குமாரி செல்வா – வல்லிக்கண்ணன்

ஆசிரியர் பரமசிவம்

அவர்தான் அற்புதமான காதல் கதைகள் எழுதிப் பெயர் பெற்றவர் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!

‘வால் நட்சத்திரம்’ பத்திரிகை நடத்திக்கொண்டிருந்த காலம் அது.

ஆசிரியரின் பாலிஸியே தனி. சுருக்கமாகச் சொன்னால், ‘அமெரிக்கத்தனம்’ தான் அவரது பண்பாடு. அடிச்சு விளாசல், அபாரமாக அளத்தல், சுத்த சுய விளம்பரம், அற்புதப் புதுமை, துணிகர ஸ்டன்ட், திடீர்த் தாக்குதல்- இப்படி விவரிக்கலாம் அவரது குணாதிசயங்களை! அவரது பண்புகள் அத்தனையும் அவர் பத்திரிகையில் வெளிச்சமிடாமல் போகுமா!

பரமசிவத்தின் ‘வால் நட்சத்திரம்’ ரொம்ப காலம் வால்த்தனம் பண்ணவில்லை. அதன் கடைசி இதழுக்கு முந்திய இதழ் அன்றுதான் பத்திரிகைச் சந்தையிலே பகட்டாகச் சதிராடக் கிளம்பியிருந்தது. அட்டையிலே ஆடும் குமாரியின் அற்புதத் தோற்றம் மின்னியது.

தனது அறையிலே தனியாக உட்கார்ந்திருந்த ஆசிரியருக்குப் பொழுது போகவில்லை. போதிய உற்சாகமில்லை. ஆகவேதான் எழுதியிருந்த வர்ணனை ஒன்றைப் படித்து ரசிப்பதில் ஆழ்ந்திருந்தார்.

பத்திரிகைக்காரர்களையும் வாசகர்களையும் திடுக்கிடும்படி, திகைக்கும்படி, மகிழ்ந்து போகும்படியெல்லாம் செய்யும் திறமை பெற்றிருந்த பரமசிவம் அவ்வளவு உணர்ச்சிகளையும் அனுபவிக்க நேர்ந்தது எதிர்பாரா வகையிலே.

ஆசிரியர் அறையின் ஆடும் கதவு சூறைக் காற்றால் மோதுண்டது போல் படீரெனத் திறந்தது. பரமசிவம் எரிந்து விழுவதற்குள் திடும் பிரவேசம் செய்தாள் ஒரு யுவதி. அந்த இதழின் அட்டைச் சித்திரம் நேரடி விஜயம் செய்திருப்பதை உணர்ந்ததும் எரிக்கும் பார்வை சிந்தாமல் இனிய சிரிப்பையே உதிர்த்தார் பரமசிவம்.

‘குமாரி செல்வாவுக்குக் குதித்துக் குதித்தோடி வரத்தான் தெரியுமே தவிர, தென்றல் நடை நடக்கத் தெரியாது போலும்!’ என்றார் அவர்.

‘போதும்!’ எனச் சிடுசிடுத்தாள் சிங்காரி. நீலப் பாவாடை அலையென ஆட, ரோஜா நிறத் தாவணி அசைந்தாட, இரட்டைப் பின்னல் நெளிந்தாட, கரு விழிகள் நில்லாது சுழன்றாட ஓடி வந்த குமாரி அமைதியாக நிற்கத் தெரியாதவள் போல் அசைந்தாடி நின்றது ஆசிரியரின் விமர்சனத்திகு அழுத்தம் கொடுத்தது.

“உட்காரலாமே!” என்றார் அவர்.

“இங்கு நான் உட்காருவதற்காக வரவில்லை!” என்று சினுங்கினாள் எழிலி.

‘சந்தோஷம். அப்போ தாராளமாக நில்லுங்கள்!’ எனக் கனைத்தார் பரமசிவம்.

சும்மா நின்று கொண்டிருப்பதற்காகவும் வரவில்லை! என்று சீறினாள் பாவை.

‘ரொம்ப சந்தோஷம். கோல மயில் போலக் குதித்தாடுங்கள். வன்னப் புறா போலே வட்டமிட்டு நிறுத்துங்கள் ஸார்!’ என்று பாய்ந்தது அவளது கட்டளை. ஆசிரியர் திகைத்து விட்டார். அவர் மேலும் திகைக்கும்படி சொன்னாள் அவள்;

‘நீங்கள் மகத்தான தீங்கு இழைத்து விட்டீர்கள். எனக்கு இதைவிட வேறு அகௌரவம் என்ன வேண்டும்?’

‘என்ன? என்ன விஷயம்? உண்மையாகவே அவருக்கு விளங்கவில்லைதான்.’

‘என்னைப் பற்றி தப்புந் தவறுமாக எழுதிவிட்டு…’

‘அப்படி ஒன்றும் தவறுதலாக எழுதவில்லையே! உங்களுக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும் என்று எழுதியது தப்பா? தினம் ஒரு டஜன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவாள் என்றது தவறா? கன்றுக் குட்டிபோல் குதித்தோடி வரும் குணம் என்று குறிப்பிட்டது…’

‘அதெல்லாமில்லை. வர்ணனையில்….’

‘பாவாடையழகியாகக் காட்சி தரும் செல்வா பைஜாமா சுந்தரியாகத் திகழ்வாள் திடீரென்று. ஸாரி கட்டிய சிங்காரியாக மாறுவாள். கவுனணிந்த கட்டழகி பரட்டைத் தலையுடனே காட்சி தருவாள். ஒற்றைச் சடை ரெட்டைப் பின்னல்களாகத் துவளும்…. இதை ஆட்சேபிக்கிறீர்களா?’ என்று கேட்டார் அவர்.

‘இல்லை.’

‘ஊம்?….விஷயத்தை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்! என்று மனுச் செய்தார் ஆசிரியர்.

‘உயரம் ஐந்தடி மூன்றங்குலம். நிறம் – ரோஜாப் பூவேதான். நிறை நூற்றுப்பத்து பவுண்டு. பாடி 331/4 அங்குலம். இடுப்பு 321/4 அங்குலம்; இடை 31/4 அங்குலம் இப்படியா எழுதுவது?’ என்று உறுமினாள் அவள்.

‘உங்களிடம் கேட்டு விட்டுத்தானே எழுதினேன். இதில் வந்து என்ன தப்பு இருக்கிறது?”

“மண்ணாங்கட்டி! எனது உருவம் ஏணி மாதிரியாகவா இருக்கிறது? உடுக்கிடை, சிற்றிடை என்றெல்லாம் ரசிகர்கள் வியந்து பாராட்ட வேண்டிய இடையில் நயத்தைக் கெடுத்து இவளென்ன உரலோ என எண்ணும்படியாக எழுதிவிட்டீர்களே ஐயா! இதிலென்ன தவறு என்று வேறு கேட்கிறீர்கள். நன்று நன்று நும் ஆசிரியத் திறமை! என்று நீட்டி முழக்கினாள் குமாரி. ‘எனக்கெதுவும் புரியவில்லை அம்மானை! புரியும்படி பேசுவதே நல்லதுகாண் அம்மானை!’

‘புரிய வைப்பதற்காகத்தானே வந்தேன். என் இடையின் அளவு 31/4 அங்குலமல்ல. நீங்களே அளந்து பாருங்கள்’ என்று சொல்லி நேராக நின்றாள் அப் பூங்கொடி.

ஆசிரியர் பரமசிவம் செயலற்றுப் போனார். எத்தனையோ சவால்களை ஏற்றுக்கொண்ட சூரப்புலிதான் அவர். ‘வரலாறு விஷயத்திலே புதுமையாக எழுதலாம் என்று துணியப் போய் வீணான வில்லங்கம் வந்து விட்டதடா பரமசிவம்! அட பரமசிவோம்!’ என்று தன் ஆத்மாவுக்கு உபதேசித்த தோழருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதிரே இயற்கை வனப்பும் செயற்கை அழகும் கலந்த காந்த உருவமாய் நின்ற குமாரியைக் கவனித்தார்.

“அது தவறு என்றால், உள்ள அளவை நீங்களே சொல்லி விடுங்கள். அடுத்த இதழில் திருத்தம் எழுதி விடுகிறேன். இதற்காக நீங்கள் இப்படி….”

‘அவசியம் திருத்தம் வெளியிட்டே ஆகணும். அதற்கு நீங்களே சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் சொன்னாலே போதும். ஏதோ கைத்தவறுதல், அச்சுப் பிழை, கவனக் குறைவு, ஞாபக மறதி போன்ற காரணத்தினாலே….’

‘மீண்டும் தவறு ஏற்படாமலிருப்பதற்காகவே நீங்கள் அளந்து சரிபார்க்க வேண்டும் என்கிறேன். உம். சீக்கிரம் ஸார். எனக்கு நேரமில்லை. வேறு அலுவல்கள் இருக்கின்றன,போக வேண்டும்’ என அவசரப்படுத்தினாள் அலங்காரி.

தலையைச் சொரிந்த ஆசிரியர், தட்டிக் கழிக்க ஒரு காரணம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து, ‘இங்கே டேப் இல்லை. அளக்க முடியாதே!’ என்றார். அது அற்பாயுள் சந்தோஷமாக முடிந்தது. டேப் வேண்டாமே. இதோ ஸ்கேல் இருக்கு. நூல் இருக்கு. நூலை இடையைச் சுற்றிப்பிடித்து அளந்து அப்புறம் புட்ரூலில் கணக்குப் பண்ண முடியுமே!’ என்று வழி வகுத்துக் கொடுத்தாள் யுவதி.

பரமசிவம் பாடு பரம சங்கடமாகிவிட்டது. பலத்த தயக்கத்திற்குப் பிறகு துணிந்து விட்டார் அவர். அவள் சொன்னபடியே நூலினால் அவளது இடையின் அளவைக் கணித்தார். விரல்கள் நடுங்க, கைகள் பதற அவர் வெள்ளிய நூலை அந்தப் பாவாடை அழகியின் இடையளவு காணச் சுற்றும்போது, அவள் ஆடைகளும் உடலும் எழுப்பிய சுகந்த மணமும், பெண்மையின் அருகாமையும், அந்தப் புது அனுபவமும் அவர் உள்ளத்திலே கிளறிய உணர்ச்சிகள் தனிரக அவியலேயாகும்.

ஒரு மாதிரியாக அவர் கணக்கெடுப்பை முடித்ததும் ‘உம். எவ்வளவு?’ என்று கேட்டாள் அவள்.

’21/4 அங்குலம்’ என்று மென்று விழுங்கினார் அவர். ‘பத்திரிகையிலே பிசகாக…

‘பிசகென்றால் லேசானதா! உடுக்கிடைப் பெண்ணை தடி இடைக் குந்தாணியாக மாற்றி விட்டீர்களே!’

‘மன்னிக்கணும். அறியாமலே நேர்ந்த தவறு. உரிய முறையில் திருத்தம் எழுதி விடுகிறேன்’ என்றார் பரமசிவம்.

‘திருத்தத்திற்குத் திருத்தம் வேறு எழுதும்படியாகப் புதுத் தவறு செய்து வைக்காதீர்கள்’ என்று கூறிக் கலீரெனச் சிரித்தாள் குமாரி. ‘ஞாபகமிருக்கட்டும் ஸார்! நான் வாறேன்!’ என்று சொல்லுதிர்த்து விட்டு குதித்தோடி மறைந்தாள்.

“அட கடவுளே! அட நவயுகமே! அட நானே!” என்று வியந்தவாறு நாற்காலியில் சாய்ந்தார் ஆசிரியர். இது கதையா, கனவா, கழுத்தறுப்பா என்று நினைத்தார். ‘உண்மை.நிஜமாய் நடந்ததுதான்…உலகம் ரொம்ப வேகமாகத்தான் முன்னேறுகிறது!’ என முனங்கினார்.

குமாரி செல்வா அருமையான பெண். அழகு அழகு அநியாய அழகு! அதைவிட அநியாயமான துணிச்சல். ரொம்ப துணிந்த குட்டி!’ என்று புலம்பியபடி அட்டைச் சித்திரத்திலே கண் பதித்தார் ஆசிரியர்.

‘புதுமையின் குமிழ்; தீவிரத்தின் முகை; துணிச்சலின் சுடர் என்று வியந்து கொண்டிருந்தது மனம். ‘நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது கூடப் புதுமையான திடீர் நிகழ்ச்சிதானே!’ என்ற எண்ணம் எழுந்தது. உள்ளத்தின் உற்சாகம் சிரிப்பாக ஜோடி கூடியது. தானாகவே சிரித்தார் பரமசிவம்.

அன்றொரு நாள் தானாகவே சிரித்துக்கொண்டு தெரு வழியாகப் போன போதுதான் ஆசிரியருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. பரமசிவம் சூழ்நிலை மறந்து தன் முகத்தில் சிரிப்புத் தீட்டித் திரிவது புதிய விஷயமில்லையே! மேதைகளிடம் காணப்பட வேண்டிய கல்யாண குணம் தன்னிடமும் வளர்வதற்காக அவர் அதிகம் மகிழ்ந்து போவதுமுண்டு.

அன்று அவர் யாரையோ பற்றி எழுதிய எந்த நயத்தையோ எண்ணிச் சிரித்தபடி ஒரு வீதியிலே போய்க் கொண்டிருந்த போது, திடீரென்று விழிப்புற்று ‘இதுதான். பூலோகமா! என்று அதிசயிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.

அது ஒரு கண அதிர்ச்சி. சிலீர் என்று உணர்ச்சி அவர் கன்னத்திலே பட்டது. யாரோ – அல்லது எதுவோ-வேகமாக வந்து மோதியது போலவும் தோன்றியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் திடுக்கிட்ட அவர் விபத்தின் காரண உருவைக் கண்டதும் அதிகம் திடுக்கிட்டார். ‘இதென்ன தடிமாடு மாதிரியா.’ என்று வெடித்த சீற்றக் குரல், சுர் சுர்ரென்று திரியிலே பற்றிய நெருப்பு, பட்டாஸை வெடிக்க வைக்காமல் புஸ்ஸென அணைந்து விடுவதுபோல், ஒடுங்கி விட்டது.

மேலே வந்து மோதியது தடிமாடோ எருமைக் கன்றுக் குட்டியோ அல்ல. குஷி மிகுந்த குட்டிதான் – பாவாடையும் தாவணியுமணிந்த கோலக் குமாரிதான் – என்பதை உணர்ந்ததும் அவர் கோபம் அவள் கையில் கரைந்து கொண்டிருந்த ஐஸ்க்ரீம் போல் உருவற்றுத் தேய்ந்தது.

கலகலவெனச் சிரித்த குமாரி விலகி நின்று, ஐஸ்க்ரீம் பாழாகிப் பயனற்றுப் போவதைத் தடுப்பதற்காக, தனது சிவந்த உதடுகளினால் ஆர்வமாகச் சுவைத்தாள். ஐஸ்க்ரீமை ரசித்த அவள் கண்களில் தனியொளி திகழ்ந்தது. ‘இஹிஹி’ என்று கனைத்தாள்.

பரமசிவத்திற்குக் குளிர்ந்துபோன கோபம் மீண்டும் சூடு பெறலாமா, கொதித்துப் பாயலாமா என்று குறி கேட்பது போலிருந்தது. தனது கன்னத்திலே பட்டது அவள் எச்சில் படுத்திய ஐஸ்க்ரீம்தான் என்பது நன்றாகப் புரிந்தது. ‘எருமை மாதிரி மேலே வந்து விழுந்த கழுதைக்கு மன்னிப்பு கேட்கணும்னு தோணலை பாரு மேன்! திண்ணிப் பண்ணி! மொக்குது பாரேன் ஐஸ்க்ரீமை!’ என்று உறுமியது அவர் மனம்.

அழகிய மங்கை ஒரே சமயத்தில் எப்படி மூன்று வித மிருகாவதாரம் எடுத்துக் காட்சி தர முடியும் என்று அவரது அந்தராத்மா கேட்கவில்லை. அவ்வளவு ஆத்திரம் அவருக்கு! இன்னும் சில மிருகங்களின் பெயரையும் கூட்டியிருப்பார். அதற்குள் ‘ஏ செல்வா!ஏட்டி!’ என்ற குரல் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

‘இந்தக் கழுதைக் குட்டியின் பெயர்தான் போலிருக்கு!’ என்று நினைத்தார் அவர்.

கையிலிருந்த ஐஸ்க்ரீம் காலியானதும் “ஸார் ஸார் உங்க சட்டையிலே இஹிஹி!’ என்று கனைத்தாள் அவள். தன் சட்டை மீது சிவப்புக் கறை படிந்திருப்பதை அப்பொழுது தான் கவனித்த ஆசிரியர் ஒரு நிமிஷத்திற்குள் அவள் ஒரு க்ரீமைத் தீர்த்து விட்டதையும் உணர்ந்தார். அவர் கை கன்னத்தில் சில்லிட்ட இடத்தைத் தடவியது.

‘முகத்திலே கூடப் பட்டுவிட்டதா ஸார்! வருத்தம்!’ என்றாள்

அவள்.

‘எருமைக் கடாவே! கழுதைக் குட்டியே! என்று சீற எண்ணிய பரமசிவம் ‘எருமைக் கழுதை மோறையைப் பாரு!’ என்று கத்தினார்.

சிரித்தவளின் முகம் சிவந்தது.

‘வருத்தம்!’ என்றார் ஆசிரியர் நையாண்டிக் குரலில்.

‘மன்னிக்கணும் ஸார் என்றாள் அவள்.’

‘அதுதான் நான் சொல்றேன். செய்றதைச் செய்து போட்டு வருத்தம்னு அப்புறம் சொல்வதனாலே, செய்தது செய்யாததாகி விடுமா? மடக் கழுதை என்று ஏசுகிறேன், உடனேயே மன்னிக்கணும் என்றும் சேர்த்துக் சொல்லிவிட்டால் சரியாகப் போச்சா? இதிலேயெல்லாம் அர்த்தமே கிடையாது தெரியுதா? கூடிய வரையில் மனுஷத்தனம் குன்றாமல் வாழணும். தவறு நேராமல் நடந்து கொள்ளணும். சூழ்நிலை மறக்கும் படியாக என்ன குதிப்பு வாழுது? தெருவிலே போறவன் மேலே மோதி எச்சிக் கறை படியும்படி விழுந்துவிட்டு, பிறகு மன்னிக்கணும்கிறதுலே என்ன அர்த்தமிருக்கு?’ – ஆசிரியர் அதிகப் பிரசங்கம் பண்ணத் தொடங்கிவிட்டார்.

குமாரி அழாத குறையாக மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றாள்.’தெரியாமல் செய்து விட்டேன்!’ என்று முனங்க எண்ணினாள். ஆனால் வார்த்தைகள் வரவில்லை.

‘இப்ப என்னைத் தெரிந்தவங்க எவனாவது வந்திருந்தால் என் மதிப்பு நாளைக்கு கப்பலேறி விடுமா சும்மாவா! வால் நட்சத்திரம் பத்திரிகாசிரியர் பரமசிவம் மூஞ்சியில் ஐஸ்க்ரீம் வீச்சு! வீரப் பெண்ணின் சூரச் செயல் என்று எழுதி அச்சிட்டு சுவரொட்டி விளம்பரமல்லவா செய்து விடுவான்!’ என்றார் அவர்.

இதுவரை வீட்டினுள் ஜன்னலின் பின்னின்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு அம்மாள் முன் வந்தாள். ‘நமஸ்காரம் ஸார். குழந்தைக்கு தெரியாது. சிறுசுதானே. விளையாட்டுப் புத்தி. நீங்க உள்ளே வந்து முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள்’ என்று பவ்வியமாக வேண்டினாள்.

‘அஹாம். பப்ளிக் தண்ணிக் குழாய் இல்லாமலா போகும் இந்தப் பக்கத்திலே?’ என்று முறைப்பு காட்டினார் அவர்.

‘மன்னிக்கணும். நீங்கதான் வால் நட்சத்திரம் ஆசிரியர்னு தெரிந்த பிறகும் உங்களுக்கு மரியாதை செய்யாமல் அனுப்பினால் எங்களைப் பற்றி மற்றவங்க என்ன நினைக்க மாட்டாங்க?….’

ஆசிரியருக்கு உள்ளத்திலே சிறு உதைப்பு எடுத்தது, ‘மரியாதை’ என்ற பதத்துக்கு வேறொரு பொருளும் உண்டு என்று உணர்ந்திருந்ததனால். ஆகவே ‘பரவால்லே. நான் போறேன்’ என்று நகரலானார். அவர் மறுபடியும் திடுக்கிட நேர்ந்தது.

குமாரி குதித்து முன் வந்து வழி மறித்து நின்றாள். ‘தயவு செய்யுங்கள் ஸார். தெரியாமல் நடந்த குற்றம். என்னை மன்னிக்க வேண்டும். வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டு போங்கள்’ என்று கெஞ்சினாள்.

‘ஒரு வேளை தொழில் செய்யும் குடும்பமாக இருக்குமோ? தூண்டில் போடுகிற முறையிலே இது புது தினுசோ?’ என்று குழம்பியது அவர் மனம். எனினும் அஞ்சலி செய்து நிற்கும் அழகை, இளமையை, இனிய பெண்மையைத் தள்ளி ஒதுக்கி விட்டு முன் செல்லும் துணிவு அந்த வீர ஆசிரியருக்கு வரவில்லை. ஆகவே வீட்டினுள் விஜயம் செய்தார்.

அம்மா அவசரம் அவசரமாக உள்ளே மறைந்தாள். மகள் தயங்கித் தயங்கி நடந்து வந்து ஒரு நாற்காலி அருகில் நின்றாள். ‘உட்காருங்க ஸார்’ என்றாள் பணிவாக. குமாரியின் குதிப்பும் கனைப்பும் எங்கே பம்மி விட்டன என்ற வியப்பு எழுந்தது அவருக்கு. உட்கார்ந்தார்.

அவர் பார்வை எங்கும் சுழன்றது. நாகரிகம் ஆட்சி புரிந்த அழகு நிலையம்தான். செயலான குடும்பம்தான். அம்மாவையும் மகளையும் தவிர வேறு யாரையும் காணோமே. முதலில் பிறந்த சந்தேகம் மீண்டும் தலை தூக்கியது அவர் மனதில்.

‘உங்கள் ஆபீசுக்கு நானே வரவேணும் என் எண்ணியிருந்தேன்’ என்றாள் குமாரி.

‘ஆமாம். இன்று மத்தியானம் போகலாம் என எண்ணினோம். அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள் என்று சொல்லியபடி தோன்றினாள் பெரியவள். கையிலிருந்த கிளாஸை நீட்டி ‘இந்தாங்க, காப்பி சாப்பிடுங்க’ என்று உபசரித்தாள்.

காப்பியை வாங்கி குடித்து முடித்து விட்டு ‘ஏன், என்ன விசேஷம்?’ என்று கேட்டார் அவர்.

‘உங்களைப் பேட்டி காணத்தான்!’ என்றாள் குமாரி. ‘பேட்டியா! என்னையா! நீங்களா! அஹஹா!’ என்று அவுட்டுச் சிரிப்பு சிதறினார் அவர்.

‘ஆமா. இனிமேல் நீங்கள் யாரையும் பேட்டி காணப் போவதில்லை, நட்சத்திரங்கள் வேண்டுமானால் நம்மை வந்து பார்க்கட்டுமே என்று எழுதியிருக்கிறீர்கள் அல்லவா! அதனால்தான்!’

‘நீங்கள் நட்சத்திரமா?’

‘எதிர்கால நட்சத்திரம்’ என்று உறுதியாகச் சொன்னாள் அவள். குமாரி செல்வா என் பெயர். நாட்டியம் தெரியும். நடிக்கவும் முடியும். பட முதலாளி தான் எதிர்ப்படவில்லை. நான் இன்றைய நட்சத்திரங்களைப் பற்றி எண்ணுவதை எல்லோரும் அறிய வேண்டும். அதற்கு புதுமையைத் துணிகரமாகக் கையாளும் உங்கள் பத்திரிகை துணை புரியும் என்று நினைத்தேன்’ என்றாள் அவள்.

புதுமை மோகமும் துணிச்சலும் எங்கிருந்து எப்படி வேண்டுமாயிணும் கிளம்பலாம் என்பதை அறிந்திருந்த ஆசிரியர் பிரமிக்கவில்லை. பாராட்டினார். ‘ரொம்ப சந்தோஷம். இப்பவே நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விடுங்கள்! எதிர்பாராத சந்திப்பு புது ரகமான பேட்டியாக மாறி விடட்டுமே! என்று கனைத்தார் பரமசிவம்.

‘செல்வாவுக்கு ஐஸ் க்ரீம்னா உயிர். ரொம்ப அதிகமாத் தின்னாதேம்மா. பல்லுக்கு கெடுதி. உடம்புக்கும் ஆகாதுன்னு சொல்லியாச்சு. கேட்டால்தானே. நறநறன்னு கடிச்சுத் தின்னுவா. ஒண்ணுக்குப் பிறகு ஒண்ணு அதுக்கு மேலே ஒண்ணு யின்னு டஜன் கணக்கிலே தின்பா. இப்ப அவள் தின்னது எட்டாவதோ, ஒன்பதாவதோ. அதுதான் கூடாதுன்னு அவள் கையிலேயிருந்து பிடுங்க வந்தேன். அவள் விழுந்தடிச்சு ஓடி வந்து உங்க மேலே மோதிவிட்டாள்!’ என்று விளக்கம் கூறினாள் தாய்.

‘நானாக யிருக்கப் போய் நல்லதாச்சு. வேறே வீணன் எவனாது வந்திருந்து இப்படி நடந்திருந்தால் என்னாகிறது?’ என்று திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர்.

‘என்னாகும் தெரியாதா! குமாரியின் ரோஜாப் பூக்கன்னம் செவ்வரளியாக மாறிப் போகும். அடிபட்டுச் சிவக்காது. முத்தம்பட்டுத்தான்!’ என்று கொக்கரித்தது அவர் மனம். இதை அவர் வெளியிடவில்லை.

‘செல்வாவுக்கு விளையாட்டுப் புத்தி போகவேயில்லை. பதினெட்டு வயசு ஆகுது. இன்னும் சிறு பிள்ளைத்தனம் போகலே பாருங்களேன்’ என்றாள் அம்மா.

அந்தத் திடீர்ச் சந்திப்பு பற்றி இப்போது எண்ணிய ஆசிரியர் மனம் ஆரவாரமாக ஆமோதித்தது. ‘ஆமாம். செல்வாவுக்கு இன்னம் விளையாட்டுப்புத்தி போகவில்லை. வயசாகி என்ன பிரயோசனம்!’ என்று.

‘உம். இருந்தாலும் புள்ளெ நல்ல புள்ளே. குதிப்பும் கூத்தும் குஷியும் குழந்தைத்தனமும் ஜாஸ்தி. அதனாலே என்ன!’ என்று பரிந்து பேசியது ஒரு எண்ணம்.

‘வருங்காலத்திலே இவள் நட்சத்திரமாக ஜொலிப்பாள். ஆனால் வால் நட்சத்திரமாகத்தான் விளங்குவாள்!’ என நினைத்த பரமசிவம் செல்வாவின் பேட்டியை மறுபடியும் ரசித்து அனுபவிக்கத் தொடங்கினார். அவர் பத்திரிகையில் அவர் எழுதியது தான்-

‘ஸார், இது நான் வந்து உங்களைக் கண்ட பேட்டியுமல்ல. நீங்கள் தேடி வந்து என்னைச் சந்தித்த பேட்டியுமல்ல. அதனாலே முட்டிக்கொண்ட பேட்டி என்றோ, முட்டிக்கொண்டு பேட்டி கண்ட குட்டி எனவோ தலைப்பு கொடுங்கள் ஸார்!’ என்றாள் குமாரி செல்வா.

‘வந்தனம். எனது எழுத்து விஷயத்தில் தலையிட்டு ஆலோசனைகள் கூற யாருக்கும் உரிமை கிடையாது’ என்றேன். ‘உங்கள் மனைவிக்குக் கூடவா?’ என்று குறும்பாகக் கேட்டாள் குயிலி.

‘எனக்கு மனைவி யிருந்தாலல்லவா அவள் உரிமையைப் பறிப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்!’

“அப்போ நான் உங்கள் காரியதரிசி வேலைக்கு மனுச் செய்யட்டுமா, ஸார்?’ என்று கேட்டுச் சிரித்தாள் அக் கொஞ்சும் குரலி.

‘ஏன்! அப்படியே மனைவி அந்தஸ்துக்குப் புரமோஷன் பெற்றுவிடலாம் என்ற சூழ்ச்சியோ?’ என்று கேட்கும் துடிப்பு பிறந்தது என் உள்ளத்தில். ஆனால் துணிவுதான் பிறக்கவில்லை. அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

சிரிக்கும் ஒளிர்மிகு கண்களை, சிரிப்பு நீந்திய செவ்விதழ்களை, சிரித்த பங்கயமன்ன அம் முகத்தையே நான் கவனித்திருந்ததைக் கண்ட குமாரி அருவிச் சிரிப்பு சிந்தி விட்டு ஓடினாள். மறைந்தாள்.

சில நிமிஷங்கள் ஓடின. கலீன் கலீனெனச் சலங்கைகள் கட்டியம் கூற, களுக் கிளுக்கென்று இனிய சிரிப்பு கவிதையொலி சிந்த அழகுக் கனவு போல் அசைந்தாடி, நெளிந்து வளைந்து வந்தாள் குமாரி. இப்போது அந்த ஆடும் மயில் பாவாடை தாவணியுடன் காட்சி தரவில்லை. பைஜாமா அணிந்து, மேலே தொள தொளத்த நீண்ட அங்கி தரித்து, தோளிலே நீண்ட துணி ஒன்றை அலட்சியமாகப் போட்டிருந்தாள். கழுத்தசைத்துக் கர்வ நடை பயிலும் மணிப்புறா போலே வந்த குமாரி ‘குகுகூ குகூ!’ என்று கொஞ்சுகிற சிரிப்பும் கள்ளப் பார்வையும் சிந்தி நாற்காலிக் கை மீது ஒய்யாரமாக அமர்ந்தாள்.

நானிருந்த நாற்காலி மேல் அல்ல. தனியாகக் கிடந்த நாற்காலியின் கையிலேதான்! ‘பலே கைகாரியாகத்தான் தோன்றுகிறாள் குமாரி! என்று நினைத்தேன். இதைத் தொடர்ந்தது பல ‘டர்னிங் ஸீன்’கள், ஒளி அணைந்து பேரொளி பூப்பதில்லை. மற்றப்படி அந்த அறை அற்புத நாடக மேடையாகத்தான் காட்சியளித்தது. அவள் உள்ளே போவாள். திரும்பி வரும் பொழுது உடை மாற்றம், அலங்கார மாற்றங்களுடன் திகழ்ந்து அழகு மலராக விளங்குவாள்.

இதெல்லாம் எனது திறமையை உங்களுக்குக் காட்டுவதற்காகத்தான். எனக்கு ஆடத் தெரியும், பாடத் தெரியும், நடிக்கத் தெரியும் என்று சொன்னால் போதுமா! நிரூபிக்க வேண்டாமா? அதற்காகத்தான்’ என்று சொல்லிச் சிரித்தாள் எழிலி.

அவள் தாய் சும்மா வேடிக்கை பார்த்து நின்றாள்.

‘செல்வா செல்லமாக வளர்ந்த செல்வம். சினிமா நட்சத்திரமாக வேண்டுமென்ற ஆசை அவளுக்கு ரொம்ப அதிகம். அவ அப்பா இருந்தால் அருமை மகள் நடிக்கவேண்டும் என்பதற்காகவே படம் பிடிக்கத் தொடங்கியிருப்பார். இரண்டு வருஷங்களுக்கு முன்னாலேதான் இறந்துபோனார். என்ன செய்றது!’ என்றாள் அவள்.

பேச்சை சுலபமாக வேறு திக்கிலே திருப்பி விட்டாள் மகள். ‘நான் பல இடங்களில் நாட்டியமாடிப் புகழ் பெற்றிருக்கிறேன், ஸார்! என்றாள்.

‘நீங்கள் ஆடக்கூட வேண்டாம். உங்களைப் பார்த்ததுமே புகழத் தயாராகிவிடுவார்கள் எல்லோரும்!’ என்று கூறினேன் சிரிப்பையும் கலந்துதான்.

‘என்னை எவ்வளவோ போட்டோக்கள் எடுத்திருக்கிறேன். விதவிதமான போஸ்களில். எல்லாம் எதுக்கு? சினிமாவிலே நான் ஜோராக இருப்பேனா என்று பார்த்துக்கொள்ளத்தான். எல்லாப் படங்களையும் காட்டட்டுமா ஸார்?’ என்று துள்ளி எழுந்தாள் அவள்.

‘உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே, உங்கள் படங்கள் ஜோராக யிருக்கும். உங்கள் நடிப்பு அற்புதமாக யிருக்கும். நீங்கள் நட்சத்திரமானதும் ரொம்பப் பிரமாதமாக யிருப்பீர்கள்!’

‘அதுதானே ஸார். புகழ்பெற்ற நட்சத்திரங்களை மட்டுமே பேட்டி கண்டு போடுவதிலே அர்த்தமே கிடையாது. புகழ் பெறப் போகிற நட்சத்திரத்தைத் தேடிப் பிடித்து, அபிப்பிராயம் பெற்றுப் பிரசுரிக்க வேண்டும். என்ன, நான் சொல்றது?’ என்று கேட்டாள் குமாரி. அப்போது அவள் சித்தரித்த பாவங்கள் ரொம்பப் பிரமாதம்.

‘ஸார், என் பெயர் செல்வா. குமாரி செல்வா. எனக்கு வயது பதினெட்டு. நான் இன்டர் படிக்க ஆரம்பித்து, அப்புறம் வேண்டாமென்று விட்டுவிட்டேன். ஸ்கூல் டிராமாக்களில் அடிக்கடி ஆக்ட் பண்ணியிருக்கிறேன். டான்ஸ் தெரியும். பாட்டு கொஞ்சம் கொஞ்சம் வரும். பிளேபாக் ஸிஸ்டம் மிகுந்துவிட்ட இக்காலத்திலே ஸ்டார்களுக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே கிடையாது, இல்லையா ஸார்?’

‘நீங்கள் சொல்வது ரொம்ப நியாயமானதே என்றேன்.’

‘சினிமாக் கலை வளரவேணுமானால் என்னைப் போன்ற நட்சத்திரங்களைத் தேடிப் பிடித்துப் போட வேண்டும். ராணிகுமாரியும், சந்திரமதியும், ரோஜாம்பாவும், அவளும் இவளும் நடிக்கிறதைவிட நான் பிரமாதமாக நடிக்க முடியும். உங்கள் வால் நக்ஷத்திரம் பத்திரிகையில் இந்த நட்சத்திரங்களை நீங்கள் பேட்டி கண்டு எழுதிய கதையை நான் மிகவும் ரசித்தேன். எல்லாரும் ரொம்பப் பாராட்டுறாங்க ஸார். அதனாலேதான் நானே வந்து உங்களைப் பேட்டி காண நினைத்தேன். எதிர்பாராதவிதமாகப் பேட்டியே பேட்டிக்கு ஏற்பாடு செய்துகொண்டுவிட்டது. எப்படி ஸார்! இந்தப் பிரயோகம் நயமாக யில்லே? பேட்டியே பேட்டிக்கு வகை செய்தது….. ஹஹஹா, ஹிஹிஹி!”

ஒரு டஜன் பேர்வழிகள் ஒரே சமயத்தில் ஜலதரங்கம் வாசித்து, சட்டென நிறுத்திவிட்டது போலிருந்தது அவள் பேச்சை நிறுத்தியதும்! இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?’ என்று கேட்டு வைத்தேன்.

‘செத்துக்கொண்டிருக்கிற பட உலகம் உருப்பட வேண்டுமானால் என்னை மாதிரி வருங்கால நட்சத்திரங்கள் ஒரு டஜன் பேர் உடனடிப் படையெடுப்பு நடத்த வேண்டும். எனது பிரண்ட்ஸ் சில பேரு இருக்கிறாங்க- அனுராதா, சியாமளா, ஜோதி, ஜவந்தி, முத்தம்மா, கௌஸல்யா. இன்னும் நாலஞ்சு பேரு சேருவாங்க. ஸார், நீங்ககூட நடிக்கலாம் ஸார். அருமையான ஸோஷல் பிக்சர் ஒன்று தயாரிக்க ஏற்பாடு செய்யுங்கள். அழியாப் புகழ்பெறும் அற்புதத் தயாரிப்பாக இருக்கும் நம்ம நட்சத்திர சித்திரம், இல்லையா ஸார்?’

‘பின்னே! நாமெல்லாம் நடிக்கத் துணிந்து விட்டால் அப்புறம் படம் படமாகவா இருக்கும்!’ என்றேன்.

‘பப்படமாத் தானிருக்கும் என்கிறீர்களோ!’ என்று கூறிக் கனைத்தாள் அவள்.

‘சேச்சே, அப்படிச் சொல்வேனா!’ என்று குறிப்பிட்டேன். இதைத் தொடர்ந்து குமாரியைச் சந்திக்க நேர்ந்த விதம் அவளது குணங்கள்,தோற்றம் பற்றி யெல்லாம் எழுதியிருந்தார்.

‘குமாரி செல்வா புதுமையிற் புதுமை, தீவிரத்தின் பிம்பம். துணிச்சலின் உயிர்ப்பு. அவளை முதல்முறை காண்கிறவர்கள் என்னடா இவள் இப்படி நடந்து கொள்கிறாளே என்று எண்ணாமலிருக்க முடியாது’ என்று எழுதிப் பேட்டியை முடித்திருந்தார் பரமசிவம்.

பேட்டியைப் பத்தாவது முறையாகப் படித்து முடித்த ஆசிரியர் பரமசிவம் ‘முதல் முறை மட்டுமென்ன! மூன்றாவது முறையிலும், முப்பதாவது முறையாகப் பார்க்கும் பொழுதுகூட இப்படித்தான் எண்ண வேண்டியிருக்கும். இந்தப் பெண் என்ன இந்த விதமாகவெல்லாம் நடந்துகொள்கிறாள் என்றுதான்!’ எனத் தானாகவே புலம்பிக் கொண்டார்.

மேலோட்டமான நவயுகக் கல்வியின் கோளாறு புகுத்திய குணக்கேடுதான். நிறைகுடப் பண்பாடு பெறாமல் அரைக்குடத் தன்மையைத்தான் பள்ளிப்படிப்பு பல பேருக்குக் கற்றுக் கொடுக்கிறது. போலித் துணிச்சல், பெண்மைத் துறவு, ஆண்மை வேஷம், அடக்கமின்மை போன்ற பல குணக்குறைவுகள், இவற்றுடன் இளமைத் துடிப்பும் கூடுகிற போது கூத்தடிப்பையே காணமுடிகிறது. அல்லது இவ்விதமும் கணிக்கலாம். ‘அமெரிக்கத்தனம்’ என்றுதான். வெகுகாலம் கட்டுண்டு கிடந்த பெண்கள் விடுதலை பெற்று, உரிமை வேட்கையுடன் செயல் புரியத் தொடங்கும்பொழுது உற்சாக மிகுதியிலே பொறுப்பற்ற பிரகிருதிகளாய், கடமை சூழ்நிலை கலாசாரம் முதலியவற்றை மறந்த ஜந்துக்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் நாகரிக உயர்வு எனக் கருதுவது உண்மையில் அடங்காப் பிடாரித்தனமாகவே விளங்குகிறது- இப்படி ஓடியது அவர் சிந்தனை.

அமெரிக்கப் படங்கள், அமெரிக்கப் பத்திரிகைகள், அமெரிக்காவின் மலிவுப் புத்தகங்கள் முதலியவற்றையே மிகுதியும் ரசித்து மகிழும் குமாரி செல்வாவின் பண்பிலே கிழக்கும் மேற்கும் கலந்த அவியற் கலாசாரத்தைக் காண முடிவதில் வியப்பில்லை என்று முடிவு கட்டினார் அவர்.

‘இருக்கட்டுமே! அதனால் ஒன்றும் முழுகிவிடவில்லை. குமாரி செல்வா அழகி. விளையாட்டுப் பருவம். ஜாலியாக வாழும் ஆசை அவள் உள்ளத்தில் நிறைந்திருக்கிறது, களங்கமில்லை. கவலையில்லை. கூத்தடிக்கும் சிறுபிள்ளைத்தனம். வாழ்க்கையை விளையாட்டாகவே மதித்து நாளோட்டுவதினால் எவ்வித நஷ்டமும் வந்து விடப் போவதில்லையே! என்று பேசியது மனம்.

மனக்குறளியின் மற்றொரு பண்பு குரல் கொடுத்தது. ‘இப்படி எங்கும் எல்லோரிடமும் தாராளமாகப் பழகினால் என்னாவது? அவள் கெட்டுப்போக நேரிடும். சந்தர்ப்பமும் சமுதாய நிலையும் துணையற்ற பெண்ணை – அதிலும் தாராளமாகப் பழகுகிற குமாரியை -புனிதையாய் வாழவிடாது. அவள் பண்பாடே அவளுக்குத் தீங்கு பயக்கும் கருவியாகி விடும்.

‘உம். கெடவேணும் என்றிருந்தால் எந்தப் பண்பாட்டினரும் கெட்டு நாசமாகத்தான் போவார்கள். படியாத பெண்களும், பிரைமரியை மட்டுமே தாண்டிய அச்சம்-மடம்-பயிர்ப்பு – நாணத்தனக் குமரிகளும் கறை படிந்த மலர்களாகி விடவில்லையா? சினிமாவைப் பார்த்துவிட்டு, சினிமாச் சிங்காரிகளின் பகட்டான வாழ்வை யறிந்து, தாங்களும் அவ்வித மத்தாப்பூ சுந்தரிகளாக மாறிப் பலரையும் தம் அழகு வெளிச்சத்தினால் கிரங்கடிக்க வேணும் என்ற ஆசை கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளுகிற பாவையரின் எண்ணிக்கைதான் குறைவா என்ன! வளர்ந்துவரும் நாகரிகம் நன்மைகளுடன் பல நாசங்களையும் தூவி வருகிறது என்று பேசியது அவர் மனம்.

‘அவளது குறைகள் நிறைவுகள் எவையே யாயினும் சரி; குமாரி செல்வா ரொம்ப நல்ல பெண்’ என்று ஸர்டிபிகேட் கொடுத்தார் அவர்.

‘ஆமா. அதிலே சந்தேகமே கிடையாது. அவள் மனுச் செய்துகொண்டால், அவளையே எனது காரியதரிசியாக ஏற்றுக் கொள்வேன்’ என்று எண்ணிச் சிரித்தது அவர் உள்ளம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *