அடியார்க்கு நல்ல பெருமாள்
கி. வா.ஜகந்நாதன்

தாயுமானவர் கண்ட முறை

தாயுமானவர் இறைவனை மூன்று நிலைகளிலே கண்டு இன்புற்றவர். அண்டத்திற்கு அப்பாற்பட்ட நிலையிலும், அண்டத்தி லுள்ள எல்லாப் பொருளாக உள்ள நிலையிலும் தம்முள்ளே உறைகின்ற நிலையிலும் கண்டு அநுபவ இன்பம் துய்த்தவர்.

இறைவனை அவர் ஒரு வடிவத்தில் முதலில் வழிபட்டார். உலகத்துக்கு அப்பால் உள்ளவனை ஒரு பிம்பத்தில் அடையாளமாக நிறுவினார். அவன்பால் காதல் கொண்டு உள்ளம் நெக்கு நெக்கு உருகி வழிபட்டார். இது முதல் நிலை. வடிவத்தில் உள்ள இறைவனுக்கு வழிபாடு நடத்த ஒரு நாள் பூக் கொய்துவர நந்தவனம் சென்றார், குடலையை எடுத்துக்கொண்டு. தோட்டத்திலே வெள்ளைவெளேர் என்று நந்தியாவட்டை மலர்கள் மலர்ந்திருந்தன. இறைவனை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச அன்பு கொண்டு மலரைப் பறிக்கக் கையைக் கொண்டுபோன அவர் உள்ளத்திலே பக்குவம் முதிர, இரண்டாம் நிலை அப்போது வந்தது. இதுவரையிலும் இறைவனை அவர் ஒரு வடிவிலே கண்டு வழிபட்டவர். இப்போதோ தாம் பறிக்கப்போன மலரூடும் அவன் இருப்பதைக் கண்டார். உலகிலே பார்க்கின்ற பொருள்களிலெல்லாம் அவனைக் காணும் நிலை அது. அந் நிலையை அடைந்துவிட்ட தாயுமானவர், “ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி” என்று பரவசம் எய்தினார். ஆண்டவனை மலரூடு பார்த்தவுடனே அவனைக் கும்பிட எண்ணி இரண்டு கையையும் எடுக்கப் போனார். கும்பிடப்போன அவர் கைகள் தளர்ந்துவிட்டன. காரணம் என்ன?

உலகத்திற்கு அப்பாற்பட்ட பொருளாக இறைவனைக் கருதி அவனை ஒரு சிறு வடிவத்தில் ஆவாகனம் செய்து வழிபட்ட நிலையில் இருந்த அவருக்குப் பார்க்கின்ற பொருள்களில் எல்லாம் அவனைக் காணும் நிலை வந்தது; பறிக்கப் போன மலரூடே அவனைக் கண்டு கும்பிடப் போனார். அப்போது அவருக்கு மூன்றாவது நிலை வந்து விட்டது. “அப் பனிமலர் எடுக்கமனமும் நண்ணேன்” என்று, தூக்கிய கையைத் தளர விட்டுவிட்டார். அப்பனி மலரிடையே இருந்த இறைவனை அவர் தம் அகமலரிலும் கண்டார். அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனைக் காணும் மூன்றாவது நிலைக்கு உயர்ந்து விட்டார். பனி மலரில் இருக்கும் இறைவனை வழிபடக் கையைக் குவிக்கும்போது அந்தக் கும்பிடு குவித்த கைகளுக்குப் பின்னே அகமலரில் இருக்கும் இறைவனையும் கும்பிட்டதாக ஆகாதே! முன்னும் பின்னும் உள்ள ஈசனை ஒரே சமயத்தில் கும்பிட்டால் அது முழுக் கும்பிடு ஆகும். அகமலரில் உள்ள ஈசனைக் கும்பிடாமல், புற மலரில் உள்ள ஈசனை மாத்திரம் கும்பிட்டால் அரைக்கும்பிடுதானே ஆகும்? இதனை எண்ணி நாணமுற்று, “எப்படி அப்பா உன்னைக் கும்பிடுவேன்?” என ஏங்கிச் செயலற்று அப்படியே நின்று விட்டார்.

