குமாரி செல்வா – வல்லிக்கண்ணன்

2


ஆசிரியர் பரமசிவம் குமாரி செல்வாவைப் பற்றி எண்ணிய அபிப்பிராயங்களில் தவறே கிடையாது. அவள் போக்கு அப்படித்தானிருந்தது.

கொஞ்சம் படிப்பு வாசனை பெற்றுவிட்டதுமே இந்தக் காலத்துப் பெண்கள் சினிமா ஸ்டார்கள் போல் திகழவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்கிறார்கள். அதனால் வாத்தியாரம்மாக்கள் கூட எக்ஸ்ட்ரா நடிகைகள் மாதிரிக் காட்சியளிப்பதையே நாம் காண முடிகிறது. வீட்டரசிகளுக்குக் கூட எக்ஸ்ட்ரா நடிகையரே லட்சியமாகி வழிகாட்டுகிற இந்த யுகத்தில் நர்ஸம்மா சங்கரபுஷ்பத்தின் மகள் செல்வா சினிமாக்காரி மாதிரி வாழ்க்கை நடத்துவதில் வியப்பில்லை.

பள்ளிப் படிப்பும், சினிமாப் படங்களும் தமிழ் நாட்டு சமுதாயத்திலே – முக்கியமாகப் பெண் குலத்திலே-அபத்தமாகச் சுவடுகள் பதிப்பதற்கு முன்பு, மேற்கும் கிழக்கும் சந்திக்க முயலும் அவியல் கலாசாரத்தை அதிகம் கையாண்டவர்கள் ‘சட்டைக்காரர்கள்’ என்று புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியர்களும் ‘வேதக்காரர்கள்’ என்று சிறப்புப் பெற்ற கிறிஸ்துவர்களுமாவர். இவர்களது நாகரிகம் பெண்களிடையே ‘மிஸ்ஸியம்மா’க்களாலும் ‘நர்ஸம்மாக்களினாலும்’ வளர்க்கப்பட்டு சுதந்திர ஆர்வமுள்ள வேறு பலருக்கு லட்சியமாகி விட்டது.

இப்படி வளர்ந்து வந்த பெருங்கிளையிலே பூத்த தனிமலர் சங்கர புஷ்பம். அவள் வேதக்காரியாகி விட்டாள்; விபூதி அணிவதில்லை; குத்துவிளக்கிற்கு பூஜை செய்வதில்லை; புனிதத் திருநாட்கள், விரதங்களைக் கொண்டாடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பெருகி வந்தன.பட்டியலில் அடங்காத அளவுக்கு இவை வளர்ந்திருக்கும். ஆனால் ‘அவள் ஓடிப்போய்விட்டாள்’ என்ற விஷயம் ஊரார் பேச்சுக்குப் பெருங் கோடு கிழித்து விட்டது.

ஊரை விட்டு ஓடி வந்தது, அவள் நர்ஸம்மாளாக மாறியது, ஒரு செல்வரின் துணைவியாகிக் குமாரி செல்வாவின் தாயானது எல்லாம் நமக்கு வேண்டாத கதை. செல்வாவைச் செல்லமாக வளர்த்து நவயுக நாகரிகச் கடர்க்கொடியாக மாற்றிவிட அவளது பண்பாடு துணைபுரிந்தது என்பதுதான் முக்கியம். தாயின் உரிமையில் தலையிடவோ, மகளின் வளர்ச்சியில் தடை விதிக்கவோ தந்தை பரந்தாமர் விரும்பியதில்லை. ஆசையிருந்தாலும் அவர் வார்த்தைகள் உரிய மதிப்பைப் பெறா என்பது அவருக்கே தெரியும். அதனால் அவர் தன் கெளரவத்தைத் தானே காப்பாற்றிக் கொண்டார்.

குமாரி செல்வா படித்தாள். காலேஜில் காலடி வைத்துப் பார்த்துவிட்டு அது பிடிக்கவில்லை என் விட்டுவிட்டாள். படிப்பிலே என்றைக்குமே அவளுக்கு ‘இன்ட்டரஸ்ட்’ கிடையாது. தோழிகளுடன் குதித்துக் கூத்தாடுவது, கூப்பாடு போடுவது,’எட்டு வீட்டுக்குக் கேட்கும்படியாக’ ஒஹொஹோ ஆஹஹா என்று கத்திச் சிரிப்பது போன்ற காரியங்களைக் குறைவறச் செய்து வந்தாள்.

‘பொண்ணாகப் பொறந்தவ இப்படியெல்லாம் நடக்கப்படாது அம்மா. கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக இருக்கணும்’ என்று போதித்து அவளுக்கு வழி காட்டக்கூடிய பெரியம்மாள்கள் யாரும் இல்லாததும் குமாரி ‘தான் நினைத்த மூப்பாக’ வளர்வதற்குத் துணை புரிந்தது.

ஆடத் தெரிவதும் பாடத் தெரிந்திருப்பதுமே நாகரிகம், பெரியதனம் என்று நம்பப்படுகிற இந்தக் காலத்திலே செல்வா இவற்றைப் பயிலாமல் இருக்க முடியுமா? இவற்றுடன் நடிக்கவும் கற்றுக் கொண்டாள் அவள். இவ்வளவு சிறப்புக்களுடன் அழகு, அகங்காரம், ஆணவம், அலட்சிய மனோபாவம் ஆகிய நவயுகப் பெண்மைப்பண்புகளைக் குறைவறப் பெற்றிருந்த மாடப்புறா கல்யாணம் என்ற பெயரில் எந்த வேடன் கையிலும் சிக்கித் தன் வாழ்வையே பாழாக்கிக் கொள்ள விரும்பாததில் அதிசயமில்லை.

அபாரத் தன்னம்பிக்கையுடன் முன்வந்து அவளை யாராவது கல்யாணம் செய்திருந்தால், அவன் உருப்பட்டு விடமாட்டான்! அவனையும் அவன் வாழ்வையும் உருப்படவிடாமல் அடிக்கும் திறமை அவளிடமுண்டு.

அவளிடம் குடிகொண்டிருந்த திறமைகளையெல்லாம் சோபிக்கச் செய்து புகழுடன் மிளிரவேண்டும் என்ற ஆசைதான் அம்மாளுக்கும் மகளுக்கும் அதிகம்.

சின்ன வயசிலிருந்தே ‘செல்வா சிரித்த முகமும் சீதேவியுமாக எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுகிறாள்’ என்ற பாராட்டுதலைப் பெற்று வளர்ந்தவள் அவள்.

குறும்புகள் செய்வதில் அவள் யாருக்கும் சளைத்தவளில்லை. பையன்கள் நோட்டில் ‘நீ ஒரு கழுதை இப்படிக்கு செல்வா என்று கையெழுத்திட்டு ஸர்டிபிகேட் அளிக்க அவள் தயங்கியதே கிடையாது. அவள் பின்னலை எவனாவது பின்னின்று இழுத்தால், அவன் கண்களில் தண்ணீர் வரும்படியாக மண்டையிலே நறுக்கென்று கொட்டுவதற்கு வலுவிருந்தது அவள் கையில்! ‘யே செங்குரங்கே’ என்று யாராவது சொன்னால் ‘வவ்வவ்வே’ என்று உதடுகளை மடித்து வாயினால் வலிப்புக் காட்டும் திறமையுமிருந்தது.

வயதாக ஆக இக்குணங்கள் குறையாமல் வளர்ந்து வந்தன. ஆகவே ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யாகத் தானிருந்தாள் குமாரி செல்வா. அவள் பண்பினால் யாருக்கும் தீங்கு விளையவில்லை.

‘ஆனால் அவளுக்கே அவை தீங்கு விளைவிக்கும். இதுவரை விளையவில்லை யென்றால் இனியும் விளையாது என்று நிச்சயித்துவிடலாமா! என்று நினைத்தார் பரமசிவம். ஆசிரியரது ஊகங்கள் அநேகமாகத் தவறுவது கிடையாது. மெஜாரிட்டி இனத்திலேயே கலந்தது இந்த யூகமும்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *