

வள்ளுவர் உள்ளம்
கி. ஆ. பெ. விசுவநாதம்
திருக்குறள் பீடம் : குருகுலம் அழகரடிகள்
குருகுலம், 21-6-64.
திருவாளர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள், பேச்சாலும் எழுத்தாலும் இனிய சொல்லோவியர்; தொடுதமிழ் நூலெல்லாம் அவர்க்குச் சுரந்தமிழ்து பாயும்.
திருக்குறள், தமிழ்மறை; அதோடு, உலகுக் கெல்லாம் பொதுமறை! இயல்பாகவே அது, சுரந்த பா; தாய் நாடிய தமிழ்க்கன்று கி. ஆ. பெ. வாய் வைத்தால், கருத்தமிழ்து பெருக்கெடுக்கக் கேட்பானேன்!
இங்ஙனமொரு நிகழ்ச்சி, பொன்மலைத் திருக்குறள் கழகத்தில், சில ஆண்டுகட்குமுன் நிகழ்ந்தது. மேன்மேலும் பெருகியொழுகிய அமிழ்தப் பொழிவை ‘வள்ளுவர் உள்ளம்’ என்னும் இப் பொன்வள்ளம் ஏந்திப் பலர்க்கும் வழங்குகின்றது.
வழங்கும் பணியைப் பாரி நிலையம் மேற் கொள்கின்றது. வள்ளன்மை அதற்கு இயல்பு தானே.
வள்ளுவர் உள்ளம், கி. ஆ. பெ. உள்ளமாயிற்று. அது பலமுக உள்ளமாய் இச்சிறு முதுநூலில் திகழ்கின்றது.
எடுத்த குறள் மணி ஒவ்வொன்றும் புதுப்புது மெருகு பெறுகின்றது. அதன் சொற்பட்டைகள், சிறந்த உரைப் பொலிவால் பன்னிறங் கொண்டு மின்னுகின்றன!
மக்கள் பயன் கொள்வாராக! இறைவன் திருவருளாலும், திருவள்ளுவப் பெருமான் இன்னருளாலும் இத்திருக்குறட் செல்வர், மேன் மேலும் தமிழ்மறைக் கன்றாகுக.
அழகரடிகள்



