சைவ சமய சாரம்‌ 
திரு.வி. கலியாணசுந்தரனார்

சைவ சமய சாரம்‌
திரு.வி. கலியாணசுந்தரனார்

திருச்சிற்றம்பலம்

மெய்ம்மையாம்‌ உழவைச்‌ செய்து
விருப்பெனும்‌ வித்தை வித்திப்‌
பொய்ம்மையாங்‌ களையை வாங்கிப்
பொறையெனு நீரைப்‌ பாய்ச்சித்‌
தம்மையு நோக்கிக்‌ கண்டு
தகவெனும்‌ வேலி யிட்டுச்‌
செம்மையுள்‌ நிற்ப ராகிற்‌
சிவகதி விளைய மன்றே.


-அப்பர்‌

காலம்

உலகத்திலே பல சமயங்கள்‌ நிலவுகின்றன. அவைகளுள்‌ பெரும்பாலன கால தத்துவத்துக்குக்‌ கட்டுப்பட்டுக்‌ கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம்‌, பெளத்த சமயம்‌ முதலிய சமயங்கள்‌ தோன்றிய காலங்களைச்‌ சரித்திரங்கள்‌ கிளந்து கூறுகின்றன. ஆனால்‌ சைவசமயமோ காலங்‌ கடந்து நிற்கிறது. சைவசமயம்‌ இன்ன காலத்தில்‌ இன்னவரால்‌ உண்டாக்கப்‌ பட்டதென்று எவராலும்‌ எந்நூலாலும்‌ அளந்து கூற முடியாது. பழமையிற்‌ சிறந்த இருக்கு வேதத்திலும்‌, தமிழ்‌ நாட்டுச்‌ சங்க நூல்களிலுஞ்‌ சிவமென்னுஞ்‌ செம்பொருள்‌ காணப்படுகிறது. முன்னைப்‌ பழமைக்குப்‌ பழமையாயும்‌, பின்னைப்‌ புதுமைக்குப்‌ புதுமை யாயும்‌ இலங்குஞ்‌ சிவமென்னுஞ்‌ செம்பொருளின்‌ தொடர்‌புடைய சைவ சமயத்தின்‌ கால வரை அளவிடற்‌ பாலதன்று. 

சமரச நிலை

சைவசமயம்‌ தொன்மையிற்‌ சிறந்து விளங்குதலைக்‌ கொண்டு, அதனைப்‌ போற்றவேண்டுமென்று வலியுறுத்துவது அறிவுடைமையாகாது. மேன்மக்கள்‌ தொன்மை கருதி ஒன்றைக்‌ கொள்ளவும்‌ மாட்டார்கள்‌; புதுமை கருதி ஓன்றைத்‌ தள்ளவும்‌ மாட்டார்கள்‌. அவர்கள்‌ ஓன்றை அறிவால்‌ அளந்து ஆராய்ந்து அதன்‌ உண்மை காணவே முயல்வார்கள்‌. ஆராய்ச்சிக்குக்‌ கருவியாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமையதாயினு மாக; வேண்டற்பாலது ஒன்றே, அது பொருளுண்மை. இதனைச்‌ சைவ சமய சந்தானாசாரியருள்‌ ஒருவராகிய உமாபதி சிவா சாரிய சுவாமிகள்‌ தமது சிவப்பிரகாசமென்னும்‌ அரிய நூலில்‌,

தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று
தோன்றியநூ லெனுமெவையுற்தீதாகா துணிந்த
நன்மையினார்நலங்கொண்மணி பொதியமதன்களங்க நவையாகா வெனவுண்மை நயந்திடுவார்நடுவாந்
தன்மையினார்பழமையழ காராய்ந்து தரிப்பா்
தவறுகலும்பொருளின்கட்கார்னாய்த்தறிதல்
இன்பமயினாற்பலர்புகழி லேத்துவரே திலருற்
றிகழ்ந்தனரே விகழ்கதிடிவர்தமக்கென வொன்றிலரே

என்று ஓதியிருத்தல்‌ காண்க.

தொன்மை ஒன்றே கருதிச்‌ சைவ சமயத்தைப்‌ போற்று வோர்‌ போற்றுக. தொன்மையோடு பொருளுண்மையும்‌, சமரசமும்‌, அன்பும்‌, ஜீவகாருண்யமும்‌ விளங்கும்‌ ஒரு சமயம்‌ நிலவு மேல்‌, அஃது அறிஞர்‌ உடைமையாகும்‌. தொன்மையின்றிச்‌ சமரசம்‌ முதலியன ஒளிரும்‌ சமயமொன்றுளதாயின்‌, அஃதும்‌ அறிஞர்க்குரியதே. தொன்மையோடு பிறபொருள்‌ பொலிதல்‌ பொன்‌ மலரில்‌ நறுமணங்‌ கமழ்வது போலாம்‌. சைவ சமயத்தில்‌ தொன்மையோடு பொருளுண்மை சமரசநிலை முதலியன காணப்படின்‌, அதைப்‌ போற்றவேண்டுவது அறிஞர்‌ கடமை. எந்தச்‌ சமயம்‌ பிறசமயங்களைப்‌ “பொய்‌” என்று தள்ளுகிறதோ அந்தச்சமயம்‌ சிறந்த சமயமாகாது. உலகத்தில்‌ தோன்றியுள்ள சமயங்கள்‌ யாவும்‌ மெய்ப்பொருளாகிய கடவுளொன்றையே போற்றுகின்றன. ஒரு கடவுளைப்‌ போற்றுஞ்‌ சமயங்களுள்‌ பொய்ச்‌ சமயம்‌ மெய்ச்‌ சமயம்‌ என்ற பிரிவு நிகழ்தற்கேயிட மில்லை. சைவசமயம்‌ “இச்சமயமாகும்‌, இச்சமயமாகாது” என்று பிரித்துரைக்கவில்லை. இவ்வுண்மையைச்‌ சைவசமய சாத்திர மாகிய சிவஞான சித்தியார்நன்கு அறிவுறுத்துகிறது. அச்‌ செய்யுள்‌ வருமாறு:-

“ஓது சமயங்கள்‌ பொருளுணரு நூல்கள்‌
ஒன்றோடொன்‌ றொவ்வாம லுளபலவு மிவற்றுள்‌
யாது சமயம்‌ பொருள்நூ லியாதிங்‌ கென்னில்‌
இதுவாகும்‌ அதுவல்ல வெனும்‌ பிணக்கதின்றி
நீதியினால்‌ இவையெல்லாம்‌ ஓரிடத்தே காண
நிற்பதுயா தொருசமயம்‌ அதுசமயம்‌ பொருள்நூல்‌
ஆதலினா விவையெல்லாம்‌ அருமறையா கமத்தே அடங்கியிடும்‌ அவையிரண்டும்‌ அரனடிக்கீ ழடங்கும்‌.”

சைவசமயத்திற்‌ போந்துள்ள சமரசப்பான்மை கண்டே, எவரும்‌ போற்றுந்‌ தாயுமான சுவாமிகளும்‌ சைவ சமயத்தை இராஜாங்கத்திலமர்ந்த சமயமென்றும்‌, அச்சமயமே சமய மென்றும்‌, அச்சமயத்தில்‌ செகத்தவர்‌ அனைவரும்‌ சேரவேண்டு மென்றும்‌ திருவாய்‌ மலர்ந்தருளியுள்ளார்‌. அத்திருப்‌ பாடல்கள்‌ வருமாறு:-

விண்ணவறிந்திரன்முதலோர்நார தாதி
விளங்குசப்த ௬ஷிகள்கன வீணைவல்லோர்
எண்ணரிய சித்தர்மநு வாதி வேந்தர்
இருக்காதி மறைமூணிவ ரெல்லா மிந்தக்
கண்ணகன்ஞா லம்மதிக்கத்தானே யுள்ளங்
கையி
னெல்லிக்கனிபோலக்காட்சி யாகத்
திண்ணியநல்லறிவாலிச சமயத்தன்றோ
செப்பரிய சித்திமுத்தி சோத்தா ரென்றும்

செப்பரிய சமயநெறி யெல்லாந்தன்றன்
தெய்வமே தெய்வமெனுஞ்செயற்கை யான
அப்பரிசா ரும.ஃதே பிடித்தா லிப்பால்
டுத்த தத்நூல்களும்விரித்தே யனுமா னாதி
ப்பவிரித்துரைப்ப நிங்கள்பொய்மெய்யென்ன ஒன்றிலையொன்றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்இப்பரிசாஞ்சமயமுமாய்அல்ல வாகி
யாதுசம யமும்வணங்கு மியல்ப தாகி
இயல்பென்றுந் திரியாம லியம மாதி
எண்குணமுங்காட்டியன்பா லின்ப மாகிப்
பயனருளப்பொருள்கள்பரி வார மாகிப்
பண்டுறவுஞ்செளபான பட்சங்காட்டி
மயல றுமந்திரஞ்சிட்சை சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மெளன மோலி
அயர்வறச்சென்னியில்வைத்து ராசாங்கத்தில்
அமர்ந்ததுவை திகசைவம்அழகி தந்தோ.
அத்தோவீ ததிசயமிச்சமயம்போலின்
றிஞரெலாம்தடுவறிய அணிமா வாதி
வந்
தாடித்திரிபவர்க்கும்பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும்மற்று மற்றும்
இந்திராதி போகநலம்பெற்ற பேர்க்கும்
இதுவன்றித்தாயகம்வே றில்லை யில்லை
சந்தான கற்பகம்போ லருளைக்காட்டத்
தக்கநெறி யிந்நெறியே தான்சன்மார்க்கம்‌.

சைவ சமய மேசமயஞ்சமயா தீதப்பழம்பொருளைக்
கைவுந்திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக்கருத்தை விட்டுப்பொய்வுற்துழலுஞ்சமயநெறி புகுத வேண்டா முத்திதருற்தெய்வ சபையைக்காண்பதற்குச்சேரவாருஞ்செகத்தீரே.

எல்லாச்‌ சமயங்கட்குந்‌ தாயகமாயுள்ள சைவ சமயத்தை நிலை நிறுத்த இத்தமிழ்‌ நாட்டிற்றோன்றிய சமயாசாரியாராகிய நால்வரும்‌ சமரச உண்மையையே உலகத்துக்கு அறிவுறுத்தி யுள்ளார்‌. அவர்கள்‌ அருளிச்‌ செய்துள்ள தமிழ்வேதத்தை முறை யாகப்‌ பொருளுணர்ந்து ஓதுவோர்க்குச்‌ சமரச உண்மையே புலனாகும்‌. தமிழ்‌ வேதத்தில்‌ சமரச உரைகள்‌ பலபடக்கிடக்‌ கின்றன. அவைகளுள்‌ சில வருமாறு:-

வாது செய்து மயங்கு மனத்தராய்‌
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்‌
யாதோர்‌ தேவ ரெனப்படு வார்க்கெலாம்‌.
மாதே வனலால்‌ தேவர்மற்‌ றில்லையே.

விரிவிலா அறிவி னார்கள்‌ வேறொரு சமயஞ்‌ செய்து
எரிவினாற்‌ சொன்னா ரேனும்‌ எம்பிராற்‌ கேற்ற தாகும்‌
பரிவினாற்‌ பெரியோ ரேத்தும்‌ பெருவேளூர்‌ பற்றி னானை
மருவிநான்‌ வாழ்த்தி யுய்யும்‌ வகையது நினைக்கின்‌ றேனே.

ஆறொன்‌ றியசம யங்களி னவ்வவர்க்‌ கப்பொருள்கள்‌
வேறொன்‌ றிலாதன விண்ணோர்‌ மதிப்பன மிக்குமவன்‌
மாறொன்‌ றிலாதன மண்ணொடு விண்ணக மாய்ந்திடினும்‌
ஈறொன்‌ றிலாதன வின்னம்ப ரான்ற விணையடியே.

போற்றுந்‌ தகையன பொல்லா முயலகன்‌ கோபப்புன்மை
ஆற்றுத்‌ தகையன ஆறு சமயத்‌ தவரவரைத்‌
தேற்றுந்‌ தகையன தேறிய தொண்டரைச்‌ செந்நெறிக்கே
ஏற்றுந்‌ தகையன வின்னம்ப ரான்ற விணையடியே.

– அப்பர்

அன்பு

சைவ சமயத்தை அன்பு சமயம்‌ என்றுங்கூறலாம்‌. சமரச சமயத்தில்‌ அன்பே ஓழுகுதல்வேண்டும்‌. சைவசமயம்‌, சமரச      சமயம்‌ என்பதற்கு அறிகுறி, அஃது அன்புமயமாகப்‌ பொலிவதே யாகும்‌. சைவம்‌ – சிவசம்பந்தம்‌. சிவம்‌ – அன்பு. சிவசம்பந்தம்‌ – அன்பு சம்பந்தம்‌. அன்பே சிவம்‌ என்பதற்கு ஆன்றோர்‌ உரைகள்‌ வருமாறு:-

அன்புஞ்‌ சிவமுமிரண்‌ டென்ப ரறிவிலார்‌
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்‌
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்‌
அன்பே சிவமா யமர்ந்திருப்‌ பாரே.             – திருமூலர்‌

மாறிநின்‌ றென்னை மயக்கிடும்‌ வஞ்சப்‌
புலனைந்தின்‌ வழியடைத்‌ தமுதே
ஊறிநின்‌ றென்னுள்‌ எமுபரஞ்‌ சோதி
உள்ளவா காண வுந்தருளாய்‌
தேறலின்‌ தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந்‌ துறையுறை சிவனே
ஈறிலாப்‌ புதங்கள்‌ யாவையுவ்‌ கடந்த
இன்பமே என்னுடை அன்பே.                 – மாணிக்கவாசகர்‌

சைவம்‌ அன்பை அறிவுறுத்தலால்‌, அச்சமயத்தை அவலம்‌ பித்து ஓழுகுவோர்‌ சாதி பேதம்‌ முதலியன பாராட்டாது எவ்வுயிரிடத்தும்‌ அன்பு செலுத்தல்‌ வேண்டும்‌. எல்லாவுயிர்களி டத்தும்‌ அன்பு செலுத்துபவரே சைவ ரெனப்படுவர்‌. அக்‌ கொள்கையுடையார்‌ இன்னா ரென்பதைப்‌ புலப்படுத்தும்‌ பொருட்டுச்‌ சிவனடியவர்களுக்கு விபூதி ருத்திராக்க தாரணம்‌ ஏற்படுத்தப்பட்டது. விபூதி தூய்மையைக்‌ காட்டுவது. “பூசு நீறுபோல்‌ உள்ளும்‌ புனிதர்கள்‌” என்றார்‌ சேக்கிழாரும்‌. உருத்தி ராக்கம்‌ சிவபெருமான்‌ திருவருட்‌ கண்களினின்றும்‌ பிறந்த தாகப்‌ புராணங்கள்‌ கூறுகின்றன. “கண்ணுக்‌ கணிகலம்‌ கண்‌ ணோட்டம்‌” என்பது திரிகடுக வாசகம்‌. எவ்வுயிர்க்குந்‌ தீங்கு செய்யாத கூட்டத்தார்‌ இன்னார்‌ என்பதை விளக்கும்‌ புறச்‌ சின்னங்கள்‌ நீறுங்‌ கண்டிகையுமாம்‌. இது காலை, சில குடியருங்‌ கொலைஞரும்‌ விபூதி ருத்திராட்சந்‌ தரித்து அச்சின்னங்களின்‌ மாண்பைக்‌ கெடுத்துவருகிறார்‌. மடங்களிலும்‌ சிவ சின்னங்‌களின்‌ மாண்பு இறந்துபட்டது. ஊரை வஞ்சிப்பதன்‌ பொருட்டே சில சகோதரர்கள்‌ சிவவேடம்‌ பூண்கிறார்கள்‌. என்செய்வது! ஈண்டுக்‌ கவனிக்கற்பாலது ஒன்றே. அஃது, அன்பு நெறிக்கு அடையாளமாகவே விபூதி ருத்திராட்ச தாரணம்‌ ஏற்படுத்தப்‌ பட்ட தென்பது. சைவ சமயத்துக்கு அடிப்படை அன்பேயாகும்‌. அவ்வன்பைத்‌ தாங்காது, சிவ சின்னங்களைத்‌ தாங்கி, உயிர்‌ களுக்குத்‌ தீங்கு நினைப்பவர்கள்‌ சைவர்களாக மாட்டார்கள்‌.

“எவ்வுயிரும்‌ பராபரன்‌ சந்நிதியதாகும்‌ இலங்கும்‌ உயிர்‌ உடலனைத்தும்‌ ஈசன்‌ கோயில்‌” என்ற கொள்கையில்‌ தலை சிறந்து விளங்கு மக்கள்‌, எத்தேசத்தவர்‌ களாயினும்‌, எக்‌ குலத்த வர்களாயினும்‌, எச்‌ சமயத்தவர்களாயினும்‌, எவ்வேடத்தவர்‌ களாயினும்‌ – அவரனைவரும்‌ – சைவரேயாவர்‌. சுருங்கக்கூறின்‌ அன்பர்‌ அனைவருஞ்‌ சிவனடியாரே யாவர்‌ என்னலாம்‌. 

வழிபாடு

சைவ சமயத்தில்‌ இருவித வழிபாடுகள்‌ வகுக்கப்பட்டிருக்‌ கின்றன. ஓன்று ஆலய வழிபாடு; மற்றொன்று உயிர்கள்‌ வழி பாடு. ஆலயமும்‌ உயிர்களும்‌ முறையே படமாடுங்கோயில்‌ நட மாடுங்‌ கோயில்‌ எனப்படும்‌. இவ்விரண்டனுள்‌ நடமாடுங்‌ கோயில்‌ வழிபாடே சிறப்புடையது என்று சைவ சமய நூல்கள்‌ கூறுகின்றன. 

படமாடச்‌ கோயில்‌ பகவற்‌ கொன்றீயின்‌ 
நடமாடக்‌ கோயில்‌ நம்பாக்கங்‌ காகா 
நடமாடக்‌ கோயில்‌ நம்பர்க்‌ கொன்றீயிற்‌ 
படமாடக்‌ கோயில்‌ பகவற்‌ கங்காமே.              – திருமந்திரம்‌ 

எவ்வுயிரும்‌ நீங்கா துறையும்‌ இறைசிவனென்று எவ்வுயிர்க்கும்‌ அன்பா யிரு.                           – சைவசமயநெறி 

உயிர்களை வழிபடுங்‌ காலத்துச்‌ சாதிபேதம்‌ முதலியன பாராட்டலாகாதென்று சைவ சமயங்‌ கூறுவதை விரிக்கிற்‌ பெருகும்‌. பெரிய புராணத்துட்‌ போந்துள்ள நாயன்மார்‌ வரலாறுகளால்‌ சைவ சமயம்‌ சாதிபேதம்‌ முதலியவற்றைப்‌ பாராட்டுவதில்லை என்பது நன்கு விளங்கும்‌. சமயாசாரியர்‌ களும்‌ சாதி பேதத்தை மறுத்திருக்கிறார்கள்‌. 

சாதிகுலம்‌ பிறப்பென்னுஞ்‌ கழிப்பட்டுத்‌ தடுமாறும்‌ 
ஆதமிலி நாயேனை யல்லலறுத்‌ தாட்கொண்டு 
பேதைகுணம்‌ பிறருருவம்‌ யானெனசென்‌ னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக்‌ குலாவுதில்லை கண்டேனே. 

– மாணிக்கவாசகர்‌ 

சாத்தி ரம்பல பேசும்சழக்‌ கா்காள்‌ 
கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்‌
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்‌ 
மாத்தி ரைக்குள்‌ அருளுமாற்‌ பேறரே 

சங்கநிதி பதுமநிதி இரண்டுந்‌ தந்து 
தரணியொடு வானாளத்‌ தருவ ரேனும்‌
மங்குவா ரவர்செல்வம்‌ மதிப்போ மல்லோம்‌
மாதேவர்க்‌ கேகாந்த ரல்லா ராகில்‌

அங்கமெலாங்‌ குறைந்தழுகு தொமுநோயராய்‌
ஆவுரித்துத்‌ தின்றுழலும்‌ புலைய ரேனும்‌
கங்கைவார்‌ சடைச்கரந்தார்க்‌ கன்ப ராகில்‌
அவர்கண்டீர்‌ நாம்வணங்குங்‌ கடவு ளாரே.              

 – அப்பர்‌

உயிர்கள்‌ வழிபாடு என்பதில்‌ மக்கள்‌ முதலிய எல்லா உயிர்கள்‌ வழிபாடு மடங்கும்‌. சைவ சமயிகள்‌ எந்த உயிர்கட்குந்‌ தீங்கு செய்தலாகாது. சிலர்‌ விபூதி ருத்திராட்சந்‌ தரித்துச்‌ சிவாலய வழிபாடு முறையாகச்‌ செய்கின்றனர்‌; அடியார்‌ பூசை யுஞ்‌ செய்கின்றனர்‌; அன்னதானங்‌ கொடிகட்டிச்‌ செய்கின்றனர்‌. இந்நற்காரியங்கள்‌ செய்யும்‌ மனிதர்‌ ஆடு கோழி முதலிய பிராணிகளைக்கொன்று அவைகளின்‌ புலாலை உண்பாராயின்‌, அன்னவர்‌ சைவராகார்‌; சிவனடியாராகார்‌. ஆடு கோழி முத லிய உயிர்கள்‌ தாங்கியுள்ள உடலங்களும்‌ சிவாலயங்களே யாகும்‌. இச்சிவாலயங்களுக்கு ஊறுசெய்பவர்களைச்‌ சைவர்‌ சிவனடியார்‌ என்று எவ்வாறழைப்பது? “படிப்பது திருவாசகம்‌ இடிப்பது சிவன்‌ கோயில்‌” என்பது தமிழ்நாட்டுப்‌ பழமொழி களுள்‌ ஓன்று. திருவாசகம்‌ முதலிய சைவ நூல்களை ஓதி உயிர்களின்‌ உடலங்களை அழிக்கும்‌ மாக்களைக்‌ கண்டே இப்பழமொழி எழுந்தது போலும்‌! சைவ சமயம்‌ ஜீவகாருண்ணிய சமயம்‌. ஆதலால்‌ கொல்லாவிரதங்‌ கொண்டவரே சைவர்‌. மற்றவர்‌ எவரோ!

மருவாணைப்‌ பெண்ணாக்கி ஒருகணத்திற்‌
கண்விழித்து வயங்கு மப்பெண்‌
உருவாணை யுருவாக்கி யிறந்தவரை
எழுப்புகின்ற வுருவ னேனுங்‌
கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்‌
கடித்துண்ணுங்‌ கருத்த னேலெங்‌
குருவாணை யெமதுசிவக்‌ கொழுந்தாணை
ஞானியெனக்‌ கூறொ ணாதே.              

 – இராமலிங்க சுவாமிகள்‌

விண்ணப்பம்

எல்லாச்‌ சமயங்கட்குந்‌ தாயகமாயுள்ள சைவ சமயத்தைக்‌ கடைப்பிடித்‌ தொழுகுவோர்‌ தாம்‌ மாத்திரஞ்‌ சமய நூல்களை ஓதி உணர்ந்து, சிவாலயங்களையும்‌ உயிர்களையும்‌ வழிபட்டு, கொல்லாமை முதலிய விரதங்களை அனுஷ்டிக்கும்‌ அளவோடு நிற்றலாகாது. அவர்‌ மற்றவரையும்‌ தம்‌ வழியில்‌ நிறுத்த முயலல்‌ வேண்டும்‌. பிறர்‌ அறியாமை கண்டு, இரக்கமுற்று, அவர்‌ அறியாமை ஓழிக்க முயல்வதும்‌ ஜீவகாருண்ணியமே. சமயாசாரியர்கள்‌ முதலிய பெரியோர்கள்‌ தேவார திருவாசக முதலிய நூல்களை ஏன்‌ அருளிச்‌ செய்தார்கள்‌? மெய்‌ கண்டார்‌ முதலியோர்‌ ஞான நூல்களை எவர்‌ பொருட்டுத்‌ திருவாய்‌ மலர்ந்தருளினார்‌? பின்‌ வருவோர்‌ உய்யவேண்டுமென்னுங்‌ கருணையாலன்றோ? “நான்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வைய கம்‌” என்றன்றோ திருமூலர்‌ ஓதியிருக்கின்றார்‌? இவ்வளவு பரந்த கொள்கையைத்‌ தாங்கியுள்ள சைவ சமய நூல்களை எல்லாரும்‌ ஓதியுணரச்‌ சைவசமயிகள்‌ உழைத்தல்வேண்டும்‌. சைவ மடங்களில்‌ ஒரு வகுப்பார்க்கே ஞான நூல்கள்‌ போதிக்கப்பட்டு வருவதைச்‌ சைவ சமயிகள்‌ கவனித்து மடங்களைத்‌ திருத்த முயலல்‌ வேண்டும்‌. தாகமுடையார்க்குத்‌ தண்ணீர்‌ உதவ வேண்டுவது அன்பர்‌ கடமை. அது போல ஞானதாகமுடையோர்‌ எவராயினும்‌ அவர்க்கு ஞான நூலைப்போதிக்க வேண்டுவது சைவக்‌ குரவர்கள்‌ கடமை.

ஞான தாகங்‌ கொண்டு ஓடி வருவோர்க்கு ஞான நூலைப்‌ போதிக்க மறுப்பது அறமாகாது. கொலைஞர்க்கும்‌ இவர்க்கும்‌ வேற்றுமையுண்டோ? சமரசத்தையும்‌ அன்பையும்‌ ஜீவகாருண்ணியத்தையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டுள்ள சைவ சமயக்கொள்கையைப்‌ பரப்பமுயல வேண்டுவது ஒவ்வோர்‌ உண்மைச்‌ சைவர்‌ கடமை என்பதை அறிவுறுத்த வேண்டுவதில்லை. பெளராணிக சைவம்‌ ஒன்று இடை யில்‌ தோன்றி ஞான சமயத்தை இடர்ப்படுத்துகிறது. சைவ சமயம்‌ எல்லாச்‌ சமயங்களுக்குத்‌ தாயகமாயிருப்பதைக்‌ கருதியே தாயுமானார்‌ “சேரவாருஞ்‌ செகத்திரே” என்று கூவி உலகத்‌ தையே அழைக்கிறார்‌. அவர்‌ திருவடி. போற்றுஞ்‌ சைவ உலகம்‌ அவரைப்‌ போல உலகத்தை நோக்கி ஏன்‌ அழைத்தலாகா து? உலகம்‌ சைவ சமய உண்மை கண்டு அதை அனுஷ்டிக்குமாறு சைவ சமயிகள்‌ சைவ சமய ராஜாங்கத்தை ஓழுங்கு படுத்துவார்‌களாக. 

சைவ சமயிகளே! அன்பர்களே!! உங்கள்‌ சமயம்‌ காலங்‌ கடந்தது; சமரசத்தைப்‌ போதிப்பது; அன்பு நெறியை விளக்கு வது; உயிர்கள்‌ வழிபாட்டை அறிவுறுத்துவது; எவருங்‌ கொள்‌ ளுஞ்‌ சமயமாயிருப்பது. கொலையைப்‌ போதிக்குஞ்‌ சமயங்க ளெல்லாம்‌ வளம்‌ பெற்று வளர்கின்றன. கொல்லாமையைப்‌ போதிக்கும்‌ உங்கள்‌ சமயம்‌ என்ன நிலையை அடைந்திருக்‌ கிறது? மெய்‌ கண்ட சாத்திரத்தை வாசிப்போர்‌ எத்தனை பேர்‌? விபூதி ருத்திராட்சம்‌ தரித்தவருள்‌ எத்துணைப்‌ பேருக்கு அந்நூற்‌ பெயர்‌ தெரியும்‌? ஜீவகாருண்ணியமன்றோ உங்கள்‌ சமயக்‌ கொள்கை? அருட்குறிகளாகிய சிவ சின்னங்களைத்‌ தரித்துச்‌ சிவனடியார்‌ என்று நடித்துக்‌ கொலை செய்கின்றார்‌ பலர்‌; புலாலுண்கிறார்‌ பலர்‌. அந்தோ! கொடுமை!!! கொடுமை!!! ஆங்காங்கே சிவனடியார்‌ திருக்கூட்டங்களை ஏற்படுத்துங்கள்‌; பாடசாலை வைத்தியசாலை முதலிய அறச்சாலைகள்‌ அமை யுங்கள்‌; ஆங்கே ஞானசாத்திர போதனை செய்யுங்கள்‌; ஜீவ காருண்ணிய நெறியை ஓம்புங்கள்‌; சைவ சமயக்‌ கொள்கையை – அன்பு நெறியை – ஜீவ காருண்ணியத்தைப்‌ பரப்புங்கள்‌; அதற்கு வேண்டிய உதவி புரியுங்கள்‌. 

வாழ்க அந்தணர்‌ வானவ ரானினம்‌
வீழ்க தண்புனல்‌ வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல்‌ லாம்‌அர னாமமே
சூழ்க வையக முந்துயர்‌ தீர்கவே.           

திருச்சிற்றம்பலம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *