
மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்
2
கவனமாய்க் கேள் தம்பி; இது பெரிய கதை; வெகு நாளையக் கதை: மூன்று தலைமுறைக் கதை. இந்தக் கதையை வேறு யாரும் சொல்ல முடியாது. அத்தனை காலமும் இருந்து பார்த்த எனக்குத்தான் தெரியும்.
இந்தக் குமாரபுரம் ஜமீனிலே இப்போது இருக்கிற ஜமீன்தார் அவரை ராஜா என்றுகூடச் சொல்வார்கள் இவர் பேர் பால்வண்ணதுரை. இவருடைய தாத்தாவுக்கும் அதுதான் பேர். அவர் காலத்தில்தான் என் கதை ஆரம்பிக்கிறது.
“ஹூம்”- இது கழுதையின் குரல்.
“பால்வண்ணதுரை என்ற பேர் அவருக்கு வைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. அவர்களுடைய குல தெய்வத்துக்கு அந்தப் பேராம். ஆனால் நாளடைவில் அந்தப் பேர் மாறிவிட்டது. பாலாடைத்துரை, பாலாடைத்துரை என்றே எல்லோரும் அவரை அழைக்கலானார்கள். அவருக்குப் பாலாடையில் அதிகமான பிரியம் என்று நினைத்துக் கொள்ளாதே. அதற்கும் ஒரு காரணம் உண்டு.
பால்வண்ண துரை சிங்கார புருஷர். ஆடை ஆபரணங்களில் அதிகக்கவனம் செலுத்துபவர். ஆள் நல்ல தங்கமேனியாக இருப்பார். எப்போதும் சிரித்த முகம். அன்றன்று புதுச் சலவை ஆடைகளைத்தான் உடுப்பார். அதில் ஓர் அப்பு அழுக்கு இருக்கக்கூடாது. ஒருமுறை உடுத்த ஆடையைச் சலவை செய்யாமல் மதுமுறை கூடுக்கமாட்டார். வெளியிலே போய்வந்தால் உடனே உடைகளை மாற்றிக் கொள்வார். எல்லாம் சுத்தமான வெள்ளை ஆடை பால்போல வெள்ளையாடைகளை உடுத்து வந்தமையால் அவருக்குப் பாலாடைத்துரை என்று பேர் வந்தது.
அந்தப் பேரை யார் முதல் முதல் வைத்தார் தெரி யுமா? யாரோ தமிழ்ப் புலவர் ஜமீன் தாரைப் பார்க்க வந்தாராம். அவருடைய தூய வெண்மையான ஆடை களைக் கண்டு, “நீங்கள் பால்வண்ணதுரை’ உங்கள் ஆடையும் பாலாடையாக இருக்கிறது” என்று சிலேடையாகப் பேசினாராம். அதுமுதல் பாலாடைத்துரை என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள்.
பாலாடைத்துரைக்குத் தினந்தினம் புதிய சலவைத் துணிகள் வேண்டுமானால், இந்த ஜமீனில் வண்ணார் களுக்கு வேலை அதிகம் இருப்பது இயற்கை அல்லவா? ஜமீன்தார் மாத்திரம் அல்ல. அரண்மனையில் உள்ள அவருடைய உறவினர்களும் தங்கள் ஆடையை மாசு மறுவின்றி வைத்துக் கொள்ளப் பிரயாசைப் பட்டார்கள். ஜமீனில் வேலை செய்யும் உத்தியோகஸ்தர்களும் சலவைத் துணிகளையே அரண்மனைக்கு வரும்போது உடுத்துவார் கள். அரண்மனை யென்று ஜமீன்தார் மாளிகையைச் சொல்வது வழக்கம். இப்படிப் பலருக்கும் செய்யவேண்டியிருந்ததால் சலவைக்காரர்களுக்கு இடை விடாத சலவை வேலை இருந்தது.
துரைக்கு மாத்திரம் சலவை செய்ய ஒரு தனிக் குடும்பமே இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஏகாம்பரம் என்ற வண்ணானும் அவனுடைய தாயும் வேறு சிலரும் இருந்தார்கள். அவ்வளவு பேரும் துரையின் ஆடைகளைத் தவீர வேறு யாருடைய உடைகளையும் வெளுப்பதில்லை. அந்தக் குடும்பத்திற்கு அரண்மனையிலிருந்து தனியே மானியம் விட்டிருந்தார்கள். பாலாடைத்துரை தம் காலத்தில் ஒரு நிலத்தை அவர்களுக்கு அளித்தார். அதுமாத்திரமா? அடிக்கடி துரை அளிக்கும் இனாம் வேறு ஏகாம்பரத்துக்குக் கிடைக்கும். இவ்வளவும் கிடைக்கும்போது அவர்களுக்கு என்ன குறை இருக்கப்போகிறது? வேறுயாருக்கும் வெளுக்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு ஏற்படவில்லை.
ஏகாம்பரத்துக்கு அப்போது இருபது வயசு இருக் கும். கல்யாணம் ஆகவில்லை. அவனுடைய உறவிலே எத்தனையோ பெண்கள் இருந்தார்கள். இருந்தாலும் யாரிடத்திலும் அவன் மனசு மேவவில்லை. ஆண், பார்ப்பதற்கு அழகாக இருப்பவன்; தோள்களெல்லாம் எவ்வளவு உயரமாக இருக்கும்! பரந்த மார்பு. அவன் வண்ணானாகப் பிறக்காமல் ராஜாவாகப் பிறந்திருந்தால் ஆயிரம் ராஜகுமாரிகள் அவன் அழகில் சொக்கிப் போயிருப்பார்கள். இப்போது தான் என்ன? அவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள அவனுக்குச் சொந்தமான பெண்களெல்லாம் ஆசைப்படத்தான் பட்டார்கள். அவன் இசையவில்லை. பாவி! சொந்த மாமன் மகளைத் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டானா?
நீ சொன்னாயே, அந்தக் கோழிப்பேட்டையிலிருந்து ஒருத்தன் ஒருநாள் ஏகாம்பரத்தின் வீட்டுக்கு வந்தான். ஆள் பேச்சில் வல்லவனாக இருந்தான்.மகா வாயாடி. சனியன் மாதிரி வந்து சேர்ந்தான். அவனைச் சொல்லி என்ன பிரயோசனம்? விதி யாரை விட்டது?
அவன் வந்தானா? வந்து என்ன என்னவோ சமாசாரமெல்லாம் பேசிக்கொண்டிருந்தான். கமலபுரம் ஜமீன்தார் பெண்ணை, இந்த ஊர் ஜமீன் தாருக்குக் கொடுக்க ஏற்பாடு ஆவதாக அவன் ஊரிலே வதந்தி இருந்ததாம். அதை அவன் சொன்னான். அந்த ஜமீன் பெருமைகளை அளந்தான். பிறகு, “மச்சான்,மச்சான், நீ இந்த ராஜாவுக்குப் பிரியமானவனாக இருக்கிறாய். இவருக்கு எங்கள் ஜமீனிலே கல்யாணம் ஆகப்போகிறதே; உனக்கும் அந்த ஜமீனிலே கல்யாணம் ஆனால் நன்றாக இருக்குமே!” என்று ஒரு யோசனையையும் சொன்னான். ஏகாம்பரத்துக்கு அவன் சொன்னது பொருத்தமாகவே பட்டது. ஆனால் “பெண் இருக்கிற இடம் தெரிய வேண்டாமா?” என்று யோசிப்பதற்குள், ”பெண்ணைப் பற்றி யோசிக்கவேண்டாம். மச்சான். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். கண்ணுக்கு நன்றாக இருப்பாள். அதை நானே சொல்லக்கூடாது. நீயே பார்த்தால் தெரிந்து கொள்வாய். நம்முடைய குடும்பத்துக்குள் எவ்வளவோ காலமாகச் சம்பந்தம் இருக்கிறது. நீதான் இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பக்கமே தலை காட்டு வதில்லை. வந்திருந்தால் என் தங்கையைப் பார்த்திருப்பாய். உன்னைப்போல ஒரு புருஷன் கிடைக்க அவள் தவசு செய்திருக்கவேண்டும்” என்று சொன்னான்.
ஏகாம்பரத்துக்கு உண்டான சபலம் உறுதியான ஆர்வமாக மாறியது. “உன்னுடைய அப்பா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பாரா? உங்கள் ஜமீனுக்குள்ளே மாப்பிள்ளை வேண்டுமென்று நினைக்க மாட் டாரா?” என்று கேட்டான்.
“அப்பா எதிலும் தலையிடமாட்டார். நான் சொன்னால் சரியென்று சொல்லிவிடுவார். எதற்கும் அத்தையை ஒரு தடவை எங்கள் ஊருக்கு அனுப்பி, தங்கச்சியைப் பார்த்துவிட்டு வரச்சொல். இன்றைக்கே வந்தாலும் சரி, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றான் கோழிப் பேட்டைக்காரன்.
“இல்லை, இல்லை.எப்படித் திடீரென்று புறப்பட்டு வரமுடியும்? நல்ல நாள் பார்த்து அனுப்புகிறேன்” என்றான் ஏகாம்பரம்.
நல்ல நாள் பார்த்து ஏகாம்பரத்தின் தாய் கோழிப் பேட்டைக்குப் போய் முருகாயியைப் பார்த்தாள். தன் பிள்ளை யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்கிறானே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. இப்போது கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்றதே அவளுக்குப் பெரிதாகத் தோன்றியது. அதோடு, முருகாயியைப் பார்த்தபோது அவளுடைய அழகும், வேலைத் திறமையும் அவள் மனசைக் கவர்ந்தன. துடிதுடிப்பாக இருந்தாள் அவள். ஏகாம்பரத்தின் தாய்க்கு அவளை நன்றாகப் பிடித்துவிட்ட து.
ஊருக்கு வந்து ஏகாம்பரத்தினிடம், “பிள்ளை நல்லா இருக்குது. ராசாத்தி மாதிரி அழகாக இருக்கிறாள்” என்றாள்.
முருகாயிக்கு வேண்டிய பரிசம் போட்டு ஏகாம்பரம் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். இந்த ஊர் ஜமீன்தார் அவனுக்குக் கல்யாணத்துக்கு என்ன என்னவோ இனாம் கொடுத்தார். வெள்ளியாலேயே ஓர் இஸ்திரிப் பெட்டி கொடுத்தாரென்றால் பார்த்துக் கொள்ளேன்.
முருகாயி வந்தாள். நல்ல வளர்ச்சியை அடைந்த பெண். ராசாத்தி மாதிரிதான் இருந்தாள். இந்த வீட்டிலே நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவளைப் போல அழகாக யாரையும் நான் பார்த்ததில்லை. ஏகாம்பரத்துக்கும் அவளுக்கும் நல்ல பொருத்தம். ராஜா ராணி போல் இருந்தார்கள்.
ஜமீன்தாருக்குக் கல்யாணம் இன்னும் ஆகவில்லை. தள்ளிக்கொண்டே போயிற்று. சீதன விஷயத்தில் ஏதோ கசமுசல் ஏற்பட்டது. ஊரில் என்ன என்னவோ பேசிக் கொண்டார்கள். ஜமீன்தாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் மனசு ஒத்துப் போனதாகச் சொன்னார்கள். பாலாடைத் துரை அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று தீவிரமாக இருப்பதைக் கமலபுரம் ஜமீன்தார் உணர்ந்து கொண்டார். அவர் பெரிய செலவாளி முரட்டுத் தடியர்களை யெல்லாம் சோறுபோட்டு வளர்த்து மல்யுத்தம் பண்ணச் செய்து பார்ப்பதிலே அவருக்கு ஆசையாம். இந்தக் கல்யாணத்திலே பெருத்த லாபம் அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருக்குக் கடன் இருந்தது. அந்தக் கடனை இவர் தீர்த்தால் தான் தம் பெண்ணைக் கொடுப்பதாக அவர் சொல்லிவிட்டாராம்.
ஏகாம்பரம் ஒருநாள் தன் பெண்டாட்டியிடம் பேசினது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. “முருகாயி, ஜமீன்தார் துரையைக் காட்டிலும் நான் அதிருஷ்டசாலி. அவர் உங்கள் ஊர் ராசாத்தியைக் கல்யாணம் பண்ணப் போகிறாரென்று கேள்விப்பட்டு உன்னை நான் தேடி வந்தேன். அவருக்கு இன்னும் ராசாத்தி கிடைக்கவில்லை; அந்த ராசாத்தி வருகிறாளோ வேறு யார் வருகிறானோ! எனக்கு என் ராசாத்தி முதலில் வந்துவிட்டாள்!” என்று சொல்லி அவள் கன்னத்தை நிமிண்டினான்.
“போங்க மாமா” என்று அவள் கண்ணைக் கோணிக் கொண்டபோது பார்க்கவேண்டுமே! இந்திரனானாலும் அப்போது பார்த்தானானால் அடிமையாகி விடுவான். ஏகாம்பரம் அவளிடம் எல்லாவற்றையும் பணயம் வைத்ததில் என்ன ஆச்சரியம்?
ஜமீன்தார் துரை ஏகாம்பரத்தினிடம் பிரியமாக இருந்ததோடு அடிக்கடி பணமும் கொடுத்து வந்தாரென்று சொன்னேன் அல்லவா? அதனால் அவன் கையில் தாராளமாகப் பணம் புரண்டது. கல்யாணம் ஆண் புதிசு அழகான பெண்டாட்டி, அவளுக்கு என்ன என்ன வேண்டுமோ அவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதியும் இருக்கும்போது முருகாயிக்கு என்ன குறைச்சல்? ஏகாம்பரம் அவளுக்கு வேண்டிய அழகுப் பண்டங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்தான். ஒருநாள் பூ இல்லாமல் இருக்காது. அவள் கொண்டை போட்டுப் பூவைச் செருகிக்கொள்வதே தனி அழகு. புதிய புடைவைகளை வாங்கிக் கொடுத்தான்; புதிய புதிய நகைகளைப் பண்ணிப் போட்டான். இரண்டு பேரும் நகமும் சதையும் போல ஒற்றுமையாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து வந்தார்கள்.
கல்யாணம் ஆகி ஒரு மாசம் இங்கே இருந்தார்கள். இரண்டு வாரம் ஏகாம்பரம் தன் மாமனார் வீட்டுக்குப் போய் விருந்துண்டு சுகமாக இருந்தான். இப்படிப்பட்ட மாப்பிள்ளை தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி முருகாயியின் வீட்டுக்காரர்கள் மகிழ்ந்து போனார்கள். அங்கே இரண்டு பேரும் சொர்க்க போகத்தை அநுபவித்தார்கள். உள்ளூர்க்காரர்களெல்லாம் முருகாயியையும் அவள் அலங்காரத்தையும் பார்த்துப் பார்த்துப் பிரமித்தார்கள். அட! இவளைப் பார்த்தால் வண்ணாத்தி மாதிரியா இருக்கிறாள்? யாரோ ஜமீன்தார் வீட்டுப் பெண்ணைப் போல அல்லவா இருக்கிறாள்?” என்று வியப்புற்றார்கள்.
‘அழகைக் கடவுள் கொடுத்திருக்கிறார். அலங்காரத்தைக் கட்டிக் கொண்டவன் செய்திருக்கிறான்’ என்றார் சிலர். ஆமாம்; என்ன இருந்தாலும் அந்த அந்த நிலைக்குத் தகுந்தபடி இருக்கவேண்டாமா? புனுகு இனாமாகக் கிடைத்ததென்றால் கால் கையெல்லாம் பூசிக் கொள்வதா? கொஞ்சமும் அடக்கம் இல்லாமல் இப்படித் தலை கீழாக நிற்பது தகாது” என்று சில பொறாமைப் பிண்டங்கள் சொல்லிக் கொண்டார்கள்
“உனக்கு இந்த விஷயமெல்லாம் எப்படித் தெரியும்? என்று நீ கேட்கலாம் தம்பி. அவர்கள் இரண்டு பேரும் கூடிக் குலாவிப் பேசும்போது இத்தனை சங்கதிகளும் இந்த இடத்தில் அடிபட்டுப் போகுமே. அவர்கள் ரகசியமாகப் பேசிக்கொண்டாலும் எனக்குத் தெரியாமல் இருக்குமா? நான்தான் அவர்கள் ரகசியத்தைப் பிறர் அறியாதபடி குறுக்கே நின்றேன். நான் அறியாமல் எப்படி இருக்க முடியும்?”
ஏகாம்பரம் மாமனார் வீட்டில் தங்கியிருந்தபோது ஊர் முழுவதும் அவனைப் பற்றியும் அவன் மனைவியைப் பற்றியுமே பேச்சாக இருந்தது. எந்தப் பாவியோ கண் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வருஷம் அவர்கள் நிலை இப்படி ஆகுமா?
“அண்ணே, என்ன இப்படி அடிக்கடி அங்கலாய்க்கிறாயே! கதையை மாத்திரம் சொல்லேன்.
“வயசாகி விட்டதோ இல்லையோ! அப்படித்தான் இருக்கும். ஆனாலும் கவனமாய்க் கேள் தம்பி.”



