

சைவ சித்தாந்த வரலாறு
கா. சுப்பிரமணியபிள்ளை
திருச்சிற்றம்பலம்
சைவ சித்தாந்த வரலாறு
(சிவநெறி வரலாறு)
சைவம் சித்தாந்தம் என்ற இரு சொற்களின் பொருளை முதற்கண் ஆராய்ந்து கொண்டு பின் அவ் விரண்டினாலுமாகிய தொடர்மொழிப் பொருளின் வர லாற்றை ஆராய்வாம். சைவம் என்றது சிவம் என்னுஞ் செந்தமிழ்ச் சொல்லடியாய்ப் பிறந்து சிவனொடு தொடர் புடைமை என்னும் பொருளில் வழங்குவது. சிவனைப் பற்றிய நிலையையும் சைவ நூல்களையும் சிவனடி சேர் தற்குரிய நெறியையும் அச்சொல் குறிக்கும். சித்தாந்தம் என்பது சித்த அந்தம் என்ற இரு சொற்களால் ஆகி முடிபின் முடிபு என்று பொருள் பெறும். சைவ நூல் களின் முடிந்த முடிபைக் கூறும் நூல்களைச் சைவ சித் தாந்த மென்ப. அச்சைவ சித்தாந்த நூல்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எளிதில் எய்துதற்குரிய நெறி யாதெனக் காட்டுவன. அந்நெறியே கடவுளை நாடிச் செல்லும் நெறிகள் பலவற்றுள்ளும் தலை சிறந்ததாகலின் சேக்கிழார் சுவாமிகள் அதனை முதற் சைவ நெறி யென்றார். அந் நெறியே முதல்வனோடு கலத்தலாகிய திருவை அளிக்கவல்லதாகலின் திருமூலமாமுனிவர் அதனைத் ‘திருநெறி’ யென்றார். ‘திருநெறிய தமிழ்’ என்றதும். அது. திரு வென்பதும் சிவம் என்பதும் ஒத்த பொருவடையன. உண்மைத் திருவுடையோன் சிவனென அறிஞர் இனி துணர்வராகலின் திருநெறி யென்ற விடத்து முடிபுணர்த் தும் சொல் வேண்டிய தின்றாயிற்று. இதனை அறியாத பல்வேறு மக்கட் குழாங்கள் வேழங் காண்பான் சென்ற விழியிலார் ஒப்பத் தத்தம் புல்லறிவுக்குத் தோன்றியவாறு திருவிலா நெறி பலவற்றைத் திருவுடையவாகக் கருதி மயங்குவர். அன்னோர்க்கு முடிபாயவழி இஃதே யென உணர்த்த இன்றது சித்தாந்த மென்னும் சொற்றொடர்.
மலைத் தலைமீதுள்ள மாண்பெரு மாடத்திற்குச் செல்லும் வழியானது மலைக்கு அருகிலுள்ள நிலத்திலும் படிப் படியாகக் கடந்து செல்லும் குன்றுகளிலும் உள்ள தங்கிடங்கட்கும் வழியாக அமைதல் போல, முழுமுதற் கடவுளை நாடிச் செல்லும் நெறியின் பகுதிகளாகப் பிற நெறிகள் அமையும். ஆதலால் உயிரில்லாத பூதங்களையும் உயிரையும் உயிர் வகைப்பட்ட சிறு தெய்வங்களையும் முடிந்த பொருளெனக் கொள்வாரது சிறு நெறிகளைப் பகுதியாகப் பெற்று அவற்றைக் கடந்து முதல்வனிடம் நேரே செல்வது நமது திருநெறியா தலின் அதனைப் பெரு நெறி யென்றார் பெரியர். முகில்களைக் கடந்து ஓங்கிச் செல்லும் உயர் நெறியானது பகல் முழுவதும் இடை யீடின்றிக் கதிரவன் ஒளி பெற்றுத் திகழ்வ தொட்ட புறச்சமய வெல்லை கடந்து செல்லும் சிவநெறி திருவரு ளொளி. பெற்று மிளிர்வதால் அதனை ‘ஒளிநெறி’ யென் றும் பணித்தனர் உயர்ந்தோர். ” தாயுடன் சென்று பின்தாதையைக் கூடி” என்பதற் கிணங்க சிவனது திருவருளாலே அவன் தாள் வணங்கிய அன்பர்க்குச் சுட்டறி வொழித்துப் பேரறிவு நல்கும் பெருமான் தாமே வலிந் தாட்கொள்ளும் பான்மை பற்றி நமது திருநெறியைக் குரு நெறி யென் றுங் கூறுவர் அறிஞர். இச் சிவநெறி யெய்தினோர் ஒன்றியிருந்து சுட்டற நினைக்கும் ஒருமைச் சார் பின ராதலின் அவர் நெறியை ஒருநெறி யென்றும் வழங்குமுலகம்.
இவ்வொரு நெறியே அறிவு நூல்களில் முடிந்த முடி பாகக் கொள்ளுதற் குரியது என்பது அந்நெறிச் சென்ற பேறறிஞராகிய சைவ சித்தாந்திகள் தமது நுகர்ச்சியின் பயனாகக் கூறும் அருட் பனுவல்களின் வைத்தும் அளவை நூல் முறைக் கேற்ப உலகம், உயிர், கடவுள் என்பவற்றின் இயல்புத் தொடர்பும், அவற்றை யுணர்ந்த உயிர் செல்லும் நெறியும், எய்தும் பயனும் ஆகிய இவற்றைப் பல்லாற்றா னும் வகுத்துத் தெள்ளிதின் : அறிவுறுத்தும் சித்தாந்த அருள் நூல்களில் வைத்தும் யாம் உணரற் பாலம்.
நற்கலை கற்று யோகம் பயின்று பதமுத்தி எய்து தற்குரிய ஞான மெய்தித் தம்மையும் தலைவனையு முணர்ந் தோரே சைவ சித்தாந்த ராவார் என்பது,
கற்பன் கற்றுக் கலைமன்னு மெய்யோக
முற்பத ஞான முறைமுறை நாடியே
தொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டு ளோர்சைவ சித்தாந்தமே
என்னும் திருமந்திரத்தால் அப்பெற்றித்தாய பெரியோர் நமது திருநெறித் தலைவர் என்பது அவர்களது அருளுரை களால் இனிது விளங்கும்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம் பின் வருவன:
“போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்”
“கழுமால் முதுபதிக் கவுணிய னறியும்
அனைய தன்மையை யாதலின் நின்னை
நினைய வல்லவ ரில்லைநீள் நிலத்தே.”
முதற் றிருப்பாட்டிலே தமக்கு முதல்வன் தையலோடு மெழுந்தருளி ஞான வாரமுத மீந்ததை விதந்தோதினமை காண்க. இரண்டாவது திருப்பாட்டிலே முதல்வனைச் சுட்டிறந் தறியுமாற்றல் அவனது பொருட்காட்சி பெற்ற தம்மைப் போன்றார்க்கே யன்றி எனையோர்க் கெளிதல் தென்றதைக் குறிப்பித்தார். இவ்வாறே நமது சொற் கோவும் கூறியருளினமை வரும் தேவாரத்தாற் புலனாம்.
“ஒருத்தராலறிய வொண்ணாத் திருவருவுடைய சோதி
நிருத்தநான் காணவேண்டி நேர்பட வந்தலாறே
தேடிக் கண்டுகொண்டேன் றிருமாலொடு நான்முகனும்
தேடிக் காணெணத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டு கொண்டேன்”
“தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர்
உள்ளத் தேற லமுத வொளி வெளி
கள்ளத்தே கடியேன் வேலைக் கடல்
வெள்ளத் தேனுக் கெவ்வாறு விளைந்ததே”
இத் திருப்பாட்டுக்களிலே தமக்குப் பேரறிவுச் சுடர் கொளுத்தும் வண்ணம் இறைவன் எழுந்தருளிக் காட்சி யளித்ததையும், காண்டற்கரிய முதல்வனைத் தமது நுகர்ச் சியின்கட் பெற்றது தஞ்செயலற்றுத் தாமற்றவிடத் தென் பதையும் முதல்வன்பால் எய்தும் முடிவிலின்ப நுகர்ச்சி தமக்குக் கைவந்த திறத்தையும் நாயனார் தெள்ளிதின் விளக்கி யருளினமை காண்க. நமது ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
“நாயேன் பலகாளு நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா வருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால்வெண்ணை
நல்லூரருட்டுறையுள் ஆயாவுனக் காளாயினி யல்லேனென லாமே”
என்றும்,
“ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென் னுடைய
தோழனுமா யான் செய்யுர் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பாவையைத் தந்தாண்டானை
மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கே னென்னாரூ ரிறைவனையே”
என்றும்,
“இந்திரன் மால்பிரம் னெழிலார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளவென்னை மத்தயானை யருள் புரிந்து”
என்றும் திருவாய் மலர்ந்தருளிய விடத்து முதல்வனுக்கு மீளாவடிமையாய்த் தாம் பெறலாகா வருள் பெற்ற திறத் தையும் தம் பெருமை யறியாத அண்ணல், தம் மன்பராய தமக்கு எளிவந்தருளித் தோழனாய் வேண்டுவன உற்றுழியுதவி யாட்கொண்ட வண்ணத்தையும், அரி யயன் முத லியோ ரேத்தும் பெருவாழ்வு தமக்கு முதல்வ னீந்தமையும் விளக்கி யருளினமை காண்க. நமது மணிவாசகப் பெருந்தகையார்,
“தன்னே ரில்லோன் நானேயான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறை கூவி யாட் கொண்டருளி”
என்றும்,
“புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவரினன யானுந் தேறினன் காண்க
அவனெனை யாட்கொண் டருளினன் காண்க”
என்றும் ,
“புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந்
தத்த மதங்களிற் றட்டுளுப்புப் பட்டு நிற்கச்
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
அத்தன் கருணையினாற் றோணோக்க மாடாமோ”
என்றும்,
“உவலைச் சமயங்க ளொவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும்
கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும்
செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ”
என்றும் அருளிச் செய்த திருப்பாட்டுக்களானே முதல் வன் தமக்குத் தன் பேரியல்பு ஈதெனத் தம்மை வலிந்து ஆட்கொண்டு அறிவுறுத் தருளினமையும், முழு முதற் கடவுள் தம்மை யாட்கொள்ளப் போந்தமையைத் தாம் தெரிந்தமையும், தமது சிற்றறிவு கொண்டு கலைஞானத் தான் முதல்வனை யுணரப் புக்கார் தட்டழிந் துழல்வ சென்றமையும், திருவருணோக்கத்தால் நமக்கு உண்மை யறிவு தலைப்படத் தாம் பயன் பெற்றமையும் பசுமரத்தாணி போற் புலனாவது காண்க.
இனி, சித்தாந்த நூல் உரைக்கும் பொருளின் சுருக் கம் உணர்ந்து, அதன்பின் சித்தாந்த வரலாற்றினை யொரு வாறு ஆராயப் புகுவாம். உலகத்திலுள்ள பொருள்களுள் உயிருள்ளன, அறிவுடையன; உயிரில்லன, அறிவில்லா தன, அறிவுள்ளது இயக்க அறிவில்லாதது இயங்கும். பின்னையது தானாகவே இயங்காது. உயிர் இயக்கி உடம்பு இயங்கும். தானாகவே இயங்குதல் இல்லை. துயின்ற காலத்தும் உயிருண்மை பற்றியே உடம்பின் உட்கருவிகள் இயங்குவதும் அது பிரிந்தபோது அவை யியங்காமையும் தெள்ளிய. கண்டதின் வைத்துக் காணாததை யறிய வேண்டும், உயிர்களை வேறு பிரித் தெண் ணுங்கால், இப் பெருஞாலமானது உயிரில் பொருட் பிண்டமாகக் காணப் படுதலின் அது தோன்றி நின்று மறையும் வண்ணம் தன்னை யியக்கும் ஓர் முதல்வனை இன்றி யமையாதது. அற்றன்று,
ஞாலம் தானே இயங்குமெனக் கொள்ளின் இழுக் கென்னை யெனின், அஃது உண்மையாமெனில் உயிரில் பொருளாய கல் முதலியன தாமே யியங்க வேண்டும். அங்ஙனம் அவை யியங்கக் கண்டிலமாதலின் அக்கொள்கை நிலைபெறாது.
உலகின் பகுதிகளே ஞாயிறு, விண்மீன், நானில முதலியவாகக் காணப்படும். அவைகள், ஒழுக்கு பெறத் தம்முன் இயங்குவது இயற்பொருள் நூலறிவால் விளங்கும். ஞாலப் பகுதிகள் தோன்றி நின்று மறையுமிடத்து ஞாலமுற்றுமே அவ்வாறாம். ஞாலமோ அளப்பரும் தன்மையது. ஆதலால் அஃது அளவிலாற்றலுடைய ஓர் முழு முதற் பெருமானை வேண்டி நிற்குமென்பது ஊகிக்கப் படும். உயிர் அறிவுளதாயினும் உடம்பில் பற்றுள்ளது. உடம்பு ஞாலத்தின் பகுதியாம். உடம்பின் பற்றுக் காரண மாகத் தோன்றி மறைதலாகிய பிறப்பிறப்பு உயிர்க்கும் அமையும். ஆதலால் உயிர் தன்வய மில்லாதது. ஞாலம் முதல்வனது ஆட்சிக் குட்பட்டு நடப்பது. இங்ஙனம் உயிர் உடம்பினிற் றுவக்குண்டு கிடப்பதொப்ப முதல் வனும் காலத்திற் துவக்குண்ணானோ வென்னின் உண் ணான். என்னை? அறிவற்ற வுலகில் துவக்குண்டால் அவன் தன் பொருட்டு ஞாலத்தை வேண்டும். அவ்வாறு வேண் டின் முதல்வன் ஞாலத்திற்கு இழிந்தவனாவன். அவ்வா றாயின் அறிவில்லது அறிவுடையதின் மேலாம். ஆகவே, அறிவில்லதை முறைப்பட இயக்குதல் அறிவுடையதற்கு இயலாது. இதனால் ஞால முதல்வன் தன்வய முடைய னென்பது புலனாம். இக்காரணம் பற்றியே முதல்வனுக்கு உலகத்தோடுள்ள தொடர்பு அவனது முற்றறி விற்கு இழுக்காகாமை காண்க.
துவக்குண்ணாத முதல்வன் முற்றறிவுடையனெனவே துவக்குண்ணும் உயிர் சிற்றறிவுடையதென்பது போதரும். தன்வயமுடைய தலைவன் காலத்தை இயக்குதல் தன் பொருட்டு அன்று என்பது தெளிவு. ஞாலத்தின் பொருட் டென்றலும் கூடாது; அறிவும் நுகர்ச்சியும் அதன் கின்மையின், அதனால் இறைவன் உலகைத் தொழில் படுத்துவது உயிரின் பொருட்டென்பதே முடிகின்றது.
உலக உவர்ப்பு வந்த உயிர் முதல்வனைப் பற்றுவது எதனாலெனின் தானே தனித்து இயங்கும் ஆற்றல் அதற்கு இன் மையாலென்க. அஃதெவ்வாறாமெனின் தனித்தியங்கு மாயின் தானே அறியும் ஆற்றலுடையதாக வேண்டும், அங்ஙனம் இயற்கை அறிவுடையதாயின் உயிர் எஞ்ஞான் றும் உலகிற் சுட்டுண்ண இடமில்லை. கட்டுண்மை தெளிவாதலால் உயிர் அறிவிக்க அறியும் இயல்பிற்று. ஆதலால் அறிவிக்கும் ஒரு முதல்வனை அஃது என்றும் வேண்டியே நிற்கும். கட்டுள்ள காலத்து உலகைப்பற்றி நின்ற உயிர்க் குக் கட்டொழிந்த காலை முதல்வனை யின்றி வேறு தாரக மின்மையின் அவனை நாடிப் பற்றும் நன்று முற்கூறப் பட்டது. முதல்வன் உயிரையாவது உலகையாவது தன் பொருட்டு வேண்டுபவனல்லன், உலகின் மூலமாகிய மாயையை முதல்வன் தொழிற் படுத்துவதற்குக் காரணம் உயிரின் மீது வைத்த பொருளேயாம். ஆகவே உயிரை யும் உலகையும் இறைவனோடு தொடர்பு படுத்துவது அவனது திருவருளேயாகும்.ஆதலால் முதல்வன் (படைப்பு முதலிய ) ஐந்தொழில் நடத்துவதற்குத் திருவருளே காரணமாதலின் அத்திருவருளைத் தாயென வழங் குவர் பெரியோர். எல்லாந் திருவருளென்பது,
உருவருள் குணங்களோடு முணர்வரு ளுருவிற் றோன்றும்
கருமமு மருளரன்றன் கரசர ணாதி சாங்கந்
தருமருளு பாங்கமெல்லாந் தான ருடனக்கொன் றின்றி
யருளுரு வுயிருக்கென்றே யாக்கின னசிந்த னன்றே.
(சித்தியார்)
முதல்வன் இயற்கை அறிவினனாதலாலும் உயிர் செயற்கை யறிவுடையதாதலாலும் முதல்வன் கணின்று உயிர் தோன் றிய தென்று கொள்ள இடமில்லை. உலக மூலமாகிய மாயை அறிவில்லதாகலின் அதுவும் அறிவுடைய பொருளினின்று பிறப்பது அல்ல, ஆதலின் கடவுள், உயிர், உல கம் என்ற மூன்றும் வெவ்வேறே. முதல்வனது திருவரு ளொன்றுமே மூன்றையும் தொடர்பு படுத்துவதாம்.
இதுகாறும் கூறியதின் வைத்து சித்தாந்த உண் மையை விரித்து உணர்ந்து கொள்க. இனி அதன் வரலாற்றை ஆராய்வாம்:—
தமிழ் மொழியின் சித்தாந்தக் கொள்கைகள் எப்போது எவ்வாறு எழுவதாயின வென்னும் வினாவுக்கு விடையே இவண் ஆராயத்தக்கது. மக்கள் யாவரும் முதலில் ஓரிடத்தில் தோன்றிப் பின் பல இடங்கட்கும் சென்று வாழ்ந்து, காலஞ் செல்லச் செல்ல இடம், முதலிய பல காரணங்களால் தம்முள் வேற்றுமைப்பட்டுப் பல்வேறு வகையினர் ஆயினர் என்று யாக்கை நூல் வல்லார் கூறுவர். அங்கனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்னர் அவர்க்குள் மொழி தோன்றிய தெனில் தோன்றிய அம் மொழியி னின்றே உலகின்கண் உள்ள பல மொழியும் எழுந்தன வெனக் கருத இடமுண்டு. அவ்வாறன்றி மக்கட் கூட்டத்தினர் வெவ்வேறு நாடுகளில் தங்கியபின் வெவ்வேறு மொழிகள் எழுவதாயின வென்பர் சிலர். எவ்வாறாயினும் மக்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கித் தமது பொது வாழ்க்கையைச் செவ்வைப்படுத்திய பின்னர்த்தான் அவர்க்குள் வழங்கும் மொழிகளிலே தத்துவ வுணர்ச்சியைக் குறிக்கும் சொற்கள் எழுந்து நிலைபெறும் என்பது இயல்பே .
இப் படைப்பின் தொடக்கத்திலேயே முற்படைப் பில் அறிவும் தவமும், முதிர்ந்த பெரியோர் தோன்றி மொழியையும் நூலையும் தோற்றுவித்து வளர்த்தன ரெனினும், அவர்கள் தத்துவ வுணர்ச்சியைக் குறிக்க வழங்கும் சொற்கள், தம் பொருளை யறிந்து போற்றும் ஆற்றல் இல்லாத மக்கள் நடுவே நிலைப்பது அரிது. ஆதலின் அத்தகைய சொற்கள் எழுந்து நிலவா நிற்கும் மக்கட் கூட்டத்தாருட் சிலராதல் தத்துவ வுணர்ச்சி யுடையார் என்று கோடற்கு யாதும் இழுக்கில்லை. சொற்கள் எழுந்த பின்னே நூல்கள் எழுவது இயல்பு. நூல்கள் அழிந்து போயினும் மொழி உள்ளளவும் சொற்கள் சில வாதல் இருந்தே தீரும். ஆதலால் நூல்கள் முதலிய சரித்திர ஆராய்ச்சிக் கருவிகள் ஒழிந்து போயினும் சொல்லாராய்ச்சி பெரிதும் பயன்படவல்லதே. இது நிற்க.
சைவசித்தாந்தம் வேதாகம சாரமாதலாலூம் வேதாக மங்கள் வடமொழியிலிருப்பதாலும் ஆரியத் தினின்றே தமிழிற்கு சைவக் கொள்கைகள் வந்தன வென்பர் ஒரு வகையார். இக் கொள்கையுடையாருட்ட சிலர் ஆரியமும் தமிழும் தமிழாது மொழியே யென்பர். ஆரியத்தின் சிதைவாகத் தமிழ் இருந்தாலன்றி ஆரியரும் தமிழரும் ஒரு வகையினரென்று கொள்வதற்கிடமில்லை. தத்துவ புணர்ச்சி ஒரு வகையாரிடம் முதற்கண் உண்டாய்ப் பிறி தொரு வகையார்க்குப் பின் பயன்பட்டிருக்கலாம். அல் லது இருவகையாரும் தாம் தாம் ஒரு சிறிது தத்துவ உணர்ச்சி முன்னெய்திப் பின் கலந்து அதனை விரிவு செய்திருத்தலும் கூடும். ஆரியத்தினின்றே தமிழரது ஒழுக்கம் ஞானம் முதலியன எழுந்ததென்று கூறுவது எத்துணைப் பொருத்தமுடைய தென்பதைப் பின்வரும் ஆராய்ச்சியின் வைத்துக் காண்க
உரை, கருதல், காண்டல் என்னும் மூன்று அளவைகளுள் முதல் நின்றதைக் கடைப்பிடித்து ஆராயுமிடத்து அறிஞர் ஆரியத்தையும் தமிழையும் ஒரு பெற்றித்தாகக் கருதுவது புலனாம்.
“தமிழ்ச்சொல் வடசொல் லெனுமின் விரண்டும்
உணர்த்து பவனை யுணரலு மாமே
ஆரியமும் தமிழும் உடனல்கி காரிகையார்க்குக்
கருணை செய்தானே”
என்ற திருமூலர் திருவாக்கினை இடைச் செருகல் என்று கூறுவாருமுளர். தத்தமது கருத்துக்கு இசையாதனவற்றை அவ்வாறு கூறுவது ஒரு கொள்கைபற்றினார்க்கு இயல்பா தலினாலும் இடைச் செருகுவதும் ஒரு தீய வழக்கமாக நின்று நிலவுவதாலும் பிற இரண்டு அளவைகட்கும் ஒத்துவரும் உரையே கொள்ளற் பாற்றென்பது முடியும். இரண்டாவது மேற்கோளுள் உடன் என்றதனால் ஆரியத்தினின்றே ஞான நூற் கொள்கைகள் தமிழிற்கு வந்தன வென்று கோடல் பொருத்த மில்லாததே. இம் மேற்கோ ளைப் புகுத்தலென்பார் ‘ தமிழ்ச் சொலும் வட சொலும் தாணிழற் சேர’, ‘ தமிழினீர்மை பேசித் தாளம் வீணை பண்ணினல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்கையிட மோவார்’ முதலியவாக திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்துள்ளும், பிற திருமுறைகளிலும் காணும் பல மேற்கோள்களையும் புகுத்தலென்பாரோ யாம் அறியேம்.
இனிச் செந்தமிழ் நிலத்து வழக்கினை நன்கு உணர்ந்து இயல் நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழ் நாட்டு மக்கள் வகையினை வாகைத்திணையுட் சுட்டுவான் ஓதிய “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்ற முதற் குறிப்புச் சூத்திரத்துள் மூன்று காலமும் உணர வல்ல ஞானம் பெற்ற அறிவர் என்பாரும் அவர் சொல் வழி நின்றொழுகும் எண்வகை தாபதப் பக்கத்தாரும் தமிழ் நாட்டிற்குரியாரெனக் குறித்த இடத்தும் அறி வராகிய நிறைமொழி பாந்தர் பண்டைத் தமிழிற் போந்த எழுவகை இலக்கியங்களுட் சிறந்த மறைகள் இயற்றினா ரெனக் குறித்தவிடத்தும் அவர் ஆரியரெனவும் அவர் இயற்றியது வடநூற் சார்பாயதெனவும் கூறாமை காண்க.
அங்ஙனங் கொள்வோர் தமிழ் நிலத்து வழக்குக் கூறும் இயல் நூலின் இயல்பு அறியாதவராவர். மேற்சுட்டிய தொல்காப்பியச் சூத்திரங்களாலே யாம் உணர்ந்து கொள் வது யாதெனின் தமிழ்நாட்டிலே இறைவனது திருவருள் பெற்றுத் தமிழ் மக்கட்கு ஒளி நெறி காட்டவல்ல பெரி யோர் தமிழ்ப் பெருமக்களாய் விளங்கினரெனவும் அவர் வழி நின்றொழுகுவார் எண் வகைப்பட்ட ரெனவும் அவர்கள் தாம் கண்ட அரிய நூற்பொருளையும் கடவுளருள்பெறு முறையையும் உணர்விக்கக் கருதி இயற்றி யருளிய நூல்கள் மறை யெனப்படுமென்பதும் ஆம்.
வடநாட்டு ஆரிய முனிவரைத் தொல்காப்பியனார் ஐயரென்று ஓரிடத்தில் கூறியுள்ளார்.
“பொய்யும் வழுவும் புகுந்த பின்னர்
ஐயர் யாத்தனர் கரண மென்ப”
என்ற இடத்துக் காண்க. ஐயரென்பது ஆரியரென்பதன் சிதைவாம். ஐயர் என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் இருடிக ளென்றது காண்க. தமிழ் நாட்டு அறிவர் இருடிக ளென விசேடிக்கப்படுவதில்லை. அறிவர் அருளிய நூலை ஆசிரியர் நச்சினார்க்கினியர் காலத்தும் ஆகமம் என்ற பெயரால் குறிப்பது வழக்கம் என்று தெரிகிறது.
“ஆகம மென்ப தறிவனூலாற்
போக புவன முண்டெனப் புலக்கொளல்”
என்ற மணிமேகலை அடிகள் உற்றுநோக்கத்தக்கன. காஞ் சித்திணையுள் உலக நிலையாமை கண்டு துறவு புக்கோர் தம் மனைவியரைத் தமது பணிவிடைக் குரியவராகக் கொண்டு வாழ்ந்தமை குறிக்கப்பட்டது. அந்தண ரென்பார்க்குரிய இலக்கணம் யாதென்று கூற வெழுந்த மரபியற் சூத்திரம் திருவள்ளுவர் குறித்தது போல அவரது பண்பினை உரை யாமல் அவரது அடையாளங்களைக் கூறியது வியக்கத்தக்கதே.
“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய”
என்ற விடத்து நூலென்பது ஏட்டைக் குறிப்பதோ பூநூலைக் குறிப்பதோ வென்னும் ஐயமெழற் பாலதே. அந்தணர் என்ற சொல்லும் தனித்தமிழ்ச் சொல்லாக விருப்பதால் அது பிற நாட்டினரைக் குறிக்க எழுந்த தென்று கூற இடமில்லை. கமண்டலம், திரிதண்டம், ஆசனம் என்னும் மூன்றையும் துறவியர்க்கு உரியனவாக நூல்கள் கோடலினாலும் துறவியர்க்குப் பூணூலின்மையாலும், நூலென்பது ஏட்டைக் குறிப்பதே யாமென்க.
அவ்வாறு கொள்ளுமிடத்து அந்தணர் ஒரு வகைத் துறவியராவர். இது பற்றியே அந்தணரது இலக்கணத்தை திருவள்ளுவர் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்து விதந்து ஓதினர். தமிழிலே அறம் பொருள் இன்பம் வீடு என்லும் நான்கினையும் இனிதுணர்த்தும் நான்மறைகள் இருந்தன என்பதைத் திருநான்மறை விளக்கத்திற் கண்டு கொள்க. உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்தவல்ல நான் மறைகள் ஆதியில் தமிழில் இருந்தன வென்றும் அவை போன்ற மறைகள் நிறைமொழி மாந்தராலே தமிழில், இயற்றப் பட்டன வென்றும், தமிழ் நன் மக்கட்கு உண்மை யறிவுச் சுடர் கொளுத்தும் அறிவர் தமிழ் நாட்டின ரென்றும் யூகிக்கப்படும். கூறிய அந்நான் மறையும் முழுமுதற் கடவுள் ஆலநிழற் கீழ் அறம் பகரக்கேட்ட நால்வர் வாயிலாக எழுந்தது எனத் தேவாரம் முழங்குதலாலும் சைவ சித் தாந்த உண்மையறிவு தமிழ் நாட்டினர்க்குத் தமிழ்ப் பெரி யோராலே பண்டைக் காலத்துக் கிடைத்துள்ள தென்பது யூகிக்கப்படும்.
இக்கொள்கையானது நன்று நிலவு தற்கு இடையூறாக உள்ளன தமிழ்ப் பண்டை மறைகள் மறைந்தமையும், அள வற்ற செந்தமிழ் நூல்கள், தமிழ்மக்களது மடியினாலும் பழ வினையினாலும் இறந்தொழிந்தமையும், தமிழ் நூற் பொருள் கிளக்கும் வடமொழி நூல்கள் பாதுகாக்கப் பெற்று நாடெங்கும் பரந்தமையும்., வட நூலாளர் தம் நூல் மீது வைத்த பற்றும் தமிழரது நூற்பற்றின்மையும், அப்பற்றின் மையை நிலை பெறச் செய்யுமூலம் தமது உயர்வை நிலை நிறுத்தக் கருதும் ஆரியர் முயற்சியால் தமிழாது வட நூலபிமானமும் வடசொற் பெருவழக்கமும் யாண்டும் தழைத்தமையும் அனையபிறவும் ஆம் என்பதற்கு ஐய மில்லை .
ஆயினும் தமிழ் நெடுங்கணக்கின் அமைப்பையும் தமிழ் எழுத்தியல் நூல் நுட்பத்தையும் துணுகி ஆராய் வோர் பேச்சொலிக் குழாத்துக்கு மூலமாகிய தனி ஒலிகளும் துணை ஒலிகளும் ஒலி நூல் முறைப்படி தமிழில் அமைந்து நிற்குமுறை எம்மொழி யுள்ளும் கிடையாது எனவும் எம்மொழியையும் எவ்வொலியையும், திட்பமாக வரை தற்கு உரிய எழுத்துக்கள் தமிழிலே உள்ளன வென்றும் உணர்தல் கூடும். இங்ஙனம் கண்ட பேரறி வாளராகிய திரு. P. V. மாணிக்க நாயக்கர் அவர்கள் தமிழ் இயல் நூலினை அதன் சொல்வரலாற்றினைக் கொண்டு பொருள் கொள்ளுமிடத்து அஃது ஒரு சைவ சித்தாந்த நன்னூலாக விளங்குகின்றது என்று கூறு கிறார்கள். நெடுங் கணக்கையும் இயல் நூலையும் வகுத்த தமிழ்ப் பேரறிஞர் அவ்வியல் நூலிற்கூறியவாறே முக்காலமும் அறியும் ஆற்றலுடையராகலின் தமிழ் நூல்கள் தமக்குப்பின் அழித்தொழியு மென்பதை முன்னோக்கி மொழியுள்ளனவும் உண்மை நூற் கருத்து நிலைபெறு மாறு அதனை எழுத்தினும் சொல்லிலும் இயல் பால் அமைப்பினும் பாதுகாத்து வைத்தனர் போலும், தமிழ் மக்கள் பண்டுதொட்டே தத்துவ வுணர்ச்சியில் தலை சிறந்தவடுரன்பதைப் பின்வரும் தமிழ்ச் சொல்லாராய்ச் சியால் ஒரு சிறிது விளக்குவாம்.
அந்தணர் என்ற சொற்போலவே பார்ப்பார் என்ற சொல்லும் தமிழே. பார்ப்பார் என்றமையாலே அஃது ஆரியப் பிராமணரைக் குறிப்பதெனத் துணிவது தற்காலத்திற்குப் பொருந்துமாயினும் பண்டை நூலா ராய்ச்சிக்குப் பொருந்துமாறில்லை. ஆதலால் தமிழ்ப் பார்ப்பார்க்கு உரிய தொழில் ஆரியப் பிராமனர்க்கு உரிய வேள்வி முதலியனவே என்று கொள்ளுதலும் தவறே. துணுகி ஆராயுமிடத்து அன்பு மிக்க வழி பாட்டினால் கடவுட் காட்சி பெறவல்ல தமிழ் மக்களே பார்ப்பார் எனப் பெற்றன ரென்பது விளங்கும். கடவுளை ஒரு வடிவத்திலே வழிபாடு செய்வதற்கு முதல் நின்றுதவுவாராகிய இற்றைக் காலத்தில் ஆதிசைவர் எனப்படு வோரே பண்டைப் பார்ப்பார் என்று யூகிப்பதற்கு இடமுண்டு. முப்பொழுது திருமேனி தீண்டுவாரும் அவரே. ஆதிசைவ ஆசாரியரை சுமார்த்தராய்ப் பிறந்து சைவம் புகுந்து ஆசாரியாபிடேகம் பெற்றவரினின்றும் பிரித்து வேறாகக் கருதும் வழக்கமும் கொள்கையும் இருவரும் ஒரே மக்கட் பகுப்பைச் சார்ந்தாரல்ல ரென்பதை நன்கு வற்புறுத்தும். என்னை?
இந்தியாவிலுள்ள இந்து மக்கள் அனைவரும் நான்கு வருணப் பகுப்புடைய ஒரே மக்கட் கூட்டத்தினர் ஆவரெனின் அவருள் ஒரே சமயத்தவராய் ஒரே மரபினராய் உள்ள இருவர்க்குள் வேற்றுமை காண்பதற்குக் காரணம் வேறொன்றும் தோன்ற வில்லை. ஆதிசைவரும் மகா சைவரும் ஒரே கொள்கை புடையராய் ஒரே முறையாக ஆசாரியாபிடேகம் பெற்றவராய் இருப்பினும் அவருள் ஆதிசைவரை வேறு பிரிவினராகவும் மகா சைவரைப் பிறிதொரு பிரிவினராகவும் கருதக் காரணமில்லை. ஒரே மிஷனைச் சார்ந்த புராட்டஸ்டண்டு கிறித்தவப் பாதிரியாருள் ஐரோப்பியர், இந்தியர் என்ற பிரிவொன்று தவிர வேறு யாதுமில்லை. இவ்வாறே எச்சமயத்தும் கொள்ளப் படும். சமய வேற்றுமையும் வருண வேற்றுமையும் இல்லாத விடத்து ஐரோப்பியர் இந்தியர் என்றது. போன்ற மக்கட் பகுப்பு வேற்றுமை யொன்றுமே யாண் டும் காணப்படும். ஆதலின் ஆதி சைவரும் மகா சைவரும் தமது பிறப்பினாலே வெவ்வேறு மக்கட் கூட்டத் திற்கு உரியாரென்பது நன்கு யூகிக்கப்படும். இல்வேற்றுமை பற்றியே மகா சைவாது வருணத்தாராகிய சுமார்த்தர் ஆதி சைவரை இகழ்வதும் அன்னோர் மஹா சைவராகிய போதும் திருக்கோயிலிற் பரார்த்த பூசைக்கு அருகால்லர் என்று ஆகமம் விதித்ததும் என்க. இது பற்றியே திருமூலமா முனிவரும்,
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான் றன்னை யர்ச்சிக்கில்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டிற்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே”
என்று அருளிச் செய்ததும் காண்க. இத்திருப் பாட்டி னுள் பேர்கொண்ட பார்ப்பான் என்றது சுமார்த்தனை யாவது மகா சைவனையாவது குறிக்கு மென்பதில் தடை யில்லை. இன்னோர் பார்ப்பார் என்னும் பேரைக் கொண் டனர் என்பது குறிக்கப்பட்டது. அஃதாவது ஆதி சைவரின் பேராகிய பார்ப்பார் என்றதைத் தாமும் அவர் போல நடித்து ஊதியம் பெறுதற் பொருட்டு தமக்குப் பெயராக வழங்கினர் ஆரியப் பிராமணர் என்று கருத வேண்டியது யிருக்கிறது. இவ்வாறே அந்தண ரென்ற சொல்லையும் அவர்கள் தம் பெயராய்க் கொண்டனர் போலும். அவ்வாறு கொள்ளுதல் பொருத்த மன்றெனக் குறிப்பாலுணர்த்துவான் அந்தணர் இலக்கணத்தைத் திருவள்ளுவர் விதந்தோதினர் போலும். ஆகவே ஆதி சைவரே தமிழ் , நிலத்தில் முதன் முதல் பார்ப்பா ரெனப் பட்டார் என்பது விளங்கும். விளங்கவே, சைவ சித் தாந்த நெறியை அறிவுறுத்தும் ஆசிரிய வகையில் சிறந் தோர் தமிழரென்பது முடியும். இதனாலும் இப்போது சைவ சித்தாந்த மெனப்படும் திருநெறியானது பண்டைத் தமிழரது கடவுள் நெறியெனக் கருதப் பெறு மென்க.
ஞால முதல்வனைச் சுட்டும் பழந்தமிழ்ச் சொற்கள் கடவுள், இயவுள், கந்தழி யென்பன. ‘கடவுள் ‘ என்பதன் நேர்பொருள் கடந்துள்ள பொருள்’. எதனைக் கடந் தவனென உலக முதல்வனைக் கூறுதல் இயல்பெனின், காணப்படு மூலகத்தை என்பது. அறிவு முதிர முதிரக் கடவுள் உள்ளத்தைக் கடந்துள்ளவன் என்பது விளங் கும். விளங்கவே சொற் கடந்தவன் அவனனச் சொல்ல வேண்டிய தில்லை. இச்சொல்,
“நினைப்பதாக சிந்தைசெல்லு மெல்லையேய வாக்கினாற்
றினைத் துணைய மாவதில்லை சொல்லலாவ கேட்பவே அனைத்துலகும் ஆயநின்னை இம்புலன்கள் காண்கிலா எனைத்தெனைத்த தெப்புறத்த தெந்தையாத மெய்தவே”
(சிவவாக்கியர்)
“அப்பாலைக் கப்பாலானை ஆரூரிற் கண்டடியேன்
அயர்த்தவாறே”
“எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆரமுதேயோ “
என்னும் திருவாக்குக்களை நினைவுறுத்துகிறது. ‘காண் டற்கரிய கடவுள் கண்டாய்’ என்று உடம்பொடு புணர்த்துக் கூறிய வண்ணம் காணப்படும் யாவும் அழிதலின் அங்ஙனம் அழியும் பொருள்களுள் ஒன்றல்லாத முதல்வன் காணப்படாதவனாய், காணும் இவ் வுலகைக் கடந்து நிற்பவன் என்னும் பொருளையுடை பெயரை ஞால முதல்வனுக்கு இட்டு வழங்கும் மக்கள் வகுப்பினர் படைப்புப் பொருளைக் கடவுளரெனக் கருதாத நிலையினரே யென்பது தெள்ளிது. கடவுள் என்ற சொல் தமிழில் மிக்க பழமையானது. அவ்வாறே இயவுள் என்ற சொல்லும் ஆம். எல்லாவற்றையும் முதல்வன் இயக்குகின்றான் என்னுங் கருத்தில்லாதவர் அவனை இயவுள் என்னக் காரணமில்லை. – கந்தழி’ என்ற சொல் பற்றிலான் சுட்டிறந்தவன் என்னும் பொருளையுடையது. கந்து என்பது முதலில் தறி, யென்பதை உணர்த்திப் பின் பற்றும் ஓர் பொருளைக் குறிப்பதாய்ப் பின் பற்றுக்கோடாக உள்ள எதையும் உருவகிக்கப் பயன்பட்டது, ‘பழமை கந்தாக” என்ற விடத்து அப்பொருள் காண்க. கடவுளை வணங்கும் நிலையத்திற்கும் அப்பெயர் வருவதை ‘கந்துடை நிலையினும், கவி கெழுகந்தங் கடவுள் கைவிட’ என்ற விடத்தும் காண்க, கடவுள் பற்றி நின்று அருள் செய் தற்கும் கடவுளை நினைவூட்டுவார் சுட்டுதற்கும் நிலையமாக நின்ற கந்தனுக்கு வேறாய்ச் சுட்டற்றவன் என்ற பொருள் கந்தழி யென்ற சொல்லிற்கு உள்ள தாம். எல்லாவற்றை யும் இயக்கும் முதல்வன் பற்றிலான் எனவே அவன் தன்வய முடையவனென்பதும், எல்லாவற்றையும் இயக்கு வது தன் பொருட்டன்று என்பதும், சுட்டிறந்தவன் எனவே தோற்றக் கேடுகளில்லா தவனாய் முற்றறிவுடையன் என்பதும், இயவுள் என்றமையினாலே அவன் இயற்கை யறிவை யுடையவனென்பதும், கடவுள் எனவே உலகைக் கடந்துளனாதவின் இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கினவ னென்பதும், உயிரறிவுக்கு அப்பாற்பட்டவ னெனவே பொருள் தன்மையால் உயிரின் வேமுயனென்ப தும் இனிது விளங்கும். யாதொரு வடிவில் அவனைவணங்கினாலும் அன்பர்க்குத் தோன்றி அருள்புரிவா ரென்பது ஓர் சிறந்த கொள்கை. கந்துடை நிலையில் கடவுளைத் தமிழர் வழிபட்டமையானும் “முரணினர் உட்க முரு கெழுவியனகர் ” என்னு மிடத்துக் கடவுள் குறிஞ்சி நிலத் தார்க்குத் தோன்றுவது கூறப்பட்டமையானும், அது தமிழ் மக்களுள் பரவியிருந்தது என்பது இனிது போதரும் உயிர், உடம்பு என்ற சொற்கள் உருவகப் பொருளில் இலக்கணத்துள்ளும் வழங்குவதனால் தமிழ் நாட்டினர் யாவர்க்கும் உயிர் உடம்பு என்பதன் வேறுபாடு தொன்று தொட்டே நன்கு தெரிந்த தொன்று என்பது சொல்லா மலே அமையும், ‘உடல்மேல் உயிர் வந்தொன் றுவது இயல்பே’ என்ற நூற்பா, உயிர் உடம்பின் பற்றுடைய தென்ற கருத்தை நயம்படக் குறித்தது காண்க.
‘சிவம்’ என்ற சொல் செம்மை படியாகப் பிறந்தது. செம்மை என்பது நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம் என்கின்ற பண்பினையும் செந்நிறம் என்ற நிறத்தை யுங் குறிக்கும் ஒரு சொல், செந்நிறம் என்ற பொருளில் அச் சொல் வழங்குமிடத்து அதினின்று ‘சிவ’ என்ற சொல் எழுந்து வழங்குதல் கண்களிரண்டுஞ் சிவந்தன வென்பதில் அது சிவந்தன வென்பதன் பகுதியாக அமைதலால் விளங்கும். கடவுளை ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் செம்பொருள் என்றார். செம்பொருள் என்னும் சொற்றொட ரின் பொருளே சிவம் என்பதற்குங் கொள்ளப்படும். இப் பொருளிலே தான் ‘சிவம்’ என்பது வடமொழியிலும் வழங்குவது. சிவம் என்ற சொல்லை வடமொழியாகக் கொண்டு கூறும் தாதுப்பொருள் தமிழ்ச் சொற்பொருள் போல அவ்வளவு சிறந்ததன்று.
சிவ என்பதிலுள்ள சகரம் ஆரியபாஷைகளுள் ஆதி கிடையாதென்று பாஷாதத்துவ விற்பனர் கூறுகிறார். ச என்பது தமிழ் எழுத்து. ஸ் என்பது ஆரியம். ல என்பது ஆரியத்திலுண்டு; ள என்பது தமிழிலே தான் ஆதியில் வழங்கியது. அப்படியே ண என்பதும் ஆதியில் தமிழிலேயே தான் இருந்தது. தமிழிலே யுள்ள சகரத்தின் ஒலியே சிவம் என்பதிலுள்ள சக சத்துக்கும் ஆம் என்பது டாக்டர் கால்டுவெல் செய்த ஆராய்ச்சியால் இனிது விளங்கும். இதனாலே பொருளா லன்றிச் சொல்லாலும் சிவம் என்பது தமிழே. சுகந் தருவது, மங்கலந் தருவது என்று கடவுளைக் குறிப்பது தமிழரது நினைவின் போக்குக்கு ஏற்றதே யன்றி, பண்டை ஆரியரது நினைவின் போக்குக்கு ஏற்றதன்று. காணப் படும் பொருட்கு அப்பாற் பட்டவனென்றும் இன்பத் தருபவனென்றுங் கடவுளை யெண்ணுவது பண்டைத் தமிழ் மக்களது இயல்பு. அளப்பெருந்தன்மை வளப் பெருங் காட்சியதாகிய ஆகாயத்தைப் பார்த்தவுடனே எல்லையற்ற அவ்வாகாயமும் அங்கே தோன்றுகின்ற ஒளிப் பிழம்பாகிய ஞாயிறும் திங்களுமே முதல்வனாம் என்று திரியக்கொண்ட மனநிலையில் எழுந்த சொற்களே கடவுளுக்குப் பெயராக வடமொழியில் வழங்கின. பிரமம்,விஷ்ணு, ருத்திரன் என்ற சொற்கள் பெரிது பரந்தது, செம்மையன் என்னும் பொருளில் ஆதியில் வழங்கின. பெரிது என்னுஞ் சொல்லில், அளப்பரிய உலகினின்றும் கடவுளைப் பிரித்தற்கு உரிய பொருட் சிறப்பு,ஒன்றுந் தோன்றவில்லை. முதலில் அளப்பரிய உலகையே பெரிதெனக் கொண்டு உலகையும் முதல்வனையும் ஒன்றெனக் கருதினோர் கூறிய சொற்போல அது விளங்குகின்றது. எவ்வாறு பொருள் கொள்ளினும் கடவுள் என்ற சொற்போலப் பொருள் வளமுடையதன்று. விஷ்ணு என்ற சொல் வியாபகன் எனப் பொருள்பட்டு எங்கு மிருப்பவன் என்று கடவுளைக் குறிக்கும். எங்கு மிருந்து அவன் செய்வது யாதென அச்சொல் விளக்காத தால் அஃது இயவுள் என்ற சொற்போல் பொருளாற்றலுடைய தன்று. அதற்கு நேராய மால் என்ற சொல் அன்பு என்னும் பொருள்பட்டு, கடவுளுடைய திருவருளைக் குறிப்பது. விஷ்ணு என்பதின் பகுதிப் பொருளுடைய தமிழ்ச்சொல் இறைவனென்பது. அஃது ‘இறு’ என்பதனடியாகப் பிறந்தது. இறு என்பது தங்குத லென்னும் பொருளுடையது. ருத்திரன் என்ற சொல் பல பொருள் உடையதாயினும் செம்மையனென்ற பொருளில் முதல்வனை ஆரியர் நெருப்புவாயிலாக வழிபட்ட மையை வெளிப்படுத்தும். துன்பம் நீக்குபவன் என்று அச்சொற்குப் பொருள் கொள்ளினும் அஃது இறைவனை மாத்திரம் குறிக்கும் நயம் உடையதாகத் தோன்றவில்லை.
இது காறுங் கூறியவாற்றால் முழு முதற் கடவுள் ஒருவன் உளனென்றும், அவனின் வேறாய உயிரும் உலகும் உளவென்றும். அன்பினால் வழிபடுவார்க்கு முதல்வன் அருள் புரிவானென்றும், பண்டைத் தமிழர் ஆரியக் கலப்பின் முன்னே உணர்ந்தனர் என்பதைத் தமிழ்ச் சொற்களே இனிது விளக்குவது கண்டாம். இம்மொழிகள் தனித்தமிழ்ச் சொற்களாயும் மொழி பெயர்ப்பான் அமைந்தன வல்லாதனவாயும் விளங்குவதாலும் வட மொழிப் பண்டை நூலிற் காணப்படும் கடவுட் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் போல அத்தகைய பொருள் நலமுடைய தல்ல வாகலானும் இச்சொற்கள் குறிக்கும் அரிய உண்மை கள் ஆரியக் கலப்பின் பின் தமிழர்க்குத் தெரிந்தன வென்று கொள்வதற்கு இடமில்லை.
“மறைமொழிதானே மந்திர மென்ப” என்று தொல்காப்பியர் குறித்ததை ஆராயுமிடத்து வட மொழியில் மந்திரம் போலத் தமிழில் மறை மொழிகள் இருந்தன என்றும் அவை கருதிய பயனைக் கொடுக் கும் ஆற்றலுடையன வென்றும் விளங்குகின்றன. சொற்பொருட்கு ஏற்ப, மறைமொழியை தமிழ் மூதறிவாளர் தக்கார்க்கு மறைவாக ஈதலன்றி வெளிப்படக் கூறமாட்டார். ஆதலால் ஆசிரியர் நச்சினார்க்கினியர் தமிழ் மந்திரங்களை வல்லார்வாய்க் கேட்டுணர்க வென்றார். ஈதறியார் மந்திர மென்பது தமிழர் அறியாததொன்று என்று பிதற்றுவார்கள். எம்மந்திரத்திற்கு மூலமாகிய பிரணவ மந்திரம் தமிழே என்பது,
‘கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழாற் பகர்வோனே’
என்ற அருணகிரி நாதர் திருவாக்கால் இனிது விளங்கும். பாதுகாப்பவன் என்கின்ற பொருளில் கடவுள், ஓம் எனப் பாடுவரென (வடமொழி)க் கூர்ம புராணத்திற் கூறியவாறே பாதுகாத்தல் என்கின்ற பொருளில் தமிழிலேதான் ஓம் என்பது சொன் மூலமாக விளங்குகின்றது. ஓம்பு என்பது அதனடியாகப் பிறந்த சொல், பகுதியின் பகுதியே சொன் மூலமெனப்படும். எழுத்து வடிவாலும் பிரணவம் தமிழே யென்பது சொல்லாமல் விளங்கும். செவிப்புலனாக ஒலிக்கப்படு மிடத்தும் அது தமிழ் நூல் விதிக்கு ஏற்ற தாய் விளங்கு மென்று திருவாளர் பா. வே. மாணிக்க நாய்க்கரவர்கள் நன்கு விளக்கிப் போந்தனர்.. பிரணவத்தை ‘முத்தமிழ்’ என்று கூறும் சித்தர் வழக்கினையும் உற்று நோக்குக.
இனி, மந்திரங்களுள் பிரதானமாகிய பீஜமந்திரம் எனப்படும் வித்தெழுத்து வட்டுமாழி வேதத்தின் மிக்குப் பலனாவது அன்றென்றும், தந்திரத்திற்கே உரியதென்றும் கல்கத்தா ஐக் கோர்ட்டு நீதிபதி (High Court Judge, Calcutta) யாகிய சர். ஜாண் உட்ராவ் (Sir. John Woodroffe) என்பவர் கூறியுள்ளார். வடமொழியில் தந்திர மெனப்படுவதும் தமிழில் நூலெனப்படுவதும் ஒரு பொருளுடையனவே. தமிழர் இமயமலை முதல் குமரி ஈறாக உள்ள நாடு முழுவதிலும் பரவியிருந்தனர் என்று சரித்திர நூலார் கூறுகின்றார்கள். மகர எழுத்துள்ள மொழிகள் இமயமலைச் சார்பில் இன்றும் வழங்குகின் றன. தமிழ்மக்களுள் சிறந்த வேளாளரே கங்கை மைந்தர் என்பது, அவர் கங்கைத் துறையில் ஒருகாலத்தில் வாழ்ந்ததைக் குறிக்கும். இருக்குவேதத்தில் நன்கு ஆராய்ந்த மேல் நாட்டுக் கவிஞராகிய (Ragozin) ரகோசின் என்பவர் தமது (Vedic India) வேடிக் இந்தியா என்னும் நூலுள் ‘சிவன்’ என்னும் தெய்வம் திராவிடரால் வணங்கப்பட்ட தென்றும், திராவிட மன்னர் பலர் வடநாட்டில் அரசு புரிந்தனர் என்றுங் கூறியுள்ளார். வடநாட்டில் தமிழர் நிலவிய காலத்து பொன்மலையின் ஒரு பகுதியாகிய கைலை என்னு மிடத்தைத் தமது சமய நிலையமாகக் கொண்டனர்,
“ஆவும் கூவிளமும் கண்மணியும் வட நாட்டில் செழித்தோங்கிய பொருள்களே, இமயமலைச் சாரலில் ஆரியரும் தமிழரும் ஒருங்கு கலந்தனர். தமிழரது நூலை ஆரியர் தந்திர மென்றனர். ஆரிய மொழியிலுள்ள தந்திரங்கள் யாவும் தமிழ் நூல் வழிய வென்பது தந்திரத்தை ஆரியர் அவைதிக மென்று கொண்டமையால் இனிது விளங்கும். தந்திர மென்பன ஆரியருக்குத் தமிழரிடமிருந்து புதிதாக வந்தமையால் ‘வந்தது’ என்னும் பொருளுடைய ஆகமம் என்னுஞ் சொல்லை அதற்கு இட்டு வழங்கினர் போலும். தந் திரத்தின் பல கருத்துக்கள் வேதத்துள் புகுவனவாயின. தமிழ் நாட்டு அறிவர் தமது மாணவர்க்கு ஆகமம் அறிவுறுத்தினார் என ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வுரையுட் கூறியது காண்க. தந்திரச் சார்பாய நூல்கள் கூறும் மருத்துவம், மந்திரம், யோகம், ஞானம் முதலி யன, வைதிகச் சார்பாய நூல்கள் கூறுமவற்றுள் நின்றும் வேறாகக் காணப்படுவதாலும் வைதிகச் சார்பாயெழுந்த சாங்கியம் முதலிய அறுவகைக் கோட்பாடுகளையும் தந்திர நூலார் புறமெனக் கழிப்பதாலும் அவ்வாறே தந்திரக் கோட்பாடு விசேஷங்களைப் புறமென வைதிக நாலார் ஒதுக்குவதாலும் தந்திர நூலோடு தமிழ் நாட்டுச் சித்தர் நூலினை ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து அவற்றுள் ஒற்றுமை மிகுதி காணப்படுதலாலும் கடல் கொள்வதன் முன் தமிழிலிருந்த அறிவர் நூலும் பின் எழுந்த வடமொழித் தந்திர நூலும் முதலும் வழியுமாமென யூகிக்கப்படும். தமிழ்நாட்டு மூவேந்தரும் தமது அடையாளங்களை இமயத்தில் பொறித்தமை இமயம் வரை தமிழ்நாடு ஒரு காலத்தில் பரவியிருந்ததென யூகித்தற்கு இடந்தரும். எங்கனம் கைலைத்திருமலை தெய்வப் பொது நிலையாகக் கொள்ளப் பட்டதோ அவ்வாறே தென்னாட்டிலே பொதியின் மலையும் கொள்ளப்பெற்றதே. இமயமும் பொதியிலும் சைவரது நாட்டின் எல்லை யென்பார், “கைலையும் பொதியிலும் இடமென உடையாய்”
என்று தேவாரத்துள் அருளிச் செய்தமையுங் காண்க.
தமிழ்நாட்டுத் திருத்தொண்டர் வரலாறு கூறப்புகுந்த சேக்கிழார் பெருமான் திருமலைச் சிறப்புக் கூறியதும் இவ் வியைபு பற்றியே என்க. வடிவ வணக்கமானது முதல் முதல் தந்திர நூலினுள்ளே காணப்பட்டதென்று சர் ஜாண் உட்ராவ் என்பவர் கூறியுள்ளார். தமிழ்ப் பண்டை நூல் களும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. ஆதலின் இமயத்துள்ள கோயில்கள் பலவும் தமிழராதல் அவரது வழிச்சென்றோதல் அடைக்கப் பெற்றிருத்தல் வேண் டும். தென்னாட்டிலுள்ள பெரிய சிவாலயங்கள் யாவும் சைவ சித்தாந்திகளது முயற்சியால் அமைந்தன வென் பதை டாக்டர் கால்டுவேல் என்பவர் தெரிவித்திருக்கிறார். ஆதியில் எல்லா ஆகமங்களும் சிவபெருமானைப் பற்றியனவே யென்பது ‘சர்வாகம் மயச்சிவ’ என்ற நாரத பரிவிராஜகத்தால் இனிது விளங்கும். வேதத்துள்ளும் உபநிடதத்துள்ளும் பலவிடங்களில் சிவனைப்பற்றிய உரை கள் காணப்படினும் சைவாகமத்துள்ளே தான் சிவனைப்பற்றிய யாவும் பாக்கக் காணலாம் என்ற கருத்தை ‘சிவச்சைவாகம ஸ்தானாம்’ என்ற அன்ன பூரண உப நிடதம் விளக்கியதுங் காண்க. இதனால் வேதத்துள் காணப்படும் சைவபாகம் ஆகமத்தினின்றும் போந்தமை தெளிவு. ஆகம ஞானமாகிய தமிழரது தத்துவ ஞானத்தை ஆரியர் தமிழ் அரசரிடமிருந்து முதலில் உணர்ந்தன ரென் பது சாந்தோக்கியத்துள் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஆரியர்க்குள் ஆதியில் கனல் வழிபாடே சிறந்து விளங் கிற்று. கனல் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்யும் ஆரியர், அம் மக்கட் கூட்டத்துள்ள ஏனையோரிலும் சிறந்தவராதல் பற்றி பிராமணர் எனப்பட்டார். பிராமணர் என்ற சொல் லிற்குப் பெரியவரென்பது பொருள். எக்கூட்டத்தாருள் ளும் கடவுட் பூசைக்குரியார் பெரியார் எனப்படுதல் இயல்பே. தொன்றுதொட்டு கனல் வழிபாடியற்றிய நான்கு பிராமணர் தத்துவஞானம் உணரவேண்டி ஓர் அரசரிடம் சென்றனர் என்று சாந்தோக்கியங் கூறு கின்றது. இவண் நோக்கத்தக்க தொன்றுண்டு.
ஆரியருள் போர் புரிவோர் அரசராகவும், சமயத் தலைவர் பிராமணராகவு மிருந்தனர். ஆரிய அரசர் தத்துவ ஞானம் உணர்ந்திருப்பின் அவர் தமது கொள்கையை பிராமணர்க்கு அறிவித்து அன்னோர் வழிபாடும் தமது குடிகள் வழிபாடும் அக்கொள்கைக்கு ஏற்புடைத்தாக நில வும் வண்ணம் ஒழுங்கு செய்திருப்பர். ஆதலானும் பின் வரும் அரச வாக்கியத்தாலும் பிராமணர் நால்வரும் சென்றடைந்த மன்னன் ஆரிய மன்னன் அன்றென்பதும் அன்றெனவே அவ்வரசன் தமிழ் வேந்த னென்பதும்தெளியப்படும். மேற் குறித்த நான்கு பிராமணரையும் நோக்கி அரசன் கூறியதாவது, நீவிர் எம்மிடம் வந்தது வியப்பைத் தருகின்றது; பிராமணன் ஒருவனும் இந்த ஞானத்தை இதுவரை பெற்றதில்லையே’ என்பதே.
இனி, ஆகமம் என்பதைப்பற்றி ஒரு சிறிது ஆராய்வோம். ஆகமம் என்னுஞ் சொல் சிவபெருமானிட மிருந்து வந்த ஞான நூலைக் குறிக்கு மென்பர். சிவபெரு மான் அவர் ஞானத்தை விஞ்ஞானகலர் பதின்மருக்கும், ருத்திரர் பதினெண்மருக்கும் கூறிய முறையால் ஆகமம் இருபத்தெட்டாயின என்னும் சரிதம் ஒருபுற மிருப்ப, ஆகமங்களை பெல்லாம் சிவபெருமான் உமாதேவியாருக்கு அறிவுறுத்தினார் எனவும் இறைவனது ஐம்முகங்கள் வாயி லாக ஆகமப் பொருளை அறுபத்தறுவர் கேட்டனரெனவும் கூறும் வரலாறுகளுமுள, ஆதிசைவர்க்குக் கோத்திரத் தலைவராகிய அகத்தியர் முதலிய ஐந்து முனிவர்க்குள் நான்கு முனிவர்க்கு அவ்வைந்தாகமங்களையும், ஒருவர்க்கு எட்டு ஆகமங்களையும் ஐம்முகங்கள் வாயிலாக சதாசிவமூர்த்தி அருளியதாகக் கூறுவது முண்டு.
இந்நில உலகத்திலே ஆகமங்கள் ‘மன்னுமாபலை மகேந்திர மலையில்’ அருளப்பட்டன வென்று ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் அருளிச் செய்திருப்பதாலும் மகேந்திர மலை பொதியத்திற்குத் தென்பாலிருப்பதாக சிவதருமோத்தர முதலிய ஆகமங்கள் கூறுதலாலும், அஃதிருந்த நாடு தமிழ்நாடா யிருந்ததாலும், ஆகமங்கள் முதல் முதல் தமிழிலே யருளிச் செய்யப்பட்டன வென்பது யூகிக்கப்படும். அவற்றின் திரிபுகளே இப்போதுள்ள வடமொழி யாகமங்களென்பர். தமிழிலே ஆகமமென்ற சொல்லானது பல வகைச் சமயத்தார்க்கும் உரிய சாதன நூல்களைக் குறிக்கப் பொதுவகையாகவும் வழங்கும்; அது பரிமேலழகர் உரையிற் காண்க.
இங்ஙனம் கூறியவைகளால் நாம் தெளிதற் குரிய பொருளாவது ஆகமமென்பது ஞான நூலைக் குறிக்கும் ஓர் மொழி எனவும், அதனைப் பக்குவர்க்குத் தமது திருவருள் வாயிலாக அவரவர் பக்குவத்திற் கேற்ப உணர்த்த அன்னோர் செய்த நல் ஆகமமாமெனவும், அவ்வா ‘ழுந்த உயர் நூல் உஅ எனவும், அவற்றிற்குத் தலைவர் ஐம்முனிவரெனவும் யூகிக்கப்படும்.
பண்டைச் செந்தமிழ் அருள் நூல்கள் மறைந்தபின் னர் வடமொழி வேதங்களை நான்காக வகுத்த வியாசமுனிவர் அவ்வேதங்களிலே குறிப்புப் பொருளாகச் சைவ வுண்மைகளை அடைத்து வைத்தனர் , சிறப்புப் பொருாக சிவமாநெறிக் கொள்கைகளை யெடுத்து விளக்கும் வட மொழி நூல்கள் ஆகம்மெனப் பெயர் பெற்றன. தமிழிலே பண்டை நான்மறை முறைகளை உலகிற்கு உணர்த்தக் கருதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர் சைவ சித்தாந்தக் கருத்துக்களைப் பொதுவகையால் திறம்படத் தமது நூலுள் அறப்பகுதியில் ஓதியருளினர். பின்னர் சைவத் திருநெறித் தலைவராகிய முதல்வர் நால்வரும் தமது கடவுட் பழம் பாடல்களிலே தாம் நுகர்ந்த சைவ சித்தாந்தத் தேனமுதத்தை நிறைத்து உலகிற்கு உதவினர். அவ் வாறே இருமொழி நூற்கடலும் நிலைகண்டுணர்ந்த திருமூல மாமுனிவர் முதலிய பேரறிஞர் தமது அறிவு நால்கள் வாயிலாக சைவ சித்தாந்த ஒளியைத் திகழச் செய்தனர். அப்பெரியார் காலங் கழிந்தபின் செந்தமிழ் அறிவு நூல் களையும் சிவாகம நூல்களையும் ஆராயும் முயற்சி குறைந்த மையானும் வேத ஞானகாண்ட சாசமாப் வியாசர் செய்த பிரம சூத்திரத்தைப் பொதுப் பிரமாண நூலாகப் பலர் தழுவித் தத்தமக்குத் தோன்றியவாறே பொருள் கொண்டு உலகிற்குப் பெரும்பால் வினைத்தனர். ஆதலால் பிரமசூத் திர பாடியங்க ளாலுண்டாகிய மயக்கத்திற்கு மருந்தில் லாது மன்பதைகள் அலமறா நின்றனர். அப்பொழுது தென்முகத் தெய்வப் பரமாச்சாரியர் திருவருளால் பொல் லாப் பிள்ளையாரிடம் உண்மை நூல் உணர்வினை முழுதும் பெற்ற ஸ்ரீ மெய்கண்ட தேவ நாயனார் சைவ நன் மக்களது பெருந் தவக் கொழுந்தா யெழுந்தருளிச் சிவஞான போதம் என்னும் சைவ சித்தாந்தத் தலைமணி நூலைத் தமிழுக்கு உயிரான பன்னிரண்டுடழுத் தென்னப் பன்னிரண்டு குத் திரங்களால் திருவாய் மலர்ந்தருளி அதனை ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் முதலிய தமது மாணவர் நாற்பத்தொன்ப தின்மருக்கும் உபதேசித்தருளினர். சிவஞான போதத் தின் வழி நூலாக வெழுந்த சிவஞான சித்தியார், சைவப் பிரகாசம் முதலிய நூல்கள் செய்யுள் வடிவாயிருந் தமையால் பிற்காலத்தார் சைவ சித்தாந்த நூற் பொருளைத் தெள்ளிதின் உணர்ந்திற்றிலர். வடமொழிச் சிவஞான போதத்திற்கு சிவாக்கிர யோகிகள் இயற்றிய உரை பெரி தும் பயனுடைத் தெனினும் சைவ சித்தாந்த நுட்பத்தைச் செவ்வனே விளக்கும் ஆற்றல் மிக்கதன்று. ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் செய்தருளிய பௌட்கர விருத்திப் பொதுப் பாகத்தை வடமொழியில் நன்கு விளக்குவதாகும் எனிலும் அது சைவ சித்தாந்த உண்மைகளை முழுவதும் கூறும் நூலன்று. வடமொழிச் சிவஞான போதத்திற்கு வித்தியாரணியர் முதலிய புற மதத்தினர் தத்தமக்குத் தோன்றியவாறே பொருள் கொண்டனர். ஆதலால் சிவ ஞான போதப் பொருளை அளவை நூன்முறைக் கேற்பவும் இரு மொழி அருள் நூல் முடிவிற் கேற்பவும் விரிவாக விளக்கும் பேருரைப் பெருநூலொன்று வேண்டியதா பிற்று. அது துறைசை மாதவச் சிவஞான யோகிகளாலே இயற் றிய ருளப்பெற்றது. வடமொழியிலும் தென்மொழியிலுமுள்ள சிவ சித்தாந்த உண்மைகள் முழுவதையும் இனிது விளக்கிச் சைவ சித்தாந்த நூல்களின் முடிபை உணர்தற்குரிய தெளிவினைக் கற்பார்க்கு நல்கும் கதிர் மணி நூல் இஃதேயாம் என்பது யார்க்கும் விளங்கும். இங்ஙனம் ஒருவாறு சைவ சித்தாந்த வரலாறு கூறி முடித்தாம்.
குறிப்பு:
சைவ சித்தாந்த நன்மக்கள் யாவரும் தமது சமய நூல்களைக் குறிக்கொண்டு பாதுகாத்தலைத் தமது பெருங் கடனாக எண்ணக் கடவர். நூல் பாதுகாப்பு ஒன்றினாலே ஆரியர் தமிழரின் மேம்பட்டனர். நூல் பாதுகாவாமையா யினாலேயே தமிழர் தம் பெருமையை இழந்தனர். தயது சமய நெறி இன்னதென உணர்ந்து அதன்வழி ஒழுகு வதைக் கடைப்பிடித்தலினாலே ஏனையோர் உயர்ந்தனர். அங்ஙனம் செய்யாமையினாலே சைவர் அஃகி ஒழிந்தனர். அம்மட்டோ! நமக்குப் பெரு வாழ்வும் பெரு நிதியு மாகிய திருக்கோயில், திருமடம் முதலிய சைவ சமய நிலை யங்களைப் புறச் சமயத்தார் பறிகொள்ள விடுத்து வாளா யிருக்க நேர்ந்தது. சைவ சித்தாந்த நூல்களை இனியா வது நாம் கைநழுவ விடாது போற்றிப் பாப்போமாக. சைவ சித்தாந்தத்தின் சார்பாய நூல்களனைத்தையும், தமிழிலே அச்சிடுவித்துப் பயன் கொள்ளுதலும் நமது கடமையே. ஆங்கிலத்திலே Science என்கிற பூத நுண் ணல், புலநுண் ணூல்கள் போல் நுண் நூல்கள் யாவும் சைவ சித்தாந்தத்திற்குச் சார்பாக இருப்பின் அவற்றை நாம் கொள்ள வேண்டும். வடமொழி தென்மொழிகளி லுள்ள சரியை, கிரியா யோக நூல்கள் யாவும் சைவசித் தாந்த சார்பின வா தலால் அவற்றையும் தமிழிலே யாரு மறிய அச்சிடல் வேண்டும். எளிதாக யாவர்க்கும் விளங்கும் வண்ணம் சித்தாந்தக் கொள்கையினைப் பரப்புதற்குச் சிறு நூல்கள் வெளிவரல் வேண்டும். திருவாசகம், சிவ ஞான போதம் என்னும் இரண்டு நூல்களையும் சொற்பொருளாதல் விளங்கும்பட் அச்சிடுவித்து யாவர்க்கும் குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டும். சைவ மாணவ யாவரும் சைவ சித்தாந்த உண்மைகளைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் உணரும் வண்ணம் போதகர்கள் நியமித்து அவற்றைக் கற்பிக்க வேண்டும். கிறித்தவர்கள் தங்கள் நூலைக் கற்றுப் பாதுகாத்துப் பிறர்க்கு ஈதல் போன்று சைவர் ஒவ்வொருவரும் சைவ நால்களை கற்றுப் பாதுகாத்துப் பிறர்க்குப் பயன்படச் சொல்லல் வேண்டும். இன்றேல் சைவரென்னும் பெயர்க்குப் புறம் பேயாவர். குடதிசைக் கிறித்தவக் குருக்களாகிய Dr. G. U. Pope, Dr. Gondit முதலியவர்கள் திருவாசகம் சிவஞான போதம் முதலிய நூல்களைக் கற்றுச் சீராட்டி பாராட்டி நிற்கவும், நம்மவர்கள் தங்கள் பெருநிதி யிழந்து புறச்சமயிகள் முன் திகைத்து நிற்பது எத்துணை யிரங்க தக்கதாகின்றது. இந்நாட்டிலே பொருளாளரும், துறவிகளும் சைவசித்தாந்தம் இன்னதென் றுணராது வாழ்நாட் கழிக்காநிற்ப, சுமார்த்தரும் வைணவரும் தமது மொழியினையும் தமது சமய நூலினையும் அரசாங்கத்தாரும் சர்வகலா சங்கத்தாரும் மதித்துப் பேருதவி செய்யும் வண்ணம் முயன்று வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அதுமாட்டோ ! நமது சமய வளர்ச்சிக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் கோயில்களிலும் மடாலயங்களிலும் வைத்து பெருநிதிக் குவியல்களெல்லாம் தஞ்சமய வளர்ச்சிக்கு தம் மேம்பாட்டிற்குமே உரிமையாக்கிக் கொண்டார்கள். சர்வகலா சங்கத்தார் வடமொழி வேதாந்த நூல் வல்லார்க்குச் சிரோன்மணிப் பட்டம் கொடுப்பதாக ஏற்படுத்தி யிருப்பது போல் சித்தாந்தப் புலமைப் படங்கள் அமைக்கவேண்டு மென்று நாம் அறிவிக்க வேண் டும்.
ஆதலால் சைவ சித்தாந்திகள் தமது அரிய நூல்களை யும் சமயத்திற்கு உயிராகிய நிலையங்களைம் ஊக்கந் தளராது பாதுகாக்க முயல்வதுடன் தமது ஒப்பற்ற சமயம் எங்கும் பரவுதற் குரிய முயற்சிகள் யாவும் செய்து வெற்றி பெறும் வண்ணம் விடா முயற்சி தளராத ஊக்கக்தையும் நிலைத்த பேரன்பையும் சிவபெருமான் பெருங் கருணையால் ஈந்தருளும் வண்ணம் திருவருளைப் போற்று வோமாக.
முற்றும்.



