நினைப்பவர்‌ மனம்‌ 
திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌
திரு. வி. கலியாணசுந்தரனார்

“குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி”
– மாணிக்கவாசகர்

சகோதரிகளே! சகோதரர்களே!

நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்
பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தே
கொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,
அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்
போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,
மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்
ஒரு பாங்கர், சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வெள்ளிவிழாக்
கூட்டம் இன்று (29-8-1930) கூடியிருக்கிறது. இக்கூட்டத்துக்குத்
தலைமைவகிக்கும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. இப்பேற்றை
எனக்கு வழங்கிய சமாஜ அமைச்சுக் குழுவினர்க்கும், வரவேற்புக்
கூட்டத்தார்க்கும், ஈண்டு ஈண்டியுள்ள மற்ற அன்பர்கட்கும் எனது
நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.

சைவ சித்தாந்த மகா சமாஜம் தோன்றி இருபத்தைந்து
ஆண்டுகளாகின்றன. இச்சமாஜம் கெடில நதிக்கரையில், திருப்
பாதிரிப்புலியூரில், ஞானியார் சுவாமிகள் மடத்தில், சுவாமி
வேதாசலம், அறிஞர் நல்லசாமிப் பிள்ளை முதலியோர் முயற்சி
யால் காணப்பட்டது. சமாஜத்தின் வெள்ளி விழா, கெடில நதிக்
கரையிலேயே, சைவக் கண்கள் இரண்டு பிறந்த இருபெரும்
பதிகளின் நடுவண் ஒளிருங் கிழக்குமருதூர்க்கண், திருச்சிற்றம்பல
இல்லத்தில், வழிவழிச் சைவத் தொண்டாற்றி, அப்பர் சுவாமி
களிடத்து அன்பு செலுத்திப் பேரும் புகழும்பெற்ற பெருங்
குடியிற்றோன்றிய சைவச் செல்வர் – திருவாளர்- கிருஷ்ணசாமி
நாயுடு அவர்களின் புதல்வரும், சைவ இளைஞருலகில் உயிரனை
யாரும், எனது கெழுதகை நண்பரும், உழுவலன்பருமாகிய
திருமிகு – நாராயணசாமியென்னும் நம்பி, திருவாளர் – வெ. பால
கிருஷ்ண நாயுடு அவர்களின் புதல்வி திருமிகு- அலர்மேல்
அம்மாள் என்னும் நங்கையை, வாழ்க்கைத் துணை யாகக்
கொண்ட திருமணப் பொலிவு கொலுவீற்றுள்ள இவ் வேளையில்,
நடைபெற நேர்ந்தமை குறித்து மகிழ்வெய்து கிறேன். குவளைக்
கண்ணி கூறன் திருவருளால் மணமக்கட்கு நலன் பெருக பெருக
என்று வாழ்த்துக் கூறி, எனது பணிமேற் செல்கிறேன்.
இருபத்தைந் தாண்டுகளாக ஒல்லும்வகை முயன்று, சைவ
சித்தாந்த மகா சமாஜம் சமயத்தொண்டாற்றி வருகிறது.
சமாஜத்தின் நிகழ்ச்சி முறைகள், அதன் சார்புப் பத்திரிகையாகிய
“சித்தாந்தத்” தில் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன.
சமாஜம் தோன்றிய நாள் முதல் இன்று வரை, அதன் நலன்கருதி
யுழைத்துவந்த அன்பர்கட்கெல்லாம் எனது வணக்கம் உரியதாக.

இவ்வெள்ளிவிழாக் கூட்டத்தில் அப்பர் அருண் மொழி
களுள் ஏதாவதொன்றைக் குறிக்கோளாகக் கொண்டு தலைமை
யுரை வழங்குமாறு மணமகனும் மற்றுஞ் சிலரும் விரும்பினர்.
அவர் விரும்பியவாறே அப்பர் அருண்மொழிகளில் எனது
உளத்தைச் செலுத்தித் துழவினேன். ஒரு திருப்பாட்டில் எனது
நெஞ்சம் படிந்தது. அது வருமாறு:

“பனைக்கை மும்மத வேழ முரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த ளைப்பொமு தும்மறந் துய்வனோ ”

இத்திருப்பாட்டில் இரண்டாம் அடியாக அமைந்துள்ள
“நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” என்பதைத்
தழுவித் தலைமையுரையைச் சுருக்கமாக நிகழ்த்த முயல்கிறேன்.
குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு உங்களை வேண்டு
கிறேன்.

“நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்” என்னுஞ்
சீரடியை உற்று நோக்குவோம். முதலாவது, ஆண்டவன் தன்னை
நினைப்பவர் நெஞ்சங் கோயிலாக் கொண்டானெனில், அவன்
தன்னை நினையாதார் நெஞ்சங் கோயிலாக் கொண்டிலையோ
என்னும் ஐயம் பிறக்கிறது. இவ்வையம் பிறத்தல் இயல்பு.
ஆண்டவன் ஓரிடத்திற் கோயில் கொண்டு, மற்றோரிடத்திற்
கோயில் கொள்ளாதவனல்லன். அவன் நீக்கமற்ற யாண்டும்
நிறைந்து நிற்பவன். அவன் ஓரிடத்தை விரும்பிக்கொள்வோனு
மல்லன்; மற்றோரிடத்தை வெறுத்துத் தள்வோனுமல்லன். அவன்
கோயில்கொள்ளல் கொள்ளாமை அவனைப் பொறுத்தன
வல்ல. அக்கொள்ளல் கொள்ளாமை உயிர்களின் நிலையைப்
பொறுத்து நிற்பனவென்க.

கதிரொளி யாண்டும் ஒரு தன்மையதாகவே படர்ந்து நிற்
கிறது. அவ்வொளிக்கு ஒருவரிடம் விருப்பும், இன்னொருவரிடம்
வெறுப்புமில்லை. அவ்வொளி யின்பத்தைக் குருடன் நுகர்
கிறானா? இல்லையே. இக் குறைபாடு கதிரொளியின் பாலதா?
குருடன் பாலதா?

மின்சாரம் யாண்டும் நிலவுகிறது. யாண்டும் நிலவும் அது
யாண்டுங் காட்சியளிக்கிறதோ? இல்லை. பின்னை அது யாண்டுக்
காட்சி வழங்குகிறது? அதைத் தொழிற்படுத்தி, ஒழுங்கு செய்யு
மிடத்தில் அது காட்சி வழங்குகிறது. சிற்சில இடங்களில்
மின்சாரம் விளங்கித் தோன்றுவது கண்டு, மற்றைய இடங்களில்
அஃது இல்லையென்று கூறுவது பொருத்தமாகுங்கொல்!

கதிரொளியைப் போலவும், மின்சாரத்தைப் புரையவும்
ஆண்டவன் திருவருள் விளங்குகிறது. ஆண்டவன், தன்னருளை
எல்லா இடங்களிலும் விருப்பு வெறுப்பின்றிப் பொழிந்து
கொண்டிருக்கிறான். மெய்யறிவு விளங்கப் பெற்றோர்க்கு அது
புலனாகும். ஏனையோர்க்கு அது புலனாகாது. உயிர்கட்குப்
புலனாதல், புலனாகாமை முறையே ஆண்டவன் கோயில்
கொள்ளல், கொள்ளாமை என்று வழங்குதல் மரபு.

கவலையால் பெரிதும் பீடிக்கப்பட்ட ஒருவன், மண்ணில்
நடந்துகொண்டே மண்ணை மறந்துவிடுகிறான். மண்ணுமிருக்
கிறது; அதன்மீது நடையும் நிகழ்கிறது. ஆனால் நடப்பவன்
நிலையென்ன? அவன் கவலை, அவனைத் தாங்கும் மண்ணையே
மறைத்துவிட்டது.

இவ்வாறே எல்லாவற்றிற்குந் தாரகமாக ஆண்டவன்
திருவருள் நிற்கிறது. அதை ஞானிகள் உணர்கிறார்கள். மற்றவர்கள்
உணர்கிறார்களில்லை. ஈண்டு உணரல் உணராமை யாருடையன?

ஆண்டவன் உயிர்களிடைக் கோயில்கொண்டி ருத்தலை
உயிர்கள் உணரும் நிலை யொன்று; உணராநிலை யொன்று
முன்னையது ஞானநிலையென்றும், பின்னையது அஞ்ஞான
நிலையென்றுஞ் சொல்லப்படும். இவ்விரு நிலைகளும் உயிர்களின்
பாற்பட்டனவாகலின், “நினைப்பவர் மனங் கோயிலாக்
கொண்டவன்” என்றும், “நினையாதார் மனங் கோயிலாகக்
கொள்ளாதவன்” என்றும் ஆண்டவனைக் கருதலாகாது. ஆகவே,
இதைப் பற்றி ஐயுற வேண்டுவ தில்லை.

“நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்” என்னும்
அடிக்கண் போந்துள்ள கொண்டவன்” என்பது, புதிதாக
ஓரிடங் கொள்வதைக் குறிப்பதன்று. அது முன்னரே (கோயில்)
கொண்டமையைக் குறிப்பதென்க. இதனைச் சுவாமிகள் மற்று
மோரிடத்திலும் “என் மனமே சென்று புக்கனன் போந்த சுவடி
ல்லையே” என்று விளக்கியுள்ளார்கள். “போந்த சுவடில்லையே”
என்பது மனத்தில் இறைவன் புதிதாகப் புகுதலைப் புகல்வதன்று.

ஆண்டவன் பண்டே நெஞ்சங் கோயில் கொண்டுள்ளான்.
அவன் நினைவு அதை யுணர்த்துவதாகிறது. அப்புத்துணர்விற்கு
ஆண்டவன் நெஞ்சில் புகுந்தது போலத் தோன்றுதல் இயல்பு.
உண்மையில் ஆண்டவன் புதிதாக யாண்டும் புகுதலில்லை
யென்க. “பூவினிற் கந்தம் பொருந்தியவாறு போல் – சீவனுக்
குள்ளே சிவமணம் பூத்தது” எனவரூஉந் திருமூலர் திருவாக்கை
யோர்க. “மலர்மிசை ஏகினான்” என்னும் வள்ளுவர் வாக்கும்,
அதற்குப் பரிமேலழகர் வரைந்துள்ள உரைக்குறிப்பும் ஈண்டு
உன்னற்பாலன.

ஆண்டவன் நெஞ்சில் கோயில் கொண்டி ருத்தலை உயிர்கள்
உணராதவாறு அறியாமை தகைந்து நிற்கிறது. அறியாமை
ஒடுங்க ஒடுங்க ஆண்டவன் நெஞ்சில் கோயில் கொண்டிருத்தல்
உயிர் கட்குப் புலனாகும்.

உயிர்கட்கு அறியாமைக் கட்டி ருத்தல் வெள்ளிடைமலை.
கற்றல் கேட்டல் முதலியவாற்றான், பல பொருள்களைப் பற்றிய
அறியாமை நீங்கிச் சிற்றறிவு விளங்குதலை அநுபவத்தில் பெறுகி
றோம். இதனால், முழு அறியாமை யொடுக்கமும், முழு அறிவு
விளக்கமும் என்றாதல் ஒருபோது உற்றே தீரல்வேண்டு
மென்பதை யூகித்துணரலாம்.

உயிர்கள் அறியாமையினின்றும் விடுதலை யடைவதே
வீடுபேறென்பது. அவ்வீடு பேற்றிற்கு உயிர் எதைப் பற்றுதல்
வேண்டும்? தன்னைப் போன்ற கட்டுடைய ஒன்றையா பற்றுதல்
வேண்டும்? குருடன் குருடனை வழிகாட்டியாக்கொள்ள
விழைதலுண்டோ? கட்டுடைய ஒன்று கட்டில்லா ஒன்றைப்
பற்றுவதே நியாயம். “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்றார் திருவள்ளுவனார்.

ஆண்டவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கின
வனாய், முற்றறிவுடையனா யிருப்பவன். அவனைப் பற்றினால்
உயிர்கள் கட்டினின்றும் விடுதலை அடைந்து இன்பந் துய்த்தல்
உறுதி. ஆண்டவனைப் பற்றுவது எப்படி?

அதற்குரிய வழிகள் பலப்பல. அவைகளுள் எளியதும்,
விரைவில் பேற்றை யளிக்கவல்லதுமாயிருப்பது ஒன்று. அதுவே
ஆண்டவனை நினைத்தல் என்பது. நினைத்தலை, நெஞ்சால்
பற்றுவது என்றுஞ் சொல்லலாம். இதனைத் தியானயோகம்
என்றுங் கூறுப. தியானம் உயிர்நலனுக்கு இன்றியமையாதது.

ஆண்டவனை நினைந்து நினைந்து உருக உருக, அவன்
நெஞ்சங் கோயில் கொண்டிருத்தலை யுணர்ந்து வீடுபே றெய்த
லாகும். வேண்டற்பாலது ஆண்டவன் நினைவு நினைவு என்று
வலியுறுத்துகிறேன். அநுபவத்தில் ஆண்டவன் நினைவின்
விழுப்பமுணர்ந்த ஆன்றோர்கள், பின் வருவோரை நோக்கி,
“ஆண்டவனை நினையுங்கள் நினையுங்கள்” என்று அருளிப்
போந்த பொன் னுரைகள் மலைக்குலங்களெனத் திரண்டு
கிடக்கின்றன. அவைகளை எவ்வளவு படித்தாலும் இப்பாழும்
நெஞ்சந் திருப்புகிறதா?

ஆண்டவன் நினைவுக்கென்றே நெஞ்சம் அமைக்கப்
பட்டிருக்கிறது; நெஞ்சிற்கெனக் காரணங்கள் வகுக்கப்பட் டிருக்
கின்றன; காரணங்கட்கென உடல் வழங்கப்பட்டிருக்கிறது;
உடலுக்கென உலகம் வாழ்வு கல்வி செல்வம் முதலிய எல்லாம்
அளிக்கப்பட்டிருக்கின்றன. நெஞ்சந் திரும்பி ஆண்ட வனைப்
பற்றினால், பிறவெல்லாம் அதன் வழி நின்று, ஆண்டவன்
வயப்படும். ஆண்டவன் நினைவிற்கென்றே இவை யாவும்
வழங்கப்பட் டி ருக்கின்றன. இவைகளைப் பெற்றும் ஆண்டவனை
நினையாத நெஞ்சை என்னென்று கூறுவது? ஏ! மடநெஞ்சே!
பாழ் நெஞ்சே! :பெரும்பற்றப் புலியூரனைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளாகும். ஆதலால் “நெஞ்சே நீ
நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை’; நெஞ்சே! “நீதியால்
அவனை நினைசெய்”

“தோற்ற முண்டேல் மரணமுண்டு’ என்பது வன்றொண்டர்
வாய்மொழி. என்றாதல் பருவுடல் மறைதல் ஒருதலை. மறைந்த
ஒன்று மீண்டும் வருதல் வேண்டுங்கொல்? மீண்டும் பிறவாநிலை
தேடிக் கொள்ளலே அறிவுடைமை. “இக்காய நீக்கி இனியொரு
காயத்திற் – புக்குப் பிறவாமற் போம் வழிதேடுமின்” என்றார்
திருமூலர். இதற்கு என் செய்தல் வேண்டும்? நல்ல யாக்கை
யுள்ள போதே தோற்றக் கேடில்லாத ஆண்டவன் நினைவில்
உறைந்து நிற்கப் பயிலல் வேண்டும். பருவுடல் மறையுங்கால்
தோன்றாத் துணையாய்ச் செல்வது எது என்று நினைந்து
பாருங்கள். அதை நினைக்க நினைக்க ஆண்டவன் நினைவின்
இன்றியமையாமை புலப்படும்.

“அண்டவன் நினைவின் இன்றியமையாமை தெரிகிறது;
ஆண்டவன் நினைக்கவும் நெஞ்சம் எழுகிறது; ஆனால் உயிர்ச்
சார்பும் பொருட் சார்பும் இடையூறாக நிற்கின்றன” என்று சிலர்
சொல்கிறார். இஃது அறியாமை. ஆண்டவனை நினைத்தற்கு
மனைவி மக்களைத் துறத்தல் வேண்டுமென்றும், வீடு
வாசல்களை வெறுத்தல் வேண்டுமென்றும் நினைப்பதே
ஆண்டவன் நினைவிற்குக்கேடு சூழ்வதாகும். உயிர்ச்சார்பை
யும் பொருட் சார்பையும் ஆண்டவன் நினைவிற்கு அரணாகப்
பயன்படுத்தி வாழ்வதே சிறந்த இன்ப அன்பு வாழ்வாகும்.
அவைகள் யாவும் வாழ்விற்கென்று ஆண்டவனால் அளிக்கப்
பட்டன. அவைகளை வெறுப்பது ஆண்டவனை வெறுப்பதாக
முடியும்.

உயிர்ச்சார்பு பொருட்சார்புகளை மாயை யென்றும்,
கட்டென்றும் பெரியோர்கள் இழித்துக் கூறியதன் நோக்க
மென்னை யென்று சிலர் வினவலாம். உயிர்ச்சார்பு பொருட்
சார்புகளை ஆண்டவன் நினைவிற்கு அரணாக் கொள்ளாது,
அவைகளையே பொருளாக் கொண்டு, ஆண்டவனை மறந்து,
மதிமயங்கித் திரியும் உலோகாயதர்கட்கு நல்லறிவுச் சுடர்
கொளுத்த வேண்டிப் பெரியோர்கள் அவைகளை இழித்துக்
கூறினார்கள். அவர்கள் கூற்றுக்களின் உள்ளக்கிடக்கையை
யுணராது, வெறுத்தல் துறத்தலில் கருத்தை இருத்துவது
இழுக்காகும்

நமது நாட்டில் இடைக்காலத்தில் ஒருவித போலித் துறவு
தோன்றலாயிற்று. அது மக்கள் வாழ்வையே குலைத்து வருகிறது.
அது குறித்துப் “பெண்ணின் பெருமை அல்லது வாழ்கைத்
துணை”, “முருகன் அல்லது அழகு”, “மனித வாழ்க்கையும் காந்தி
யடிகளும்’ முதலிய நூல்களின் வாயிலாக எனது கருத்தை
விரித்துக் கூறியுள்ளேன்.

நம் ஆண்டவன் அம்மையப்பன்; சோமாஸ்கந்தன். அவனை
வழிபட்டுப் பேறெய்திய நாயன்மார்களிற் பலர் மனைவி
மக்களைத் துறந்தவரல்லர்; வீடு வாசல்களை விடுத்தவரல்லர்.
அவர்கள், உள்ளன வெல்லாம் “எம்பிரானுடைமை’ என்று இல்
வாழ்வு நடத்திப் பேறெய்தியவர்கள். அவர்கள் அடிச் சுவட்டைப்
பற்றி நடக்கவேண்டுவது நமது கடமை. ஆகவே ஆண்டவன்
நினைவிற் கென்று வீட்டையும் விடவேண்டுவதில்லை;
காட்டுக்கும் ஓட வேண்டுவதில்லை. வீட்டிலிருந்தே மனைவி
மக்களுடன் வாழ்ந்தே – ஆண்டவனை நினைக்கலாம்.

ஆண்டவன் நினைவிற்கென்று குறிப்பிட்ட புறக்கட்டுப்
பாடு ஓன்றும் வேண்டுவதில்லை. கரவில்லா அன்புளங் கொண்டு
எந்நிலையில் நின்றும் எக்கோலம் பூண்டும் ஆண்டவனை
நினைக்கலாம். “எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்
டாலும் -மன்னியசீர்ச் சங்கரன்றாளன் மறவாமை பொரு
ளென்றே’ என்பது பெரியபுராணம்.

ஆண்டவனை எப்பொழுது எப்படி நினைப்பது?
ஆண்டவனை இந்நேரத்தில் நினைத்தல் வேண்டுமென்னும்
நியதியில்லை. ஆண்டவனை எந்நேரத்திலும் நினைக்கலாம்.
வாய்ப்பு நேரும்போ தெல்லாம் ஆண்டவனை நினைந்து
நினைந்து, அந்நினைவை இடையறாத ஒன்றாக்கிக்கொள்ளல்
வேண்டும்.

குறிக்கோளாக எடுத்துக்கொண்ட திருப்பாட்டின் இறுதி
யடியை நோக்குக. “தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ”
என்று அப்பர் அலமருகிறார். தினைப்பொழுது ஆண்டவனை
மறந்தால், அப்பொழுதில் எத்துணையோ தீயநினைவுகள்
தோன்றும். அவைகள் உய்யு நெறியை இடர்ப்படுத்தும். ஆதலால்
இடையீடின்றி ஆண்டவனை நினைத்தல் வேண்டுமென்று
அப்பர் அறிவுறுத்துகிறார். “எந்நேரமுஞ் சிவனை ஏத்துங்கள்.
போற்றுங்கள்.” என்றும், “நின்று மிருந்துங் கிடந்தும் நினை
செய்க – என்னுஞ் சிவன் தாள் இணை” என்றும் ஆன்றோர்கள்
கூறிப் போந்தார்கள். “புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என்மனத்தே – வழுவா திருக்க வரந்தரல் வேண்டும்”
என்னும் அடிகளின் வாக்கு, ஆண்டவனிடத்து இடையநாத
நினைவின் இன்றியமையாமையை வலியுறுத்துதல் காண்க.

இடையறாத நினைவு தொடக்கத்தில் உறுதல் அருமை.
பின்னே பின்னே நாளடைவில் அவ்வருமை நீங்கும். இதற்கு
உயிர்களின் முயற்சியுடன் ஆண்டவன் திருவருளும் ஒன்றுதல்
வேண்டும். பாவத்துக்கஞ்சிச், செய்த பாவங்களை முறையிட்டு,
அழுக்காறு முதலிய குற்றங்களைக் களைந்து, ஆண்டவன்
திருவடிப் பற்றையே பற்றாக்கொண்டு, அத்திருவடி யை நினைந்து
நினைந்து உருகியுருகிக் கண்ணீர் சொரிந்து அழ அழ, ஆண்டவன்
திருவருட்டுணை தானே வரும். இடையநாத நினைவிற்குத் திரு
வருட்டுணை பெரிதும் வேண்டற்பாலது. பாவச் செயல்களை
வெறுத்து, ஆண்டவன் திருவடி. நினைவில் உயிர்கள் கொள்ளும்
வேட்கையளவினதாகத் திருவருட்டுணை கிடைக்கும்.

ஆண்டவன் நினைவை இடையறாத ஒன்றாக்கிக் கொள்
வதற்கு எப்படி. அவனை வழிபடுவதென்பதிற் சிறிது கருத்துச்
செலுத்துவோம். முறைகள் எண்ணிறந்து கிடக்கும். ஒவ்வொரு
வர்க்கு ஓவ்வொரு முறை யிருக்கலாம். அவைகளில் நுழைந்து
மல்லாட வேண்டுவதில்லை.

முதலாவது அலையும் நெஞ்சை ஆண்டவன் நினைவில்
நிலை பெறுத்த முயல்வது ஒழுங்கு. அலையும் நெஞ்சு எங்குமுள்ள
ஆண்டவனை எவ்வாறு நினைக்க வல்லதாகும்? பரம் பொருள்
அகண்டமாயிருப்பது. அகண்டமாவது மனத்தின் எல்லை
கடந்து நிற்பது. எல்லை கடந்த ஒன்றை மனம் எங்ஙனம் நினைக்கும்?

ஆதலால் தொடக்கத்தில் ஆண்டவன் நினைவூட்டக்கூடிய ஒரு
குறியில் நெஞ்சை நிலைபெறுத்தப் பயிற்சி செய்தல் வேண்டும்.
அக்குறி, கண்ணையுங் கருத்தையுங் கவரக்கூடிய வனப்புடைய
தாய், ஓவியம் நிரம்பியதாயிருத்தல் மிகச் சிறப்பாகும். அக்
குறியின் கண் நெஞ்சம் படியப்படிய அலைதல் ஒழிந்து நிலைதல்
பெறும். அந்நிலைத்த நெஞ்சில் வேறு எண்ணங்கள் அருகுதலும்,
ஆண்டவன் எண்ணம் பெருகுதலும் இயல்பில் நிகழும். இதற்
கென்றே திருக்கோயில் வழிபாடு ஏற்படுத்தப்பட்டது.

திருக்கோயில் வழிபாட்டின் நோக்கம் விழுமியது.
அதன்கண் உயிர் நலனுமுண்டு; உடல் நலனுமுண்டு. இந்நுட்பம்,
“நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம்
பிரானுடைய கோயில் புக்குப் – புலவர்தன்முன் னலகிட்டு
மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் –
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி
போற்றி யென்றும் – அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி
யென்றும் ஆரூரா என்றென்றே யலநா நில்லே’ என்னும்
திருத்தாண்டகத்தில் செறிந்து விளங்குதல் காண்க.

நிலைத்த நெஞ்சம் பெறுதற்கென ஏற்பட்ட கோயில்களிற்
பல இப்பொழுது எந்நிலையுற்றிருக்கின்றன? அவைகள்,
அலையும் நெஞ்சை இன்னும் அலைக்கும் பேய்க்கூடங்களாகி
விட்டன என்று சுருங்கச் சொல்கிறேன். அக்கூடங்களில் தற்போது
ஒருவிதப் பேயா ஆடுகிறது? எத்தனையோ விதப் பேய்கள் தலை
விரித்தாடுகின்றன. சாதிப்பேய், கட்டுப்பேய், துட்டுப்பேய்,
வழக்குப்பேய், போட்டிப்பேய், சூதுப்பேய், வாதுப்பேய்,
பொய்ப்பேய், காமப்பேய், சோற்றுப்பேய் முதலிய பேய்
களைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இப்பேய்களை யோட்டச் சில
அறவோர் முயன்று வருகிறார். அவரை மனமார வாழ்த்து
கிறேன்.

“கோயில்” என்னும் பொருளிழந்து, வெறுங் கோபுரங்
களையுங் கட்டிடங்களையுந் தாங்கி நிற்கும் நிலையங்களின்
தற்கால நிலை கண்டு, சிலர் ஆண்டவன் வழிபாட்டையே மறுக்கப்
புகுகிறார். அது தவறு. அந்நிலையங்கள் மீது கொண்ட சிற்றத்தை
ஆண்டவன் வழிபாட்டின்மீது செலுத்துவது அறமாகா து.

தொன்மை நோக்கத்தி னின்றும் வழுக்கி வீழ்ந்துள்ள நிலையங்
களில் புகாமலும் ஆண்டவனை வழிபடலாம். எந்த இடத்தை
யும் நல்லெண்ணத்தால் கோயிலாக்கிக் கொள்ளலாம்
“கோயில் என்பது வெறுங் கோபுரந்தாங்கியன்று. ஆண்டவன்
நினைவூட்டி, அந்நினைவை நிலைபெறுத்தும் இயல்பு வாய்ந்த
இடம் கோயிலாகும்.”

மனத்தைக் கோயிலாக்கவே தொடக்கத்தில் சில இடங்
களைக் கோயில்களாக் கொள்கிறோம். “நாடு நகரமும் நற்றிருக்
கோயிலும் – தேடித்திரிந்து சிவபெருமான் என்று – பாடுமின்
பாடிப் பணிமின் பணிந்தபின் – கூடிய நெஞ்சத்துக் கோயில்
கொள்வானே” – இது திருமந்திரம். நமது குறிக்கோள் நெஞ்சைக்
கோயிலாக்க வேண்டு மென்பதே யாகும். அந்நோக்கத்தை
நிறைவேற்றிக்கொள்ள யாண்டாதல் உருவ வழிபாடு செய்ய
லாம்.

வழிபாட்டுக்கு எவ்வுருவைக் கொள்வது? எவரெவர்
நெஞ்சம் எவ்வெவ்வுருவில் கவர்ச்சி பெறுகிறதோ அவரவர் அவ்
வவ்வுருவைக் கொள்வாராக. உருவம் ஆண்டவன் நினைவுக்கு
அறிகுறியேயாகும். ஆண்டவன் நினைவூட்டும் உருவம் எதுவாயி
னுமாக. பன்னிறப் பசுக்கள் பன்னிறப்பாலையா சொரிகின்றன?

எவ்வுருவைக் கொள்ளினும் அவ்வுரு ஆண்டவன் நினை
வூட்டக்கூடியதா யிருத்தல் வேண்டும். ஆண்டவன் ஓருவனே.
அவனை எவ்வுருவில் வழிபட்டா லென்ன? இதனை “அனைத்தும்
வேடமாம் அம்பலக் கூத்தனை” என்று மூன்றாமடியில் அப்பர்
சுவாமிகள் குறிப்பா லுணர்த்துகிறார்கள். “அப்பனை நந்தியை
ஆரா அமுதினை – ஒப்பிலிவள்ளலை ஊழி முதல்வனை – எப்பரி
சாயினும் ஏத்துமின் ஏத்தினால் – அப்பரி சீசன் அருள்பெற
லாமே” என்றார் திருமூலர். “ஒருவனே இராவணாதி பாவகம்
உற்றாற் போலத் – தருவனிவ்வுருவ மெல்லாம் தன்மையுந் திரியா
னாகும்” என்பது சிவஞானசித்தி.

அழகிய ஓர் உருவில் மனம் ஒன்றிப் படியப் படிய மனத்தில்
ஒருவித ஆற்றல் பிறக்கும். அவ்வாற்றல், ஆண்டவன் வேட்கை
பெருகவும், மற்ற வேட்கைகள் சுருங்கவுந் துணை செய்வதாகும்.
நாளடைவில் மனத்தின் அலை அடங்கும்; மறவினைகளில்
தோய நெஞ்சம் அஞ்சும்; நெஞ்சில் அமைதியும் ஒருமைப்பாடும்
உறும்; நிலைத்த நெஞ்சம் உண்டாகும். இந்நிலையில் ஆண்டவன்
திருவருளால் குருநாதன் தோன்றி மெய்ப்பொருளை
அறிவுறுத்துவன். “மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாற் றொடங்கி
னர்க்கோர் – வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே”
என்று தாயுமானார் அருளிய அநுபவ மொழியை நோக்குக.

மெய்க்குரவன் காட்சிக்குப் பின்னை மனத்தில் உறும் மாறு
தல்கள் பலப்பல. அவைகளுள் ஒன்று ஒருவித ஒளியெழுச்சி.
அவ்வொளி தானே வலிந்து உயிரை இயற்கை வழிபாட்டில்
உந்தும். இயற்கை வழிபாட்டு முறைகளை ஈண்டு விரிக்கிற்
பெருகும். இன்னுஞ் சில சொற்பொழிவுகள் இங்கே நடை
பெறல் வேண்டும். உங்கள் அரிய காலத்தை யானே கொள்ளை
கொள்ள விரும்புகிறேனில்லை. இயற்கை வழிபாட்டைப் பற்றி
“முருகன் அல்லது அழகு” என்னும் நூலில் சிறிது விரித்துக்
கூறியுள்ளேன்.

இயற்கை வழிபாடுகள் பலதிறத்தன. அவைகளுள் சிறந்தது.
ஞாயிறு வழிபாடு. ஞாயிறு வழிபாடு பழைய பழைய மாசு
களைக் கடிந்து உயிரை ஒளிமயமாக்கும். அவ்வுள்ளொளி,
இயற்கை உடலாகவும், இறை அதன் உயிராகவும் உள்ள
நிலையைப் புலப்படுத்தும். இது, தன் வழிபாடென்னும் உயிர்
வழிபாட்டைக் கூட்டும்.

தன்னில் ஆண்டவனை நினைந்து நிகழ்த்தும் வழிபாடு,
தன்னிலுந் தன்னனைய உயிர்களிலும் ஆண்டவன் கோயில்
கொண்டிருத்தலை யுணர்த்தும். இவ்வுணர்வு, உயிர்கட்கு
விடுதலை நல்கும்.

தன்பால் கோயில்கொண்டுள்ள ஆண்டவன் மற்ற உயிர்
களிடத்துங் கோயில்கொண்டிருத்தலையுணரும் ஒருவன் எவ்
வுயிர்க் காதல் தீங்கு செய்ய நினைப்பனோ? எவனுந் தன்
னுறுப்புக்குத் தானே தீங்கு செய்ய உடன்படான். தன்னுயிரும்
பிறவுயிரும் ஆண்டவனுக்கு உறுப்புக்களாக இருத்தலை
யுணரும் ஒருவன், பிறவுயிர்க்குத் தீங்கு நினையான்.

எல்லா உயிரையுந் தன்னைப்போல் பார்க்கும் ஒரு
நிலை, ஆண்டவனைப் படிப்படியாக நினைப்பதால் கூடுவ
தாகும். இந்நிலை வாசா கைங்கரியத்தால் கூடாது. உயிர்கள்
வழிபாடு என்று வாயால் பேசுவதால் பயன் விளையாது. உயிர்கள்
வழிபாடு என்று வாயால் பேசிக்கொண்டு, உயிர்கள்மாட்டுப் பகை
பூசல் இகல் முதலியவற்றை வளர்த்து வருவது உயிர்கள் வழிபாடா
காது.

இந்நாளில் மன்பதைக்கண், நாடு, நிறம், மொழி, வகுப்பு,
சமயம் முதலிய பெயர்களால் பகைமை, பூசல், இகல் முதலியன
வளர்ந்துவரல் கண்கூடு. இப்பிரிவுகளையும் பிணக்குகளையும்
“எவ்வுயிரும் பராபரன் சந்நிதி” என்னும் உணர்வு உண்
டாக்குமோ? அன்பர்களே! உன்னுங்கள்.

இந்நாளில் உலகிடைப் பெரிதும் இம்மெய்யுணர்வை
நல்கவல்ல கல்வியுண்டோ? அரசியலுண்டோ? வாழ்வுண்டோ?
நாடு நிறம் மொழி சாதி சமயம் முதலிய பெயர்களால் ஒருவரை
யொருவர் வஞ்சித்து வருத்தும் முறையன்றோ வாழ்வாகப்
பரிணமிக்கிறது? இம்முறை வளர வளர மன்பதைக்கண் அன்பு
அருகும். அன்பு அருகினால் மனிதன் என்னாவன்? சொல்லவும்
வேண்டுமோ?

எவ்வுயிரிலும் ஆண்டவனுண்மையை யுணர்த்துங் கல்வி,
அரசு, வாழ்வு முதலியன உலகிடைப்பரவுதல் வேண்டும்.
இதற்குச் சமய ஞானம் வேண்டற்பாலது. சமய ஞானமென்று
சமயவாதத்தை வளர்த்தலாகாது. சமய வாதங்களே சகோதர
நேயத்தைக் கெடுத்து வந்தன; வருகின்றன. அண்டவனுண்மை
யையும், அன்பு நெறியையும் அறிவுறுத்திச் சென்ற குருமார்
பெயர்களால் பல சமயங்களும், அவைகட்கென மடங்களும்,
சங்கங்களும் பின் வந்தவர்களால் அமைக்கப்பட்டன. அவ்
வமைப்புகள் கலகத்துக்கும் பிணக்குக்கும், கொலைக்கும் பயன்
பட்டு வருகின்றன. அவைகளின் கொடுமைகளே உலகில்
நாத்திகத்தைப் பரப்பி வருகின்றன. அவ்வமைப்புக்கள் கட்டுப்பாடு
கட்கும் கண்மூடி வழக்கங்கட்குந் தாயகமாகவும் நிற்கின்றன.

சைவ சிந்தாந்த மகா சமாஜ வெள்ளி விழாக் கூட்டத்திடை
யான் பேசுவதால், சைவ மடங்கள் மீது எனது நெஞ்சம் ஓடுகிறது.
“எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவனென்று – எவ்வுயிர்க்கும்
அன்பாயிரு” என்னும் அருண் மொழிக்கு இலக்கியமாக
எத்துணைச் சைவ மடங்கள் இப்பொழுதிருக்கின்றன? சைவ
மடங்கள் சைவத்தை மறந்து நீண்ட நாட்களாயின என்று
சொல்கிறேன். “என்ன அநியாயம்! சைவ மடங்களில் திருநீரு
பொலிகிறது. கண்டிகை மிளிர்கிறது; சிவபூசை நிகழ்கிறது. என்ன
இல்லை? சைவமில்லை என்று கூறலாமா?” என்று சிலர் சிறுவர்.
“சைவ மடங்களில் சைவமில்லை’ என்று மீண்டும் வலியுறுத்திச்
சொல்கிறேன். வெளிவேடம் சைவமாகாது. சைவத்தின் உயிர்
அன்பு. அன்புக்குச் சாதி முதலிய வேற்றுமைகளுண்டோ? இது
நிற்க.

ஆன்ம நேயத்தை வளர்க்கவல்ல அமைப்புக்கள் இப்
பொழுது தேவை. ஆன்மநேயத்தை வளர்க்க வல்லது எவ்
வுயிரிலும் ஆண்டவனிருத்தலை உணர்த்தும் உணர்வாகும்.
அவ்வுணர்வைப் பெருக்கத் தக்க கல்வி பரவும் நாளே மன்பதை
யின் நலத்துக்குரிய நன்னாளாகும்.

எல்லா உயிர்களிலும் ஆண்டவன் கோயில் கொண்டிருத்
தலை உணர்த்துவது ஆண்டவன் நினைவே யாகும். ஆண்டவனை
ஓர் உருவின் வாயிலாக நினைந்து, பின்னை இயற்கையின்
வாயிலாக நினைந்து, பின்னைத் தன் வாயிலாக நினைந்து,
ஆண்டவன் உள்ளங் கோயில் கொண்டதை உணர்தல்
வேண்டும். இம்முறை பற்றி யொழுகாது “நெஞ்சில் ஆண்டவ
னில்லையே” என்று கருதுவது தவறு. ஆண்டவன் கோயில்
கொண்டி ருத்தலை யுணர நெஞ்சைப் பண்படுத்தல் வேண்டும்.
அதற்கு ஆண்டவன் நினைவே உறு கருவி போன்றது. இக்
கருத்துப் பற்றியே “நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்”
என்று நினைத்தலை அடிகள் வலியுறுத்திக் காட்டியுள்ளார்.
நினைப்பவர் நெஞ்சிற்கு ஆண்டவன் கோயில் புலனாதல்
ஒருதலை.

ஆண்டவன் கோயிலுக்குரிய இடம் நெஞ்சமாகும்.
இதனைத் தமிழ்நாட்டிற் றோன்றி அன்பு நெறி வளர்த்த நால்வரும்
ஒரு முகமாகத் தொடக்கத்திலேயே உலகிற்கு நினைவூட்டி
யுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் “தோடுடைய
செவியன்” என்னும் முதற் நிருப்பாட்டில் “என்னுள்ளங் கவர்
கள்வன்” என்றும், திருநாவுக்கரசு சுவாமிகள் “கூற்றாயினவாறு
விலக்ககிலீர்” என்னும் முதற்றிருச் செய்யுளில் “பிரியாது
வணங்குவன்” என்றும், (பிரிந்து வணங்குதல் ஒன்று; பிரியாது
வணங்குதல் மற்றொன்று. முன்னையது ஆண்டவனைத் தன்னில்
வேறுபடுத்தி வணங்குவது; பின்னையது அவனைத் தன்னுள்
பிரிவின்றி வணங்குவது. இவை முறையே துவித வழிபாடு அத்துவித வழிபாடு என்றுஞ் சொல்லப்படும்) வன்றொண்டப் பெருந்தகையார் “பித்தா பிறைசூடி என்னும் முதற் றிருப்பாவில், “நினைக்கின்றேன் மனத் துன்னை” என்றும், வாதவூரடிகள் திருவாசகத் தொடக்கத்தில் “நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க – இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்றாள் வாழ்க” என்றும்
அருளிச் செய்திருத்தலைக் காண்க. நெஞ்சத் தாமரையை
ஆண்டவன் திருக்கோயிலென்று அறிவு நூல்களெல்லாம்
முழங்குகின்றன.

நெஞ்சகம் உயிர்ப்புக்கு இடமாயிருப்பது. அஃது என்றும்
தொழில் புரிவது. அதன் இயக்கம் நிற்குமாயின் உயிர் உடலைவிட்டு பிரியும். நெஞ்சினை இடமாக் கொண்டே ஆண்டவன் உயிர்களை இயக்குகிறான். “என்னில் யாரும் எனக்கினியாரில்லை – என்னிலும் இனி யானொரு வன்னுளன்- என்னுளே அயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு – என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே’ என்று அப்பர் சுவாமிகள் அருளினமை காண்க. “உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம் – வள்ளற்பிரானார்க்கு வாய்கோபுர வாசல் -தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன்சிவ லிங்கம் – கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே” என்றார் திருமூலரும். நெஞ்சின் சிறப்பை இன்னும் விரிக்கிற் பெருகும்.

அத்தகை நெஞ்சை – ஆண்ட வனுக்குரிய பீடத்தைத் – தூய்மை
யாக வைத்துப் பாதுகாத்தல் வேண்டும். அதனை அழுக்காறு
அவா வெகுளி களவு முதலிய அழுக்குகளால், பாழ் படுத்துவது
மடமை. இவ்வழுக்குகளுள்ளவரை ஆண்டவன் கோயில்
கொண்டிருத்தல் புலனாதலரிது. ஆதலால் உள்ளத்தைத் தூய்மை
செய்க; செய்க.

நெஞ்சைத் தூய்மைசெய்து, அதனை ஆண்டவனுக்குரிய
பள்ளியாக்குவதைப் பட்டினத்தடிகள் திருக்கமுமல மும்மணிக்
கோவையிலும், திருவிடைமருதூர் மும்மணிக் கோவையிலும்
அழகுபடத் திருவாய்மலர்ந்துள்ளார். அத்திருவாக்குகள் வருமாறு:-

“கருமுதற் றொடங்கிப் பெருநா ளெல்லாங்-காமம் வெகுளி
கழிபெரும் பொய்யெனுந் – தூய்மையில் குப்பை தொலை
வின்றிக் கிடந்ததை – அரிதி னிகழ்ந்து போக்கிப் பொருதிறன் –
மையிரு ணிறத்து மதனுடையடுசினத் – தைவகைக் கடாவும்
யாப்பவிழ்த் தகற்றி – அன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்
துன்ப விருளைத் துரந்து முன்புற – மெய்யெனும் விதானம்
விரித்து நொய்ய – கீழ்மையிற் றொடர்ந்து கிடந்த என்சிந்தைப்-
பாழறை யுனக்குப் பன்ளியறை யாக்கிச் சிந்தைத் தாமரைச்
செழுமலர்ப் பூந்தவி – செந்தை நீ யிருக்க விட்டனன்.”

“நெஞ்சப் புனத்து வஞ்சக்கட்டையை – வேரற அகழ்ந்து
போக்கித் தூர்வை செய் – தன்பென் பாத்தி கோலி முன்புற –
மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில் – பத்தித் தனிவித்
இட்டு நித்தலும் – ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று –
தடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும் -பட்டி அஞ்சினுக்
கஞ்சியுட்சென்று – சார்ந்த வேலி கோலி வாய்ந்தபின் – ஞானப்
பெருமுளை நந்தாது முளைத்துக் – கருணை இளந்தளிர் காட்ட
அருகாக் – காமக் குரோதக் களையறக் களைந்து – சேமப் படுத்துழிச்
செம்மையி னோங்கி – மெய்ம்மயிர்ப் புளக முகிழ்த்திட்டம்
மெனக் – கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய –
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி – காள கண்டமுங்
கண்ணொரு மூன்றுந்- தோளொரு நான்குஞ் சுடர்முக மைந்தும்
பவளநிறம் பெற்றுத் தவள நீறுபூசி – அறுசுவை அதனினும்
உறுசுவை யுடைத்தாய்க் – காணினுங் கேட்பினுங் கருதினுங்
களிதருஞ் – சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி – பையப் பையப்
பழுத்துக் கைவர – எம்ம னோர்க எளினிதி னருந்திச் -செம்மாந்
திருப்பச் சிலரிதின் வாராது -மனமெனும் புனத்தை வெறும்
பாழாக்கிக் – காமக்காடு மூடித் தமைசெய் -ஐம்புல வேடர்
ஆறலைத் தொழுக -இன்பப் பேய்த்தே ரெட்டா தோடக் -கல்லா
வுணர்வெனும் புல்வாய் அலமர -விச்சைவித் துதிர்த்துழி
யானெனப் பெயரிய – நச்சு மாமர நனிமிகு முளைத்துப் –
பொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் -பாவப் பஃறழை
பரப்பிப் பூவேனக் -கொடுமை ஆரும்பிக் கடுமை மலர்ந்து –
துன்பப் பல்காய் தூக்கிப் பின்பு-மரணம் பழுத்து நரகிடை
வீழ்ந்து -தமக்கும் பிறர்க்கும் உதவா -திமைப்பிற் கழியு
மியற்கையோ ருடைத்தே”

நினைந் துருகும் அடியவர் உள்ளமே ஆண்டவனுக்குரிய
சிறந்த கோயிலாகும். படமாடுங் கோயில் நடமாடுங் கோயில்
என்று திருமூலர் கோயிலை இருவகைப்படுத்தி, நடமாடுங்
கோயிலுக்கே சிறப்பு கூறியுள்ளார். “முகமெலாங்கண்ணீர் மல்க
முன்பணிந் தேத்துந் தொண்டர்-அகமலாற் கோயிலில்லை
யையனை யாற னார்க்கே என்றார் அப்பரும்.

தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்றொரு திருப்பதி
யுண்டு. அஃது இப்பொழுது தின்னனூர் என்று வழங்கி
வருகிறது. அவ்வூரில் பூசலார் என்பவர் ஒருவரிருந்தார். அவர்
ஆண்டவனுக்கு ஒரு புறக்கோயில் கட்ட முயன்றார். அம்முயற்சி
பயன் படாமையான், அவர் ஆண்டவனை நினைந்து மனக்
கோயில் கட்டலானார். அந்நாளில் காடவர் கோமானால்
காஞ்சியில் ஒரு கோயில் கட்டப்பட்ட து.அக்கோயிலில் ஆண்டவன் திருவுருவை நாட்ட நாள் குறிக்கப்பட்டது. முன்னாளிரவு ஆண்டவன் அரசன் கனவிற்றோன்றி, “நாளை நாம் திருநின்ற வூரிலுள்ள பூசலார் கோயிலில் புகப்போகிறோம். உனது
செயலைப் பின்னே வைத்துக்கொள்” என்றாரென்று புராணங்
கூறுகிறது. இதன் நுட்பமென்னை? புறக்கோயிலைவிட அகக்
கோயிலே ஆண்டவனுக் குகந்ததென்பது வெளிப்படை. ஆதலால்
நடமாடுங் கோயில்களை வழிபடுவது சிறப்பென்க. ஆண்டவனை
நினைந்து அகத்தை ஆண்டவன் கோயிலாக்கிய அடியவர்களை
ஆண்டவனாக வழிபடுதல் ஒரு மரபாகக் கொள்ளப்பட்
டிருத்தலும் ஈண்டுக் கருதற்பாற்று.

ஆண்டவனை இடையறாது நினைந்து நினைந்து, உருகி
உருகி, இன்பநீர் பெருக்கிப், பாவத்தைக் கழுவி, மனத்தை
ஆண்டவன் கோயிலாக்கி, அழியா விழுச் செல்வத்தைப் பெற
முயலவேண்டுவது நம் பெருங் கடமை. அச்செல்வ வாழ்வு பெற
முயல்வோமாக.

“நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்
தன்பே நிறைந்து நிறைந் தூற்றெழுங் கண்ணீரதனா லுடம்பு –
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே
என்னுரிமை நாயகனே என்று – வனைந்துவனைந் தேத்துது நாம்
வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங்
கண்டீர் -பபுனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல்
கின்றேன் பொற்சபையிற் சிற்சபையிற் புகுந்தருண மிதுவே”

-இராமலிங்க சுவாமிகள்

இதுகாறும் எனது புன்மொழிகளைப் பொறுமையுடன்
செவிமடுத்த அன்பர்களாகிய உங்கட்கு மீண்டும் எனது நன்றி
யறிதலைச் செலுத்துகிறேன்.

சைவசித்தாந்த மகா சமாஜம் வாழ்க வாழ்க என்று
அறுமுகச் சிவன் திருவடியை நினைந்து வாழ்த்தி வணங்கு
கிறேன்.

“நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தமன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
– தாயுமானார்.

முற்றும்.


இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *