மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

4

    ஏகாம்பரம் மாமனார் வீட்டில் இரண்டு வாரம் இருந்து விருந்து சாப்பிட்டுவிட்டுப் பெண்டாட்டியையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தாள். அந்த இரண்டு வாரத்துக்குள் முருகாயி இரண்டு மூன்று முறை கமலம்மாவைச் சந்தித்துப் பேசினாள். அந்தப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றிவிட்டது அதற்கு முன்னே அத்தனை தீவிரமாக இருக்கவில்லை. முருகாயி பேச்சுக்காரி. அவள் பேச்சினால் அதிக வேகம் உண்டாகிவிட்டது, கமலம்மாவுக்கு. ஜமீன்தாரைப் பற்றியும் குமாரபுரத்தைப் பற்றியும் முருகாயி எவ்வளவோ உயர்வாகச் சொல்லியிருக்கவேண்டும். கமலம்மா மெதுவாகத் தன் தகப்பனாரிடம் சொல்லி அவர் போட்ட நிபந்தனை களிலிருந்து இறங்கிவரச் செய்தாள்.

    கமலபுரம் ஜமீன்தார் முரட்டு மனிதர். லேசிலே ஒரு காரியத்தில் இறங்கமாட்டார். இறங்கிவிட்டாரானால் லக்ஷம் போனாலும் லக்ஷம் வந்தாலும் விடமாட்டார். அவருக்குப் பணப் பசை அவ்வளவாகப் போதா விட்டாலும் ஆள்கட்டு அதிகம். ஆள் என்பதை அழுத்திச் சொல்லவேண்டும்; நல்ல முழு ஆட்கள்; தடியர்களென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்த ஜமீன்தார் நினைத்தால் ஒரு கிராமம் முழுவதையும் கொள்ளையடிக்கச் செய்யலாம். யாராவது மிராசுதார் இடக்குப் பண்ணினால் ஒரு வார்த்தை அந்தக் கிங்கரர்களுக்குச் சொன்னால் போதும்; மறுநாள் மிராசுதாருடைய வயல் அத்தனையும் பாழாகிவிடும்.

    அவருக்கு இருந்த கடன் தீருவதற்குக் கல்யாணம் ஒரு வழியாக இருக்கட்டும் என்று எண்ணினார். அதனால் தான் பண விஷயத்தில் கடுமையாக இருந்தார். ஆனால் கமலம்மாவின் நச்சுப் பொறுக்காமல் அவர் இறங்கி வந்தார். கமலம்மாவின் தாய் அவரிடம் எவ்வளவோ சொன்னாள்.”நாம் பட்ட கடனுக்காக அவரிடம் விலை கூறுவது நன்றாக இருக்காது. கமலம் கண்ணைக் கசக்காமல் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கையிருந்தால் முன்பின் பாராமல் கல்யாணத்தை முடிப்பது தான் நியாயம். இந்தப் பைத்தியக்காரப் பெண்ணும் குமாரபுரம் துரையையே கட்டிக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறாள்” என்று அவள் கூறினாள். நடுவிலிருந்து மத்தியஸ்தம் செய்து ஸ்திரி தனத்தை இவருக்கும் இல்லாமல் அவருக்கும் இல்லாமல் நடுவாகத் திட்டம் செய்தார்கள். ஒருவிதமாகச் சமாதானம் ஏற்பட்டது: கல்யாணமும் நிச்சயமாயிற்று.

    கல்யாணம் இந்த ஊரில்தான் நடந்தது. “அடேயப்பா? என்ன கூட்டம்! என்ன கூட்டம் ! வீதியெல்லாம் சாம்பார் ஆறு ஓடியதென்றால் பார்த்துக்கொள்ளேன், கூட்டமும் விருந்தும் எப்படி இருக்கவேண்டு மென்று. துரைக்குக் கல்யாணம் நடந்ததற்கு, இந்த வீட்டில் எத்தனை அமர்க்களப் பட்டது, தெரியுமா? அப்போது ஏகாம்பரத்தின் தாய் உயிருடன் இருந்தாள்.

    கமலபுரத்து ஏகாலியர்கள் அத்தனை பேரும் இங்கே வந்துவிட்டார்கள், எல்லாருக்கும் இந்த வீட்டிலேதான் விருந்து. நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன்; உங்கள் ஜமீனிலுள்ளவர்களைப் போல் ஏதற்கும் துணிந்தவர்களை நான் கண்டதே இல்லை அப்பா!

    “அதென்ன அப்படிச் சொல்கிறாய் அண்ணா? வேண்டியவர்கள் வீட்டுக் கல்யாணம் என்றால் நாலுபேர் வரத்தான் வருவார்கள். அதனால் அவர்களைத் துணிச்சல் காரர் என்று சொல்லிவிடலாமா?” என்று கழுதை இடை மறித்துக் கேட்டது.

    “உன் கேள்விக்கு இப்போது பதில் சொல்லமாட்டேன். உனக்கே பின்னாலே தெரியவரும். துணிச்சல்காரர்கள் என்று மாத்திரம் சொன்னால் போதாது: எந்தப் பாதகத்துக்கும் அஞ்சாத கொடியவர்கள் என்று சொல்ல வேணும்” என்று ஆத்திரத்தோடு பேசியது குட்டிச்சுவர்.

    சரி,சரி: கதையைச் சொல் அண்ணா; உனக்கு எதோ ஒரு காரணத்தால் கோபம் வருகிறது. அதை இப்போது மூட்டிவிட்டால் கதை இடையிலே நின்று போய்விடும் என்று பயமாக இருக்கிறது. நீதான், தானாகவே எல்லாம் தெரிந்துவிடும் என்று வேறு சொல்கிறாய். நான் சிறு பிள்ளைதானே? அவசரம் பொறுக்க முடியவில்லை. உன்னிடம் சாந்த குணத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்” என்று கழுதை புன்னகை பூத்தபடியே சொல்லியது.

    “தம்பி, நீ நன்றாகக் கிண்டல் பண்ணுகிறாய். எனக்குக் கோபம் வருவதாக முதலில் குற்றம் சாட்டிவிட்டு பிறகு என்னிடம் சாந்தத்தைக் கற்றுக்கொள்ளப்போகிற தாகச் சொல்கிறாயே! ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாமல் பேசுவது என் சுபாவம். உனக்குக்கூட அப்படித் தானோ?”

    “அப்படி இல்லை அண்ணா. நீ பாவம், பல காலம் வாழ்ந்தவன்; பல விஷயங்களில் அடிபட்டவன். உனக்குக் கோபம் வந்தால் அதற்குத் தக்க காரணம் இருக்கும். அதை நான் பொறுமையோடிருந்து கேட்கவேணுமேயொழிய, அவசரக் குடுக்கையாக இருக்கக் கூடாதல்லவா? அதைத்தான் சொல்ல வந்தேன்.”

    குட்டிச் சுவர் மறுபடியும் விட்ட கதையைத் தொடர்ந்து சொல்லத் தொடங்கியது.

    கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. அஞ்சு நாட்கள் ஊரே திமிலோகப்பட்டது. எங்கெங்கே இருந்தோ மேளகாரர்கள் வந்திருந்தார்கள். பாட்டுக் கச்சேரிகள் வேறு. தினமும் வாண வேடிக்கை.

    கல்யாணத்தில் துரையவர்கள் வேலைக்காரர்களுக்கெல்லாம் இனாம் கொடுத்தார். ஏகாம்பரத்துக்கும் முருகாயிக்கும் வேட்டியும் சேலையும் இனாம் கிடைத்தன. முருகாயி அந்தச் சேலையைக் கட்டிக் கொண்டு பூரித்தாள். அவள் அழகைப் பார்த்து ஏகாம்பரம் சொக்கிப் போனான்.

    கமலம்மா அரண்மனைக்கு வந்த பிற்பாடு ஜமீன்தாரின் ஆடைகளோடு அந்த அம்மாவுடைய துணிகளும் ஏகாம்பரத்தின் வீட்டுக்குச் சலவைக்கு வந்தன. அவளுடைய புடைவைகளையும் ரவிக்கைகளையும் முருகாயி பார்த்தாள். முருகாயி ஆடம்பர மோகம் உடையவளென்று முன்னாலே சொல்லியிருக்கிறேன். அவளுக்கு ஒரு பைத்தியக்கார ஆசை பிடித்துக்கொண்டது. ஜமீன்தாரிணியின் ஆடைகளைக் கண்டபோது அந்த மாதிரி சேலைகளையும் ரவிக்கைகளையும் தானும் அணிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. அது நடக்கிற காரியமா?

    ஜமீன்தாரிணியின் சேலை முதலியவை ஏகாம்பரத்தின் வீட்டிற்கு வருகின்றன அல்லவா? அந்தச் சமயத்தில் அவற்றைக் கட்டிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு ஏற்பட்டது. அரண்மனையிலிருந்து வரும் சேலையையும் ரவிக்கையையும் ஒரு தடவை, ஒரு ராத்திரி உடுத்துக் கொண்டிராவிட்டால் அவளுக்கு ஆசை தீராது.

    அப்படி ஒரு கெட்ட பழக்கத்தைப் பண்ணிவிட்டாள். முதலில் ஏகாம்பரம் அப்படிச் செய்யவேண்டா மென்று சொன்னான்.ஆனாலும், அவள் அப்படி உடுத்துக்கொண்டு நிற்கிறதைப் பார்த்தால் வற்புறுத்திச் சொல்லவே தோன்றாது. நான்தான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேனே! அப்பொழுதெல்லாம் என் அழகே வேறு. சுமங்கலியைப் போல இருந்தேன். இப்போது தான் மொட்டைச் சுவராகிவிட்டேன்.

    ஹும்! இனிமேல் அந்தக் காலம் எங்கே வரப் போகிறது?

    முருகாயிக்குக் கமலம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசைதான். தன்னுடைய ஊரில் அவளைப் பார்க்கிறதற்கும் இங்கே அவளைப் பார்க்கிறதற்கும் வித்தியாசம் இல்லையா? அங்கே அவளுடைய அம்மா போவாள்; அவளுடன் முருகாயி போகலாம். இங்கே கமலம்மா சொல்லியனுப்பாமல் எப்படிப் போவது? சொல்லி அனுப்பட்டும், போகலாம் என்று இருந்தாள்.

    கமலம்மாவோடு அவள் எவ்வளவு சகஜமாகப் பேசி யிருக்கிறாள்! முருகாயி கமலம்மாவோடு பேசினதனால் தான் இந்தக் கல்யாணமே நடந்ததென்று சொல்லவேண்டும். அந்த விஷயமெல்லாம் கமலம்மா நினைக்காமலா இருப்பாள்? நிச்சயம் ஒருநாள் கமலம் தனக்குச் சொல்லி விடுவாள் என்று முருகாயி எதிர்பார்த்தாள்.

    ஒரு நாள் ஏகாம்பரம், “நம் புது எசமானி அம்மாவைப் பார்த்துவிட்டு வருவோம் வா” என்று கூப்பிட்டான். அவள் சரியென்று சொல்லிப் புறப்படவில்லை.

    “எனக்கு அங்கே என்ன வேலை? அந்த அம்மாவுக்கு என்னைத் தெரியாதா? அவர்கள் கூப்பிட்டால் போகலாம்” என்று கெளரவத்தை விடாமல் சொன்னாள்.

    “நீ பேசுகிறதைப் பார்த்தால், நீதான் ஜமீன்தாரிணி போல அல்லவா தோன்றுகிறது? என்ன பிகு அப்பா!’ என்றான் அவன்.

    “என்னை ராசாத்தி என்று எத்தனையோ தடவை நீங்களே சொல்லியிருக்கிறீர்களே; இப்போது ஜமீன்தாரிணியாகக் குறைத்து விட்டீர்களே!” என்று அவள் சொல்லும் போது,”போடி குறும்புக்காரி!” என்று அவன் சொல்வதைவிட வேறு என்ன சொல்ல முடியும்?

    அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. ஜமீன் தாரிணி ஒருநாள் சொல்லியனுப்பினாள், ஏகாம்பரத்தின் மூலமாக.

    “உன்னாலேதான் துரைக்கும் தனக்கும் கல்யாணம் நடந்ததாக அம்மா சொல்லுது. உன்னைப் பார்க்கவேணு மென்று ஆசைப்படுது” என்று பெருமிதத்தோடு கமலத்தின் அழைப்பை ஏகாம்பரம் முருகாயியிடம் தெரிவித்தான்.

    “ஆமாம்; இந்தத் துரையைப்பற்றி அந்த அம்மா விசாரித்தது. நான் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அதற்கு மேலே கல்யாண ஏற்பாடு வேகமாக நடந்திருக்க வேணும்” என்று விஷயத்தைத் தெளிவுபடுத்தினாள் முருகாயி.

    “துரையைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ?”

    “நீங்கள் சொன்னதெல்லாம் தெரியும். அதைத்தான் அந்த அம்மாளிடம் சொன்னேன்.”

    அரண்மனைக்குத் துணியைக் கொண்டு போய்க் கொடுக்கும் வியாஜமாக முருகாயி அன்று மாலை போனாள். கமலம்மாவைக் கண்டு பேசிக்கொண்டிருந்தாள்.

    “எப்படியோ உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டீர்கள். நான் சொன்ன ஜோஸ்யம் பலித்து விட்டது. இனி மேல் என் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் பாக்கி” என்று பேச்சோடு பேச்சாக முருகாயி சொன்னாள்.

    “அதென்னடி உன் காரியம்?” என்று கேட்டாள் கமலம்.

    “சரிதான் உங்கள் காரியம் ஆகிவிட்டது; இனிமேல் மற்றவர்களைப்பற்றி ஏதற்குக் கவலை எங்கள் ஜமீன் துரை வீட்டுப் பெண் இந்த ஊருக்கு வந்தால் எனக்கு ஒரு சேலை தனியாக வரும் என்று வாய் தவறிச் சொல்வி விட்டேன் இவரிடம்.”

    ”இவர் யார்? உங்கள் வீட்டுக்காரனா?”

    “ஆமாம் அம்மா, நாம் ஏன் சொன்னோம் என்றாகி விட்டது எனக்கு. நாள் தவறாமல் அந்தச் சேலை எப்போது வரப்போகிறது என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். சேலையைக் கட்டிக்கொள்ளப் போகிறவள் நான். இவருக்கு என்ன வந்தது அத்தனை அக்கறை? எனக்குக் கூட அவ்வளவு கவலை இல்லை; இவர் நச்சுத்தான் பொறுக்க முடியவில்லை!”

    பேச்சிலே கெட்டிக்காரியடி நீ உனக்கு ஒரு புடைவை வேண்டுமென்று கேட்கிறாய். கொடுங்கள் என்று தாராளமாகக் கேளேன். ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய்?

    “அப்படித் திடீரென்று கேட்டுவிடலாமா, அம்மா? பிறந்தகத்தில் உங்களோடு பழகுகிறமாதிரி வேறு; இங்கே உங்கள் நிலை வேறு. நீங்கள் ஏதாவது செய்ய வேணுமென்று தோன்றினால் எசமானருடைய உத்தரவு கேட்க வேண்டியிருக்கலாம். அவருடைய மனசு அறிந்து நடக்க வேணுமென்று உங்களுக்கே தோன்றலாம். நான் ஒன்றையும் யோசிக்காமல் எனக்குப் புடைவை வேண்டு மென்று கேட்டுவிடலாமா?”

    “சரி,சரி. இத்தனை பேச்சு எதற்கு? உனக்குப் புதுப் புடைவை வேணுமா? பழம் புடைவை வேணுமா?”

    “உங்கள் புண்ணியத்திலே உங்கள் கல்யாணத்தில் எனக்கும் அவருக்கும் புதுத் துணி கிடைத்தது, மறுபடியும் புதுச் சீலை கேட்க நான் அவ்வளவு பேராசைக்காரி அல்ல. நீங்கள் உடுத்துக்கொண்ட சீலையாக இருந்தாலே போதும். உங்கள் புடைவை பழையதாக இருந்தாலும் எங்களுக்குப் புதிதாகத்தானே இருக்கும்? மாசக் கணக்காகவா நீங்கள் ஒரு புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறீர்கள்? ஏதோ இரண்டு வாரம் கட்டினால் உங்களுக்கு அது பழசுதான். கட்டிக் கிழித்துக் கந்தலாகும் படி நீங்கள் விடுவீர்களா ?புதுசு வாங்கிப் பேருக்கு என்னைக் கட்டிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்துவிடச் சொல்கிறாயா?”

    “அப்படிச் சொல்வேனா? எனக்கென்று புதுசு வாங்கினால் நூல் சீலை வாங்குவீர்கள். போயும் போயும் உங்கள் தங்கக் கையால் முதல் முதலில் நூல் சீலைதானு வாங்கிக் கட்டிக் கொள்ளவேணும்?”

    “அப்படியானால் நான் பட்டுப் புடைவை உனக்காக வாங்கித் தரமாட்டேனென்றா சொல்கிறாய் ?”

    “இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நான் எப்படி. உங்களோடு பேசுவேன்? எனக்காகப் பட்டுப் புடைவை எடுப்பது எப்படி? உங்களுக்காக எடுப்பது எப்படி? உங்கள் உடம்பிலே பட்டுப் புரண்ட புடைவையென்றாலே அதன் மகிமை வேறுதான். ஆனால் துரையவர்களிடமும் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் உடம்பு அவருக்குச் சொந்தம். ஆகவே நீங்கள் உடுத்தும் புடைவையை அவரிடம் கேட்காமல் கொடுத்தால் அவருக்குக் கோபம் வந்தாலும் வரலாம்!”

    “அவர் ஒருவருக்கும் ஒன்றும் கொடுப்பவர் அல்லவா ?”

    “சே,சே! அப்படிச் சொன்னால் வாய் வெந்துவிடும். கொடுக்கிறதைப் பற்றி யார் சொன்னார்கள்? உங்கள் உடம்பிலே பட்டதை நான் கேட்கிறேனே, அதற்குச் சொல்ல வந்தேன்.”

    கமலம் உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தாள். முருகாயியின் பேச்சு அவளைக் கிளுகிளுக்க வைத்தது.

    பேச்சுப் பின்னும் வளர்ந்துகொண்டே சென்றது. அதைக் கேட்சுக் கேட்கக் கமலம்மாவுக்குச் சந்தோஷம் பொங்கியது. முருகாயியின் சாதுரியமான பேச்சினாலும், அவள் அடிக்கடி ஜமீன்தாரைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளாலும் அவள் மயங்கிப் போனாள்.

    ”உனக்கு மிகவும் நல்ல புடைவை ஒன்று தருகிறேன்” என்று கமலம் வாக்களித்தாள்.

    “புதிசு வேண்டாம்; நீங்கள் கட்டிப் புரட்டியது இருந்தால் போதும்.”

    “தெரியும், தெரியும்; நான் கட்டிக் கொண்டதையே தருகிறேன்.

    இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போது ஜமீன்தார் அகஸ்மாத்தாக அந்தப் பக்கம் வந்தார். தூரத்திலே நின்று பார்த்தார். பேச்சில் சில பகுதிகள் காதில் விழுந்தன. அழகு திரண்டு உருண்ட உறுப்புக்களும், அரபிக் குதிரையைப் போல நிமிர்ந்து கம்பீரமாக நிற்கும் நிலையும், கணீரென்ற பேச்சும் அவர் கருத்தை இழுத்தன. அந்தப் பேச்சிலே இருந்த சாதுரியமும் அவருக்குப் புலப்பட்டது. சற்று நேரம் அப்படியே நின்று அவளைக் கவனித்தார்.

    முதலில் அவள் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. பிறகு பேச்சினிடையிலே இருந்த குறிப்பினால் ஏகாம்பரத்தின் மனைவி என்று தெரிந்து கொண்டார்.

    சம்பாஷணை ஒருவாறு நிற்கும்போல அறிகுறி ஏற்பட்டது. முருகாயி கமலத்தினிடம் விடை பெற்றுக் கொண்டது தெரிந்தவுடன், அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *