அறப்போர் 
கா. ந. அண்ணாதுரை

அறப்போர்
கா. ந. அண்ணாதுரை

அறப்போர்

தமிழ்நாட்டில் இந்தி கட்டாய பாடமாக இருக்க வேண்டுமென்று கருதுபவர்கள் தங்களுடைய தவறை உணரும்படி செய்வதும் இன்றியமையாததாகும்.

வட இந்தியருள்ளும் ஒரு சிறு பகுதியினரால் மட்டும் பலப்பல மாறுதல்களுடன் பேசப்படுவதும், இற்றைக்கு 500ஆண்டுகளுக்குள்ளாகவே சமஸ்கிருதம், உருது முதலான மொழிகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துக்களையும், சொற்களையும் கொண்டு உண்டாக்கப்பட்டதும், பழைய அறிவு நூற்செல்வம் இல்லாததுமான ஒரு கலப்புச் சிதைவு மொழியாகிய இந்தி மொழியை இவ் இந்தியா முழுவதுக்கும் பொதுமொழியாக வைத்துவிடலாம் என்பது ஒரு சிலரின் நோக்கம். இவ்வாறான ஏழை மொழியாகிய ஒரு புது மொழியை இந்தியாவிலுள்ள எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் கட்டாய பாடமாக்கி அதனை இந்தியாவிற்கே ஒரு பொது மொழியாக்கிவிடலாம் என்று நினைந்து, அத் துறையில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் சில தலைவர்கள் நாம் கீழே தரும் வினாக்களுக்குத் தக்க சான்றுகளுடன் விடைகள் அளித்த பின்பே அவர்கள் அதனை நம் மக்கட்குக் கட்டாயப்படுத்தும் பெரு முயற்சியில் ஈடுபட வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கின்றோம்:—  தமிழ்நாடல்லாத வேறெந்த நாட்டிலாவது அவர்களின் தாய்மொழியை நீக்கி வேறொரு அயல் மொழியைக் கட்டாய பாடமாக வைத்துக் கற்பிக்கப்படுகின்றதா? அங்ஙனமாயின் எந்த நாட்டில், எம்மொழி என்பதைத் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டுக!

இந்தி மொழியை இந்தியா முழுவதுக்கும் பொது மொழியாக்குவதினின்றும் மக்களிடையேயுள்ள பிளவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாக்கும் என்னும் கூற்றுக்கு யாதாயினும் சான்று காட்டி அதனை மெய்ப்பிக்க முடியுமா?

ஒரு மொழியையே பேசும் ஒரு நாட்டவரிடையே பலவகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும் நிலைமையில், பல மொழிகளைப்பேசும் பல நாட்டவரையும் ஒரு பொது மொழி கற்பதனால் ஒற்றுமையாக்கி விடலாமென்று கருதிப் பாடுபடுவது “உமி குற்றிக் கை சலித்த பான்மையாக முடியுமல்லது அதனால் யாதும் பயன் விளையுமென்று சொல்ல முடியுமா?

இப்போது ஒரு மொழியையே (ஆங்கிலத்தையே.) பொதுமொழியாக வைத்துப் பேசிவரும் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய மூன்று தீவுகளிலுமுள்ள கலேகாற்கோடி மக்களுள்ளும் பிளவுகளும், சச்சரவுகளும் இல்லாமலா இருக்கிறது?

இந்தியாவில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பகுதி வினரால் அதாவது 25 கோடி மக்களால் இந்திமொழி பேசப்பட்டு வருகின்ற தென்னுங் கூற்றுக்குத் தக்க ஆதாரங்களுடன் எந்த ஆண்டிலாவது எடுக்கப்பட்ட

இந்தியக் குடிக்கணக்கின்படி புள்ளி போட்டுக்காட்ட முடியுமா? அல்லது இப்பெரும் பொய்யை மறைக்கும் ஆற்றலாவது எவருக்கேனும் உண்டா?

இப்போது சற்றேறக் குறைய 16 கோடி மக்களாற் பேசப்படுவதும், உலகப் பொதுமொழியெனச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்வதும், கடந்த 150 ஆண்டுகளாக. இந்தியா முழுவதிலும் உள்ள எல்லா வகை அலுவல் நிலையங்களிலும் வைத்து வழங்கப்பட்டு வருவதும் ஆன ஆங்கில மொழியின் உதவி கொண்டே நம் நாட்டு மக்கள் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி அளவளாவ முடியாத நிலைமையில்–ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் அதன் பொருளை அறிந்துகொள்ள முடியாது திகைக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணப்படும் இந்த நிலைமையில்–இனிப் புதிதாக ஒரு பொதுமொழியைக் கற்று அதன் வாயிலாக இந்தியமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அளவளாவி ஒற்றுமையுடன் இனிது வாழலாம் என்று கருதுவது யாங்கஙனம் இயலும்?

நம் இந்திய மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இந்தி மொழியைக் கற்றுக் கொண்டாலும், அதன் உதவிகொண்டு இப்போதைய நிலையைப் பார்க்கிலும் ஒரு கடுகளவாவது உயர்ந்து செல்ல இடம் உண்டாகுமா? அல்லது இந்தி மொழியில் உயர் நிலையை அடைய வழிகாட்டும் ஏதொரு நூலாவது உண்டா? அங்ஙனம் உளதாயின், அந்நூலின் பெயர்தான் யாதோ?

நமது செந்தமிழ் மொழியின் பழைமை, இளமை, இனிமை முதலிய மேதக்க பெருமைகளையும், அம்மொழியின்கண் மிளிரும் ஒப்புயர்வற்ற விழுமிய கருத்துக்களோடு கூடிய அரும்பெரும் நூல்களையும், 7000, 8000 கல் தொலைவிற்கு அப்பால் உள்ள மேனாட்டு ஆங்கிலேயர், ஜர்மானியர் முதலான மக்கள் பேசியும் கற்றும் வருதலோடு, தத்தம் மொழிகளிலும் அந்நூல்களை மொழிபெயர்த்து, விளக்கவுரைகளும் எழுதி, அவற்றிற்குத் தக்க பெருமை அளிக்கும் போது, நமக்கு மிக நெருங்கிய தொடர்புடையவர்களான 400, 500 கல் தொலைவிலிருக்கும் நம் வட இந்தியர்கள் மட்டும் நம் மொழியையோ அல்லது அதன்கண் உள்ள நூல்களையோ ஒரு சிறிதும் கண்ணேறெடுத்துப் பாராமல் இருப்பதன் காரணம், அவர்களுக்கு நம்மீதும், நம் மொழியின் மீதும், நம் மொழியின்கண் உள்ள சிறந்த நூல்களின் மீதும் உள்ள அழுக்காறும், மனக்காழ்ப்பும், பொறாமையுமேயல்லாது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதாகக் கூற எவருக்கேனும் நாவெழுமா?

இந்திய நாட்டின் ஒரு பகுதியினரான வடவர்களுக்கே, நம் மீதும், நம் மொழியின் மீதும் நல்லபிப்பிராயம் இல்லாமல் இருக்கும்பொழுது, நாம் மட்டும் அவர்களுக்கு நன் மதிப்புக் கொடுத்து அவர்கள் மொழியைக் கட்டாயமாகக் கற்கவேண்டுமென்று நம் நாட்டு தலைவர்களிற் சிலர் இப்போதும் மடிகட்டி நின்று பிடிவாதஞ் செய்வதன் பொருள் தான் யாதோ?

தென்னாட்டவர்கள் இந்தி கற்றுவிட்டால் வடநாடு சென்று உத்தியோகம் பார்க்க வசதியாய் இருக்குமென்று சிலர் கூறுகின்றனர். அங்ஙனமாயின், இப்போது வடநாட்டிலுள்ள இந்தி கற்ற அத்தனைபேரும் உத்தியோகத்தில் அமர்ந்துதான் இருக்கிறார்களா? வட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது அறவே இல்லையா?

தென்னாட்டில் இந்தி இயக்கம் தொடங்கியதிலிருந்து வடநாட்டிலுள்ள பலர், தென்னாட்டவர்கள் இந்தி கற்றுவிட்டால், அவர்கள் நம் நாட்டுக்கு வந்து உத்தியோக வேட்டையாட முயல்வார்களே, அப்போது எங்கள் பாடு திண்டாட்டமாய் முடியுமே என்ற கிளர்ச்சியைச் செய்து வருகிறார்களாமே! அது உண்மையா, அல்லது பொய்யா?

தமிழ் மக்கள் இந்தி கற்றுக்கொண்டாலும், கற்றவர்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்கு வடநாட்டில் உத்தியோகம் கிடைக்கும்?

இஞ்ஞான்றைத் தமிழ் மக்கள் பலர் பெங்களூர், மைசூர், சிகந்தரா பாக்கம், புனா, பம்பாய், கல்கத்தா, கராச்சி, காசி, காக்கிநாடா, நெல்லூர் முதலான வட இந்தியாவின் பற்பல ஊர்களிலுஞ் சென்று, அங்கு தம் வாணிக வாழ்க்கையிற் சிறப்பெய்தி இருக்கின்றனரே! இம் மேலே குறிப்பிட்ட ஊர்களில் வைகி வாழ்ந்துவரும் நந்தமிழ்மொழி பேசும் தமிழ் மக்கள் எல்லோரும் தமக்கு ஒரு பொதுமொழி இல்லாததனால், தாம் நடாத்தும் வாணிக வாழ்க்கைக்கு ஏதேதோ இடையூறுகள் ஏற்படுவதாகவும், அதனால் தமக்கும் தாம் சென்று உறையும் ஊர்களிற் இருப்பவர்கட்கும் பொதுமொழியாக இந்திமொழியை ஆக்கி உதவவேண்டுமென்றும் முறையிட்டு விண்ணப்பித்துச் கொண்டார்களா?

அல்லது வடஇந்தியாவின் பற்பல பகுதிகளின் பற்பல மொழிகளைப் பேசுபவர்களான பெருந்தொகை மக்கள் நந்தமிழ் நாட்டின்கண் உள்ள பற்பல ஊர்களிலும் வந்திருந்து வாணிகம் முதலான தொழில்களைச் செய்கிறார்களே! அவர்களாவது தங்களின் வாணிக வாழ்க்கைத் துறைகளிற் பயன்படுத்திப் பேசுவதற்காக இந்தியைப் பொதுமொழியாக்கி உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்களா?

இங்ஙனம் தென்னாட்டிலிருந்து வடநாடு சென்று உறையும் தமிழராவது, அல்லது வடநாட்டிலிருந்து தென்னாடு வந்து வாழும் வடவர்களாவது, தங்கள் இருசாராருக்கும் பொதுவாக இந்தியைப் பொதுமொழியாக்கித் தருதல் வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அதற்காகவே தான் “நாங்கள்” இந்தியைப் பொதுமொழியாக்க முயன்று வருகின்றோம் என்பதாக நாளதுவரை எந்த இந்தி இயக்கத் தலைவர்களாவது கூறவில்லையே ! மற்று அத் தலைவர்கள் இந்தி மொழியைப் பொதுமொழியாக்கினால் இந்திய மக்களுக்கு நன்மைகள் பல உண்டாகுமென்று தங்கள் கருத்திற்பட்டதாகவும், அதனாலேதான் தாங்கள் இந்தியைப் பொதுபொழியாக்க முயன்று வருவதாகவுந்தானே கூறினார்கள்–கூறுகின்றார்கள். இதனால் இத்தலைவர்களின் இவ்வொரு செயலானது பொதுமக்களின் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேண்டாக்கிளர்ச்சி என்பது புலப்படவில்லையா?

இவ்வாறாக எவராலும் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படாத, ஒரு பயனுமற்ற கிளர்ச்சியாகிய இந்தி கட்டாயக் கல்வி முறையைத் தோழர் முத்துரங்கம் போன்றார் சிலர் தம் தலைமீது தூக்கிச் சுமந்து திரிவதன் காரணம், அவர்களுக்கு இதுபோன்ற பயனற்ற துறைகளில் இறங்கித் தம் காலத்தையும், முயற்சியையும், பொதுமக்களின் பணத்தையும் செலவு செய்வதைத் தவிர, மக்களுக்கு நன்மைகள் ஏற்படக்கூடிய வேறு துறைகளில் இறங்கிப் பாடுபடுவதற்குரிய ஆற்றலும், ஆர்வமும் இல்லையென்று கருதுவதா, அல்லது அவர்களின் போக்கை வேறு வகையில் நினைத்து அழுவதா ?

இனி, தாய்மொழியாகிய தமிழைப் படியாதவர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குமேல் காணப்படும் இந்த இரங்கத்தக்க நிலைமையில், இந்தியைக் கட்டாய பாட மாக்குவோம் என்று கங்கணம் கட்டி நிற்கும் தமிழ் மக்கள் சிலரின் ஒரு செயலை நோக்குமிடத்து, அது “தாய் தஞ்சையில் தன் கைப்பிச்சை எடுக்கத், தனயன் குடந்தையில் கோவிகை புரிந்தது” போலுமன்றோ இருக்கிறது! என்னே, இவர்களது அறிவுடைமை! தாய் மொழியை விடுத்துப் பிறமொழி கோடல் பெருமையாகுமா?

பெரியீர்! நம்மை அடுத்த ஆந்திர (தெலுங்கு) நாட்டை நோக்குங்கள். அம்மொழியின் ஆக்கத்தை அறியுங்கள். அவர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் பாருங்கள். மொழிக்காகச் செய்யும் முயற்சியை நோக்குங்கள். அவர்கள் இப்போது Andhra University என்ற பல்கலைக்கழகம் ஏற்படுத்தி, அதில் தெலுங்கு மொழியைக் கட்டாயக் கல்வியாக வைத்துக் கற்றுத் தேர்ச்சியடைய ஏற்பாடு செய்து வருகிறார்கள். மலையாளத்திலும் Kerala University என்ற பல்கலைக் கழகம் ஏற்படுத்தி, மலையாள மொழியையும் நன்கு பயின்று வருகின்றனர். இங்ஙனமே வங்க (Bengal) நாட்டைக் காணுங்கள். அவர்கள் தங்கள் மொழிக்காகக் கைக்கொண்ட முயற்சியைக் கேளுங்கள். வங்க இளைஞர்கள் தாய்மொழியைக் கங்கணம் கட்டிக் கொண்டு காத்தார்கள். உடல்,பொருள், உயிர் அனைத்தையும் அந்நாட்டு மக்கள் தங்கள் மொழிக்காகத் துறந்தார்கள். அதனால், அவர்கள் தாய்மொழி சிறப்புற்று இலங்குகிறது; சீர்பெற்றுத் திகழ்கிறது. “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?” இங்ஙனம் தமிழரல்லாத ஒவ்வொரு மொழி பேசுவோரும், தத்தம் மொழிகளையே முதன்மையாகக் கற்றுத் தேர்ந்து முன்னேற்றமடைய வேண்டுமென்ற பெரு முயற்சி செய்துவர, அவ்வறிவுடையோர்களைப் பார்த்தாயினும் அறிவுபெறாது, ஒரு முயற்சியும் இல்லாமல், இந்தியைக் கட்டாய பாடமாக்குவதால் வரும் இன்னல்கள் எவை என்று தமிழை இகழ்ந்து பேசிக் கொண்டு வறிதே காலங்கழிக்கும் தோழர் முத்துரங்கம் அவர்கள் போன்றாரைத் தமிழர் என்று அழைப்பதா? தமிழுக்குக் கேடு சூழும் தமிழ் மொழிப் பகைஞர் என்று அழைப்பதா? கூறுமின்கள்! தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றென்பதை உணராது, தான் தோன்றித் தம்பியான்களாய்த் தடுமாறித் திரியும் தமிழ் மக்கள் சிலரைப் பார்த்து வருந்துவதைவிட வேறு என்ன செய்ய இயலும்?

இனித், தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்றென்பதை நன்குணர்ந்த கவிமன்னராகிய இரவீந்திரநாதர் “கீதாஞ்சலி” என்னும் உலகம் போற்றும் ஒரு நூலை முதல் முதலில் தம் தாய்மொழியாகிய வங்கத்திலன்றோ யாத்தார். உலகமறிந்த பெரியாராகிய பாலகங்காதர திலகர் தாம் அருளிச்செய்த “கீதா ரகசியம்” என்னும் நூலைத் தம் தாய் மொழியாகிய மகாராஷ்டிரத்திலன்றோ வெளியிட்டார். இந்திமொழி இந்தியாவிற்குப் பொது மொழியாக வேண்டு மென்று பாடுபட்டவருள் தலை சிறந்தவரான காந்தியடிகள் தமது “வரலாற்றைத் ” தம் தாய்மொழியாகிய கூர்சரத்திலன்றோ எழுதிக்காட்டினார். மேலே குறிப்பிட்ட மூவரும் ஆங்கிலத்தில் நிரம்பிய புலமை பெற்றவர்கள். அவர்கள் எழுதும் ஆங்கிலத்தின் அழகான நடையை ஆங்கிலேயரே போற்றி மகிழ்கின்றனர். இப்பெரியார்களின் வாழ்வுஞ்செயலும், பிறவும் உலகுக்கு எடுத்துக்காட்டாக (Example) நின்று துணை செய்கின்றன. தாய்மொழிப் பற்றே தாய்நாட்டுப் பற்றென்பதை அவர்கள் தெள்ளிதில் உணர்ந்தே தாய்மொழிக்கு ஆக்கந் தேடினார்கள்.

இந்தி மொழியைத் தமிழ் நாட்டில் கட்டாய பாடமாக கினால் தமிழ்மொழி தன் சிறப்பை இழந்து விடுமென்பதையும், தமிழ் மக்கள் தம் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடுவார்கள் என்பதையும், நம் தமிழ்ச் சகோதரர்கள் நன்குணர்ந்து தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக! தமிழரையும், தமிழ் மொழியையும் தாழ்த்தும் பொருட்டும், இந்தி பேசும் நாட்டவரையும், இந்தி மொழியையும் உயர்த்தும் பொருட்டும், ஒரு சில சுயநலமிகள் செய்துவரும் சூழ்ச்சிகளை உணராது நம் தமிழ் மக்களிற் பலர் அவற்றை மெய்யெனக்கொண்டு தம்மையும், தம் அருந் தமிழையும் இழிவுபடுத்தி, ஐயகோ! ஏமாந்து போகின்றனரே! இனியேனும் அவர்கள் அப் பொய்ம்மையை உணர்ந்து தமக்கும், தம் தாய்மொழிக்கும் ஆக்கந் தேடுவார்களாக!

இப்போது ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் புகுந்து வாணிகம் முதலிய தொழில் முறைகளினால் பெரும் பொருள் சேர்த்துக் கொண்டுபோவது யாவரும் அறிந்ததே. இந்த நிலைமையில் இந்தியும் பொது மொழியாக மாறிவிட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் இலட்சக்கணக்காகப் பெருகி வந்து இன்னும் பெரும் ஊதியத்தைப் பெற்றுப்போவதற்கு எளிதாய் இருக்குமென்று நினைக்கிறார்கள் போலும்! ஆம், ஆம்! ஒரு சாரார் நீங்கிவிட்டால், தமிழ் நாட்டவர்கள் வியர்வை வடியத் தேடிய பொருளைக் கவர்ந்து செல்வதற்கு இன்னொரு சாரர் முன் எச்சரிக்கையாகவே “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேயே கண்” என்ற பழமொழிப்படி, அதற்குரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்யவேண்டுமல்லவா? தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள் என்று அறிந்தவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்!

தமிழ் அன்பர்களே! பொன் விலங்கைக் கழற்றி இருப்பு விலங்கை மாட்டிக்கொள்வதுபோல் ஒரு சாராரின் அடிமைத்தனத்தில் நின்றும் விடுபட்டு, இன்னொரு சாராருக்கு அடிமைத்தனமாகும் “பிறப்புரிமை எங்கள் அடிமைத்தனம்” என்னும் இழிந்த நோக்கத்தை மாற்றி, “நாங்களும் மக்கட் கூட்டத்தவர்தான்–எங்களுக்கும் பகுத்தறிவு இருக்கின்றது.–நாங்களும் பிற நாட்டினரைப் போன்று தனித்து நின்று எங்கள் வாழ்க்கையை நடத்தும் ஆற்றலும், வீரமும் உள்ளவர்கள்தான்–நாங்களும் வடநாட்டில் ஆயிர மன்னரையும் ஒருங்கே கங்கை நதிக்கரையில் புறமுதுகிட்டோடச் செய்த செங்குட்டுவன் பெருமைக்கு உரியதாய் அமைந்த தமிழ் வீரர்தான்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு கூடிய உணர்ச்சி நரம்புகள் தமிழ்ப்பாலுண்ட உங்கள் உடம்புகளில் ஓடிக்கொண்டிருக்குமாயின், இந்தி மொழியைக் கட்டாயபாடமாக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறவர்களது சுயநல ஆரவாரத்துக்குத் தக்க அறிவாப்புக் கொடுத்துத் தமிழ்மொழியைக் கட்டாய பாடமாக்கும் பெருஞ்செயலை மேற்கொள்ளுங்கள்! இல்லையேல், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பின் உங்கள் வழித்தோன்றும். தமிழ்ச் சிறார்க்கு மாபெருங்கேடு அடிகோலி வைத்தவர்களாவீர்கள். அவர்கள் “நாங்கள் தமிழரோ அல்லது வேறு இனத்தவரோ” என்று நினைக்கும் நிலைமையில் கலங்குவார்கள்.

இப்போது ஆங்கிலம் ஒன்றாலே நமது தமிழ்மொழி எவ்வளவு சீர்குலைந்திருக்கிறதென்பதைப் பாருங்கள்.நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள்கூடத் தாம் பேசும்பொழுது ஆங்கிலச் சொற்களை வலிந்து பொருத்திப் பேசிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக “இன்று காப்பி (coffee) பஸ்டாய் (first) இருந்தது”, “உனக்குக் கொஞ்சங்கூட யுசென்ஸ் (sense) இல்லை”, “ப்ளீஸ் (please) ஜானகி இந்தப் பென்சிலை (pencil) மெண்ட் (mend) பண்ணித்தா” என்றெல்லாம் பேசுவது கண்கூடு. இந்த நிலைமையில் இந்தியும் பொதுமொழியாக மாறிவிட்டால், நம் தமிழ்மொழி என்னவாகும் என்பதைச் சற்றே உணர்ந்து பாருங்கள்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *