வள்ளுவர் உள்ளம்
கி. ஆ. பெ. விசுவநாதம்

விய, தை, முதல் நாளன்று பொன்மலைத் திருக்குறள் கழகத்தில் நடந்த ‘தமிழர் திருநாள்’ கூட்டத்தில் ஆசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவு.

தமிழர் திருநாள்

அன்பர்களே! பெரியோர்களே! வணக்கம்.

பொங்கல் திருநாளாகிய இன்றைய தினம், பொன் மலையில், பெரியோர்களாகிய உங்கள் முன்னிலைபில், தமிழர் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதுகாறும் பொன்மலையில், தமிழர் திருநாள் கொண்டாடியதாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாண்டு இங்கே தான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாகத் தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதிலும், திருச்சிராப்பள்ளியிலும்கூட இன்று மாலையில்தான் தமிழர் திருநாள் கொண்டாடப் போகிறார்கள். ஆனால், நீங்கள் காலையிலேயே தொடங்கிவிட்டீர்கள்.

இத்திருநாள் தொடங்கும்போதே நல்ல முறையில் தொடங்கப் பெற்றிருக்கிறது. இவ்வாண்டு, தமிழர் திருநாள் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென்பது பெரும் புலவர்களும், அரசியல் கட்சியினரும், நல்லறிஞர்களும் கொண்டுள்ள கருத்து.

தை முதல் நாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவதின் பொருள் என்ன? தை மாதத்திற்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு? தமிழனுக்கு இந்நாள் மாத்திரம் ஏன் சிறந்த நாள்? என்பதை முதலில் ஆராய்வோம்.

ஒரு ஆண்டை , வான நூற் பயிற்சி வல்லுநர்கள், பகல் அதிகமாக உள்ள பகுதி. இரவு அதிகமாக உள்ள பகுதி என இருபெரும் பிரிவுகளாக வகுத்துள்ளனர். ஆடி முதல் மார்கழி முடிய இரவு காலம்; தை முதல் ஆனி முடிய பகற்காலம், தை பிறந்தால் விடியற்காலை மாதிரி. நேற்றுவரை சூரியன் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இரவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. குளிரும் மக்களை அதிகமாக வருத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு சூரியன் தெற்கு நோக்கியே சென்று கொண்டிருந்ததால் உலகத்தில் இருள் நிறையுமே, பனி வருத்துமே என்று ஏங்கிக்கொண்டிருந்தனர் உலகினர். இன்று சூரியன் திரும்பி வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து, வாடிய மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறான், ஆகவேதான் இது. நன்னாள் — இதைப் பார்த்துத் தான் தமிழ் மக்கள் இதைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்; திருவள்ளுவர் தொடர் ஆண்டும் இன்றுதான் தொடங்குகிறது. இன்று ஆண்டின் முதல் நாள், இனி இது எப்படி முதல் நாள் என்று பார்ப்போம். இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்னும் பிரிவினர்க்கு எப்போது நாள் தொடங்குகிறது? இந்துக்களுக்குக் காலை 6 மணிக்கு நாள் தொடங்கிகுறது. முஸ்லீம்களுக்கு மாலை 6 மணிக்கு நாள் தொடங்குகிறது, முஸ்லீம் கன சூரியனுக்கு மாறாகப் பிறையைக் கண்டு, நாள் கணக்கு வைக்கிறார்கள். உதாரணமாக இந்துக்களுக்குத் திங்கள் இரவாயிருப்பது முஸ்லீம்களால் செவ்வாய் இரவாகக் கருதப்படும். கிறிஸ்தவர்கள் முன்னே சொன்ன இரண்டு முறையையும் விட்டு விட்டார்கள். அவர்களுக்கு நள்ளிரவில் 12 மணி அடித்த பிறகே நாள் தொடங்குகிறது. ஆனால் இவர்களல்லாத பழந்தமிழர்களுக்கு உச்சிப் பொழுதிலிருந்து நாள் தொடங்கும். உச்சிக்கு அச்சமில்லை உச்சிக்கு நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை. தேதி இல்லை, கிழமையில்லை. சுத்தமான வெள்ளையுள்ளம் படைத்த களங்கமற்ற நேரம் அல்லவா?

மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத புதுப் பொருள்கள் விளையவும், மகிழ்ச்சிக்குரிய புதுமலர்கள் பூக்கவும், மக்களைத் துன்பத்தினினறும் நீக்கவும், சூரியன் தென்திசையினின்றும் வடதிசை நோக்கி திரும்பத் தொடங்குகின்ற இந்நாள்-முதல்நாள்-நன்னாள்- திருநாள் எனக் கருதப்பெற்று வருகிறது.

தமிழர் திருநாளை ஓர் வெற்றித் திருநாள் எனலாம். ஏன் இது வெற்றித் திருநாளாகக் கருதப்படுகிறது? புதிய நெல் விளைந்து அரிசியாகிவிட்டது. கரும்பைச் சாறாக்கிச் சர்க்கரை காய்ச்சியாய்விட்டது. இரண்டையும் சேர்த்துப் பொங்கிச் சாப்பிடுகிறோம். உழைப்பின் முழுப்பயனை இன்று பெறுகிறோம். மஞ்சளும், இஞ்சியும், வானுயர் கரும்பும் எல்லாம் விளையும் காலம் வீதி புதிதாகிறது. ஆளும் புதியவனாக மாறுகிறான். எங்கும் புதிய நெல், புதிய பானை, புதிய உடை, புதிய மலர். புதிய வளை, புதிய இல்லம் காணப்படுகின்றது. இதைப் பார்த்துத் தமிழ்மக்கள் இந்நாளை இயற்கையோடு இயங்கும் திருநாளாகக் கருதி, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் எண்ணிக் கொண்டாடுகிறார்கள். நாமும் இந்நாளை இன்று சாதி, மத அரசியல் கட்சி வேறுபாடுகளினறிக் கூடிக் கொண்டாடுகின்றோம். இதில் எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது!

ஆகவே, உள்ளம் மகிழ்கின்ற இந்த நல்ல நாளில், என்னைப் பேசப் பணித்துள்ள ‘வள்ளுவர் உள்ளம்’ என்னும் பொருள்பற்றி மகிழ்வோடு பேசுகின்றேன்.

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் 1978 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர். மதுரையில் பாண்டிய அரசரது அரண்மனை உள்படுகருமத் தலைவராயிருந்தவர். சிறந்த அறிஞர். அவருடைய உள்ளம் திருக்குறளில் பரவிக் காணப்படுகிறது.

சங்க நூல்களிற் பல புலவர்களின் உள்ளங்கள் பல திறப்பட்ட கருத்துக்களாகப் பரவிக்கிடக்கின்றன. ஆனால் வள்ளுவர் உள்ளம் எதைத் தொட்டாலும், தானே அதுவாகத் துடிக்கிறது. முத்துக்களில் உள்ள நீரோட்டத்தைப் போல ஒவ்வொரு குறளிலும் உயிரோட்டத்தைக் காணலாம். 1330 குறள்களும் அப்படியே. அதிற் சில குறள்களை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்:

நீங்கள் மாம்பழக் கடைக்குப் போகிறீர்கள். அங்கு உங்களுக்குப் பழத்தின் சுவை அறிய ஒரு சின்னத் துண்டு ‘சாம்பிளாக’ கொடுக்கப்படுகின்றது. அதுபோல இன்று உங்களுக்குத் திருக்குறள் சாம்பிள்கள் சிலவற்றை நான் கொடுக்கிறேன். சுவைத்துப் பாருங்கள். புறநானூறு போன்ற இலக்கியங்கள் முள் நிறைந்த பலாப்பழம் போன்றவை, முள் நீக்கிச் சுளைகளையாக எடுத்துக் கொடுத்தால்தான். “ஆ! இனிக்கிறதா, எவ்வளவு சுவை! என்பீர்கள், அப்படிச் சற்று முயற்சி எடுத்து அவைகளைச் சுவைக்கவேண்டும். ஆனால், திருக்குறளைச் சுவைப்பது மாம்பழத்தைச் சுவைப்பதுபோல் மிக எளிது. குறள் முழுவதிலும் அவரது உள்ளத்தைக் காணலாம்.

நாடு பற்றிய உள்ளம்

முதலில் வள்ளுவர் உள்ளம், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறது என்பதைப் பார்ப்போம். “பசி. பிணி, பகை ஒழிந்த தாடுதான் நாடு” என்கிறார். எப்படி?

“உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு”

என்று. இதில் உறு, ஓவா, செறு என்ற சொற்களின் பொருள்கள் சிறப்புடையன. சோறு வழங்கும் நாடு. சோம்பேறிக் கூட்டத்தையும் பிச்சைக்காரர்களின் கூட்டத்தையும் வளர்க்கும் நாடாகும். ஆயிரம் பேருக்கு ஒரு ஊரில் சோறு போட்டான் என்றால், ஆ! அவ்வளவு ஏழையா உங்கள் ஊரில் இருக்கிறார்கள்?’ என்று கேட்கத் தோன்றும். “எங்கள் ஊரில் நூறு ஆஸ்பத்திரிகள் இருக்கின்றன என்று ஒருவர் சொன்னால், நாம் என்ன நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த ஊரில் நோயாளிகள் மிகுந்துவிட்டார்கள் என்பதுதான் பொருள். படை முதலிய தற்காப்புகள் மிக்க ஒரு நாடு பகைமை மிகுந்த நாடு என்றுதானே கருதப் பெறும். ஆகவேதான் வள்ளுவர் உள்ளம் பசி, பிணி, பகை ஒழிக்கும் நாட்டை ‘நாடு’ என்று கருதாமல், உழைப்பால் பசிவென்று, உடல் நலத்தால் பிணிவென்று, அன்பால் பகை வென்ற மக்களைக் கொண்டதே நாடு” என்று கருதுகிறது.

வள்ளுவர் எந்த நாட்டிற்கும் சென்றதாக வரலாறுகளில் காணப்படவில்லை. சில அண்டை நாடுகளையும்கூட அண்டியதாகத் தெரியவில்லை. பேரவைகளிற் சென்று பெருமுழக்கம் செய்ததாகவும் இல்லை. ஆனால் எல்லா நாடுகளையும் சுற்றி, எல்லாவற்றையும் கண்டறிந்தவர் போல, இச் சிறந்த கருத்தைக் கூறியிருக்கிறார். காரணம் அவ்வளவு பண்பட்டது அவருடைய உள்ளம்.

வாழ்வு பற்றிய உள்ளம்

திருவள்ளுவரின் இல்வாழ்க்கை பற்றிய கதைகள் பல. மனைவி வாசுகி அம்மையார் தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது திருவள்ளுவர் கூப்பிட்டதாகவும், உடனே அவ்வம்மை கயிற்றைவிட்டுக் கணவனிடம் சென்றதாகவும், கயிறு அப்படியே நின்றதாகவும், கதைகள் கேள்விப் பட்டிருப்பீர்கள், அவை மெய்யோ பொய்யோ என்பதை நாம் இங்கு ஆராய வேண்டுவதில்லை. ஆனால் வள்ளுவர் இல்வாழ்க்கை நடத்தியவர் என்பது மட்டும் நன்கு தெரிகிறது.

“இல்லது என் இல்லவள் மாண்பானால்? உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை?”

என்பது ஒரு குறள்.

மாண்புடைய இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றுமில்லை; மாண்பற்றவளானால் உள்ளது ஒன்றுமில்லை – என்று கூறுகிறார் வள்ளுவர். நற்குண நற் செய்கையுடைய பெண்மணி உள்ள வீட்டில் இல்லாத பொருள் ஏது? – எல்லாம் இருப்பது போலவே தான், இல்லவள் மாண்பற்றவளானால் வீட்டில் சிறந்த பல பொருள்கள் நிறைந்திருந்தாலும் என்ன பயன்? ஒன்றுமில்லாதது போலதான். இது கவித்திறன் அல்ல! – பயனற்ற அடுக்குச் சொல் அல்ல முற்றிலும் உண்மைக் கூற்று. உதாரணமாக ஒரு பரம தரித்திரன் வீடு; இடிந்த சுவர்; சரிந்த கூரை; மண்சட்டி. ஆனால் அவன் அங்கு ஒரு நல்ல மனைவியுடன் வாழ்கிறான். மகிழ்வோடு சாப்பிடுகிறான். குறை ஒன்றுமில்லை, கவலை

யின்றி உறங்குகிறான். இதற்கு மாறாக ஒரு செல்வச் சீமானின் மாடி வீடு, பொன் வெள்ளிப் பாத்திரங்கள் சோபா, நாற்காலிகள். ஆனால், இல்லத்தில் நல்ல மனைவியில்லை எல்லாம் உண்டுதான்! மன அமைதியற்ற வாழ்வு. உறக்கமுமில்லை? அவனுக்கு எது இருக்கப் போகிறது? இவை இரண்டில் எது சிறந்தது? சொல்லுங்கள் வள்ளுவர் உள்ளம் இல்லாததில் சிறப்பும் உள்ளதில் குறைவும் காட்டுகிறது. அதுமட்டுமல்ல; ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்வழியும் காட்டுகிறது.

நடை போடும் உள்ளம்

“புகழ்புரிந்தஇல் இல்லோருக்கு இல்லை இகழ்வார்முன்
ஏறு போற் பீடு கடை”

என்பது மற்றொரு குறள்.

ஆண் சிங்கம்போல நடக்கச் சிலபேருக்கு முடியுமாம்: யாருக்கு? மாண்புடைய மனைவியைப் பெற்றவருக்கு ஆண் சிங்கம்போல் நடக்க முடியுமாம்! யார் முன்னால்? தன் சினேகிதன் முன்னாலா? அல்ல; தன்னை இகழ்பவன் முன் நடப்பான் என்று கூறுகிறார். இது எவ்வளவு பெரிய சிறப்பு! ஆனால், தன்னைத் தூற்றுகிறவர்முன் நல்ல மனைவியைப் பெறாதவனால் ஆண் சிங்கம்போல் நடக்க முடியாது என்று வள்ளுவர் வற்புறுத்திக் கூறிவிட்டார். குறளில் வள்ளுவர் உள்ளமும் ஒரு பெரு நடை நடப்பதைக் கண்டு மகிழுங்கள்.

தந்தை உள்ளம்

குழந்தையுள்ளவர்கள் அறிந்து கூறியிருப்பதுபோல் தந்தை உள்ளத்தைப்பற்றித் திருவள்ளுவர் கூறியிருப்பது வியப்பிற்குரியது. வள்ளுவருக்கு குழந்தைகள் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியிருந்தும், அவர்,

“குழல்இனிது யாழ்இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

என்கிறார். எவ்வளவு பண்பட்ட தந்தையுள்ளம் பாருங்கள்.

‘இன்று அவர் குழல்வாசித்தார். எவ்வளவு இனிமையாக இருந்தது’ என்று ஒருவர் கூறுகிறார். மற்றும் ஒருவர் வந்து, ‘இன்று இவர் யாழ் வாசித்தார். வெகு இனிமையாக இருந்தது’ என்று கூறுகிறார். அவை இரண்டையும் கேட்டுவிட்டு, ஒரு தந்தை, சரி சரி, நீங்கள் உங்கள் குழந்தைகளின் மழலைச் சொற்களைச் கேட்டதில்லை போலிருக்கிறது, என்னுடைய குழந்தைகளின் மழலை மொழிகளே எனக்கு யாழ் ஓசை, குழல் ஓசையைவிட இனிமை பயக்கிறது’ என்கிறார். வாழ்க்கையில் குழந்தைகளின் மழலைச் சொற்கள்தாம் மிகவும் இனிமை பயப்பவை என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் பாருங்கள்.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”.

நம் நாட்டில் பெண் குழந்தைகள் மணலில் விளையாடி வீடு கட்டுவார்கள். ஆண் பிள்ளைகள், அம் மணல் வீடுகளை அழிப்பார்கள். இது தொன்று தொட்டுப் பழக்கம், மணலில் விளையாடிவிட்டு, அப்படியே வீட்டிற்கு வந்து, புழுதிபட்ட கையுடன் தன் தந்தை சாப்பிட்டுக்கொண் டிருக்கும் சோற்றை ஒரு குழந்தை அள்ளுகிறதாம். தன் குழந்தையின் கையென்ற காரணத்தால், அச்சோறு அசுத்தப் படுத்தப்படுவதாகக் கருதாமல், அத் தந்தையுள்ளம் அச்சோற்றை அமிழ்தைவிடச் சிறந்ததாகக் கருதுகின்றதாம். எவ்வளவு அன்பு நிறைந்த உள்ளம் பாருங்கள்!

துறவியுள்ளம்

திருவள்ளுவர் திடீரென்று துறவியாகிவிடுகிறார். இந்த உலகப் பற்றையெல்லாம் விட்டொழித்து, இறைவனைப் பற்றவேண்டுமென்று சொல்லுகிறார்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”

என்பது ஒரு குறள். இந்தக் குறளைச் சற்றுக் கூர்ந்து கவனிக்கவேண்டும். இது ‘இவ்வுலகப்பற்று விடுவதற்கு இறைவன் திருவடியைப் பற்று’ என்று பொருள்படும் எனச் சொல்வார்கள். ஆனால் எனக்கு இதில் ஒரு ஐயம்! இதை, பல புலவர்களிடம் கேட்டேன். ஆனால் இன்னும் அவர்கள் முடிவாகச் சொல்லவில்லை. ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு குழுமியிருக்கும் உங்களிற் சிலர் இந்த ஐயப்பாட்டை விளக்க முடியுமானால் மனம் உவந்து வரவேற்பேன். இல்லையாயினும், இதைப்பற்றிச் சிந்தியுங்கள். திருவள்ளுவர் சொன்னதைத் திரும்பச் சொல்லியதில்லை. பொருத்தமில்லாமலும் சொல்லியதில்லை. ஆனால் இங்கு, ‘அப்பற்றைப் பற்றுக’ என்று பெய்திருப்பது, சொன்னதைத் திரும்பச் சொல்வதுபோல் தோன்றுகிறது. “பற்றுக பற்றற்றான் பற்றினை” என்று சொல்லிவிட்டு, ஏன் மீண்டும் ‘அப் பற்றைப் பற்றுக’ என்று சொல்ல வேண்டும்.

“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்பது ஒரு குறள். இதில் இரண்டு யார்கள் இருக்கின்றன. இந்தக் குறளைப் படிக்கும்போது யார், யார் வாய்க் கேட்பினும் என்று பிரித்து சொல்பவன் எவனாயிருந்தாலும், கேட்பவன் எவனாயிருந்தாலும், பேசப்படும் பொருளைத் தராசில் வைத்து நிறுத்துப் பார்ப்பதுபோல் பார்த்து உண்மையான பொருளைக் கண்டு கொள்வதுதான் அறிவு என்று பொருள்கொள்ள வேண்டும். இங்கு ‘யார்’ என்று இரண்டு சொற்கள் இருந்தாலும், பொருளால் வேறுபட்டுத் திருக்குறளை அழகுபடுத்துகின்றன. கூறியது கூறல் என்பது வள்ளுவர் குறளில் இல்லை. குறளிற் காணும் சொற்களை ஒரு பதக்கத்தில் இழைந்த மணிகள் எனக் கூறலாம். மேலே குறித்த குறளுக்குப் பொருள் ‘இவ்வுலகப் பற்றை விடுவதற்காக இறைவனுடைய திருவடியைப் பற்று’ என்பது உண்மையாகுமானால்,

“பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு”

என்பதே போதுமல்லவா? அப்படியானால், அப்பற்றைப் பற்றுக என்ற சொற்களுக்குப் பொருள் என்ன என்பதை அறிய அறிவுக்கு வேலை கொடுங்கள். “இவ்வுலகப் பற்றை விடுவதற்கு முதலில் ஞானாசிரியனைப் பற்று; பிறகு அவன் காட்டும் இறைவனைப் பற்று” என்பது பொருத்தமாக இருக்குமா? என்பதையும் எண்ணிப்பாருங்கள்.

ஒழுக்க உள்ளம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”

என்பது ஒரு குறள் ஒழுக்கம் எல்லாவற்றையும்விட மேலானதாகக் கருதப் பெறுவது. தமிழரின் நாகரிகத்திற்கு ஆணிவேர் இக்குறள். பிறநாட்டார் ஒழுக்கத்தை விடுவதா? உயிரை விடுவதா? என்ற நிலை வரும்போது, உயிரைவிட மனமில்லாது ஒழுக்கத்தையே விட முற்படலாம். ஆனால், தமிழர்கள் அப்படியல்ல. வட துருவம் தென்துருவமாக மாறுபட்டாலும் ஒழுக்கத்தை மட்டும் விட்டுவிட மாட்டார்கள். உயிரைக் கொடுத்தேனும் ஒழுக்கத்தைக் காப்பாற்று” என்பது தமிழ் நாகரிகப் பண்பு. ஆகவே வள்ளுவர் உள்ளம், “ஒழுக்கத்தை உயிரினும் அதிகமாக ஓம்பு!” என்று கூறுகிறது.

அன்பு உள்ளம்

மன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை“.

இக்குறளிலே வள்ளுவர் “உன் உயிரே போவதாயிருப் பினும் நீ மற்றொரு உயிரைக் சொல்லாதே” என்று கூறுகிறார். ஒரு உயிரைக் கொன்றுவிடுவதால் நம் உயிர் பிழைக்கும் என்பது கிடையாது. எடுத்துக்காட்டாக, பல வைத்தியர்கள் பச்சை வாதத்திற்குப் புறா ரத்தம், கறி இவற்றைச் சாப்பிடச் சொல்லுவார்கள். தினசரி ஒரு புறா சாப்பிடுவார் நோயாளி. ஆனால் வாதம் நிற்பதில்லை. ஒரு ஆளுக்கு 730 புறா அறுத்துக் கொடுத்தும் ஆள் பிழைக்கவில்லையே என்று நினைக்கிறார்களா? அதுவும் இல்லை. பின்னும் அதே யோசனையைச் சொல்வது தவறான வழக்கமாக இருந்து வருகிறது. பாவம் புறாக்கள் மடிந்துகொண்டே இருககின்றன. பிள்ளைகள் பிழைப்பதாகத் தெரியவில்லையே! இதை நினைக்கிறது. வள்ளுவரின் அருள் உள்ளம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் இளமையிலே எழுந்த சொற்றொடர் ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது. அது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத விலங்குகளை, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத விக்கிரங்களுக்குப் பலியிடுகிறார்கள் என்பதுதான். இன்றும் பலர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, ஆடு

கோழியைப் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுகிறார்கள். ஏன் தங்களைக் காத்துக்கொள்ள இவர்களுக்குத் தெரியவில்லை. விக்கிரமும் தானே போய்த் தின்னுவதில்லை. இதற்கு ஆள் தேடி, அரிவாள் தேடி, வெட்டிக் கொன்று காட்டவேண்டும் போலும்! தன்னைத் தானே காத்துக் கொள்ளத் தெரிந்த கரடியை, புலியை, சிறுத்தையை, சிங்கத்தைப் பலியிடுவதாகச் சொல்லுவதுதானே! அவைகளைப் பிடித்தால் நம் கதி என்னவாகும் என்பதும் தெரிந்தது தானே! ஆகவே அவைகளைப் பலியிட நினைப்பதில்லை வலுவற்றது, வாயற்றது என்பதாகத் தன்னைத் தானே காத்துக்கொள்ளத் தெரியாத ஆடுகளையும், கோழிகளையும் பலி கொடுக்கிறோம். வள்ளுவரது அன்பு உள்ளம் இது தவறு என்று கூறுகிறது. அது மட்டுமல்ல, உன் உயிரைக் கொடுத்து மற்றொரு உயிரைக் காப்பாற்று என்றும் கூறுகிறது.

அருள் உள்ளம்

இக்காலத்தில் பலர் காதுகளுக்கு, மூக்குக்கு நகை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் வள்ளுவர் நம் கண்களிலும் ஒரு நகை அணியவேண்டும் என்கிறார். கண்களுக்கு உரிய நகை எது? அதுவே கண்ணோட்டம்! அதாவது வாடி வதங்குவோரின் துன்பங்களைக் கண்டு சகியாமல் வருந்தி முத்து முத்து நீர்வடிப்பதே கண்களின் நகையாக இருக்க வேண்டும் என்கிறது வள்ளுவர் உள்ளம்.

கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்”

என்பதே இக்குறள். கண்ணோட்டத்தை அணிகலமாகக் கொண்டவர்களுடைய கண்களே கண்களென்கிறார்.

அப்படியானால், கண்னோட்டமில்லாக் கண்கள் எத்தகையன? அதையும் சொல்லுகிறார். அது கண்களல்ல, புண்கள் என்று. கண் அறியும், புண் அறியாது. ஆதலின், கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் என்கிறார்; என்ன உள்ளம் பாருங்கள்!

இரக்க உள்ளம்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.”

என்பது ஒரு குறள்.

பண்டைக் காலத்திலே ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும் அடிக்கடி சண்டை நேருவதற்குக் காரணமாக இருந்தது யாகங்களே! உயிர்ப்பலி கொடுத்து யாகம் செய்தல் ஆரியர்க்குரிய பழக்கம். அது தவறு என்பது தமிழர் வழக்கம். தமிழ் நாட்டில் தமிழர்கள் உயிர்ப் பலி கூடாது என்றே அன்று தொட்டு இன்றுவரை வாதாடி வருகின்றனர். அறவொழுக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். ஆகவே, தமிழர் நாட்டில் ஆரியர் வந்து உயிர்ப் பலி கொடுப்பது, தமிழரின் பழக்க வழக்கம், ஒழுக்கம், நெறி, மொழி, நாடு இவற்றிற்குக் கேடுசூழச் செய்யும் செய்கையென்று கருதினார்கள். ஆகவே தமிழ் மன்னர்கள் பலரும் வட ஆரியர்கள் இங்கு யாகம் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். ஆனால் ஆரியர்கள் மறைமுகமாக யாகம் செய்யத் தொடங்கினர். தமிழ் மன்னர்கள் அவற்றை அழித்தனர். பலசாலிகளான தமிழ் மன்னர்களை ஆரியர்கள் அரக்கர்கள் எனக் கூறினர். பின்னால் இதுவே தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் சண்டை எனப் புராணக்கதையாகக் கிளம்பியது போலும். வள்ளுவர் சிறந்த தமிழ் மகன் ஆதலின், அவர் உள்ளம் யாகத்தை வெறுத்தது. அவி சொரிந்து, நீ 1000 யாகம் செய்வதைவிட, ஒரு உயிரைக் கொலை செய்யாமலிருப்பது நல்லது எனக் கூறினார் வள்ளுவர். இதனால் நெய், பால், பழம் முதலிய அவிகளைப் பெய்து பல யாகங்களைச் செய்து பெறக்கூடிய பலன்களைவிட, கொல்லா நோன்பு நோற்பவர்கள் அதிகப் பலன்களைப் பெறுகிறார்கள் என்பது கருத்து: கொல்லாமை மட்டுமல்ல; உண்ணாமையும் வேண்டும் என்று கருதுகிறது வள்ளுவரின் இரக்க உள்ளம்.

அரச உள்ளம்

திருவள்ளுவர் திடீரென்று அரசாகிவிட்டார்; அரச உள்ளம் ஆட்சி செய்யத் தொடங்குகிறது. பாருங்கள்.

‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழும் குடி’

என்பது ஒரு குறள், இக் குறளில் மக்கள் மழையை எதிர்பார்த்து வானோக்கி வாழ்வது மட்டுமல்லாமல், அவ்வாறு மேல்நோக்கும் போது அரசன் (செங்) கோல் நோக்கியும் வாழ்கின்றார்கள் என்று கூறுகிறார்; அதாவது நாட்டிலே மழைவளம் மட்டுமிருந்தால் போதாது; நல்ல அரசும் அமைய வேண்டும். அப்போதுதான் மக்கள் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது கருத்து. சற்று முன்னே, கொலையை வெறுத்து, கொல்லாமை விரதம் பூண வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய வள்ளுவர், அரசரான உடன்,

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்”

எனக் கூறி, கொலையில் கொடியவர்களைக் கொல்லுதல் அரசனது கடமையென்று வரையறுக்கிறார். இங்குக் கொலையினை வள்ளுவர் உவமையுங்கூறி ஆதரிக்கிறார். ஏன்? ஓர் நெல் வயலைக் காட்டி, அங்கே பயிரிடையே களை மிகுந்திருந்தால் உழவன் என்ன செய்வான்? என்று கேட்கிறார். பயிர் வளர வேண்டுமானால், களைகளைக் களைந்து எறிந்தாக வேண்டும். அது போலவே நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி இவற்றை விலக்கி, தக்கார்களைக் காப்பாற்ற வேண்டுமானால், கொடியவர்களைக் களை பிடுங்குவது போல ஒழிப்பதும் அவசியமாம். ஆகவே, தன்னைப் போன்ற மக்களைக் கொல்லுங் குணம் படைத்த மாக்கள் திருந்தவே மாட்டார்கள்; அவர்களைத் திருத்தவும் முடியாது என்பது வள்ளுவரின் உள்ளக் கருத்து என நமக்கு நன்கு விளங்குகிறது. இம் மாதிரிக் கொடியவர்களைத் துரக்கிட்டுக் கொல்வது நேர்மையெனக் கருதுகிறது வள்ளுவரது அரச உள்ளம்.

பிச்சைக்கார உள்ளம்

அரசராயிருந்த வள்ளுவர் திடீரென்று ஆண்டியாய் விட்டார். அசல் ஆண்டியாகவே நடிக்கிறார். பிச்சை கேட்கவும் தொடங்குகிறார். யாரிடம்? செல்வர்களிடம் சென்றா? இல்லை, பிச்சைக்காரர்களிடம் சென்று! ஒரு பிச்சைக்கார மகாநாட்டைக் கூட்டி, அங்கு போய், பின்வருமாறு பிச்சையெடுக்கிறார்.

“இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று.”

“தோழர்களே, பிச்சையெடுக்கும் தொழில் நமக்கு வேண்டாம். அது இழிந்த தொழில். வேறு வழியின்றிப் பிச்சையெடுக்க நேர்ந்தாலும், வைத்துக்கொண்டே இல்லையென்று சொல்பவரிடம் மட்டும் போய்ப் பிச்சை கேட்காதீர்கள். அது நமக்குள்ள பெருமையைக் கெடுத்துவிடும். இதுவே நான் உங்களை இரந்து கேட்பது” எனக் கூறுகின்றார். எப்படி இந்தப் பிச்சைக்காரர்!

இரப்பது ஒரு இழிவு, அது இழிந்து இரப்பவனிடம், “இல்லை” யென்று கூறிக் கையை விரிப்பது அதைவிட இழிவு வைத்துக் கொண்டே இல்லை எனக் கூறுவது எல்லாவற்றிலும் இழிவு. இத்தகைய இழிந்த மக்களிடம் போய் இரப்பது இழிதொழிலுக்கும் ஒரு இழிவாகும், என்பது வள்ளுவரின் கருத்து.

அந்தப் பிச்சைக்கார மகாநாட்டில், ஒரு பிரதிநிதி எழுந்து, “எத்தனையோ தொழில்கள் இருக்க நாம் ஏன் இழிதொழில் செய்யவேண்டும்?” எனக் கேட்டார், மற்றொரு பிரதிநிதி எழுந்து, ‘அது நம் தலைவிதி; பிறப்பிக்கும் பொழுதே பிரமன் நம் தலையில் அவ்வாறு எழுதி விட்டான்’ என்றார். வள்ளுவர், உள்ளம் துடிதுடித்து விட்டது.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகஇயற்றி யான்.”

எனக் கூறிவிட்டார். ஒருவனைப் பிச்சை எடுத்தே உயிர் வாழவேண்டும் என்று எண்ணிப் படைத்திருப்பானானால். இந்த உலகத்தைப் படைத்த அவன் பரந்து கெட வேண்டும் எனச் சினந்து கூறுகிறார். அவ்வாறு பிரமன் எவரையும் படைப்பதில்லை என்பதே வள்ளுவரின் கருத்து. அப்படியிருக்குமானால், அவன் அழித்தொழிய வேண்டும் என்பதே குறளின் கருத்து. அவ்வளவு கொடுமையையும் வேதனையும் தரவல்லது பிச்சை எடுக்கும் தொழில் என்று வள்ளுவர் உள்ளம் கருதுகிறது. இதிலே ஒரு நயமும் உண்டு. வள்ளுவர் உலகியற்றியானைப் ‘பரந்து கெடுக’ என்று கூறுவது ஏன் தெரியுதா? பிச்சைக்காரன் பிச்சைக்காகப் பரந்து திரிந்து அலைந்து கெடுகிறானல்லவா. அதுபோலவே, அவனைப் படைத்தவனும் பரந்து திரிந்து, துன்பத்தை அனுபவித்துக் கெடவேண்டும் என்று சாபம்

கொடுக்கிறார். வள்ளுவரது பிச்சைக்கார உள்ளத்தின் வேதனையைப் பாருங்கள்.

விருந்துள்ளம்

விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று விளக்குகிறார் வள்ளுவர்.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.”

குறளே ஏழு சீர்களால் ஆயது. இதில் மூன்று நான்கு சீர்கள் உவமை. என்ன அழகு பாருங்கள். அனிச்சம் பூ என்பது ஒரு மெல்லிய பூ, அது எவ்வளவு மெல்லியது தெரியுமா? அந்தப் பூவை மோந்து பார்த்தாலே வாடி விடுமாம். அவ்வளவு மெல்லியது அனிச்சம் பூ. ஆனால் விருந்தினர் உள்ளம் அவ்வனிச்சம் பூவைவிட மென்மையானது. முகந்திரிந்து பார்த்தாலே வாடிவிடும் என்று கூறுகின்றார் வள்ளுவர். ஆகவே, இன்முகத்தோடு, சற்றும் மனத்தில் அழுக்கில்லாமல், வந்த விருந்தினரை மகிழ்வோடு ஏற்று உபசரிக்க வேண்டுமென்கிறார். எத்தகைய உயர்ந்த நோக்கம்! பண்டைத் தமிழரின் விருந்தோம்பல் குணத்திற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறு வேண்டுவதில்லை. ‘இந்தச் சமயத்தில் வந்தானே விருந்தாளி’ என்று நினைத்தாலே விருந்தினர் முகம் வாடிப் போய்விடுமாம். வள்ளுவரின் உள்ளம் இதை அனுபவிக்காமலேயே எவ்வளவு அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது பாருங்கள்.

வேடன் உள்ளம்

வள்ளுவர் வேட்டையாடக் காட்டுக்குப் புறப்படுகிறார். சாதாரணமாக வேடர்கள் வேட்டையாடுவதைப் பார்த்தார். இவரும் ஒரு அசல் வேடனாக மாறிவிட்டார்.

“கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது”

என்பது ஒரு குறள். அதாவது, ஒரு அம்பு வில்லுடன் முயல் வாழும் காட்டிற்குச் சென்று குறி பார்த்து எய்து, முயலையும் கொன்று வேட்டையாடி வெற்றி பெற்று வீடு திரும்புகிறான். இவனைப் பார்க்கிறது வள்ளுவவர் உள்ளம். இவ்வெற்றியைச் சிறப்பு எனக் கொள்ளவேயில்லை. மற்றொரு வேடன் வேல் ஏந்தி, யானை வாழும் காட்டிற்குச் சென்று யானையைக் கண்டு குறி பார்த்து எய்து, குறியும் தவறி, யானையும் பிழைத்துப் போய், வேலையும் இழந்து, வெறுங்கையோடு வீடு திரும்புகிறான். இவனையும் பார்க்கிறார் வள்ளுவர். அவருடைய உள்ளம் இதுவே சிறப்பு எனக் கருதுகிறது. தோல்வியடைந்த வேடனை, ‘நன்று செய்தாய்’ என்று உயர்த்திக் கூறுகின்றார் . காரணம்? இவன் யானை வேட்டைக்குச் சென்றான் : தோற்றான். அவனோ அற்ப முயல் வேட்டைக்குச் சென்றான்; வெற்றி பெற்றான். பயன் என்ன?’ என்கின்ற உள்ளுவதெல்லாம் உயர்ந்ததாக இருக்கட்டும் என்னும் வள்ளுவர் உள்ளம், வேறு எவ்வாறு கருதும்? சிறிய காரியங்களில் முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய காரியங்களில் முயன்று தோல்வியடைவது சிறப்பு என்பது வள்ளுவரின் உள்ளக் கருத்தாகும்.

உண்மையுள்ளம்

வள்ளுவர், பொய் நிறைந்த உள்ளத்தைப் பார்த்து ஒரே இருட்டாக இருக்கிறது என்கிறார். அந்த இருட்டைப் போக்க ஒரு விளக்குத் தேவை என்கிறார். இப்பொழுதுள்ள குத்துவிளக்கோ, மின்சார விளக்கோ

பொய் சொல்லும் உள்ளத்தில் இருட்டைப் போக்க முடியாது என்கிறார். பொய்யுள்ளம் எப்போதும் இருட்டாகவே இருக்குமாம். உண்மை பேசுவோர் உள்ளமே ஒரு நல்ல விளக்காம். இந்த விளக்கு இருப்பதனால் அவர்கள் உள்ளத்தில் எப்போதும் இருட்டு வருவதில்லையாம்.

இக் கருத்துக்கள் அனைத்தும் அடங்கிய குறள் ஒன்று.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”

என்பது.

என்ன ஆராய்ச்சி! எவ்வளவு பக்குவப்பட்டது வள்ளுவர் உள்ளம் பாருங்கள்! பொய் சொல்லாதவருடைய உள்ளம் வெளிச்சமாக இருக்கின்றதாம். சூரிய வெளிச்சம், சந்திரவெளிச்சம், குத்துவிளக்கு வெளிச்சம், மின்சார விளக்குகளின் வெளிச்சம் ஆகியவைகள் ஊடுருவி ஒளிபெறச் செய்ய முடியாத உள்ளத்தை உண்மை என்னும் விளக்கு ஒன்று சென்று ஒளிபெறச் செய்கிறதாம். என்ன உண்மை! என்ன வெளிச்சமான உள்ளம் சுவையுங்கள்! நன்றாய்ச் சுவையுங்கள். பிறகாவது உண்மை பேச முயலுங்கள்.

சூதுள்ளம்

பொய் பேசாதே என்று சொல்லிக் கொண்டிருந்த வள்ளுவர் அசல் சூதாடியாகிவிடுகிறார். சூதாட்டத்தில் சில உட்பொருள்களைப்பற்றி விவரிக்கிறார். சூதினர் ஒன்றெய்தி நுாறிழப்பர்; அதாவது ஒரு பொருளைப் பெற நூறு பொருள்களை இழந்துவிடுவார்கள் என்று கூறுகிறார். இதிலே சிந்தித்தால் ஒரு பொருள் மட்டுமல்ல வேறு பொருள்களும் விளங்குகின்றன. சூதுற்றவன் பெறுவது சூதன் என்ற பெயர் ஒன்றேயாம். அவன் இழப்பது நூறு! ஏது? பொன், புகழ், பெருமை, அன்பு, இரக்கம், மாடு, மனை, வண்டி, வாகனம், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் ஆகிய 100 நற்பண்புகளையும் இழந்து விடுவான் என்பதை நயம்பட உரைக்கிறார். இவரிடம் ஒரு சூதாடி வந்து, “நான்தான் திறமையாகச் சூதாடி எப்போதும் வெற்றி பெறுகிறேனே, நான் என்றும் இழப்பதே இல்லையே! நல்ல வருவாய் வருகிறதே! நான் சூதாடினால் என்ன?” என்று கேட்கிறான். அவனுக்கும் பதில் கூறுகிறார் வள்ளுவர்.

“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று”

என்பது. ‘நீ மீன் பிடிப்பதைப்பார்! புழுவைக் கொக்கியிற் பார்த்து இரையெனக் கருதி இரையை விழுங்கப்போகும் மீன் மடிந்து, பிறருக்கு இரையாவதை அறி. இன்று நீ பிறர்பொருளைச் சூதினால் கவர எண்ணலாம். ஆனால் அது உன்னைச் சீக்கிரம் சூது செய்துவிடும்’ என்று எச்சரிக்கிறார். சூதுக்கு உவமை கூறவந்த வள்ளுவர், மீன் பிடிப்போன், உயிர்போக்கும் கருவியை உணவாகக் காட்டும் சூதான செயலையே உவமையாகக் கூறியது புலவர் பெருமக்களால் வியக்கத்தக்க தொன்றாகும்.

குடிகாரர் உள்ளம்

கள்ளுண்பது தவறு: பெருங் குற்றம். நீங்கள் கள்ளை உண்ணாதேயுங்கள் என்று கூறும் வள்ளுவர் கள்ளுக் கடைக்குப் போகிறார். பின்செல்லுங்கள். குடிகாரர்கள் சிலர் தள்ளாடுகிறார்கள். அவர்களைப் பார்த்துச் சொல்லுகிறார், இனிமேல் குடிக்கப்போகும் குடியர்களை,

“கள்ளுண்ணா போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு”

என்று கேட்கிறார். கள் குடிக்கப்போகும் தோழர்களே! குடித்துவிட்டால் எப்படியிருக்கும் உங்கள் நிலைமை என்பதை, குடித்தவர்கள் சோர்ந்து, தடுமாறி, தள்ளாடி, உளறி வழியும் நிலையைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டாமா? குடித்தவனைப் பார்த்து, குடிக்காக குடிகாரன், தானும் அப்படித்தானே ஆவோம், தன்னையும் பிறர் ஏளனம் செய்வார்களே! என்று எண்ணமாட்டானா? என்று வள்ளுவர் கள்ளுக்கடைக்குப் போய்த் துள்ளித் துடிக்கிறார். நீங்கள் கள்ளுக்கடைக்குப் போகாமலே குடித்துச் சீரழிவுபடும் மக்களை நினைத்துக் கொண்டாலே போதும்; குடிகாரராக மாட்டீர்கள்.

காதல் உள்ளம்

வள்ளுவர் காதலைப்பற்றி எவ்வாறு கூறுகிறார் என்பதைப் பாருங்கள். அவர் உள்ளம் உண்மையான காதலைப் பற்றித்தான் எண்ணுகிறது. காட்சியும் அளிக்கிறது. பெண்ணை இவர் பார்க்கிறார். ஆனால் பெண்ணோ அப்போது தான் வெகுவாக நிலத்தைப் பெருவிரலால் கீறிக் கொண்டு தரையை நோக்குகிறதாகப் பாவனை செய்கிறாள். அவர் பார்க்காதபோது அவள் கடைவிழியால் காண்கிறாள். ஒரு புன்னகை புரிகிறாள். இதை வள்ளுவர் வெகு அழகாக,

“யான் நோக்கும்காலை நிலநோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”

என்று கூறுகிறார். அதோடு நிற்கவில்லை அவர். கள்ளையும் காதலையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். ஆராய்ச்சி செய்கிறார். முடிவைச் சொல்லுகிறார். கேளுங்கள் அதை,

“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல்காமத்திற்கு உண்டு.”

கள்ளை எண்ணினாலும், பார்த்தாலும் போதை உண்டாவதில்லை; குடித்தால்தான் போதை உண்டாகுமாம். ஆனால் காமம் அப்படி அல்லவாம். எண்ணினாலும் போதை பார்த்தாலும் போதை உண்டாகுமாம். ஆகவே, கள்ளைவிடக் காமம் போதையில் அதிக வலுவுடையது என்கிறார். எப்படிக் காதல்? எவ்விதம் வள்ளுவர் உள்ளம்?

பகை உள்ளம்

உட்பகையைப் பற்றி உணர்ந்து கூறுகிறார் வள்ளுவர். பகையாளி, உறவு கொண்டாடுவதுபோல வருவான். நம்பி மோசம் போகாதீர்கள். அவன் கும்பிடுங் கையிலும் கூர்வேல் இருக்கும்; ஏமாறாதீர்கள்! என்று எச்சரிககை செய்கிறார். மேலும் உட்பகைக்கு ஒரு உவமையாக,

“செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி”

எனவும் கூறுகின்றார். பானையும், மூடியும் ஒன்றாகச் சேர்ந்திருந்தாலும், அவை ஒன்றோடொன்று ஒட்டுவதில்லை அல்லவா? அதுபோலவே உட்பகை கொண்ட மக்களின் செய்கையும். பகை உணர்ச்சி, அண்ணன் தம்பிகளுக்குள்ளும் தோன்றும். திருமணம், சாவு காலங்களில் இருவரும் கூட்டி வைக்கப்படுவார்கள். ஆனால் இது உடைந்த மனம். பானையும், மூடியும் போன்ற நட்பு, சுட்ட மண், வெளியே ஒன்று கூடியதுபோல் தோன்றினாலும், உண்மையில் கூடமாட்டார்கள் என்ற உண்மையை வள்ளுவர் உள்ளம் நமக்கு நன்கு காட்டுகிறது.

நட்புள்ளம்

உட்பகையைப்பற்றிக் கூறிய வள்ளுவர் உயரிய நட்பைக் கொள்ள வேண்டுமென்கிறார். உண்மையான நட்பு எது என்றும் சுட்டிக் காட்டுகின்றார். அது.

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”

என்பதே இக்குறளுக்கு ஆடை நெகிழ்ந்த சமயத்தில் மனம் கைக்கு விண்ணப்பம் செய்யாதிருந்த போதிலும், கை எப்படி விரைந்து வந்து கட்டி உதவி செய்கிறதோ, அதே போல் சினேகிதனுக்குத் துன்பம் வந்துற்றகாலை அவன் உதவி கேட்காதபோதிலும் உதவவேண்டும் என்று பொருள் சொல்கிறார்கள் பவர். இது தவறு. எனக்கு வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. உடுக்கையிழந்தவன் என்பது திருக்குறள் பாடமாக இருக்கும்போது, ஆடையைப் பறிகொடுத்தவன் என்பதுதானே பொருளாகும். அவ்வாறின்றி உடுக்கையிழிந்தவன் என்றிருந்தால்தான் ஆடை நெகிழ்ந்தவன் என்று பொருள் அந்தக் குறளின் பொருளைப் பற்றிச் சற்றுச் சிந்தியுங்கள். ஆடையைப் பறிகொடுத்து விட்டுத் துடிக்கும் ஒருவனைப்பற்றி நினைத்துப் பாருங்கள். அந்த நிலையில் அவனுடைய கை என்ன செய்யும்? மானத்தையன்றோ மறைத்துக் காப்பாற்றி நிற்கும். யாரைக் கேட்டு அப்படிச் செய்கிறது? அதேபோல் நண்பன் துன்புற்ற நேரத்தில் அவன் கேட்பதற்குமுன் அத்துன்பந் துடைப்பதே நட்பு என்று கூறுகிறார் வள்ளுவர். இக்குறளில் ஆடை நெகிழ்வதை விட, வள்ளுவர் உள்ளம் நெகிழ்வதைக் கண்டு மகிழுங்கள்.

வியப்பு உள்ளம்

ஒரு செப்படி வித்தையைப் பற்றிச் சொல்லுகிறார் வள்ளுவர். சுரை போட்டால் சுரை முளைக்கும். அவரை விதைத்தால் அவரை முளைக்கும். துவரை விதைத்தால் துவரை விளையும். தினை போட்டால் தினைதான் விளையும் அல்லவா? ஆனால் நட்பை விதைத்தால்தான் பகை விளையும் என்பதை வள்ளுவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பகைக்கு விதை பகை அல்ல; நட்பு என்பது வள்ளுவர் முடிவு. உங்கள் பகைவரை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு நண்பர்களாயிருந் தவர்கள் அல்லவா? அவர்களை நண்பர்களாகக் கொள்ளாமல் மற்றவர்களைப் போலச் சாதாரணமாகக் கருதி இருந்திருந்தால், பகைவராக மாறியிருப்பார்களா? ஆகவே தான் திருவள்ளுவர் சிநேகம் என்னும் விதை போட்டால் தான் பகைமை என்னும் செடி முளைக்கும் என்பதை ஆய்ந்தாய்ந்து கண்டு,

“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்”

என முடிவுகட்டிக் கூறிவிட்டார்.

கேடு உள்ளம்

ஒருவன் கெட்டுப்போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை எல்லோரும் கைவிட்டு விலகுகிறார்கள். அவ்விலகும் கூட்டத்திலே ஒருவருடைய உள்ளத்தைப் பற்றிக் கூறுகிறார். அவன் இறக்கும்போது அவனுடைய மனச் சாட்சியே கொல்லுமாம். தன் நண்பனைக் கேடுவந்த காலத்தில் கைவிட்டதற்காக வருந்தி நைந்து போவானாம். கைவிட்டு ஓடிய நண்பன் மட்டுமல்ல, கைவிடப்பட்ட நண்பனும் இறக்கும் தருவாயில் தனது நண்பர்களைப்பற்றி நினைத்தாலும் உள்ளத்தில் தீப்பற்றி எரிவது போலிருக்குமாம். இதனையே வள்ளுவர்,

“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.”

என்று கூறுகிறார். கெட்டுப் போவதாலும் ஒரு நன்மை உறுதியாக உண்டு என்கிறார் வள்ளுவர்.

“கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.”

என்பது ஒரு குறள். ஒருவனுக்குக் கேடுவந்த காலந்தான் நல்லறிவு பெறுகின்ற காலம் என்கிறார். அப்போதுதான் சுற்றத்தார் நண்பர் பலரில் உண்மையானவர் யார் என அறிந்து கொள்ளலாம் என்கிறார். சுற்றத்தாரின் குண நலன்களை ஆராயக் கேடு கோபம்தான் அளவு கோலாக அமையுமாம். நற்காலத்தில் நண்பர்களை அளக்க அளவு கோல் இல்லையென்று கூறுகிறது. வள்ளுவர் உள்ளம்.

ஆராய்ச்சி உள்ளம்

தற்காலத்தில் எங்கும் ஆராய்ச்சியைப் பற்றியே பேசுகின்றனர். எழுதுகின்றனர். இது ஆராய்ச்சிக் காலம். நீங்களும் இப்பொழுது கொஞ்சம் ஆராய வேண்டும் என்பதற்காக ஒன்றிரண்டைக் குறிப்பிடுகிறேன். ஐம்புலன்களாலும் நாம் இன்பத்தை அனுபவிக்கிறோம் என்பது யாவரும் அறிந்ததே. வேறு வேறு காலங்களில் வேறு வேறு பொருள்கள் ஐம்புலன்களில் சிலவற்றிற்கு மட்டும் இன்பத்தைத் தருவது நாம் அறிந்ததே, ஆனால் ஐம்புலன்களையும் ஒரே சமயத்தில் இன்பத்திலாழ்த்தும் ஒரு பொருள் என்ன என்று அறிவது தான் ஆராய்ச்சியின் பாற்பட்டது. மேல்நாட்டார் கூட இன்னும் இம்மாதிரி ஒரு பொருளைக் கண்டு பிடித்ததாகத் தெரியவில்லை. நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். ஒருவன் இனிமையாகப் பாடுகிறான். அந்த ஓசை காதுகளுக்கு வெகு இனிமையாக இருக்கிறது. ஆகவே செவிக்குமட்டும் இனிமை பயப்பது ஓசை. அடுத்தபடியாக, ஒரு மல்லிகைப் பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நன்றாக வாசனையுள்ளதாகவும் இருக்கிறது. ஆகவே, மலர், கண், மூக்கு ஆகிய இரண்டு புலன்களுக்கும் இன்பத்தைத் தரும் ஒரு பொருள். மூன்றாவதாக ஒரு மாம்பழத்தைப் பாருங்கள். கண்ணுக்கு அழகாயும் மூக்குக்கு வாசனையுள்ளதாயும் நாக்கால் சுவைத்தால் ருசியுள்ளதாகவும் ஆக மூன்று புலன்களுக்கு இன்பம் அளிக்கக்கூடிய ஒரு பொருளாக அமைகிறது. நான் இப்பொழுது மூன்று புலன்களுக்கு இன்பந்தரும் ஒரு பொருளைப்பற்றிச் சொல்லி விட்டேன். நீங்கள் யாராவது நான்கு புலன்களுக்கும் விருந்தாக உள்ள ஒரு பொருளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

(பதில் இல்லை)

திருநாவுக்கரசர் ஒரு சைவ ஆசிரியர். அவரோடு மாறுபட்ட கருத்துடையவர்கள் அவரைச் சிறையிட்டு, நீற்றறையிலிட்டு எரிக்கின்ற போது, அவர்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டரை பொய்கையும் போன்றதே
ஈசன் எங்தை இணையடி கீழலே.

எனப் பாடினதாகவும், அப்போது நெருப்பும் குளிர்ந்து அவர் உள்ளமும் குளிர்ந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

திருநாவுக்கரசர் இறைவனிடத்துக் கொண்டுள்ள மாறாத பக்தியினால் தீ குளிர்ந்துவிடுமென்ற அழியாத நம்பிக்கை கொண்டு இப்பாடலைப் பாடினார். தீயும் குளிர்ந்தது என்று சொல்ல வந்த அவர் ஐந்து பொருள்களை உவமையாகக் காட்டியுள்ளார். அவை ஐந்தும் குளிர்ச்சியுடைய பொருள்களே. என்றாலும், அதில் தோன்றும் நயம் எல்லாம் அவை ஐந்து பொருள்களும் தனித் தனியே ஐந்து புலன்களுக்கும் (பஞ்சேந்திரியங்களுக்கு) குளிர்ச்சியுடையதாகக் காட்டுவதேயாகும்.

மாசில் வீணை காதுக்கு
மாலை மதியம் கண்ணுக்கு
வீசு தென்றல் மூக்குக்கு
வீங்கிள வேனில் உடலுக்கு
பொய்கையின் நீர் நாவுக்கு

இந்த ஆராய்ச்சி நமது உள்ளத்தைக்கூடக் குளிரச் செய்கிறது அல்லவா? இதிலிருந்து ஒரு பொருள் ஒரு புலனுக்கு மட்டுமே இன்பம் தருவது என்று அறிகிறோம். பின்னும் சில பொருள்கள் 1, 2, 3 புலன்களுக்கு (மா, பலா கண் மூக்கு நாவுக்கு) இன்பந் தரக்கூடியவையாகும். ஆனால் வள்ளுவர் ஐந்து புலன்களுக்கும் இன்பந்தரும் ஒரே பொருளைத்தேடி, ஆராய்ந்து கண்டு, நமக்குக் கூறிவிட்டார்.

“கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.”

என்பதே அக்குறள். “கண்ணாற் கண்டும், காதாற்கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் மோந்தும், மெய்யால் தீண்டியும் மகிழ்கின்ற ஐம்புல இன்பமும் பெண்மை யுள்ளம் படைத்த பெண்ணிடத்தேயுள்ளது” என்பதே இக்குறளின் கருத்து. எப்படி வள்ளுவரின் ஆராய்ச்சி! வேறு எவரும் இத்துறையில் இவ்வாறு ஆராய்ந்து கூறியதாக நமக்குத் தெரியவில்லை.

காதல் உள்ளம்

“உடம்பொடு உயிரிடை யென்ன மற்றன்ன
மடங்தையொடு எம்மிடை நட்பு”

என்கிறார். இக்குறளில் காதலனுக்கும் காதலிக்கும் இடையே வளரும் நட்பு, உடம்புக்கும் உயிருக்கும் தொடர்பு போன்றது என்று வள்ளுவர் தம் உள்ளத்தைக் காதல் உள்ளத்தில் குழைத்துக் கொடுப்பது போன்று கூறுவதைக் கண்டு மகிழலாம். யாக்கை நிலையாமையைக் கூறவந்த போதுங்கூட நட்பை அவரால் மறக்க முடிய வில்லை.

“குடம்பை தனித்தொழியப் புட்பறங் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு”

என்கிறார். முட்டையை விட்டுப் பறவை பிரிவதைப் போலவோ கூண்டைவிட்டுக் குருவி பிரிவதைப் போலவோ உடம்பைவிட்டு ஒரு நாளைக்கு உயிரும் பிரிந்துவிடும் என்பதே குறளின் கருத்து, “உடம்போடு உயிரிடை தொடர்பு” எனக் கூறாமல், ‘நட்பு’ எனக் கூறியது ஆழ்ந்த பொருள் உடையதாகும். ஆம்! உடல் துடித்தால் உயிரும் துடிக்கிறது. உயிர் வருந்தினால் உடம்பு வருந்தி இளைக்கிறது. உடல் துண்டானால் உயிர் போய்விடுகிறது. உயிர் பிரிந்து போனால் உடலும் அழுகிச் செத்த உடலும் செத்துப்போகிறது. எவ்வளவு அருமையான உவமை! சாதலுக்கு இதைவிட வேறு உவமை கூறுவதற்கில்லை.

மக்கள் உள்ளம்

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம் கண்டதில்”

என்பது ஒரு குறள். அதாவது கயவர்கள், உருவத்தில் மக்களைப்போலவே இருப்பார்கள். ஆனால் மக்களல்ல என்பது கருத்து. வேறு ஒப்புவமை சொல்லத்தக்க பொருள் இல்லாத காரணத்தால், மக்களே போல்வர் கயவர் என்றார். மக்களாய்ப் பிறப்பினும் மக்கள் தன்மையின்றேல், மக்களல்ல என்பது வள்ளுவர் கருத்து. இவற்றால், திருவள்ளுவரது நுண்ணிய ஆராய்ச்சித்திறன் நமக்கு நன்கு விளங்குகிறது.

ஆண்மை உள்ளம்

வீரஞ்செறிந்த ஆண்மையாளன் ஒருவன், தன் சென்ற நாட்களை எண்ணினால், அவற்றுள் பகையரசனுடைய படையை எதிர்த்துப் போர்செய்து, முகத்தினும் மார்பினும் புண்படாத நாட்களையெல்லாம், பயன்படாது கழிந்த வீணான நாட்களாகக் கருதி வருந்துவானாம். இதை,

“விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள்
வைக்குங் தன்னாளை யெடுத்து”

என்று கூறுகின்றார் வள்ளுவர். இக்குறளில் வள்ளுவரின் ஆண்மையையும், தமிழரின் வீரத்தையும் காணும் பொழுது, நம் உள்ளத்திலும் ஒரு வீரத்துடிப்பு துடிக்கிறது. என்னே பழந்தமிழ் மக்களின் வீரம்!

பெண்மை உள்ளம்

பெண்மை உள்ளத்தை மக்கள் உள்ளத்திற்குமேல் அடுக்குங்கள். பெண்ணுள்ளத்தை நம் கண்முன் ஓவியமாகத் தீட்டிக் காட்டியுள்ளார் வள்ளுவர்.

தலைமகளிடமிருந்து பிரிந்திருந்த தலைமகன், தலைமகள் தன் பக்கம் வரவும், ‘நின்னைப் பிரிந்த காலத்து இடையீடின்றி நினைத்தேன்’ என்னும் கருத்துப்பட, உள்ளினேன்’ என்றான். ஆனால் தலைவி, ஒருபோது மறந்து, பின் நினைந்ததாகக் கருதிக்கொண்டு. இடையிலே ஏன் மறந்தீர்?” என்று கேட்டு, அழ ஆரம்பித்து வருந்தினாளாம். இச்செய்தியை,

“உள்ளினேன் என்றேன் மற்றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்”

என்ற குறளில் கூறுகிறார். இவ்வாறு தலைமகள் – தலைமகனிடம் எவ்வளவு மிகுதியாக அன்பு வைத்திருந்தாள் என்பதைப் பெண்மையுள்ளமாக வடித்துக் காட்டுகிறார் திருவள்ளுவர்.

முடிவு

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழ்நாடு, நமது மொழி தமிழ்மொழி என்பதையும்; திருக்குறள் கற்பதால் நம்நாடு, மொழி, கலை, பண்பு, நாகரிகம் இவற்றை நன்கு அறிய முடியுமென்ற எண்ணத்தையும் மனத்திலிருத்துங்கள். பிற நாட்டார் தமிழ் நாடு என்று ஒன்று இருப்பதாக நினைப்பதற்குத் துணையாக இருப்பது திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்று தான், ஆகவேதான் பாரதியாரும்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”

என்று பெருமிதத்துடன் பாடினார். எல்லா நாட்டினராலும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ள உயர்ந்த நூல்களில், பைபிள் முதலாவதாகவும், குரான் இரண்டாவதாகவும், திருக்குறள் மூன்றாவதாகவும் மொழி பெயர்க்கப் பெற்றிருக்கிறது. ஆகவே, இத்தகைய சிறப்புப் பொருந்திய திருக்குறளைப் படிக்காமலும், அறியாமலும் ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருப்பானேயானால்! அவன் தமிழனாகவே இருக்கமுடியுமா? ஆகவே அன்பர்களே! திருக்குறளைப் படியுங்கள். திருக்குறளை எல்லோரையும் படிக்கச் செய்யுங்கள். ஏனெனில், அது நம்நாட்டின் கருவூலம் (பொக்கிஷம்) ஆகும். உங்கள் வீடெல்லாம் நம் நாடெல்லாம் ‘தமிழ் மணம் கமழவேண்டும்’. என்று தமிழர் திருநாளாகிய இந்த நல்ல நாளிலேயே மனமகிழ்ந்து கூறுகின்றேன்.

இதுவரை கூறிய சொற்களால், திருவள்ளுவரின் உள்ளத்தை நான் அறிந்த முறையில் ஒருவாறு விளக்கிக் கூறியுள்ளேன். இப்பேச்சைக் கேட்டவர்களில் சிலருக்காவது வள்ளுவர்மீதும் குறளின்மீதும் பற்றுதல் தோன்றிக் குறளைப் படிக்கத் தொடங்கிவிட்டால், அதுவே எனக்குச் சிறந்த பலனாக இருக்கும் எனக் கூறுவதோடு, “வள்ளுவர் உள்ளம்” பற்றிய எனது பேச்சை இத்தோடு முடிக்கிறேன். வணக்கம்!

வாழ்க தமிழகம்

வளர்க குறள்நெறி!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *