மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

1


“கழுதை கெட்டால் குட்டிச் சுவர்” என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குள ம் என்றால் படித்துறை, கைபிடிச்சுவர் ஒன்றும் இல்லை. மடுவென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு வண்ணான் மடு என்று பெயர்.

கழுதை நின்றபடியே தூங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் வெயில் படாதபடி குடைபோலப் பாதுகாத்தது குட்டிச் சுவர். அந்தக் குட்டிச் சுவர் மண் சுவர் அல்ல: செங்கற்சுவர். மிகவும் ஏழை வீட்டின் பகுதி என்று சொல்வதற்கும் இல்லை; பெரிய பணக்காரனுடைய மாளிகையின் பழைய சின்னம் என்று சொல் வதற்கும் இல்லை.இடிபாடுகளைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தினால், “நடுத்தரமான குடும்பம் வாழ்ந்து வந்த நாகரிகமான வீட்டின் சிதிலம் இது” என்ற முடிவுக்கு வர நேரும்.

“தம்பீ” என்ற குரல் கழுதையின் உறக்கத்தைக் கலைத்தது.

‘ஆடை சுமக்கும் வாகனமே!’ என்று மறு படியும் சத்தம் கேட்டது.

‘யார் நம்மைக் கூப்பிடுகிறார்கள்? வக்கணையாகக் கூப்பிடுகிறார்களே?’ என்று கழுதை சுற்று முற்றும் பார்த்தது. ஒருவரையும் காணவில்லை. குட்டிச்சுவர் தான் இருந்தது. மறுபடியும் கண்ணை மூடப் போகும் சமயத்தில், “என்ன தம்பி, காதில் விழவில்லையா?” என்ற ஒலி மறுபடியும் கேட்டது.

“யார்?” என்று கழுதை குரல் கொடுத்தது. ”நான்தான், உன் பக்கத்திலுள்ள சுவர் பேசுகிறேன்.”

”சுவரா!”- கழுதை வெறிக்க வெறிக்கப் பார்த்தது.

அதென்ன அப்படிப் பார்க்கிறாய்? யாராவது நமக்குப் பேசக் கிடைக்கமாட்டார்களா என்று இத்தனை நாளாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு பிராணியைக் காணவில்லை. மற்றவர்கள் வந்து என்ன பிரயோசனம்? அவர்களுக்கு நான் பேசுவது எங்கே கேட்கப்போகிறது? குட்டிச் சுவரின் பாஷையைக் கழுதையினந்தானே தெரிந்துகொள்ள முடியும்? ஏதோ கழுதை ஊராருக்கும் வண்ணானுக்கும் பயந்து கொண்டு எங்களிடம் வருவதாக இந்தப் பைத்தியக்கார உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. நான் சொல்லும் கதையைக் கேட்கக் காது படைத்தவர்கள் கர்க்தப ஜாதிதானே? நீங்கள் எவ்வளவு ஆவலாகக் கேட்பீர்கள்! அதற்காகவே ஆண்டவன் உங்களுக்கு நீண்ட செவிகளைப் படைத்திருக்கிறான். குட்டிச் சுவர் என்று எங்களை ஏசும் மனித ஜாதியின் அகம்பாவத்தை என்னவென்று சொல்வது? மனிதன் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் தெரிந்துகொண்டு ஞானியைப்போல நிற்கும் எங்களுடைய பெருமையை அந்தக் கடவுளே அறிவார். அதனால்தான் கோயில்கள் பலவற்றில் எங்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறாரென்று கேள்விப்படுகிறேன். சரித்திர ஆராய்ச்சிக்காரர்களைக் கேட்டால் எங்கள் பெருமையைத் தெரிவிப்பார்கள். மாட மாளிகைகளைப் படம் பிடிக்கிறார்கள் பலர், சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் எங்களையும் படம் பிடிக்கிறார்கள். எங்கள் இனத்தாரை ஒன்றும் செய்யக் கூடாது, பாதுகாக்க வேண்டுமென்று அரசாங்கத்தார் கூடச் சட்டம் செய்திருக்கிறார்களாம்.”

கழுதை கொட்டாவி விட்டது. “என்ன தம்பி, மறுபடியும் தூக்கம் வருகிறதா? சரி சரி என் பெருமையைக் கேட்கப் பிடிக்கவில்லை போலிருக்கிறது!” என்றது குட்டிச் சுவர்.

கழுதை அப்போதுதான் வாயைத் திறந்தது.

“அண்ணா, என்னை மன்னிக்க வேண்டும். நான் இந்த ஊருக்குப் புதியவன். நேற்றுத்தான் வந்தேன், வந்த களைப்பினால் தூங்கினேன். இந்த இடம் தனியாக இருந்ததனால் இங்கே வந்தேன்.”

“அடடா! இங்கும் என்னுடைய தொந்தரவு வந்து விட்டதே என்று நினைக்கிறாயோ?”

“இல்லை அண்ணா; உன் பேச்சுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்கவில்லையே, அதற்குக் காரணம் சொல்ல வருகிறேன். அதிகமான களைப்பினால் கண் சுற்றியது. உன்னிடத்தில் அவமரியாதையாய் இருப்பதாக நினைக்காதே.

“சே,சே! அப்படியெல்லாம் நினைப்பேனா?பல நாளாகச் சிநேகிதர்களையே காணாமல் ஏங்கியிருந்தேன். அதனால்தான் உன்னைக் கண்டவுடன் படபட வென்று கொட்டிவிட்டேன். வயசாகிவிட்டதோ, இல்லையோ?”

“பேசினால் என்ன? இப்படிக் கலகலப்பாகப் பேசுகிற வர்களைக் கண்டால் எனக்கு அதிகமாகப் பிடிக்கும். நானும் பேசக்கூடியவன்தான். என்னவோ கண்ணை ஒரே இறுக்காக இறுக்கியது; தூங்கிவிட்டேன். என் காதில் உன் பேச்சு அரைகுறையாக விழுந்தது. கனவு போல இருந்தது. நான் விழிப்பாக இருந்தால் இத்தனை தூரம் நீ பேசுகிறவரையில் சும்மா இருப்பேனா? வருபவர்களை வா என்று கூப்பிட்டு உபசாரம் செய்து பேசி அளவளாவுகிறதென்பது தனிக் குணம். எங்கள் ஊர்க்காரர் கள் அதில் மிகவும் சிறந்தவர்கள்.

“அப்படியா? உங்கள் ஊர் எது? பார்த்தாயா? நான் மறந்துவிட்டேன். உன்னைப்பற்றியே நான் இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே! நேற்றுத்தான் வந்தே னென்று சொன்னாய். எங்கிருந்து வந்தாய், யார் வீட்டுக்கு வந்தாய், எவ்வளவு நாளைக்கு இருப்பாய்? ஒன்றும் கேட்காமல் என் கதையை ஆரம்பித்து விட்டேனே! என்ன இருந்தாலும் குட்டிச்சுவர் குட்டிச்சுவர்தானே?”

“என்ன அண்ணா, அப்படிச் சொல்கிறாய்? சற்று முன்புதானே குட்டிச்சுவரின் மாகாத்மியத்தை எடுத்துச் சொன்னாய்? அதற்குள் இப்படிக் குறைவாகச் சொல்கிறாயே!”

“நீ மிகவும் விவகார ஞானம் தெரிந்தவன்போல இருக்கிறதே! நல்ல வேளை! இவ்வளவு காலத்துக்குப் பிறகு, பேசுவதற்கு நீ கிடைத்தாயே! நடுவிலே பேசாமலேயே இருந்துவிட்டதனால், அப்படி மாறி மாறி வருகிறது வார்த்தை. வயசு ஆகிவிட்டதும் ஒரு காரணம். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே தம்பி “

“எதை? முன்னே சொன்னதையா? பின்னே சொன்னதையா?” என்று கேட்டது கழுதை.

“எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள். இவ்வளவு கெட்டிக்காரத் தனமாகப் பேசும் உன்னைக் கண்டால் எனக்குச் சந்தோஷம் உண்டாகிறது.உன்னிடத்தில் எத்தனையோ பேச வேண்டும். ஆனால், பேச எண்ணினால் துக்கம் பொங்கி வருகிறது.”

“துக்கம் ஏன் அண்ணா?”

‘பழைய ஞாபகம் வருகிறது. அதனால் துக்கம்.’

“அது என்ன பழைய ஞாபகம்? என் மாதிரி யாராவது உனக்குப் பழைய சிநேகிதர்கள் இருந்தார்களா?”

“அதை ஏன் கேட்கிறாய்? அது பெரிய கதை, முதலில் நீ உன் கதையைச் சொல். பிறகு என் கதையைச் சொல்கிறேன்.”

“என் கதை என்ன அண்ணா? நான் வயசில் எவ்வளவோ சிறியவன். எனக்குத் தெரிந்ததோ கொஞ்சம். அதைப் பிறகு சொல்கிறேன், உன் கதையைச் சொல்லு கேட்கிறேன்.”

“அப்படியானால் உன் ஊரை மாத்திரம் சொல்லி விடு. பிறகு என் கதையைச் சொல்கிறேன்.”

நான் இருபது மைல் தூரத்தில் இருக்கிறதே, கோழிப் பேட்டை, அங்கிருந்து வருகிறேன்.”

“அடேடே! இந்த ஜமீனுக்கும் அப்பாலிருந்தா வருகிறாய்? கோழிப்பேட்டையா? அதே கோழிப்பேட்டையா?”

“எந்தக் கோழிப் பேட்டை? உனக்குத் தெரியுமா அண்ணா? நீ அங்கே போயிருக்க முடியாதே!”

“நான் எங்கேதான் போக முடியும்,தம்பி? இருந்த இடத்தில் இருந்தே எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கோழிப் பேட்டையைப் பற்றியும் அப்படித்தான் தெரிந்துகொண்டேன். நீ சொன்ன கோழிப் பேட்டை கமலபுர ஜமீனைச் சேர்ந்த கோழிப் பேட்டைதானா?”

”ஆமாம்.”

“இங்கே நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறாய்?”

“குமரப்பன் வீட்டுக்கு. அவனை உனக்குத் தெரியாது. அவனே புதிதாகத்தான் இந்த ஊருக்கு வந்திருக் கிறான். அது ஒரு கதை. உன் கதையைச் சொல், முதலில் “

“சரி; சொல்கிறேன். நடுவில் ஊம் கொடு; இல்லா விட்டால் எனக்கு உற்சாகம் இருக்காது.”

“அண்ணா, உன் தந்திரம் எனக்குத் தெரியும். நான் எங்கே மறுபடியும் தூங்கிவிடுவேனோ என்று உனக்குச் சந்தேகம். அதனால்தான் ஊம் கொட்டச் சொல்கிறாய் என்று சிரித்தது கழுதை குட்டிச் சுவரும் கூடச் சிரித்தது.”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *