மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

6


    கண்ணாலே காணாமல் எதையும் சொல்லக் கூடாது. ஆனால் இந்த உலகம் அதைக் கவனிக்கிறதா, என்ன? முருகாயியைப் பற்றியும் ஜமீன்தாரைப் பற்றியும் மெல்ல மெல்ல வதந்திகள் புறப்பட்டு உலாவத் தொடங்கின. கமலம்மா முதலில் அதை நம்பவில்லை. பிறகு அவளுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. முருகாயியைத் தன் வீட்டுக்கு வராதே என்று சொன்னால் வதந்தி பலப்பட்டுவிடும் என்று பயந்தாள் தந்திரமாக அவளை நடத்தவேண்டுமென்று எண்ணினாள். கூடியவரையில் ஜமீன்தார் கண்ணில் அவள் படாதபடி வேலைகளைக் கொடுத்தும் பேசியும் வந்தாள். இது முருகாயிக்கும் நல்லதாக இருந்தது.

    ஆனால் துரையோ அதற்கு மேலே தந்திரம் செய்தார். கமலம்மா தனக்கு உடம்பு சரியாக இல்லாத போதெல்லாம் அவள் முருகாயியைப் பக்கத்திலே இருக்கச்சொல்லி வந்தாள். அப்போது ஜமீன்தார் தம் மனைவியைப் பார்ப்பதற்காக வருவார். அவள் உடம்பைப் பற்றி அக்கறையோடு முருகாயியை விசாரிப்பார். கமலம்மாவே விடை சொல்வாள். அவர் அதோடு விடமாட்டார். ஏதாவது தந்திரம் செய்து முருகாயியைச் சந்திப்பார்: இரண்டு பேச்சாவது பேசுவார்.

    பேசுவார் என்பதை நான் நிதானித்துத்தான் சொல்கிறேன். அவள் அவருடைய வலையில் அகப்பட்டுக் கொள்ளவில்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், அவர் ரகசியமாகக் கொடுத்த பணத்தை அவள் ஏன் வாங்கிக் கொண்டாள் என்று விளங்கவில்லை. அவருக்குப் போக்குக் காட்டித் தப்பிக்கொள்ளலாம் என்ற துணிவாகத்தான் இருக்கவேண்டும்.

    கமலம்மா ஒரு தடவை படுக்கையாக இருந்தாளாம். அப்போது சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் முருகாயி ராத்திரி காலங்களில் அவளுக்கு. அருகிலே இருக்க நேர்ந்தது. ஒரு கணம் கூடத் தன் பக்கத்திலிருந்து அகன்று போகாமல் கமலம்மா பார்த்துக் கொண்டாள். முருகாயிக்கும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதானே ஆசை.

    மூன்றாவது நாள் ஜமீன்தார் அவளை வீட்டுக்குப் போகும்போது சந்தித்திருக்கிறார். “நீ இரண்டு நாள் கண் விழித்துக் கஷ்டப்பட்டிருக்கிறாய். பாவம்! உனக்கு என்ன தந்தாலும் போதாது. இந்தா, இதைச் செலவுக்கு வைத்துக் கொள்” என்று ஒரு பத்து ரூபாயை நீட்டினாராம். அவரிடம் பேச்சை வளர்ப்பதற்கு அவள் பிரியப்படவில்லை. வேண்டாம் என்று மறுத்தாலோ, அவர் விட மாட்டார். இன்னும் எதையாவது பேசுவார். ஆகவே அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள்.

    விட்டுக்கு வந்த பிறகு அந்த நோட்டைக் கையிலே வைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.கசக்கி எறிந்தாள் மறுபடியும் அதை எடுத்துப் பிரித்துச் சரி செய்தாள். கண்ணிலே நீர் துளித்தது. அவள் மனசில் ஏதோ பெரிய போராட்டம் நடக்கிறது என்பது மாத்திரம் எனக்கு நன்றாகத் தெரிந்தது.

    ”அம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து. கவனித்துக் கொண்டதற்காக எசமான் பத்து ரூபாய் கொடுத்தார்” என்று அந்தப் பணத்தை ஏகாம்பரத்தினிடம் கொடுத்து விட்டாள். அப்போதுதான் அவளுக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது.

    “இதற்கா பத்து ரூபாய்!” என்று ஏகாம்பரம் முதலில் ஆச்சரியப்பட்டாலும். “இத்தனை தாராளப் பிரபுவை விட்டு வீட்டு உங்கள் ஊருக்குப் போய்விடலாம் என்று சொன்னாயே!” என்று முருகாயியிடம் சொன்னான். அவள் என்ன பதில் சொல்வாள், பாவம் !

    முருகாயி தன் சங்கடத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. கமலம்மா வெளியிலே சொல்லமாட்டாமல் தவித்தாள். ஒரு வழியும் அவளுக்குத் தோன்றவில்லை.

    ஊரில் உலவிய வதந்தி காற்று வாக்கில் ஏகரம்பரத்தின் காதிலும் விழுந்தது. அவன் முருகாயியைத் துளிக் கூடச் சந்தேகிக்கவில்லை. பலபேர் குறிப்பாக அவன் மனசைக் குத்தும்படி பேசினார்கள்.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? கள்ளங் கபடு தெரியாத அவன் ஒருநாள் ஆத்திரங் தாங்காமல் முருகாயியையே கேட்டுவிட்டான். அப்போதுதான் அவளிடத்திலும் பெண்மை இருந்ததென்பதை உணர்ந்துகொண்டேன்.

    அவள் துடிதுடித்துப் போய்விட்டாள். மூர்ச்சை போட்டு விழவில்லை; அதுதான் குறை. “நீங்கள் கூடவா என்னைச் சந்தேகிக்கிறீர்கள்? உங்கள் நல்லெண்ணத்தையும் அன்பையும் வைத்துக்கொண்டுதானே நான் உயிரோடிருக்கிறேன்? என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் உங்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன்” என்று அழுது புலம்பினாள். அவன் ஆறுதல் அடைந்தான்.

    முருகாயி அரண்மனைக்குப் போக விரும்பவில்லை. ஆனால் கமலமோ அவளை விடவில்லை. எப்போதும் தன் கண்ணுக்கு முன்னாலே அவளைக் காவல் வைக்க விரும்பினாள். முருகாயி எத்தனைதான் அவள் இஷ்டப்படியே இருந்தாலும் அவளுக்கு இவளிடம் நம்பிக்கை விழவில்லை. அவளுடைய சந்தேகம் பலப்பட்டுக்கொண்டே வந்தது. அரண்மனைக்கு வராமலே இருந்துவிடும்படி சொல்லலாம். ஆனால் கண் மறைவில் என்ன என்ன நடக்குமோ? இப்படி அவள் உள்ளம் எண்ணித் தடுமாறியது.

    ஊரார் மறைவிலும் குறிப்பாகவும் ஏகாம்பரத்தை ஏசி வந்தார்கள். தன் மனைவியைச் சந்தேகிக்கவும் அவன் மனம் இடங் கொடுக்கவில்லை. ஊராரைக் கண்டிக்கவும் தைரியம் இல்லை, கோழையிலும் கோழை படு கோழை அவன்.

    கமலமும் அப்படிப்பட்டவள்தான்; உறுதியில்லாத மனசும் உடம்பும் உடையவள், திட்டமாக இதற்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்க அவனால் முடியவே முடியாது. ஒருநாள் கமலம் ஏகாம்பரத்தைத் தனியே அழைத்து, “ஊராரெல்லாம் என்ன என்னவோ பேசிக் கொள்கிறார்களாம். உன் பெண்டாட்டியை அடக்கி வை. இப்படியெல்லாம் ஊர் சிரிக்கும்படி விடாதே” என்று சொல்லி அவனைப் பயமுறுத்தினாள். ‘உங்கள் சொந்தப் புருஷரையே நீங்கள் நம்பவில்லையா?” என்று அவன் கேட்டிருக்கலாம். முருகாயியைப் போன்ற தைரியம் அவனுக்கு இருந்திருந்தால் அப்படித்தான் கேட்டிருப்பான். அவன்தான் அப்படிப்பட்டவன் அல்லவே! வார்த்தை பேசாமல் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.

    முன்னமே புண்பட்டுப் போன அவன் உள்ளத்தில் கமலம்மா சொன்ன வார்த்தைகள் என்ன வேதனையை உண்டாக்கினவோ தெரியவில்லை; அதற்கு ஏற்றபடி கமலத்தின் பிறந்தகத்திலிருந்து வந்த இரண்டு தடியர்கள் ஊரில் இருந்த வதந்தியைக் கேட்டார்கள்; கமலமும் அவர்களிடம் சொல்லி இருக்கலாம். அவர்களும் என்றைக்குக் கமலம் அவனிடம் எச்சரிக்கை செய்தாளோ, அன்றே அவனைக் கடுமையாக மிரட்டினார்கள்.” பயலே! நீ ஜாக்கிரதையாகப் பிழைக்காவிட்டால் உன் உடம்பு எலும்பை யெல்லாம் நொறுக்கி, உன் பெண்டாட்டியை நார் நாராகக் கிழித்துவிடுவோம்” என்று பயமுறுத்தினார்கள்.

    எல்லாம் சேர்ந்துகொள்ளவே அந்தக் கோழை இனி வாழ்வதிலே பிரயோசனம் இல்லை என்று தீர்மானித்து விட்டான். முருகாயியின் அழகையும் இன்பத்தையும் என்ன என்ன அன்பையும் மறந்தான்.

    விபரீதங்கள் நேர்ந்துவிடுமோ என்ற பயம் அவன் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. ஆண்மையில்லாதவன் வாழ்க்கை சுகமாக இருக்கிற வரையில் அநுபவிப்பான். ஏதாவது இடையூறு வந்தால் அவன் மனசு கலங்கிவிடும். அப்புறம் அவனுக்கும் அமைதி இராது. அவனால் பிறருக்கும் அமைதி இராது. ஏகாம்பரம் ஒருவருக்கும் சொல்லாமல் அன்று ராத்திரியே, அதோ இருக்கிறதே அந்த மடுவிலே விழுந்து பிராணனை விட்டான். ‘வண்ணான் மடு’ என்ற பெயரையும் அவன் உயிரையும் அது வாங்கிக்கொண்டது.

    “அடாடா! அப்படியா ஆயிற்று! அப்புறம் முருகாயியை ஜமீன்தார் கைப்பற்றிக் கொண்டாரா?” என்று வேகத்தோடு கேட்டது கழுதை.

    இல்லை இல்லை. அதிலிருந்துதான் அவளைக் கெட்ட வளென்று நம்ப என் மனசு இடம் கொடுக்கவில்லை. ஏகாம்பரம் உயிர் விட்டானே, அதே இரவில் கண்ணராவியான காரியம் ஒன்று நடந்தது. கமலபுரத்திலிருந்து வந்த தடியர்கள் இந்த வீட்டுக்கு நடுராத்திரியில் நெருப்பு வைத்துவிட்டார்கள்; போதாக் குறைக்குச் சுவர்களையும் வேறு சில ஆட்களை வைத்துக் கொண்டு இடித்துவிட்டார்கள்.

    முருகாயி இந்த அலங்கோலத்தில் பெற்றேன், பிழைத்தேனென்று ராத்திரியே கோழிப் பேட்டை போய்ச் சேர்ந்தாள். அந்தத் தடியர்கள் பயமுறுத்தி ஓட்டி விட்டார்கள். தன் புருஷன் மனமுடைந்து வீட் டுக்கு வராமல் எங்கோ இருந்தானென்று அவள் முதலில் எண்ணினாள். அவன் இரண்டு நாளில் வருவான் என்று எண்ணியிருந்த அவளுக்கு அவன் செத்துப்போன செய்தி தான் கிடைத்தது. பாவம்! அப்போது அவள் கர்ப்பமாக இருந்தாள். தன் தகப்பனார் வீடு போய்ச் சேர்ந்த அவள் என்ன ஆனாள் என்று சொல்வார் யாரும் இல்லை.

    அந்த இரவில் எனக்கு இந்த உருவம் கிடைத்தது. பிறகு இந்தப் பக்கம் இருந்த குடிசைகளெல்லாம் கூட மறைந்தன. ஏகாம்பரம் பேயாய்த் திரிகிறானென்ற பயத்தால் இந்தப் பாகங்களிலே யாரும் குடியிருக்கவில்லை. அன்றுவீட்டுச் சுவராக இருந்து குட்டிச் சுவரான நான், தன்னந் தனியாகத் துணை யாரும் இன்றி நிற்கிறேன்.

    “கமலமும் ஜமீன்தாரும் என்ன ஆனார்கள்” என்ற கேட்டது கழுதை.

    “அவர்களா? அவர்கள் மட்டும் வாழ்வார்களா? அழகான குடும்பத்தைக் கலைத்து, உயிர் ஒன்று உடம்பு இரண்டாகப் பழகிய கணவன் மனைவியின் வாழ்க்கையைக் குலைத்த பாவிகள்! வர வர வியாதி பிடுங்கித் தின்றதனால் கமலம் இரண்டு மூன்று வருஷங்களிலே காலமாகிவிட்டாள். அவளுக்கு ஒரே ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஜமீன்தாரும் அதிக நாள் வாழவில்லை. ஏதோ ஒரு நாள் திடீரென்று மாரடைத்து மாண்டு போனார். ஏகாம்பரந்தான் பேயாக இருந்து இருவரையும் அடித்து விட்டான் என்று பைத்தியக்கார ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். பேயாவது, பிசாசாவது! அப்படி அவன் ஆகியிருந்தால் அருகில் இருக்கும் என்னோடு ஒரு வார்த்தை பேசமாட்டானா? எவ்வளவு நாள் அவனோடும் அவன் நிழலோடும் நான் பழகியிருக்கிறேன்!”

    “இப்போது இருக்கிற ஜமீன்தார் அந்த ஜமீன் தாருக்குப் பேரனென்று சொன்னாயே; அது எப்படி?”

    “பாலாடைத் துரையின் பிள்ளையின் பிள்ளை இவர்.”

    “இவர் எப்படிப்பட்டவர்?”

    “எனக்கு எப்படித் தெரியும்? இந்தப் பக்கத்தில்தான் மனித வாசனை வீசுவதில்லையே! அப்படி யாராவது சமாசாரம் சொல்வதாக இருந்தால் முருகாயி என்ன ஆனாளென்று கேட்பேனே! கேட்டால்தான் யார் சொல்லப் போகிறார்கள்? இப்போது நடக்கிறது மூன்றாவது தலைமுறை. முதல் தலைமுறைக் கதை அது; முடிவாகாத கதை. அதன் முடிவைத் தெரிந்து கொள்ள அந்தக் காலத்தில் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? யாராவது ஒரு வார்த்தையாவது முருகாயியைப் பற்றிச் சொல்ல மாட்டாரா என்று நான் ஏங்கிப் போனேன். பாவம்! அவள் என்ன ஆனாளோ; குழந்தை பிறந்ததோ இல்லையோ! அவள் பிறகு ஜீவித்திருந்தாளோ, உயிரை மாய்த்துக் கொண் டாளோ! ஒன்றும் தெரியாமல் வாடினேன். வருஷத்துக்குப் பின் வருஷமாகக் காலம் கடந்துவிட்டது. நான் மாத்திரம் பழைய சங்கதிகளை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டபடி நிற்கிறேன். இந்தப் பழங் கதையைக் கேட்பவர் யார்? ஏதோ நீ கேட்டாய்; நான் சொன்னேன். இனிமேல் உன் கதையைச் சொல் தம்பி!” என்று பெரு மூச்சு விட்டது குட்டிச் சுவர்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *