ஆறில் ஒரு பங்கு
சுப்பிரமணிய பாரதியார்


அத்தியாயம்: 2

மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி வந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்திற் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் நான் பற்றுடையவன் என்பதை அறிந்த ராவ் பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்துவிட்டார். சில மாதங்களில் அவர் தமது சாஸ்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைவாக்கத்துக்கு வருவதை முழுவதும் நிறுத்தி விட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளோ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிறார்களோ, அது மெய்தானா? “பெண்ணெனப்படுவகேண்மோ உள நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் சீவக சிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனாம்பாளைப் போன்ற ஸ்திரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே. இப்போது, அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால், அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!

‘அடா மூடா! எனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வளர்த்து வருகின்றாய். மீனா மற்றொருவனை மணஞ் செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு அவன் மனைவியை விடுவாளாயின் உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ என்று சில சமயங்களில் என்னுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.

மீண்டும், வேறொரு விதமான சிந்தை தோன்றும்: “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ் செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி அந்தத் தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? எது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”

அப்பால் ஒரு உள்ளம்… “அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெல்லத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம சேவை பெரிதா, ஸ்திரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”

பிறகு வேறொரு சிந்தனை: “எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய். என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸீகத் தலைவனாகக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த் ஜன்மத்தில் ஜீவியம் வெகு சுலபமாய் இருக்கும்.”

அப்பால்: “ஒரேயடியாக, இவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர் ஒன்றுமேயில்லாமல், தர்ம சேவையே தொழிலாக நின்று விடலாம்.”

பின் மற்றொரு சிந்தை: – “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரியதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கையுண்டா?”

அப்பால் பிறிதொரு சிந்தை: “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பு என்றதோர் நிலையும் உண்டா? வஞ்சனை கோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.’

இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி எனது அறிவைக் கலக்கின. ஆன்ம உறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர், ஒரு கணம் சாக்ஷி போல் நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பாராயின், மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏன் உண்டாகின்றன?

“மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி”

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அஹ்டைப் படித்துப் பார்த்த பொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஓம்.

தஞ்சாவூர் உடையாய்,

இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்தில் பார்க்கப் போவதில்லை.

‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்து விட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து விட்டிருக்கிறார். நீ ஒருவேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வர முடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா’வின் பணத்தின்மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். எனது உள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணைப் பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம், “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கேட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது.

அநேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின்மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது காணவுமில்லை, நினைவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும் கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும் கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினாள். நான் நடுங்கிப் போய், ‘மாதா என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோ மண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்போது தேவி எனக்கு அபயப்பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: “குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனை எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒரு பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!” மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.

காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்தில் இருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டுவிழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்கு திருப்தி செய்வித்த பிறகு அவள் உன்னை நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்.”

இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *