
திருக்குறள் கட்டுரைகள்
கி. ஆ. பெ. விசுவநாதம்
வித்துவான் திரு. மொ. அ. துரை அரங்கனார் அவர்கள்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், மதுரை.
முத்தமிழ்க் காவலர், ஆண்டிலும் முதியவர், பல பல குழுக்களில் தலைமையும் உறுப்பும் உடையவர், உலகறி உத்தமர். உயர்திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எழுதிய ‘திருக்குறள் கட்டுரைகள்’ என்னும் சுவடிக்கு மதிப்புரை வழங்க யான் பெற்றுள்ள தகுதி என்கொலோ? அறியேன்.
திருக்குறளே விசுவநாதர் வலம் வரும் கோயில்; திருவள்ளுவரே அவர் வழிபடும் கடவுள். திருவள்ளுவர் வகுத்துள்ள நெறியே அவர் கடைப்பிடிக்கும் நெறி. திருக்குறட் கருத்துக்களே அவர் உண்ணும் சோறும், பருகும் நீரும். அக்கருத்துக்களை ஆர அமரத் தம் இயற்கை மதி நுட்பத்தாலும், நுண்மாண் நுழைபுல அறிவாலும் கடைந்து அமிழ்தமாக்கித் துய்த்து, அமர வாழ்வு எய்தி விட்டார் முத்தமிழ்க் காவலர் எனில், அது மிகையே ஆகாது.
யானும் திருக்குறள் வாழ்வே வாழ அவாக் கொண்டவன். திருக்குறள் வாழ்வே வாழ்ந்து வருகின்றேன் என்று பணிவோடு கூறுகிறேன். ஆனால், அவ்வாழ்வால் அடைந்துவரும் பயன்…?
திருக்குறளை உலகமறை என்பார் தமிழகத்தார். ஏனைய மொழியினரும் திருக்குறளை மொழிபெயர்த்துப் போற்றிக் கொள்கின்றனர் எனத் தமிழகத்தார் கூறிப் பெருமதிப்புப் பெற்றவர்போல் களிப்புறுவர். எம்மொழிக்குரியவரும் கைக்கூலி வாங்குதலோ கொடுத்தலோ தவறென்றே கொள்வர். ஆனால், கைக்கூலி கொடுத்தாலன்றி ஒரு சிறு தொழிலையும் இக்காலத்தில் சாதித்தல் இயலாததாகின்றது. ‘முகநக நட்பது நட்பன்று’ எனத் திருக்குறள் கூறுகின்றது. முகநக நட்பதே இக்காலத்திற் சிறப்பாகக் கொள்ளும் நட்பாக இலங்குகின்றது பொய் சொல்லாமல் ஒரு நாளும் வாழ்க்கையை இனிதாக நடத்த முடியாது என்னும் அளவிற்கு உலகம் இன்று மாறி நிற்கிறது பெருவேகத்தோடு இவ்வகையில் மாறி நின்றுள்ள இவ்வுலகில், ஆயிரவர்க்கொருவராதல் திருக்குறள் நெறியைப் பின்பற்றித் தாம் பெறும் பயனை மற்றவர் பெற உணர்த்தும் செயலில் முனைந்து நின்று வருகின்றனர். அத்தன்கையாராலேயே இன்னும் உலகம் அழியாமல் இருக்கின்றது என்று அறநெறி நிற்போர் அறைகுவர். உண்மை அதுவாயின், நம் முத்தமிழ்க் காவலர், உலகம் அழியா திருக்குமாறு அதைப் பாதுகாக்கும் காவலரும் ஆகின்றனர் எனலாம்.
சான்றாண்மையைக் குறிக்கோளாகக் கொண்டு, கயமையின் நீங்கி, அறிவறிந்து, கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ் செல்வம் என்பதால் அளவாகச் செல்வம் ஈட்டி, இரத்திலை இகழ்ந்து, குடி முதலிய தீய பழக்கங்களுக்காளாகாமல், அளவாக உழைத்து, ஊக்கத்துடனிருந்து, வீரங்குன்றாமல்,சொல்வதுபோலச் செயலாற்றி, மறைமொழியாம் திருக்குறளை மறவாமல் நினைவிற் கொண்டு வாழ்வதால் அமர வாழ்வு எய்தலாம் என்ற திரண்டு கருத்தைப் பத்துக் கட்டுரைகளாக, அழகிய, இனிய, ஆழ்ந்த, நுண்ணிய, செவ்விய நடையில் முத்தமிழ்த் காவலர் நமக்கு வகுத்து வழங்கியிருக்கிறார். ஏற்கென்வே ‘திருக்குறள் புதைபொருள்’ என்ற அவருடைய நூலைப் பயின்றவர்க்கு, அவருடைய ஆராய்ச்சித் திறன், பொருளாழம் கண்டுணர்த்தும் ஆற்றல் முதலியன்வெல்லாம் தெரியுமாதலால், இச்சுவடியில் அவற்றை எடுத்தியம்புதல் மிகையாகும் என் அஞ்சி விடுத்தேன்.
எல்லாக் கட்டுரைகளிலும், இறுதியாக அமைந்துள்ள “மறைமொழி” என்னும் கட்டுரை பொன்னேபோல் போற்றத்தக்கதாதலின் அதை முதற்கண் படித்து இன்புறுமாறு நண்பர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
திருக்குறள் வாழ்வால் அமர வாழ்வு எய்தி நிற்கும் முத்தமிழ்க் காவலர் உலகம் அழியாமைக்காக என்றும் வாழ்ந்த இத்தகைய சுவடிகள் பல ஆக்கித்தருவார்களர்க. வாழ்க தமிழ்! வாழ்க தமிழ்க் காவலர்!