பண்ணேன் உனக்கான பூசைஒரு வடிவிலே
பாவித்து, இறைஞ்ச ஆங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி; அப்
பனிமலர் எடுக்க மனமும்
நண்ணேன்; அலாமல்இரு கைதான் குவிக்கஎனில்
நாணும்என் உளம்நிற்றிநீ;
நான்கும்பி டும்போது அரைக்கும்பிடு ஆதலால்
நான்பூசை செய்தல் முறையோ?”

என்று பாடுகிறார்.

அடையாளம்

அவரைப்போல நாமும் இறைவனை உள்ளும் புறமும் கண்டு இன்ப அநுபவப் பேற்றை அடைய வேண்டுமென்றால் அவனிடத்தில் முறுகிய பக்தி வரவேண்டும். பக்தி ஏற்படுவதற்கு முதல் நிலை அவன் வடிவைப் பார்த்து, அவன் மேனியைத் தொட்டு அருச்சித்து வழிபட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அவனை நினைவுபடுத்தும் சின்னமாக, அவனுக்கு உருவங்களை அமைத்து வைத்தனர் நம் பெரியோர்.

அவனை நமக்கு நினைப்பூட்டும் அடையாளங்கள் பல. கோயில் ஓர் அடையாளம். திருநீறு ஓர் அடையாளம். அவை எல்லாம் இறைவனை நினைவுபடுத்தும் சின்னங்கள். அவனது அருள் தத்துவங்களை நினைப்பூட்டுவன புராணங்கள். அவற்றின் உண்மைத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், அவை யாவும் பொய், சரடு எனப் பேசுகின்ற அவல நிலை நம்மிடையே பரவுகின்றது. அடையாளமாகக் காண்கின்ற நிலையே, அநுபவமாகக் காண்கின்ற நிலைக்கு வாசல். அநுபவமாகக் கண்டு இன்பப்பேற்றை எல்லா உயிர்களும் துய்க்க வேண்டு மென்ற பெருங் கருணையோடுதான் கோயில்கள் என்றும், மூர்த்திகள் என்றும் ஏற்பட்டன. ஒரு வடிவிலே இறைவனைப் பாவித்து, வழிபட்டு, மலரெடுத்து அருச்சித்துப் பக்தி செய்து வந்தால், பின்னர் அவனை அருச்சிப்பதற்காக எடுக்கும் மலரிலும் அவனைக் காணலாம்; பார்க்கின்ற பொருள்களில் எல்லாம் அவனைக் காண லாம். அது மாத்திரம் அல்ல. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற அப்பரம்பொருளை நமது உள்ளமாகிய அகமலரிலும் கண்டு இன்புறலாம். தாயுமானவர் காட்டிய வழி இது.

பல்வகை நெறி

இவ்வுலகத்தில் யாவரும் உண்டு பசி தீர்கிறார்கள். ஆயினும் ஒருவன் அரிசி சாப்பிடுகிறான். வேறு ஒருவன் கோதுமை சாப்பிடுகிறான். மற்றொருவன் கம்பு சாப்பிடுகிறான். இப்படி உணவு வகையிலும் ஆசார வகைகளிலும் மாறுபாடு இருப்பது போலவே இறைவனுடைய அருளைப் பெறுவதற்கான மார்க்கங்களிலும் பலவகை உண்டு. ஒரே மாதிரியாக எல்லாரும் பின்பற்ற வேண்டுமென்பது இல்லாமல், அவரவர்களுக்கு ஏற்ற வகையில் முயற்சி செய்யப் பலபல வழிகள் நம்முடைய சமயத்தில் இருக்கின்றன. அவரவர்களுடைய மனப்பக்குவத்திற்கு ஏற்பக் கோயில் சென்று இறைவனைக் கும்பிடுவாரும் உண்டு; தம் வீட்டில் அவனது வடிவத்திற்கு மலரிட்டு அருச்சித்து வழிபடுவாரும் உண்டு; யோக மார்க்கத்திலே அவன் தியானத்தில் ஈடுபட்டிருப்பாரும் உண்டு; வீடு வாசலைத் துறந்து, மனைவி மக்களைத் துறந்து, சந்நியாச ஆசிரமத்தைப் பின்பற்றித் தவநெறி யில் நிற்பாரும் உண்டு. சந்நியாசம் பெறுவது ஒன்றே இறைவனை அடைய மார்க்கம் என்றிருக்குமானால் இல்லறத்தானுக்கு வழியே இல்லாமல் போகும் அல்லவா? ஆகவே இல்லறத்தானுக்கு அறம் செய்து அடியார்க்கு அமுதிட்டுத் தொண்டு செய்வதன் மூலம் இறைவனுடைய அருளைப் பெறலாம் எனவும் வகுத்திருக்கிறார்கள்.

எந்த வேலையைச் செய்தாலும் எல்லாத் தொழிலாளர் களுக்கும் கடைசியில் கூலியாகக் கிடைப்பது பணம். அதுபோல் எந்த எந்த நெறியில் சென்றாலும் கடைசியில் பக்தர்களுக்குக் கிடைப்பது இறைவனுடைய அருள்தான். அந்த அருளைப் பெறுவதற்கான வழிகள் பலவாக இருப்பதனால் அவை ஒன்றோ டொன்று முரண்பட்டது ஆகுமா? அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த பண்டங்களை உண்டாலும், உண்போர்களுக்கு முடிவில் கிடைக்கும் பயன் என்ன? பசி அடங்குகிறது. ஓர் ஊருக்குப் போகப் பல வழிகள் இருக்கின்றன என்றாலும் போய்ச் சேருகிற இடம் ஒன்றாக இருப்பது போல, இறைவன் அருளைப் பெறுவதற்காக மார்க்கங்கள் பல இருப்பினும் முடிவில் அவை யாவும் போய்ச் சேருகின்ற இடம், முடிவாகப் பெறுகின்ற பயன், ஒன்று தான். பல வழிகள் ஓர் ஊருக்குப் போக இருப்பது அவ்வூரின் சிறப்பை அதிகப்படுத்துமே அன்றிக் குறைக்குமா? நமது சமய நெறியில் பல வழிகள் இருப்பது இதற்குச் சிறப்புத்தான். அருள் நெறியிலே சாதனம் செய்யப் புகுகின்றவர்கள் படிப்படியாக மூன்று நிலையிலும் நின்று இறைவனை வழிபட்டு அநுபவப் பேற்றை எய்துகிறார்கள்.

உருவமும் நாமமும்

ரோடிலே ஒருவன் கார் ஒட்டிப் போகிறான். நாற்சந்தியில் இருக்கிற போலீஸ்காரன் கையை நீட்டிக் காட்டுகிறான். அவன் காட்டும் குறிப்பை உணர்ந்து கார் செலுத்திப் போகிறவர்கள் பத்திரமாகப் போகிறார்கள். “வேறு ஒரு வண்டி போகிறது; சற்று நில்” என உணர்த்தக் குறிப்பாகக் கையைக் காட்டும் போது அதை உணராமல் காரை ஓட்டிக் கொண்டு ஒருவன் போனால் அந்தக் காரோடு மோதி உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ள நேரும். சமய நெறியிலே செல்பவர்களுக்குக் குறிப்பாக வழியை உணர்த்தும் அடையாளங்களாகக் கோயில்களும், விக்கிரகங்களும், நாமங்களும் அமைகின்றன. அவற்றை உணர்ந்து தெளிந்து சென்றால் நம் முயற்சியின் முற்றிய பயனாக அருளைப் பெற முடியும்.

நம்பிக்கை

உணவு சாப்பிட்டால் பசி தீரும் என்றால் யாராவது நம்ப மாட்டேன் என்று சொல்வார்களா? பிறந்து பிறந்து துன்புற்றுக் கடைசியில் இறக்கின்ற ஆருயிர்களின் துன்பம் இறைவனை நம்பி வழிபட்டு அவன் அருள் கிடைத்த மாத்திரத்தில் ஒழியும் என்று அநுபவம் பெற்றவர்கள் சொன்னால் அதை நம்ப மாட்டோம் என்று சொல்கிறோம். “இறைவனை நம்புகிறோம்” எனச் சொல்பவர்களும்கூட எப்படி நம்புகிறார்கள்? “கடன் தருகிறேன்” என்று சொல்பவர்களை நம்புவது போல, “வேலை வாங்கித் தருகிறேன்” என்று சொல்பவர்களை நம்புவது போல நம்புகிறார்களே தவிர, ஒரு குழந்தை தன் தாயை நம்புவது போல நம்புவதில்லை. அடித்தாலும் “அம்மா” என்று அழுதுகொண்டு தன் தாயினிடம் ஓடுகிறது குழந்தை. அப்பா தின்பண்டம் வாங்கி வந்தாலும் அதை வாங்கிக்கொண்டு, “அம்மா” என்றுதான் ஓடுகிறது. அடிக்கும்போது, ”சீ! நீ என் அம்மா அல்ல” எனச் சொல்லிவிட்டு எந்தக் குழந்தையாவது வீட்டை விட்டு ஓடுகிறதா? அப்படி ஓடினால் அந்தத் தாய் அக்குழந்தையைத் தன்னுடையது என்பாளா? குழந்தை தன் தாயை நம்புவது போலப் பக்தன் இறைவனை நம்பினால் அவன் அருள் செய்வான்.

திரௌபதியின் கதை

கொடுங்கோலன் துரியோதனன் சபையில் வீற்றிருந்தான். கௌரவர்கள் கொம்மாளமிட்டுக் கொண்டு அம்மண்டபத்தில் கூடியிருந்தார்கள். ஞானிகளும், மோனிகளும் அமர்ந்திருந்தார்கள்.

பாண்டவர்களும் இருந்தார்கள். துரோணர், கிருபாசாரியார் முதலியவர்கள் இருந்தார்கள். பாஞ்சாலியின் துகிலைத் துச்சாதனன் உரிந்தான். தன் கணவன் மார்கள் தன்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று அவர்களைப் பார்த்து, ”ஐயகோ!” என்று அலறினாள். அவர்களால் காப்பாற்ற முடிந்ததா? வாயடைத்துத் தலை குனிந்திருந்தார்கள். நேர்மை தவறாத ஞானிகள் ஓர் அபலைப் பெண்ணுக்கு அநீதி இழைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா என்ற நம்பிக்கையில் அவர்கள் பக்கம் பார்த்து அலறினாள் திரெளபதி. அவர்களும் தலை குனிந்து விட்டார்கள். பெண்ணுக்கு அநீதி இழைப்பதைப் பார்த்துக் கொண்டு ஆண்கள் வாளா இருப்பார்களா என்று எண்ணி வீரமிக்க ஆண்களை எல்லாம் பார்த்தாள். அவர்கள் கோழைகளைப் போலத் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியிலே தன் கையே தனக்கு உதவி என்று கைகளால் ஆடையைப் பற்றிக்கொண்டாள். மேலும் துச்சாதனன் ஆடையை உரிய முற்பட்டான். அப்போதுதான் அவள்! “உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை கண்ணா! என்னைக் காப்பாற்ற மாட்டாயா?” என்று அலறிய வண்ணம் தன் இருகைகளையும் தூக்கித் தலைமேல் வைத்துக் கொண்டு, “கோவிந்தா! கோவிந்தா!” என்று கூப்பிட ஆரம்பித்தாள். தன்னைச் சேர்ந்தவர்களும் பிறரும் காப்பாற்ற மாட்டார்களா என முதலில் எண்ணினாள். அவர்களால் பயனில்லை என்று தெரிந்தவுடன் ஆண்டவனே சரணம் என்ற முழு நம்பிக்கையுடன், தன் செயல் ஒழிந்து அலறினாள். அவளைக் கண்ணன் காப்பாற்றினான். அவளுக்கு ஏற்பட்ட முழு நம்பிக்கையைப் போல நமக்கும் இறைவனிடம் நம்பிக்கை ஏற்பட்டால் அவன் திருவருளைப் பெறலாம். அவள் தன் கையை நம்பி அதனால் ஆடையைப் பற்றிக் கொள்ளும் போதுகூட அவன் அருள் செய்யவில்லை. கையையும் விட்டுத் தலைமேல் குவித்தபோது உதவினான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *