சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்

கேள்வியும் பதிலும்

ஜனப் பிரவாகம் அலைமோதிச் சிதறும் சங்கம நாற்சந்தி முகமான நகரத்தின் மூலையிலே அவன் கிடந்தான்……

நாகரிக உலகின் பிரஜைகள் வெறிகொண்ட வியாபாரச் சூதாட்டம் மாதிரி காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு மேலும் கீழும் இயங்கிக் கொண்டிருந்தார்கள்; அவசர யுகத்தின் வேகத்தில் அசுர வேகத்தைப் பேய் செல்லும் கார்களும் வாகனங்களும் அளந்து காட்டுவது போலிருந்தன.

அவனுக்கு எந்தவித அவசரமும் இல்லை; அவனைப் பொறுத்த வரையில் காலமே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலிருந்தது. அவன் அசைவற்றுக் கிடந்தான்— அரையில் அரை முழத் துணியற்று, நிர்வாணமாக, பிறந்த கோலமாகச் கிடந்தான்.

அந்த நாற்சந்தி வீதியிலே எத்தனை எத்தனையோ கோலாகலங்கள்…….

காம தேவனின் திருப்பவனிக்குப் பதாகைகள் கட்டிய மாதிரி வானவில்லின் வர்ண விஸ்தாரம் நிறைந்த பட்டும் துணியும் ஜவுளிக் கடைகளின் முகப்பில் தொங்கிக் கொண்டிருந்தன: “ஸீஸன் பட்டாடை புனைந்த சித்திரப் பாவைகள் எனக் கண்ணாடி அரங்குகளிலே விளம்பரப் பொம்மைகள் நின்றன. தலையும் கரமும் அற்ற முண்ட உருவங்களான விளம்பர “டார்ஸோ’க்கள் செதுக்கிவிட்ட பம்பரக் காய் போன்ற மார்புக் குவட்டில் ஸாட்டின் டைட் பிராஸ்’ பாடிகளைத் தரித்து நின்றன; பிளாஸ்டிக் ரிப்பன்களும், பாரசூட் சில்க்குகளும் காற்றில் ஊசலாடின.

பட்டும் துணியும் கொட்டிக் கிடக்கும் அந்தப் பட்டணத்து வீதியிலே அவன் கூச்சம் மறைக்க ஒரு முழக் கந்தையற்று, குளிர் தடுக்க ஒரு முழக் கிழிசலற்றுக் கூனிக் குறுகிக் கிடந்தான்……

வீதி எங்கணும் பல புத்தகக் கடைகள்; பத்திரிகை ஸ்டால்கள். அந்த ஸ்டால்களிலே சூரிய ஸ்நானத்தின் மகிமையை விளக்கும் நிர்வாண மங்கையரின் சித்திரங்கள் தொங்கின; பாலித் தீவின் பருவக் குமரியரின் மேனியழகை மூவர்ணச் சித்திரமாக்கிக் காட்டும் திரையுலக சஞ்சிகைகள் தொங்கின; பாரீஸ் நகரத்தின் அர்த்தசாமக் கேளிக்கை களை வருணிக்கும் பத்திரிகைகள் இருந்தன; மானிட மர்மங் களையும் காதல் ரகசியங்களையும், அதிசயக் கொலைகளையும் விவரித்துக் கூறும் அமெரிக்க சஞ்சிகைகளும் அலங்கரித்தன.

வீதியில் பற்பல மனிதர்கள் வந்தார்கள்; சென்றார்கள். ஆவியம்பூந் துகில் அணிந்த நாகரிக நாரீமணிகள் வந்தார்கள்; பீரங்கிகளும் துப்பாக்கிகளும் தீட்டப் பெற்ற அமெரிக்க ‘பீச் ஷர்ட்’ அணிந்த மேனா மினுக்கி வாலிபர்கள் திரிந்தார்கள்; கிளாஸ்கோ மல்லும் ஜரிகை உருமா லும் தரித்த செல்வந்தர்கள் சென்றார்கள் ; அத்தாட்சி பெற்ற கதராடை புனைந்த சுத்த சுதேசிப் பிரமுகர்களும் வந்தார்கள்.

யாரும் அவன் கிடக்கும் நிலையைக் கண்டு பரிதாபப் படவில்லை. சிலர் முகத்தைக் கோணினார்கள் ;

சிலர் காறி உமிழ்ந்தார்கள்; சிலர் அவன் நிலையைக் கண்டு வாய் விட்டுச் சிரிக்கவும் செய்தார்கள். அவனது நிலையைக் கண்டு அடுக்கு மாளிகைகளிலே தொங்கும் சாளரத் திரைகள் சிரித்தன; ஜவுளிக் கடைகளில் தொங்கும் ஜரிகைத் துகில்கள் சிரித்தன; சூரிய ஸ்நான மங்கையர் சித்திரங்கள் சிரித்தன; பக்கத்துச் சர்க்கார் கட்டிடத்தில் பறந்து கொண்டிருந்த கொடியும் சேர்ந்து சிரித்தது..

அவன் கண்களில் எதுவும் படவில்லை; காதில் எதுவும் கேட்கவில்லை. கடைசியில் ஒரே ஒருவனின் திருக் கண்களின் முழுக் கவனமும் அவன்பால் திரும்பியது.

“யாரடா நீ ? இதென்ன ரோடா, பள்ளியறையா? எழுந்திரு, ஊமைப் பாசாங்கா பண்றே?”

அவனது ஒடுங்கிய வயிற்றில் எட்டி உதைத்து எழுப்பிக் கொண்டே சத்தமிட்டான், சட்டத்தின் பாது காவலனான ஒரு போலீஸ்காரன்.

“எம்பா, கையெழுத்துப் போடத் தெரியுமா?”

போலீஸ் ரைட்டர் அவனை விசாரித்துக் குற்றப் பதிவு செய்து முடித்த பின்னர், அவனை நோக்கிக் கேட்டார். அவன் தெரியும் என்ற பாவனையில் தலையை அசைத்தான். நடு ரோட்டில் நிர்வாணமாகக் கிடந்து, பிரஜைகளுக்குத் தொல்லை கொடுத்ததாக, அவன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. கைகள் நடுநடுங்க அவன் கையெழுத்திடுவதைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டு நின்றான் நம்பர் முன்னூத்தி மூன்று. அவன் நின்ற ஆபாசக் கோலத்தைக் காணச் சசிக்காமல், முன்னூத்தி மூன்று தன் தலையில் பனிக்காகக் கட்டியிருந்த சிட்டுத் துண்டை அவிழ்த்து அவனைக் கட்டிக் கொள்ளச் செய்தான்.

“என்ன, த்ரிநாட்திரீ! உமக்கு இவன் புண்ணியத்திலே ஒரு துண்டுக்குக் கெட்ட காலம் புடிச்சுதாக்கும்?” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, பதிவுப் புத்தகத்தை மூடி வைத்தார் ரைட்டர்.

“என்ன செய்றது? பார்க்கச் சகிக்கலே” என்று அசட்டுச் சிரிப்போடு அங்கலாய்த்துக் கொண்டான் முன்னூத்தி மூன்று.

“சரி. இவனை லாக்கப்பிலே தள்ளுங்க.காலையிலே கோர்ட்டில் ஆசர்ப் படுத்தனும்” என்று உத்தர விட்டார் ரைட்டர்.

முன்னூத்தி மூன்று அவனை நோக்கிக் கூப்பிட்டார்.

“இன்னம் ஏன் நிக்கிறே? வா உள்ளே.”

அவன் ஒன்றுமே பேசாமல் முன்னூத்தி மூன்றைப் பின் தொடர்ந்தான். முன்னூத்தி மூன்று அவனை லாக்கப் அறைக் குள் விட்டுப் பூட்டி விட்டுத் திரும்பினான்; திரும்பியவன் ஏதோ சிந்தித்தவன்போல் மீண்டும் லாக்கப் பக்கம் திரும்பி மெதுவாகக் கேட்டான்:

“ஏம்பா? பசிக்குதா?”

அவன் தலையை அசைத்துக் காட்டினான்.

“இரு, வாரேன்” என்று கூறிவிட்டு, முன்னூத்தி மூன்று ஸ்டேஷனுக்கு எதிரேயிருந்த நாயர் டீ ஹோட்டலை நோக்கிச் சென்றான்.

இருள் மண்டிக் கிடக்கும் அந்த லாக்கப் அறையை அவன் உற்று நோக்கினான். கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஒரே இருள்தான் சுப்பிக் கவிந்து கிடந்தது; கீலெண் ணெயும் மூத்திரமும் கலந்த நெடி நாற்றம்தான் மூக்கைத் துளைத்தது; கொசுக் கூட்டத்தின் இரைச்சலும் காதைக் குடைந்தது.

கன்னத்தில் சுரீரென்று கடித்த கொசுவை அடிக்க முயன்று அவன் தன்னைத் தானே செவிட்டில் பளீரென அறைந்து கொண்டான். அந்த அடியின் சூட்டால், அவனுக்குத் தன் நினைவே திரும்புவது போலிருந்தது. நிற்கச் சக்தியற்றுத் தளர்ந்து போயிருந்த அவன் லாக் கப்பின் அளிக் கதவைப் பிடித்தவாறே கீழே சரிந்து படுத்தான்.

போலீஸ் ஸ்டேஷன் சேகண்டி மணி கணீரென்று ஒரு முறை ஒலித்து ஓய்ந்தது. அலை பரவிச் சிதறும் அந்த ஓசையின் ரீங்காரம் அவனது மூளையுள் புகுந்து அதைச் சிலுப்பி உணர்வூட்டிவிட்டது. அவன் மனத்திலே தோன்றிய சிந்தனையால் வாடிய உதட்டில் புன்னகை வதங்கிச் சாம்பியது.

தூக்கம் கலைந்து உசும்பியெழுந்த சிந்தனை திக்குத் திசையற்றுத் திரியத் தொடங்கியது.

சில மணி நேரத்துக்கு முன் நான் என்ன நிலையில் கிடந் தேன்? இந்த உடம்பில் விரற்கடை அகலத் துணியில்லை; நான் யார், ஏன் இந்தக் கதிக்கு வந்தேன் என்று கேட்பதற் குக்கூட நாதியில்லை; குடல் விழுங்கும் பசியால் நான் துடித்த போது, எனக்காகப் பரிதாபப்பட ஒரு ஆளில்லை. இப்போதோ…? இவ்வளவு நேரத்துக்குள் என்ன மாறுதல்! இடையிலே நாலு முழத் துண்டு; என் பெயரைக் கேட்டுப் பதிவு செய்ய ஒரு போலீஸ் உத்தியோகஸ்தன்; என் நிலையைக் கண்டு அனுதாபப்பட ஒரு போலீஸ்காரன். இந்த மாறுதல்; எப்படி நேர்ந்தது? ஏன் நேர்ந்தது?…

ஏன்? ஏன்?…

ஏனா? இதெல்லாம் சர்க்காரின் சட்டத்தை நிலை நிறுத் துவதற்காகத்தானே. நேற்று நான் ஒரு வாய்ச் சோறின்றி நாய் மாதிரி தெருத் தெருவாய் அலைந்தபோது, இந்த சர்க்காரோ, இதன் சேவகர்களோ என்னை ஏனென்று கேட்டார்களா? இன்று நான் கட்டியிருந்த கௌபீனத்தையும் தொலைத்துவிட்டு, மானம் மறைக்கக் கையளவுத் துணி யின்றி, நடுத்தெருவில் வெம்பி வெதும்பிக் கிடந்தபோது மட்டும்,அந்தப் போலீஸ்காரன் என்னை இழுத்து மிதித்துக் கொண்டு வந்துவிட்டானே. நான் நிர்வாணமாகக் கிடந்த தாகக் குற்றம் சாட்டி, அந்தக் குற்றத்தை நிரூபித்துச் சட்டத்தை நிலைநிறுத்தத்தானா இந்தத் தடபுடல்கள் எல்லாம்? எனக்கு இப்போது உடுக்கத் துணியும் உண்ண உணவும் படுக்க இடமும் கொடுக்க முன் வருவதெல்லாம் சட்டத்தை நிலை நாட்டுவதற்காகத்தானா? அட, தெய்வமே! எனக்கு உணவும் உடையும் கிடைக்க வழியிருந்தால், இந்தச் சட்டம் வழி செய்திருந்தால், நான் ஏன் இப்படிக் குற்றவாளி யாகிறேன்?

தெய்வமே! இதென்ன உலகம்? இந்த உலகத்தின் சட்ட திட்டங்கள் எனக்குப் புரியவில்லையே! எனக்குக் கட்டத் துணியளிக்க முன்வராத இந்தச் சட்டம், நான் நிர்ப்பந்த வசமாய் நிர்வாணமாய் இருக்க நேர்ந்ததை மட்டும் குற்றம் சாட்ட முன் வருகிறதே! பட்டினி கிடந்து செத்துக்கொண்டி ருப்பதைக் கண் கூசாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சட்டம், பட்டினிக்குப் பயந்து சாகத் துணிபவனை மட்டும் குற்றவாளியாக்குகிறதே! இது மனிதர்கள் உண்டாக்கிய சட்டம்தானா? மனித உள்ளம் படைத்தவர்கள் உண்டாக்கிய சட்டம்தானா?…

உலகில் எல்லோருமா மனித உள்ளம் படைத்த வர்களாய் இருக்கிறார்கள்? இன்று என்னைக் கைது செய்து சட்டத்தை நிலைநாட்ட வந்த போலீஸ்காரன் என்னை ஈவிரக்கமற்று எட்டி மிதித்தான்; இங்கேயோ இன்னொரு போலீஸ்காரன் என்னைப் பார்த்துப் பசிக்கிறதா என்று அனுதாபத்தோடு விசாரிக்கிறான். துப்பாக்கிகளோடும் குண்டுகளோடும் பழகுபவனிடம்கூட மனித உள்ளம் இருக்கிறது. ஆனால் எல்லோருமா அப்படி இருக்கிறார்கள்? தெய்வ பக்தி யையும் திருநீற்று மகிமையையும் பற்றிப் பேசும் எத்தனை பெரிய மனிதர்கள் நெஞ்சில் ஈரமே அற்ற ஜன்மங்களாக இருக்கிறார்கள்! இதெல்லாம் ஏன் இப்படி? அவர்களெல்லாம் வாழ்வானேன்? நான் மட்டும் நாசம் அடைவானேன்?

ஏன்? ஏன்? ஏன்?…

அவனது சிந்தனை அதிக நேரம் செயலாற்றவில்லை. களைத்துப் போன உடம்பும்,ஒட்டி உலர்ந்த கும்பியும் அவனைச் சீக்கிரமே செயலற்றுச் சிந்தனையற்றுப் போகும்படி செய்தன; புத்தி மயங்கிவரும் சோர்வோடு அவன் விழுந்து கிடந்தான்.

வெளியே சென்றிருந்த முன்னூத்தி மூன்று கையில் ஒரு பொட்டலத்துடன் திரும்பி வந்தான். அவன் வரும்போது வாசலில் புதிதாக நின்றுகொண்டிருந்த ‘ஸெண்ட்ரி டூட்டி போலீஸ்காரன்’ முன்னூத்தி மூன்றைப் பார்த்து ஆவலோடு கேட்டான்:

“என்னண்ணே முன்னூத்தி மூணு. லாக்கப்பிலே புதுசா ஒருத்தன் கிடக்கானே; என்ன விசயம்?”

அதுவா? நடு ரோட்டிலே அம்மணமாகக் கிடந் தான்னு டூ நாட் போர் சார்ஜ் பண்ணிக்கொண்டாந் திருக்காரு.

“ஓஹோ, ஜிஞ்சர் பெர்ரியா?”

‘ஜிஞ்சராவது பீராவது? அந்தக் கண்றாவியை ஏன் கேக் கறே? இரு, வந்து சொல்றேன்’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் முன்னூத்தி மூன்று.

முன்னூத்தி மூன்று சென்றதும் அந்த ஸெண்ட்ரி துப்பாக்கியைத் தோளில் சாத்திப் பிடித்தவாறே மேலும் கீழும் இருமுறை பாரா நடந்தான்; பிறகு துப்பாக்கியை ஒருபுறமாக வைத்துவிட்டு, முன்னூத்தி மூன்றின் வருகையை எதிர் நோக்கித் தலையை உள்ளே நீட்டிப் பார்த்தான்.

“பனி என்ன இந்தப் போடு போடுது. ஏன் தம்பி, உங் கிட்ட பீடி இருக்குதா?” என்று கேட்டுக் கொண்டே முன்னூத்தி மூன்று வெளியே வந்தான்.

“இருக்கண்ணே”

இருவரும் ஸ்டேஷன் முகப்பிலிருந்த கைப்பிடிச் சுவரின் மீது அமர்ந்துகொண்டனர். சிறிது நேரத்தில் இருவரது பீடிகளும் விட்டுவிட்டுப் பிரகாசிக்கும் நெருப்புத் துண்டங்களாக ஒளி செய்யத் தொடங்கின.

“சரியண்ணே, அவன் விசயத்தைச் சொல்லு.”

முன்னூத்தி மூன்று லேசாகப் பெருமூச்சு விட்டான்.

“கண்றாவி! அவனுக்கு ஊரு சேலத்துப் பக்கமாம். தறி தெசவுத் தொழிலாளியாம். இப்போதான் தறிகாரங்க புழைப்பிலே மண் விழுந்துட்டுதே. நூலு மில்லே; புழைப்பு மில்லே.”

“ஊஹும்! அப்புறம்” என்று ஆவலோடு பீடியை இழுத் துக்கொண்டே கேட்டான் ஸெண்ட்ரி.

முன்னூத்தி மூன்று புகையை ரசித்து வெளியிட்டவாறே மேலே தொடர்ந்தான்:

“புழைப்பில்லேன்னா, பின்னே பார்த்துக்கயேன். பெண்டாட்டி புள்ளை எல்லாம் பட்டினி. எள்ளுப் புண்ணாக்கையும் புளியங்கொட்டையையும் தின்னு எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? புள்ளெ மண்டையைப் போட்டுடுச்சி, பஞ்சம் புழைக் கலாமிண்ணு பெண்டாட்டியும் இவனுமா புறப்பட்டுவந்திருக் காங்க.

“பெண்டாட்டி கதி என்ன ஆச்சி?”

“அவ கதி என்ன? அதுவும் இப்படித்தான். வாரவழியிலே வாந்திபேதி கண்டு அவளும் போயிட்டா. தூக்கிப் புதைக்கிறதுக்குக்கூட நாதியில்லாமெ இவன் அவளை அப்படியே போட் டுட்டு வந்திட்டானாம். பெண்டாட்டி புள்ளெ ரெண்டும் போனவுடனேயே, இவனுக்கும் எங்கேயாவது ஆத்திலே கிணத்திலே விழுந்து சாகலாமான்னுதான் இருந்துதாம். இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் உசுரு கருப்பட்டிதானே. சாக மனசு வரல்லெ….”

“அட போண்ணே! இப்படி லோல்பட்டுக்கிட்டுச் சீரழிய றதைவிட, ஒத்தை மனசா, உசிரை விட்டுட்டுப் போகலா மண்ணே!”

“தம்பி, நீ லேசாச் சொல்லிட்டே. பாரு. நான்தான் போன சண்டையிலே பட்டாளத்திலே இருந்தேனே, அப்பப் பாக்கணும், மனுசன் சாகிறதுக்கு எவ்வளவு பயப்படுவான் கிறதை. நான் என் கண்ணாலே பாத்திருக்கேன், தம்பி. எல்லாம் நாமும் அந்த நிலையிலே இருந்து பார்த்தாத்தான் தெரியும்.”

“ஆண்டவன் புண்ணியத்திலே நமக்கு அப்படிக் கதி வராமே இருக்கணும், சரிண்ணே, கதையைச் சொல்லு.” என்று ஆத்திரப்பட்டான் ஸெண்ட்ரி.

“ஏம்ப்பா?நான் சொல்றது உனக்குக் கதையாவா இருக்கு?…ம்” என்று முனகிவிட்டு, முன்னூத்தி மூன்று மேலே சொல்லத் தொடங்கினான்; “புழைப்புத் தேடி இங்கே வந்தானா? வந்தவன்பாடு இப்படி ஆயிடிச்சி. பசியும் பட்டினி யுமாகக் கிடந்து தவிச்சிருக்கான்; கடைசியிலே, கட்டிக்கிறதுக்கு அரை முழத் துண்டுகூட இல்லாமல் இந்த அலங்கோலத்திலே கிடந்திருக்கான்…”

“பாவமாத்தான் இருக்கு” என்று சூள்கொட்டி அனுதாயப்பட்டுக் கொண்டான் ஸெண்ட்ரி.

“ஆமா தம்பி,உலகம் அப்படிப் போச்சு! உழைக்கிறவன் வாயிலேதான் மண்ணு. உழுகிறவன் வீட்டிலேதான் உப்புக் கல்லுக்கே திண்டாட்டம்!” என்று சலித்துக்கொண்டான் முன்னூத்தி மூன்று.

“நமக்கு எதுக்கண்ணே, இந்த வம்பு தும்பெல்லாம்? நாளைக்கு நம்மையும் தொப்பியைக் கழத்தி வச்சிட்டு நடை இறங்கச் சொல்லிட்டா, நம்ம கதி எப்படி எப்படியோ?” என்று நிர் விசாரமாகக் கூறிக் கொண்டே ஸ்டேஷனுக்குள் தாங்கும் கடிகாரத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“பாத்தியாண்ணே, பேச்சுவாக்கிலே உக்காந்திட்டேன். மணி பத்தாகுது. நான் மணி அடிக்கணும்” என்று கூறி விட்டு. ஸெண்ட்ரி வராந்தாவின் மூலையை நோக்கிச் சென்றான்.

சேகண்டி மணி கணீர் கணீர் என்று பத்துமுறை ஒலித்து அடங்கியது. ஆனால், அந்த மணியோசை லாக்கப்புக்குள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் காதில் உறைக்கவே இல்லை.

பெஞ்ச் கோர்ட்டுக்கு அருகிலுள்ள மணிக்கூண்டு மணி பத்து காட்டியது.

கோர்ட்டு வராந்தாவில் ஒரே ஜனக்கூட்டம். கருப்புக் கட்டிச் சிப்பத்தில் மொய்த்த மாதிரி போலீஸ்காரர்களும், இரைந்து கொண்டிருந்தது.

வரும்படியில்லாத வக்கீல்களும் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தார்கள். அங்காடிக் கூடைக்காரிகள், ரிக்ஷா வாலாக்கள், குமாஸ்தாக்கள் மற்றும் எத்தனை எத்தனையோ விதமான மக்கள் எல்லாம் அங்கு கசமுசத்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் அரையில் கட்டிய நாலுமுழத் துண்டோடு, கோர்ட்டு ஹாலின் ஒரு மூலையில் குந்தி உட்கார்ந்திருந்தான்.

அவன் பக்கத்திலே நம்பர் முன்னூத்தி மூன்று நின்று கொண்டிருந்தான். முன்னூத்தி மூன்றின் காருண்யத்தால் அன்று காலைச் சாப்பாடு கழிந்தது; காருண்யம் மிக்க கனம் கோர்ட் டாரவர்களின் தயவால் எத்தனை நாள் பிரச்சினை தீரப் போகிறதோ என்பதொன்றே அவன் கவலை.

நீதிபதி வந்து சேராததால், வேலைக்குப் போய் நாலு காசு பார்க்கவேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்த மக்கள் பொறுமையிழந்து புழுங்கிக் கொண்டிருந்தார்கள். சவாரிக்குப் போக முடியாமல் கோர்ட்டு வாசலில் வந்து மாட்டிக் கொண்ட ரிக்ஷாக்காரன் எல்லோருடைய காதிலும் விழும் படியாகத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்க முனைந்தான்.

“பாருங்கய்யா, இந்த அநியாயத்தை! நேத்து எனக்கு ரிக்ஸா சத்தத்துக்குக் கூடக் காசு கிடைக்கெல்லெ. போலீஸ் கார ஐயாவுக்கு நான் படியழுது தொலைக்கலைங்கிறதுக்காக, நான் ‘ராங்ஸைடி’லே போனேன்னு என்னை அவரு அநியாயமா சார்ஜ் பண்ணிப்புட்டாரு. நானும் பத்து வருசமாத்தான் ரிக்ஸா ஓட்டுறேன். நானா ராங் வைடி’லே போவேன்? இவரு. இவரு கெவருமெண்ட் எல்லாம்தான் ‘ராங்ஸைடி’லேயே போயிக்கிட்டிருக்கு. ஆமா!”

அவனது அங்கலாய்ப்புக்காகப் பரிதாபப்பட அங்கு யாருமே முன் வரவில்லை. வெளி வராந்தாவின் மூலையில் ஒரு கூடைக்காரக் கிழவி ஒப்பாரி வைக்காத குறையாக அழுது கொண்டே இருந்தாள்.

அவன் இந்தக் காட்சிகளை யெல்லாம் நிர்விசாரமாய்க் கவனித்துக் கொண்டிருந்தான். மற்றவர்களைப் போல் அவனுக்கு எந்தவித அவசரமும் இல்லை.

பதினோரு மணி சுமாருக்கு நீதிபதி வந்து சேர்ந்தார். கோர்ட்டு வாசலில் நின்ற போலீஸ்காரன் “ஸைலேன்ஸ்!” என்று காட்டுக் குரலில் கத்தினான். திடீரென்று கோர்ட்டில் கசமுசப்பு அடங்கி, சவ அமைதி நிலவியது; கோர்ட்டில் கூடி யிருந்தவர்கள் எல்லோரும் திடுக்கிட்டு எழுந்து நின்றார்கள்.

விசாரணை ஆரம்பமாயிற்று.

கோர்ட்டுக் குமாஸ்தா குற்றவாளிகள் ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டு விசாரித்தார்; அதைத் தொடர்ந்து நீதிபதியின் வாயிலிருந்து ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்று அபராத விதிப்புக்கள் பிறந்து கொண்டேயிருந்தன.

சிறிது நேரத்தில் அவனும் கூண்டில் ஏறினான்.

குமாஸ்தா அவன் பெயர் வயது முதலிய விவரங்களை யெல்லாம் விசாரித்து நிரூபித்தார். அவன் எல்லாவற்றுக் கும் தலையை ஆட்டினான். பிறகு குமாஸ்தா அவனை நோக்கிக் கேட்டார்:

“ஏனப்பா, நீ நடு ரோட்டில் நிர்வாணமாய்ப் படுத்துக் கிடந்தியா!”

அவன் ‘ஆமாம்’ என்ற பாவனையில் தலையை அசைத்தான்.

கோர்ட்டில் கலீரென்று ஒரு கணம் சிரிப்பொலி பொங்கியது, கூடியிருந்த சகல மக்களின் கண்களும் அவன் மீது பாய்ந்தன; அவனது இரு கண்களும் ஒரு கணம் ஜனத் திரளை அளந்து நோக்கின. அந்த ஜனத்திரளின் சிரிப் பொலியும் கூரிய கண்களும் அவனது உள்ளத்தில் ஆயிரம் தேள்களைக் கொண்டு கொட்டவிட்டதுபோல் சுருக்கென்று தைத்து வேதனையளித்தன. அவன் கூண்டுக்குள் குன்றிச் சாம்பினான்.

“ஸைலேன்ஸ்!” முன்னூத்தி மூன்றின் கர்ஜனைக் குரல் மீண்டும் கோர்ட்டில் அமைதியை நிலை நிறுத்தியது.

நீதிபதி அவனை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார்; குனிந்து ஏதோ எழுதிவிட்டு, ‘பத்து ரூபாய் அபராதம் அல்லது ஒரு வாரம் சிறைத் தண்டனை’ என்று தீர்ப்பளித்தார். பிறகு சாவதானமாக அவன் பக்கம் திரும்பி, கடுமையான குரலில் கேட்டார்;

“நடுத் தெருவிலே நிர்வாணமாக கிடந்திருக்கியே. ஆணும் பெண்ணும் நடமாடும் இடத்திலே அப்படிக் கிடக் கிறதுக்கு உனக்கு வெட்கமில்லை? உனக்கு மானமில்லை? ரோஷமில்லை?”

அவன் உதடுகள் படபடவென்று துடித்து நெளிந்தன; கண்கள் நெருப்பைக் கக்கப் போவதுபோல் சிவந்து கனன்று கொதிப்பேறின; நடுநடுங்கும் கரங்கள் முறுகிப் பிசைந்தன; திடீரென்று மடையுடைத்துப் பொங்குவது போன்ற ஆவேசம் அவன் மூச்சில் குடிகொண்டு இரைந்தது; எரிமலை வெடித்துச் சிதறுவதுபோல், துடிதுடிக்கும் அவனது வாய்ப்பூட்டு உடைந்து சிதறி வார்த்தைகள் பறக்கத் தொடங்கின;

“யாரைப் பார்த்துக் கேட்கிறீர்கள். இந்தக் கேள்வியை? எனக்கா மானமில்லை? ஊராரின் மானத்தையெல்லாம் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட என்னைப் போன்ற நெசவாளிகளின் மானத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதா, உங்கள் சர்க்கார்? உழைத்துப் பாடு பட்ட எங்கள் கைகளை முறித்துவிட்டு, எங்கள் பிழைப்பிலே மண்ணடித்து, நாங்கள் பெண்டு பிள்ளைகளோடு புழுப்போல் துடித்துச் சாவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே, இந்த சர்க்கார்? யாருக்கு மானமில்லை? என் போன்ற உழைப் பாளிகளை அரை முழத் துணிக்கும் நாதியற்று அவமானப்பட விட்டு விட்டு, சுதந்திரம் சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசுகிறதே, இந்த ஆட்சி? யாருக்கு மானமில்லை? என்னைச் சந்தி சிரிக்க வைத்ததும் போதாதென்று, குற்றவாளியாக்கிக் கூண்டிலேற்றிச் சட்டத்தை நிலைநாட்ட மானஈனமின்றி முன் வருகிறதே இந்த சர்க்கார்! யாருக்கு மானமில்லை? யாருக்கு ரோஷமில்லை… யாருக்கு…?”

அவனை அதிக நேரம் பேச விடவில்லை, நீதிபதி. ”ஷட் அப்!” என்ற வெடிக் குரல் அந்தத் தர்ம புருஷனின் கண்டத்திலிருந்து தாவிப் பிறந்தது.

மறுகணம் கோர்ட்டில் அசைவற்ற அமைதி.

நீதிபதி கீழே குனிந்து அவசர அவசரமாக எதையோ எழுதி விட்டுச் சொன்னார்:

“கோர்ட்டை அவமதித்த குற்றத்துக்காக, உனக்குக் கூடப் பதினைந்துநாள் சிறைவாசம் விதிக்கிறேன். இறங்கு கீழே”

-1952

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *