மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

7


    “தலையிருக்க வால் ஆடுமா என்ற பழ மொழியைக் கேட்டிருக்கிறாயா அண்ணா?” என்று கேட்டது கழுதை.

    “பழமொழி கிடக்கட்டும்; தம்பி. உன் கதையைச் சொல், கேட்கிறேன் என்றது சுவர்.

    ”அந்தப் பழமொழியிலேதான் என் கதை ஆரம்பமாகிறது. நீ இதுவரையில் தலையைச் சொன்னாய். நீ எங்கள் பாட்டனார் காலத்தைச் சேர்ந்தவன். நானோ நேற்றுப்பிள்ளை. ஆனாலும் எனக்கும் பாட்டனாருக்கும் தொடர்பு இல்லாமல் போய் விட்டதா? உன் கதைக்கும் என் கதைக்கும் தொடர்பு உண்டு.

    “என்ன? என்ன தம்பி புதிர் போடுகிறாய்?”

    “இல்லை அண்ணா; உள்ளதைத் தான். சொல்ல வருகிறேன். நீ சொன்ன கதையைக் கேட்டு என்னைப்போல வேறு யாரும் ரசிக்க முடியாது. ஏனென்றால் நீசொன்ன இந்த முடியாத கதையின் முடிவு எனக்குத் தெரியும். நீ தலையைச் சொன்னாய். எனக்கு வால் தெரியும், உன் கதையைக் கேட்ட பிறகுதான் என் கதைக்குச் சுவாரசியம் ஏற்பட்டது. பல விஷயங்கள் தெளிவாயின.

    “என்ன தம்பி சுற்றிச் சுற்றி வருகிறாயே? உனக்கு நான் சொன்ன கதையின் முடிவு தெரியுமென்று சொல்கிறாயே! நீ இளம்பிள்ளை! பழைய சமாசாரத்தைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?”

    “ஏன் அண்ணா அவ்வளவு அவசரப்படுகிறாய்? நான் ஆரம்பிப்பதற்கு முன்னால் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திக்குமுக்காடச் செய்கிறாயே?”

    “சரி,உன் இஷ்டம்போல் சொல்” என்று மெளனம் சாதிக்கத் தொடங்கியது குட்டிச் சுவர்.

    “நான் எவ்வளவு பொறுமையோடு உன் கதையைக் கேட்டு வந்தேன். நடு நடுவே குறுக்கிட்டுச் சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டா யிற்று. ஆனால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய் விடுமென்று சும்மா இருந்தேன். நீ அங்கலாய்க்கும் போதெல்லாம் உனக்கு ஆறுதல் தரும் சமாசாரத்தைச் சொல்ல வாயெடுத்தேன். ஆனால், எல்லாவற்றையும் சேர்ந்தாற் போல் சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தால் பேசாமல் இருந்து விட்டேன். அண்ணா, ஒரு விஷயத்தை மாத்திரம் முதலிலே சொல்லிவிடுகிறேன். அப்போது உனக்கு நான் சொல்லும் கதையில் அதிகமான சுவை உண்டாகும். நீ நிறுத்திய கதையின் சோக கட்டம் அதோடு நின்று விட்டது. அதற்கு மேல் எல்லாம் நல்ல சமாசாரந்தான்.”

    “தம்பி, என்னை இப்படி யெல்லாம் சடுகுடு காட்டி வாட்டி யெடுக்காதே. என் முருகாயி என்ன ஆனாள்? அவளை நீ பார்த்திருக்கிறாயா? சௌக்கியமாக இருக் கிறாளா?”

    “கழுதை சிரித்தது. வயசு ஆனாலே மயக்கமும் கூட வந்து விடும்போல் இருக்கிறது. உன் கதையை முடிக்கும் போது மூன்று தலைமுறைக் கதை என்று சொன்னாயே; அந்த முதல் தலைமுறையில் வாழ்ந்திருந்த முருகாயியை முளைத்து மூன்று இலை விடாத நான் எப்படி அண்ணா பார்த்திருக்க முடியும்?”

    “தப்பு, தப்பு; ஒப்புக்கொள்கிறேன். போதும் தம்பி உன் பீடிகை. கதையைச் சொல்” என்று படபடப்புடன் குட்டிச்சுவர் கூறியது. மேலே கழுதை சொல்லத்தொடங்கியது.

    முருகாயி கமலபுரத்துக்குப் போன செய்தி வரைக்கும் உன் கதை அதற்குப் பிறகு என் கதை.

    அவன் கமலபுரத்துக்கு வந்து சில மாசங்களில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் தன் புருஷனை இழந்தவுடனே உயிரை விட்டிருப்பாள். ஆனாலும் அவனுடைய ஞாபகத்தை உண்டாக்கும் குழந்தையைப் பெற்றுப் பார்க்கவேண்டும் என்ற ஆசையோடு இருந்தாள்.

    அவளுடைய தாய் தகப்பனாருக்குக் கமலபுரம் ஜமீன்தார் வீட்டுச் சம்பந்தம் அற்றுவிட்டது. முருகாயியைத் துரத்திவிட்ட தடியர்கள் இங்கேயும் வந்து தொந்தரவு கொடுப்பார்களோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் ஜமீன் தார் வீட்டு வேலை போய்விட்டது. தங்களுடைய ஜீவனத்துக்கு வழி யென்ன என்ற கவலை அவர்களுக்கு வந்து விட்டது.

    நீ சொன்னதுபோல, எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே முரடர்கள் அல்ல. ஜமீன்தாரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். ஊரில் இருந்த ஜனங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல; நல்லவர்கள்; பிறருக்கு உபகாரம் செய்யவேண்டுமென்ற எண்ணம் உடையவர்கள்

    முருகாயியின் கதை ஊரெல்லாம் பரவி விட்டது. அவள் மேல் யாரும் குற்றத்தைச் சுமத்தவில்லை. அவளுக்கு எல்லோரும் இரங்கினார்கள். அதன் பயனாக, ஜமீன்தார் வீட்டு வேலை அந்தக் குடும்பத்திற்கு இல்லாமற் போனாலும் ஊராருடைய வேலை கிடைத்தது. வர வர ஊரார் வேலை அதிகமாகவே கிடைத்தது. முருகாயிக்குக் குழந்தை பிறந்து வளர வளர அந்த வேலையினால் கிடைத்த கூலியும் பெருகியது. குழந்தை அதிருஷ்டமுடையது என்ற தீர்மானத்துக்கு அந்தக் குடும்பத்தினர் வரும்படியாக, ஒரு நிலை ஏற்பட்டது. கடவுள் கருணையால் அந்தக் குழந்தை நன்றாக வளர்ந்தது.

    குழந்தை குழந்தையாக இருக்குமா? அது அவளாகி வளர்ந்து வந்தது. வயசாகிப் பருவமும் அடைந்தது. அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமும் ஆயிற்று. முருகாயிக்கு அண்ணன் ஒருவன் இருந்தான் என்று உனக்குத் தெரி யுமே! அவன் தானே ஏகாம்பரத்துக்குத் தன் வீட்டில் பெண் இருக்கிறதென்று சொன்னவன்? அவனுடைய மகனையே அந்தப் பெண் கட்டிக்கொண்டாள்.

    அவர்கள் நன்றாகவே வாழ்ந்தார்கள். முருகாயியின் மகள் முருகாயியைப்போலப் பட்டுப் புடைவை கட்டிக்கொள்ளவில்லை; இரவுக்கு இரவே வீட்டை வீட்டு ஓடிப்போகவும் இல்லை. அந்தப் பெண்ணுக்கு ஒருகுழந்தை பிறந்தது; அது கூடப் பெண் குழந்தை தான். அந்தக் குழந்தை பிறப்பதற்கு முன்னாலே முருகாயி கண்ணை மூடிக்கொண்டாள். அவள் அவ்வளவு காலம் இருந்ததே பெரிது.

    பழைய முருகாயி போனாலும், அந்தக் குடும்பத்துகுப் புது முருகாயி வந்துவிட்டாள். முருகாயியின் பேத்திக்கும் முருகாயி என்றுதான் பெயர். அவளும் நல்ல அழகிதான். அண்ணா, அவளை பார்த்தால் உன் முருகாயிக்கும் அவளுக்கும் வித்தியாசமே தெரியாது. அப்படி எல்லோரும் சொல்லிக்கொள்கிறார்கள்.

    “நான் எப்படித் தம்பி அந்தப் பெண்ணைப் பார்க்க முடியும்?” என்று பெரு மூச்சு விட்டபடியே சுவர் கேட்டது.

    பொறு, பொறு, கதை முழுவதையும் கேள். உனக்குச் சந்தோஷத்தைத் தரும் கதை இது. பெரிய முருகாயியின் கதை அல்ல: சின்ன முருகாயியின் கதை. அந்தச் சின்ன முருகாயி வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அந்த வீட்டுக்கு ஆரோ வந்தார்கள். ஜமீன்தாருடைய ஆள் என்று சொன்னார்கள். ஜமீன்தார் வீட்டுப் பேச்சு எடுத்தாலே அந்த வீட்டில் எல்லோரும் நடுங்குவார்கள். தங்கள் குடும்பத்தைக் குலைத்த கூட்டம் என்று உள்ளூற அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆகைய ஜமீன்தார் ஆள் என்ற போது அவர்களுக்கு எதிர் பாராத தடுமாற்றம் உண்டா யிற்று. வந்த ஆள் இந்தக் குமாரபுரம் ஜமீனிலிருந்து வந்திருந்தான். அது தெரிந்தபோது சின்ன முருகாயியின் வீட்டாருக்கு அதிகக் குழப்பம் உண்டாயிற்று. வந்தவனோ துப்பறிகிற தோரணையில் விசாரணை செய்யத் தொடங்கினான். முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னாலே இந்த வீட்டில் முருகாயி என்று ஒருத்தி இருந்தாளாமே?” என்று கேட்டான், அதைக் கேட்டவர்களுக்கு வயிறு பகீரென்றது; ‘பழைய சண்டையை மீண்டும் கிளப்ப வந்து விட்டானே!’ என்று பயந்தார்கள்.

    “அந்த முருகாயி இங்கேதான் இருந்தாளா? இப் போது எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டான் வந்த ஆள்.

    “இனிமேல் அவளை ஒன்றும் செய்ய முடியாது. அவள் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து பல வருஷங்கள் ஆகிவிட்டன ” என்று பதில் வந்தது.

    “அடடா! செத்துப் போய் விட்டாளா?” என்று இரக்கத் தொனி காட்டினான் வந்தவன்.

    “அவளை வாழும்படிதான் ஜமீன்தார் வைக்கவில்லையே!” என்றார்கள் எங்கள் ஊரார்.

    “அது கிடக்கட்டும். பழைய கதையை இப்போது சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்?”

    “லாபம் உண்டு” என்று அவன் சந்தோஷ சமாசாரம் ஒன்று சொன்னான்.

    நீ சொன்னாயே அந்தப் பாலாடைத் துரைக்கு ஒரு பிள்ளை இருந்தாரென்று; அவர் கூடச் சின்ன வயசிலே செத்துப் போனாராம். அவருக்கு ஒரே ஒரு பிள்ளை. இப்போது இருக்கிறாரே, இவரை விட்டுவிட்டு அவர் இறந்து போனார். இந்த ஜமீன்தாரைப் பற்றி உனக்கு அதிகமாகத் தெரியாது. உனக்கு முதல் தலைமுறைதான் நன்றாகத் தெரியும். இப்போது இந்த ஊரில் இருக்கும் ஜமீன்தார் தம்முடைய பாட்டனாரிடமிருந்த கெட்ட குணங்களைத் தவிர மற்ற விஷயங்களில் இவர் அந்தப் பாலாடைத் துரையைப் போலவே இருக்கிறவர். குடும்பப் பெயருக்கு அவமானம் வராமல் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்; இரக்கம் உள்ளவர்.

    இந்தப் பால்வண்ணதுரையே கோழிப்பேட்டைக்கு ஆள் அனுப்பியிருந்தார். இவர் தம்முடைய பாட்டனார் கதையையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தினால் ஒரு குடும்பமே வீணாகி விட் டதைக் கேட்டு மிகவும் வருந்தினார். ஏகாம்பரம் அநியாயமாகத் தற்கொலை பண்ணிக்கொண்ட செய்தி இவர் உள்ளத்தை வெதுப்பியது. தம் பாட்டனார் காலத்தில் கடந்த அந்தக் காரியத்திற்குப் பிராயச்சித்தமாக ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அரச மரம் வைத்தல், பிள்ளையார் கோவில் கட்டுதல் முதலிய பிராயச் சித்தத்தை இவர் நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தைக் கலைத்த பாவத்துக்கு மற்றொரு குடும்பத்தைப் பிரதிஷ்டை செய்வதுதான் ஏற்ற பரிகாரம் என்பதை இவர் எண்ணினார். இந்தச் சோக நாடகத்தின் பிரதான பாத்திரமான முருகாயியைப் பற்றித் தெரிந்துகொள்ள எண்ணியே ஆளை அனுப்பினார்.

    இந்த விஷயங்களை ஆள் சொன்னபோது, சின்ன முருகாயியின் தாய் தந்தையருக்குச் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் பணக்காரர் மனசு ஒரே மாதிரியாக இருக்குமென்று அவர்களால் உறுதியாக நம்ப முடியவில்லை.

    சில நாள் கழித்து அந்த ஆள் மறுபடி வந்தான். அந்தக் குடும்பத்தினருக்கு இஷ்டம் இருந்தால் குமாரபுரத்துக்கே வந்து குடியிருக்கலாமென்றும், அரண்மனை வேலை களெல்லாம் அவர்களுக்கே கிடைக்குமென்றும் ஜமீன்தார் சொல்லி அனுப்பி இருந்தார். “போதும் போதும்! ஏதோ ஆண்டவன் கிருபையால் நாங்கள் இங்கே சௌக்கியமாக இருக்கிறோம். மறுபடியும் அங்கே வந்து அல்லற் படமாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள்

    இந்த ஜமீன்தார் தம்முடைய முயற்சியை அதோடு நிறுத்தவில்லை. இந்த ஊரிலிருந்து வயசான ஏகாலியர்களை அனுப்பிச் சமாதானம் செய்யச் சொன்னார். அதனாலும் முடியவில்லை.

    ஆனால் நாள் செய்வது நல்லோர் செய்யார் என்ற பழ மொழிதான் உண்மையாயிற்று. என்ன இருந்தாலும் ஏழைக் குடித்தனம் செய்யும் அந்தக் குடும்பத்திற்கு வலிய ஒரு ஜமீன்தார் உதவி செய்ய நினைக்கும்போது, முதலில் வேண்டாமென்று மறுத்தாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மனம் மாறியது. சின்ன முருகாயியின் தகப்பனும் விசாரித்துப் பார்த்தான். இப்போது இருக்கிற ஜமீன்தார் பாவ புண்ணியத்துக்கு அஞ்சுகிறவர் என்றும் நல்லவரென்றும் தெரிந்து கொண் டான். ஜமீன்தார் அந்த வருஷம் பொங்கலுக்கு அரிசியும் வெல்லமும் புடைவையும் வேட்டியும் அனுப்பி வைத்தார்.

    சின்ன முருகாவிக்கு அதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அவள் கல்யாண விஷயத்தில் கூட ஜமீன்தாருக்கு அக்கறை ஏற்பட்டது. குமாரபுரத்திலேயே ஒரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டால் முருகாயி இங்கேயே வந்துவிடுவான்: ஓடிப்போன குடும்பத்தை மீட்டும் நிலை நிறுத்தியதாக இருக்கும் என்று இவர் எண்ணினார் போல் இருக்கிறது.

    ஆனால் அவர்களுக்குப் பயம் முற்றும் ஒழிந்தபாடில்லை. இந்த ஊரில் தங்கள் பெண்ணைக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. “துரையவர்களுடைய பிரியத்துக்கு நாங்கள் ஒன்றும் தப்புச் சொல்லவில்லை. அவர் மகாராஜராக வாழ வேணும். ஆனால் இந்த முருகாயிக்குக் குமாரபுரத்துச் சம்பந்தமே வேண்டாம். லட்சாதிபதியாக இருந்தாலும் வேண்டாம். அந்த ஊர்ப் பிள்ளைக்கும் நம் வீட்டுக்கும் ராசி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

    கடைசியில் இந்தக் குமரப்பன், என் எசமான் வந்து சேர்ந்தான். நல்ல பிள்ளை; வீட்டோடு இருப்பானென்று இவனுக்கே முருகாயியைக் கட்டிக்கொடுத்தார்கள். பால் வண்ண துரையின் பிரியமும் நல்ல மனசும் அந்தக் கல்யாணத்திலே நன்றாகத் தெரிய வந்தன. வேண்டிய சாமான்களும் வேட்டியும் சேலையும் அனுப்பினார். அது கூடப் பெரிதல்ல. நேரிலே காணாதவர்களிடம் அதைச் சொன்னால் நம்பமாட்டார்கள். ஜமீன்தார் துரை எங்கே? ஏழை வண்ணார் எங்கே! கல்யாணத்தன்று மாலை ஜமீன் தார் பால்வண்ணதுரையே சின்ன முருகாயியின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வரப்போகிறாரென்று யாருக்கும் தெரியாது. கூட வந்த ஆள், ‘ஜமீன்தார் துரை வந்திருக்கிறார்’ என்றபோது எல்லோருக்கும் தூக்கி வாரிப்போட் டது. ஒரு கணத்தில் ஊர் முழுதும் எப்படியோ சமாசாரம் பரவிவிட்டது. அப்புறம் கூட்டத்துக்குக் கேட் பானேன்? கல்யாணமான முருகாயியும், அவள் புருஷனும் ஜமீன்தார் காலில் விழுந்து பணிந்தார்கள்.

    ”எசமான்! ஏது’ இப்படி ஆச்சரியமான காரியஞ்செய்தது?” என்று குழறிக்கொண்டே கேட்டான் முருகாயியின் தகப்பன்.

    இந்த முருகாயியைப் பார்க்கத்தான் வந்தேன். என் இளைய தங்கையைப்போல இவளை நினைத்திருக்கிறேன். தங்கை இருக்கிறாள் என்று காதாலே மாத்திரம் கேட் டேன். கல்யாணத்துக்குக்கூட அண்ணனாக இருக்கிறவன் வராமல் இருக்கலாமா? அதனால் வந்தேன்.’

    ஜமீன்தாருடைய வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குடும்பத்தினருக்கு உடம்பு புல்லரித்தது. ஏதோ கனவுலகத்திலே இருப்பவர்களைப் போன்ற உணர்ச்சி தோன்றியது. தங்கை என்றல்லவா இவர் சொல்கிறார்! என்ன பெருந்தன்மை? இவரை எப்படிச் சந்தேகிப்பது?’ என்று அவர்கள் அப்போது நினைத்திருக்கவேண்டும்.

    “தங்கச்சி, உன்னுடைய பாட்டியை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விட்டார்களாம். அது பெரிய பாவம்! இப்போது அந்தப் பாவத்தைப் போக்க என் தங்கச்சியை இங்கே இருந்து மறுபடியும் எங்கள் ஊருக்கே அழைத்துப்போக வந்தேன்” என்று ஜமீன்தார் கூறியபோது, யாரும் தங்கள் கண்ணையும் காதையும் நம்ப முடியாமலே போயிற்று.

    அந்த இளம் பெண் ஒன்றும் விளங்காமல் தன் தந்தையின் முகத்தையும் தாய் முகத்தையும் பார்த்தாள். அவள் தகப்பன் ஆவேசம் வந்தவனைப்போல, “சாமி என் துரையே! நான் பண்ணினது தப்பு. முன்னமே எசமானை வந்து பார்த்திருக்கவேண்டும். இவ்வளவு தங்கமான துரையைப் பற்றி நான் தெரிந்துகொள்ளாமற் போனேன், பாவி. இனி மேல் துரை எப்படிச் சொன்னாலும் கேட்டுறேன். என்னை மன்னிக்கவேண்டும்” என்று அழுகையும் தொழுகையுமாகச் சொல்லி ஜமீன்தார் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

    ஜமீன்தார் உள்ளம் உருகியது. அங்கே கூடியிருந்தவர்கள் அத்தனை பேரும் மரமாக நின்று போனார்கள்

    “சரி, கல்யாண விருந்தெல்லாம் ஆன பிறகு என் தங்கச்சியையும் மாப்பிள்ளையையும் நம் ஊருக்கு அனுப்புங்கள். இவர்கள் அந்த ஊரிலேயே சௌக்கியமாக இருக்கட்டும். இவர்களைக் காப்பாற்றுவது என் கடமை. இவர்களுக்கு ஒரு குறையும் வராது.” இவ்வாறு சொல்லி ஜமீன்தார் இங்கே வந்துவிட்டார்.

    “என்ன உத்தமமான குணம் பார்த்தாயா அண்ணா? பணமோ, பதவியோ, குலமோ, கோத்திரமோ ஏதாக இருந்தாலும் அன்புக்கும் அறத்துக்கும் முன்னாலே நிற்குமா? ஆச்சரியம்! பரம ஆச்சரியம்!”

    ஜமீன்தார் போன பிறகு, வாரத்துக்கு வாரம் இங்கிருந்து கோழிப்பேட்டைக்கு ஆள் வந்து கொண்டே இருந்தான். எப்போது புறப்படப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கும், பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிப்பதற்குமாகவே அவன் வந்தான்

    ஊரில் உள்ளவர்கள் அவர்களைக் குமாரபுரத்துக்குப் போகும்படி சொன்னார்கள். “முதலிலெல்லாம் எங்களுக்குச் சந்தேகமாகவே இருந்தது. பழைய முருகாயியின் கதையாகத் திரும்பி ஆகிவிடுமா என்று நினைத்தோம். ஆனால் ஜமீன்தார் துரை, இங்கே கல்யாணத்துக்கு வந்த பிறகு அந்த எண்ணம் அடியோடு ஒழிந்தது. அவர் லட்சத்தில் ஒரு மனிதர். பழைய காலத்தில் தம் பாட்டனார் செய்த ஒரு தப்பை இவர் திருத்த முன் வந்திருக்கிறார். எந்தக் குடும்பத்தில் இப்படிச் செய்யும் பிள்ளைகள் பிறக்கிறார்கள்? உங்கள் அதிருஷ்டம்; முருகாயியின் அதிருஷ்டம். எதிர்பாராதபடி ஜமீன்தாரின் அன்பு உங்களுக்குக் கிடைத்தது என உறவினர்கள் சொன்னார்கள்.

    கல்யாணம் ஆகிச் சரியாக மூன்று மாதம் கழித்துச் சின்ன முருகாயி தன் புருஷனுடனும் தாய் தந்தையருடனும் இந்த ஊருக்குப் புறப்பட்டாள். ஊரே அவர்களை வழி அனுப்பியது.

    “என்னுடைய அதிருஷ்டத்தையும் நான் சொல்ல வேண்டாமா?” என்னைச் சின்ன முருகாயி ஆசையோடு வளர்த்தாள். ஆகையால் என்னையும் அவள் அழைத்து வந்துவிட்டாள். நேற்றுத்தான் நாங்கள் இந்த ஊருக்கு வந்தோம்.

    “இப்போது கதை முடிந்து விட்டது அண்ணா. உனக்குத் திருப்திதானே? நீ முதல் தலைமுறையில் ஆரம்பித்தாய்; நான் மூன்றாந் தலைமுறையில் கொண்டு வந்து முடித் தேன். மூன்று தலைமுறையின் கதை இப்போது பூரணமாகிவிட்டது என்று சொல்லி நிறுத்தியது கழுதை.

    “தம்பி, நீ மிகவும் வஞ்சகம் உள்ளவன் அப்பா. இத்தனை சமாசாரத்தையும் வைத்துக்கொண்டு பேசாமல் குட்டிச்சுவர் மாதிரி நான் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தாயே. உனக்கு இந்தக் கதையைப் பற்றித் தெரியுமென்று நடுவிலே கொஞ்சங் கூட மூச்சுக் காட்டவில்லையே !”

    “என்ன அண்ணா, என்னையும் உன் இனத்தில் சேர்த்து விட்டாய்? குற்றம் இல்லை.எப்படியோ என்னை வேறாக நினைக்காமல் பேசுகிறாயே, அதிலே எனக்குச் சந்தோஷம், உன் கதை எனக்குத் தெரிந்த அரைகுறைக் கதையை முழுசாக்க உதவியது. எத்தனையோ விஷயங்கள் எனக்கு விளங்காமல் இருந்தன. நீ சொன்ன கதை எல்லாச் சிக்கலையும் தெளிவாக்கியது. நடுவிலே நான் குறுக்கிட்டிருந்தால் இவ்வளவு தெளிவு ஏற்பட் டிருக்காது.”

    “நான் சொன்ன கதை ஒரு தலைமுறையின் கதை தானே? நீயோ இரண்டு தலைமுறைகளின் கதையைச் சொன்னாய். இவ்வளவு நாள் நான் வருத்தப்பட்டிருந்ததற்கு இன்றுதான் அப்பா விமோசனம் ஏற்பட்டது. என் முருகாயியைப் போல இந்த முருகாயி இருப்பாளென்று சொன்னாயே, அவளையும் பார்த்து விட்டேனானால் என்குறை தீரும். இவ்வளவு காலம் மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த என்னை நீ தட்டி எழுப்பி உணர்ச்சி ஊட்டினாய் தம்பி.

    “இல்லை, இல்லை, நீ சொல்வது பொய். நான்தான் தூங்கி வழிந்து கொண்டிருந்தேன். நீ என்னை எழுப்பிக் கதையைச் சொன்னாய். சரி,வெகுநேரமாகி விட்டது, அண்ணா. நான் வருகிறேன்.”

    “தம்பி, தம்பி, நீ அடிக்கடி இங்கே வந்து கொண்டிரு. மறந்து விடாதே. இனிமேல் உன்னால் தான் நான் வாழ வேண்டும்.”

    “ஆகட்டும்” என்று கழுதை விடைபெற்றுக் கொண்டு போய் விட்டது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *