

மே தினம்
கா. ந. அண்ணாதுரை
மே தினம்
வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பூர உற்சவம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, கார்த்த்திகையில் தீபவிழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி. இப்படி மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா நடத்தி, தலைமுறை தலைமுறையாகப் பழக்கப்பட்ட மக்களிடையே மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக்கிறோம். மே விழா, மேதினியில் மக்களுக்கு வாழ்வு அளிக்கும் விழா என்று கூறினால்,மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே, சிந்திக்கக் கற்றுக்கொண்ட பகுதியினருக்கு மட்டுமே, மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள், இன்னமும் நான் முன்னால். குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுப்வர்கள் – குடும்பம் குடும்பமாக!.
பொன்மலைத் திராவிட வாலிபர்கழகத்தார், மே தின விழாக் கொண்டாட முன்வந்தது பற்றி, நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சில நகரங்களிலும், நமது நண்பர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாகவே அறிக்கை வெளியிட்டு, அடுத்த ஆண்டு மே தின விழாவைத் தமிழ் நாடெங்கும் கொண்டாட ஏற்பாடு செய்யும் என்று நம்புகிறேன்.
மே தினம் என்ற உடனே, சர்க்காருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டோ, எந்த விழாவிற்காகவோ ஒன்று திரண்டால், இன்றைய ஆட்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர் — சங்கடப்படுகின்றனர். நான் இந்தப் போக்கைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. சர்க்காரின் சுபாவம் அது. ஆனால் நம்முடைய கட்சி நண்பர்களிலேயே சிலருக்குச் சந்தேகம் உண்டாகிறது; மே தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அந்த விழா கம்யூனிஸ்டுகளல்லவா கொண்டாட வேண்டும்; நமக்கு எதற்கு அந்த விழா? என்று எண்ணுகின்றனர். இது ஓர் தவறான கருத்து.
மே தினம், கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏகபோக மிராசுப் பாத்யதை அல்ல. மே தினம் கம்யூனிஸ்டுக் கட்சி ஆள வந்த பிறகு ஏற்பட்ட சம்பவமும் அல்ல. மே விழா, ரஷியாவிலே அல்ல முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. மேதினி எங்குமே மே தினம் கொண்டாடப்படுகிறது. இதே நேரத்தில், உலகிலே பல்லேறு பட்டணங்களிலே, மே விழா, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பார், மாஸ்கோவில். அதுபோன்ற ஒவ்வோர் தலைநகரிலும், தலைவர்கள் மே தினத்தைக்கொண்டாடிக் கொண்டிருப்பார். புரட்சித் தினம், செஞ்சேனைத் தினம் என்ற விழாக்கள் ரஷியாவிலே, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அங்கு மட்டுந்தான். உலகிலே வேறு நாடுகள் இந்த விழாக்களை, சோவியத் ரஷியாவுக்கு மட்டுமே சொந்தமான விழா என்று கருதுகின்றன. எனினும் இந்த மே தினத்தை மேதினி எங்கும் உள்ளவர்கள், எமக்கும் விழாத்தான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு, இன்று பிரபல்யம் அடைந்துவிட்டது. ஆகவே, மே தினம், கம்யூனிஸ்டுகளின் விழா என்று கருதுவதும், அதனைத் திராவிடர் கழகத்தார் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவதும், சரியல்ல.
பாட்டாளி மக்களின் விடுதலை விழா, மே தினம். நாடு அல்ல இதற்கு எல்லை! பாட்டாளிகள் வாழ்வுக்காக—விடுதலைக்காக—உரிமைக்காக, மே தினத்தை கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்தினருடன் குதூகலமாக வாழ்வது, மற்ற 8 மணி நேரம் ஓய்வாக இருப்பது—இந்தத் திட்டத்தை மே தினம் எடுத்து கூறுகிறது. பாட்டாளிக்குப் புதுவாழ்வு அமையவேண்டுமானால், இந்தத் திட்டம் தேவை. உழைத்து அலுப்பதும், உருக்குலைவதும், ஓயாமல் உழைப்பதும், வாழ்வின் சுவையையே காணாதிருப்பதும், இன்று பாட்டாளியின் கதியாக இருக்கிறது. இதனால் தொழிலாளி, துயரின் உருவமாகிறான்: அடிமைப்படுகிறான். வாழ்வு பெரியதோர் சுமை என்று எண்ணுகிறான். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டார்கள், எட்டு மணிநேர வேலைத் திட்டத்தை வலியுறுத்தினர். அதனை வலியுறுத்த, ஆண்டுதோறும் மே மாதம் முதல் தேதி அன்று விழா நாளாகக் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். இந்த விழாவின் துவக்கத்தின் போது, சோவியத் ரஷியா இல்லை! ஜாரின்ரஷியாவே இருந்தது. ரஷிய நாடு அல்ல, இவ்விழா விமரிசையாக நடந்த இடம்; அமெரிக்கா. எனவே, மே தினத்தைப் பாட்டாளிகளின் விடுதலைக்காகப் பாடுபடும் நோக்கங்கொண்ட எல்லாக் கட்சியினரும் கொண்டாடலாம்—திராவிடர் கழகத்தாருக்கு இது கடமை மட்டுமல்ல, உரிமையுங்கூட, ஏனெனில் திராவிடர் கழகம், ஏழை எளியவரின் புது வாழ்வுக்காகப் பணி புரிவதையே திட்டமாகக் கொண்டிருக்கிறது. திராவிட இனமே பாட்டாளி இனம் என்று விளக்கி வருகிறது, திராவிடர் கலாச்சாரமே உழைத்து வாழ்வதையே வலியுறுத்துகிறது. யாகக்குண்டத்தருகே அமர்ந்திருப்பது, ஓம்ப் புகையைக் காட்டி ஊரை ஏய்ப்பது, மோட்சலோகத்துக்குச் சீட்டளிப்பது, வேதமோதி வாழ்வு நடத்துவது, ஆரூடம் கூறிப் பிழைப்பது ஆகியவை, திராவிட இனக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் முரணானது—ஆரியக்கலாச்சாரத்தின் இலட்சணம் இவை.
உழவுக்கும், தொழிலுக்கும் உயர்வு கூறுவது, திராவிடக் கலாச்சாரம்!
அவை இரண்டும், உயர்ந்த காரியமல்ல என்று கூறுவது, ஆரியப் பண்பு.
திராவிடரின் கண்கள், ஏர்முனை, கடலடி, காட்டுப்பாதை, நாட்டுநிலை இவைகளின் மீது செல்வன! “ஞானக்கண்”ணினரான ஆரியருக்கோ, இவற்றின்மீதல்ல; சத்யலோகம், அதல, சுதல, தராதல பாதாள லோகங்கள் ஆகியவற்றின் மீது செல்லக்கூடியன!
எனவே, கலாச்சார முறைப்படி பார்த்தாலும், வரலாறு காட்டும் நமது வாழ்க்கை முறைப்படி பார்த்தாலும், இன்றைய நிலையைப் பார்த்தாலும், நாம் பாட்டாளிகளே. ஆகவே பாட்டாளிகளின் விடுதலைக்கான இந்த மே தினத்தைக் கொண்டாடும் உரிமை, மற்றவர்களுக்கு இருப்பதைவிட, நமக்கே அதிகம். அது மட்டுமல்ல; மே தினம், மாஸ்கோ தினம்; செஞ்சேனைத் தினம் என்று கொண்டாடும் பல கட்சிகளிலே உள்ள பல தலைவர்கள் காசியைக் கடந்து சென்றதில்லை. நமது திராவிடர் கழகத் தலைவர் பெரியார், மாஸ்கோ வீதிகளிலே உலவினவர்—சோவியத் மாட்சியை நேரடியாகக் கண்டவர்—பொது உடைமைக்காரர் என்பதற்காக, சர்க்காருடைய தொல்லைகளுக்கு ஆளானவர், நம் பத்திரிகைகளுக்கு ஜாமீன் கட்டியிருக்கிறோம். புத்தகங்கள் பறிமுதலாகியுள்ளன. இந்தக் காரணத்தால், மற்ற எந்தக் கட்சிக்காரரும் சிந்திக்காத நாட்களிலேயே, நாம், சுயமரியாதை இயக்கத்தினர் மே தினத்தைப் பற்றிச் சிந்திக்கிறோம்.
முதன் முதலில் தமிழ்நாட்டிலே மே தினம் கொண்டாடிய கட்சி, சுயமரியாதைக் கட்சிதான்.
எனவேதான், நாம் மே தின விழாவை, உரிமையுடனும் உவகையுடனும் கொண்டாட வேண்டியவர்கள் என்று கூறுகிறேன். அந்த விழா, ஏதோ கம்யூனிஸ்டுக் கட்சியின் ‘காபிரைட்’ என்று எண்ணிட வேண்டியதில்லை;
1889-ம் ஆண்டு, சர்வதேச சமதர்ம மாநாடு, பாரிஸ் பட்டணத்தில் கூடி, மே மாதம் முதல் தேதியை, உலகப் பாட்டாளி மக்களின் விடுமுறை நாளாகக் கொண்டாடும்படி தீர்மானம் நிறை வேற்றிற்று. அதுமுதல் மே தினம், உலகிலே எல்லா நாடுகளிலும் பாட்டாளிகளின் விடுதலை விழாநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!
ஜாரின் கொடுங்கோலாட்சிக் காலத்திலும், ரஷியாவில், மே தினம் மகத்தான விழாவாகக் கொண்டாடப்பட்டே வந்தது. பயங்கரமான அடக்குமுறை இருந்துங்கூட, மே தினத்தன்று ஊர்வலம் நடத்தியும், துண்டு வெளியீடுகளை வழங்கியும் பொதுக்கூட்டம் நடத்தியும், மே தினத்தை அவர்கள் கொண்டாடத் தவறியதில்லை. போலீசின் தடியடி மட்டுமல்ல, பட்டாளத்தாரின் குண்டுகள், விழாக் கொண்டாடுவோர் மீது பாய்ந்த காலம் அது.
மே தினத்தைத் தொழிலாளரின், விடுதலை விழா, நாளாக மாற்றி அமைத்தவர், மாவீரர் லெனின். தங்கள் குறைகளைப் போக்கிக்கொள்ள, உரிமைகளைப் பெற இந்த மே தினத்தைப் பரணி பாடும் நாளாக்கினார் அப் புரட்சிவீரர்! அவருடைய முயற்சியினால் ரஷியாவிலே, மே தின விழா, ஜார் ஆட்சியை ஒழிக்கும் மாபெரும் புரட்சிக்குப் பயிற்சிகளாக அமையலாயிற்று.
கொடுமைகளைக் கண்டு அஞ்சாநெஞ்சமும், பயங்கர அடக்குமுறை கண்டும் பணிய மறுக்கும் உரமும், வாட்டி வதைக்கும் எதேச்சாதிகாரத்தின் முன்பு வளையாத போக்கும் பெற, மே விழாவைப் பாசறைப் பள்ளியாக்கிக் கொண்டனர், ரஷியப் பாட்டாளி மக்கள்!
1942-ம் ஆண்டு மே தினத்தன்று, 4 இலட்சம் பாட்டாளிகள் வேலை நிறுத்தம் செய்தனர்.
நாலு இலட்சம்! எவ்வளவு பிரமாண்டமான கூட்டம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், அந்த மே தின மகத்துவம் தெரியும். நாலு இலட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுக்காக—விடுதலைக்காக—உரிமைக்காக ஒன்று திரண்டிடும் காட்சியை மனக்கண்முன் நிறுத்திப் பாருங்கள். ஜார், அவனுடைய படை பலம், சக்தி வாய்ந்தவைதான்! ஆனால், நாலு இலட்சம் உழைப்பாளர்கள், உள்ள உரத்தோடு நிற்பவர்கள், உரிமைப்போர் தொடுப்பவர்கள், இவர்களின் வல்லன்மையின் முன்பு, ஜாரின் ஆட்சி பலமும் ராணுவ பலமும் என்ன செய்யமுடியும்?
தொழிலாளர்கள், தங்கள் வல்லமையை—கூட்டுச் சக்தியை—உணர்ந்து கொள்ள, உணருவதன் மூலம் மன உறுதி பெற 1912-ம் ஆண்டு நடைபெற்ற மே தின விழா பயன்பட்டது.
1914-ல்—இரண்டாண்டுகளுக்குப் பிறகு, மே தின விழாவன்று, 5 இலட்சம் பாட்டாளிகள் பவனி வந்தனர்.
ஜாராட்சி ஒழிக்கப்பட்டுப் பாட்டாளிகள் வெற்றிமுரசு கொட்டிய பிறகு, 1917-ல், தங்கு தடையின்றி, மேதின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மே தின விழா, மேதினி எங்கும் கொண்டாடப்படுகிறது என்றபோதிலும், ரஷியாவிலே, குதூகலமாகக் கொண்டாடப்படும் முறையே, தனிச்சிறப்புடையது. பல்வேறு தொழில் துறையிலே உள்ளவர்கள், உலகுக்கு, சோவியத் ஆட்சி முறையில் சோவியத்தை விளக்குவதற்காகத் தத்தமது திறமையைக் காட்டுவர். சோவியத் ரஷ்யாவின் வல்லமையும் வளமும் விளங்கும் காட்சிகள் அன்று நடைபெறும். பட்டாளமும் பவனி வரும், விமானங்கள் வட்டமிடும். கல்லூரி மாணவர்கள் களிப்புடன் பவனி வருவர். கீதம் கேளிக்கை! ரஷியாவில் மே தினத்துக்கு ஈடான விழா இல்லை என்று கூறலாம், அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! சோவியத் தலைவர்களின் சொற்பொழிவுகள், உலகுக்குச் சோவியத்தின் சிறப்பை விளக்கிடுவதாக அமையும்.
இவ்வாண்டும், வழக்கம்போல மே தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டு மார்ஷல் புடெனி சொற்பொழிவாற்றினார்.
அணுக்குண்டையும், பணக்குண்டையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டும் அமெரிக்கா தயாரிக்கும் புதிய ஏகாதிபத்யம், புதியதோர் போர் தொடுக்கக்கூடும் என்ற எண்ணம், எங்கும் பரவி வருகிறதல்லவா? அதிலும், சோவியத் ரஷ்யாவின் மீதுதான் அமெரிக்காவின் கண் பாய்கிறது என்பது, வெளிப்படையாகத் தெரிந்த விஷயந்தானே. ஆகவேதான், இவ்வாண்டு மே விழாவிலே பேசிய சோவியத் தலைவர்கள், புதுப்போரை உண்டாக்கும் போக்கைக் கண்டித்ததுடன், தவிர்க்க முடியாத நிலையில் போர் மூண்டுவிடுமானால், சோவியத் அதனைச் சமாளிக்கும் என்பதை விளக்கப் புதிய டாங்கிப் படைகளின் பவனியை, விழா விசேஷங்களில் ஒன்றாய்க் காட்டினர்.
மாபெருங்கூட்டம் மாஸ்கோவில்! மார்ஷல் புடெனி புரவி மீதமர்ந்து வந்தார் விழாவுக்கு.
“நிலையாக நிற்கக்கூடிய சமாதானத்துக்காக, ரஷியா போராடி வருகிறது, சர்வதேசங்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறது. சமய உரிமை கோருகிறது. சோவியத் சர்க்காரின் வெளிநாட்டுக் கொள்கையை, சோவியத் மக்கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிக்கின்றனர்”` என்று முழக்கம் செய்தார்.
அதாவது, இவ்வாண்டு மேதினத்தை, இன்றைய உலக நிலையில் சோவியத்தின் நிலை எப்படி இருக்கிறது? எம்மாதிரியான போக்கு முறையும் தேவை? என்பதை விளக்கப் பயன்படுத்திக் கொண்டனர்.
இதே முறையில், நாஜிகளுடன் போர் நடத்தி வந்தபோது, ‘மே தினம்’—நாஜிசத்தை அழித்தாகவேண்டும் என்ற சோவியத் உறுதியைத் தெரிவிக்கப் பயன்பட்டது.
“பட்டினி ! பசி ! போதுமான உணவு இல்லை ! அரசியவிலே உள்ள குழப்பம் ஒழிந்து, குடியரசு ஆட்சி ஓங்கவேண்டும்”— இம்முறையில் முழக்கமிட்டவண்ணம், ஹாம்பாக் (Hamburk) நகரிலே ஐம்பதினாயிரம் தொழிலாளர்கள் மே தினம் கொண்டாடினர்.
ஸ்பெயின், பிராங்கோ ஆட்சியை ஒழிக்கும் முழக்கமாகத் திகழ்ந்தது, மே தினம்!
பாரிஸ் நகரிலே, மே தினத்தன்று, கூலி உயரவேண்டும், விலைவாசிகள் மக்களை அழுத்துவதாக இருக்கக் கூடாது, இந்தோ சீனாவிலுள்ள அமளிநிலை ஒழியவேண்டும் என்று, இவ்வண்ணம் முழக்கமிட்டனர்.
அதாவது, ஒவ்வோர் ஆண்டும் மே தினத்தன்று, அந்தந்த நாட்டின் பிரத்யேகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசவும், பொதுவாக மக்களின் விடுதலையையும், பாட்டாளிகளின் நல்வாழ்க்கையை விடுதலையையும், பாட்டாளிகளின் நல்வாழ்க்கையை வற்புறுத்தவும், மே தினம் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனம் எந்தெந்த வகையினவாக உள்ளனவோ, அவைகளை எந்தெந்த முறைகளின் மூலம் முறியடிக்க முடியும், மக்கள் முழுவாழ்வு பெறச்செய்யும் வழி என்ன, என்பதை மக்கள் கூடி யோசிக்கவும், உறுதி பெறவும், உரிமை முழக்கமிடவும், மே தினம் ஓர் வாய்ப்பு! எனவே, திராவிடர் கழகத்தாராகிய நாம் திராவிட நாட்டின் பிரத்தியேகப் பிரச்னைகளைப் பற்றி யோசிக்கவும் திராவிடரின் அடிமைத் தளைகளிலே, எவை எவை என்னென்ன வகையானவை, அவைகளை நீக்க என்னென்ன விதமான முறைகளைக் கையாளவேண்டும் என்று, மே தினத்தன்று யோசிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மற்றக் கட்சிக்காரர்கள் மே தினம் கொண்டாடினால், பொருளாதாரக் காரணங்களை மட்டுமே பெரிதும் வலியுறுத்திக் காட்டுவர். அவர்கள், மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம், பொருளாதார, யந்திரக் கோளாறு என்று கருதுகிறார்கள். யந்திரக் கோளாறு, நிச்சயமாகவே மக்களின் வாட்டத்துக்குக் காரணந்தான்; அந்த யந்திரம் தகர்த்தெறியப்பட்டு, மக்களின் வாழ்வை மிருக நிலைக்குக் கொண்டுப்போகாத புதிய யந்திரம் செய்யப்பட வேண்டியதும் மிக அவசியந்தான். இதைத் திராவிடர் கழகம் என்றுமே மறுத்ததில்லை. ஆனால், ஏன் இத்தகைய சுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்டது? எப்படி? யாரால்? மக்கள் ஏன் இதனை அனுமதித்தனர்? ஏன் இன்றும் சகித்துக்கொள்கின்றனர்? என்ன கூறிக் கஷ்டப்படும் மக்களைச் சுரண்டுபவர்கள், மயக்கியும் அடக்கியும் வைக்கமுடிகிறது? என்பன போன்றவைகளைத் திராவிடர் கழகம், மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மற்றக் கட்சிகள், இவைகளை எடுத்துக் காட்டுவதில்லை—அச்சம் காரணமாகவோ, அல்லது அவகாசம் இல்லாததாலோ, எக்காரணம் பற்றி மற்றவர்கள் இந்த விஷயங்களைக் கூறாமலிருப்பினும், நாம் இவை மக்களால் சிந்திக்கப்பட்டு, அந்தச் சிந்தனையின் பலனாக அறிவுத் துறையிலே ஒரு புரட்சி ஏற்பட்டாலொழியப் பொருளாதாரப் புரட்சியினால் மட்டும் புதுவாழ்வு கிடைத்துவிடாது என்று நம்புகிறோம். ஆழ்ந்த நம்பிக்கை இது. எனவேதான், நாம் மனிதன் அடிமைப்பட்ட காரணத்தையும், அந்த அடிமைத்தனம் எப்படி நீக்கப்பட வேண்டும் என்பதையும், நமது பிரசாரத்திலே முக்கியப் பகுதியாக வைத்துக்கொண்டிருக்கிறோம். மனதிலே உள்ள தளைகளை நீக்குவது அவசியமான காரியமென்பதை யுணர்ந்து, ஐரோப்பாக் கண்டத்திலே, பேரறிவாளர்களான வால்டேர். ரூசோ போன்றோர், அறிவுத்துறைப் புரட்சிக்காக எவ்விதம் பணியாற்றினரோ, அவ்விதமான பணியினையே நாம் புரிகிறோம்.
பொதுவாகவே நாம் சிந்தித்தால், இந்தப் பணியின் அவசியம் நன்கு விளங்கும். உலகிலே உள்ள கஷ்டங்கள், வறுமை, பிணி, வேலையில்லாக் கொடுமை, பாட்டாளி படும் துயரம் முதலியவை, எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு ஏற்ற வசதி இல்லாததால் உண்டானவையோ என்று யோசித்தால், இல்லை என்றே தெரியும் ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களைக் காட்டியே கூறியிருக்கிறார்கள். இயற்கை தரும் செல்வத்தை வசதியைக் கொண்டு, நாளொன்றுக்குச் சராசரி 2-மணி நேரம் எல்லோரும் வேலை செய்தால், எல்லோரும் வயிறார உண்டு வாழலாம் என்று. அவ்வளவு இயற்கைச் செல்வமும், அதனை மக்களுக்கான உபயோகப் பொருள்களாக்கும் பாட்டாளியின் சக்தியும் உள்ளன. இருந்தும், இவ்வளவு இன்னலை, இங்கு மட்டுமல்ல, எங்கும்—, இன்று மட்டுமல்ல, பன்னெடுங் காலமாக அனுபவித்து வரவேண்டியிருக்கிறது! சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! சாமான்யர்களாகிய நம் காலத்திலே மட்டுமா? வீராதிவீரர்கள், சாம்ராஜ்யாதிபதிகள் காலத்திலேயுஞ்சரி யோக யாக விற்பன்னர்கள், வேத வேதாந்த சிரோமணிகள், ஆழ்வாராதிகள், நாயன்மார்கள்; அஷ்டசித்தியை அறிந்தவர்கள், அரி அரனை அழைப்பவர்கள், ஆத்மஞானிகள் என்போர்களின் நாட்களிலேயும், இந்தப் பிரச்சினை இங்கிருந்ததுடன், இல்லாமை, போதாமை எனும் நோயின் பிடிப்பிலே சிக்கி ஒரு பெருங்கூட்டம் அவதிப்படவும், செல்வத்திலும் சுகத்திலும் ஒரு சிறு கூட்டம் அமிழ்ந்து கிடக்கவுமான நிலைமை இருந்தே வந்தது. இதனை மக்கள் பலகாலமாகச் சகித்துக் கொண்டனர்! நம்மால் முடியாது என்றெண்ணி மருண்டனர்! யாராவது இதை மாற்றும் முறையைக் கூற முன் வரமாட்டார்களா என்று ஏங்கி நின்றனர்! எந்தக் குறுக்கு வழி புகுந்தேனும், இந்தக் கஷ்டத்திலிருந்து நீங்க முடியுமா என்று பதைத்தனர்! ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டனர்! என்னென்னவோ செய்தனர், இந்தப் பிரச்னையைத் தீர்க்க. இன்னும் ஓர் முடிவு காணவில்லை. மனிதனால் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண முடியாத காரணம் என்ன? அறிவு இல்லை என்று கூறிவிட முடியுமா? பறக்கக் கூடக் கற்றுக் கொண்டான்! பார் முழுவதையும் பாக்கட் சைஸ் ரேடியோவுக்குள் அடக்கிவிட்டான்! ஆனால் இன்னமும், பசி, பட்டினி, பஞ்சம் இன்றி எல்லோரும் வாழ வழி கண்டு பிடிக்க மட்டும் மனிதனுடைய அறிவு அவனுக்குப் பயன்படவில்லை! அறிவுப் பஞ்சம் அல்ல இதற்குக் காரணம். அவனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம், அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது! அதனாலேயே அவன் மனம் அலை மோதி நிற்கிறது!
மனிதன் கஷ்டம் அனுபவித்தபோது, மதவாதிகள் அவனுடைய கண்ணையும் கருத்தையும், எந்த உண்மைக் காரணத்தால் மனிதன் கஷ்டப்படுகிறானோ, அந்தக் காரணங்ளைக் காண ஒட்டாமல் தடுத்து, கைலாயம், வைகுந்தம், காகுத்தன், காளியாயி, ஜெப மாலை, உடுக்கை, இப்படி வேறு பலபொருள்கள், முறைகள் மீது திருப்பி விட்டனர். மனிதன், திக்குத் தெரியாத கலத்தைப் போலானான்! எனவேதான், அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் தோற்கவேண்டி நேரிட்டது. எடுத்துக்காட்டாக ஒன்று கூறுகிறேன். கூலி உயர்வுக்காகவோ, போனசுக்காகவோ, ஒரு தொழிலாளர் சங்கம் போராடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதிலே கிளர்ச்சி வலுக்கிறது. நண்பர் ஜீவானந்தத்தின் வீரமுழக்கம் கேட்டு, விறுவிறுப்படைகிறான் பாட்டாளி. கூட்டம் முடிந்து வீடு போகிறான், அங்கு என்ன நிலை?
மனைவி:- வேலை கூடத்தான் இல்லையே, எங்கே போய்ச் சுற்றிவிட்டு வருகிறீர்கள்? மணி பத்து ஆகிறதே!
தொ:- பைத்தியமே! இன்று மீட்டிங்கு.
மனை:- அதுதான் இருக்குதே ஒவ்வொரு தினமும்! என்ன சொன்னாங்க?
தொ:- முதலாளி இறங்கிவந்தே தீரவேணும் வர்க்கப் போராட்டம் நடக்கிறது வள்ளி! இதிலே பாட்டாளி வர்க்கந்தானே ஜெயிக்கோணும்!
மனை:- என்னமோ, பொன்னியம்மா புண்யத்தாலே, அந்த முதலாளி மனசு மாறி, ஏழைக மேலே இரக்கம் காட்டணும்.
இதுதான் பேச்சாக இருக்கும்.
மார்க்சின் தத்துவம், லெனின் முழக்கம். அக்டோபர் புரட்சி; இவையெல்லாம் மேடையில்! வீட்டில், பொன்னியம்மாள் புண்ணியம், முதலாளி மனசு இளகவேணும், இவை பேசப்படும்! தொழிலாளி மனைவியின் மனம் மட்டுமல்ல; தொழிலாளி மனமே கூட, ஜீவாவின் குரலிலே, ஜோஷியின் அறிக்கையிலே, கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியிலே ஈடுபடுவதைவிட, விநாயகரகவலிலே, விளக்கு வைத்துப் பார்ப்பதிலே, சனி கோயில் பூஜையிலே, சோதிடர் சொன்னதிலேதான் அதிகமாக ஈடுபடும். இந்த
மனப்போக்குத்தான், சகித்துக்கொள்ளும் தன்மையை, ‘நம்மால் என்ன ஆகும்’ என்ற சலிப்பை வளரச் செய்துவிட்டது! திராவிடர் கழகத்தாராகிய நாம், மே தினத்தன்று. இந்த மனப்போக்கை மாற்றும் பணி புரிவதன் மூலம், பாட்டாளிகளின் பிரச்னையிலே மற்றவர்கள் கவனிக்கத் தவறிய ஆனால் முக்கியமான பகுதியை வலியுறுத்துகிறோம்.
பூர்ஷுவா (முதலாளித்துவம்) என்ற தத்துவத்தை விளக்குகின்ற யாரும், அது சுரண்டும் முறை; பிறனுடைய உழைப்பால் வாழும் முறை என்று கூறுவர். நாம் ஆரியம் என்று கூறுவது, இதே நிலையைத்தான். சுரண்டும் முறை—தொழிலின் பேரால் அல்ல, மதத்தின் பேரால்—ஜாதியின் பேரால்—பழமையின் பேரால்! புரோலோடேரியன், பாட்டாளி என்று பேசும்போது, நம் கண் முன் தோன்றும் உருவம், உழைத்து உருக்குலைந்து, தன் உழைப்பை வேறுயாராரோ பறித்துக்கொள்ளக் கண்டு பதறி, அதனை மாற்ற முடியாததால் திகைத்துத் தலைமீது கைவைத்துக்கொண்டிருக்கும் ஏழையின் உருவமே. திராவிடன், அத்தகைய உருவந்தான்! ஆகவே பூர்ஷுவா என்பதற்குப் பதில், நம் நாட்டு நிலையைக் கவனித்து, ஆரியன் என்கிறோம்; புரோலோடேரியன் என்பதற்குப் பதில் திராவிடன் என்கிறோம். வர்க்கப்போராட்டம் என்பதுதான், இங்கு நாம் கூறும் ஆரிய திராவிடப் போராட்டம்!
திராவிடன்—ஆரியன் என்று கற்பனைகளில் காலந்தள்ளிக் கடுவிஷத்தைப் பரப்புகிறோம் என்று கருதி நம்மீது காய்பவர்கள், இதனை ஆர அமர யோசித்துப் பார்க்க வேண்டும். ஆரியம் என்ற கலாச்சாரம், உழைப்புக்கு மதிப்பளிக்காது; உழைப்பாளிகளிடம் ஆசை காட்டியோ அச்சமூட்டியோ, பொருளைப் பறித்துச் சுகப்படுவதற்காக உள்ள ஒரு முறை! இந்த முறை, பெரும்பாலானவர்களின் உழைப்பைக் கொண்டு, ஒரு சிறு கூட்டம் வாழ்வதாக அமைகிறது. இந்தச் சுரண்டும் கூட்டம். ஒவ்வொரு காலத்தில்-ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு விதமான பெயருடன் விளங்கும். ஆதிநாட்களில் கிரீசல், மாஸ்டர் (எஜமான்) என்று அழைக்கப் பட்டது! ரோம் நாட்டில், பெட்ரீஷியன் என்று பெயர் இருந்தது; பிரிட்டனில் பிரபுக்கள்; பிரான்சில் ஐஸ்வர்யவான்கள்; ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன—இங்கு அதே முறையைத்தான், நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண் வேலை செய்கிறோம் என்றோ, விஷமூட்டுகிறோம் என்றோ, யாரும் கருதவேண்டாம்.
திராவிடன், தேய்ந்து திகைத்துத் தலைமீது கைவைத்துக் கொண்டிருக்கிறான்! அவனுடைய உழைப்பை, மூன்று முனைகளிலிருந்து மூன்று சக்திகள் பறித்துக் கொள்ளுகின்றன! ஆங்கிலேயன் ஆள்பவனானான், செல்வம் கொண்டு சென்றான்! ஆரியன் ஆவய வேந்தனானான், பொருளைத் தூக்கிச் சென்றான்! வடநாட்டான் வணிக வேந்தனானான், பொருளைச் சுமந்து செல்கிறான்! இவ்வளவுக்கும் இடமளித்த திராவிடன், எக்கதியடைய முடியும்? தேம்புகிறான், திகைக்கிறான்.
இந்தத் திராவிடப் பெருங்குடி மக்களுக்குப் புதுவாழ்வு பிறக்கச் செய்ய வேண்டுமே; திராவிடர் கழகத்தின் நோக்கமாயிற்றே இது. எங்ஙனம் செய்வது? ஆரியனை நோக்கி, ‘அடித்துக்கொண்டு போகிறாயே மூட்டையை, இங்கே சிதைகிறேனே நான்’ என்று கேட்டால், என்ன பதில் வரும்? ‘நீ மட்டுமா முத்தா! உன் முப்பாட்டன் காலமுதல், இதுதானே முறை; இதுதானே விதி; இதுதானே சாஸ்திரம்; இதுதானே வேதம்; இதுதானே தெய்வக்கட்டளை! நீ தெய்வத்துக்குக் கட்டுப்பட்டவன்தானே, மகாபக்திமானாயிற்றே! நீ இந்தத் தெய்வக் கட்டளையை மீறலாமா? என்றுதானே பேசுவான்! திகைக்கும் திராவிடன் என்ன பேச முடியும்? அவன் சார்பிலே இருந்து ஒரு காங்கிரஸ்வாதியோ, கம்யூனிஸ்டோ, யார் வேண்டுமானாலும் பேசிப் பார்க்கட்டும்-சுயமரியாதை பாஷை தவிர, வேறு கிடையாதே!
“நீ மகா புரட்டன்! உழைப்பதில்லை, உன்மேனியோ, வாடுவதில்லை! ஏரைத் தொட மறுக்கிறாய்: ஆலையிலே ஆபீசராகவன்றித் தொழிலாளியாக இருப்பதில்லை; ஆண்டவன் உன்னை உழைக்கப் பிறக்கச செய்யவில்லை, உயர் ஜாதியாகப் படைத்தான் என்று பேசுகிறாய்! ஆசைகாட்டுகிறாய், மோட்சம் என்று கூறி! பயம் காட்டுகிறாய், நரகம் என்று பேசி ! நான் ஓர் ஏமாளி; எத்தன் பேசுகிறான் என்று அறியாமல் கெட்டேன் இதுவரை! இதோ விழிப்புற்றேன்! இந்தச் சுரண்டலை இனி அனுமதியேன்!* என்றுதானே பேசவேண்டும்? திராவிடர் கழகம், இந்த மனப்போக்கைப் பாட்டாளிகளிடம் ஏற்படச்செய்கிறது. கைலாயத்தை நோக்கும் கண்ணைக் காரல்மார்க்சைப் பார்க்கச் செய்கிறது! அதுபோலவே ஆங்கிலேயனைக் கேட்டால் என்ன சொல்லுவான்? என்ன சொன்னான்? உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றான். ஏன் இல்லை என்று; திராவிடர் கழகம் மக்களைக் கேட்கிறது. ஒன்றுபடும் மார்க்கத்தை உரைக்கிறது. வடநாட்டானைக் கேட்டால், அவன் ‘தேசியம்’ பேசி, இந்தியா ஒன்று என்ற கற்பனையைப்பூசி, மயக்குகிறான். திராவிடர் கழகம் அவனைப் பார்த்து, இந்த வேஷம் வேண்டாம், திராவிட நாடு திராவிடருக்கே! இங்கு உன் சுரண்டல் வேலை நடக்க இனி அனுமதியோம் என்று கூறுகிறது. ஆக, இவ்வளவுக்கும் அர்த்தமும் அவசியம் இருக்கிறது. மற்றவர்கள் அலட்சியப்படுத்திவிட்டபடியால், இவைகளை எடுத்துக்கூறும் பொறுப்பு நமக்கு அதிகமாகிவிட்டது. எனவே அடுத்த ஆண்டு முதல், மே தினம், திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான விழா நாளாகவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இம்சைக்கு ஆளான திராவிடனுக்கு, மதத்தின் பேரால் புகுத்தப்பட்டுள்ள ஆசையையும், அச்சத்தையும் அகற்றியாக வேண்டியவர்களாய் நாம் இருக்கிறோம். எனவே தான், திராவிடன் நம்பிக்கொண்டிருக்கும் மதம், எவ்வளவு நகைப்புக்கிடமானது என்பதை எடுத்துக் காட்டுகிறோம்: நையாண்டி செய்கிறோம்; ஆனால் நியாயத்தின் சார்பிலே நின்று பேசுகிறோம்.
ஏசு எமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தினார் என்று பேசும் கிறிஸ்தவர்கள் மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும், எங்கள் கடவுளாம் கோபாலகிருஷ்ணர், கோபிகையர் நீர் விளையாடுகையில் அவர்தம் சேலைகளைக் கவர்ந்து சென்றார்—குழலும் ஊதினார் என்று பேசும் திராவிடருடைய மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும் ஒப்பிட்டுக்காட்டி, மதம் இங்கு எவ்வளவு கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது பாரீர், என்று காட்டுகிறோம்.
இவையாவும் பாட்டாளிகளின் மீட்சிக்காகவேயன்றிப் போட்டி மதம் ஸ்தாபிக்க அல்ல. ஆகவே, மே தினத்தை மற்றவர்கள் கொண்டாடி வருவதை விட, நாம் நடத்தினால்தான், சமுதாய மத சம்பந்தமான பழம் பிடிப்புகளே சுரண்டும் பொருளாதாரயந்திரத்தை அமைத்தன என்பதை, விளக்க முடியும்—விளக்க வேண்டும்.
இந்தக் காரியத்தைக் காங்கிரஸ் செய்யாது—பழமையின் பெருமைக்குப் புத்துயிர் தருவதே அதன் வேலைத்திட்டம்.
கம்யூனிஸ்டுகள் செய்வதில்லை—அவர்கள் மக்கள் மிரளக்கூடிய பிரசாரம் செய்வது முறையல்ல என்று எண்ணுபவர்கள்.
நாம்தான் செய்யவேண்டும்—செய்துவருகிறோம். இதற்கு முன்பு இருந்ததைவிட, இன்று அவசியம் அதிகமாகி விட்டது. ஏனெனில், இன்று அரசியல் நிலைமை அடியோடே மாறிக் கொண்டு வருகிறது.
ஆங்கிலஏகாதிபத்தியம், நாட்டைவிட்டுப் போய் விடுகிறேன் என்று கூறுகிறது. நாளும் குறித்து விட்டது!
“தேசியம்” தன் முழு ஜொலிப்புடன் விளங்குகிறது! ஆசப் அலி அமெரிக்காவில், கிருஷ்ணமேனன் பெல்ஜியத்தில். தேவதாஸ் பிரிட்டனில்—இப்படித்தூதுவர்கள் திக்கெட்டும் செல்கிறார்கள். பத்திரிகை பலத்துடன் இப்போது சர்க்காரை நடத்துகிறபடியால், அதிகார பலமும் கிடைத்திருக்கிறது. தேசியம், வெற்றிக் களையுடன், வீரத்துடன் ஆட்சிபீடம் ஏறியுள்ள நேரம். வெற்றி வெறியாக மாறும் அளவு, பலம் இருக்கிறது. எனவேதான் மற்றவர்களின் கிளர்ச்சியைத் துளியும் கவலையின்றிக் காலின் கீழ் போட்டுத் துவைக்கிறது—துவைத்தது சரி என்று கூறுகிறது—மக்களையும் கூற வைக்கிறது. எல்லா இடங்களிலேயும் தேசிய ஆட்சி—எல்லா இடங்களிலேயும் தொழிலாளர்களின் கிளர்ச்சி! கிளர்ச்சி செய்பவர்களின் கதி? வேலூர்ச் சிறை! தலைமறைவு! தடை உத்திரவு! கப்சிப் தர்பார்!
கம்யூனிஸ்டுகள் விஷயம் ஒருவாறு முடிந்தது; இனிக் கறுப்புச் சட்டைக்காரர்களைக் கவனிக்க வேண்டியதுதான் என்று, தேசிய ஆட்சியாளர்கள் பேசுகின்றனராம். அவர்களா பேசுகிறார்கள்? பாசீசம் பேசுகிறது! அதிகாரம் பேசுகிறது! ஆணவம் பேசுகிறது ! ஆணவம் பேசுகிறது என்றேன்-ஆணவத்தைப் பேசவைக்கிறது, அழிவுச்சக்தி!
தாராளமாகக் கவனிக்கட்டும். பாட்டாளிகளின் விடுதலை விழாவான மே தினத்தன்று நான் என் கட்சியின் சார்பில் கூறுகிறேன். சர்க்கார் தாராளமாகக் கவனிக்கட்டும்—புதிய சிறைச்சாலைகள் கட்டு வதற்கான திட்டங்களும் தீட்டட்டும். பாபம்! அவர்களுக்கும் ஆசை இருக்குமல்லவா! அணைக்கட்டு, பல்கலைக் கழகம், தொழிற்சாலை, புதுப்பாதை, நல்லபாலம்—இப்படிப்பட்டவைகளைக் கட்டமுடியாவிட்டாலும், எங்களை அடைத்து வைக்கப் புதுச்சிறைகளையாவது கட்டி ஆசையைத் தீர்த்துக் கொள்ளட்டும் ! திராவிட கழகம் அதற்குத் தயாராகத்தான் இருக்கிறது ! 144 என்ற முள்வேலி போட்டு அதற்குள் எங்களை உலவச் செய்வதைவிட, சிறைக்குள் தள்ளுவது மேல் ! அதைச் செய்யுமுன் அவர்கள் யோசிக்க வேண்டும். சிறைக்குள் தள்ளிக் கிளர்ச்சியை அடக்கிய எந்த வல்லரசாவது வரலாற்றிலே உண்டா என்பது பற்றி. பாசீசத்தின் முதல் அடி, பயங்கரமானதாகத் தான் இருக்கும்—ஆனால் அதன் வீழ்ச்சி, எதிர்பாராத நேரத்தில் இருக்கும். சரியும் திடீரென்று !
சடசடெனச் சரிந்ததுபார் ஜாரின் ஆட்சி !
என்றார் கவி. நாம் படித்திருக்கிறோம்—நம்மை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்தைப் பெற்றவர்களும் அதனைப் படித்திருக்கிறார்கள்.
பிரசாரபலம், அதிகாரபலம் இரண்டும் இருக்கும் காரணத்திலேதான், வேலை நிறுத்தங்கள் ஒவ்வொன்றின் போதும், ஆளவந்தார்கள் முதலாளிகளின் முன்னோடும் பிள்ளைகளாகிப் பாட்டாளியை அடக்குகிறார்கள். தொழிலாளிக்குத் தடியடி, கண்ணீர்க்குண்டு, துப்பாக்கி, சகலமும் நடக்கிறது. கூண்டோடு பிடித்தாயிற்று கம்யூனிஸ்டுகளை. காங்கிரஸ் நாராயணசாமிக்கும் அதே கதி! தேசிய முரசு கொட்டுகிறார் முத்துசாமி வல்லத்தரசு. அவருக்கும் அன்பழைப்பு, ‘வா ஜெயிலுக்கு’ என்று, ஏன் ? அவர்கள் ஏதோ உழவர்களின் உரிமைக்காகக் கொஞ்சம் உரத்தகுரலிலே பேசிவிட்டனர் என்பதற்காக ! உரத்த குரலிருந்தால், ஊரெங்கும் சென்று, கருப்புச் சிவப்புச் சட்டைகளைக் கண்டிக்க வேண்டுமே தவிர, உழவனுக்குப் பரிந்து பேசுவதா? என்று தேசியம் அவர்களை நோக்கிக் கேட்கிறது. அவர்கள் சிறையில் இருந்தபோது, என்ன சிந்தித்தனர் ? நாம் அறியோம்! ஆனால் ஒன்று தெளிவு; ஜனநாயக உணர்ச்சியை அடக்குமுறை கொண்டு ஒழித்துவிட முடியாது. அந்த ஜனநாயக உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால்—பலப்பட வேண்டுமானால், நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் வேண்டும். பழைமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்கவேண்டும். இதற்குத்தான் நாம் அறிவுத்துறையிலே புரட்சி ஏற்பட்டாக வேண்டுமென்று கூறுகிறோம். மே தினச் செய்தி, பாட்டாளிகளின் விடுதலைச் செய்தி ! அந்த விடுதலை, பொருளாதாரத் துறையினது மட்டுமல்ல-அறிவுத்துறையிலேயும் விடுதலை வேண்டும். ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுவிடுவதோ, மட்டமாக மதிப்பிடுவதோ ஆகாது என்று கூறுவதோ அவசியமல்ல. இரண்டும் தேவை—இருநோக்கமும் கொண்டதே, திராவிடர் கழகம். பாட்டாளிகளின் விடுதலைத் தினமாகப் பாரெங்கும் கொண்டாடப்படும் இந்த மே தினத்தன்று, நாம் திராவிட நாடு திராவிடருக்கே என்று கூறுகிறோம். இது உலகம் உழைப்பாளிகளுக்கே என்ற முழக்கம் போன்றதே! குறிச்சொல் மட்டுமே வேறு, குறிக்கோள் ஒன்றுதான். உலகம், உழைப்பாளிகளுக்கே உலுத்தர்களுக்கு அல்ல! பிறர் உழைப்பை உண்டு கொழுப்போருக்கு அல்ல! சுரண்டி வாழுவோருக்கு அல்ல! முதலாளித்துவத்துக்கு அல்ல. ஆம்! அதே பொருளில்தான், திராவிடநாடு, திராவிடருக்கு, ஆரியருக்கு அல்ல; அண்டிப்பிழைக்க வந்து நம்மை மண்டியிடச் செய்த மதத் தரகர் ஆட்டத்துக்கு அல்ல; வட நாட்டு முதலாளித்துவத்துக்கு அல்ல; உழைக்கும் உத்தமர்களாகிய திராவிடர்க்கே! என்று கூறுகிறோம். மே தினத்தன்று பாட்டாளிகளுக்கு நாம் கூறும் செய்தி இதுதான்.



