாதர் முதலாயினார்.
பல்அவை – செல்லும் அவையின்கண்ணெல்லாம்; அறிஞர் பலர் கூடிய அவை என்றுமாம்;
“பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்.”
என்னுந் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது.
பயனிலதென்பார் ஊமன் கண்ட கனா, என்றார். ஊமன் கனவினைப் பிறர்பாற் கூறி உசாவலாமையின், அதன் பயனை அறியமாட்டு வானல்லன் ஆகலின் கனவு பயனிலதாகும் என்க.
8. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த
நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் – வெல்சமத்து
வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுந்
தாந்தம்மைக் கூறாப் பொருள்.
பதவுரை: தொல் அவையுள் – பழைமையாகிய அவையின் கண், தோன்றும் – விளங்கித் தோன்றும், குடிமையும் – உயர் குடிப் பிறப்பும், தொக்குஇருந்த – கூடியிருந்த, நல்அவையுள் – நல்லோர் அவையின்கண், மேம்பட்ட கல்வியும் – மேன்மையுற்ற புலமையும், வெல்சமத்து – வெல்லும் போரின்கண், வேந்து உவப்ப – (தம்) அரசன் மகிழுமாறு, அட்டு – (பகைவரைக்) கொன்று, ஆர்த்த வென்றியும் – ஆரவாரித்த வெற்றியும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், தாம் – (அவற்றை உடையராகிய) தாம், தம்மைக் கூறா – தம்மைப் புகழ்ந்து கூறாத, பொருள் – பொருள்களாம். எ-று.
தொல் அவை – தொல்லோர் அவை. தொல்லோர் – தொல் குடியில் வந்தோர். நல் அவை – நல்லார் அவை, “நல்லவை” எனவும் “நல்லாரவை” எனவும் வள்ளுவனார் கூறுதல் காண்க. ஆர்த்தவென்றி – ஆர்த்தற்குக் காரணமாகிய வென்றி.
” தேன்வாயுமிழ்ந்த வமிர்து”. (சிந்தாமணி)
என்புழிப்போல, கூறாப்பொருள் என்றது.
இவைதாமே விளங்கித் தோன்றுமாகலின் கூறவேண்டா என்றபடி; கூறின் பெருமை குன்றுமாகலின் கூறலாகாதன என்றுமாம்.
கற்றனவுங் கண்ணகன்ற சாயலுமிற் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும்.
என்பதும் காண்க.
9. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையில்
பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல
துணிதலிம் மூன்றும் முழுமக்கள்
காத லவை.
பதவுரை: பெருமை உடையார் – பெருமைக் குணமுடையாரது, இனத்தின் அகறல் – கூட்டத்தினின்றும் நீங்குதலும், உரிமை இல் பெண்டிரை – மனைவியாகாத பிற மகளிரை, காமுற்று – விரும்பி, வாழ்தல் – அவரோடு கூடி ஒழுகுதலும், விழுமிய அல்ல – சிறந்தவையல்லாத வினைகளை, துணிதல் – துணிந்து செய்தலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்று செயல்களும், முழுமக்கள் – அறிவில்லாதார், காதலவை – விரும்புவனவாம். எ- று.
உரிமை – மனைவியென்னும் பொருட்டாதலை,
” உரிமை முன்போக்கியல்லா லொளியுடை மன்னர்போகார்”
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலறிக. விழுமிய வல்ல – சிறந்த பயனில்லனவும் இழிதக்கனவுமாய செயல்கள். முழுமக்கள் – அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர்.
” முழுப்பதகர் தாடுரந்து.”
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் முழு என்பதற்கு அறிவு நுழைதற்கு வழியிலராய் என நச்சினார்க்கினியர் பொருள் கூறினமை காண்க.
” முழுமகன் சிதடனிழுதை மூடன்”
என்பது திவாகரம்.
” நடலை யிலராகி நன்றுணராராய முடலை முழுமக்கள்.”
என்பது பழமொழி.
10. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை யில்லா வவைக்களனும் – பாத்துண்ணுந்
தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும்
நன்மை பயத்த லில.
பதவுரை: கணக்காயர் இல்லாத – ஓதுவிப்பாரைப் பெறாத, ஊரும் – ஊரும், பிணக்கு அறுக்கும் – மாறுபாட்டினை நீக்கும், மூத்தோரை இல்லா – முதியோரைப் பெறாத, அவைக்களனும் – அவையும், பாத்து உண்ணும் – பகுத்து உண்ணும் , தன்மை இலாளர்- தன்மையில்லாதவரது, அயல் இருப்பும் – பக்கத்திற் குடியிருத் தலும், இம்மூன்றும் – (ஆகிய) இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல – நன்மை தருதல் உடையனவல்ல. எ-று.
கணக்காயர் – நூல் கற்பிக்கும் ஆசிரியர்,
“கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்” என்பது நாலடியார். பிணக்கு – மாறுபாடு; ஐயம், திரிபுகள். மூத்தோர் – அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்ந்தவர். இதனை
“அறனறிந்து மூத்தவறிவுடையார்” என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையானறிக.
“அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை” என்பது நான்மணிக் கடிகை. பாத்து – பகுத்து என்பதன் மரூஉ. பாத்துண்ணல் – வறியர் முதலாயினார்க்குப் பகுத்தளித்துப் பின்பு தான் உண்ணுதல்.
“பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின்” என்னுங் குறளுரை நோக்குக. ஊர்கல்வி விருப்பினர்க்கும் அவைக்களன் முறை கூறுவார்க்கும், அயலிருப்பு வறியராதியோர்க்கும் நன்மைபயவா என்க.
11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்
வீழக் களியாதான் காவா துரையுந் – தெளியாதான்
கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்றும்
ஊரெல்லா நோவ துடைத்து.
பதவுரை: விளியாதான் – பாடுந்திறமில்லாதவனது,கூத்தாட்டு -கூத்தாட்டத்தினை, காண்டலும் – பார்த்தலும், வீழ களியாதான் – (மயக்கத்தால்) வீழுமாறு கள்ளுண்ணாதவன், காவாது உரையும் – போற்றாது சொல்லும் சொல்லும், தெளியாதான்கூரையுள் – (குற்றமிலனென்று) தன்னைத் தேறாதவனுடைய வீட்டின்கண், பல்காலும் – பலமுறையும், சேறலும் – செல்லுதலும், இம்மூன்றும்- (ஆகிய) இந்தமூன்றும், ஊரெல்லாம் – ஊரெல்லாரும், நோவது- வருந்துங் குற்றத்தை, உடைத்து – உடையன. எ-று.
விளி – இசைப்பாட்டு.
” இளிவாய்ப் பிரசம் யாழாக”
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில், விளியாக் கொண்டு, என்பதற்குப் ‘பாட்டாகக் கொண்டு’, என்று பொருள் கூறி, விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், என்றார் பிறரும், என இதனையே மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். விளியாதான் – என்பதனை எழுவாயாக்கி உரைப்பாருமுளர். காவாது – நாவைப் பாதுகாவாமல், கூரை – மனை. – நோவது, வினையாலணையும் பெயர். உடைத்து, பன்மையிலொருமை.
12. தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன்
வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்
கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர்
கேளாக வாழ்த லினிது.
பதவுரை: தாளாளன் என்பான் – முயற்சியுடையானென்று சொல்லப்படுவானாகிய, கடன்படா வாழ்பவன் – கடன் கொள்ளாமல் வாழ்பவனும், வேளாளன் என்பான் – ஒப்புரவு செய்வான் என்று சொல்லப்படுவானாகிய, விருந்து இருக்க – தன்னைத் தேடி வந்த விருந்தினர் இல்லின் புறத்திருக்க, உண்ணாதான் – தனித்து உண்ணுதலைச் செய்யாதவனும், கோளாளள் என்பான் – ஆசிரியன் கற்பித்தவற்றை உள்ளத்திற் கொள்ள வல்லன் என்று சொல்லப் படுவானாகிய, மறவாதான் – கற்றவற்றை மறவாதவனும், இம் மூவர் – (ஆகிய) இந்த மூவரையும், கேள் ஆக – நட்டாராகப் பெற்று, வாழ்தல் – வாழுதல், இனிது – (ஒருவர்க்கு) இன்பத்தைத் தருவதாம். எ-று.
தாள், தாளாண்மை -முயற்சி, வேளாண்மை – உபகாரம், முயற்சியுடையானென்று சொல்லப்படுவோன் கடன்படாமல் வாழ்பவனாவன்; என்றிங்ஙனம் தனித்தனி முடித்துரைத்தலுமாம். படா – ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், கோள் – முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
“கடமுண்டு வாழாமை காண்டலினிதே” என இனியவை நாற்பதிலும்,
“வேளாண்மை செய்தற் பொருட்டு” எனத் திருக்குறளிலும்,
“வேளாணெதிரும் விருந்தின் கண்ணும்” எனத் தொல் காப்பியத்திலும் போந்த தொடர்கள் இங்கு நோக்கற்பாலன
கோளாளன் – கொள்ளுதல் வல்ல மாணவன்.
13. சீல மறிவா னிளங்கிளை சாலக் குடியோம்பல்
வல்லா னரசன் – வடுவின்றி மாண்ட குணத்தான்
றவசியென் றிம்மூவர் யாண்டும்
பெறற்கரி யார்.
சீலம் அறிவான் – ஆசிரியன் கற்பித்த நிலையை அறிவானாகிய, இளங்கிளை – மாணவனும், குடி – தளர்ந்த குடிகளை, சால – ஓம்பல்வல்லான் – மிகவுங் காத்தல் வல்லானாய, அரசன் – வேந்தனும், வடுஇன்றி – குற்றமில்லாமல், மாண்ட குணத்தான் – மாட்சிமையுற்ற குணத்தினனாகிய, தவசி – துறவியும், என்று இம்மூவர் – என்று இந்த மூவரும், யாண்டும் – எக்காலத்தும், பெறற்கு அரியார் – பெறுதற்கு அரியவர். எ-று.
சீலம் – கற்பித்த நிலையாதலைச் “சீலக் கஞ்சி நற்போதகஞ் செல்வன” என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக, இளங்கிளை என்பது, தம்பி, தங்கை, மைந்தன், மைத்துனன் முதலிய இளஞ் சுற்றங்களையும் குறிக்கும்.
“மாலவற் கிளங்கிளை” எனச் சிலப்பதிகாரத்திலே தங்கை என்னும் பொருளிலும்,
“எழுமையும் பெறுக வின்ன விளங்கிளைச் சுற்றமென்றாள்” எனச் சிந்தாமணியில் மைத்துனன் என்ற பொருளிலும் இச்சொல் வந்துள்ளமை காண்க.
“இளங்கிளையாரூரன்” என நம்பியாரூரர் தேவாரத் திருப்பாட்டிற் கூறிக் கொள்ளுதலின் தோழன், தொண்டன் என்னுஞ் சுற்றங் களையும் இது குறிக்குமென்க.
இங்கே தம்பி என்றும், புதல்வன் என்றும் உரைத்தலுமாம். சீலம் அறிவான் இளங்கிளையாவன் என்றிங்ஙனம் தனித்தனி முடித்தலும் அமையும். தளர்ந்த குடியை ஓம்பலாவது “ஆறி லொன்றாய பொருடன்னையும் வறுமை நீங்கிய வழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும்” என்பர் பரிமேலழகர். வடு – காமவெகுளி மயக்கங்கள்.
14. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டுஞ்
செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றுங்
குறுகா ரறிவுடை யார்.
பதவுரை: இளமை – இளமைப் பருவமுடையவர், இழுக்கல் இயல்பிற்று – தவறுபுரிதலாகிய இயற்கையை உடையார், பேதைமை – அறியாமையுடையவர், பழித்தவை – பெரியார் விலக்கிய சொற் களையே, சொல்லுதல் வற்று ஆகும் – சொல்லுதலில் வல்லவ ராவார், சிறுமை – கீழ்மையுடையவர், யாண்டும் – எப்பொழுதும், செறுவொடு நிற்கும் – கறுவுதலுடையராய் நிற்பர், (ஆதலால்) இம்மூன்றும் – இந்த மூவரையும், அறிவுடையார் – அறிவினை யுடையோர், குறுகார் – அணுகார். எ-று.
பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன.
” பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து”.
என்புழிப்போல. இளையர், பேதையர், கீழோர் என்று இவர்களை அறிவுடையோர் நெருங்காரென்.
15. பொய்வழங்கி வாழும் பொறியறையுங்
கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் – ஊழினால்
ஒட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர்
நட்கப் படாஅ தவர்.
பதவுரை: பொய்வழங்கி – பொய்ச் சொற்களைக் கூறி, வாழும் – உயிர்வாழ்கின்ற, பொறிஅறையும் – திருவற்றானும், ஊழினால் – விதியினால், தாழ்விடத்து – மேலோர் தாழ்வெய்திய காலத்து, கைதிரிந்து – ஒழுக்கம் வேறுபட்டு, நேர்கருதும் – அவரைத் தனக்கு ஒப்பாக எண்ணும், தட்டையும் – மூங்கில் போல்வோனும், ஒட்டி – பிறரோடு நட்புக் கொண்டு, வினைநலம் பார்ப்பானும் – தன் கருமத்தின் நன்மையையே நோக்குவோனும், இம்மூவர் – (ஆகிய) இந்தமூவரும், நட்கப்படாஅதவர் – நட்புக் கொள்ளப்படாதவர். எ-று.
இந்நூலிலே பின் “நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும்” என்றும், நான்மணிக்கடிகையில் “பொய்த்தலிறு வாயநட்புக்கள்” என்றும் கூறியிருப்பன இங்கு நோக்கற் பாலன.
பொறி – அறிவுமாம், பொறியறை – பொறியிலி, கண்ணறை போல. தட்டை – மூங்கில்; உள்ளே புரையுடைத்தாதல் பற்றித் தட்டை என்றார்; வணங்காமை குறித்துமாம். ஒட்டி வினை நலம் பார்ப்பான் என்றது. “உறுவது சீர்தூக்கும் நட்பினை.”
16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானு மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர்
சாவா வுடம்பெய்தி னார்.
பதவுரை: மண்ணின் மேல் – புவியின் மீது, வான்புகழ் – சிறந்த புகழை, நட்டானும் – நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் – பெண்களுள், மாசுஇல்சீர் – குற்றமில்லாத சிறப்பினையுடைய, கற்பு உடையாள் – கற்புடைய மனைவியை, பெற்றானும் – பெற்றவனும், உண்ணும் நீர் – உண்ணுதற்குரிய நீரையுடை, கூவல் – கிணற்றினை, குறைவு இன்றி – குறைவில்லாமல், தொட்டானும் – தோண்டின வனும், இம்மூவர் – (ஆகிய) இந்த மூவரும், சாவா உடம்பு – அழியாத உடம்பினை, எய்தினார் – பெற்றவராவர். எ-று.
” இந்நிலத்து மன்னுதல் வேண்டினிசை நடுக.”
என்று நான்மணிக்கடிகையும்,
” பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்.”
என்று திருக்குறளும் கூறுவன இங்கே கருதற்பாலன.
உண்டல் பொதுவினையுமாகலின், உண்ணுநீர் என்றார்.
“உண்ணுநீர் விக்கினா னென்றேனா” என்பது கலித்தொகை. சாவா உடம்பு – புகழுடம்பு; தேவயாக்கையுமாம். தெளிவு பற்றி எய்தினார் என இறந்த காலத்தாற் கூறினார்.
17. மூப்பின்க ணன்மைக் ககன்றானுங் கற்புடையாட்
பூப்பின்கட் சாராத் தலைமகனும் – வாய்ப்பகையுட்
சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்மூவர்
கல்விப் புணைகை விட்டார்.
பதவுரை: மூப்பின்கண் – மூப்பு வந்தவிடத்தும், நன்மைக்கு அகன்றானும் – துறவறத்தை அடைதற்கு அஞ்சி நீங்கினவனும், கற்புடையாள் – கற்புடைய தன் மனைவியை, பூப்பின்கண் – பூப் பெய்திய காலத்தே, சாராத்தலைமகனும் – அடையாத கணவனும், வாய்ப்பகையுள் – சொற்போரின் கண், சொல்வென்றி – சொல் வெற்றியை, வேண்டும் – விரும்பும், இலிங்கியும் – துறவியும், இம்மூவர் – இந்த மூவரும், கல்விப் புiகைவிட்டார் – கல்வி யாகிய தெப்பத்தைக் கைக்கணின்றும் தவறவிட்டு அழுந்துவார். எ-று.
மூப்பின் கண்ணும் என உம்மை விரிக்க. நன்மை துறவின் மேற்று:
” வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல”. (திருக்குறள்)
” நரைவருமென் றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்”. (நாலடியார்)
என்பனவாகலின், இளமைக் கண்ணே துறத்தல் கடவதாகவும் முதுமையிலும் துறத்தற்கஞ்சி யொழிந்தான் என இழித்துக் கூறிய வாறு.
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண்டான பின்
என்னும் கம்பராமாயணச் செய்யுளும் ஈண்டுக் கருதற்பாற்று.
பூப்பு- மாதவிடாய். பூத்தபின் மூன்றுநாள் சொற்கேட்கும் வழியுறைதலும், பன்னிருநாள் கூடியுறைதலும் வேண்டும் என்பர்.
பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலையான.
என்பது தொல்காப்பியம்.
இலிங்கி – துறவி; தவக்கோலந் தாங்கியவன் என்றும், தார்க்கிகன் என்றும் உரைத்தலுமாம். துன்பக் கடலினின்றும் கரையேறுதற்குப் புணையாகிய கல்வி இவர்கட்கு அப்பயன் விளைத்திலாமையின் கல்விப்புணை கைவிட்டார் என்றார்.
18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்
கிருதலையு மின்னாப் பிரிவும் – உருவினை
உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றும்
கள்ளரி னஞ்சப் படும்.
பதவுரை: ஒருதலையான் – உறுதியாக, வந்துறூஉம் மூப்பும் – வந்து பொருந்தும் முதுமைப் பருவம், புணர்ந்தார்க்கு – நட்டவர்க்கு, இருதலையும் – இருவர்மாட்டும், இன்னாபிரிவும் – துன்பத்தைப் பயக்கும் பிரிவும், உருவினை – உடலை, உள்உருக்கி – உள்ளேயுள்ள எலும்பு முதலியவற்றை யுருக்கி, தின்னும் – வருத்தும், பெரும்பிணியும் – பெரிய நோயும், இம்மூன்றும் – இந்த மூன்றும், கள்ளரின் அஞ்சப்படும் – திருடர்க்கு அஞ்சுதல்போல அஞ்சப்படும். எ-று.
ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி யென்னும் இருவருள் ஒருவரிடத்து என்றுருரைப்பாருமுளர். அளபெடை இன்னிசை நிறைத்தற் பொருட்டு. தின்னல் – நலிதல்;
“பிணிதன்னைத் தின்னுங்கால்” எனப் பின்னுங் கூறுவர். படும் – தகும் என்னும் பொருட்டு.
19. கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற்
பிறன்கடை நின்றொழுகு வானும் – அறந்தெரியா
தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற்
றூங்கு பவர்.
பதவுரை: கொல்யானைக்கு ஓடும் – கொல்கின்ற யானையின் முன் ஓடுகின்ற, குணம்இலியும் – குணமில்லாதவனும், எல்லில் – இரவில், பிறன்கடை நின்று – (பிறன் இல்லாளைக் காதலித்து) அவன் வாயிலின்கட் சென்று நின்று, ஒழுகுவானும் – ஒழுகுபவனும், ஆடும் பாம்பு – படமெடுத்தாடும் பாம்பினை, அறம்தெரியாது – அறத்தை ஆராய்ந்து தெளியாது, ஆட்டும் – ஆட்டுகின்ற, அறிவிலியும் – அறிவில்லாதவனும், இம்மூவர் – இம்மூவரும், நாடுங்கால் – ஆராயுமிடத்து, தூங்குபவர் – இறப்பவராவர். எ-று.
கொல்யானைக் கோடுங்குணமிலி என்பதற்குக் கொல்லுந் தொழிற்குரிய யானைக்கு அஞ்சிப் போர்க் களத்தினின்றோடு கின்ற வீரத்தன்மை யில்லாதவன் என்றுரைப்பாருமுளர். அறந் தெரியாது பிறன்கடை நின்றொழுகுவானும் என மாறுதலுமாம்.
” அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்.”
என்னுந் திருக்குறளை நோக்குக. மறந்தெரியாது எனப் பிரித்து நன்றி செய்தார்க்கும் தீங்கினைச் செய்கின்ற (பாம்பின்) கொடுமையை உணராமல் என்றுரைத்தலுமாம்; ஆடும்பாம்பு – பெயர் மாத்திரை; அடும் என்பது நீண்டதாகக் கொண்டு கொல்லும் பாம்பு என்றுரைத் தலும் பொருந்தும். தூங்கல் – துஞ்சல்; மடிதல்.
20. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக்
கொளலுங் – கதித்தொருவன் கல்லானென்
றெள்ளப் படுதலு மிம்மூன்றும் எல்லார்க்கு
மின்னா தன.
பதவுரை: பிறன் – பிறன்பொருண்மேல், ஆசைப்படுதலும் – விரும்புதலும், பாசம் பசிப்ப – சுற்றத்தார் பசித்திருக்குமாறு, மடியைக் கொளலும் – சோம்பலைக் கோடலும், கதித்து – வெகுண்டு, ஒருவன் – ஒருவனால், கல்லான்என்று – கல்லாதவன் என்று, எள்ளப் படுதலும் – இகழப்படுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், எல்லார்க்கும் – (அறிவுடையோர்) எல்லோருக்கும், இன்னாதன – துன்பம் பயப்பனவாம். எ-று.
பிறன் என்றது பிறன்பொருளை யுணர்த்திற்று. ஆசை என்பதற்குப் பொன் என்று பொருள் கொண்டு அறிவில்லாத பிறனிடத்துச் செல்வமுண்டாதலும் என்றுரைத்தலுமாம், பாசம் – அன்பு, அன்பு செய்யும் சுற்றத்தின்மேல் நின்றது. கதித்து – கதங் கொண்டு, பருத்துவளர்ந்து என்றுரைத்தலும் பொருந்தும்.
21. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி
நல்லவர் கோள்.
பதவுரை: வருவாயுள் – வரும்பொருளில், கால்வழங்கி வாழ்தல் – காற்பகுதியை ஈந்து வாழுதலும், செரு – போரின்கண், வாய்ப்பச்செய்தவை – வெற்றி பொருந்தச் செய்த வீரச் செயல் களை, நாடா – நினைந்து தம்மை நன்குமதியாத, சிறப்புடைமை – மேன்மைக் குணமுடையராதலும், பலநாடி – பலநூல்களையும் ஆய்ந்து, நல்லவை – அவற்றுள் நல்ல நூல்களை, எய்தக் கற்றல் – பொருந்தக் கற்றலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நலமாட்சி – நன்மையாகிய குணங்களையுடைய, நல்லவர்கோள் – நல்லோரின் கொள்கையாம். எ-று.
கால் என்பது அவ்வளவிற்றாய பொருளுக்கு ஆகுபெயர்.
வருவாயறிந்து வழங்கலினிதே என்பது இனியவை நாற்பது.
” ஆற்றின ளவறிந் தீகவது பொருள் போற்றி வழங்கு நெறி.”
என்னுங் குறளுரையில், பிறரும் வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் என்றார் எனப் பரிமேலழகர் இதனை எடுத்துக் காட்டினமை காண்க. நல்லவை பலவும் நாடிக் கற்றல் என்றும், பல அவையினுஞ் சென்று நல்லவைகற்றல் என்றும் உரைத்தலுமாம். பின்னும் பல்லவையுள் நல்லவை கற்றலும் என்பர்.
22. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்
பற்றறா தோடு மவாத்தேருந் – தெற்றெனப்
பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும்
வித்தற வீடும் பிறப்பு.
பதவுரை: பற்று என்னும் – பற்று என்று கூறப்படும், பாசத் தளையும் – அன்பாகிய கட்டும், பலவழியும் – பலபொருள் களிடத்தும், பற்று அறாது – விருப்பம் நீங்காது, ஓடும் – செல்லும், அவாத்தேரும் – அவாவாகிய தேரும், தெற்றென – தெளிவாக, பொய்த்து உரை என்னும் – பொய்த்துச் சொல்லுதல் என்னும், பகைஇருளும் – பகைமையுடைய இருளும், இம்மூன்றும் – இவை மூன்றும், வித்து – பிறவிக்கு மூலமாம், அற – இவை கெடுதலால், பிறப்புவீடும் – பிறவியொழியும். எ-று.
சிலப்பதிகாரத்தில் வரும்,
” பிணிப்பறுத்தோர்தம் பெற்றி யெய்தவும்.”
என்னுந் தொடர்க்கு உரையெழுதுமிடத்தில், “பிணிப்பு – பற்று; ஆவது – அன்பாகிய ஒருதளை; அதனை அறுத்தோர் அருளுடையோர்” என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது ஈண்டு அறியற் பாலது. தளை – கட்டு, பந்தம். அவா – எனக்கிது வேண்டுமென்னும் உணர்வு, வித்தற என்பதற்கு அடியுடன் கெட என்றுரைத்தலுமாம். அறுதல் என்பது அற எனத் திரிந்து நின்றது.
” பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்.”
” அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து”.
என்னும் குறள்கள் இங்கே சிந்திக்கற்பாலன.
பொய்த்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதியுமாம். அறியாமையைச் செய்தலின் பொய்யுரையை இருள் என்றார்.
” எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.”
என்னுங் குறளுரையில், “உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாதவிருள் போகலின், பொய்யா விளக்கே விளக்கென்றார். அவ்விருளாவது அறியாமை,” எனப் பரிமேலழகர் கூறியிருப்பது அறியற்பாலது.
23. தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார்
குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப்
பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று நல்வினை
யார்க்குங் கயிறு.
பதவுரை: தானம் கொடுக்கும் – தானமாகப் பொருளைக் கொடுக்கும், தகைமையும் – பெருந்தன்மையும், மானத்தார் – மானமுடையாரது, குற்றம் கடிந்த ஒழுக்கமும் – குற்றங்களை நீக்கிய நல்லொழுக்கமும், தெற்றென – தெளிய பல்பொருள் நீங்கிய – பல பொருளினின்றும் நீங்கிய, சிந்தையும் – எண்ணமும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நல்வினை – நல்வினையை, ஆர்க்கும் கயிறு – பிணிக்கும் கயிறாம். எ-று.
தானங் கொடுத்தலாவது அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடளிப்பது. மானம் – பெருமை, மானத்தார் ஒழுக்கம் என இயையும், தெற்றென – தெளிவாக; எச்சத் திரிபாகக் கொண்டு, உண்மை தெளிந்து என்றுரைத்தலுமாம்.
யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன்.
என்பவாகலின், பல்பொருள் நீங்கிய என்றார். நீங்குதல் – பற்று விடுதல், ஆர்க்குங்கயிறு – நீங்காமற் பிணிக்கும் கயிறு.
” திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு”.
என்று முப்பால் கூறுதல் காண்க.
24. காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லும்
தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்றும் ஆழ்ச்சிப்
படுக்கு மளறு.
பதவுரை: காண்தகு – காணத்தகுந்த, மெல்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – பரத்தையினது, வாய் இன் சொல்லும் – வாயாற் சொல்லும் இனிமையுடைய சொல்லும், தூண்டிலினுள் – தூண்டிலின்கண்ணே, பொதிந்த – இரும்பை மூடிய, தேரையும் – தவளையும், காழ்த்த பகைவர் – வயிரம் பற்றிய பகையை யுடையாரது. மாண்டசீர் – மாட்சிமைப்பட்ட சிறப்பையுடைய, வணக்கமும் – பணிவும், இம்மூன்றும் – இந்த மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் அளறு- (அறியாதிறங்கினாரை) அழுந்துவிக்கும் சேறு போலாம். எ-று.
உளத்தோடு சொல்லாமை தோன்ற ‘வாய்இன் சொல்லும்’ என்றார். தேரை மீனுக்கு இரையாகத் தூண்டிலிற் கோத்தது, அளறு- நிரயமுமாம். கணிகை வாயின் சொல்லும் பகைவர் வணக்கமும் துன்பம் விளைத்தலை
” அன்பின் விழையார் பொருள்விழையுமாய் தொடியார் இன்சொ லிழுக்குத் தரும்.”
” தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார் அழுத கண்ணீரு மனைத்து.”
என்னும் வாயுறை வாழ்த்தாலறிக. மூன்று பொருள் கூறும் நியதி பற்றித் தேரையும் என எண்ணினாரேனும் அதனை உவமமாகவே கொள்க. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கும் இஃதொக்கும்.
25. செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரு மாய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானு மிம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.
பதவுரை: செருக்கினால் வாழுஞ் – தருக்கோடு வாழும், சிறியவனும் – கீழ்மகனும், பைத்து அகன்ற – (நாக) படத்தின் தன்மையுடைத்தாய்ப் பரந்த, அல்குல் – அல்குலை, விலைபகரும் – விலைகூறி விற்கும், ஆய்தொடியும் – ஆராய்ந்த வளையலணிந்த கணிகையும், நல்லவர்க்கு வைத்த – துறவிகட்கமைத்த, அறப்புறம் – அறச்சாலையை, கொன்றானும் – கெடுத்தவனும், இம்மூவர் – இந்த மூவருடைய, கைத்து – பொருளை, கற்று அறிந்தார் – நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், உண்ணார் – உண்ணமாட்டார். எ-று.
” அல்குனலம் வரைவின்றி விற்கும்.”
என்றார் திருத்தக்கதேவரும். ஆய்தொடி, அன்மொழித் தொகை, நல்லவர் என்றது ஈண்டுத் துறவறத்தினரை,
” அடிசில் வைகலாயிரம் அறப்புறமு மாயிரம்”
என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர், அறப்புறம் என்பதற்கு அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்கள் என்று பொருள் கூறி, ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று என்றுரைத்தனர். ஆகலின் ஈண்டு நல்லவர் என்பதற்கு மாணாக்கர் என்றும், அறப்புறம் என்பதற்குக் கல்விச்சாலை என்றும் உரைத் தலுமாம். கொல்லுதல் – கெடுத்தல்.
” பொச்சாப்புக் கொல்லும் புகழை.”
என்புழிப்போல.
26. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற்
சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால
மெனப்படு வார்.
பதவுரை: ஒல்வது – தான் சென்ற வீட்டின்கட் பொருந்திய, அறியும் – அறிந்து ஒழுகும், விருந்தினனும் – விருந்தினனும் , ஆர்உயிரை – அரிய உயிரை, கொல்வதிடை – கொல்லுதற்கண், நீக்கி – அதனை விலக்கி, வாழ்வானும் – வாழ்பவனும், வல்லிதின் – மனவுறுதியால், சீலம் இனிது உடைய – ஒழுக்கம் நன்கு உடைய, ஆசானும் – ஆசிரியனும், இம்மூவரும் – இந்த மூவரும், ஞாலம் எனப்படுவார் – உயர்ந்தோர் என்று எல்லாரானும் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று.
ஒல்வது அறிதலாவது இல்வாழ்வார் அளிக்கும் உணவு நொய்தாயினும் அவர்க்கியல்வது அஃதென விருப்புடன் ஏற்றுக் கோடல். கொல்வது இடை நீக்கி என்பதற்குக் கொல்லுந்தொழில் தன்கண் நிகழாமற் போக்கி என்றுரைத்தலுமாம். சீலம் – வாய்மை, தூய்மை, அழுக்காறின்மை, அவாவின்மை முதலியன. ஞாலம் என்பது உயர்ந்தோர் என்னும் பொருட்டு.
” உலகம் எனப்படுவார் “
எனப் பின்னுங் கூறுவர்.
27. உண்பொழுது நீராடி யுண்ணுத லென்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதறம் – தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றும்
தூஉய மென்பார் தொழில்.
பதவுரை: உண்பொழுது- உண்ணுதற்குரிய பொழுதில், நீராடி உண்ணுதல் – நீரின்மூழ்கிப் பின் உண்ணுதலும், என் பெறினும் – எத்துணைப் பொருள் பெறுவதாய் இருப்பினும், பால்பற்றி – ஒரு பக்கம் சார்ந்து, சொல்லாவிடுதல் – நடுநிலை பிறழக் கூறாமலொழி தலும், தம் தோல்வற்றி – தம் உடல் மெலிந்து, சாயினும் – அழிவ தாயினும், சான்றாண்மை – சான்றாண்மையானது, குன்றாமை – குன்றாதிருத்தலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், தூஉயம் – யாம் தூய்மையுடையேம், என்பார் – என்பவருடைய, தொழில் – தொழில் களாம். எ-று.
” நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவார்.”
என ஆசாரக்கோவை கூறுவது இங்கு நோக்கற்பாலது. பால்பற்றி என்பதற்குப் பகை நொதுமல் நண்பு என்னும் முறைமை பற்றி என்றுரைத்தலுமாம்.
” பகுதியாற், பாற்பட்டொழுகப் பெறின்”
என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. சொல்லா- ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தோல் – உடம்பு; சான்று ஆண்மை – பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுதற்றன்மை.
பா – ம். உண்டலும், விடுதலும்.
28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும்
நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர்
உமிக்குற்றிக் கைவருந்து வார்.
பதவுரை: வெல்வது வேண்டி – வெற்றியுறுதலை விரும்பி, வெகுண்டு உரைக்கும் – சினந்து கூறும், நோன்பு இலியும் – பொறுமை இல்லாதவனும், இல்லது – தன்கண்இல்லாததொன்றை, காமுற்று – (நுகர) விரும்பி, இருப்பானும் – வருந்தியிருப்பவனும், கல்வி – பிறர்கல்விக்கண், செவிக்குற்றம் – செவிப்புலனாகிய சொற் குற்றத்தை, பார்த்திருப்பானும் – நோக்கியிருப்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், உமிகுற்றி – உமியைக் குற்றி, கைவருந்துவார் – அதனால் கைவருந்துபவரை ஒப்பர். எ-று.
வெல்வது – சொல்லில் வெற்றி கொள்ளுதல், நோன்பு பொறுமையாதலை “உற்ற நோய் நோன்றல்” என்பதனால் அறிக. சொற்குற்றத்தையே ஆராய்ந்து பிறர் சொல்லின் பயன்கொள்ளா திருப்பவன்” என்பார். ‘செவிக்குற்றம் பார்த்திருப்பானும்’ என்றார். கைவருந்துவார், சினைவினை முதலோடு முடிந்தது.
” வெல்வது வேண்டின் வெகுளி விடல்”
என நான்மணிக்கடிகையும்,
” வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே”
என இனியவை நாற்பதும்,
” உமிக்குற்றிக் கைவருந்துமாறு”
எனப் பழமொழியும் கூறுந் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன.
29. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற்
குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல்
பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண்
மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு.
பதவுரை: பெண் – மகளிர், விழைந்து – விரும்பி, பின்செலினும்- தன்பின்றொடரினும், தன் செலவில் – தனக்குரிய ஒழுக்கத்தி னின்றும், குன்றாமை – குறையாமையும், விழைந்து – தன்னை விரும்பி, கைக்கண்உறினும் – தன்கைக்கண் உற்றாலும், பொருட்கு – பொருளின்கண், காதல் இன்மை – விருப்பமின்மையும், மண் விழைந்து – (மனை படப்பை முதலிய) மண்ணை விரும்பி, வாழ்நாள் – வாழும் நாளினை, மதியாமை – உயர்வாக மதித்தல் செய்யாமையும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நுண்நூலவர் – நுண்ணிய பொருள்களையுடைய நூற்களையுணர்ந்தவர், விழைந்த – விரும்பிய, நோக்கு – நோக்கமாம். எ-று.
கண்விழைந்துதன் செலவிற் குன்றாமை என இயைதலும் பொருந்தும். கண்அசையுமாம். பொருட்கு, வேற்றுமை மயக்கம். நுண்நூல் விழைந்தவர் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். நூலவர் தன்செலவு எனப் பன்மையொருமை மயங்கின. பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை யென்னும் மூவாசைகளையும் ஒழித்தல் கூறியவாறு.
30. தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும்
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்
என்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் நின்ற
புகழுடை யார்.
பதவுரை: தன்நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்த வரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய செல்வத்து – மிக்க செல்வமுடைய காலத்து, பொச்சாப்பு நீத்தானும் – மறத்தலை நீக்கியவனும், என்றும் – எக்காலத்தும், அழுக்காறு – பொறாமையை, இகந்தானும் – நீங்கினவனும், இம்மூவர் – இந்த மூவரும், நின்ற புகழ் உடையார் – நிலைபெற்ற புகழுடையார். எறு.
மன்னிய – மிக்க என்னும் பொருட்டு. செல்வக்களிப்பாலே செய்வதும் தவிர்வதும் மறந்திருத்த லில்லாதவன் என்க. செல்வம் வந்துற்ற காலைப் பழைய சுற்றமும் துணையும் முதலியவற்றை மறத்தல் இல்லாதவன் என்றுமாம். நின்றபுகழ் – நிற்றற்குக் காரண மாகிய புகழுமாம்.
31. பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங்
கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின் தாளி
னொருபொரு ளாக்கலு மிம்மூன்றும் கேள்வியு
ளெல்லாந் தலை.
பதவுரை: பல்லவையுள் – பல நூல்களுள்ளும், நல்லவை கற்றலும் – நல்ல நூல்களைக் கற்றலும், பாத்து – பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து, உண்டு – தானும் உண்டு, ஆங்கு – அவ்வாற்றால், இல் அறம் – மனையறத்தை, முட்டாது – குறைவுபடாமல், இயற்றலும் – நடத்தலும், வல்லிதின் – விரைவின், தாளின் – முயற்சியால், ஒரு பொருள் – ஒருபொருளை, ஆக்கலும் – செய்து கோடலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் – கேட்கப்படும் அறங்கள் எல்லாவற்றுள்ளும், தலை – சிறந்த அறமாம். எ-று.
பல்லவையுள் என்பதற்குப் பல அவையின் கண்ணும் என்றுரைத்தலுமாம். முன் பலநாடி நல்லவை கற்றல் என்பதற் குரைத்தமையுங் காண்க. பாத்து, பகுத்து என்பதன் மரூஉ. ஏனை மூவகை நிலையினர்க்கும், வறியர் முதலாயினார்க்கும் பகுத்தளித்தல் இல்வாழ்வார் கடனாகுமென்க. வல்லிதின் என்பதற்குத் திட்பமுடன் என்றுரைத்தலுமாம். ஒருபொருள், ஒப்பற்ற பொருள்; மெய்யுணர்வு கேள்வியுள் எல்லாம் இதில் உள் என்பது மாறிநின்றது, கேள்வி யெல்லா வற்றுள்ளும் என்க.
32. நுண்மொழி நோக்கிப் பொருள்கோட னூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லுத லிம்மூன்றுங்
கற்றறிந்தார் பூண்ட கடன்.
பதவுரை: மொழிநோக்கி – சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் – (அவற்றின் கண்ணுள்ள) நுட்பமாகிய பயனை, கோடல் – கொள்ளுதலும், நூற்கு ஏலா – அறநூலுடன் பொருந்தாத, வெண்மொழி – பயனில் சொற்களை, வேண்டினும் – பிறர்கேட்க விரும்பினும், சொல்லாமை – கூறாமையும், நன்மொழியை – (உயிர்க்கு உறுதி பயக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் அல்லார்கண் – சிறிய வினத்தார் அல்லாரிடத்து, சொல்லுதல் – சொல்லுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், கற்று அறிந்தார் – நூல்களைக்கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், பூண்ட – மேற்கொண்ட, கடன் – கடனாம். எ-று.
நுண்ணிய பொருளுள்ள மொழிகளை ஆராய்ந்து என்றுமாம். வெண்மொழி – வெளிற்றுரை, பயனில்சொல் – சிறிய இனமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு.
” பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு. பிறர்சொற் பயன் கோடல்.
” புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்.”
என்னும் வள்ளுவர் வாய்மொழிகள் இங்கே சிந்திக்கற்பாலன.
பா – ம்: பொருள்கொளலும், சொல்லலும்.
33. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலு மமைச்சனும் – வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.
பதவுரை: கோல் அஞ்சி – செங்கோலை அஞ்சி, வாழும் – தனக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற, குடியும் – குடிகளும், குடிதழீஇ – அக்குடிகளைத் தழுவுதலுடனே, ஆலம்வீழ் போலும் – (தன் பாரத்தைச் சுமத்தலால்) ஆலமரத்தின் விழுதினை ஒக்கும், அமைச்சனும் – மந்திரியும், வேலின்- வேலிடத்துள்ள, கடைமணி போல் – பூணினைப்போல, காப்பு – காத்தலையுடைய, திண்ணியான்- உறுதியுடைய படைத்தலைவனும், இம்மூன்றும் – இந்த மூன்றும், படை வேந்தன் – தானையையுடைய அரசன், பற்றுவிடல் – அன்பைப் பொருந்த விடும் இடங்கள். எ-று.
வீழ் – விழுது
” மதலையாய் மற்றதன் வீழூன்றியாங்கு.”
என்பது நாலடி. வேலின் கடைமணி – வேலினது காம்பின் அடியிலுள்ள பூண், இஃது இப்பொருட்டாதலை,
” இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்காழ் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோன்றி – நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லாம்.”
என்னும் களவழிச் செய்யுளானறிக.
திண்ணியானும் என உம்மையை மாறுக. விடல் – விடுமிடம் என்னும் பொருட்டு; இம்மூன்றிடத்தும் வேந்தன் விடுக என வியங்கோளாக்கி யுரைத்தலுமாம்.
34. மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து
முறைநிலை கோடா வரசுஞ் – சிறைநின் றலவலை
யில்லாக் குடியுமிம் மூவர் உலக
மெனப்படு வார்.
பதவுரை: மூன்று கடன் – மூவர்க்குச் செய்யும் மூன்று கடன் களையும், கழித்த – செய்து கழித்த, பார்ப்பானும் – மறையோனும், முறைஓர்ந்து – அறநூல்களை உணர்ந்து, நிலைகோடா – அவை கூறியவற்றில் நிற்றலினின்றும் கோணுதல் செய்யாத, அரசும் – அரசனும், சிறைநின்று – அரசனது ஆணைவழி நின்று, அலவலை இல்லா – வீணாரவாரம் செய்தலில்லாத, குடியும் – குடிமக்களும், இம்மூவர் – இந்த மூவரும், உலகம் எனப்படுவார்- உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். எ-று.
மூன்றுகடன் – தேவர்கடன், முனிவர்கடன், தென்புலத்தார் கடன் என்பன. ஓர்ந்து என்பதற்குக் குற்றத்தை நாடி என்றும், முறை என்பதற்கு நீதி என்றும் பொருள் கூறுதலுமாம். அலவலை – ஆரவாரம்; ஆராயாது செய்தலுமாம். இச்சொல் கீழ்மகன் என்னும் பொருளிலும் வரும்; மேலும் “அல்லவை செய்யும் அலவலையும்” என்பர்.
35. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.
பதவுரை: முந்நீர்த்திரையின் – கடலின்கண் (ஓயாது எழுந்து இயங்கும்) அலையைப் போல, எழுந்து இயங்கா – மனம் எழுந்து அலைதல் இல்லாத, மேதையும் – அறிவுடையவனும், நுண்நூல் பெருங்கேள்வி – நுண்ணிய நூல்களின் மிக்க கேள்வியால், நூல்கரை கண்டானும் – கல்விக் கடலின் எல்லை கண்டவனும், மைநீர்மை இன்றி – குற்றத்தன்மை இன்றி, மயல் அறுப்பான் – மருட்சியை அறுப்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், மெய் நீர்மை – மெய்ம்மைத் தன்மையுடைய, மேல் – வீட்டுலகத்தில், நிற்பவர் – அழிவின்றி நிலைத்து வாழ்பவர். எ-று.
முந்நீர் – கீழதாகிய ஊற்று நீரும் மேலதாகிய மழைநீரும் நடுவணதாகிய ஆற்று நீரும் உடையது; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையுடையது என்றும் உரைப்ப.
” திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே.”
என்னும் திருமந்திரம் இங்கே சிந்திக்கற்பாலது. பின்னுள்ள நூல் என்பது கல்வி என்னும் பொருட்டு. மை – களங்கம், மயல் – அவிச்சை, மெய்ந்நீர்மைமேல் என்பதற்கு மெய்யாகிய வீட்டு நெறியில் என்றுரைத்தலுமாம்.
36. ” ஊனுண் டுயிர்கட் கருளுடைய மென்பானும்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானும்
காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர் தாமறிவர்
தாங்கண்ட வாறு.”
பதவுரை: ஊன்உண்டு – புலாலுண்டு வைத்து, உயிர்கட்கு – உயிர்களிடத்து, அருள் உடையேம் என்பானும் – அருள் உடையேம் என்று கூறுபவனும், தான் – தான், உடன்பாடு இன்றி – முயறற்கு உடன்படுதல் இல்லாமல், வினை – ஊழானது, ஆக்கும் என்பானும் – செய்யும் என்று கருதி மடிந்திருப்பானும், காமுறு – பயனை விரும்பிச் செய்யும், வேள்வியில் – யாகத்தின்கண், கொல்வானும் – ஓருயிரைக் கொல்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், தாம் கண்டவாறு – (தம்புல்லறிவால்) தாம் அறிந்த படியே, தாம் அறிவர் – தாம் அறிந்தவராவர். எ-று.
ஊனுண்பான் அருளுடையனாகான் என்பதும், வேள்வியிற் கொல்வது நன்றன் றென்பதும்,
” தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள்.
” அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.”
என்னும் திருக்குறள்களால் முறையே அறிவுறுத்தப்படுதல் காண்க. வேள்வியால் வரும் பயன் அநித்தமும், கொல்லாமை யானெய்தும் பயன் நித்தமும் ஆகலின் வேள்வியிற் கோறலும் இகழன் மாலைத்தென்க. இம்மூவரும் புல்லறிவாளரென்பார் தாமறிவர் தாங்கண்டவாறு என்றார்.
” காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு.”
என்னும் குறள் நோக்கற்பாலது.
37. குறளையு ணட்பளவு தோன்று முறலினிய
சால்பினிற் றோன்றுந் தவக்குடிமை -பால்போலும்
தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.
பதவுரை: குறளையுள் – புறங்கூறுதலின்கண், நட்பு அளவு – கொண்ட நட்பினது அளவு, தோன்றும் – விளங்கும், உறல்இனிய – பொருந்துதல் இனிமையுடைய, சால்பினில் – நற்குணங்களின் நிறைவினால், தவக்குடிமை – உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் – விளங்கும், பால்போலும் – பாலினது வெண்மையை ஒக்கும், தூய்மையுள் – தூயதன்மையின்கண், பிரமாணம் – நூல்வழி ஒழுகல், தோன்றும் – விளங்கும், இம்மூன்றும் – இந்தமூன்றும், வாய்மை உடையார் – உண்மையுடையவர் மேற்கொண்ட, வழக்கு – முறைமை. எ-று.
நண்பர் இருவருள் ஒருவன் மற்றொருவனைப் புறம் பழிப்பனேல் பொய்த்தலிறுவாய நட்புக்கள் என்றபடி அந்நட்புச் சுருங்கி யொழிதலும், அங்ஙனமில்லாவிடத்து அது பெருகி விளங்குதலும் உண்மையின் ‘குறளையுள் நட்பளவு தோன்றும்’ என்றார்; இதற்கு, நட்பினரிருவரைப் பிரிக்கக் கருதிக் குறளை கூறுவானொருவன் இடைப்புகுந்து ஒருவர் பால் இழுக்கமுளதாக மற்றொருவருழைச் சொல்லியவழி ‘எம் நண்பர் அது செய்யார்’ எனக் கொண்டு, அவன் கூற்றை ஏற்றுக் கொள்ளாத உரிமைக் கேற்ப நட்பு விளங்கித் தோன்றும் என்றும் குறளை என்பதற்கு வறுமை எனப் பொருள் கொண்டு, செல்வக் காலத்து நட்பினராய்ப் போந்தார் வறுமையுற்றுழிச் செயல் வேறுபடாமையும், வேறு படுதலுங் கொண்டு நட்பின் அளவு அறியப்படும் என்றும் உரைத்தலுமாம்.
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார் வாய்மைக் குடி என்பதுபோல தவக்குடிமை என்றார். பிரமாண வழியொழு குதலைப் பிரமாணம் என்றார்.
” கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.”
என்னும் வள்ளுவர்வாய்மொழிகள் சிந்திக்கற்பாலன.
” பால்போ லொழுக்கத் தவரே பரிவில்லா மேலுலக மெய்து பவர்.”
என அறநெறிச்சாரம் கூறுதல் காண்க.
38. தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றும்
செல்வ முடைக்கும் படை.
பதவுரை: தன்னை வியந்து – தன்னைத்தானே நன்கு மதித்து, தருக்கலும் – செருக்குதலும், கொன்னே – பயனின்றி, வெகுளி – கோபத்தை, தாழ்வுஇன்றி – தணிதல் இல்லையாக, பெருக்கலும் – பெருகச் செய்தலும், முன்னிய – நினைத்த, பல்பொருள் – பல பொருள்களையும், வெஃகும் சிறுமையும் – விரும்பும் சிறுமைக் குணமும், இம்மூன்றும் – இந்த மூன்றும், செல்வம் உடைக்கும் – செல்வத்தை அழித்தற்கு வல்ல, படை – படைக்கலங்களாம். எ-று.
தாழ்வு இன்றி என்பதற்கு அடக்கமில்லாமல் என்றுரைத்தலு மாம். தாழ்வின்றி வியந்து தருக்கல் என்று கூட்டுதலும் பொருந்தும். அகப்பகை ஆறனுள் மதம் குரோதம் காமம் என்பன இங்கு விலக்கப் பட்டன. இச்செய்யுளின் பொருள்.
” செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.”
என்னும் குறளில் அடங்கியிருத்தல் காண்க. மேலும் நல்வினை நீக்கும் படை என்பர்; தெய்வப் புலவரும் ‘செல்வத்தைத் தேய்க்கும் படை’ எனச் செல்வத்தை யழிப்பதனைப் படையாக்கிக் கூறினர்.
39. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்
கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்ம்மயக்கஞ் சூதின்கட் டங்க லிவைமூன்றும்
நன்மை யிலாளர் தொழில்.
பதவுரை: பொருட்பெண்டிர் – விலைமாதரை, வேண்டி – விரும்பி, தோய்தல் – முயங்குதல், புலைமயக்கம் – புலைத்தன்மை (புன்மை) யுடன் கலத்தலாகும், கள் உண்டுவாழ்தல் – கள்ளினை உண்டு செல்லுதல், கலம் மயக்கம் – (எச்சிற்) கலத்துடன் கலத் தலாகும், சொலை முனிந்து – (ஆன்றோர்)சொல்லை வெறுத்து, சூதின்கண் தங்கல் – சூதாட்டத்தில் அடிப்படுதல், பொய் மயக்கம் – பொய்யுடன் கலத்தலாகும், இவை மூன்றும் – இந்த மூன்றும், நன்மை இலாளர் தொழில் – குடிப்பிறப்பு முதலிய நன்மை இல்லாதவரின் தொழில்களாம். எ-று.
புலைமயக்கமாவது தோய்தல் என்றிங்ஙனம் இயைத் துரைத் தலுமாம். வாழ்தல் – வாழ்நாள் கழித்தல்; கெடுதல் என்ற குறிப்புமாம். சொலை முனிந்து என்பதற்கு மெய்ச்சொல்லை வெறுத்து என்றுரைத் தலுமாம். தங்கல் – அடிப்படல்; இடையறாது நிற்றல்.
40. வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்
கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும்
நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றும்
தொல்லறி வாளர் தொழில்.
பதவுரை: வெகுளி – சினத்தை, நுணுக்கும் – கெடுக்கும், விறலும்- வெற்றியும், மகளிர்கட்கு – பெண்டிர்கட்கு, ஒத்த – பொருந்திய, ஒழுக்கம் உடைமையும் – ஒழுக்கத்தையுடைய தன்மையும், பாத்து உண்ணும் – பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்ணும், நல் அறிவு ஆண்மை – நல்ல அறிவினைஆளுந் தன்மையை, தலைப் படலும் – பொருந்துதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், தொல் அறிவாளர் – முதிர்ந்த அறிவுடையாரது, தொழில் – தொழில்களாம். எ று.
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினமாகிய உட்பகையைக் கெடுத்தால் பெரியதோர் வெற்றியாகுமென்பார். வெகுளி நுணுக்கும் விறலும் என்றார். மகளிர்க்கு ஒத்த வொழுக்கமாவது மென்மை யுடைமை; இதனை
” மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து.”
எனக் கோப்பெருஞ்சோழனைப் பொத்தியார் பாடிய புறப் பாட்டடியானறிக. தொல் அறிவாளர் என்பதற்குப் பழைய நூலறிவினை ஆளுபவர் என்றுரைத்தலுமாம்.
41. அலந்தார்க் கொன்றீந்த புகழுந் துளங்கினும்
தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி
நாணாளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றும்
கேள்வியு ளெல்லாந் தலை.
பதவுரை: அலந்தார்க்கு – (வறுமையால்) மெலிந்தவர்க்கு, ஒன்று – ஒருபொருளை, ஈந்தபுகழும் – அளித்தமையால் உளதாகிய புகழும், துளங்கினும் – தளர்ந்தவிடத்தும், தன்குடிமை – தனது குடிப் பிறப்பிற்குரிய பண்பு, குன்றா – குன்றலில்லாத, தகைமையும்- பெருமையும், அன்புஓடி – அன்புமிக்கு, நாள்நாளும் – நாள் தோறும், நட்டார் – நட்பினரை, பெருக்கலும் – பெருகச் செய்தலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் – கேட்கப்படும் நன்மை எல்லாவற்றுள்ளும், தலை – சிறப்புடையன. எ-று.
வறுமையான் மெலிந்தார்க்கு ஈவதே ஈகையாமென்ப தனையும், அதனாற் புகழுண்டாமென்பதனையும், குடிப்பிறந்தார் பொருள் சுருங்கிய வழியும் பண்பு குன்றாரென்பதனையும், அன்பு மிகுதலால் நண்பர் பெருகுவரென்பதனையும்
” வறியார்க் கொன்றீவதே யீகை”
” ஈத லிசைபட வாழ்தல்”
” வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று.”
” அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு.”
என்னும் திருக்குறட்பாக்களான் முறையே அறிக.
ஈந்த என்னும் பெயரெச்சமும், ஓடி என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. முன்னும் ‘கேள்வியு ளெல்லாந் தலை’ என்றமை காண்க.
42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு.
பதவுரை: கழகத்தால் – சூதாட்டத்தால், வந்தபொருள் – வரும் பொருளை, காமுறாமை – விரும்பாமையும், பழகினும் – (பலநாள்) பழகினராயினும், பார்ப்பாரை – (மறையுணர்ந்த) அந்தணரை, தீப்போல் ஒழுகல் – தீயைப் போற்கருதி நடத்தலும், உழவின் கண் – உழுதொழிலின்கண், காமுற்று வாழ்தல் – விருப்பம் வைத்து வாழுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், வேளாண்குடிக்கு – வேளாண்மை செய்யும் குடியிலுள்ளார்க்கு, அழகு என்ப – அழகைத் தருவன வென்று சொல்லுவர் (பெரியோர்). எ-று.
கழகம் – சூதாடுமிடம்,
” பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்”
எனத் திருக்குறளும்,
” சூதர் கழகம் அரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும்”
என ஆசாரக் கோவையும் கூறுதல் காண்க.
ஈண்டுக் கழகம் என்றது சூதாட்டத்திற்கு ஆகுபெயர். “வென்றதூஉம் தூண்டிற்பொன்மீன் விழுங்கியற்று” ஆகலின் வந்த பொருள்காமுறாமை என்றார். குடி என்பதும் அதிற் பிறந்தார்க்கு ஆகுபெயர். உழவின்கண் என்பதனை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு, உழவினை என்றுரைத்தலுமாம்.
43. வாயி னடங்குத றுப்புரவா மாசற்ற செய்கை
யடங்குதறிப்பியமாம் – பொய்யின்றி
நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற்
றீர்ந்த பொருள்.
பதவுரை: வாயின் அடங்குதல் – சொல்லடங்குதல், துப்புரவுஆம் – தூய்மையாகும், செய்கை அடங்குதல் (மெய்யின்) செய்கை அடங்குதல், திப்பியம் ஆம் – தெய்வத் தன்மையாகும், நெஞ்சம் அடங்குதல் – மனம் அடங்குதல், பொய்இன்றி – மெய்ம்மையாக, வீடு ஆகும் – முத்தியாகும், இம்மூன்றும் – இந்த மூன்றும், வஞ்சத்தின் தீர்ந்த பொருள் – பொய்யின் நீங்கிய பொருள்களாம். எ-று.
வாயின் -இன்சாரியை; வாயின்கண் அடங்குதல் என்றுமாம். வாயடக்கம் முதலிய காரணங்கள் துப்புரவு முதலிய காரியங்களாக உபசரிக்கப்பட்டன; அடங்குதலால் என உருபு விரித்து, ஆம் என்பதற்கு உண்டாகும் என்றுரைத்தலுமாம். துப்புரவு என்பதற்கு இம்மைக்கண் நுகர்பொருள் எனவும், திப்பியம் என்பதற்கு மறுமைக்கண் தெய்வப்பிறப்பு எனவும் பொருள் கூறி, மும்மைப் பயனும் உரைத்தவாறாக்கலுமாம். மெய்யாக மனம் அடங்குதல் என்றுரைத்தலும் பொருந்தும். மூன்றும் – மூவகை யடக்கமும்.
” பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது – மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல்.”
என்னும் நீதிநெறி விளக்கச் செய்யுள் இங்கே அறியற்பாலது.
44. விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே
யுரனுடை யார்க்கு.
பதவுரை: விருந்து இன்றி – விருந்தினரைப் பெறாமல், உண்ட- தமியராய் உண்ட, பகலும் – பகற்பொழுதும், திருந்து இழையார்- அழகிய அணிகளையுடைய மகளிர், புல்ல – தழுவ, புடைபெயரா- நீங்காத, கங்குலும் – இராப்பொழுதும், இல்லார்க்கு – நல்கூர்ந் தார்க்கு, ஒன்று – ஒருபொருள், ஈயாது – கொடாமல், ஒழிந்து அகன்ற – வறிதேநீங்கிய, காலையும் – காலைப்பொழுதும், இம்மூன்றும் – இந்த மூன்று காலங்களும், உரன்உடையார்க்கு – திண்ணிய அறிவுடையார்க்கு, நோய் – துன்பத்தைத் தருவனவாம். எ-று.
புல்ல என்னும் வினையெச்சம் பெயரா என்பதன் முதனிலை கொண்டது. கற்புடை மகளிரை நீங்காது மருவியொழுக வேண்டு மென்றபடி, ஒன்று – அவர் வேண்டிய தொருபொருள், காலையில் ஈதல் மரபு. பெயரெச்சங்கள் காலப் பெயர் கொண்டன. உரன் அறிவின் மேற்றாதலை.
” உரனென்னுந் தோட்டியான்.”
என்பதற்குப் பரிமேழகர் உரைத்த உரையாலறிக.
45. ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்பின்றி
ஏற்றார்க் கியைவ கரப்பானுங் – கூற்றம் வரவுண்மை
சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச்
சென்றுவீழ் வார்.
பதவுரை: ஆற்றானை – செய்யும் வலிமையில்லாதவனை, ஆற்று என்று – செய்யென்றுகூறி, அலைப்பானும் – வருத்துபவனும், ஏற்றார்க்கு – இரந்தவர்க்கு, அன்பு இன்றி – இரக்கம் இல்லாமல், இயைவ – ஈதற்கிசையும் பொருளை, கரப்பானும் – ஈயாமலொளிப் பவனும், கூற்றம் – கூற்றுவன், வரவுஉண்மை – என்றும் வருதலுண்மையை, சிந்தியாதானும் – மறப்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், நிரயத்து – நரகத்தின்கண், சென்று வீழ்வார் – சென்று விழுந்து அழுந்துவார். எ-று.
ஆற்றான் – ஆற்றலில்லாதவன், இதனை,
” ஆற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்”
என்னும் திருக்குறளானறிக. ஒரு தொழில் செய்ய வலிமையில்லாத ஏவலாளனை அதனைச் செய்யுமாறு தூண்டி வருத்தவொண்ணா தென்றபடி. அன்பின்றி அலைப்பானும் என இயைத்தலுமாம். கூற்றம் வரவுண்மை சிந்தியாதான் நல்லன செய்தற் கொருப் படாமையோடு தீயன செய்தற்கும்அஞ்சா னென்க.
” இறப்பெனு மெய்ம்மையை யிம்மை யாவர்க்கும் மறப்பெனு மதனின் மேற் கட்டுமற்றுண்டோ.”
என்னும் கம்பராமாணயச் செய்யுள் இங்குநோக்கற்பாலது.
46. காறூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து
மேறூய்மை யில்லாத வெல்களிறும் – சீறிக் கறுவி
வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றும் குறுகா
ரறிவுடை யார்.
பதவுரை: கால் – காலினது நடை, தூய்மையில்லா – குற்ற முடைய, கலிமாவும் – மனஞ்செருக்கிய குதிரையும், காழ்கடிந்து – குத்துக் கோற்காரரைச் சினந்து, மேல் – மேலுள்ளோராய், தூய்மை இல்லாத – அடங்குதலைப் பெறாத, வெல்களிறும் – வெல்லும் யானையும், கறுவி – உள்வைரமுடையனாய், சீறி – சீற்றங் கொண்டு, வெகுண்டு உரைப்பான் – சினந்து பாடங் கூறுவானது, பள்ளியும் – கல்விபயிலிடமும், இம்மூன்றும் – இந்த மூன்றினையும், அறிவுடையார் – அறிவுடையவர்கள், குறுகார் – அணுகார். எ-று.
கால், நடைக்கு ஆயிற்று. காழ் – குத்துக்கோல்; குத்துக் கோற்காரருக்கு ஆயிற்று. மேல் என்பதும் ஆகுபெயர்.
” காழோர் கையற மேலோரின்றி.”
என்னும் மணிமேகலையடியுங் காண்க. காழ் என்பதற்குக் கட்டுத்தறி என்றும், வயிரிகள் என்றும் உரைப்பாருமுளர்.
பா – ம். பள்ளியும் மூன்றும்.
47. சில்சொற் பெருந்தோண் மகளிரும்
பல்வகையும் தாளினாற் றந்த விழுநிதியும் -நாடோறும்
நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங்
காப்பிகழ லாகாப் பொருள்.
பதவுரை: சில்சொல் – சிலவாகிய சொற்களையும், பெருந்தோள் – பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் – பெண்டிரும், பல்வகையும் – பலமுறையிலும், தாளினால் தந்த – முயற்சியாலீட்டிய, விழுநிதியும் – சிறப்புடைய செல்வப் பொருளும், நாத்தளிர்ப்ப – நாவின்கண் நீரரும்ப, ஆக்கிய உண்டியும் – சமைத்த உணவும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நாள்தோறும் – ஒவ்வொரு நாளும், காப்பு இகழலாகா- காத்தலைப் புறக்கணித்தலாகாத, பொருள் – பொருள்களாம். எறு.
சில்சொல் – மென்மொழியுமாம். தாள் – முயற்சி.
” தாளாற்றித் தந்த பொருளெல்லாம்”
என்பது திருக்குறள். பின்நினைக்கும் நாளிலெல்லாம் நா நீரரும்ப என்றுரைப்பாருமுளர்.
48. வைததனை யின்சொல்லாக் கொள்வானு
நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.
பதவுரை: வைததனை – பிறர் வைத வசைமொழியை இன்சொல்லா – இனிமை பயக்கும் சொல்லாக, கொள்வானும் – உள்ளத்துக் கொள்வானும், கூழை – புல்லரிசிக்கூழை, நெய்பெய்த சோறு என்று – நெய்வார்த்த சோறு என்று, மதிப்பானும் – கருதியுண்பவனும், ஊறிய கைப்பதனை – மிக்க கைப்புடைய பொருளை, கட்டி என்று – இனிப்புடைய வெல்லக்கட்டி என்று கருதி, உண்பானும் – உண்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், மெய்ப்பொருள் – உண்மைப் பொருளை, கண்டுவாழ்வார் – உணர்ந்து வாழ்பவராவர்.
ஊறிய கைப்பு – மிக்க கைப்பு; ஊறிய என்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாக்கி, வாயில் ஊறும்படி உண்பவனும் என்றுரைப்பாருமுளர். கற்பனைகளைக் கழித்து உண்மை காண்டலின் ‘மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்’ என்றார்.
49. ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது
வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவர்
இம்மைக் குறுதியில் லார்.
பதவுரை: ஏவாது – ஏவப்படாமல், மாற்றும் – மறுத்து விடுகின்ற, இளங்கிளையும் – புதல்வனும், காவாது – மனைவியைப் பாதுகாவாமல்வைத்து, எள்ளிவைது சொல்லும் – இகழ்ந்து வைதுரைக்கும், தலைமகனும் – தலைவனும், பொய்தெள்ளி – பொய்யையே ஆராய்ந்து கூறி, அம்மனை தேய்க்கும் – அழகிய மனையறத்தைக் கெடுக்கும், மனையாளும் – மனைவியும், இம்மூவர் – இந்த மூவரும், இம்மைக்கு உறுதியில்லார் – இம்மைக்கு உறுதியாய பயனளிப்பவர் அல்லர். எ-று.
ஏவுஆதும் எனப் பிரித்து ஏவிய எதனையும் என்றுரைத் தலுமாம்; இதற்கு ஆதும் என்பது யாது மென்பதன் மரூஉ;
” ஆதுமில் காலத் தெந்தை யச்சுத னமலனையே”
என்னும் ஆன்றோர் வாக்குங் காண்க. இளங்கிளை என்பதற்கு மேல் ‘சீலமறிவா னிளங்கிளை’ என்புழி உரைத்தமை காண்க.
50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே
மழையருக்குங் கோள்.
பதவுரை: கொள்பொருள் – கொள்ளும் இறைப் பொருளையே, வெஃகி – விரும்பி, குடி அலைக்கும் – குடிகளை வருத்தும், வேந்தனும் – அரசனும், உள்பொருள் – உண்மைப் பொருளை, சொல்லா – சொல்லாமல், சலம்மொழி – பொய்ம்மை கூறும், மாந்தரும் – மக்களும், இல்இருந்து – மனையிலிருந்து, எல்லை கடப்பாளும் – தனக்குக்கூறிய ஒழுக்கத்தின் எல்லையைக் கடந்து ஒழுகும் மனைவியும், இம்மூவர் – இந்த மூவரும், வல்லே – கடுக, மழைஅருக்கும் – மழையைக்குறைக்கும், கோள் – கோள்கள். எ-று.
குடிகளின் நலங் கருதாது பொருள்கோடலே கருதுவா னென்பார் கொள் பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் என்றார். பொருள் கொள்ளுதலை விரும்பி என மாறியுரைத் தலுமாம். மாந்தர் – முறை புரிமன்றத்தார் முதலாயினர். சொல்லா, பெயரெச்ச மறையுமாம். அருக்கும் – அருகச் செய்யும், அரசனது கொடுங்கோலால் மழை குன்றுமென்பது.
” முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி யொல்லாது வானம் பெயல்.”
எனத் திருக்குறளிலும்,
” கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரியின் மாரிவறங் கூரும்.”
என மணிமேகலையிலும்,
கோணிலை திரிந்து நாழிகுறைபடப் பகல்கண்மிஞ்சி நீணில மாரியின்றி வினைவஃகிப் பசியுநீடிப் பூண்முலை மகளிர்பொற்பிற் கற்பழிந் தறங்கண்மாறி ஆணையிவ் வுலக. . . கோல் கோடினென்றான்.
எனச் சிந்தாமணியிலும் கூறப் பெற்றுள்ளமை காண்க. வானிலே சூழ் வரும் கோட்களின் நிலைமாறுதலால் மழை குன்றுவ துண்டாகலின் மழையருக்குங் கோள் என்றார்.
51. தூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைக டுணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரே
ஈர்ந்தகல் லின்னாக் கயவ ரிவர்மூவர் தேர்ந்தக்காற்
றோன்றும் பொருள்.
பதவுரை: தூர்ந்து – வருவாய் அடைபட்டு, ஒழுகிக் கண்ணும் – வாழ்ந்த காலத்தும், துணைகள் துணையாந் தன்மையுடையார், துணைகளே – துணைவரேயாவர், சார்ந்து – தம் கருத்தொடு பொருந்தி, ஒழுகிக் கண்ணும் – நடந்தகாலத்தும், சலவர் – பகையாந் தன்மையுடையார், சலவரே – பகைவரே யாவர், இன்னா – துன்பத்தைச் செய்யும், கயவர் – கீழ்மக்கள், ஈர்ந்தகல் – பிளக்கப்பட்ட கல்லையே ஒப்பாவார், இவர்மூவர் – ஆகிய இவர் மூவரையும், தேர்ந்தக்கால்- ஆராயுமிடத்து, பொருள்தோன்றும் – அவரிடத் துள்ள மெய்ம்மை காணப்படும். எ-று.
ஒழுகியக் கண்ணும் என்பது விகாரமாயிற்று. ஈர்ந்தகல் – பிளவுண்டகல்; கூர்ங்கல்லுமாம். துன்புறுத்த லொப்புமையால் ‘ஈர்ந்தகல்’ என்றார். இவர் மூவரும் ஆராயுமிடத்து வெளிப்படும் பொருள்களாவர் என்றுரைத்தலுமாம்.
52. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங்
காமுற்ற பெண்ணுக் கணிகல நாணுடைமை – நண்ணும்
மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங்
குறியுடையார் கண்ணே யுள.
பதவுரை: கண்ணுக்கு அணிகலம் – கண்ணுக்கு அணியும் அணியாவது, கண் ஓட்டம் – கண்ணோடுதல், காமுற்ற – கணவனால் விரும்பப்பட்ட, பெண்ணுக்கு – பெண்ணுக்கு, அணிகலம் – அணியும் அணியாவது, நாண் உடைமை – நாணமுடைமை, மறுமைக்கு – மறுபிறப்பிற்கு, அணிகலம் – அணியும் அணியாவது, நண்ணும் கல்வி – உயிரோடு பொருந்தி வரும் கல்வி, இம்மூன்றும் – இந்த மூன்றும், குறிஉடையார்கண்ணே – நுண்ணறிவுடை யாரிடத்தில் மாத்திரமே, உள – உண்டு. எ-று.
கண்ணோட்டமாவது தம்மொடுபயின்றார் எதிர்ப்பட்ட விடத்து அவர் கூறியன மறுக்க மாட்டாமை; இஃது அவர் மேற்கண் சென்றவழி நிகழ்வதாகலின் கண்ணோட்டம் எனப்பட்டது. கண்ணோட்டம் முதலியவற்றால் கண் முதலியன அழகுபெறும் என்க.
வருகின்ற மறுமைக்கு அணிகலம் கல்வி என்றுரைத்தலுமாம். குறி – சிந்தனையுமாம்.
” கண்ணுக் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்.”
” ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து.”
என்னும் திருக்குறட்பாக்களும்,
“உயிரினுஞ் சிறந்தன்று நாணே.”
என்னும் தொல்காப்பியத் தொடரும் இங்கே கருதற் பாலன.
53. குருடன் மனையா ளழகு மிருடீரக் கற்றறி
வில்லான் கதழ்ந்துரையும் – பற்றிய பண்ணிற்
றெரியாதான் யாழ்கேட்பு மிம்மூன்றும் எண்ணிற்
றெரியாப் பொருள்.
பதவுரை: குருடன் மனையாள் – கண்ணில்லாதவன் மனைவி யினது, அழகும் – அழகும், இருள் தீர – அறியாமை நீங்க, கற்று – நூல்களைக் கற்று, அறிவுஇல்லான் – அவற்றின் பொருளை அறிதல் இல்லாதவன், கதழ்ந்து உரையும் – விரைந்து கூறும் சொல்லும், பற்றிய பண்ணின் – பொருந்திய இசைத்திறங்களை, தெரியாதான்- அறியாதவன், யாழ்கேட்பும் – யாழிசையைக் கேட்பதுவும், இம்மூன்றும் – இந்த மூன்றும், எண்ணில் – ஆராயுமிடத்து, தெரியாப் பொருள் – விளங்காப் பொருள்கள். எ-று.
அழகு முதலிய மூன்றும் குருடன் முதலிய மூவர்க்கும் முறையே விளங்காத பொருள்கள் என்க.
பண்ணின் என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது யாழ், ஆகுபெயர்.
54. தன்பயந் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா
நன்பயங் காய்வின்கட் கூறலும் – பின்பயவாக்
குற்றம் பிறர்மே லுரைத்தலு மிம்மூன்றும்
தெற்றென வில்லார் தொழில்.
பதவுரை: தன்பயம் – தனது பயனை, தூக்காரை – எண்ணாதவரை, சார்தலும் – அடைதலும், நன்பயம் – நல்ல பயனுடைய சொற்களை, தாம் பயவாக் காய்வின்கண் – பயனையளிக்காத சினத்தின்கண், கூறலும் – சொல்லுதலும், பிறர்மேல் – அயலார் மீது, பின்பயவா குற்றம் – பிறகு தனக்கு நன்மை பயவாத அவர் குற்றங்களை, உரைத்தலும் – பாரித்துச் சொல்லுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், தெற்றெனவு – பின் வருதலைத் தெளிதல், இல்லார் தொழில் – இல்லாதவருடைய செய்கை. எ-று.
தன் பயம்தூக்கார் – தமக்கு வரும் பயனையே அன்றித் தம்மையடைந்தார் பயனைச் சிந்தியாதவர். கூறலும் என்றமையால் நன்பயம் என்றது சொல்லாயிற்று. சினத்தால் உள்ளம் மாறு பட்டிருப்பாரிடத்தில் உறுதியுள்ள சொற்களைக் கூறின் அவர் ஏற்றுக் கொள்ளாரென்க. பிறர் குற்றமுரைப்பது அப்பொழுது நலம் பயப்பதுபோற் றோன்றினும் பின்பு தீமை பயக்கு மென்ற வாறா யிற்று. தெற்றெனவு – தெளிவு; தெற்றென் பகுதி;
” தெற்றென்க மன்னவன் காண்”
என்னும் திருக்குறள் காண்க. பயவா என்னும் பெயரெச்ச மறை குற்றமுரைத்தல் என்னும் பெயர் கொண்டது. தன்பயம், இல்லார் தொழில், பன்மை யொருமை மயக்கம்.
55. அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் – யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர்
ஒற்றா ளெனப்படு வார்.
பதவுரை: அருமறை – வெளிப்படுத்தலாகாத மறையினை, காவாத – உள்ளத்தடக்காத, நட்பும் – நண்பனும், பெருமையை – மனையறத்திற்குத் தக்க மாண்பினை, வேண்டாது – விரும்பாமல், விட்டு ஒழிந்த – விட்டு நீங்கிய, பெண்பாலும் – மனைவியும், யாண்டானும் – எவ்விடத்திலும், செற்றம் கொண்டு – கறுவுதலை மேற்கொண்டு, ஆடும் – உரையாடும், சிறுதொழும்பும் – குற்றேவ லாளனும், இம்மூவர் – இந்த மூவரும், ஒற்றாள் எனப்படுவார் – ஒற்றர் என்று சொல்லப்படுவர். எ-று.
நட்பு, தொழும்பு என்பன அவற்றை உடையார்க்கு ஆயின. இழிவுபற்றி மனையாளைப் பெண்பால் என்றார். யாண்டானும்- யாண்டும்; யாண்டாயினும் என்னலுமாம். ஒற்றாள் – ஒற்றாகிய ஆள்.
” அறிவார் யார் நல்லாள் பிறக்குங் குடி”
என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுளிலும் ஆள் என்பது ஆடவன் என்னும் பொருளில் வந்துளது. ஆள், பன்மையில் ஒருமை. (55)
56. முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு
தந்தையுந் தாயும் வழிபட்டு – வந்த ஒழுக்கம்
பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப
நெறிதூரா வாறு.
பதவுரை: முந்தை – இளமைப் பருவத்தில், எழுத்தின்வரவு – கல்வியின் வரவும், உணர்ந்து – அதனை அறிந்து, பிற்பாடு – பின்பு, தந்தையும் தாயும் – தந்தையையும் தாயையும், வழிபட்டு வந்த – வழிபட்டு ஒழுகிய, ஒழுக்கம் – ஒழுக்கமும், பெருநெறி – பெரியோர் வழியை, சேர்தல் – அடைதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், விழுப்பம்நெறி – வீட்டு நெறியை, தூராஆறு – அடைக்காத வழி களாம். எ-று.
முந்தை என்பது இளமையையும், எழுத்து என்பது கல்வியையும் உணர்த்தின. வழிபட்டு வந்த ஒழுக்கம் – வழிபாட்டுடன் கூடிய ஒழுக்கம். பெருநெறி – துறவறமுமாம். விழுப்பம் – சிறப்பு; வீடு. ‘எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடுசிறப்பெனப்பட்டது’ என்றார் பரிமேலழகரும்.
57. கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப்
பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் – துச்சிருந்தான்
ஆளுங் கலங்கா முறுதலு மிம்மூன்றும் கேள்வியு
ளின்னா தன.
பதவுரை: கொட்டி – தாளத்தால், அளந்து – அளக்கப்பட்டு, அமையாப் பாடலும் – பொருந்துதல் இல்லாத இசையும், தட்டித்து – கொட்டிக் கொண்டு, பிச்சைபுக்கு – பிச்சைக்குச் சென்று, உண்பான் – உண்ணுபவன், பிளிற்றலும் – வெகுண்டுரைத் தலும், துச்சுஇருந்தான் – ஒதுக்குக் குடியிருந்தவன், ஆளும் கலம் – தான் இருந்த இல்லுக் குரியன் ஆளும் பண்டங்களை, காமுறுதலும் – விரும்புதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், கேள்வியுள் – கேட்கப் படுவனவற்றுள், இன்னாதன – துன்பம் பயப்பன. எ-று.
கொட்டி – கொட்டுவது, தாளம்; பாடல் – பாட்டு, தட்டித்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதி; துப்பிச்சை எனப் பிரித்தியைத்துச் சோற்றுப் பிச்சை என்றுரைப்பாரும் உளர்.
” பிச்சைபுக் குண்பான் பிளிற்றாமை முன்னினிதே”
என்பது இனியவை நாற்பது. கலம் – கட்டில் முதலியன.
58. பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற் கேளி
ருவப்பத் தழுவுதல் – கேளிராய்த் துன்னிய சொல்லா
லினந்திரட்ட லிம்மூன்றும் மன்னற்
கிளையான் றொழில்.
பதவுரை: பழமையை நோக்கி – நண்பரது பழையராந் தன்மையைக் கருதி, அளித்தல் – அவர்க்கு வேண்டுவ தருதலும், கேளிர் – உறவினர், உவப்ப – மகிழுமாறு, கிழமையால் – உரிமை யால், தழுவுதல் – தழுவுதலும், கேளிராய் துன்னிய – தமராகிச் சூழுமாறு, சொல்லால் – இன்சொற் கூறுதலால் இனம் திரட்டல் – பெரியோர் இனத்தைக் கூட்டுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், மன்னற்கு இளையான் – மன்னவன் மைந்தற்குரிய, தொழில் – தொழில்களாம். எ-று.
அளித்தல் – பிழை பொறுத்தலுமாம். துன்னிய-செய்யிய வென்னும் வினையெச்சம். பழமை பாராட்டுதல், சுற்றந் தழுவுதல், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் இவை அரசற் குரியன. ஈண்டு அரசகுமாரன் மேல்வைத்துக் கூறப்பட்டன. மன்னற் குழையான் என்பது பாடமாயின் அமைச்சன் என்பது பொருளாம்.
59. கிளைஞர்க் குதவாதான் செல்வமும்
பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் – இளையனாய்க்
கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும்
உள்ளன போலக் கெடும்.
பதவுரை: கிளைஞர்க்கு – உறவினர்க்கு, உதவாதான் – உதவி புரியாதவ னுடைய, செல்வமும் – செல்வமும், பைங்கூழ் – பயிரை, விளைவின்கண் – விளையும் பருவத்தில், போற்றான் – காவாதவ னுடைய, உழவும் – உழுதொழிலும், இளையனாய் – அறிவிலானாகி, கள்உண்டு வாழ்வான் – கள்ளைக் குடித்து ஒழுகுபவனுடைய, குடிமையும் – குடிவாழ்க்கையும், இம்மூன்றும் – இந்தமூன்றும், உள்ளனபோல – உள்ளன போலப் புறத்தே தோன்றி, கெடும் – கெட்டுவிடும். எ-று.
உழவு என்றது ஏர் வளத்தை. இளையன் – அறிவு முதிராதவன்; அறிவால் மெல்லியன். இளையனாய் என்பதற்கு இளமை தொடங்கி என்றும், குடிமை என்பதற்கு நற்குடிப்பிறப்பு என்றும் கூறுதலுமாம்.
60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்
விலங்கின் பிறப்பின் வெருவும் – புலந்தெரியா
மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.
பதவுரை: பேஎய் பிறப்பில் – பேய்ப்பிறப்பின்கண், பெரும் பசியும் – மிக்க பசியாகிய துன்பமுடன், பாஅய் – பாயுமியல் புடைய, விலங்கின் பிறப்பின் – விலங்காகிய பிறப்பின்கண், வெருவும் – அச்சமாகிய துன்பமும், மக்கள் பிறப்பின் – மனிதப் பிறப்பின்கண், புலம்தெரியா – அறிவு விளங்காமைக் கேதுவாகிய, நிரப்புஇடும்பை – வறுமையாகிய துன்பமும் (உள்ளன; ஆதலால்), இம்மூன்றும் – இந்த மூன்றும், துக்கப் பிறப்பாய் விடும் – துக்கத்தைத் தரும் பிறவியாய் முடியும். எ-று.
இடும்பை என்பதனைப் பசி, வெருவு என்பவற்றோடும், எண்ணும்மையை நிரப்பிடும்பை என்பதனோடும் கூட்டியும் உள்ளன, ஆதலால் என்னுஞ் சொற்கள் விரித்துமுரைக்கப் பட்டன. ‘நிரப்பிடும்பை’ என்றார் வள்ளுவனாரும். எப்பிறப்பும் இன்னாதன வாகலின் பிறப்பினை யொழிக்க முயறல் வேண்டும் என்றபடி. புலந்தெரியா மக்கட் பிறப்பு எனக் கொண்டு, மெய்யுணர்வு பெறாத மக்கட்பிறப்பு என்றுரைத்தலுமாம்.
61. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ
தெய்தாமை முற்காத்தல் – வைகலும் மாறேற்கு
மன்னர் நிலையறித லிம்மூன்றும் சீரேற்ற
பேரமைச்சர் கோள்.
பதவுரை: ஐ அறிவும் – ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய – தமக்கு வயமாக, ஒழுகல் – ஒழுகுதலும், எய்துவது – தம் அரசர்க்கு மேல் வரக்கடவ துன்பத்தை, முன் – முன்னரறிந்து, எய்தாமை காத்தல் – வாராமற் காத்தலும், மாறுஏற்கும் – பகைமையை ஏற்கும், மன்னர்நிலை – அரசரது நிலைமையை, வைகலும் அறிதல் – நாடோறும் தெரிந்தொழுகலும், இம் மூன்றும் – இந்த மூன்றும், சீர் ஏற்ற – புகழினைக் கொண்ட, பேர் அமைச்சர் – பெருமையுடைய மந்திரிகளின், கோள் – துணிவு களாம். எ-று.
மன்னர் விழைப விழையாமையும், உற்றநோய் நீக்கி உறாமை முற்காத்தலும், இகல் வேந்தரைத் தீயைப் போற்கருதியொழுகு தலும் ஆகிய மன்னரைச் சேர்ந்தொழுகும் முறைமைகள் கூறப் பட்டன. மாறேற்கும் மன்னர்நிலையறிதல் என்பதற்குப் பகை மன்னர் இருப்பை ஒற்றரால் அறிந்து அதற்கேற்பச் செய்தல் என்றுரைப் பாருமுளர்.
62. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுந் சான்றோர்முன்
மன்றிற் கொடும்பா டுரைப்பானும் – நன்றின்றி
வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர்
எச்ச மிழந்துவாழ் வார்.
பதவுரை: நன்றிப்பயன் – பிறர்செய்த நன்றியின் பயனை, தூக்கா – ஆராயாது மறந்த, நாண்இலியும் – நாணமற்றவனும், சான்றோர் மன்றின் முன் – அறிவால் நிறைந்தாரது அவைக் களத்தின் கண், கொடும்பாடு உரைப்பானும் – கொடிய சொற்களைக் கூறுவானும், வைத்த அடைக்கலம் – ஒருவர் தன்னிடத்துவைத்த அடைக்கலப் பொருளை, நன்று இன்றி- அறத்தொடு பொருந்துதல் இன்றி, கொள்வானும் – வௌவிக் கொள்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், எச்சம் இழந்து வாழ்வார் – மக்களையிழந்து வருந்தி வாழ்பவர் ஆவர். எ-று.
நாண் – பழி பாவங்களுக்கு அஞ்சுமியல்பு. கொடும்பாடு என்பதற்குப் பொய் என்று பொருள்கொண்டு முறை மன்றத்தில் சான்றோர் முன் பொய் கூறுபவனும் என்றுரைத்தலுமாம். நன்று – அறம். அடைக்கலப் பொருளை உரியவர் கேட்ட பொழுதே கொடுக்க வேண்டும் என்பதனை,
” உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தகாற் கொள்ளும் பொழுதே கொடுத்ததாம் – கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி.”
என்று பழமொழி வலியுறுத்துரைத்தலுங் காண்க. (62)
63. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும்
ஈர்வளையை யில்லத் திருத்தலும் – சீர்பயவாத்
தன்மை யிலாள ரயலிருப்பு மிம்மூன்றும்
நன்மை பயத்த லில.
பதவுரை: நோ – தாம் உறுந் துன்பத்தைக் கண்டவழி, அஞ்சா தாரோடு நட்பும் – அஞ்சாதாரிடத்துக் கொண்ட நட்பும், விருந்து அஞ்சும் – விருந்தினர் அஞ்சும், ஈர்வளையை – மனைவியை, இல்லத்து இருத்தலும் – மனையின் கண் வைத்திருத்தலும், சீர்பயவா – சிறப்பைத் தராத, தன்மையிலாளர் – தன்மையுடைய வர்க்கு, அயல் இருப்பும் – பக்கத்தில் குடியிருத்தலும், இம் மூன்றும் – இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல – நன்மையைத் தருவன அல்ல. எ-று.
அஞ்சும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பெயர் கொண்டது. விருந்தினரைக் கண்டு அஞ்சும் என்றுமாம்; அஞ்சுதல் – உணவளிக்க மறுத்தல். ஈர்வளை – அறுத்தியற்றப்பட்ட வளையினை அணிந்தவள்; மனைவி. தன்மையிலாளர், இல்சாரியை; தவமிலார், அரசிலார் என நான்மணிக்கடிகையில் இச்சாரியை வருதல் காண்க. புகழ்பயவாத பண்பில்லாதவர் என்றுரைத்தலும் பொருந்தும்; இதற்குப் பயவா என்னும் பெயரெச்சம் இல்லாளர் என்பதன் விகுதியோடியையும், இல்லாளர் என்பதற்கு இல்வாழ்வார் என்றுரைப்பாருமுளர்.
64. நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும்
இல்புறஞ் செய்தலி னீன்றதாய் – தொல்குடியின்
மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றும் கற்புடையாள்
பூண்ட கடன்.
பதவுரை: நல்விருந்து – தக்க விருந்தினரை, ஓம்பலின் – பேணுதலால், நட்டாள் ஆம் – நட்பினளாவள், இல்புறஞ் செய்தலின் – இல்லறத்தைக் காத்தலினால், ஈன்றதாய் – பெற்றதாயாவள், தொல்குடியின் – பழமையாகிய குடிக்குரிய, மக்கட் பெறலின் – பிள்ளைகளைப் பெறுதலினால், மனைக்கிழத்தி – மனையவளாவள், இம்மூன்றும் – இந்த மூன்றும், கற்புடையாள் – கற்புடையவள், பூண்ட கடன் – மேற்கொண்ட கடமைகள். எ-று.
நல்விருந்து – தக்கவிருந்து, தகுதி – ஞானவொழுக்கங்களா னுயர்தல்; “நல்விருந் தோம்புவான்” என்புழிப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக. ஆம் என்பதனைத் தாய், கிழத்தி என்பவற்றோடும் ஒட்டுக. மனைக்கிழத்தி – மனைக்கு உரியவள்; மனையாள். இம்மூன்றும் – இம்மூன்றியல்பும் உடையளாதல்.
65. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற
விட்டகல கில்லாத வேட்கையும் – கட்டிய மெய்ந்நிலை
காணா வெகுளியு மிம்மூன்றும் தந்நெய்யிற்
றாம்பொரியு மாறு.
பதவுரை: அலைகடலின் – அலைகின்ற கடலைப்போல, அச்சம் தோன்றலும் – உளத்தின்கண் அச்சமுண்டாதலும், ஆர்வுஉற்ற – நுகரப்பட்டனவற்றை, விட்டு அகலகில்லாத – பற்றி நீங்குந்திற மில்லாத, வேட்கையும் – அவாவும், கட்டிய – உயர்ந்தோர் யாப்புறுத்த, மெய்ந்நிலை – உண்மை நிலைமையை, காணா வெகுளியும் – அறியாமைக் கேதுவாய சினமும், இம்மூன்றும் – இந்த மூன்றாலும் இவற்றையுடையார் கெடுதல், தம் நெய்யில் – (ஆடு முதலியன) தம்மிடத்துத் தோன்றிய நெய்யால், தாம் பொரியுமாறு – தாம் பொரிதல் போலவாம். எ-று.
கடலின் அலை மாறிமாறித் தோன்றுதல் போல அச்சம் மாறி மாறித் தோன்றுதல் என்க. ஆர்தல் – நுகர்தல், ஆர்வுற்ற, வினைப் பெயர், கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இசையெச்சமாக வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. அச்சம், அவா, வெகுளி என்பன அவையுடையாரை அழிக்கும் என்றபடி.
66. கொழுநனை யில்லா ணலமும் வழிநிற்கும்
சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் – பற்றிய
கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றும்
சால்போடு பட்ட தில.
பதவுரை: கொழுநனை இல்லாள் – கணவனை இல்லா தவளுடைய, நலனும் – அழகும், வழிநிற்கும் – தான்கூறிய வழியில் நின்று ஒழுகும், சிறுஆள் இல்லாதான் – ஏவலாள் இல்லாதவன், கை மோதிரம் – கை விரலில் அமைந்த மோதிரமும், பற்றிய – கைக் கொண்ட, கோல் – செங்கோல், கோடி வாழும் – கோணுமாறு ஒழுகும், அரசனும்- வேந்தனும், இம்மூன்றும் – இந்த மூன்றும், சால்போடு பட்டது இல – நன்மையோடு பொருந்தியனவல்ல. எ-று.
கறை என்ற பாடத்திற்குப் பூப்பு என்பது பொருளாம். கலன் என்று பாடங் கொள்வாருமுளர். கோடி என்பதனைக் கோட வெனத் திரிக்கப்பட்டது, து சாரியை. திணைவிரவி அஃறிணை முடிபேற்றன.
67. எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி றொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி – மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில்.
பதவுரை: எதிர்நிற்கும் – மாறுபட்டொழுகும், பொண்ணும் – மனையாளும், இயல்புஇல் – அடங்கி நடக்குந் தன்மையில்லாத, தொழும்பும் – ஏவலாளும், செயிர் நிற்கும் – சென்று நிலைபெற்ற, சுற்றமும் – உறவினரும், ஆகி – ஆகிநின்று, முந்தை – முற்பிறப்பிற் செய்த, பழவினையாய் – பழவினைபோல, மயிர்நரைப்ப – மயிர் வெளிறிவந்த முதுமைப் பருவங்காறும், தின்னும் – வருத்தும், இவை மூன்றும் – இவைமூன்றாலும், நொந்தார் – துன்பமுற்றவர், செயக் கிடந்தது இல் – செய்யக் கிடந்ததோர்கழுவாய் இல்லை.எ-று.
எதிர் நிற்றல் – மாறுபட்டு நிற்றல். “எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்” என்பது நாலடி. பழவினை, வினையென்னுந் துணையாய் நின்றது. தின்னுதல் – வருத்துதல் மயிர் நரைப்ப என்பதற்கு யாண்டு பலவாகா முன்னும் நரையுண்டாகுமாறு என்றுரைத்தலுமாம், கேட்குங் காலம் பலவாலோ நரை நுமக்கில்லையாலோ என வினவிய சான்றோர்க்குப் பிசிராந்தைார் கூறிய புறப்பாட்டு ஈண்டு அறியற் பாலது. பழவினையாய் என்பதற்குப் பழவினை யனையவாகி என்றுரைக்க.
68. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறி
மாந்தர்க் குள.
இல்லார்க்கு – நல்கூர்ந்தவர்க்கு, ஒன்றுஈயும் – அவர் விரும்பிய பொருளொன்றைக் கெடுக்கும், உடைமையும் – செல்வமுடைமையும், இவ் உலகில் – இந்த உலகத்தில், நில்லாமை – பொருளும், யாக்கையும் முதலியன நிலையின்றி அழிதலுண்மையை, உள்ளும் – நினைக்கும், நெறிப்பாடும் – முறைமையும், எவ்வுயிர்க்கும் – எல்லாவுயிர்க்கும், துன்பு உறுவ – துன்பமுறுதற்கேதுவாய செயல்களே, செய்யாத தூய்மையும் – செய்யாத தூய தன்மையும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நன்று அறியும் – நன்மையை யறிந்தொழுகும், மாந்தர்க்கு உள – மக்களிடத்து உள்ளன.
இல்லார் என்பது உலக வழக்கு. “உடையார் முன் இல்லார் போல்” என்னுங் குறளுரையிற் பரிமேலழகர் கூறினமைகாண்க. நெறிப்பாடு என்பதற்குத் துறவற நெறியிற் படுதல் என்றுரைத் தலுமாம். “இன்னா செய்யாமை மாசற்றார் கோள்” என்பவாகலின் அதனைத் தூய்மை என்றார். மாந்தர் – ஆடூஉப் பன்மை.
69. அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து
நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.
பதவுரை: அருந்தொழில் – …..அரிய தொழில்களை, ஆற்றும் பகடும் – செய்யவல்ல எருதுவும், திருந்திய – குற்றமற்ற, மெய்ந் நிறைந்து – வடிவழகு…, நிறையபெற்று, நீடு இருந்த – நெடுநாள் மணமின்றி யிருந்த, கன்னியும் – குமரியும், நெறிமாறி – வழிதவறி, நொந்துவந்த – வருந்தியடைந்த, விருந்தும் – விருந்தினரும், இம் மூன்றும் – இந்த மூன்றும், பெறுமாறு அரிய பொருள் – கிடைத் தற்கரிய பொருள்கள். எ-று.
அருந்தொழிலாவன – அளற்று நிலம் முதலியவற்றிற் பண்டியீர்த்தல் முதலியன. “மடுத்தவாயெல்லாம் பகடன்னான்” என்னுங் குறளும், அதனுரையும் நோக்குக. பகடு – கடாவுமாம். நீடிருந்த என்றது நெடுநாள் மணமின்றியிருத்தல் அரிதென்னுங் குறிப்பிற்று. பெறுமாறு – பெற. பலரும் விரும்புவராகலின் பெறற்கரிய பொருள் என்றார். ஈண்டும் திணைவிரவி அஃறிணை முடிபேற்றன.
70. காவோ டறக்குளந் தொட்டானு நாவினால்
வேதங் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந்து
ஒல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.
பதவுரை: காவோடு – சோலையை உண்டாக்குதலோடு, அறக்குளம் – அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் – தோண்டிய வனும் நாவினால் – நாவினால் ஓதி, வேதம் கரைகண்ட – வேதத்தை முடிவுகண்ட, பார்ப்பானும் – பார்ப்பனனும், தீது இகந்து – தீமைபயக்கு நெறி யினீங்கி, ஒல்வது இசையும் பொருளை, பாத்து உண்ணும் – வறியர் முதலாயி னார்க்குப் பகுத்து உண்ணும், ஒருவனும் – ஒப்பற்ற இல்லறத் தானும், இம்மூவர் – இந்த மூவரும், செல்வர் – செல்வ முடையார், எனப்படுவார் – என்று பெரியோராற் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று.
அறத்திற்குச் சோலை வைத்து வளர்த்தவனும், குளம் தோண்டியவனும் என்க. காவோடு என்பதில் ஓடுவேறுவினை யுடனிகழ்ச்சி. தொட்டான், ஏவும் வினை முதல். கரைகண்ட என்பது ஒரு சொல். வேதமாகிய கடலின் கரையைக் கண்ட என்னின் வேதங்கரை என்பது மெலித்தல் விகாரமாம்.
” காவோ டறக்குளந் தொட்டல் மிகவினிதே”
என்பது இனியவை நாற்பது.
71. உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவு மிம்மூன்றும்
காண வரியவென் கண்.
பதவுரை: உடுத்து ஆடை இல்லாதார் – உடுத்திட ஆடை யில்லாதவர், நீராட்டும் – நீராடுதலும், பெண்டிர் – மகளிர், போர்தொடுத்து – வழக்கிட்டு, ஆண்டு அவை – அவ்விடத்துள்ள சபை யின்கண், புகலும் – புகுதலும், கொடுத்து அளிக்கும் – நல்கூர்ந் தார்க்குப் பொருள் கொடுத்துப் புரக்கும், ஆண்மை உடையவர் – ஆண்டன்மையுடையவரது, நல்குரவும் – வறுமையும், இம்மூன்றும் – இந்த மூன்றையும், காண – காண்டற்கு, என்கண் அரிய – எனது கண்கள் இல்லையாகுக. எ-று.
” உடுத்தலால் நீராடார்”
என்பது ஆசாரக்கோவை. கொடுத்தளித்தல் ஆண்மையாம் என்பதனை,
” ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன்
என்னும் நாலடியாராலும் அறிக. என் கண்கள் காணத்தகாதன என்றுமாம்.
72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும்
மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றும் திறவதிற்
றீர்ந்த பொருள்.
பதவுரை: நிறைநெஞ்சுடையானை – நிறைந்த வுள்ள முடை யானை, நல்குரவு அஞ்சும் – வறுமை அஞ்சும், அறனை நினைப்பானை – அறத்தை மறவாதவனை, அல்பொருள் அஞ்சும்- பாவம் அஞ்சும், மறவனை – வன்கண்மை யுடைய வீரனை, எவ்வுயிரும் அஞ்சும் – போர்க்களத்துற்ற யாவரும் அஞ்சுவர், இம்மூன்றும் – இந்த மூன்றும், திறவதில் – உறுதியுடைமையில், தீர்ந்த பொருள் – தெளிந்த பொருள்களாம். எ-று.
” செல்வமென்பது சிந்தையின் நிறைவு”
என்பவாகலின், அஃதுடையானை நல்குரவு அஞ்சும் என்றார். அல்பொருள் – அறனல்லாதது; பாவம். எவ்வுயிரும் என்றது போர்க்களத்துற்ற படைஞர்களை, நிறைநெஞ்சு முதலிய மூன்றும் தீர்ந்த பொருள் என்க. அஞ்சுதல் மூன்றும் நன்கு தெளியப்பட்டவை என்னலுமாம்.
73. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென்
பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென்
பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.
பதவுரை: இரந்து கொண்டு – பிறரிடம் இரந்துபெற்று, ஒண்பொருள் செய்வல் – ஒள்ளிய பொருளைத் தேடுவேன், என்பானும் – என்று கருதுபவனும், பரந்து ஒழுகும் – ஒருமைப் பாடின்றி உள்ளம் திரிய ஒழுகும், பெண்பாலை – விலைமகளை, பாசம் என்பானும், – அன்புடையாள் என்று கருதுபவனும் விரிகடலூடு – அகன்ற மாகடலினூடே, செல்வானும் – பொருள் தேடச் செல்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், அரிய துணிந்து – அரியனவற்றைத் துணிந்து, வாழ்வார் – ஒழுகுபவராவர். எ-று.
அரியன – இயலாததும், இல்லாததும், அஞ்சத் தகுவதும் ஆம். பாசம் என்னும் பண்புப்பெயர் பண்பியின்மேல் நின்றது. இழித்தற் குறிப்பால் ‘பெண்பால்’ என்றார். முன்னர் ‘பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பால்’ என்றமையுங் காண்க.
74. கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்
றீகென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங்
கடைப்பிடியா தார்.
பதவுரை: கொலை நின்று – கொலைத் தொழிலில் நிலை பெற்று, தின்று ஒழுகுவானும் – அதனால் வந்த ஊனைத் தின்று வளர்பவனும், பெரியவர் – பெரியோர்கள், புல்லுங்கால் – தன்னைத் தழுவுமிடத்து, தான் புல்லும் – தானும் அவரைத் தழுவும், பேதையும் – அறிவிலாதவனும், இல் எனக்கு – எனக்கு இல்லை, ஒன்று ஈக – ஒரு பொருளை ஈவாயாக, என்பவனை – என்றிரப்பவனை, நகுவானும் – இகழ்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், யாதும் – ஓரறத்தையும், கடைப்பிடியாதார் – உறுதியாகக் கைக்கொள்ளாதவராவர். எ-று.
வணங்குதற்குரிய பெரியாரை எதிர்புல்லுபவன் உலகநடை அறியாதவனாகலின் ‘பேதை’ என்றார். இல் எனக்கு – பொருளில்லா எனக்கு என்றுரைத்தலுமாம். ஈக என்பதன் அகரம் தொக்கது.
75. வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனு மிம்மூவர் பொத்தின்றிக்
காழ்த்த மரம்.
பதவுரை: வள்ளன்மை -வரையாது கொடுத்தலை, பூண்டான் கண் – கடனாகக் கொண்டவனிடத்துள்ள, செல்வமும் – பொருளும், உள்ளத்து – மனத்தினாற் சிந்தித்தறியும், உணர்வு உடையான் – அறிவுடையவன், ஓதிய நூலும் – கற்ற நூலும், புணர்வின்கண் – பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து. தக்கது அறியும் – அவர்க்குச் செய்யத் தகுவதனை அறியவல்ல, தலைமகனும் – தலைவனும், இம்மூவர் – இந்த மூவரும், பொத்து இன்றி – பொந்து இல்லாமல், காழ்த்த – வயிரம் பற்றிய, மரம் – மரம்போல் உறுதியுடையராவர். எ-று.
நூல் – கல்வியுமாம், தலைவியுடன் கூடிய காலத்து நலம் பாராட்டுதல் முதலிய தகுதியினை அறியும் தலைவன் என்றுரைத் தலுமாம். செல்வம், நூல் தலைமகன் என்பன. திணைவிரவி, என உயர்திணை முடிபேற்றன. இவற்றுள் முன்னைய இரண்டும்,
” உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்
என நாலடியாரில் உவமையும் பொருளுமாக வந்திருத்தல் அறியற் பாலது. பொத்து – பொந்து; வலித்தல் விகாரம்.
76. மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க் காரியத்திற்
குன்றாக் கணிகையும் – வீரியத்து மாற்ற
மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற்
கரியார் புரிந்து.
பதவுரை: மாரிநாள் – மழைக் காலத்தில், வந்த விருந்தும் – வந்த விருந்தினரும், மனம் பிறிது ஆய் – உளம் மாறுபட்டு, காரியத்தில் – தனது கருமத்தில் நின்றும், குன்றாக் கணிகையும் – குன்றா தொழுகும் வேசைமகளும், வீரியத்து – போரிடத்து, மாற்றம் – தலைவனது சொல்லை, மறுத்து உரைக்கும் – மறுத்துக் கூறும் சேவகனும் – வீரனும், இம்மூவர் – இந்த மூவரும், புரிந்து – விரும்பி, போற்றற்கு – பேணுதற்கு, அரியார் – அரியவர். எ-று.
மழைக்காலத்தில் வந்த விருந்தினரை அவர் ஏகுங்காறும் உண்டியும் உடையும் கொடுத்துப் பாதுகாத்தல் யாவர்க்கும் எளிதன்றென்பதும், கவர்த்த மனமுடையளாய்ப் பொருள் வௌவுதலாகிய தன் இயல்பினின்றும் மாறாதிருக்கும் கணிகையை ஒரோவழி அவள் எய்திய எளிமை நோக்கி இரங்கிப் பாதுகாக்கப் புகின் பொருளையிழந்து துன்புற நேரும் என்பதும், தலைவன் ஆணைக்குக் கீழ்ப்படியாத போர்வீரனை வைத் திருத்தலால் பகையை வெல்லுதல் அரிதென்பதும் தோன்ற ‘இம்மூவர் போற்றற்கரியார்’ என்றார். “வீரியத்து . . . . . சேவகனும்” என்பதற்குத் ‘தலைவன் பகைவர்மேற் கருணையாற் சொல்லுஞ் சொல்லை மறுத்துப் போருக்குச் செல்லும் வீரன்’ என்று பொருள் கொண்டு இம்மூவரும் போற்றுதற்கு அருமையானவர் என்றுரைப்பாருமுளர்; இப்பொருள் பொருந்துமேற் கொள்க.
77. கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை
நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான வாராமற் காத்தலிம் மூன்றும் குடிமா
சிலார்க்கே யுள.
பதவுரை: கள்வரை – கீழ்மக்களை, கையிகந்து – விட்டுநீங்கி, வாழ்தல் – ஒழுகுதலும், நயவரை – நல்லவரை, நள்இருளும் கைவிடா – பாதியிரவிலும் கைவிடாமல், நட்டு – அவருடன் நட்புப் பூண்டு, ஒழுகல் – ஒழுகுதலும், வடுவான – குற்றம் பயக்கும் செயல்கள் வாராமல் காத்தல் – தங்கண் உண்டாகாமல் தடுத்தலும், இம்மூன்றும்- இந்த மூன்றும், குடி – குடிப்பிறப்பில், மாசுஇலார்க்கே – குற்றம் இல்லாதவர்க்கே, உள – உண்டாகும். எ-று.
கையிகத்தல், கைவிடாமை என்பவற்றில் கை என்பன வேறு பொருளின்றி, வினையுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றன. நயவர் – நற்குணமுடையார்; நீதியுடையார் என்றுமாம். விடா – ஈறு கெட்டது. வடு – குற்றம்; பழியுமாம். குடிமாசிலார் – நற்குடிப் பிறந்தார்.
78. தூய்மை யுடைமை துணிவாத் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்திற் றருக்கினார் கோள்.
பதவுரை: தூய்மை உடைமை – தூய தன்மையுடைமை, துணிவுஆம் – துணிவுடைமைக்கேதாகும். வாய்மையுடைமை – உண்மை யுடைமை, வனப்பு ஆகும் – அழகிற் கேதுவாகும், தீமை – தீமை யுடையவற்றை, மனத்தினும் வாயினும் சொல்லாமை – உள்ளத்தால் உள்ளுதலும் வாயாற் சொல்லுதலும் இன்மை, தொழில் அகற்றும் – தீய தொழில்களின்றும் நீக்கும், மூன்றும் – இந்த மூன்றும், தவத்தில் தருக்கினார் – தவத்தினால் மிக்காரது, கோள் – கொள்கைகள் எ – று.
மனந்தூயார்க்கு அச்சமின்றாகலின் ‘தூய்மையுடைமை துணிவாம்’ என்றும், ‘பொய் சிதைக்கும் பொன்போலு மேனியை’ என்பவாகலின் ‘வாய்மையுடைமை வனப்பாகும்’ என்றும், தீமையை மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் இல்லார்க்கு அவற்றின் வழிப்பட்ட தீத்தொழில் நிகழ்தலின்மையின், அவை ‘தொழிலகற்றும்’ என்றும் கூறினார். தொழிலகற்றும் என்பதனைச் சொல்லாமை என்பதன்பின் மாட்டேற்றியுரைக்க. தொழில் என்றது ஈண்டுத் தீத்தொழிலை. மனத்திற்கேற்ப நினையாமை என்பது விரித்துரைக்க. இனி, துணிவாந் தொழிலகற்றும் வாய்மையுடைமை என்றும், வனப்பாகுந் தீமை என்றும் இயைத்து. நலிந்து பொருள் கொண்டு, தூய்மை யுடைமையும் வாய்மையுடைமையும் சொல்லாமையும் என எண்ணி முடிப்பாருமுளர். துணிவாந் துணிவகற்றும் என்பதற்கு மெய்ந்நூல்களாலே ‘துணியப் பட்ட தாகிய நற்செய்கையை விரிக்கும் என்பதும் வனப்பாகுந் தீமை’ என்பதற்கு மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவது என்பதும் அவர் கொண்ட பொருள்களாம்.
79. பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினாற்
கொண்ட வருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட
னெஞ்சிற்கோர் நோய்.
பதவுரை: பழி அஞ்சான் – பழிக்கு அஞ்சாதவனாகி, வாழும் – ஒழுகும், பசுவும் – ஆவினை யொத்தவனும், கொண்ட அரும் தவம் – மேற்கொண்ட அரிய தவவொழுக்கத்தை, அழிவினால் – மனவுறுதியின்மையால், விட்டானும் – கைவிட்டவனும், கொண்டிருந்து – மணஞ்செய்து வைத்து, இல் – மனைவிக்கு, அஞ்சி வாழும் – அஞ்சியொழுகும், எருதும் – எருதைப் போல்வானும், இவர் மூவர் – இவர் மூவரும், நெல் உண்டல் – உணவினை உண்டிருத்தல், நெஞ்சிற்கு – அறிவுடையோர் நெஞ்சிற்கு, ஓர் நோய் – ஒரு நோயாகும் எ – று.
மக்கட்குரிய சிறப்பறிவின்மையின் பசு என்றும், எருது என்றும் கூறினார். இச்செய்யுளைத் திணை விரவிய உயர்திணை முடிபு பெற்றதற்கு உதாரணமாகக் கூட்டினார் சங்கரநமச்சிவாயப் புலவர் முதலாயினார். அதற்கேற்பப் ‘பழியஞ்சா வாழும்’ எனப் பாடங்கொள்வது சிறப்பு. அழிவு – வறுமையும் …… நெல் – உணவிற்காயிற்று. உணவினையுண்டு புவிக்குப் பொறையாக – இருந்தல் என்றபடி. ‘நெல்லுண்ட நெஞ்சு’ என்ற பாடத்துடன் பழைய வுரைகளிற் காணப்படுகின்றது.
80. முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும்
தூற்றின்கட் டூவிய வித்து.
பதவுரை: முறை செய்யான் – நீதி நூல்வழி முறைசெய்யுந் திறமில்லாதவன், பெற்ற தலைமையும் – பெற்ற அவைத் தலைமையும், நெஞ்சில் நிறையிலான் – உள்ளத்தின்கண் அவாவுடையான், கொண்ட தவமும் – மேற்கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் – நிறைந்த நல்லொழுக்கத்தை, தேற்றாதான் – அறிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் – பெற்ற வழகும், இவை மூன்றும் – இவை மூன்றும், தூற்றின்கண் – புதலிடத்து, தூவிய வித்து – விதைத்த விதையை யொக்கும் எ. று.
தலைமை – முறை செய்யும் மன்றின் றலைமை, நிறை – சிந்தையின் நிறைவாகிய செல்வம்; நிறையின்மை – அச்செல்வ மின்மையாகிய நல்குரவு.; புலன்களிற் செல்லாது நிறுத்துந் தன்மையைப் பேணலும்…. பாதுகாத்தலும் நிறையொழுக்கம் – சால்பும் ஒழுக்கமும், இந்த மூன்றும் பயனில வென்பதாம்.
81. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும்
நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும் வாசிகொண்
டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக்
கடலுளாழ் வார்.
பதவுரை: துறைபோல் – தன் கட் செல்வார்க்கெல்லாம் பொதுவாய் நீர்த்துறைபோல, தோள்வழங்கி வாழும் கணிகையும் – பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள் களை விற்று வாழும் வேசையும், வாழும் – வாழும், நாள் – நாடோறும், கழகம் – பார்க்கும் – சூதாடுமிடத்தையே நோக்கிச் செல்லும், நயம் இலா – நன்மை பயத்தல் இல்லாத, சூதனும் – சூதினையாடுவோனும், வாசிகொண்டு – மிகு வட்டி கொண்டு, ஒண் பொருள் செய் வானும் – ஒள்ளிய பொருளீட்டுவானும், இம்மூவர் – இந்த மூவரும், ஆசைக்கடலுள் – ஆசையாகிய கடலினுள்ளே, ஆழ்வார் – முழுகி யழுந்துவார் எ – று.
நாளும் என்னும் உம்மைதொக்கது. நயமிலா என்னும் பெயரெச்சம் சூதர் என்பதன் முதனிலை கொண்டு முடியும்.
” பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்
என்னும் வாயுறை வாழ்த்து ஈண்டு அறியற் பாலது. நயம் – நீதி யென்றுமாம் இவர்களுடைய ஆசைகளுக்கு அளவில்லை யென்றவாறு.
82. சான்றாருட் சான்றா னெனப்படுத லெஞ்ஞான்றும்
தோய்ந்தாருட் டோய்ந்தா னெனப்படுதல் – பாய்ந்தெழுந்து
கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும்
நல்லாள் வழங்கு நெறி.
பதவுரை: சான்றாருள் – குணங்களானிறைந்தவர் அவைக்கண், சான்றான் எனப்படுதல் – சால்புடையான் என்று சொல்லப் படுதலும், எஞ்ஞான்றும் – எக்காலத்தும், தோய்ந்தாருள் – நெஞ்சு கலந்து நட்டார் குழாத்தின்கண், தோய்ந்தான் எனப்படுதல் – உள்ளங் கலந்த நண்பன் என்று சொல்லப்படுதலும், பாய்ந்து எழுந்து – தம் மீது பாய்ந் தெழுந்து, கொள்ளாருள் – தாம் கூறிய வற்றை ஏற்றுக்கொள்ளா தாரவைக்கண், கொள்ளாத கூறாமை – அவனாற்கொள்ளப்படாத நற்சொற்களைச் சொல்லாமையும், இம்மூன்றும் – இந்த மூன்றும், நல்ஆள் – வழங்கும் நெறி – நற்பண்புடையவன் செல்லும் வழிகள் எ – று.
எனப்படுதல் ….. தோய்தல் – கலத்தல், நற்பண்புடையவன் நட்டவர், பாய்ந்தெழுதல் – தோட்புடையார் ….வெகுளுதல்.
83. உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும் செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றும் செப்ப
நெறிதூரா வாறு.
பதவுரை: உப்பின் பெருங்குப்பை – உப்பினது பெரிய குவியல், நீர் படியின் – நீர்கலந்தால், இல்லாகும் – இல்லையாகும், நட்பின் கொழுமுளை – நட்பின் செழிய முளை, பொய் வழங்கின் இல்லாகும் – பொய்கூறின் இல்லையாகும், செப்பம் உடையார் – நடுநிலையுடையார், மழையனையர் – மழையை யொப்பர். இம்மூன்றும் – இந்த மூன்றும், செப்ப நெறி – தூராத ஆறு – நல்நெறி அடையாமைக்கு ஏதுவாவன எ. று.
முளையாவது ஆரம்பம். மழையனையர் – மேகம் போற் கைம்மாறு கருதாது யாவர்க்கும் நலம் புரிந்து வாழ்பவர். செய்யுள் தோறும் மூன்று பொருள் கூறும் முறைமைக்கேற்ப ஈண்டு இம் மூன்றும் என்றாராயினும், உப்பின் பெருங் குப்பை நீர் படியினில் லாகும் என்பதனை, அடுத்து வரும் நட்பின் கொழுமுளை பொய் வழங்கினில்லாகும் என்பதற்கு உவமை மாத்திரமாகக் கொண்டு, பொய் வழங்காமையும் மழையனைய ராதலும் என்னு மிரண்டும் செப்ப நெறி தூராதவை என்பது கருத்தாகக் கொள்க.
84. வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை
யுண்ணாக் குழவியுஞ் – சேய்மரபிற் கல்விமாண்
பில்லாத மாந்தரு மிம்மூவர் நல்குரவு
சேரப்பட் டார்.
பதவுரை: வாய் நன்கு அமையா – நீர் வரும் வழி நன்கு பொருந்தப் பெறாத, குளனும் – குளமும், வயிறு ஆர – வயிறு நிறைய, தாய் முலை உண்ணாக் குழவியும் – தாயின் முலைப்பால் உண்ணாத குழவியும், சேய் மரபின் – தொன்றுதொட்டமுறைப்படி, கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் – கல்வி மாட்சியைப் பெறாத மக்களும், இம்மூவர் – இந்த மூவரும், நல்குரவு சேரப்பட்டார் – வறுமையால் அடையப்பட்டவர் எ – று.
வாய் – வழி; மதகு. சேய் என்பதற்கு மாணாக்கர் எனப் பொருள் கொண்டு, மாணாக்கர் கல்வி கற்கும் வழிபாட்டு முறைப் படிக் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைத்தலுமாம். இளம் பருவத்திற் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைப் பாருமுளர். துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார். திணை விரவிச் சிறப் பினால் உயர்திணை முடிபு பெற்றது.
85. எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி உள்பொருள்
சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் ஒள்ளிய
வொற்றாள் குணம்.
பதவுரை: எள்ளப்படும் மரபிற்று ஆகலும் – (தன் வடிவு) கண்டோரால், இகழப்படும் முறைமையையுடையதாகலும் – உள்பொருளை – உண்மைப்பொருளை, கேட்டு – தானே கேட்டு, மறவாத கூர்மையும் – அதனை மறத்தல் இல்லாக் கூரியவறி வுடைமையும், முட்டு இன்றி – குறைவில்லாமல், உள்பொருள் – முன்கேட்ட உண்மைப் பொருளை, சொல்லும் உணர்ச்சியும் – தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும், இம்மூன்றும் – இந்த மூன்றும், ஒள்ளிய – ஒண்மையுடைய, ஒற்றாள் குணம் – ஒற்றனின் பண்புகளாம் எ – று.
வடிவு என்பது வருவித்துரைக்க. “கடாஅவுருவோடு” என்பவாகலின், நன்கு மதிக்கப்படாத வடிவு வேண்டியதாயிற்று. செய்கை எள்ளப்படு மரபிற் செலும் என்றுரைத்தலுமாம். நிகழ்ந்த காரியத்தை ஐயந் திரிபின்றி அறியல் வேண்டுமென்பார் உள் பொருளைக் கேட்டு என்றார். ஒண்மை – அறிவு. ஒற்று ஆள் – ஒற்றாகிய ஆள். ஒற்றாள் குணம் என இயல்பாகலுமாம்.
86. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல்
நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும் குற்றந்
தரூஉம் பகை.
பதவுரை: அற்புப் பெருந்தளை – உயிர்கண் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை, யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் – கட்டுந் தளர்ந்து நீங்குதலும், கற்புப் பெரும்புணை – கல்வியாகிய பெரிய தெப்பத்தை, காதலின் கைவிடுதல் – பொருள் மீதுண்டாய வாசையாற் கைவிடுதலும், நட்பின் – நட்புப்பூண்டொழுகுங்கால், நயம் நீர்மை – அதற்குரிய நல்ல தன்மையினின்றும், நீங்கல் – நீங்குதலும், இவை மூன்றும் – இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை – தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள் எ – று.
அற்பு – அன்பு. கற்பு – கல்வி. “கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும், மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்” என்பவாகலின், கற்புப் பெரும் புணை என்றார். ஒருவரிடத்துள்ள நட்பினால் நீதித் தன்மை யினின்று நீங்கல் எனலுமாம்.
87. கொல்வது தானஞ்சான் வேண்டலுங்
கல்விக் ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுநிதி
குன்றுவிப் பானுமிம் மூவர் முழுமக்க
ளாகற்பா லார்.
பதவுரை: கொல்வது – கொல்லுந் தொழிலை, அஞ்சான் – அஞ்சாதவனாகி, வேண்டலும் – அதனை விரும்புபவனும், கல்விக்கு அகன்ற – கல்விக்குச் சேய்மையான, இனம் புகுவானும் – தீய கூட்டத் திலே சேர்பவனும், இருந்து – ஒரு முயற்சியுஞ் செய்யாதிருந்து, விழுநிதி – முன்னுள்ள சிறந்த பொருளை, குன்றுவிப்பானும் – குறையச் செய்பவனும், இம்மூவர் – இந்த மூவரும், முழு மக்கள் ஆகற்பாலார் – அறிவிலார் ஆகும்பான்மை யையுடையார் எ – று.
தான், அசை. வேண்டலும் என்பதற்கு வேண்டுபவனும் என்று பொருள் கொள்க. தொழிற்பெயர், இம்மூவர் என்பதனோடு இயையாமையின், முழுமக்கள் என்பதற்கு, முன் ‘பெருமை யுடையார்’ என்னுஞ் செய்யுளுரையில் உறைத்தமை காண்க. கொல்வது தானஞ்சான் வேண்டலும் என்பதற்குத் தன்னை வருத்துவதனைத் தான் அஞ்சாதவனாகி அடைய விரும்புபவனும் என்று ரைப்பாருமுளர்.
88. பிணிதன்னைத் தின்னுங்காற் றான்வருந்து
மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்
பிணைசெல்வ மாண்பின் றியங்கலுமிம் மூன்றும்
புணையி னிலைகலக்கு மாறு.
பதவுரை: பிணி – நோய், தன்னைத் தின்னுங்கால் – தன்னை வருத்துங் காலத்து, தான் வருந்துமாறும் – தான் வருந்துமியல்பும், தணிவு இல் – தாழ்தல் இல்லாத, பெருங் கூற்று – பெரிய கூற்றுவன், உயிர் உண்ணுமாறும் – உயிரைக்கவரவருமியல்பும், பிணை செல்வம் – பிணைந்த செல்வம், மாண்பு இன்று இயங்கலும் – நன்னெறியின்றிச் செலவிடப் படுமியல்பும், இம்மூன்றும் – இந்த மூன்றும் புணையின் நிலை – பற்றுக் கோடாவாரினது நிலைமையை, கலக்குமாறு – கலக்குந் தன்மையையுடையன எ. று.
தின்னுதல் – வருத்துதல்; “உருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும் பிணி” என்றார் முன்னும். பிணைசெல்வம் என்பதற்கு விரும்பப்படும் செல்வம் எனப் பொருளுரைப்பின் பிணைச் செல்வம் என்பது தொக்கதாகக் கொள்க. சுற்றத்தார் முதலியோர் வந்து சேர்தற்குக் காரணமாகிய செல்வம் என்றுரைப்பாருமுளர். மாண்பின்றியங்கல் என்பதற்கு நிலையின்றி யொழிதல் என்றுரைத் தலுமாம். புணையின் நிலை – மரக்கலம் போலும் மனத்தின் நிலை யெனலுமாம்.
89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்
பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்
இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்.
பதவுரை: அருளினை – அருளை, நெஞ்சத்து – உள்ளத்தின் கண், அடை கொடாதானும் – அடையச் செய்யாதவனும், பொருளினைத் துவ்வான் – பொருளைநுகராதவனாகி, புதைத்து வைப்பானும் – மண்ணிற்புதைத்து வைப்பவனும், இறந்து – நெறிகடந்து, இன்னா, சொற்களை, சொல்ல கிற்பானும் – சொல்லும் வன்கண்மையுடை யவனும், இம்மூவர் – இந்த மூவரும், பிறந்தும் – உலகத்து மக்களாய்ப் பிறந்தும், பிறந்திலாதார் – பிறவாதவராவர் எ-று.
அடைகொடாதான் – அடைவியாதவன், துவ்வான் – முற்றெச்சம், இனம் பற்றிப், பிறர்க்கு வழங்காதவனாகியென்றும் உரைத்துக் கொள்க. இறத்தல் – நெறிகடத்தல்; “இறந்தார்வாய், இன்னாச் சொல் நோற்கிற்பவர்” என்புழி இறந்தார் என்பதற்கு, நெறியைக் கடந்தார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பது காண்க. சொல்லகிற்பான் என்பதில் கில் வன்கண்மையை உணர்த்துகின்றது. மக்கட் பிறப்பின் பயனை அடையாமையின் பிறந்திலாதார் என்றார். பின்னரும் இவ்வாசிரியர் “பிறந்தும் பிறவாதவர்என்பர்”.
90. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலை யாதும் அருள்புரிந்து
சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகம்
சேராத வாறு.
பதவுரை: ஈதற்கு – பிறர்க்கு ஈதற்பொருட்டு, பொருளைச் செய்க – பொருளை ஈட்டுக, அறநெறி சேர்தற்கு – அற வழியையடைதற் பொருட்டுப், பெருநூலைச் செய்க – பெரிய நூற் பொருள்களைக் கற்க, யாதும் – எத்துணையும், அருள்புரிந்து – அருளை விரும்பி, சொல்லைச் சொல்லுக – நல்ல சொற்களைக் கூறுக, இம்மூன்றும்- இந்த மூன்றும், இருள் உலகம் இருளையுடைய நரகவுலகத் தின்கண், சேராத ஆறு – அடையாத வழிகள் எ – று.
செய்க பெருநூலை என்புழிச் செய்க என்பதற்குத் தகுதி பற்றிக் கற்க வென்றுரைக்கப்பட்டது. யாது சொல்லையும் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைத்தலுமாம். புரிதல் – விரும்புதல், இருள் – நரக வகையுளொன்று. “அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லையிருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்” என்னும் குறளும், ‘இருள் செறிந்த துன்பவுலக மென்றது திணிந்த விருளையுடைத் தாய் தன்கட் புக்கார்க்குத் துன்பஞ் செய்வதோர் நரகத்தை ; அது கீழ்உலகத்தோரிட மாகலின் உலகமெனப்பட்டது’ என்னும் அதன் உரைக்குறிப்பும் ஈண்டு அறியற்பாலன.
91. பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை
இறுதிக்கண் யாமிழந்தே மென்றன் – மறுவந்து
தன்னுடம்பு கன்றுங்கானா ணுதல் லிம்மூன்றும் மன்னா வுடம்பின் குறி.
பதவுரை: பெறுதிக் கண் – செல்வம் பெற்றகாலை, பொச் சாந்து – தெய்வத்தை மறந்து, உரைத்தல் – கூறத் தகாதவற்றைக் கூறலும், இறுதிக்கண் – வாழ்நாளின் முடிவு நெருங்கியகாலை, யாம் – நாம், உயிரை – பெறுதற்கரிய இவ்வுயிரினை, இழந்தேம் என்றல் – அவமே இழந்தோம் என்று இரங்கலும், தன் உடம்பு – தன்னுடைய உடல், கன்றுங்கால் – நோயினால் வருந்துமிடத்து, மறுவந்து – உள்ளம் மறுகி, நாணுதல் – முன் செய்த தீவினையை நினைந்து நாணுதலும், இம்மூன்றும் – இந்த மூன்றும், மன்னா உடம்பின் குறி – அறிவு பொருந்தாத உடம்பின் செய்கைகளாம் எ – று.
‘செல்வம் வந்துற்றகாலைத் தெய்வமும் சிறிது பேணார், சொல்வன அறிந்து சொல்லார்’ என்பதனால்; கீழோர் செல்வமுற்ற காலத்துத் தெய்வத்தை மறத்தலும் மிகுதிச் சொல் சொல்லலுங் காண்க. துன்புற்ற காலத்துப் பிறர் செய்த யுதவியைச் செல்வமுற்ற காலத்து மறந்து ரைத்தல் என்றுமாம்; “கெட்டிடத் துவந்த வுதவி கட்டில்”, வீறு பெற்று மறந்த மன்னன்போல” (குறுந்தொகை – 225) என்னும் சான்றோருரையும் நோக்குக. இதற்கு எடுத்துக் காட்டா வான் பாஞ்சால மன்னன் துருபதன் என்க.
92. ” விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை
ஒன்று முணராத வேழையும் – என்றும் இறந்துரை
காமுறு வானுமிம் மூவர் பிறந்தும்
பிறவா தவர்”
பதவுரை: விழுத்திணை – (ஒழுக்கத்தால் உயர்ந்த) சிறந்த குடியில், தோன்றாதனும் – பிறவாதவனும், எழுத்தினை – கல்வியை, ஒன்றும் உணராத – சிறிதும் அறியாத, ஏழையும் – அறிவில்லாதவனும், என்றும் – எப்பொழுதும், இறந்து உரை – நெறி கடந்து பேசுதலை, காமுறுவானும் – விரும்புவோனும், இம்மூவர் – இந்த மூவரும், பிறந்தும் – உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் – தோன்றாதவரேயாவர். எ- று.
ஒழுக்கம், வாய்மை, நாண் முதலிய பண்புகள் உயர் குடிப்பிறந்தார் மாட்டு இயல்பினைமையுமென்னுங் கருத்தால் அக்குடியிற் பிறவாமையைப் பயனிலதாகக் கூறினாரேனும், உயர்குடிக்குரிய ஒழுக்கம் முதலியன இல்லாதவன், பயனிலி யாவன் என்பது கருத்தாகக் கொள்க. ஈண்டு எழுத்து என்றது கல்வியை. உரை – முதனிலைத் தொழிற்பெயர். இறந்துரைக்கும் உரை என விரித்துரைத்தலுமாம்.
காமுறுவானும் – விரும்புவோனும், இம்மூவர் – இந்த மூவரும், பிறந்தும் – உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் – தோன்றாதவரேயாவர் எ – று.
93. இருளாய்க் கழியு முலகமும் யாதுந் தெரியா
துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல காதற்
படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை
வாழு முயிர்க்கு.
பதவுரை: இருளாய்க் கழியும் – எப்பொழுதும் இருள் போன்று கழியும், உலகமும் – உலக வாழ்க்கையும், யாதும் – (நன்மை தீமைகளில்) ஒன்றும் தெரியாது. உரைக்கும் – உணராது சொல்லுகின்ற, வெகுள்வும் – சினமும், பொருள் அல்ல – நற்பொருள்களல்லா தவற்றை, காதற்படுக்கும் – விரும்பும், விழைவும் – விருப்பமும், இவை மூன்றும் – இம்மூன்றும், வாழும் உயிர்க்கு – இவ்வுலகில் வாழ்ந்து வரும். மக்கள் உயிர்க்கு, பேதைமை – அறியாமையை விளைப் பனவாம் எ – று.
உலகம் – உலக வாழ்க்கை. மக்கட் பண்பின்மையால் யாவ ரோடும் கலந்து அறியப் பெறாதார்க்கு உலகிய லொன்றும் தெரியாதாகலின் அவர்கள் வாழ்க்கையை இருளாய்க் கழியும் உலக வாழ்க்கை யென்றார்.
” நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற்பட்டன் றிருள்”
என்னும் திருக்குறள் ஈண்டு அறியற்பாலது. உரைக்கும் – உரைத்தற் கேதுவாகிய.
94. நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர்
ஒழுக்கங் கடைப்பிடி யாதார்.
பதவுரை: நண்பு இலார் மாட்டு – நட்புக் குணம் இல்லாதவ ரிடத்து, நசைக் கிழமை, செய்வானும் – நட்புரிமை செய்கின்றவனும், பெண்பாலை – தன் மனைவியை, காப்பு இகழும் – காத்தலை இகழு கின்ற, பேதையும் – அறிவிலியும், பண்பும் இல் – குணமில்லாத, இழுக்கு ஆன சொல் ஆடுவானும் – குற்றமாகிய சொல்லைச் சொல் பவனும், இம்மூவர் – இந்த மூவரும், ஒழுக்கம் – தாம் ஒழுகுந்திறத் தினை, கடைப்பிடியாதார் – உறுதியாகக் கொள்ளாதவ ராவர் எ- று.
நண்பிலார் மாட்டு, நசைக்கிழமை செய்தல் – நட்கத் தகாதவ ரிடத்து நட்புச் செய்தல் என்றபடி, அன்றி, பழகிய நண்பரல்லாரை நண்பராகக் கருதி அவர் மாட்டு நட்புரிமை செய்தல் என்றுமாம். உரிமை செய்தல் – அவர் வினையைக் கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், பெண்பால் என்றது ஈண்டு மனைவியை. சொல்லுக்குப் பண்பாவன இனிமை, வாய்மை, பயனுடைத்தாதல் முதலியன. (94)
95. அறிவழுங்கத் தின்னும் பசிநோயு மாந்தர்
செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ் – செறுநரின்
வெவ்வுரை நோனா வெகுள்வு மிவைமூன்றும்
நல்வினை நீக்கும் படை.
பதவுரை: அறிவு அழுங்க – அறிவு கெடும் வண்ணம், தின்னும்- வருத்துகின்ற, பசி நோயும் – பசிப் பிணியும், மாந்தர் – மக்களது, செறிவு அழுங்க – அடக்கம் கெடும்படி, தோன்றும் – தோன்று கின்ற, விழைவும் – விருப்பமும், செறுநரின் – பகைவர்களுடைய, வெவ்வுரை – கொடுஞ்சொற்களை, நோனா – பொறுக்காமைக்குக் காரணமாகிய, வெகுள்வும் – சினமும், இவை மூன்றும் – இம் மூன்று குணங்களும், நல்வினை – அறவினையை, நீக்கும் – அழிக்கின்ற, படை – படைக்கலங்களாம். எ – று.
அழுங்கல் – கெடுதல், செறிவு – அடக்கம்; “செறிவறிந்து சீர்மை பயக்கும்” என்பது காண்க. ஈண்டு அடக்கமாவது புலன டக்கம். நோனா – பொறுக்காத; நோன்றல் – பொறுத்தல். நல்வினை என்பதற்கு மேற்கொண்ட நல்ல கருமம் என்றுரைத்தலுமாம்.
96. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி
கொண்டன செய்வகை செய்வான் றவசி கொடிதொரீஇ
நல்லவை செய்வா னரசனிவர் மூவர் பெய்யெனப்
பெய்யு மழை.
பதவுரை: கொண்டான் – கணவனுடைய, குறிப்பு அறிவாள் – உள்ளக் குறிப்பினை யுணர்ந்து நடப்பவளாகிய, பெண்டாட்டி – மனைவியும், கொண்டன – தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை – செய்யும் முறைப்படி, செய்வான் – செய்பவனாகிய, தவசி – தவமுடையோனும், கொடிது – தீமையை, ஒரீஇ – விலக்கி, நல்லவை – குடிகளுக்கு நன்மையானவற்றை, செய்வான் – செய்வப னாகிய, அரசன் – அரசனும் (ஆகிய), இம்மூவர் – இம்மூவரும் – பெய்என – பெய்யென்று சொல்ல, மழை பெய்யும் – மழையானது பெய்யும் எ- று.
பெண்டு – பெண்மை; பெண்டாட்டி – பெண்மையை ஆளுபவள்; ஈண்டு மனைவியென்னும் பொருட்டு, குறிப்பறிவாள் பெண்டாட்டி யாவள், செய்வகை செய்வான் தவசியாவான், நல்லவை செய்வான் அரசனாவன் எனத் தனித்தனி முடித்து இவர் மூவரும் பெய்யென மழை பெய்யும் என்றுரைத்தலுமாம். உலகம் நலம் பெறுதற்குக் கற்புடை மாதரும், தவஞ் செய்வாரும், நீதிமன்னரும் இன்றியமை யாதவ ரென்பது பெற்றாம்.
97. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற எஞ்சாத
நட்பினுட் பொய்வழக்கும் – நெஞ்சமர்ந்த கற்புடை
யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடை
யிலாளர் தொழில்.
பதவுரை: ஐங்குரவர் – . . . . , ஆணை – ஏவலை, மறுத்தலும் – மறுத்தலும் – மறுத்து நடத்தலும், ஆர்வு உற்ற – விருப்பம் மிக்க, எஞ்சாத – குறைவில்லாத, நட்பினுள் – நண்பரிடத்து, பொய் வழக்கும் – பொய்கூறுதலும், நெஞ்சு அமர்ந்த – உள்ளம் விரும்பிய, கற்பு உடையாளை – கற்புடைய மனைவியை, துறத்தலும் – நீக்கி விடலும், இம்மூன்றும் – இம்மூன்றும், நற்புடை இலாளர் – நற்சார்வு இல்லாதவருடைய, தொழில் – செய்கைகளாம் எ – று.
ஐங்குரவராவார் ஐந்து பெரியவர்களுடைய உவாத்தியான், தாய், தந்தை தமையன் என்போர். ஆர்வுற்ற நட்பு, எஞ்சாத நட்பு எனப் பெயரெச் சங்களைத் தனித்தனிக் கூட்டுக. நற்புடை – நற்சார்வு; நல்லினம். இனி நற்புடை – தருமசிந்தை என்றலுமாம்.
98. செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும்
வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும்
பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந்
திங்கண் மும்மாரிக்கு வித்து.
பதவுரை: செந்தீ சிவந்த முத்தீ வேள்விக்கும், முதல்வர் – முதன்மையான அந்தணர், அறம் நினைந்து வாழ்தலும் – தமக்குரிய அறங்களை மறவாது செய்து வாழ்தலும், வாழ்தலும் – வாழ்ந்துவரலும், வெஞ்சின வேந்தன் – கொடிய கோபத்தினை யுடைய அரசன், முறைநெறியில்- நீதி நெறிக்கண், சேர்தலும் – செல்லுதலும், பெண்பால் – ஒருபெண், கொழுநன்வழி – கணவனுடைய குறிப்பின்வழியே, செலவும் – செல்லுதலும், இம்மூன்றும் – இந்த மூன்று செயல்களும், வித்து – திங்கள் மும்மாரிக்கு – மாதந் தோறும் பெய்ய வேண்டிய மூன்று மழைக்கும், வித்து – காரணங்களாம் எ – று.
அந்தணர் அறத்தாலும் அரசனது நீதியாலும் மகளிர் கற்பாலும் திங்கள் மும்மாரி பெய்யும் என்றபடி.
99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் – முட்டின்றி
அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர் நல்லுலகஞ்
சேரா தவர்.
பதவுரை: கற்றாரை – கற்றறிந்த அறிஞர்களை, கைவிட்டு – விட்டு நீங்கி, வாழ்தலும் – (கீழாரொடு கூடி) வாழ்பவனும், காமுற்ற – தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு – தான் விரும்பிய வாறே, செய்து – புரிந்து, ஒழுகும் – நடக்கின்ற, பேதையும் – அறிவில்லாதவனும், முட்டு இன்றி – யாதொரு தடையுமில்லாது, அல்லவை – தீமை யானவற்றை, செய்யும் – செய்கின்ற, அலவலையும் – கீழ்மகனும், இம்மூவர் – இந்த மூவரும், நல் உலகம் – நன்மை அமைந்த மேலுலகத்தை, சேராதவர் – அடையாதவராவர் எ – று.
அலவலை – வீண் ஆரவாரஞ் செய்பவன் என்றுமாம்.
100. பத்திமை சான்ற படையும் பலர் தொகினும்
எத்துணையு மஞ்சா வெயிலானும் – வைத்தமைந்த
எண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்றும் மண்ணாளும்
வேந்தர்க் குறுப்பு.
பதவுரை: பத்திமை சான்ற – (தம் மீது) அன்பு நிறைந்த, படையும் – சேனையும், பலர் தொகினும் – பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும், எத்துணையும் – எவ்வளவும், அஞ்சா – அச்ச முறாமைக்குக் காரணமாகிய, வைத்து அமைந்த – உணவு முதலிய எல்லாப் பொருளும் வைக்கப் பெற்று அமைந்த, எயில் அரணும் – மதிலையுடைய அரணும், எண்ணின் – அளவிடின், விழுநிதியும் – சிறந்த செல்வமும், இம்மூன்றும் – இந்த மூன்று பொருள்களும், மண்ஆளும் வேந்தர்க்கு – இவ்வுலகத்தினை ஆளுகின்ற வேந்தர்க்கு, உறுப்பு – உறுப்புக்களாம். எ – று.
பத்திமை சான்ற படை – இறைவன் செறினும் சீர் குன்ற லில்லாத சேனை. எயில் என்றது உபலக்கணத்தால் அகழி, காடு முதலியவற்றையுங் குறிக்கும். அமைந்த – இலக்கணத்தால் அமைந்த வென்க; தொகுத்து வைக்கப்பட்டு நிறைந்த நிதியென்னலுமாம். அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறங்கங் களுள் வினை செய்தற்கண் இன்றியமையாத மூன்றினை இதனுட் சிறந்தெடுத் தோதினார்.
திரிகடுகம் மூலமும் உரையும் முற்றிற்று.



