சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்

ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு.சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய உலகில் ஒரு சிறப்பான ஸ்தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன.

இவரது ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவலே தமிழ் மொழியிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன்றில் (செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான இவர், அவரது படைப்புக்களைத் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளிக் கொணர உதவியதோடு, புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் மிகவும் போற்றத்தக்க முறையில் நூலாக எழுதி வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் இலக்கியப் பரம்பரையில் பூத்த மலராக விளங்கிய இவர், தமிழ்நாட்டில் முற்போக்கு இலக்கியப் படைப்புக்களுக்கும் முன்னோடியாக விளங்கியுள்ளார். இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, இவருக்கு சோவியத் நாடு வழங்கும் நேரு நினைவுப் பரிசும் இருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசைப் பெற்ற வெற்றியாளர் என்ற முறையில் இவர் சோவியத் நாட்டுக்கும் சென்று வந்துள்ளார்.

‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகள்

யாவும் சிந்தனையைத் தூண்டி மனித வாழ்வை வளப்படுத்தும் வேட்கையைப் பிரதிபலிக்கும் கதைகளாகும். கதை எழுதுவ தென்பது ஆசிரியருக்குக் கைவந்த சரக்கு. ரகுநாதன் படைத்து விடும் பாத்திரங்கள் நம் உள்ளத்தை விட்டு நீங்குவதில்லை. உதாரணமாக, இந்தக் கதைத் தொகுதியில் வரும் டேவிட்ஸன் தெரு ரிக்ஷாக்காரன் நம்முன் எவ்வளவு மகத்தான பேருருவமாகக் காட்சியளிக்கிறான்! ‘பிச்சையா எடுக்கே’ என்ற அவனது குரல் நம் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் அல்லவா? அதேபோல் காதல் பயின்ற மீனாட்சியையும், அவளது பரணி நட்சத்திரக் குழந்தையையும் மறந்து விடுவது என்பதும் நமக்குச் சுலபமான காரியம் அல்ல.

மனிதாபிமான நோக்கமும் வளமிக்க சொல்லாற்றலும் கருத்தாழமும் மிக்க இந்தக் கதைத் தொகுதியை எங்கள் வெளியீடாசு மீண்டும் வெளியிடுவதில் தாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம்!

செ. செல்லப்பன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *