மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

5


    அதற்குமேல் நடந்த கதையைச் சொல்ல எனக்கு வாய் வரமாட்டேன் என்கிறதே ! தெய்வத்தைப் பற்றிய விஷயம் ரகசியம், மனிதனாலே அறிய முடியாதது என்று சொல்லுகிறார்கள். அதற்கு மேற்பட்டது பெண்பிள்ளைகளின் ரகசியம். அவர்கள் உள்ளத்தை அளந்து காண அவர்களைப் படைத்த பிரம்மதேவனுக்குக்கூட முடியாது போல் இருக்கிறது.எதற்கு இப்படிச் சொல்கிறேனென்றால், மேலே நடந்த விஷயங்களை நினைத்தால், அதுவும் முருகாயி நடந்து கொண்டதை நினைத்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவாறு தோன்றும். உண்மை ஒன்று இருக்கச் சந்தர்ப்ப பேதங்களால் அதை மறந்து வேறு வேறு விதமாகச் செய்திகள் பரவும். உலக இயற்கைதான். எனக்கு என்னவோ முருகாயியோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தது. அவளுடைய வெளி அலங்காரமும் ஆடம்பரமும் ஒயிலும் பேச்சும் அவளை ஒருவிதமாகத்தான் நினைக்கச் செய்யும். ஆனால் அந்தரங்கத்திலே அவள் அழுது கண்ணீர் விடுவதைக் கண்ணால் பார்த்தவன் நான். ஆகையால் யார் என்ன சொன்னாலும் எனக்கு அவளைப் பற்றி நல்ல அபிப் பிராயந்தான் இருக்கிறது.

    இதென்ன, மறதி! உனக்குக் கதையைச்சொல்லாமல், அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல வந்துவிட்டேனே!

    முருகாயி அரண்மனைக்குப் போய்வரத் தொடங்கினாள். கமலம்மாவுக்கு அவளைக் கண்டாலே உற்சாகம் ஏற்படும். அவளுடைய பேச்சுச் சாமர்த்தியத்திலே ஈடுபட்டு நின்றாள். ஆகவே, தினந்தோறும் முருகாயியை வரச் சொல்லுவாள்; அழுக்குத் துணி இருக்கிறதோ, இல்லையோ, பேசிக் கொண்டிருக்கலாமென்று அவளை வரும்படி சொல்லுவாள்.

    முருகாயி அரண்மனைக்கு என்று போனாளோ, அன்று துரதிருஷ்டம் பிடித்தது என்றுதான் சொல்லவேண்டும். பின்னே வரப்போகும் ஆபத்துக்கு விதை அன்று விதைத்தாகிவிட்டது. பார்க்கிற பேர்களுக்கு அவளுக்கு அதிருஷ்டம் மேலும் மேலும் ஓங்கியதென்றுதான் தோன்றியது. அடிக்கடி அவளுக்கு அரண்மனையிலேயே சாப்பாடு கிடைக்கும். ஜமீன் தாரிணி அவளுக்குப் பழம் புடைவை என்ற பேரால், வாங்கி ஒரு வாரம் கட்டிக்கொண்ட உயர்ந்த வேலைப்பாடுள்ள புடைவையைக் கொடுத்தாள். அந்தப் பாவிமகள் அதைப் பெட்டியிலே வைத்துக் கொண்டு பண்டிகை, திருவிழாவுக்குக் கட்டிக் கொண்டாளா? கஷ்டப்படாமல் வந்தது; ஆகையால் அதன் பெருமை தெரியவில்லையோ, அல்லது அவளுடைய ஆடம்பரத்தின் வேகமோ, அதை உடனே கட்டிக்கொண்டாள். அரண்மனைக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் கட்டிக் கொண்டாள்.

    ஜமீன்தார் வரவர அவள் மேல் நாட்டம் வைக்கத் தொடங்கினார். கமலம்மாவுக்குச் சிறு வயசிலிருந்தே தேக பலம் போதாது. மிகவும் நோஞ்சல்; ஏதோ வெளுப்புத் தோல் பொடி, மாவு, மண்ணாங்கட்டி இவைகளைப் பூசிக் கொண்டால் ஒரு பளபளப்பு : அவ்வளவுதான். மாசத்துக்கு ஒரு தடவை ஜலதோஷமென்றும், தலைவலியென்றும், ஜூரமென்றும் ஏதாவது வியாதி வந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒரு வாரம் இரண்டு வாரம் படுக்கையிலே இருப்பதும் உண்டு.

    பாலாடைத்துரை தக்கவர்களைக் கொண்டு வைத்தியம் செய்து வந்தார்.ஏதாவது உருப்படியான வியாதியாக இருந்தால் குறிப்பிட்டு வைத்தியம் செய்யலாம். அஸ்திவாரமே பலம் இல்லாமற் போனால் பிறகு என்ன செய்வது? ஏதோ நடமாடப் பேசச் சிரிக்க அவளுக்குச் சக்தி இருந்ததே பெரிது.

    அந்தப் பைத்தியக்காரப் பெண் தினந்தோறும் முருகாயியை வரவழைத்துப் பேசுகிறது வழக்கமென்று முன்பே சொன்னேனல்லவா? அப்படி முருகாயி வந்து பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் ஜமீன்தார் அவளைப் பார்த்தார். முதலில் அவள் அழகைப் புறம்பே இருந்து தான் ரசித்தார். ஆனால் பருவக் கோளாறு அதோடு நிறுத்தவில்லை. சந்தர்ப்பங்களும் சேர்ந்து கொண்டன. முருகாயியின் நடையுடை பாவனைகளை அவர் பார்த்தபோது அவருக்கு அவள் இணக்கமாக இருப்பாள் என்று தோற்றிற்றோ என்னவோ!

    ஒருநாள் முருகாயி கமலம்மாவிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு விடைபெற்றுத் திரும்பினாள். இடையில் ஓரிடத்தில் ஜமீன்தார் அவளைச் சந்தித்தார். “என்ன முருகாயி,மிகவும் அவசரமோ ?” என்று கேட்டார்.

    அவள் நாணத்துடன், “இல்லை, எசமான்” என்றாள். “நேற்று நான் ஒரு தப்புச் செய்ய இருந்தேன் என்று ஜமீன்தார் புன்னகையுடன் பேசினார். முருகாயிக்கு அவர் கூறுவது விளங்கவே இல்லை.”

    “என்ன யோசிக்கிறாய்? நீ இந்தப் புடவையைக் கட்டிக் கொண்டு வருவதை நான் கவனித்ததில்லை. நேற்று நீ அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு நின்றாய். அசப்பில் இந்தப் புடைவையைக் கண்டு அம்மாவாக்குமென்று நினைத்து ஏமாந்தேன். நல்ல வேளை கூப்பிடவில்லை.

    “அம்மா மாதிரி நான் இளைத்தா இருக்கிறேன்?” என்று இயற்கையாக அவளுக்குள்ள சுதந்தரத் துடுக்கிலே வார்த்தை வெளியாயிற்று. ஆனால் அவள் அடுத்த கணம் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

    ஜமீன்தார் புன்னகை பூத்தார். “வாஸ்தவந்தான். அம்மா மிகவும் நோஞ்சல்தான். உனக்கும் அவளுக்கும் ஈடுசொல்லலாமா? நீ தளதளவென்று வளர்ந்திருக்கிறாய் வெள்ளரிப் பிஞ்சுபோல்; உடனே ஓடித்துச் சாப்பிட வேண்டும் என்று நாக்கில் ஜலம் ஊறுகிறதே, அந்த வெள்ளரிப் பிஞ்சுபோல இருக்கிறாய்.” அவர் வருணனை வெறுமனே வரவில்லை; அசட்டுச் சிரிப்போடு வந்தது.

    முருகாயி சூட்சுமம் தெரிந்தவள். ஜமீன்தார் எல்லை கடக்கும் நிலைக்கு வந்துவிட்டார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. “நான் வருகிறேன், எசமான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே வீடு வந்து சேர்ந்தாள். அன்று அவள் என்னவெல்லாம் யோசித்தாளோ, என்ன தீர்மானத்துக்கு வந்தாளோ, அது தேவ ரகசியம்.

    சொல்லி வைத்தாற்போல ஏகாம்பரத்துக்கு நாலு நாள் கடுமையான ஜூரம் வந்துவிட்டது. அவன் அரண்மனைக்குப் போக முடியவில்லை. முருகாயிதான் சலவைத் துணிகளைக் கொண்டு போய்க் கொடுத்து வந்தாள்.

    ராத்திரியெல்லாம் அவள் ஏகாம்பரத்துக்கு அருகில் உட்கார்ந்திருப்பாள். அவள் கண்ணிலிருந்து ஓயாமல் நீர் சுரந்துகொண்டே இருக்கும். ஏகாம்பரம் அதைக் கவனிப்பான். தன்னுடைய உடல் நிலையைக் கண்டு அவள் வருந்துகிறாள் என்று அவன் நினைப்பான்.

    “அடி பைத்தியம்! எதற்காக அழுகிறாய்? இரண்டு நாளில் ஜூரம் சௌக்கியமாகிவிடும். இதற்காகக் குழந்தையைப் போல அழுகிறாயே!” என்று அவன் சொல்வான்.

    “என் துரையே! என் ராசா! நான் என்ன செய்வேன்? இந்த ஜூரம் எனக்கு வரக்கூடாதா?” என்று அவள் புலம்புவாள்; அழுவாள்; விம்முவாள். அவன்

    கண் அயர்ந்து தூங்கினாலும் அவள் தூங்காமல் துயரக் கடலில் ஆழ்ந்திருப்பாள்.

    ஏகாம்பரத்தின் வியாதிக்காக அவள் அழுபவளாகத் தோன்றவில்லை அவ்வளவு சுலபமாக அவளை அசைத்து விட முடியாது. அவள் தன் இயல்பான நிலையில் இருந்தாளானால் சிரித்துச் சிரித்துப் பேசியே அந்த ஜுரத்தைப் போக்கியிருப்பாள். அவனுக்கு அதைரியம் வந்தாலும் தைரியமூட்டிப் பொழுது போவதே தெரியாமல் செய்திருப்பாள்.

    ஆனால் அப்பொழுது அவள் அழுத அழுகை அவனுக்காக அல்ல; தனக்காகத்தான் இருக்கவேண்டும். ஜமீன் தாரின் பார்வையிலும் பேச்சிலும் விஷம் இருப்பதை உணர்ந்துகொண்டு அதிலிருந்து எப்படித் தப்புவது என்ற விசாரந்தான் அவளை உலுக்கியிருக்கவேண்டும்.

    ஜமீன் தார் தாம் இவளை நாடுவானேன்? அவர் விரும்பினால் ஆயிரம் தாசிகள் காத்திருப்பார்களே! எல்லாம் விதி தம்பி, விதி! கமலபுரத்துப் பெண்தான் கட்டுமஸ்தாக இருக்கப்படாதா? அல்லது இந்த முருகாயிக்கும் அவளுக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கக்கூடாதா?

    ஏகாம்பரம் ஜுரமாக இருந்தபோது முருகாயி அரண்மனைக்குப் போனாள். ஜமீன்தார் தம் துணியைப் பற்றி என்னவோ சொல்லவேண்டுமென்று சொல்லி அனுப்பினார்.

    ஜமீன்தார் தன்னைத் தனியாகச் சந்திப்பதில் ஆவவாக இருக்கிறாரென்பதை முருகாயி ஊகித்துக்கொண்டாள். இவ்வளவு காலம் இன்பமாக வளர்ந்து வந்த அவள் வாழ்விலே புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டதென்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆனால் சாமர்த்தியமாகத் தப்பி விடலாம் என்று அவளுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். சாதாரணப் பெண் இனத்துக்கு இல்லாத துணிச்சல் அவளிடம் இருந்தது. ‘என்ன இருந்தாலும் நாம் பெண்தானே?’ என்பதை அடியோடு மறந்துவிட் டாள். ஆடம்பர மோகமும், அந்தத் துணிச்சலுந்தான் அவளுடைய வாழ்விலே நெருப்பைக் கொண்டு வந்து விட்டன

    நீதான் சொல்லேன் தம்பி; அவரவர்கள் நிலைமைக்கு ஏற்றபடி இருப்பதை வீட்டு அலங்காரம், அழகு, சிங்காரம் என்று மேலே பறந்தால் பெண்மைக்கு நிலை என்று ஒன்று இருக்குமா? பழைய புருஷனும் புதிய ஆடம்பரமுமாக இருந்தால் ஏதாவது ஒன்றை விடத்தானே வேண்டும்? வண்ணாரக் கணவனையும் ஜமீன்தாரிணியின் அலங்காரத்தையும் ஜோடி சேர்க்க முடியுமா?

    அவள் அலங்காரம் செய்து கொள்ளாமல் பரட்டைத் தலையுடன், சாமான்ய வேலைக்காரியாக அரண்மனைக்குப் போயிருந்தால் ஜமீன்தார் கண் அவளை நாடியிருக்குமா? ஆனால், தம்பி, அப்படிச் சொல்வதற்கும் இல்லை. அந்தப் பெண்ணின் ஒவ்வோர் அங்கத்திலும் கடவுள் வளப்பத்தையும் வனப்பையும் வாரி இறைத்திருந்தார். அந்த அழகுதான் அவளுக்குக் கேடாக இருந்தது என்று சொல்லலாம். அதற்காக அவலட்சணமாக இருக்க வேண்டுமா? எனக்கு எது காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. அவள் இத்தனை அலங்காரம் இல்லாமல் இருந்திருந்தால் இத்தகைய விபத்துக்கு இடமே இல்லாமல் இருந்திருக்கும் என்ற ஓர் எண்ணம் மாத்திரம் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.

    நாலு நாள் ஏகாம்பரம் ஜூரமாகக் கிடந்தான். அந்த நாலு நாளும் அவள் என்ன என்னவோ கண்டங்களுக்கெல்லாம் தப்பியிருக்கவேண்டும். அதனாலே அவளுக்குத் தைரியம் குறைந்ததென்று நான் நினைத்தேன். படுபாவி! அவளைக் கடவுள் சாமானிய அச்சில் வார்க்கவில்லை. புலியையும் சிங்கத்தையும் வார்த்த அச்சிலே தான் வார்த்திருக்கவேண்டும். அபாயத்துக்குத் தப்பின புலி, மறுபடி அபாயத்திலே சிக்காமல் பதுங்கவேண்டியது தானே நியாயம்? அப்படித் தப்பினதே அதன் வெறியை அதிகப்படுத்திப் பின்னும் பெரிய அபாயங்களிலே போய்ப் படும்படி செய்தால் அதை என்னவென்று சொல்வது?

    ஒரு நாள் அவள் சொன்னாள்; ஏகாம்பரம் ஜுரத்திலிருந்து எழுந்தவுடன் ஒருராத்திரி அவள் அவனோடு பேசிக் கொண்டிருந்தபோது, “மாமா, எனக்கு எங்கள் ஊரிலே போய் இருக்கவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. நாம் இருவரும் அந்த ஊருக்கே போய்விடலாமே” என்றாள்.

    “இதென்ன யோசனை! இங்கே இருக்கிற சௌகரியம் வருமா? உங்கள் ஊரில் எனக்கு என்ன கூலி கிடைக்கும்? அது உனக்கு மல்லிகைப் பூவுக்குக் கூடப்போதாதே!” என்று ஏகாம்பரம் பதில் சொன்னான்.

    “ஏன்? அங்கேயும் ஜமீன்தார் இருக்கிறார். அவர் வீட்டு வேலை இல்லையா?” என்று கேட்டாள் முருகாயி.

    போயும் போயும் அந்த முரட்டு ஜமீன் தாரிடந்தானா வேலை செய்யவேண்டும்? நம்முடைய துரையைப் போல இந்த உலகத்தில் ஒருத்தரைப் பார்க்க முடியுமா?” என்றான் அவன்.

    “ஆமாம் – அவள் பேச்சு ஓடவில்லை. ”உங்கள் துரையைப் பற்றி நீங்கள் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை” என்று வேறு ஒருத்தியாக இருந்தால் சொல்லியிருப்பாள். அவள் முருகாயி ஆயிற்றே; மேலே பேசாமல் இருந்துவிட்டாள். மகா கல் நெஞ்சுக்காரியாக இருக்கவேண்டும் அவள். அந்த நிலையில் அவளுக்கு இருந்த தைரியத்தை நான் யாரிடமும் பார்த்ததேயில்லை. தன்னுடைய மானத்தைப் பிறர் அறியாமலே, பிறர் உதவி இல்லாமலே, தானே காத்துக் கொள்ளலாம் என்ற உறுதி அவளிடம் இருந்தது. இல்லாவிட்டால் அத்தனை உயிருக்கு உயிராகப் பழகிய புருஷனிடம் உண்மையைச் சொல்லியிருக்கமாட்டாளா? சொல்லியிருந்தால் ஒருவேளை அவன், ‘இனி இந்த ஊரிலேயே இருக்கவேண்டாம்? என்று அப்போதே ஏற்பாடு செய்திருக்கலாமோ என்னவோ?’

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *