குமாரி செல்வா – வல்லிக்கண்ணன்

4


மனித சமுதாயத்தின்மீது வெறுப்புற்று மலையுச்சியைத் தேடிப் போனாலும்கூட, அத்தனிமையில் அலுத்துப்போய் மறுபடியும் மனிதகுலத்தையே நாடி வந்த ஜாரதுஷ்ட்ரன் போல்தான் ஆசிரியர் பரமசிவமும் நடந்து கொண்டார்.

‘வால் நட்சத்திரம்’ செத்துப் போனதும் ‘தமிழ்நாடு சுத்த மோசம்’ என்று சொல்லிவிட்டு இமயத்தை நோக்கிப்போனவர் பிறகொரு நாள் திடீர் விஜயம் செய்தார். இடைக்காலத்தில் ஏழு வருஷங்கள் பறந்தோடிப் போயிருந்தன.

அக்காலத்தில் பரமசிவம் என்ன செய்தார், எப்படி வாழ்ந்தார் என்பது பரமசிவமே சொன்னால்தான் தெரியும். அவர் கீதாசார்யன் கண்ணனைப்போல ‘இந்த ரகசியங்களிலே நான் மௌனம்’ என்று சுருக்கமாக அறிவித்து விட்டார். ஆகையினாலே பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

பரமசிவம் காசியில் ஒரு சாப்பாட்டுக் கிளப்பில் செர்வர் வேலை பார்த்ததாகச் சொன்னார்கள். அவருக்குத்தெரிந்த வள்ளல் நண்பர் ஒருவருடன் உல்லாசமாக ஊர்சுற்றிவிட்டு காஷ்மீரத்தில் சுகவாசம் அனுபவித்தார் என்று பேசினார்கள். யாரோ ஒரு தெருப்பாடகியின் பின்னால் சிங்கிதட்டித் திரிந்து, அந்தப் பிழைப்பில் வந்த வரும்படியைக் கொண்டு இருவரும் வாழ்ந்ததாகச் சிலர் கயிறு திரித்தார்கள். மாஜி ‘வால்நட்சத்திரம்’ பத்திரிகையின் ஆசிரியரைப்பற்றி அடிபட்ட வதந்திகளுக்குச் சில உதாரணங்கள் இவை.

ஆசிரியர் பரமசிவம் மாறிவிடவில்லை. ஆகவே அவர் வழக்கம்போல் மற்றவர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்ந்தார்.

ஒருநாள் மத்தியானம் அவர் வழக்கம்போல் தானாக எதையோ நினைத்துக் சிரித்துக் கொண்டு ரோடு வழியாக நடந்து கொண்டிருந்தார். திடீரென்று யாரோ அவர்மீது மோதிக் கொண்டதை உணர்ந்ததும் திடுக்கிட்டு நின்றார். மேலே வந்து விழுந்தது யார் என அறிந்ததும் மேலும் திடுக்கிட்டார் அவர்.

‘அஹஹஹ்! குமாரி செல்வாதானா! சரித்திரம் திரும்பத் திரும்ப ஒலிக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது. என்ன சௌக்கியந்தானா?’ என்று விசாரித்தார்.

பாதி கடித்த மாம்பழத்தைக் கையில் பிடித்தபடி ஓடிவந்து அவர்மீது மோதிவிட்டு விலகி நின்ற குமாரி சிரித்தாள் ‘ஓ நீங்கள் தானா! நல்லதாப்போச்சு…. நல்லவேளை உங்க மேலே மாம்பழம் பட்டுவிடவில்லை! என்றுசொல்லி, பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் அவள். ஏழு வருஷங்களுக்கு முன்பு ஒருநாள் நிகழ்ந்த ‘ஐஸ்க்ரீம்’ நிகழ்ச்சி அவள் நினைவிலும் கூத்தாடியது.

ஒருவாறு சிரிப்பை சிரமப்பட்டு ஒடுக்கிவிட்டு ‘நீங்கள் மாறவேயில்லை ஸார். அன்று பார்த்தமாதிரியே யிருக்கிறீர்கள்!’ என்றாள் குமாரி.

என்றும் ஒரே நிலையாய் காட்சியளித்து வரும் தனது வதகப்புடலங்காய் போலவே திரு உருவைப் பார்த்துக்கொண்ட பரமசிவத்தின் கண்கள் எதிர்நின்ற பாவைமீது ஓடின. அவர் சிரித்தார்.

‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டாள் செல்வா.

‘இன்று அளவு டேப் இல்லாமல் போனால்கூட, நூலுக்கும் புட்ரூலுக்கும் வேலை இருக்காது. நிச்சயமாக இல்லை’ என்று கூறினார் அவர்.

அவள் புரிந்துகொள்ள முடியாமல் விழித்தாள்.

‘இன்று 31/4 அங்குலம் என்று பேட்டியில் எழுதியிருந்ததை அன்று ஆட்சேபித்து அளந்து பார்க்கச் சொன்னீர்களே. இன்று அதை நீங்கள் மறுக்க முடியாது. ஆகவே எனது எழுத்திலே தீர்க்க தரிசனமான உண்மை ஏழு வருஷங்களுக்கு முன்பு தானாகவே வந்து விழுந்திருக்கிறது!’

அவருடைய ஹாஸ்யத்தை ரசிக்க முடியாமல் நிற்க இயலவில்லை அவரால். அதனால் சிரித்தார். பலமாகச் சிரித்தார். அப்பாவி மனுஷன் அந்தச் சிரிப்பாலேயே ஜீவனிழந்து செத்துப் போவாரோ என்று மற்றவர்கள் அனுதாபப் படும்படியாகச் சிரித்தார். குமாரியின் பேட்டிகள் அவரது நினைவில் அவ்வளவு பசுமையாய்ப் பதிந்திருந்தன.

அவள் வெட்கமுற்று முகம் சிவந்து நின்றாள். பாதி தின்ற மாம்பழம் அவள் கையிலே இருக்கிற உணர்ச்சி உண்டாகவும் அவசரம் அவசரமாக அதைத் தின்னும் திருப்பணியில் ஈடுபட்டாள். அது அவரது சிரிப்பை அதிகப்படுத்தியது.

“இது ஐஸ்க்ரீம் இல்லை, செல்வா. கரைந்து விடாது. மெதுவாய் நிதானமாக சுவைத்துச் சாப்பிடலாமே!” என்று சிரிப்போடு சிரிப்பாகச் சொற்களையும் அருளினார் ஆசிரியர். பிறகு ‘அம்மா சௌக்கியமா?’ என்று விசாரித்தார். அம்மா இறந்து இரண்டு வருஷங்களாச்சு, ஸார்?’ ‘அப்போ நீங்கள்?’

‘எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. ஆனால்….நான் வந்து…. வந்து ஸார், என் கூட…’

அவள் எப்படி விளக்குவது என்று திண்டாடித் திணறிய வேளையிலே, ‘செல்வா’ என்று அழைத்தபடி ஒரு பரட்டைத் தலையர் வெளியே வந்தார். அவர் தலைமுடித் தோற்றமே அவர் ஒரு நாட்டிய நிபுணர் என்று சுட்டிக் காட்டியது.

பரமசிவத்துக்குத் தன் நண்பர் ஒருவர் குமாரி செல்வாவின் வாழ்க்கை மாற்றங்கள் பற்றிக் கூறியது அப்பொழுதுதான் நினைவின் மேல் பரப்பிற்கு வந்தது.

“ஓ!” என்றார் ஆசிரியர். அந்த ஒரு உச்சரிப்பில் எவ்வளவோ அர்த்தம் பொதிந்திருந்தது.

‘தெருவிலே நின்று என்ன நாடகம் இது, செல்வா? என்று கடுகடுத்தார்’ உள்ளிருந்து தலைநீட்டிய உத்தமர்.

‘வீட்டுக்குள்ளே வாங்க ஸார் என்று அழைத்தாள் செல்வா. கையிலிருந்த மாம்பழம் முழுவதையும் சாப்பிட்டு, கொட்டையைத் தூர எறிந்துவிட்டு உள்ளே செல்லத் தயாரானாள் அவள்.’

‘இதைத் தட்டிப்பிடுங்க வந்தார் இவர். நான் ஓட ஆரம்பித்தேன். அவர் துரத்தவும் நான் தெருவுக்கே வந்து விட்டேன்’ என்றாள்.

‘ரொம்ப சந்தோஷம். நீங்கள் பழைய குமாரி செல்வா ஆகவேதான் இருக்கிறீர்கள் இன்றும். ஆனால் உருவத்தில் மட்டும் கொஞ்சம் மாறுதல்’ என்றார் பரமசிவம்.

‘வாழ்விலும் எவ்வளவோ மாறுதல் ஏற்பட்டுவிட்டது ஸார்!’

‘இருக்கட்டுமே. நீங்கள் என்றுமே குமாரியாக வாழத் திட்டம் போட்டுவிட்டீர்கள் போலிருக்கு! நான் போய் வருகிறேன்’ என்று நகர்ந்தார் அவர்.

‘உங்களைப் பார்த்து ரொம்ப ரொம்ப நாளாச்சு. இல்லையா ஸார்?’ என்று கேட்டாள் குமாரி.

‘ஆமாம். ஏழு வருஷங்கள்!’ என்று சொல்லிவிட்டு நடந்தார் பரமசிவம்.

‘யார் அது?’ என்று கேட்ட ஆண் குரலும், ‘அவர்தான் வால் நட்சத்திரம்னு ஒரு பேப்பர் நடத்தினாரே, அந்த ஆசிரியர்’ என்ற குமாரியின் பதிலும் அவர் காதில் விழுந்தன.

‘ஓகோ! அவனா! உருப்படத் தெரியாத பரமசிவமா!’ என்று கூறிக் கனைத்தார் புதுப்பேர்வழி. அந்தக் கனைப்பும் ஆசிரியர் காதில் பட்டது.

இந்த மதிப்புரை ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்வையே தந்தது. ‘நம்ம நாடும் மனிதர்களும் கொஞ்சம்கூட மாறாத பண்பினராக வாழ்கிறார்களே! பளா பளா!’ என்ற திருப்தியை உண்டாக்கியது தான் காரணம்.


★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *