சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்

ஐந்து ஏக்கர் நிலம்


1


“ஏலே, இங்கே வா இப்படி.”

அந்தக் கடுகடுத்த குரல் காதில் விழுந்ததுமே, சங்கரன் நடுநடுங்கிப் போனான். அப்பாவுக்குத் தெரியாமல், இருளோடு இருளாய் நழுவி மாடிக்குப் போய்விட வேண்டுமென்றுதான் அவன் கூடத்து விளக்கைக்கூடப் போடாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்றான்; ஆனால் அந்தக் கழுகுக் கண்கள் அவனைக் கொத்திப் பிடித்துவிட்டன.

அப்போது மணி பதினொன்றுக்குக் குறைவிராது என்று அவனுக்கு நிச்சயமாய்த் தெரியும். இருந்தாலும் அன்று அப்பாவின் குரலில், வழக்கத்துக்கு மீறிய கனமும் அழுத் தமும் தொனித்ததால் ‘என்னமோ ஏதோ என்று சங்கரன் உள்ளுக்குள் குறுகத்தான் செய்தான்.

”இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே?”

அவரது குரலில் குழைவு என்பதே இல்லை; வெறும் வறட்டுக் கடுகடுப்பு. சங்கரன் பதில் சொல்லத் தயங்கினான்.

‘சொல்லேம்’ லே! வாயிலே என்ன கொழக்கட்டையா வச்சிருக்கே?”

“எங்கேயும் போகலே. பெரிய கோயிலுக்குச் சாமி கும்பிடப் போயிருந்தேன்.”

சங்கரன் துணிந்துதான் பொய் சொன்னான்.

சாமி பார்க்கப் போனதாகச் சொன்னால், அப்பாவின் தெய்வ பக்தி தன் குற்றத்தைப் பொருட்படுத்தாது மன்னித்து விடக்கூடும் என்றே எதிர் பார்த்தான்.

“ஏமிலே பொய் சொல்லுதே? மானோம்புப் பொட்டல் லே, துரைகள் மகாத்மாவைப் பத்தி வீசி விளாசிப் பொரியாப் பொரிஞ்சு தள்ளினது. எனக்குத் தெரியாதின்னு நினைச்சியா? ஹும்!” என்று மீசை துடிக்க இரைந்தார். அப்பா.

“இல்லே, வந்து……”

“வந்தாவது போயாவது? முதுகுத்தோலை உரிச்சி உப்பை வச்சிடுவேன். ஊரிலே இருக்கிற வக்கத்த பயலுக எல்லாம் ஒண்ணு சேந்துக்கிட்டு, காங்கிரஸ்’ம்பான், காந்தி’ம்பான்; ஒனக்கு எதுக்குலே இந்த வம்பெல்லாம்?”

“நான் அங்கே போகலை!”

“இன்னமாலே எத்துதே? ஐயா பிரசங்கத்தை நானும் தாம்லே கேட்டுக்கிட்டு நின்னேன்!”

சங்கரன் திகைத்துப் போனான். இனித் தப்பிக்க வழி யில்லை. அன்றிரவு அவன் மானோம்புப் பொட்டலில் நடந்த மாணவர் கூட்டத்தில் மேடையேறிப் பேசினான். அன்று சுதந்திரப் பிரதிக்ஞை தினம். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்காக, எழுத்து, பேச்சு, தேசியம், பொருளாதாரச் சுதந்திரங்களைப் பெறுவதற்காக, நாட்டு மக்கள் ஒன்று திரண்டு கையடித்துச் சத்தியம் செய்யும் புனித தினம். அந்தக் கூட்டத்தில் சங்கரன் காந்தியடிகளின் பெருமையைப்பற்றி, இந்திய நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டைப்பற்றி வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் வேட்டையைப் பற்றி, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ‘மீர்ஜாபர்’ கும்பல் களைப்பற்றி யெல்லாம் வாசாமகோசரமாய் அளந்து கொட்டி உத்வேகத்தோடு பேசினான். ஆனால் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த ‘சகோதர சகோதரிகளில் தன் தந்தையும் ஒருவராக இருப்பார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அப்பாவின் குற்றச்சாட்டைத் தன் மெளனத்தின் மூலமாக உறுதிப்படுத்தினான் சங்கரன்,

“கல்லுளிமங்கன் மாதிரி ஏமிலே நிக்கிறே? கிருமமா பாடத்தைப் படிச்சுக்கிட்டு வீட்டோடெ கிட. மீட்டிங்கி, கூச்சல்- அப்படி, இப்படீன்னு அக்குருவம் பண்ணினே, அப் புறம் ஒன்னை ஒரேயடியர் ஒழிச்சுக் கட்டிப்பிட்டு, புள்ளையே இல்லேன்னு இருந்திருவேன். தூ! மூதி. இவுக போய்த்தான் இந்த தேசத்தையே தாங்கிப் பிடிக்கப் போராஹ. கோபுரத் தைப் பொம்மையா’லே தாங்குது? வேலையத்த கழுதை! சூரியனைப் பாத்து நாய் குலைக்கதாவது? வெள்ளைக்காரனை விரட்டிப் பிடுவியளோ? அவனாப் போனாப் போவானே ஒழிய, நீங்க விரட்டித்தான் போவப் போறான்’னு நினைப்போ?”

அப்பா சரமாரியாகப் பேசிக்கொண்டே போவதைச் சங்கரனால் பொறுக்க முடியவில்லை. என்றாலும், அந்தச் சமயம் அவரது பேச்சுக்குக் குறுக்காகப் பேசினால் என்ன கிடைக்கும் என்று அவனுக்குத் தெரியும். எனவே,ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நழுவி மாடிக்குச் சென்றான்.

அப்பாவின் பேச்சு பிரேக் இல்லாத வண்டி மாதிரி. நல்ல வேளையாக அம்மா வந்து குறுக்கே விழுந்திராவிட்டால், அந்த வண்டி எப்போது நின்றிருக்கும் என்றே சொல்ல முடியாது.

2

திருவாளர் அருணாசலம்பிள்ளை அவர்களை ஊரில் எல்லோ ருக்குமே தெரியும். ஏனெனில், அவர் ஒரு அரிசி வியாபாரி. நயினார்குளப் பத்திலும், கண்டியப்பேரி சரகத்திலும் அவருக்கு ஏராளமான நன்செய் நிலங்கள் உண்டு. மேலும் துண்டு துணுக்காக, சுற்று வட்டாரக் கிராமங்களிலும் ஆங்காங்கே நிலபுலன்கள் இருந்தன.ஒத்தி, அடமானம் முதலியவற்றில் வந்து, முழுகிப் போன நிலங்களும், திருப்ப முடியாத தால் வட்டிக்கும் முதலுக்குமாகக் கிரயம் எழுதி வாங்கிய பாபத்துக்களுமாக, அவருக்குப் பல வழிகளிலும் சொத்துச் சேர்ந்திருந்தது. எனவே அரிசிக் கடை வைத்து நடத்துவது அவருக்கு லகுவாகவும் லாபகரமாகவும் இருந்தது. மேலும் ஊரிலுள்ள பெரியதனக்காரர் வரிசையிலும் பிள்ளையவர் களுக்கு இடம் உண்டு. அதன் காரணமாக, பிள்ளையவர்கள் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் தினசரிப் பத்திரிகை வாங்குவது. ஊருக்கு மே.த.வைஸ்ராய் பெருமானோ, கவர் னர் துரை மகனோ, அல்லது பக்கத்துக் காடுகளில் வேட்டை யாடுவதற்காக வரும் வெள்ளைத் தோலர்களோ-யார் வந்தா லும், அவர்களை வரவேற்பது, அரசாங்க அதிகாரிகளுக்கு ‘நல்வரவு கமான்’ பந்தல்கள் போட்டு மெய்க்கீர்த்தி பாடுவது போன்ற காரியங்களையும் அவர் செவ்வனே கவனித்து வருவார்.

ஜரிகை வேட்டியில் அழுக்குப் படியாமல் ஜனநாயகம் பேசி வந்த ஜஸ்டிஸ் கட்சியில் பிள்ளையவர்களுக்கு நிறைந்த ஈடுபாடு, பெருமதிப்பு. வெள்ளைத் தோலின் மகிமையைப் பற்றி அவரிடம் பேச ஆரம்பித்து விட்டால் லேசில் ஓயமாட்டார். பேச்சுக்கு முத்தாய்ப்பாக, ‘நம்ம பயலுகளும் இருக் காங்களே, காட்டுமிராண்டிகள் மாதிரி’ என்று கூறி முடிப்பது அவரது வழக்கம். பிள்ளையவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் எவ்வளவு தூரம் நம்பிக்கை இருந்தாலும், அந்தக் கட்சியின் சிலரைப்போல் அவர் நாஸ்திகராகவோ பிராமணத் துவேஷியாகவோ மாறிவிடவில்லை. வெளிக்கு “கடவுளாவது மண்ணாவது? எல்லாம் ஆரியர் சூழ்ச்சி!” என்று மெட்டாகப் பேசிக்கொண்டாலும் வீட்டில் பிதுர்க் களை! மறந்து விடமட்டார். திதி கொண்டாடத் தவறமாட்டார். சந்திப் பிள்ளையார் கோயில் அந்திப் பூஜை தரிசனத் தையும், வெள்ளிக் கிழமை தேங்காய் விடலையையும் விட்டு விடமாட்டார். ராகுகாலம், வாரசூலை, சகுனம் முதலியன பார்க்காமல் வீட்டை விட்டுக் கிளம்பமாட்டார். இதனால், இவரை ஒரு அபூர்வப் பிரகிருதி என்றும் சொல்லிவிட முடி யாது. இங்கஸாலின் பகுத்தறிவுக் கட்டுரைகளில் ஒரு மனப் பட்டு ஈடுபாட்டோடு பேசுபவர்கள், கைவல்லிய நவநீதத் தையும், சிவஞான போதத்தையும் அந்தரங்க சுத்தியோடு பாராயணம் செய்வார்கள். இந்தரகப் பேர்வழிகளுக்கு நமது நாட்டில் பஞ்சமே இல்லை. எனவே அருணாசலம் பிள்ளை ஆயிரத்தில் ஒருவர். அவ்வளவுதான்.

பிள்ளையவர்களின் குலத்தை விளக்க வந்த கருவேப்பிலைக் கொழுந்துதான் செல்வச் சிரஞ்சீவி சங்கரன். சங்கரன் அப்போது ஹைஸ்கூலில் உச்சாணிக் கிளையில் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு வயசு பதினாறு அல்லது பதினேழு இருக்கும். அந்த வயசே ஒரு தினுசு. வாலிப வயதில் மனித உள்ளம் லட்சியக் காதலிலேயோ, காதல் லட்சியத்திலேயோ மூழ்குவது வழக்கம். துடியான இளம் பருவம் அவன் உள்ளத்தில் தாய் நாட்டின் சுதந்திர லட்சியத்தில் நாட்டம் கொள்ளும் படி தூண்டியது. கலாசாலை மேடையிலே அவனுக்கு நன்றாகப் பேசிப் பழக்கம். மேலும், தேசம் முழுவதும் பரவியிருந்த தேசியப் பற்று அவனையும் ஆட்கொண்டது. காந்தி, காங்கிரஸ், பூரண சுதந்திரம், நமதே ராஜ்யம், ஏகாதிபத்தியம் ஒழிக, முடிசூடா மன்னருக்கு ஜே — இப்படிப் பலவாறான வார்த்தைகளும் ஜய கோஷங்களும் அவன் நாவில் அடிபட லாயின. எனவே அவன் ஒரு மாணவர் சங்கம் அமைத்து, அதில் தீவிரமாய்ப் பங்கெடுத்து உழைத்து வந்தான். அந்தப் பங்கெடுப்பின் பலனாகத்தான் அருணாசலம் பிள்ளையிடம் அவன் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டான்.

அருணாசலம் பிள்ளைக்குத் தம் மகனின் செய்கை கொஞ் சமும் பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. ‘இரணியனுக்கு பிரகலாதன் வந்து வாய்த்த மாதிரி, எனக்கு இவன் வந்து பிறந்தானே’ என்று மனத்தில் கறுவிக் கொண்டார். மாட்சிமை தங்கிய வெள்ளைத் தோலை எதிர்த்துப் போராடு வதைப்பற்றி அவருக்கு அவ்வளவு கவலை இல்லை.

ஆனால் “அதிகார பீடத்தில் இருப்பவர்களை இந்த வாண்டுப் பயல் எதிர்க்கவாவது? மலையோடு மோதினால் மண்டைதானே சிதறும்?” என்றுதான் அவர் தேசிய இயக்கத்தையே கருதினார். “கதராம், காங்கிரசாம்! அருமையா, நைஸா, எழு நூத்தி மூணு மல்லை, பீஸு பீஸாக் கொண்டாந்து குவிக் கிறான்! இவுஹ கைராட்டையை வச்சு, சாக்குத் தச்சிப் போட்டு, கவிழ்க்கப் போறாஹளாமில்லே! ஆளைப்பார்க்கலே ஆளை!” – இப்படித்தான் இவர் பேசிக் கொள்வார்.

ஆனால் சங்கரன் தன் தந்தைக்கு நேர் விரோதமான கொள்கையைத்தான் வளர்த்து வந்தான். அருணாசலம் பிள்ளை அவனை எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். மிரட்டினார். உருட்டினார். கடைசியில் அவரது மிரட்டல் உருட்டல் எல்லாம் அவருக்குத் தெரியாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டு, தெரிந்தே ஈடுபடும் தைரியத்தைத்தான் சங்கரனுக்குத் தந்தது. சங்கரனது லட்சிய ஆர்வமும், உழைப் பும் அவனுக்கு மாணவர்களிடம் மதிப்பும் தலைமைப் பதவியும் தேடித் தந்தன. சங்கரன் பேசுகிறான் என்றால் கூட்டம் திரண்டது. போலீஸ் இலாகா ஆள் அனுப்பி, அவன் பேச்சைச் சுருக்கெழுத்து எடுத்து வரச்சொல்லியது. இதையெல்லாம் கண்டு அருணாசலம் பிள்ளை சலித்துப் போனார். “உங்க பிள்ளையா? என்னமாப் பேசறான் என்னமோ அந்தக் காந்தியோட மகிமை இத்தினிப் புள்ளைகளையும் கவர்ந்திருது” என்று பேசுபவர்களிடமும், ‘உங்க பிள்ளையா? கொஞ்சம் கண்டிச்சு வச்சா என்ன? இப்படி சந்தி சிரிக்கத் தறுதலையாத் திரியலாமா? நாளைக்கு ஒண்ணு இல்லாட்டா ஒண்ணூன்னா, உங்களுக்கில்லா தலைக் குனிவு?” என்று சொல்பவர்களிடமும், “அவன் பேச்சையே பேசாதீங்க. உருப்படற புள்ளையானால் ஒழுங்காயிருக்குமே!” என்றுதான் பதில் சொல்லி வந்தார்.

இந்தச் சமயத்திலேதான் ஆகஸ்ட் போராட்டம் வந்தது. யுத்த நிர்ப்பந்த சங்கடங்களால் கொந்தளித்துப் பாதை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நாடு அசுர வேகத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தது. தந்தி மரங்கள் சாய்ந்தன; ரயில்கள் கவிழ்ந்தன; சர்க்கார் காரியாலயங்கள் தீக்கிரையாகின. நாடு முழுதும் ஒரே சொக்கப்பனை! எங்கு பார்த்தாலும் பொது மக்களின் ஆர்ப்பாட்டம்! போராட்டம்! ஊரடங்குச் சட்டம், 144, தடியடி, கண்ணீர்ப் புகை, கூட்டு அபராதம் கசையடி சித்திரவதை எல்லாம் சர்க்காரின் பாதுகாப்பு ஆயுதங்களாயின.

சங்கரனால் சும்மா இருக்க முடியவில்லை. இதுதான் இறுதிப் போராட்டம் என்று எங்கிருந்தோ அறை கூவல் வந்தது. அவன் கண்முன் வரப்போகும் சொக்க சாம்ராஜ்யத்தைக் கனவு காண, உருவகப்படுத்திப் பார்க்க முடிந்தது. சங்கரன் போராட்டத்தில் ஈடுபட்டான். பள்ளிக் கூடத்தைத் துறந்தான்; மாணவர்களை இளைஞர்களை ஒன்று சேர்த்து ரகசிய வேலைகளில் ஈடுபட்டான், எங்கிருந்தோ எப்படி யெப்படியோ சுற்றறிக்கைகளும் பண உதவியும் வந்தன. அந்த ஊரில் இருபது வயது நிரம்பாத சங்கரன் தூக்குக் கயிற்றை முத்தமிடவும் துணிந்து நின்றான். ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆகஸ்ட் போராட் டத்தின் கிரியாம்சமென்று சொல்லப்பட்ட பதினாலு திட்டங்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டு உழைத்தான். அதன் காரணமாகப் போலீசாரின் தடியடிக்கும், கண்ணீர்ப் புகைக்கும் ஆளானான். எனினும் அவன் அவர்கள் கையில் சிக்கவில்லை.

முடிவில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 129:ம் செக்ஷன் பிரகாரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சென்ட்ரல் ஜெயிலுக்குக் காவல் கைதியாக அனுப்பப்பட்டான்.

அருணாசலம் பிள்ளை முயன்றிருந்தால், தம் செல்வாக்கின் மூலம் தம் மகனைக் கம்பி எண்ணவிடாமல் பாதுகாத்திருக் கலாம். இருந்தாலும் அவரது வைராக்கிய சித்தம் அவனுக்கு எந்தவித ஒத்தாசையையும் செய்ய முன்வரவில்லை; சங்கரனும் எவ்வித ஒத்தாசையையும் எதிர்பார்க்கவில்லை. பிள்ளை யவர்களின் பெற்ற மனம் மகனின் கதியை எண்ணிக் கொஞ்ச நாட்களுக்கு மறுகியது; பிறகு மரத்துப்போய் விட்டது.

அப்போது யுத்த காலம். பிள்ளையவர்களின் வியா பாரம் சுறுசுறுப்படைந்தது. அரிசி விலை ஏறிற்று. பஞ்ச இந்தியா வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு லக்ஷேப லக்ஷமாகக் செலாவணி கொடுத்தது; நாட்டில் புதுப்புது நோட்டுக்கள் நடமாடின. பிள்ளையவர்களின் கையில் நம்பர் வரிசை குலையாத செலாவணி நோட்டுக்கள் புழங்கின. மேலும் ராணுவத்துக்கு அரிசி, வத்தல், காய்கறி முதலியன அனுப்பும் வியாபாரத்திலும் அவர் ஒரு காண்ட்ராக்டர் ஆனார். பணம் புரண்டது. அதன் காரணமாக, அந்த வருஷம் அவருக்கு நயினார் குளப் பத்தில் பல ஏக்கர் நிலம் வந்து சேர்ந்தது: வீட்டின் உயரம் இன்னும் ஒரு முப்பது அடி உயர்ந்தது; மனைவியின் கழுத்தில் வைர அட்டிகை தொங்கியது; கள்ள மார்க்கெட்,கொள்ளை லாபம் எல்லாம் அவருக்கு ஆய்வந்த கைராசியாய் விட்டன. மேலும், நகர உணவுக் கமிட்டியிலும் பிள்ளையவர்களுக்கு ஒரு ஸ்தானம் கிடைத்தது. யுத்த நிதி வாங்கவந்த கவர்னர் துரை மகனும், துரை மகளும் பிள்ளையவர்களின் கையைக் குலுக்கி விட்டுப் போனார்கள். இதையெல்லாம் கண்டு பிள்ளையவர்கள் அப்படியே குளிர்ந்து போனார். நேச நாட்டு வெற்றியில் என்றைக்குமில்லாத அக்கறை கொண்டார். யுத்தப் பிரசாரக் கூட்டத்துக்கு உதவி செய்தார்; தாமும் பேசினார்.

அவர் பெயர் பிரபலம் அடைந்தது. ‘யுத்தச் செய்தி’ப் பத்திரிகையில் அவரது புகைப் படம் ‘போஷகர்’ என்ற விருதோடு பிரசுரிக்கப்பட்டது.

வருஷக் கடைசியில் அவரை ராவ்சாகிப் பட்டம் தேடி வந்தது. இருந்தாலும், அவர் தம் பெயரில் ஒரு ஆகாய விமானம் வாங்கி அனுப்ப வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆகாய் விமானம் வாங்குவதற்குப் போதிய பண வசதியில்லையென்றாலும், வெள்ளைத் தோல் தமக்கு மேன்மேலும் வசதிகள் செய்து கொடுத்தால் அது சாத்தியமாகும் என்று அவர் கருதினார். சௌகரியம் கிடைத்தது; அந்தச் சமயம் அவர் தம் செல்வத்தை விருத்தி பண்ணிக் கொண்டாரே ஒழிய ஆகாய விமானத்துக்கு நிதி அளிக்கவில்லை.

அதற்குள் யுத்தமும் நின்று போயிற்று. “நாசமாப் போற பயல்ஹ! அணுகுண்டை அமெரிக்காக்காரன் போட, ரஷியாக்காரன் மறுபக்கம் தாக்க, சண்டையையே நிறுத்திப் போட்டாங்களே.எம் பொழைப்பிலே மண்ணைப் போட்டுட்டாங்களே ” என்று மனசுக்குள் உறுமிக் கொண்டார்.

யுத்தம் முடிந்தவுடன் சிறையிலடைபட்ட தலைவர்கள் வெளி வந்தார்கள். சங்கரனும் வந்தான்; ஆனால், சங்கரன் பழைய தேசியவாதி சங்கரனாக வரவில்லை. ஜெயிலுக்குள் அவன் கற்ற பாடம் அவனுக்குப் புதுப் புதுச் சொற்றொடர்களை, அதன் அர்த்தத்தைக் கற்றுத் தந்திருந்தது. ஜெயிலுக்குள் அடைபட்ட அரசியல் இளைஞர்களிடம் அவனும் ஞானோபதேசம் பெற்றிருந்தான். சோஷியலிசம், கம்யூனிசம், கிஸான் பிரச்சினை, உழுபவ னுக்கு நிலம், உழைப்பவனுக்கு உணவு, புரட்சி, மே தினம், முதலாளித்துவம், பூர்ஷ்வா, புராலி டேரியட்….. எத்தனை எத்தனையோ விஷயங்களைப் பற்றியெல்லாமோ பேசினான்.

தலைவர்கள் வெளியே வந்தவுடன் அரசியல் பேச்சு வார்த்தைகள் நடந்தன. அரசாட்சி கைமாறும் போல் தோன்றியது. பாடுபட்டதற்குப் பலன் கிடைத்துவிட்டது என ஊழியர்கள் கருதினார்கள். அருணாசலம் பிள்ளையும் ‘ஊரோடு ஒத்து வாழ்! என்ற உலக நீதியின் அர்த்த விசாலத்தை முற்றுற உணர்ந்து காங்கிரசைப் போற்ற ஆரம்பித்தார். மேலும், இனிமேல் தடியடி தர்பார்,144, சிறைவாசம், சத்தியாக்கிரகம் போன்றனவற்றுக்கு இடமில்லை என்ற ஞானம் பிறந்ததும், அவர் காங்கிரஸில் நாலணா மெம்பரானார். மல் வேஷ்டியைக் களைந்துவிட்டு, அத்தாட்சி பெற்ற கதர் உடுத்தினார். அஹிம்சா தர்மத்தையும், ராமராஜ்யத்தைப் பற்றியும் பிரசங்கம் பண்ணினார். காலம் செல்லச் செல்ல, அவர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட் டியில் அங்கத்தினரானார். ஜில்லா போர்டுத் தலைமைப் பதவி தேர்தல் வந்தால் ஒருகை பார்க்கலாம் என்றும் காத்துக் கொண்டிருந்தார்.

சங்கரன் வெளியில் வந்ததும் ஆக்க வேலைகளில் ஈடுபடுவதாகச் சொல்லிப் புறப்பட்டான். கிஸான் இயக்கம், குடிவாரம், உரிமைப் போராட்டம், மத்தியஸ்தம் – என்று பற்பல காரியங்களில் ஈடுபட்டு முங்கி முங்கி முழுகி விட்டான். ஜில்லாவின் கிஸான் இயக்கத்துக்குத் தலைவ ரானான்.

அப்பாவும் மகனும் தேசத்துக்குத்தான் உழைத்தனர். ஆனால் அன்றும் அவர்கள் இரணியன் பிரகலாதனாகவே இருந் தனர்.

3

இப்போது இந்தியா சுதந்திர நாடு.

தலைவர்கள் தியாகிகளை வாழத்தினார்கள். உயிரைக் கொடுத்துப் போராடிய வீரர்களை வணங்கினார்கள். தேசத் தியாகிகள் பட்ட கஷ்ட நஷ்டத்துக்காக அவர்களுக்கு நில மான்யம் வழங்க உத்தேசித்தார்கள்.

ஒரு நாள் தலைவர் அருணாசலம் பிள்ளை கூடத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சங்கரன் மாடி யிலிருந்து இறங்கிக் கீழே வந்தான்.

“சங்கரா, இங்கே வாடா” என்று அருமையாக அழைத்தார் அருணாசலம் பிள்ளை.

சங்கரன் போனான்.

“இதைப் படிச்சிப் பார்த்துட்டு ஒரு கையெழுத்துப் போட்டுக் குடு.”

சங்கரன் படித்துப் பார்த்தான். அவன் எவ்வளவு காலமாக, தேசிய இயக்கத்தில் பங்கெடுத்தான் என்பதும், ஆகஸ்ட் போராட்டத்தின்போது அவன் பட்ட கஷ்ட நஷ்டங்கள், தண்டனைகள் என்னென்ன என்பதும் சாங்கோ பாங்கமாக எழுதப்பட்டு, அடியில் அவனது தியாகத்துக்குப் பிரதியாக நிலமான்யம் வேண்டியும் ஒரு வரி எழுதப் பட்டிருந்தது.

“நான் ஒண்ணும் இதிலே கையெழுத்துப் போட மாட்டேன்” என்றான் சங்கரன்.

“ஏண்டா?”

“நமக்குத்தான் நிலபுலம் ஏராளமாக இருக்கே. இந்த ஐந்து ஏக்கர் வந்துதான் நெறையப் போவுதா?” என்று நாசூக்காகக் கேட்டான்.

“போடா பைத்தியக்காரா! வந்ததை வரப்பத்தனும். தெரியுமா?” என்று லோகானுபவ பூர்வமாகப் பேசினார் பிள்ளை.

“அதெல்லாம் இல்லை. என் கொள்கை அதுவல்ல.”

“என்னடா பெரிய கொள்கையைக் கண்டுட்டே? உனக்கு என்னைக்காவது ஸ்திரமான கொள்கை இருக்கா? ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே காங்கிரஸ், காங்கிரசுன்னே! இப்போ என்னடான்னா. கம்யூனிஸமும், சோஷியலிஸமும் பேசுதே. இதுதான் உன் கொள்கையோ?’

“அப்பா, கொள்கையை மாற்றுவது குற்றமல்ல. அது சமய சந்தர்ப்பத்தையும், வளர்ச்சியையும் பொறுத்தது. அதையறியாமல், மாற்ற முனையாமல் இருப்பது தான் குற்றம்!’ என்று தத்துவம் பேசினான் சங்கரன்.

“அது சரிதாண்டா. கொள்கையை மாத்த வேண்டியது தான். இப்போ நான் மாத்திக்கலையா? மாத்தறது நம்ம நன்மைக்குத்தாண்டா. தெரிஞ்சிதா?” என்றார். பிறகு ஒரு கணம் கழித்து, “சரி சரி, இதிலே ஒரு கையெழுத்துப் போடு” என்றார்.

“முடியாது.”

“ஏண்டா, நீ தியாகம் செய்யல்லையா? தியாகிகளுக்குத் தான் நிலம் குடுக்கிறாஹளே. வாங்கினா என்ன?”

“நாங்க செய்த தியாகம் இந்தச் சுதந்திரத்துக்கல்ல. வாழ்வில் சுபிட்சத்தை, சொர்க்க சாம்ராஜ்யத்தை எதிர்பார்த்து ஏமாந்த தியாக ஊழியர்களைக் கட்டுப்படுத்தும், வாயடைக்கச் செய்யும் ராஜதந்திரம் இது! இந்தச் சூழ்ச்சிக்கு நான் உடன்படமாட்டேன்!”

“பெரிய சூழ்ச்சியைக் கண்டுவிட்டாய்? ஐந்து ஏக்கர் நிலம் சும்மா வருதுன்னா, சூழ்ச்சியா அது?”

“அப்பா, நான் இந்த அஞ்சு ஏக்கர் நிலத்தை எதிர் பார்த்துத் தியாகம் பண்ணலை. என் தியாகத்துக்கு விலையும் அதுவல்ல. நான் தியாகம் பண்ணியது எனக்கு நிலம் கிடைக்க வல்ல. இந்த நாட்டிலுள்ள பஞ்சை அத்தனை விவசாயி பேருக்கும், உழுபவர் யாவருக்கும் நிலம் கிடைப்பதற்குத் தான், தெரியுமா?”

“அட சரிதான். இங்கே பிரசங்கம் பண்ணாதே. கையெழுத்தைப் போடு” என்று சாவதானமாகச் சொன்னார் பிள்ளை.

“முடியாது. என்னை விலைக்கு வாங்க முடியாது!”

மறுகணம் சங்கரன் அங்கே நிற்கவில்லை. வெளியே போய்விட்டான்.

பிள்ளையவர்கள் மனுவை மடித்துவைத்துவிட்டுத் தமக்குத்தாமே பேசிக்கொண்டார்: “பிழைக்கத் தெரியாத புள்ளே! அன்னைக்கி என்னடான்னா, அந்தக் கவர்மென்டை எதிர்த்து ஜெயிலுக்குப் போனான். இன்னைக்கின்னா இந்தக் கவர்மெண்டோடு திண்டு முண்டு பேசிக்கிட்டிருக்கான். மூதிக்கு என்னைக்குத் தான் நல்ல புத்தி வருமோ தெரியலை”

-1950

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *