
ஆறில் ஒரு பங்கு
சுப்பிரமணிய பாரதியார்
அத்தியாயம்: 3
மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ‘வந்தே மாதரம்’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலங்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால், ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசாரங்கள் செய்ததுண்டு. இது பற்றிச் சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்திலும் பிரதிகூலமே அதிகமாக விளங்கலாயிற்று. இதையும் தவிர எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.
“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன, மூடன் ‘நான் செய்கின்றேன்’ என்று கருதுகின்றான்” என்ற பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாயா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.
எனவே பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால் எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய் விட்டன. பாதசாரியாகவே பல இடங்களில் சுற்றி விட்டு, பாதசாரியாகவே லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்கவேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகிக் கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்குச் சோறு, துணி கொடுக்கவேண்டுமமென்ற கருத்துடன் தான் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு ‘நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாத?’ என்று கேட்டார்.
ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு, ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல்,, பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலா விடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய் சிறிது காலம் அந்தக் கடமையைச் செய்துகொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன். கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. தேவலோகம் நரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது. பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி, நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் விவரித்துச் சொல்ல வேண்டும். புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை ஒரு சிறிது பாவம் உண்டாகக் கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம், எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க. ஓரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கனவே என் மனதில் நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின், நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினர் என்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்திலே மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னாட்டைப் போலவே வட நாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாகச் சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால் இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக் கொண்டிருபதால், ஹிந்து ஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசுமாடு பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்ஸத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிபொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலியப் பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமே!”
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாம் பள்ளர் பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா ஆட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.”
1200 வருஷங்களுக்கு முன்பு வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இம்ஸை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும் முக்கியமாக – திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் – ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் _ ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.
கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுகிறார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் இந்த பிரதேசங்களில் ‘நாம் சூத்திரர்’ (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வுபடுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க ஆசை உண்டாயிற்று.



