மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

8


    ரெண்டு நாள் கழித்துக் கழுதை மீட்டும் தன் நண்பனிடம் வந்தது. அதைக் காணும் போதே குட்டிச்சுவர் அடைந்த ஆனந்தம் கரையற்றதாக இருந்தது.

    “வா, தம்பி. என்ன இப்படி என்னை அடியோடு மறந்து விட்டாயே!” என்று கேட்டது.

    ‘இரண்டு நாள் ஆனதைப் பெரிதாகச் சொல்கிறாயே! எத்தனை வருஷங்களாக நீ யாருடனும் பேசாமல் உன் துக்கத்தை மனசுக்குள்ளே புதைத்துக் கொண்டு நின்றிருந்தாய்? இந்த இரண்டு நாள் உனக்குப் பொறுக்க வில்லையே! உன்னுடைய முருகாயி கூடச் சில நாள் ஏகாம்பரத்தைப் பிரிந்து இருந்திருப்பாள் போலிருக்கிறது. நீ என்னைப் பிரிந்து இரண்டு நாள் இருக்க இவ்வளவு தவிக்கிறாயே !’

    “அந்தப் பழைய கதையை ஏன் கிளறுகிறாய் தம்பி? முருகாயிதான் ஏகாம்பரத்தைப் பிரிந்து அத்தனை வருஷ காலம் உங்கள் ஊரில் வாழ்ந்தாளே! அது கிடக்கட்டும். நிராசையோடு இனி மாறுதல் இல்லை என்ற சித்தாந்தம் வந்து விட்டால் எத்தனை காலம் ஆனாலும் காத்திருக்க லாம்; காத்திருப்பதை விட வேறு வழியும் இராதே! ஆனால் நம்பிக்கை வந்து விட்டாலோ, ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருக்கும். ஜமீன்தார் இப்போது அவர்கள் இந்த ஊருக்கு வந்து வந்துவிட்டது கண்டு ஆனந்தப்பட்டிருப்பாரே ?”

    “அண்ணா, உனக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன்.”

    “என்ன தம்பி, அது? சொல்லு.”

    “முருகாயியை நீ பார்க்கப் போகிறாய். அவள் உன்னிடம் வரப் போகிறாள்.”

    “என்ன தம்பி விளையாடுகிறாயா? அவள் தன் பாட்டி வாழ்ந்த வீட்டைப் பார்க்க வரப்போகிறாளா? அவளுக்குத் துரை நல்ல வீடு கொடுத்திருப்பாரே? அந்தக் காலத்தில் இந்த வீடு விருந்தும் வேடிக்கையுமாக இருந்ததென்பதை அவளுக்கு ஆராவது சொன்னார்களோ? இப்போது இந்தக் குட்டிச் சுவரைப் பார்த்தால் என்ன தெரியப் போகிறது? நான் அவளோடு பேச முடிந்தால் பழைய கதையை விரிவாக எடுத்துச் சொல்வேனே! அவளுடைய பாட்டி மாசு மறுவற்றவள் என்பதை அடித்துச் சொல்வேன். ஆனால் அது நடக்கக் கூடிய காரியமா? அப்படி ஏதாவது நடந்தால் கூட, இங்கே எதோ பேய் இருந்து கொண்டு பேசுகிறது என்று எண்ணிப் பயந்து கொண்டு ஓடிப்போய் விடுவாள். என்ன பயங்கொள்ளி உலகம்!”

    ”பயம் ஒன்றும் இல்லை. இந்த முருகாயியும் தைரிய சாலிதான். அவள் தன் கணவனுடனும் தாய் தகப்பனுட னும் இங்கேயே வந்து வாழப் போகிறாள்.”

    “தம்பி, என்னை இப்படி யெல்லாம் தூண்டில் போட்டு வாங்காதே. நீ சொல்லுவது எதையும் விளையாட்டாக நினைப்பதற்கு இல்லை. நீ மிகவும் ஆழமானவன் அப்பா. சமாசாரத்தைத் தெளிவாகச் சொல்”

    ஜமீன்தாருக்கு முருகாயியும் அவள் குடும்பமும் இந்த ஊருக்கே வந்து விட்டதில் எல்லையில்லாத திருப்தி. ஏதோ ஒரு பழைய வீட்டில் இப்போதைக்கு இருக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். புதிய வீடாக ஒன்று கட்டிக் கொடுக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். அவர் இவர்களிடம் ஒரு சமாசாரம் கேட்டாராம். ‘பழையபடி ஏகாம்பரம் வாழ்ந்திருந்த வீட்டைக் கட்டித் தந்தால் அங்கே இருப்பீர்களா?’ என்று கேட்டார். மற்றவர்களானால் பயப்படுவார்கள். முருகாயிக்கு அது சம்மதமாகவே இருந்தது. ‘ஊராரெல்லாம் அங்கே பேய் இருக்கிறது என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை.உங்களுக்குத் தைரியம் இருந்தால் அங்கே போய் இருக்கலாம். அந்தப் பக்கத்தில் இன்னும் சில வீடுகளைக் கட்டி அரண்மனை வேலைக்காரர்களைக் குடியிருக்கச் செய்யலாம் என்று நினைக்கிறேன்’ என்று துரை சொன்னார். அவர் எது சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள் இவர்கள்.

    “முருகாயிக்குச் சம்மதமென்று சொன்னாயே. அவள் பயப்படமாட்டாளா? சிறு பெண்தானே”

    “அவள் சிறு வயசிலிருந்தே துணிவுடையவள். பயமில்லாமல் எங்கானாலும் போய்விட்டு வருபவள். இதை நான் நன்றாக அறிவேன். அவளுக்குக் கொஞ்ச நஞ்சம் பயம் இருந்தாலும் போகும்படியாக, பக்கத்தில் வீடுகளைக் கட்டிச் சில மனிதர்களைக் குடிவைக்கப் போவதாக வேறு ஜமீன்தார் சொல்லிவிட்டாரே!”

    “துரை மகா கெட்டிக்காரர், மிகவும் உத்தமர் என்றே தோன்றுகிறது” என்று குட்டிச்சுவர் சொல்லியது.

    “அதற்கு என்ன சந்தேகம்?இன்னும் கேள். இந்த வண்ணான் மடுவைத் தூர்த்துவிட்டு இங்கே ஒரு பிள்ளையார் கோவிலைக் கட்டப் போகிறாராம். பேயிருந்த இடம் மாறிப் பிள்ளையார் இருக்கும் இடமாகப் போகிறது.

    “சபாஷ்”

    “அண்ணா, நீ மறுபடியும் வாழப் போகிறாய்.பழைய முருகாயி போய்ப் புது முருகாயி வந்ததுபோல, நீயும் புது அவதாரம் எடுத்து மீண்டும் விருந்து வேடிக்கைகளைப் பார்க்கப் போகிறாய். ஆமாம்; இப்பொழுதே சொல்லிவிட்டேன். என்னை மாத்திரம் மறந்து விடாதே!’

    கழுதை சொல்லி முடித்ததோ இல்லையோ, குட்டிச் சுவர் பிரமை தட்டிப் போய்ப்படபட வென்று அப்படியே சாய்ந்து விட்டது. அவ்வளவு காலம் மற்றப் பகுதிகளெல்லாம் இடிந்து விட்டாலும் பழைய வீட்டின் தனி அடையாளமாக நின்றிருந்த அதுவும் அன்று விழுந்து விட்டது.

    ★ ★ ★

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *