குமாரி செல்வா – வல்லிக்கண்ணன்

3


ஆசிரியர் பரமசிவத்திற்கு ஆசை இருந்தது, கோலக் குமாரி செல்வாவைக் காரியதரிசி ஆக்கிக்கொள்ளலாமென்று.

அவரது ஆசைக்குத்தான் அளவிருந்ததா என்ன! ‘வால் நட்சத்திரம்’ பத்திரிகையை பிரமாத அற்புதமாக நடத்த வேண்டும்; காரியாலயம் தனி உலகமாக மிளிர வேண்டும்; அழகு மிகுந்த குட்டிகளையே ‘ஆபீஸ் பையி’களாகவும், குமாஸ்தா, டைப்பிஸ்ட், உதவி ஆசிரியர்களாகவும் நியமிக்கவேண்டும் என்றெல்லாம் அவாவினார்.

ஆனால் அவரது பத்திரிகை ஐந்தாவது இதழுடனேயே அஸ்தமித்துவிட்டது. இந்தத் தமிழ்நாட்டை நம்பிப் பத்திரிகை போடுவதைவிட, ‘கோவிந்தா கோவிந்து’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு தீர்த்த யாத்திரை போகலாம் என எண்ணிய பரமசிவம் விண்தொட முயலும் நீள்முடி இமயத்தை லட்சியமாகக் கொண்டு கம்பி நீட்டிய கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.

தன்னுடைய லட்சியம் இப்படித் திடீரென்று மிக உயர்ந்துவிட்ட காரணத்தினால் ‘வால்’ பரமசிவம் குமாரிகளையும் குட்டிகளையும் பற்றிக் கவலைப்படுவதையே விட்டுவிட்டார். திடீரெனத் தோன்றிமறையும் உண்மையான வால் வெள்ளியின் பண்பே ‘வால் நட்சத்திரம்’ பத்திரிகைக்கும் வாய்த்தது என்பதை உணர்ந்த குமாரி செல்வாவும் அப்புறம் ஆசிரியரைப் பற்றி கவலைப்படவில்லை.

புகழ்ப்பசி மிகுந்த அவளுக்கு ‘சரி. ஏதோ கொஞ்சம் புகழுக்கு வழி கிடைத்தது. கிடைத்தவரை லாபம் தானே!’ என்று தோன்றியது. நடந்ததைப் பற்றி எண்ணுவதில்லை அவள். நடப்பதைக் குறித்து மனதை அலட்டிக்கொள்ளும் வழக்கமும் அவளிடமும் கிடையாது.இனி நடக்கப்போவதை நினைத்து ஏங்குவது மில்லை. எதெது எப்படி எப்படி நடக்குமோ அப்படி நடந்துவிட்டுப் போகட்டுமே என்ற அலட்சியம் அவளுக்கு. உணவு, உடை, உற்சாகம், உல்லாசப் பொழுது போக்குகள், இஷ்டம்போல் தின்று கொண்டிருக்க ஐஸ்க்ரீம் – இவை தட்டுத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கிற வரை அவள் ராணிபோல் வாழ முடியாதா என்ன!

‘அவளை ராணிபோல் வாழவைக்க முடியும்; அதற்கு என்னாலானதைச் செய்வேன்’ என்று சொல்லி முன்வந்தான் ராஜா. அவன் ஒரு செல்லப்பிள்ளை.

செல்வம் அவனிடம் சதிராடிக் கொண்டிருந்தது. கார் இருந்தது. பகட்டும் குணமிருந்தது. பணத்தைத் தண்ணீர் போல் பாவிக்கும் மனமிருந்தது. அவனை நாடி நண்பர்கள் கூடாமல் போவார்களா?

ராஜா காலேஜில் ‘கல்யாணப் படிப்பு படித்தானே தவிர, கல்வி பெறவேண்டும் என்றோ, பெருமைக்குப் பட்டம் பெறவேணும் என்றோ ஆசை கொண்டவனல்ல. பொழுது போகாத வேளையில் பள்ளிக்கூடம் போவதும், பள்ளிக்கூடத்திலே தங்கியிருக்க ‘மூடு இல்லாதபோது ஜாலியாக ஊர் சுற்றுவதுமாக வாழ்ந்த அவன் பார்வையில் அழகி செல்வா படாமல் தப்ப முடியுமா? அதிலும் அவள் ரொம்ப ‘பிரீயாகப் பழகும் பண்பினள்’ என உணர்ந்தபின் அவன்தான் சும்மா இருக்க இயலுமா!

ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்தின் விசேஷ விழாவில் கலந்து சிறப்பித்த குமாரி செல்வா அந்தக் கலையழகு குலையாமல் மெதுநடை நடந்து கொண்டிருந்தாள் வீடு நோக்கி. நிலந்தடவும் நீண்ட பாவாடை அலையலையாய் சுருண்டு பளபளத்து அசைய, மேலே கிடந்த பகட்டான தாவணி கவனத்தை இழுக்க,பூ முடித்த கூந்தல் தனியெழிலுடன் மிளிர, பவுடர்- கண்மை- லிப்ஸ்டிக் முதலிய ‘மேக்அப் பூச்சுகள் பளிச்சிட ஆடி அசைந்து சென்ற செல்வா ரோட்டில் செல்லும் அனைவரது பார்வையையும் இழுக்கும் வனப்புச் சுடராக விளங்கினாள்.

பின்னால் காரில் வந்த ராஜாவின் மனதை அலைக்களித்தது அசைந்து சென்ற குமாரியின் சிங்காரத் தோற்றம். வேகமாக முன் சென்றுவிட்ட காரிலிருந்து திரும்பிப் பார்த்த ராஜாவின் பார்வையைக் குமாரியின் முழுநிலவு முகமும், காந்தக் கண்களும் வசீகரித்தன. ஆகவே காரை நிறுத்தினான்.

பொங்கிவரும் அலைபோல் கம்பீர்யமாக நடந்த அழகி அருகே வந்ததும் ‘வீட்டுக்குத்தானே? காரில் ஏறிக் கொள்ளுங்களேன்!’ என்று உபசரித்தான் ராஜா.

வெட்டும் பார்வை. கொல்லும் ஒரு புன்சிரிப்பு, குளிர்ந்த குரலில் ‘எதுக்கு வீண் சிரமம்!’ என்ற பதில். இவற்றை ஏக்காலத்தில் அளித்த குமாரி சிறிது முன் அசைந்தாள். எல்லாம் அவனை அடிமை கொள்ளும் சக்திகளாய் இலங்கின.

‘சிரமம் ஒன்றுமில்லை, மிஸ் செல்வா. சும்மா காரில் ஏறிக் கொள்ளுங்கள்’ என்று குழைந்தான் அவன். அவளும் அதிகமாக பிகு செய்யவில்லை.

அவள் காரினுள் அடைக்கலமானதனால் காரே அற்புத அழகு பெற்றுவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ‘நாம் இதுபோல் சொந்தக் காரில் என்று தான் போகமுடியுமோ? ஒரு அழகான கார் அவசியம் தேவைதான்’ என்று நினைத்தாள் அவள். இன்று உங்களுடைய நடனம் ரொம்பப்பிரமாதம். உங்கள் கலை நிகழ்ச்சியை விசேஷமாக இன்றையப் புரோகிராமில் சேர்த்தது நல்லதாயிற்று!’ என்றான் ராஜா.

‘வந்தனம்’ என முனங்கினாள் குமாரி.

‘நீங்கள் ஏன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்? நீங்கள் வராமல் போன நாளிலிருந்து கல்லூரியில் அற்புதக் காந்த அழகு மிகவும் குறைந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது. மகத்தான நஷ்டம்தான்’ என்று குரலிலே இனிமையைத் தேக்கி அறிவித்தான் அவன்.

‘அதனாலென்ன. காந்த வனப்பும் கலை ஒளியும் குறுகிய எல்லையினுள் ஒடுங்கிக் கிடக்கலாமா? அது தான் மகத்தான நஷ்டம். கல்லூரிக்கு ஏற்பட்ட நஷ்டம் கலை உலகிற்கும் நாட்டின் அழகு ரசிகர்களுக்கும் நல்ல லாபமாக மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது’ என்று கூறிக் கலகலச் சிரிப்பு சிந்தினாள் செல்வா.

‘அப்படியா! ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்!’ என்று பாராட்டி மகிழ்ந்தான் மைனர். ‘அந்நாள் எந்நாளோ என்று ஏங்கிக் கிடப்பார்கள் என்னைப் போன்ற அழகுப்பித்தர்கள், கலை ரசிகர்கள் எல்லோரும்!’

‘என்ன சொல்கிறீர்கள், மிஸ்டர் ராஜ்? உங்களுடைய அபிப்பிராயத்தைத்தான் கேட்கிறேன். அழகும் திறமையும் எங்கும் ஒளிவீச சினிமா துணபுரியும் என்பது சரிதான். ஆனால் அதைவிட நேரடியாக மேடைமீது தோன்றிக் கலை விருந்து அளிப்பது தானே நல்லது?’ என்று கேட்டாள் குயிலி.

‘சந்தேகமில்லாமல்! வனப்பின் வளைவான வானவில்லை ஓவியத்திலே பார்ப்பதும் இனிமையாகத் தானிருக்கிறது. ஆனால் வண்ணங்கள் பூத்த அழகுவில்லை வானத்திலே கண்ணாறக் காண்பதில்தானே அற்புத மகிழ்ச்சி உண்டாகிறது!’ என்று அளந்தான் அவன்.

‘அப்படின்னா நான் சினிமாவில் நடிப்பது நல்லதல்ல என்று சொல்கிறீர்களாக்கும்?’ என்று குரலை இழையவிட்டு, இதழ்க்கடையில் குறுநகை செலுத்தி, எழிலாய் முகம் திருப்பி, சுழலும் பார்வையை அவன் மீது நிறுத்தினாள் அவள்.

அப்பொழுது கார் ஒரு வீதியின் திருப்பத்திலே நெளிந்து நீந்தியதனால் ஓரத்திலிருந்த தெருவிளக்கின் மின்னொளி குறிப்பாக அவள் முகத்தில் பாய்ச்சிய ஒளி வீச்சு போல் பரவி அவள் நிலையை நன்கு வெளிச்சமிட்டது. பையன் சொக்கிப் போனான் அவள் பேரழகிலே! கிரங்கிக் கிறுகிறுத்தான் குமாரியின் கண் வீச்சிலே! அவன் உள்ள நெகிழ்வை உணர்ந்து வெற்றிச் சிரிப்பு சிரித்தாள் அவள். அவ்வளவுதான்! அவனைத் தீர்த்துக்கட்டி விட்டது அந்தச் சிரிப்பு. இனி அவன் அவள் அடிமைதான்.

அவன் பரபரப்புடன் சொன்னான்: ‘இல்லை, செல்வா. நீங்கள் சினிமா நட்சத்திரம் ஆகவேண்டும். அதே போல் நடனக் கலையுலகில் தனியொளிச் சந்திரனாகத் திகழவேண்டும்.’

‘அது தானே கேட்டேன்!’ என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.

வீடு வந்து சேர்ந்ததும் காரிலிருந்து குதித்திறங்கிய குமாரி ‘ரொம்ப தேங்ஸ். இன்னொரு நாள் ஈவ்னிங்லே வாங்க, மிஸ்டர் ராஜ், காபி டிபன் எல்லாம் சாப்பிட்டு விட்டுப் பேசலாம்’ என்று சொன்னாள்.

‘ஓ! என்று மகிழ்வுக்குரல் கொடுத்த ராஜா உற்சாகமாகச் சொன்னான் ‘உங்களுக்கு ஆட்சேபணையில்லை யென்றால், ஏதாவது சினிமா பார்க்கப் போகலாம்’ என்று.

‘ஓ யெஸ். செய்தால் போச்சு!’ எனக்கூறிக் களுக்குச் சிரிப்பு சிந்திவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டே வீட்டினுள் சென்றாள் அவள். அவள் போகும் அழகையே கவனித்து மயங்கியிருந்த ராஜா பெருமூச்செறிந்துவிட்டு காரை ஓட்டிச் சென்றான்.

குமாரி சொல்லிய ‘இன்னொரு நாள் ஈவ்னிங்கை காலவறையரை யில்லாமல் ஒத்திபோட விரும்பாத ராஜா மறுநாள் மாலை மூன்றரை மணிக்கே வந்து சேர்ந்துவிட்டான்.’ செல்வாவும் அவள் தாயும் மகிழ்வுடன் வரவேற்றனர்.

தாய் சங்கரபுஷ்பம் அடுப்பங்கறையில் தங்கியிருந்தபோது, செல்வா ராஜாவுக்குத் தனது ஆடை அணி அலங்காரப் பொருள்களை யெல்லாம் காட்டினாள்.

‘ஒரு டான்ஸ் குரூப் ஆரம்பிக்கணும். அதற்காகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் சேகரித்து வருகிறோம்!’ என்றாள் அவள்.

‘நல்ல ஏற்பாடு’ என்றான் அவன்.

சினிமாவிலே நல்ல சான்ஸ் கிடைத்தால்தான் நடிப்பது. அதிலும் அவர்களாகத் தேடி வந்தால்தான் ஒப்புக்கொள்வது என்று எண்ணம்.பாருங்க மிஸ்டர் ராஜ், நாமாகப் போனால் படாதிபதிகள் நம்மை மலிவாக மதித்து விடுகிறார்கள். மேடைமீது தோன்றி திறமையினாலும், விளம்பரங்கள் பத்திரிகைப் பப்ளிஸிட்டி முதலியவைகளினாலும் கவனத்தைக் கவர்ந்த பிறகு அவர்களாகத் தேடிவந்தால் நமது மதிப்பு உயர்ந்துவிடுகிறது.’

‘மதிப்பை நிர்ணயிக்கத் தெரியாத மடையர்கள்! அவர்கள் கெட்டார்கள்!’ என்று அழுத்தமாக அறிவித்தான் அவன்.

‘அவர்கள் தயவு நமக்கு வேண்டியிருக்கிறதே! நமது திறமை எங்கும் பரவவும், நமது புகழை அதிகமாக்கவும்….’

‘கவலைப்படாதே செல்வா! நாமே ஒரு படக் கம்பெனி ஆரம்பித்து விடலாம். முதலில் ஒரு நாட்டிய சிங்காரியின் கதையைப் படம் பிடிப்போம். அதில் உங்கள் திறமையையும் அழகையும் எவ்வளவு தூரம் சோபிக்கச் செய்யலாமோ அவ்வளவுகுப் பிரமாதப்படுத்தி விடலாம்’ என்றான்.

வியப்பால் விரிந்தன அவள் கண்கள். மகிழ்வு பூத்தது அவள் முகத்தில். உள்ளத்திலே உற்சாகம் குமிழிட்டுக் கொப்புளித்தது. ஆனந்தமாகவே மாறிவிட்டாள் குமாரி சிட்டுக்குருவி போல் தத்திக் குதித்தாள். மணிப்புறா போல் துள்ளி வட்டமிட்டுக் குதூகலத்தினால் கூவினாள். ‘அஹஹா ஹொஹ்ஹோ!’ என்று கலகலத்தாள். ‘ராஜா என் ராஜா!’ என்று பாடி ஆடி அமர்க்களப்படுத்தி அவன் அருகில் வந்து கன்னத்தில் அன்பாக வருடினாள் வளைகள் கலகலத்த மணிக் கரத்தினாலே.

ராஜா இந்த உலகத்திலிருப்பதாகவே நம்பவில்லை. விண்ணிலே பறப்பது போல, ஆனந்தச் சிறகுகள் பெற்று அற்புதலோகம் எங்கோ சுழன்று நிற்பதாகத் தோன்றியது அவனுக்கு. எதிரே அழகின் உயிர்ப்பாய் ஆடிய குமாரி கவிதையின் சிரிப்புபோல் காட்சிதந்தாள். இளமையின் பூர்ணமான அவள் கலையின் அலை நுரையாய், மலர்க்கூட்டத்தின் ஒளிக்கொடியாய், அற்புதமாய் இசையாய் நயமாய் வாழ்வாய், வாழ்வின் சிறப்பாக எப்படி எப்படி யெல்லாமாகவோ-தோன்றினாள். ‘இந்த இன்பம் நிலைத்திருப்பதற்காக, இவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பணம் வேணுமாயினும் வாரி இறைக்கலாம் என்று கிசுகிசுத்தது அவன் மனம்.

கன்னம் தொட்ட மணிக்கரத்தைத் தன் கைநீட்டித் தொட முயன்ற வேலையிலே பிடியினில் அகப்படாக் கனவின் எழில்போல் விலகி ஓடினாள் குமாரி. தூர நின்று கிண்கிணிச் சிரிப்பு ஆர்த்துக் குதித்தாள்.

‘ஏது ஆனந்தம் ஆளையே தூக்கிக்கொண்டு போகுதே! ஏனம்மா இந்தச் சிரிப்பாணியும் குதிப்பும்?’ என்று கேட்டபடி வந்தாள் தாய், டிபன் காபி முதலியன சுமந்து.

மகள் விஷயத்தைச் சொல்லவும் அவள் உள்ளத்திலும் ஆனந்தம் நிறைந்தது. ‘செய்யக்கூடியவன்தான். செல்வம் நிறைய இருக்கு. செய்யலாம். அவன் பேச்சு தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது செல்வாவின் பொறுப்பு’ என்று நினைத்தாள் சங்கர புஷ்பம்.

செல்வா தன் பொறுப்பை நன்கு உணர்ந்திருந்தாள். அது மட்டுமல்ல. முன்னேறுவதற்குக் கையாள வேண்டிய கலை நயங்களையும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாள். அவள் திறமைகளில் அந்தப் பண்பும் இயல்பாகக் கலந்திருந்தது.

ஆகவே குமாரி செல்வா ‘பணக்காரன் மகன் பணக்காரன்’ என்ற அந்தஸ்திலே வாழ்ந்து அதை வெளிச்சம்போட்டுத் திரிய விரும்பிய செல்லப்பிள்ளை ராஜாவின் காரில் அடிக்கடி காணப்பட்டாள். சினிமாத் தியேட்டர்களில், ஹோட்டல்களில், கடலோரத்திலே, தன் வீட்டு மாடியிலே எல்லாம் ராஜாவின் இணை பிரியாத ஜோடி போல் திகழ்ந்தாள் அவள்.

ராஜா உண்மையிலேயே கிடைத்தற்கரிய ராணியைப் பெற்றுவிட்ட ராஜா என்றே நம்பினான். செல்வா கணந்தோறும் வியப்புகள் காட்டும் கலை எழில். காணக் காண நயம் குறையா அமுத நிறைவு. பழகப் பழகப் புதுமை குன்றாத இளமை இன்பம். அன்புடன் பேசி உறவாடி மகிழ மகிழ ஆசையை அடங்கவிடாமல் தூண்டும் அழகுக் காந்தம். அவள் கண் சுழற்சியில், இதழின் சுழிவில், இன்பச் சிரிப்பில், மேனி நயத்தில், இளமை விருந்தில், கலை விளையாட்டில் அவன் தன்னையே பறிகொடுத்து விட்டான்.

‘நீ ஆட வேண்டியதில்லை. ராஜாவின் ராணியாகவே என்றும் இருந்துவிடு, செல்வா. நீ விரும்பிய சொந்தக் கார் உனக்குக் கிடைத்துவிட்டது. சுகவாழ்வுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் உனக்கு உள்ளன. நீ ஏன் ஆடிப் பிழைக்க விரும்புகிறாய்?’ என்று கேட்டான் ஒருநாள்.

அவள் சிரித்தாள். அலட்சியம் தொனித்தது அதில் அகங்காரம் மிதந்தது அதிலே. எள்ளிடும் தன்மை நிறைந்திருந்தது. என்னவோ சூடாகச் சொல்ல வாயெடுத்தாள். பின் தன்னையே அடக்கிக் கொண்டாள் தன் நலனை எண்ணி. துவண்ட கொடியென நெளிந்து அவன் மீது சாய்ந்து அவன் அருகிலே அமர்ந்து கழுத்தில் கைவளைத்து இனியகுரலில் ரகசியம் பேசினாள்.

‘ராஜா, நமது திட்டம் என்ன? நாம் இவ்வளவு செலவு செய்தது எல்லாம் வீணாகத்தானா? படப்பிடிப்பு வேண்டுமானால் காத்துக்கிடக்கட்டும். நாட்டிய கோஷ்டியைத் தீவிரமாக நடத்தி எங்கும் சுற்றிக் கலைநயம் காட்ட வேண்டியது முக்கியம்’ என்றாள். தன் பேச்சுக்கு அதிக வலு கொடுப்பதற்காக அன்பனின் கன்னங்களில் இரண்டும் இதழ்களில் ஒன்றும் சுடச்சுடப் பொறித்தாள். தனது இதழ்களின் இன்ப முத்திரையைத்தான்!

அப்புறம் அவனுக்குத் திறமை ஏது, துணிவு ஏது அவள் திட்டத்திற்கு எதிராகப் பேசுவதற்கு!

குமாரி செல்வா சுக வாழ்வை மட்டுமே விரும்பவில்லை. பணம், பவிஷ, படாடோபம், செல்வச் சௌகரியங்கள் மட்டும் போதா வாழ்க்கை சிறப்புறுவதற்கு. வாழ்க்கைக்கு இவையும் தேவைதான்; எனினும் இவற்றையெல்லாம் விட அதிகமாகத் தேவை புகழ். அது அவசியத்தேவை- இதுவே அவள் இதய ஒலி.

புகழ் வேண்டும். அதிகமாகப் புகழ்பெறவேணும். மேலும் புகழ்…. மேலும் மேலும் புகழ்….மேலே மேலே மேலே – புகழ் வளர்ந்துகொண்டே போகவேண்டும் எல்லையில்லாமலே. அவளது ஆசை அது. அவளுக்கு அடங்காத-அடக்க முடியாத-பசி அது.

பசி எந்த ரகத்ததாக யிருந்தாலும் சரி-மிகுந்து விடுகிறபோது, அதைத் தணிக்கவேண்டும் என்ற ஆசை வளர்கிறபோது, பசியே தணியாத ஆசையாகிப் பின் வெறிநிலை அடைகிறபோது, அந்த வியாதிக்கு ஆளாகிறவர்கள் தங்கள் திருப்திக்காக எந்த வழியையும் கையாளத் துணிந்து விடுகிறார்கள். சந்தர்ப்பம் தங்கள் முன்னால் கொண்டு வந்து சேர்க்கிறவர்களைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அவர்கள் உதவி தேவையில்லாமல் போகிறபோது அல்லது, அவர்களைவிட அதிகம் துணைபுரியக் கூடியவர்கள் வந்து சேர்கிற பொழுது- முந்தியவர்களை உதறி எறியவும் தயங்குவதில்லை. ‘செய் நன்றி என்பதெல்லாம் வாழ்க்கை உயர்வுக்குக் கட்டி வராத பேச்சேயாகும் இவர்களுக்கு?’

புகழ்ப்பசி மிகுந்த குமாரி செல்வா தனது வாழ்க்கை உயர்வுக்குக் குந்தகமாக யிருப்பவர்களின் ஆலோசனைகளைக் ‘கட்டி வராதபேச்சு’ என்று ஒதுக்கிவிட்டாள். ராஜா அவளுக்கு நல்லது என்று எவ்வளவோ சொன்னான். அவன் அநாவசியமாகத் தன் விஷயங்களில் தலையிடுகிறான்’ என்று சினுங்கினாள் அவள்.

அவன் சிரித்தும், சினந்தும் உபதேசிக்கத் துணிந்த போது சீறி விழுந்தாள் குமாரி. அவளைத் தனது ஸ்ரீமதியாக மாறிவிடும் படி கோரினான் அவன். ‘எனக்குக் கல்யாணம் தேவையில்லை. கட்டுப்பாடுகளை விதிக்கும் சம்பிரதாய முறை எதுவுமே எனக்கு வேண்டாம். நான் கலை வளர்க்க வாழ்கிறவள். எனது இஷ்டம்போல் வாழும் உரிமை எனக்கு உண்டு’ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

வரவர அவன்மீது அவளுக்கு வெறுப்பு பிறந்து, கசப்பாக மாறி, விரோதமாக முற்றியது. ராஜா வீண் தொல்லை, அமைதியைக் கெடுக்கும் தொண தொணப்பன், கலை நயம் தெரியாது தன்னைக் கழுத்தறுக்க வந்த வீணன் என்று எண்ணினாள். சிடுசிடுத்தாள். எரிந்து விழுந்தாள். ஏசினாள். அவன் உறவு தேவையில்லை என்று சுட்டவும் தயங்கவில்லை.

இதற்குள் குமாரி செல்வா ‘நாட்டிய அழகி என்று பெயர் பெற்று விட்டாள். ராஜாவின் செல்வமும், துணையும், உழைப்பும் அதற்கு எவ்வளவோ உதவின. சென்றதை எண்ணிக் கொண்டிருக்கும் பண்பு பெற்றிராத செல்வா அதையெல்லாம் பெரிதுபடுத்த முடியுமா என்ன!

அவ்வேளையில் அவள் புகழை அதிகரிக்கும் திறமையும் தகுதியும் நாட்டிய நிபுணர் கலையானந்தரிடம்தான் உள்ளன என்று நிச்சயமாகத் தெரிந்தது. அவளுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வந்தவர் அவர். புதுப்புது நடனங்களைக் கற்பித்துப் பழக்கி அவள் திறமைக்கு வளர்ச்சியும் புதுப்பொலிவும் அளிக்க முயன்றவர். அவருக்கு வயது முப்பத்தைந்து தானிருக்கும். அழகர். குளுமையாகப் பேசுவார். நல்ல பெயரிருந்தது அவருக்கு.

ராஜாவின் உறவில் அலுத்துப்போன குமாரி செல்வா கலையானந்தரைத் தழுவும் பூங்கொடியானாள். அவள் போக்கைக் கண்டித்த ராஜாவை விரட்டியடித்தாள்.

‘எனக்கு எல்லாம் வேண்டியதுதான். சரியான பாடம் படித்தேன்’ என்று தன் அனுபவத்தையும் பணச்செலவையும் புத்திக் கொள்முதல் கணக்கிலே பதிவு செய்து கொண்ட ராஜா அவள் உலகிலிருந்து அஸ்தமனமாகி விட்டான். அதற்காக அவள் வருந்தவில்லை.

அவனும் ஏங்கிச் செத்துவிடவில்லை. தனது குலத்துப் பெரியோர்கள் தேர்ந்து நிச்சயித்தபடி சுபயோக சுபமுகூர்த்தத்திலே சௌபாக்கியவதி ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு நல்வாழ்வு வாழத் தொடங்கினான்.

‘நாட்டிய அழகி’ என்று புகழ்பெற்ற குமாரி செல்வாவுக்கு சினிமாப் புகழ்பெறும் ஆசை வளர்ந்தது. அவள் அழகிலும் புகழிலும் மயங்கிய டைரக்டர் ஒருவரை அவள் முன் கொண்டுவந்து தள்ளியது சந்தர்ப்பம். அவர் அவள் ஆசையைத் தூண்டிவிட்டு தனது ஆசையைத் தணித்துக் கொண்டார்!

சில மாதங்கள் அவருடன் சுற்றியலைந்தும், சினிமாப் பார்த்ததும், ஜாலி வாழ்வு வாழ்ந்ததும் தான் கண்ட பலன். அவர் டைரக்ட் செய்வதாகயிருந்த படம் பேச்சளவிலேயே முடிந்து விட்டது.

பணம் போடத் தயாராகயிருந்தவர்கள் அந்த எண்ணத்தையே கை விட்டுவிட்டார்கள். ஆகவே ஆறேழு மாதங்களுக்குப் பிறகு செல்வாவைக் கைவிட்டு விட்டார் அவர்.

குமாரி செல்வாவுக்கு ‘உலகம் எப்படியிருக்கிறது’ என்ற உண்மை சிறிது சிறிதாகப் புரிந்தது. அதற்குள் அவள் எத்தனையோ விதமான அனுபவங்கள் பெற்று விட்டாள். ரகம்ரகமான ஏமாற்றுக்காரர்கள், பகட்டுப் பெரியார்களுட னெல்லாம் பழக நேர்ந்தது.

‘இவர்களை யெல்லாம் பார்க்கும்பொழுது, ராஜா எவ்வளவோ நல்லவர் என்று தோன்றுகிறது’ என்று எண்ணுவாள்

அவள். ‘அவர் விரும்பியபடி அவரையே கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம். அவருடன் வாழ்க்கை நடத்த இசைந்திருந்தால், அந்தஸ்தாவது இருக்கும். பலபேரை நம்பிக் கெட்டிருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது! என்று கூட நினைத்தது உண்டு. ஆனால் அபூர்வமாக எப்பவாவதுதான்!’

புகழ்ப் பசியும் சுதந்திர தாகமும் தணியமுடியாத அளவிலே இருந்ததனால், குமாரி செல்வா இஷ்டம் போல் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு நாட்டியத்தில் அகில இந்தியப்புகழ் வாங்கித் தரமுடியும் என்று உறுதி கூறி அலைந்த நடனக்கலையரசு ஒருவரை அடிக்கடி அவளுடன் காணமுடிந்தது.

வலை என்று தெரிந்த பிறகும்கூட அதன் அழகில் மயங்கி வட்டமிடும் ஈ அதில் அகப்பட்டு விடுவதும் இயல்புதானே.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *