மூன்று தலைமுறை
கி.வா. ஜகந்நாதன்

3


    ஏகாம்பரம் மாமனார் வீட்டுக்குப் போயிருந்தானே அப்போது ஒரு சங்கதி நடந்தது. கோழிப்பேட்டைக்கும் கமலபுரத்துக்கும் ஒரு நாழிகை வழிதானாமே? முருகாயியின் அம்மாவுக்கு அந்தக் கமலபுரத்து ஜமீன்தார் மகள் பழக்கம். அவர்களுக்குச் சலவை செய்கிறவள் அவள். அந்தப் பெண்ணைத்தான் பாலாடைத்துரைக்குக் கேட்டிருந்தார்கள். தன் மகளும் மருமகனும் வீட்டுக்கு வந்திருக்கிறபோது விருந்து வேடிக்கையெல்லாம் நடக்க வேண்டாமா? பொறுப்புடன் கவனிக்கவேண்டியது. அவள் கடமையல்லவா? விருந்து ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, ஒருநாள் அவள் கமலபுரம் ஜமீன்தார் வீட்டுக்குப் போகவில்லை. மறுநாள் போனபோது அந்த ஜமீன்தார் பெண் கேட்டாளாம், ஏன் வரவில்லையென்று. இவள் தன் மகளும் மருமகனும் வந்திருக்கிற விஷயத்தைச் சொன்னாள்.

    “மாப்பிள்ளை எந்த ஊர்?” என்று கேட்டாள் ஜமீன்தார் பெண்.

    “என்ன அம்மா புதிதாய்க் கேட்கிறீர்கள்! கல்யாணத்துக்குப் பாக்கு வெற்றிலையெல்லாம் வைத்தோம். அதற்குள் மறந்து போய்விட்டீர்களா? மாப்பிள்ளை குமாரபுரம் ஜமீன், ஜமீன் துரைக்கு வேண்டியவர்.”

    ஜமீன் துரைக்கு வேண்டியவர் என்று பெருமையாக இவள் சொல்லிக்கொண்டது ஜமீன்தார் மகளுக்குப் பிடிக்கவில்லை.

    “ஜமீன்தாரும் உன் மருமகனும் கைகோத்துக் கொண்டு விளையாடுவார்களோ? வேண்டியவர் என்று ஜம்பமாய்ச் சொல்கிறாயே!” என்று கேட்டாள் ஜமீன்தார் மகள்.

    “அப்படி இல்லை அம்மா? ஓர் ஆபத்து சம்பத்தென்றால், இவன் நமக்குச் சலவை செய்கிறவன்தானே என்று என்ணாமல், பிரியத்தோடு துரை கவனிப்பாராம். அதனால் தான் அப்படிச் சொன்னேன் அம்மா ” என்று பணிவாகச் சொன்னாள் முருகாயியின் தாய்.

    “அது சரி; உன் மகளைச் சரியாக வைத்துக் கொண்டிருக்கிறானா?”

    “கண்ணிலே வைத்து இமையிலே மூடுகிறார்! எத்தனை புடைவை ! எத்தனை நகை!”

    “அப்படியா! உன் மகளை இங்கே அழைத்துவாயேன். எப்படி இருக்கிறாளென்று பார்க்கிறேன்.”

    தான் போய் வாழ இருக்கும் ஊரைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்பது அவளுடைய ஆசை, “நாளைக்கு நீ வரும் போது, அழைத்துக்கொண்டு வா. அவன் சம்மதிப்பான் அல்லவா?” என்று சிரித்தபடியே கேட்டாள்.

    “என்ன அம்மா, அப்படிக் கேட்கிறீர்கள் உங்கள் வீட்டுச் சோற்றைத் தின்று வளர்ந்த குழந்தை அவள். அவள் உங்களை வந்து பார்ப்பதற்கு யாருடைய உத்தரவு வேண்டும்?”

    மறுநாள் முருகாயியை அழைத்துக்கொண்டு அவளுடைய தாய் ஜமீன்தார் வீட்டுக்குப் போனாள். அந்தப் பெண் – அவள் பேர் என்னவோ சொல்வார்களே ஆமாம், கமலம், கமலம் என்று சொல்வார்கள் — அவள் முருகாயியைக் கண்டவுடன் ஆச்சரியப்பட்டுப் போனாள். அவளுடைய கொண்டையையும் ஆடையரணங்களையும் ஓய்யார நடையையும் பார்த்து, ‘அடேயப்பா! இவள் மகா ராங்கிக்காரியாக இருப்பாள் போல் இருக்கிறதே’ என்று எண்ணினாளாம். குமாரபுரத்துக்கு வந்து சில வாரங்களே ஆகியிருந்தாலும் அந்த ஊரைப் பற்றின சமாசாரம் எல்லாம் முருகாயி தெரிந்து கொண்டிருந்தாள். அத்தனையும் அவள் கமலம்மாவிடம் ஒப்பித்தாள்.

    கமலம் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். இந்தக் குமாரபுரம் பெரிய ஊரென்றும், கடைத்தெரு, அரண்மணைத் தெரு, கோவில் தெரு என்று பல தெருக்களை உடையதென்றும் என்ன என்னவோ சொன்னாள் முருகாயி.கமலம்மாவுக்கு அந்தத் தெருக்களைப் பற்றி என்ன கவலை? “அதெல்லாம் சரி; ஜமீன்தாரைப் பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்” என்று நாணத்துடனே கேட்டாள்.முருகாயியாகச் சொல்லட்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அவள் சொல்லவில்லை. ஆகவே, வாய் விட்டே கேட்டாள்.

    ஒரு பெண்ணினுடைய மனசை மற்றொரு பெண் தெரிந்துகொள்ளமாட்டாளா? உடனே முருகாயி வருணிக்க ஆரம்பித்துவிட்டாள்.

    “அதென்ன அப்படிக் கேட்கிறீர்களே! நாங்கள் அரண்மனை வேலைக்காரர்கள். லக்ஷம் கொடுத்தாலும் இன்னொருத்தருக்குச் சலவை செய்வதென்பது எங்களிடம் இல்லை. நாள் தவறினாலும் எங்கள் வீட்டுக்காரர் துரையைப் பார்க்கத் தவறமாட்டார். அவரை நேரிலே பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் துரைக்கு இவர் மேல் தனியான பிரியம். அதனால் இவரை நேரே பார்த்துப் பேசுவார். அந்தத் துரையைப் பற்றி இவர் மூலம் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். என் கல்யாணத்தின்போது அவர் எவ்வளவோ இனாம் கொடுத் தாராம்.

    “எனக்கும் உனக்கும் மாமனார் வீடு ஒரே ஊரடா என்று இவரிடம் சொல்லிச் சந்தோஷப்பட்டாராம்.”

    “அவ்வளவு தூரம் உன் புருஷனுக்கும் அவருக்கும் நெருக்கமான பழக்கம் உண்டா?”

    “நெருக்கம் என்ன அம்மா? மனுஷருக்கு மனுஷர் பிரியமாக இருக்கிறதென்பது ஒரு தனிச் சுபாவம். துரை அவர்கள் கலகலப்பாகப் பேசுகிறவராம். எங்கள் வீட்டுக்காரரும் குஷியாகப் பேசுகிறவர்.”

    “துரையின் சுபாவம் எப்படி?”

    “தங்கமானவராம். ஆமாம்: சும்மா உங்களுக்காகச் சொல்லுகிறேனென்று எண்ணாதீர்கள். நிறம் தங்கம் போலத்தான் இருக்குமாம். அன்று ஒரு நாள், முழுவதும் சரிகை மயமாக இருந்த வேட்டி ஒன்றை இவர் விசிறி மடிப்பு மடித்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தார். தங்கம் மாதிரி பளபளக்கிறதே என்று சொன்னேன். ‘இதுக்கு மேலே துரை உடம்பு தங்கம்’ என்று இவர் சொன்னார்.”

    ”நீ அவரைப் பார்த்ததில்லையா?”

    “நான் எதற்குப் பார்க்கிறேன் அம்மா? இவர்தாம் ஒவ்வொரு நாளும் போகிறாரே. எனக்கு அங்கே என்ன வேலை? நீங்கள் வந்தால் எனக்கும் வேலை இருக்கும். இவர் ராஜாவைப் பார்க்கப் போனால், நான் ராணியைப் பார்க்கப் போவேன்.”

    “போடி, குறும்புக்காரி! அதற்குள்ளே நீ நிச்சயம் பண்ணிவிட்டாயே. அவருக்கு எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்திருப்பார்கள். நான் தான் னென்று நிச்சயம் சொல்ல முடியுமா?”

    “இந்தா பாருங்கள்: இனிமேல் ஒரு தரம் அப்படிச் சொல்லிவிடாதீர்கள். உங்கள் கழுத்திலே தாலிச் சரடு ஏறவில்லையே ஒழிய, மற்றப்படி நீங்கள் தாம் எங்கள் ஊர் ராணி. நான் அந்த ஊருக்குப் போவதற்குக் கூட நீங்களே காரணம்”

    அதென்னடி,அது? பெரிய புதிர் போடுகிறாயோ “

    “அதுவா? உங்களுக்கும் துரைக்கும் கல்யாணம் ஆகப் போகிறது என்ற சமாசாரம் ஊருக்கெல்லாம் தெரிகிறதற்கு முன்பே எங்கள் வீட்டுக்காரருக்குத் தெரிந்துவிட்டதாம். அது தெரிந்துதான் இவரும் இந்த ஊரிலே பெண் எடுக்கத் தீர்மானித்தாராம். எங்கள் கல்யாணம் முந்தியே ஆகிவிட்டது. நீங்கள் வரும்போது உங்களுக்கு ஊழியம் செய்ய அங்கே ஒருத்தி தயாராக இருக்க வேண்டாமா? எனக்கு அரண்மனைச் சேவகம் எப்போது கிடைக்குமென்று காத்துக் கொண்டிருக்கிறேன். துரையவர்களும் காத்துக் கொண்டுதான் இருப்பார்.சரி, சரி; எப்போது முகூர்த்தம் வைத்திருக்கிறார்கள்?”

    “நீ மகா துணிச்சல்காரியாய் இருக்கிறாயே! எனக்கு என்ன தெரியும் அதைப்பற்றி?”

    “முகூர்த்தம் நடக்காமலா இருக்கப் போகிறது நீங்கள் குமாரபுரம் ராணியாக வந்துவிட்டால் இந்த ஏழையையும் ஒரு கண் பார்த்துக்கொள்ள வேணும். இவர் அடிக்கடி துரையைப் பார்த்து வந்தேன்; அப்படிச் சொன்னார்; இப்படிப் பாராட்டினார்? என்று சொல்லிக் கொள்கிறார். நானும், ‘துரைசாணி இப்படிச் சொன்னார்கள்; எனக்கு இந்தச் சேலையைத் தந்தார்கள்’ என்று அவருக்கு முன்னே சொல்லிக் காட்ட வேண்டும். இதுதான் என் ஆசை. நீங்கள் இங்கே இருக்கிறபோதும் எங்களுக்கு ராணி, அங்கேயும் எங்கள் ராணி அல்லவா? என் ஆசையை நீங்களும் அந்தக் கடவுளும் நிறைவேற்றி வைக்க வேணும்.

    “இப்போதே உனக்கு வேண்டியதற்கு அடிப் போட்டு விட்டாயே; பலே கெட்டிக்காரியடி நீ” என்று கமலம்மா சொன்னாள். அவளுக்கும் இப்படியெல்லாம் பேசிக் கேட்கிறதற்குச் சந்தோஷந்தான்.

    “கடைசியில் உங்கள் கமலம்மாவுக்குக் கல்யாணம் ஆயிற்றா, இல்லையா? சொல் அண்ணா!” என்றது கழுதை.

    “என்ன தம்பி, அவ்வளவு அவசரப்படுகிறாய்? கதையென்று ஆரம்பித்து விட்டால், அதன் போக்கிலே போக வேண்டுமே ஒழிய, நம்முடைய போக்கிலே அதை இழுக்கலாமா? அப்புறம் சுவாரஸ்யம் போய்விடும் பார். கேள்; நன்றாகக் காது கொடுத்துக் கேள். கதை முழுவதையும் ஒன்றுவிடாமல் சொல்லத்தான் போகிறேன். நீயும் கேட்பதாகத் துணிந்துவிட்டாய். கேள், கேள். இனி மேல்தான் கதையின் முக்கியமான கட்டம் வரப் போகிறது.”

    ‘வெகு நாளாகச் சேகரித்து வைத்திருக்கிற சரக்குப் போல் இருக்கிறது! கேட்பதற்கு ஆளில்லை; என்ன செய்யும், பாவம்!’என்று கழுதை நினைத்துக்கொண்டது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *