
சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்
அபாய அறிவிப்பு
அன்று அவசரமாகத் திருநெல்வேலி செல்லவேண்டி யிருந்தது.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நானூறு மைல்; ரயிலில் சென்றால், அதாவது எக்ஸ்பிரஸில் சென்றால், சரியாகப் பதினெட்டு மணி நேரப் பயணம். பதினெட்டு மணி நேர ரயில் பயணம் என்பது உடம்பைப் பிடிக்கக் கூடிய விஷயம்தான் என்பதைப் பதினெட்டு மணி நேரம் பயணம் செய்தவர்கள்தான் உணர முடியும். பிரயாணி களின் ஏகோபித்த ஐக்கிய முன்னணியாகத் திரண்டு, புளிச் சிப்பம் போல் அடைந்து கிடக்கும் மூன்றாம் வகுப்பு வண்டியில், பதினெட்டு மணி நேரம் காலைக் கையைஅசைக்காமல், குறுக்கைச் சாய்க்காமல் செல்லும் பிரயாணக் கஷ்டத்தை வேத காலத்து ரிஷி புங்கவர்களின் ஒற்றைக் கால் தவங்கள் கூட உணர முடியாது. அத்தனை சிரமம்.
எனவே கொஞ்சம் வழக்கம்போலவே திடுக்கிட்டேன். “பதினெட்டு மணி நேரப் பயணமானால் மூன்றாம் வகுப்பில் போவானேன்? இரண்டாம் வகுப்பில் போனால் என்ன?” என்று செயலுள்ள புண்ணியாத்மாக்களுக்கு வாய் கூசாமல் கேட்கத் தோன்றும். தமிழ்நாட்டில் எழுத்தாளனாகப் பிறந்துவிட்டால் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்குப் பதிலாக, நாலாம் வகுப்புப் பெட்டி இருந்தால்கூட நல்லதுதான். எனவே எப்படியடா போய்ச் சேர்வது என்று சிறிது மலைத்தேன்.
நல்ல வேளையாக என் நண்பர் ஒருவர் “மூன்றாம் வகுப்பு வண்டிகளில்கூட இடம் ரிஸெர்வ் செய்கிறார்கள், அதில் போங்களேன்” என்றார்.
எனக்கு ஆச்சரியமாயிருந்தது. “மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின் வசதிகளைக் கூடச் சர்க்கார் கவனிக்க ஆரம் பித்துவிட்டதா?” என்றேன்.
“என்ன ஸார், இது நம்ம சர்க்காராக்கும் !” என்று அடித்துப் பேசினார் நண்பர்.
எனக்கு அப்போது சர்க்கார்மீது நமக்குள்ள உரிமையைப் பற்றி யெல்லாம் கவலையில்லை. நண்பர் சொன்னபடி இடம் கிடைத்தால் சரிதான் என்று எண்ணி, எழும்பூர் சென்று திருநெல்வேலிக்கு ஒரு டிக்கட் வாங்கினேன்; ரிசர்வ் பண்ணவும் நாலணாக் கொடுத்துப் பதிவு செய்து கொண் டேன்.
‘செங்கோட்டை வண்டி, பெட்டி 4. ஸீட் 16 பரவாயில்லையே நாம் எத்தனை — நாழிகை கழித்து வந்தாலும் அந்தப் பதினாறாம் நம்பர் ஸீட் நமக்கென்று காலியா இருக்கும். அதில் யாரும் உட்காரமாட்டார்கள்’ என்று நினைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
சாயந்திரம் நான் ஸ்டேஷனுக்குக் கிளம்பிப் போய்ப் பிளாட்பாரத்தில் காலடி வைத்தபோது மணி ஏழரை. இன்னும் பத்து நிமிஷத்தில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ளம்பிவிடும். பெட்டி 4. ஸிட் 16ஐத் தேடித் திரிந்தேன். ஒருமட்டும் கண்டுபிடித்து வண்டிக்குள் ஏறினேன்; ஆனால் அந்த இடத்தில் வேறொருவர் உட்கார்ந்திருந் தார்.
“ஸார், இது பதினாறுதானே !” “பதினாறாவது, கருமாதியாவது?
“நான் மதுரைக்குப் போகிறேன்.”
‘இது ரிஸொவ் கம்பார்ட்மெண்ட், ஸார்!’
“அது சரி. இது மதுரைக்குப் போறது தானே !”
“ஆமாம்.”
“அப்போ, இதிலேயே போறேன்.”
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஆளைப் பார்த்தால் கொஞ்சம் வம்புதும்பு ஆசாமியாகத் தோன்றியது. சரி, இவரை இந்த இடத்தை விட்டுக் காலி செய்வது கஷ்டம்தான் என்று கருதி, “ஸார், நீங்கள் கொஞ்சம் இப்படித் தள்ளி இருங்கள். நான் வெற்றிலை போடுகிறவன், எச்சில் துப்பவேணும் என்றேன். தம்மை இறங்கிப் போகச் சொல்லாதவரை நல்லதுதான் என்று கருதியவர்போல அவர் விலகி அமர்ந்துகொண்டார். நான் நிம்மதியாக அந்த இடத்தில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியை எடுத்தேன்.
“பேப்பர்,பேப்பர்'”
சத்தம் கேட்டதும் நான் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஒரு பத்திரிகை வாங்கினேன். பத்திரிகை படிப்பதைப் பொறுத்தவரை நாகரிகமக்கள் அனைவரும் — நான் உட்பட யாவரும் சாக பக்ஷிணிகளான கால்நடை ஜாதிதான் என்பது என் அபிப்பிராயம். அவசர அவசரமாகப் புல்லைத் தின்று விட்டு, பின்னால் சாவதானமாக எப்படி மாடு அசை போடுகிறதோ, அது போலவே பத்திரிகையை வாங்கியவுடன் முதலிலிருந்து கடைசிவரை தலைப்புக்களை அவசர அவசரமாகப் பார்த்து விட்டுப் பின்னால் சாவதானமாகப் படிக்க முனைவதுதான் நாகரிக யுகத்தின் நடைமுறை தர்மம்.
கொரியாவில் அமெரிக்கர் தோல்வி – வனமகோத்சவ வைபவம் – பட்டினியினால் குழந்தையை விற்றாள்! – நவீன நல்லதங்காள்!– ஆத்ம அபிவிருத்தியே உண்மை விடுதலை’ மந்திரி பிரசங்கம் – சட்டசபை தமாஷ் – ருஷ்யாவில் அணுக் குண்டு?…
“அட, சரிதாம்ப்பா. நிறுத்துன்னா?”
நான் பத்திரிகையிலிருந்து கண்ணை உள்ளே திருப்பினேன்.
அந்த ‘வம்பு தும்பு ஆசாமியிடம்’ இன்னொரு நபர் வந்து தும்பு பண்ணிக் கொண்டிருந்தார். அது அவர் இடமாம்! ஒரு மட்டும் அந்த நபரைக் கிளப்பிக் கீழே இறக்கி விட்டு அந்த இடத்தில் துண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்தவுடன் தான் அவருக்கு வெற்றிக்களி தாண்டவமாடத் தொடங்கியது.
“இடம் என்ன ஸார்?” என்று பெருமிதத்துடன் கேட்டார்.
“ஆகிவிட்டது.”
“பாருங்கள் ஸார், நம்ம நாலணாக் கொடுத்து ரிசர்வ் பண்ணிக்கொண்டு வாரோம். இங்கே என்னடா என்றால் இப்படித் தகராறு. நாலணா பெரிசில்லை ஸார். ஆனா அதுக்காக ரிஸர்வேசன்கிறது சும்மாவா இருக்கு…”
அவர் பிரசங்கத்தைக் கேட்க எனக்குப் பொறுமை இல்லை. எனவே ஏதோ திடீரென்று யோசனை வந்தது போல், முகட்டைப் பார்த்தேன். பார்த்தவுடன் என் கண்கள் அந்தப் பலகையில்தான் விழுந்தன.
அபாய அறிவிப்பு…..
வண்டியை நிறுத்தக் கைப்பிடியை இழு. அகாரணமாய் உபயோகிப்பவர்களுக்கு அபராதம் ரூ.50.
அந்தப் பலகையில் புதிதாக ஏதோ இருப்பதாகப் பார்த்தேன். ஆமாம். இப்போது அந்த ‘றகரம்’ போய் விட்டது. ‘அகாரணமும் அபராதமும்’ மறைந்து விட்டன. ரயில்வேக் காரர்கள் செய்துள்ள சீர்திருத்தத்தில் இது வரவேற்க வேண்டிய சீர்திருத்தம்தான் என்று மனசுக்குள் பாராட்டிக் கொண்டேன். பக்கத்திலிருந்த மனிதர் பேச்சை நிறுத்தி விட்டார் என்று தெரிந்ததும், மீண்டும் தலையைக் குனிந்து பத்திரிகையைப் பார்த்தேன்.
ரயில் அப்போது எழும்பூருக்கும் தாம்பரத்துக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் ஒரே இருட்டு. வானத்தில் பொட்டுப் பொட்டாக நட்சத்திரங்கள். தூரத்தில் கீழ்த்திசை அடி வானத்தில் வட்ட நிலா மேலேற முனைந்து நின்றது.ஒரே செக்கர் வெள்ளம். பச்சை மரங்களின் கரிய பின்னணியில் நிலவைப் பார்க்கவே கோலாகலமாயிருந்தது. அந்தக் கோலாகலத்தை நன்றாக நின்று பார்த்துத்தான் அனுபவிக்க வேண்டும்; முப்பது மைல் வேகத்திலோடும் ரயிலில் இருந்து கொண்டு அனுபவிக்க முடியாது.
இதைப் பார்த்தவுடன் எனக்கு அபாய அறிவிப்பைப் பற்றி ஞாபகம் வந்தது. யாரோ ஒரு எழுத்தாளன் சார்லி சாப்ளினுடன் பிரயாணம் செய்தபோது, இந்த மாதிரிக் காட்சியைக் கண்டு ரசித்தானாம். இதை நின்று பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று பரிதபித்தானாம். உடனே சாப்ளின் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி ‘நன்றாக அனுபவியும்’ என்று சொல்லி அபராதத் தொகையைக் கட்டினாராம்.
ஆனால், இப்படி அகாரணமாய் உபயோகித்து நான் அபராதம் கட்டத் தயாராகவும் இல்லை; ரயிலில் செல்லும் அத்தனை பேரையும் முட்டாளாக்கும் யோசனையும் எனக்குக் கிடையாது. எனவே கண்ணை மூடிக்கொண்டு கோவையற்ற சிந்தனைகளோடு மனசைத் திரியவிட்டேன்.
வண்டி தாம்பரத்தில் நின்றது.
வண்டி நின்றதுதான் தாமதம். ஒரு ஆசாமி மிகவும் அவசர அவசரமாக எங்கள் வண்டியில் ஏறினார். உடனே என் பக்கத்திலிருந்த ஆசாமி விடுவிடென்று எழுந்து சென்று, “இறங்குமய்யா, இது ரிஸர்வ் வண்டி” என்றார்.
“அது எனக்குத் தெரியும். வழியை விடு” என்றார் அவர்.
“சொன்னாத் தெரியலே?”
“அட, சரித்தான். நான் என்ன உம் மடியிலேயா உக்காரப் போறேன். நான் பாட்டுக்கு நின்னுக்கிணு வாரேன். உமக்கென்ன?”
கடைசியில் அந்தப் புதிய ஆசாமிதான் வெற்றி பெற்றார். அவர் உள்ளே வந்ததும் வண்டி கிளம்பி விட்டது. அதன் பின் ஏறியவரை எப்படி இறங்கச் சொல்வது? வந்த மனிதரிடமும் அப்படியொன்றும் சாமான் இல்லை. ஒரு பை தான். தனி ஆசாமி. குடும்ப பாரம் எதுவும் கூட வரவில்லை. அவர் விரும்பினால் வேறு வண்டியிலேயே தாராளமாக ஏறியிருக்கலாம். இருந்தாலும் ஏன் இப்படி இதிலேறி வம்பு தும்பு செய்ய வேணும்?
என் மனம் சிறிது நேரம் இப்படித் திரிந்தது; பிறகு எப்படியோ திரிய ஆரம்பித்தது.
செங்கல்பட்டுப் பக்கம் வண்டி ஓடிக்கொண்டிருந்தது; செங்கல்பட்டுக்கு வடபுறமாய் அமைந்துள்ள ஏரியில் நிலவொளி ஒழுகிக் கரைந்து ஒரே வெள்ளி மயமாகக் காட்சி யளித்தது. நீரின் சிற்றலைகள் சந்திர வெள்ளத்தோடு கலந்து சிலிர்த்துப் பரந்தன.
நான் வண்டிக்குள் நிகழும் சல சலப்பைக் கேட்காத படி வெளியே தலை நீட்டி இரைந்து வீசும் இளம் பனிக் காற்றுச் சுகத்தில் சொக்கியிருந்தேன்.
செங்கல்பட்டு ஸ்டேஷனில் வண்டி நின்றது. எங்கள் வண்டியில் புதிதாக யாரும் ஏறவுமில்லை; இறங்கவு மில்லை. வண்டி புறப்படப்போகும் நேரம் வரையிலும் ஒருவரும் ஏறவில்லை. புறப்பட்டவுடன் ஒரு டிக்கட் பரிசோதகர் கைப்பிடியைப் பற்றி உள்ளே தாவினார்.
அந்தப் பரிசோதகருக்கு வயது ஒன்றும் அதிக மில்லை; என்னைவிட இளையவராய்த்தானிருந்தார். மிஞ்சிப் போனால் இருபத்திரண்டு இருக்கும். முகத்தைப் பார்த்தால் நேரே கல்லூரியிலிருந்தாற்போல் ரயில் உத்தியோகத்தில் நுழைந்தவர் மாதிரி இருந்தது. வாழ்க்கையில் அடிபட்ட அனுபவ பாவம் முகத்தில் கொஞ்சம்கூட இல்லை. வெறும் ஏட்டுச் சுரை…
கதாசிரியனான எனக்கு அவரை இப்படியெல்லாம் எடை போடுவது புதிதில்லை. இருந்தாலும் நாமென்ன அவருக்குப் பெண்ணா கொடுக்கப் போகிறோம்? எனவே அந்தப் பாத்திரத்தின் குணநல விமர்சனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, டிக்கட்டை எடுத்து வைத்துக் கொண்டேன்.
“ஸார், டிக்கட்”
பலகைமீது படுத்திருந்த மனிதரைத் தட்டி எழுப்பினார் பரிசோதகர். படுத்திருந்த ஆசாமி சாவதானமாக எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு, பர்சை எடுத்து, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்,
“டிக்கட் எங்கே?” “எடுக்கலை.”
“சரி. எங்கிருந்து வருகிறீர்கள்?”
“சென்னைதான். திருச்சி போகணும். செங்கல்பட்டி லிருந்தே எழுதிக் கொடுங்கள். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் !”
டிக்கட் பரிசோதகர் ஒரு கணம் பதில் பேசவில்லை. அந்தக் கதாபாத்திரத்தைச் சோதிக்கக்கூடிய கட்டம் வந்து விட்டது என்று என் கதை மனம் என்னுள் கூறியது. செங்கல் பட்டிலிருந்து எழுதினால், சென்னையிலிருந்து டிக்கட் இல்லாமல் வந்ததற்கு இரட்டிப்புக் கட்டணம் வாங்க வேண்டாம். அதற்குப் பிரதியாக, காலோ, அரையோ டிக்கட் பரிசோதகர் எடுத்துக் கொள்ளலாம். அதாவது அந்த மனிதர் பரிசோதகரை லஞ்சம் கொடுத்துத் தமக்குச் சகாயம் செய்யச் சொல்கிறார். இந்தப் பரிசோதகர் அதை ஏற்பாரா? சேச்சே ; ஏற்கமாட்டார்…!
ஆனால், பரிசோதகர் அந்த ஐந்து ரூபாயையும் கைநீட்டி வாங்கினார். ரசீதுப் புத்தகத்தை எடுத்து ஏதோ எழுதினார்.
“அட, பாவி! ஆளைப் பார்த்தால் அப்பாவி மாதிரி இருக்கிறார்; இந்த இம்பிட்டுப் பிள்ளைகூட லஞ்சம் வாங்கினால் நாடு உருப்பட்டாற்போலத்தான்” என்று எண்ணினேன்.
ஆனால்…
“இந்தாரும், சென்னையிலிருந்து விழுப்புரம் வரையிலும் ‘எக்ஸெஸ்’ போட்டு எழுதியிருக்கேன். ரசீது இந்தாரும். மரியாதையாக விழுப்புரத்தில் இறங்கிவிடும். இது ரிஸர்வ் வண்டி. இதில் ஏறினதே தப்பு. அதிலும் டிக்கட் இல்லாமல் ஏறினது பெரிய தப்பு.’
“என்ன ஸார்? இப்படிப் பண்ணுறீங்க? உங்க மனம் போல செய்யுங்கோன்னுதானே நான் அஞ்சாகக் கொடுத்தேன்” என்று தன் பேச்சின் சூட்சுமத்தைச் சாதுரியமாக வெளியிட்டார் அந்தப் பிரயாணி.
“என்ன? என்னைப் பிச்சைக்காரன்னு நினைச்சியா, லஞ்சம் கொடுக்கிறதுக்கு. மரியாதையா இரும்; இல் லேன்னா வீணா வம்புதான்!” ஒரே கோபத்தோடு பேசினார் பரிசோதகர்.
என் மனம் சாந்தியடைந்தது. மனிதரைத் தவறாக மதிப்பிடவில்லை என்று ஒரு தெம்பு.
அவர் மற்றவர்களிடமெல்லாம் ரிசர்வேஷன் டிக்கெட், பிரயாண டிக்கட் இரண்டையும் வாங்கிப் பார்த்தார். கையெழுத்திட்டார். என் பக்கத்திலிருந்த ஆசாமி “பாருங்க ஸார், இந்த ஆசாமியும் தாம்பரத்திலேதான் ஏறினார். ரிஸர்வ் பண்ணலே. சொல்லச் சொல்லக் கேட்கலே” என்று புகார் கூறினார். பரிசோதகர் தாம்பரத்தில் ஏறிய ஆசாமி பக்கம் திரும்பினார்.
“உங்க டிக்கட் எங்கே?”
“பாஸ்!”
“பாஸ்’னா என்ன; எடுங்க அதை?”
“அதை இப்போ எடுக்க முடியாது, ஸார்.”
“இது ரிஸர்வ் வண்டின்னு தெரிமா இல்லையா? இதில் எப்படி ஏறலாம்?”
“ஏறிட்டேன். இப்போ கீழே குதிக்கச் சொல்றேளா?”
“அது விழுப்புரம் வரட்டும், சொல்றேன். இப்போ பாஸை எடுங்கள்.”
“முடியாது ஸார்.”
”எடுக்கிறீரா, இல்லையா?”
“அதுதான் சொன்னேனே.”
“இதென்ன விளையாட்டா? எடும். இல்லேன்னா, உம்மை இறக்கித்தான் விடணும்.”
“என் பாஸை உங்களுக்குக் காட்ட வேண்டியதில்லை.”
“ஏனாம்?”
“நானும் சர்க்கார் உத்தியோகஸ்தன்.”
“யாரானா என்ன? நான் பாஸைப் பார்த்தாகணும்; இல்லேன்னா பாஸ் நம்பரைக் காட்டும்.”
“ஏன் புகார் பண்ணவா?”
“பின்னே?
“என்னால் முடியாது. நீர் செய்யறதைச் செய்யும். பரிசோதகருக்குக் கோபம் உச்சிக்கேறிவிட்டது. முகம் சிவந்து துடித்தது.
“முடிவாக் கேக்கிறேன். எடுக்கிறீரா இல்லையா?”
“முடியாது!”
மறுகணம் பரிசோதகர் அபாய அறிவிப்புச் சங்கிலியைப் பிடித்து, பலமாக நாலைந்து தடவை இழுத்துவிட்டார். சிறிது நேரத்தில் ரயில் நின்றது. உடனே கார்டு இறங்கி ஓடிவந்தார். ஜனங்களும் என்னமோ ஏதோ என்று இறங்கினர்.
“போலீஸ்! போலீஸ்!” என்று கூப்பிட்டார் பரிசோதகர்.
ஒரு ரயில்வே போலீஸ்காரன் ஒடிவந்தான்.பரிசோதகர். கீழே குதித்துப் போலீஸ்காரரைக் கூப்பிட்டு, “அந்த மனிதனை இறக்கு கீழே!” என்று கத்தினார்.
“யாரையா அது? இறங்கு கீழே. என்ன தகராறு?”
அதற்குள் கார்டு விசாரித்தார்.
“என்ன விஷயம்?”
“அவன் எங்கிட்டே சட்டம் பேசறான். என்ன தைரியம்? இறங்கு கீழே” என்றார் பரிசோதகர்.
போலீஸ்காரன் துள்ளிப் பாய்ந்து அந்த அடம் பிடித்த ஆசாமியை இழுத்து இறக்கினான். இறக்கினவுடனே கார்டு தம் கை விளக்கை அவன் முகத்துக்கு நேராகக் கொண்டு போனார்.
அதற்குள் அவன் “என்ன 144, தெரியலையா?” என்றான்.
“யாரு டூ நாட் போரா?”
இதைப் பரிசோதகர் கேட்டுவிட்டார்.
“நீர் என்ன, கான்ஸ்டேபிளா?” என்றார்.
“ஆமாம்!” என்று பெருமிதத்துடன் சொன்னான் அவன்.
“யாரானா என்ன? பாஸை எடும். நான் விடமாட்டேன்; ரயிலை நிறுத்தினதுக்குக் காரணம் கூறியாகணும். எடும்.”
“ஏன் ரிப்போர்ட் செய்யவா?”
“ஆமாம்.”
அதற்குள் அந்த ரயில்வே போலீஸ் குறுக்கிட்டான். “என்ன ஸார் விரட்டுறீங்க: அவர் அப்படி என்ன பண்ணிட்டார்?”
“என்ன பண்ணினாரா? ரிஸர்வ் கம்பார்ட்மெண்டிலே ஏறலாமா?”
“பெரிய ரிஸெவ்வேஷன் தான்! பஸ்ட் கிளாஸ் பாஸஞ்சர்ஸா? நாலணாக் கொடுத்திட்டா ரயிலே அவுங்க ரயிலாயிடுமா? ஏறினா என்னவாம்?”
“ஏம்ப்பா, தெர்ட் கிளாஸ்னா அதிலே போறவன் மட்டும் மனுஷன் இல்லையா? ரூல்னா ரூல்தான்!”
“பெரிய ரூலைக் கண்டுட்டிங்க. விடுங்க ஸார் !”
ரயில்வே போலீசுக்கும் பரிசோதகருக்கும் வார்த்தை முற்றியது.
“அவர் கான்ஸ்டேபிள் என்பதற்காக, நீ என்னை விட்டு விடச் சொல்லாதே. அதுக்கு நான் ஆளில்லை. பாஸை எடு” என்று முறைத்தார் பரிசோதகர்
ரயில் நின்று கொண்டே இருந்தது.
கடைசியில், அந்தக் கான்ஸ்டேபிள் தம் பாஸை எடுத்துக் காட்டினார். டிக்கட் பரிசோதகர் அதைக் குறித்துக் கொண்டார். “நியாயம்னா நியாயம்தான். போலீஸ்காரனுக்கு மட்டும் ஒரு வழக்கா?” என்று முனகிக் கொண்டார்.
ரயில் கிளம்பியது, மீண்டும் அந்தத் தாம்பரம் ஆசாமி எங்கள் வண்டியிலே ஏறிக்கொண்டார். அதைப் பார்த்தவுடன் என் பக்கத்திலிருந்தவர் நாசூக்காகப் பேச ஆரம்பித்தார். தாம் கோள் சொன்ன நபர் ஒரு போலீஸ்காரர் என்று தெரிந்ததும் அவருக்குத் திடீரென்று ஒரு மரியாதை ஏற்பட்டு விட்டது.
“ஏன் ஸார், நீங்க போலீஸ்காரர்ங்கிறதை முதலிலேயே சொல்லியிருந்தா இந்த வம்பு ஏதுக்கு? சும்மா விட்டுட்டுப் போயிருப்பாரே.”
“அதெல்லாமில்லை. இந்த ஆசாமி கொஞ்சம் ரூல் படிச்சவர். திமிரு போகுமா?” என்றான் அவன்.
“இதனாலே உங்களுக்குத்தானே சங்கடம்?
“மேலே ரிப்போர்ட் பண்ணினா? — என்ன ஆகிறது?”
“ஆகிறதென்ன? அவன் வேலை போயிடும்!”
“என்னது, அவர் வேலை போயிடுமா?”
“ஆமா ஸார்! ‘நான் ஒரு அண்டர்கிரவுண்ட்’ ஆசாமியைக் ‘கவர்’ பண்ணி வந்தேன். அவன் இந்த வண்டியிலே தான் இருந்தான். அதனாலேதான் நான் பாஸைக் காட்டலே. அதைத் தெரிஞ்சுக்காமே, அவர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திக் கலாட்டா பண்ணினதாலே, அவன் இந்த இருட்டிலே இறங்கி ஓடிப் போய்ட்டான்’ அப்படீன்னு சொன்னா, அரசாங்க அலுவலில் குறுக்கிட்டுக் கெடுத்ததாக அவருக்குத்தான் ஸார், வேலை போகும்!” என்று விளக்கிப் பேசினான் தாம்பரம் ஆசாமி.
“அப்படி யாராவது இந்த வண்டியிலே வந்தானா, என்ன?” என்று ஆத்திரத்துடன் கேட்டார், என் பக்கத்து ஆசாமி.
”வந்தால் தானா? வந்ததாகச் சொன்னால் போச்சு. அதுக்கு 144 சாட்சி சொல்வார். அது மட்டுமா? அந்த ஆசாமியைத் தப்பிச்சு ஓடவிடறதுக்காகவே, இந்த டி.டி.ஆர். இத்தனையும் பண்ணினார் என்று சொன்னால், என்ன ஆகும் தெரியுமா, ஸார்? இவரும் அந்தக் கட்சியிலே சேர்ந்தவர், அதுக்கு ஆதாரம் இருக்கு – அப்படீன்னு ஜோடிச்சி அதிலே இவரையும் மாட்டி விட்டுட்டா, இவர்தான் ஸார் கம்பி எண்ணனும் தெரியுமா?”
போலீஸ்காரன் – அவன்தான் அந்தத் தாம்பரம் ஆசாமி சொன்னதைக்கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! “எல்லாம் பொய்தானே, ஸார்!” என்று கேட்டார் என் பக்கத்து நபர்.
“பொய்யா? பொய்யையும் நிசமாக்கத் தெரியுமே எங்களுக்கு!”
நான் திகைத்துப் போனேன்.
ரயில் விழுப்புரத்தில் நின்றது.
கலைந்துபோன தூக்கத்தால், நான் மீண்டும் பத்திரிகையை எடுத்துப் புரட்டினேன். அதில் நமது பாதுகாப்பு மந்திரியின் பிரசங்கம் வெளியாகியிருந்தது!
“…அன்னிய அரசாங்கத்தில் இருந்ததுபோல் இன்று நாம் போலீஸ்காரரைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. இன்று அவர்கள் அரசாங்கக் கூலிகளல்ல, அவர்கள் சமூக ஊழியர்கள்; பொதுஜன சேவகர்கள் …”
நான் மேற்கொண்டு படிக்கவில்லை. சிரித்தேன்.
-1951



