
சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்
நீயும் நானும்
‘அன்புள்ள ரகுநாதா,
நமஸ்காரம்.
‘ஏதடா, ஆசாமி புதிதாகக் கடிதம் எழுதுகிறானே!’ என்று எண்ணாதே. ஏதோ ஓர் உற்சாகம். உற்சாகமா அது? புழுக் குடைவதுபோல் என் நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கும் அந்த நினைவு… அதன் இன்பம்! அதன் வேதனை!… உன்னைப்போல் நான் பெரிய கதாசிரியனல்ல.
என்னைப் போல் நீயும் தொழிலாளர் தலைவனல்ல. ஆனால், நீ நானானால் அல்லது நான் நீயானால்………. அப்போது இந்தக் கடிதத்துக்கே அவசியமிருக்காது. உன்னுடைய அரசியல் அபிப்பிராயங்கள் எப்படி இருந்தாலும் சரி. அதைப் பற்றி நான் கவலைகொள்ளவில்லை.
உன்னைப்போல் என்னிடம் கற்பனை வளமோ மொழிச் சிறப்போ கிடையாது. ஆகவேதான் அன்றிரவில் நடந்த அந்தக் கோரச் சம்பவத்தை, மகத்தான சரித்திரத்தை உனக்குத் தெரிவித்து, என் மன உறுத்தலைத் தணிக்க விரும்புகிறேன்.
அந்த இரவை நினைத்துப் பார்த்தால்!’……
சார்லிப்பட்டிக் கொலை வழக்கு விவரங்களை பத்திரிகைகளில் படித்திருப்பாய். மில் முதலாளிகளின் கைக்கூலி ஒருவன், அங்கு நடந்த கலவரத்தில் மாண்டுபோனான். ஆனால் அந்த மரணம் திட்டமிட்டுத் தொழிற்சங்கம் செய்த சதி-கொலை என்றது வெள்ளை நிர்வாகம். போலீசாரைக் கேட்க வேண்டுமா? மாட்சிமை தங்கிய வெள்ளைத் தோலின் உத்தரவுப்படி என் மீதும், சங்க ஊழியர்கள் மீதும் வாரண்ட் பிறப்பித்தனர். தொழிலாளர்களின் கட்டுப்பாட்டைக் காக்கவும்,
அமைதியை நிலைநாட்டவும் வேண்டி, நான் தலைமறைவாய் இருக்கவேண்டுமென்று கட்சி உத்தரவிட்டது.
அப்பா! தலைமறைவாக வாழ்வதென்பது அத்தனை சுலபமான காரியமா? ஆனால், அதே சமயம் சர்க்கார் ஆள் தூக்கி அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. உடனே அடக்குமுறை; கட்சித் தோழர்கள் வேட்டை: வேலூர் சிறை; விசாரணையற்ற சிறைவாசம்!……..
ஒரு நாள் திடீரென்று சார்லிப்பட்டியில் தொழிலாளர் களுக்கும் குண்டர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. இதுதான் சமயமென்று போலீஸார் தலையிட்டுத் தொழிலாளரைத் தாக்கினார். கண்ணீர்ப் புகை; துப்பாக்கிப் பிரயோகம்; 144; ஸ்பெஷல் போலீஸ் முதலிய அஸ்திரப் பிரயோகங்கள்!……..
அன்று மாலை எனக்கு உத்தரவு வந்தது. உடனடியாக சார்லிபட்டிக்குச் சென்று, தொழிலாளரைச் சந்தித்து நிலைமையைத் தெரிந்து, வேண்டுவன செய்யவேண்டும் என்று கட்சி உத்தரவிட்டது.
சார்லிப்பட்டிக்கும் நான் பதுங்கியிருந்த ‘வளை’க்கும் சில மைல் தூரம்தான் இருக்கும். இரவோடு இரவாய் சைக்கிளில் அங்கு சென்று தோழர்களைச் சந்திக்க வேண்டும். ஊர் நிலைமை ஒரு புறம்; ஏற்கெனவே வலைக்குள் சிக்காது அஞ்ஞாதவாசம் புரியும் என் நிலைமை ஒருபுறம்.
அன்றிரவு எட்டு மணிக்கே புறப்பட்டேன்.
பூசி மெழுகியதுபோல் வெண்மேகங்கள் நிலவை மறைத்திருந்தன. மெல்லிய பனித்திரை கண் முன்னே தொங்கிக்கொண்டிருந்தது. அழுது வழியும் நிலவொளியில் சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்தேன்.
தலையிலே முண்டாசு. உதட்டில் சிகரெட். எனினும் பற்கள் மோதிக்கொண்டன. சர் சர் என்று மணல் வெளியில் மிதித்து, ஒரு மட்டும் ஊர் எல்லையை அடைந்துவிட்டேன். வாய்க்காலப் பாலம் கழிந்ததும் இருள் செறிந்த இடத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு, மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தேன். என்னை அழைத்துச் செல்ல ‘கொரியர்’ (கையாள்) வரக் காணோம். அப்போது பாலத்தருகில் இரண்டு சி.ஐ. டி-க்கள் வந்துகொண்டிருந்தார்கள். உடனே சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு, அவர்கள் கண்ணிலிருந்து தப்புவதற்கு வழி தெரியாமல் நான் சைக்கிளில் ஏறி, ஊரைப் பார்த்து அழுத்தினேன்.
இனி நான் ‘கொரிய’ரை எதிர்பார்க்க முடியாது. நானாக ‘வளை’ தேடிக்கொள்ளவேண்டியதுதான். வரும்போது எங்கு இறங்குவது என்பது பற்றியே யோசனை.
ஊருக்குள் ஜன நடமாட்டமே இல்லை. விடிந்துவிட்டது என்று ஏமாந்த காக்கை `கா… கா..’ என்று கத்திவிட்டுச் சென்றது. வருகிற வழியில் ஒரு கடையின் சரப் பலகையிலிருந்த இரண்டு ஸ்பெஷல் போலீஸ் நபர்கள் தமது கற்பழிப்புப் பிரபாவத்தை அளந்து கொட்டிக்கொண்டிருந்தார்கள். தூரத்திலே ‘நைட் ஷிஃப்ட்’ ஓடும் மில்லின் இயந்திர ஓலம். அதையடுத்து பாராப் போலீஸின் விசில் கீச்சுச் சப்தம்; ‘ரிலே ரேஸ்’ மாதிரி எங்கோ ஆரம்பித்த பட்டி நாய்களின் பிலாக்கண ஊளை நான் வந்துகொண்டிருந்த தெருவிலே வந்து முடிந்தது…. மேலத்தெரு சீனிவாசன் வீட்டு முன்னால் இறங்கினேன்.
நான் கதவைத் தட்டினேன்.
பதிலில்லை.
கதவு மூடியிருந்தது.
“மிஸ்டர் சீனிவாசன்!”
கதவிடுக்கு வழியாகப் பார்த்தேன். உள்ளே விளக்கு ஏற்றப்பட்டது. சீனிவாசன் குரல் கொடுத்துக்கொண்டே கதவைத் திறந்தார்.
“யாரது?”
“நான்தான்.”
“யாரு நீங்களா?”
நான் பதில் சொல்லாமல் சைக்கிளை உள்ளே எடுத்து வைத்தேன்.
“சரி, சாப்பாடு ஆச்சா? மாடிக்குப் போங்கள்.”
நான் மாடிக்குச் சென்றேன். அவரும் உடன் வந்தார்.
“காம்ரேட், நீங்க உடனே யூனியன் ஆபீஸுக்குப் போயி தகவல் சொல்லி, ‘கொரிய’ரை இங்கே வரச் சொல்லணும்.”
“சரி. சாப்பாடு?”
“எல்லாம் வந்து பார்த்துக்கலாம்.”
சிகரெட்டுக்காகப் பாக்கெட்டைத் துழாவினேன்; பாக்கெட் காலி.
சீனிவாசனைப் போகச் சொல்லிவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு ஈஸிச்சேரில் சாய்ந்தேன். கீழே பேச்சுக்குரல் கேட்டது. “இந்தாங்க, உயரே போனது யாரு?”- கேட்டது அவர் மனைவி.
“அவர்தான், யூனியன்…” “யாரு – அந்தக் கொலைகாரனா?”
என் நெஞ்சுக்குள் சுளுக்குவதுபோலிருந்தது.
“அநேகத்தைக் கண்டுட்டே. சும்மா இரி” என்று அதட்டிவிட்டு, சீனிவாசன் புறப்பட்டார்.
“எங்கே போறிய?”
கேள்விக்குப் பதில் வரவில்லை.
கண்களை இறுக மூடியவாறே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
‘கொலைகாரனா?’
சீனிவாசன் கட்சி அனுதாபி; செயலுள்ள மத்திய தர வகுப்பு ஆசாமி. கட்சியிலே நேரடியாகக் கலந்துகொள்ளாவிட்டாலும், தம்மாலான உதவிகளை அடக்கத்தில் செய்து தருவார். அவருடைய மனைவி படித்தவள்: எனினும் மமதைகொண்டவள். ‘வெள்ளை வேட்டிப் பண்டார’மாகிய சீனிவாசன் எங்களைப்போல் ‘அட்டுப் பிடித்த, நாகரிகமற்ற’ தொழிலாளர்களிடம் பழகுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. மேலும், சோஷியலிஸம் என்பது சொத்தைப் பறிப்பது என்ற பயங்கர எண்ணமும் எங்கள் மீது வெறுப்பைத் தூண்டியிருந்தது. அவள் என்னை கொலைகாரன் என்றதில் தவறில்லை. அவளா பேசுகிறாள்? அவளுள்ளே குடிகொண்ட மத்தியதர வர்க்கத்தின் போலிக் கௌரவப் பூச்சாண்டியல்லவோ பேசுகிறது!…..
அவள் கீழே இருந்து என் காதில் விழும்படி ஏதேதோ சாடை பேசினாள்: “என்னமாத்தான் பிழைக்கிறாங்களோ?- பகல் முச்சூடும் ஆந்தை மாதிரி பொந்திலே கிடந்துட்டு ராவிலே சுத்தறது- முழிக்கிற முழியைப் பாரு. குறவன் மாதிரி- எல்லாரும் சமம் சமம்னுட்டு, ஆம்புளெயும் பொம்பிளெயும் ஒண்ணாத்தான் பழகுதானுக. தூ! மூதிக”
அவளுடைய பேச்சு தங்கு தடையின்றிச் சென்றது.
“என்ன பார்வதி, சீனி வீட்டிலே இல்லையா?” என்ற குரல் கேட்டது.
பக்கத்து வீட்டு சதாசிவ மாமா குரல்தான் அது.
“இல்லாமே என்ன? இப்பத்தான் திடீரென்று அழைப்பு வந்திட்டுதே.”
இருவரும் ‘கசமுச’ என்று ஏதோ பேசிக்கொண்டனர். சதாசிவம் மாடிப்படி ஏறினார். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விளக்கைப் போட்டேன்.
அவர் வந்ததும் வராததுமாய்ப் பேச ஆரம்பித்துவிட்டார்: “என்ன ஸார், இது! கீழே பாருங்க. சீனுவோட சம்சாரம் என்னமில்லாமோ சொல்றா! இந்த ரா வேளையிலே வந்து, சீனுவையும் வெளியே போகச் சொல்லிட்டு, நீங்க இங்கே இருக்கிறதுன்னா..
“பார்வதியும் வயசுப் பொண்ணு!” அவருடைய மறைமுகமான குற்றச்சாட்டு என் மண்டையில் ஓங்கி அடிப்பது போலிருந்தது. ஆம். இந்தச் சமுதாயம் அப்படிப்பட்டது. வயதுவந்த மகளும் அப்பனும் நெருங்கிப் பழகினாலும் அவதூறு கிளப்புகின்ற முதலாளித்வ சமூக அமைப்பு…
“என்னை என்னவென்று நினைத்தீர்கள்?” என்று எதிர்த்தேன்
நான். “தெரியும் சார். வீணா எதுக்கு அவங்க வெட்டிச் சனியனை விலைக்கி வாங்கணும்? நீங்களோ, பிடிவாரண்டு பேர்வழி!” என்று பதிலுக்கு அடித்தார்
அவர். ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’. எனக்கு மேலே பேச ஓடவில்லை. என்னுடைய மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு சௌகரியத்துக்காக சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டுக் கால் நடையாகச் செல்ல எண்ணி, படி இறங்கினேன்.
என் காலில் கிடந்த புதுச் செருப்புகள் ‘சறுக் சறுக்’ கென்று ஒலமிட்டு, பயங்கரம் உண்டாக்கியது. ஆகவே, அமைதியுடன் செல்வதற்காக, அவற்றைக் கழற்றிக் கையில் தூக்கிக்கொண்டு அடுத்த’வளை’யைத் தேடிச் சென்றேன்.
தூரத்தில் எங்கோ பனைமரத்தில் கோட்டான் அவயக்குரலில் குழறிச் சிறகடித்தது; வயற்காட்டுத் தவளைகளின் கடூரமான முணமுணப்பு; போலீஸ் காவலின் விசில்; சப்ஜெயில் மணியோசையின் மங்கிய ஒலி… மணி பத்து அடித்தது. அடிமேல் அடி வைத்து மெள்ள நடந்து சென்றேன். ஆனால், எனக்குப் பின்னால் நூறடி தூரத்தில் யாரோ என்னைத் தொடர்ந்து வருவது போன்ற பிரமை-பிரமையென்ன? இரண்டு மூன்று தெருக்களைப் பார்த்தேன். நிலவொளி மேகத்தால் விழுங்கப்பட்ட இருள் வேளையில், பக்கத்துச் சந்து வழியாகச் சென்று பல நெளிவு வளைவுகளைக் கடந்து வேறொரு தெருவுக்குத் தப்பி வந்தேன். பின்னால் வந்த ஆள் என்னைத் தொடர்ந்து வரவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக்கொண்டேன். இனி தெருக்காட்டில் அலைவது தப்பு என்று உணர்ந்து, ராக்கன் வீட்டுக்குச் சென்று தங்க எண்ணினேன். ராக்கன், மில் தொழிலாளி; கட்சி உழைப்பாளி. அவனுடைய மனைவி மாரியும் அப்படித்தான். இருவரும் கட்சிக்காக மிகவும் பாடுபட்டிருக்கிறார்கள். மாரி கட்சி நிதிக்காக, தன்னிடமிருந்த ஒரே மூக்குத்தியையும் தங்க நகையான தந்து, உண்டியல் மூலம் பணமும் பிரித்துத் தந்தவள். இதற்கு முன் எத்தனையோ தடவை ராக்கன் வீட்டில் எனக்கு ‘வளை’ தந்து உதவியிருக்கிறார்கள். ராக்கன் வீட்டுக் கதவு திறந்தே கிடந்தது. முற்றத்தில் நிலவொளியில் மாரி தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை மடியில் வைத்து, லாவைப் பூச்சி பிடித்துக் காட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். வாய் பேசத் தெரியாத அந்தப் பாலகன், வாயிலிருந்து எச்சில் ஒழுக நிலவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
நான் உள்ளே சென்றேன். மாரி நிமிர்ந்து பார்த்து என்னை அடையாளம் கண்டுகொண்டாள். “வாருங்க- நீங்க வாரதாக்கூட சேதி கிடையாதே” என்று கேட்டுவிட்டு, பாலகனைப் பார்த்து, “டே, ஜீவா! அய்யாவுக்கு ‘லால் சலாம்’ போடு” என்றாள். பையன் சிரித்தான். “போடு லால் சலாம்!” என்று மீண்டும் சொன்னாள்.
அந்தச் சிறுவன் தனது முஷ்டியை உயர்த்தி லால் சலாம் செய்தான்;
நானும் பதிலுக்குச் செய்தேன். உடனே தெருக்கதவைச் சாத்தினேன். என்னைத் தொடர்ந்து வந்த பிராணி இங்கும் மோப்பம் பிடித்து காரண காரியமற்ற வந்துவிடுமோ என்ற பயப்பிராந்தி.
“ராக்கன் எங்கே?”
“எங்கே போயிரும்? யூனியன் ஆபீஸுக் கிட்டேதான் போயிருக்கும்.” நான் தலைப்பாகையை அவிழ்த்தேன்.
“சரி, நீங்க சாப்பிட்டாச்சா?”
“இல்லை.”
“இருங்க, பழைய சாதம் அவருக்கின்னு இருக்கு. நீங்க சாப்பிடுங்க.”
“ராக்கன் வந்தா என்ன பண்ணப்போறே?” ‘அது மில்லு உட்டு வந்தவுடனேயே ஒரு வாய் சாப்பிட்டிரிச்சி. இப்ப வரச்சயே, எங்னெயாவது துன்னுட்டு வந்திரும்” என்று கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்று கஞ்சியும் சாதமுமாய்க் கொண்டுவந்து வைத்துவிட்டு, “வெஞ்சனம்கூட இல்லை” என்று பரிதாபப்பட்டாள்.
“பரவாயில்லை, ரெண்டு வத்தலும் உப்பும் இருந்தா நல்லது.”
அவள் கொண்டுவந்தாள். நான் சாப்பிட்டு முடித்தேன். பிறகு நாக்கின் மழ மழப்பைப் போக்க, புகை வேண்டியிருந்தது. பாக்கெட்டிலோ சிகரெட்டில்லை; மாரியையும் இதற்காக வெளியில் போகச் சொல்ல மனமில்லை. சரியென்று மாடக் குழியில் தட்டுப்பட்ட பீடியொன்றை எடுத்துப் பற்றவைத்தேன்.
மாரி தனது மகன் ஜீவாவை வைத்து விளையாட்டுக் காட்டி உறங்கப் பண்ணிக்கொண்டிருந்தாள்.
“ஜீவா, அது யாருடா கண்ணு?” என்று கூறி என்னைச் சுட்டிக் காட்டினாள். “மாம்மா” என்று வாய் திறந்து ஒலி எழுப்பியது குழந்தை.
“சரி உறங்கு” என்று அவனை மடியில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள். “நான் போய்ப் படுத்துக்கிடுறேன்” என்று கூறி நான் வீட்டினுள் சென்றேன்.
மாடக் குழியிலே தகர விளக்கு புகை மண்டி எரிந்து கொண்டிருந்தது. ஓலைப்பிரை முகட்டில் எலிகள் மூலையிலே குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து சலசலப்பு எழுப்பின. உள்ள பண்ட பாத்திரங்களிலிருந்து அழுகல் நாற்றம். நீரூற்றுச் சுரக்கும் மண் தரை, எதிரே சுவரில் மூங்கில் பட்டைகளால் கட்டப்பட்டிருந்த தென்னந்தோப்பு ஜன்னல் வழியே பின்புறத்துத் தெரிந்தது. தென்னை மட்டை வழியாக, சல்லடை போலப் பாயும் நிலவொளி… நான் தலையைத் தரையில் சாய்த்தவாறே எண்ணினேன்: `எத்தனை பகட்டு நிறைந்த உலகமடா இது! இங்கு இந்த ஏழைகள் துன்பமே துணையாக வாழ்கிறார்கள். ஆனால், இந்த ஏழை மக்களுக்குரிய கருணையும் அன்பும் கடமை உணர்ச்சியும் படித்தவர்கள் – பணமுடையவர்களிடம் இல்லையே! இந்தப் பாமரர்கள் கல்வியற்றவர்கள்; கலாசாரம் தெரியாதவர்கள்; மனிதனாக வாழும் இரண்டு கால் ஜந்துக்கள் என்றெல்லாம் பெரியவர்கள் சொல்கிறார்களே.
உண்மையில் மனிதத்தன்மையைவிட சிறந்த கலாசாரமும் நாகரிகமும் வேறு உண்டா? பார்வதியைப் போல, ஈவிரக்க மற்ற, பகல் வேஷக்காரர்கள்!….’
மூட்டைக் கடி பொறுக்கமாட்டாமல் எழுந்து உட்கார்ந்தேன். தெருவில் ‘சறுக் சறுக்’கென்ற பூட்ஸ் சத்தம் கேட்டது; திடீரென்று ராக்கன் வீட்டு வாசலில் நின்றது; மறு நிமிஷம் கதவும் தட்டப்பட்டது.
“யாரங்கே?”
“யாரா, திற கதவை!”
எனக்கு விஷயம் புரிய வெகுநேரம் ஆகவில்லை. ‘அகப்பட்டுக் கொண்டோம். இனித் தப்ப வழியுமில்லை; நேரமுமில்லை’ என்று எண்ணி மூட்டை முடிச்சுகளை வாரிச் சுருட்டினேன்; விளக்கை ஊதி அணைத்தேன்; எதிர்த்தாற்போல் ஆளுயரத்தில் இருந்த ஜன்னல் வழியே தப்பி ஓடலாமென்றால், அதிலுள்ள மூங்கில் பட்டைகளை குறைந்த பக்ஷம் முறித்தெறிவதற்குக் ஐந்து நிமிஷங்களாவது வேண்டும்.
அதற்குள் மாரி… உள்ளே ஓடிவந்தாள்; ‘என்னங்க,என்ன பண்றது?” என்று பரிதவித்தாள்.
“பரவாயில்லை. முடிஞ்சா அவனுங்களைக் கொஞ்சம் எப்படியாவது தயக்காட்டிரு… அதுக்குள்ளே….”
“சரிங்க” – அவள் வெளியே ஓடினாள்.
நான் மூங்கில் பட்டையில் கை வைத்து இழுத்தேன்; முற்றத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கதவிடுக்கு வழியாகக் கவனித்துக்கொண்டேன்.
வெளியே கதவு திறக்கப்பட்டது. திறந்தவுடன் இரண்டு ஒருவன் சட்டைக்கார சார்ஜெண்ட்; போலீஸ்காரர்கள் உள்ளே வந்தனர்.
அடுத்தவன் ஸ்பெஷல் போலீஸ்.
“இங்கே யாரு இருக்கிறது?” என்று இரும்புச் சட்டி கவிழ்த்திய ஸ்பெஷல் போலீஸ் அதிகார தோரணையில் அந்த கேட்டான். மாரி குழைந்து குழைந்து சிரித்துக்கொண்டே, “நான்தானுங்க” என்றாள்.
அவள் இடுப்பில் இருந்த ஜீவா போலீஸ்காரருக்கு லால் சலாம் போட்டான்!
“ஓம் புருஷன்?”
‘அவரு வெளியிலே போயிருக்காரு. வாங்க, இப்படி உட்காருங்க” என்று மார்பை நிமிர்த்திக்கொண்டு சாகசம் செய்தாள் மாரி. ஆனால், அவர்கள் அதற்கு மசியவில்லை.
நான் முதல் பட்டையை எடுத்துவிட்டேன்.
“சீ நாயே! உள்ளே ஒரு பய வந்தான்னு ஆள் சொல்லுது” என்று முறைத்தான் சார்ஜெண்ட்.
“யாரு, ஆளா? ஐயா, நான் ஒண்டியாத்தானே இருக்கேன்” என்றாள் மாரி.
“ஓம் பேச்சை யார் நம்புறது? வீட்டைப் பார்த்துத்தான் ஆகணும்.”
நான் இரண்டாவது பட்டையைப் பிடுங்கிவிட்டேன். மாரியால் இனிக் குழைய முடியாது. எதிர்த்துப் பேசினாள்: “ஆம்புளே இல்லாத வீட்டிலே வந்து அதட்டுதியளே!” என்றாள்.
“சீ தேவடியாமுண்டே…வாயைப் பாரு!
“உள்ளே போய்ப் பார்த்துட்டு வா!” என்று உத்தரவிட்டான் சார்ஜெண்ட்.
“பார்க்க முடியாது!” என்று கோபாவேசமாய் வழி மறித்தாள் மாரி. நான் மூன்றாவது பட்டையையும் எடுத்தெறிந்து விட்டேன். அந்தப் போலீஸ்காரன் அவளைத் தள்ளிவிட்டு முன்வர உள்ளே எண்ணினான். அவளோ “நீ போறதைப் பார்த்துப்புடுதேன்” என்று முண்டி விழுந்து வழிமறித்தாள். நான் நாலாவது பட்டையைத் தொட்டுவிட்டேன். அதையும் எடுத்துவிட்டால், வெளியே தாவிவிட முடியும்!…
மாரியின் வழி மறிப்பு ஓரளவுக்குத்தான் பலித்தது.
மறுகணம் நான் பிடிபட்டிருப்பேன். ஆனால், அவள் செய்த அந்தக் காரியம்! திடீர் என்று ஒரு சப்தம்; கிரீச் சென்ற கூக்குரல்… ஐயோ என்ற அலறல்!
அப்பா! என்ன கோரம்!
மாரி, தான் பெற்ற பிள்ளையைத் தன் கையாலேயே நிலைக் கதவில் மோதியறைந்தாள்! என் கண்கள் சுளுக்குவது போலிருந்தன.
மறுகணம் “ஐயோ! குழந்தையைக் கொன்னுட்டானே பாவி, கொன்னுட்டானே” என்று ஓலமிட்டாள் மாரி.
உடைபெற்ற முட்டையின் கருச்சிதைவு போல அந்தப் பாலகனின் மண்டை சிதறி, கூழும் நுரையுமாய் சிந்திப் பரவியிருந்தது. செக்கச் சிவந்த ரத்தம் தரையிலும், சார்ஜெண்டின் உடையிலும் நிலையிலும் தெறித்திருந்தது!
நான் பட்டையை எடுத்துவிட்டேன். தலையை உள்ளே கொடுத்தேன்.
அதற்குள் முற்றத்தில் அக்கம் பக்கத்துத் தொழிலாளர்கள் எல்லாம் மாரியின் குரல் கேட்டு ஓடிவந்தனர். அந்த சார்ஜெண்டும் போலீஸும் திகைத்து மரமாய் நின்றனர். இம்மாதிரியான தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
பெற்ற தாயேதான் கொன்றாள்: எனினும் பிறன் மேல் குற்றம் சாட்டுகிறாள்! உலகம் எதை நம்பும்…?
நான் ஜன்னல் வழியாகத் தாவிக் குதித்து, தென்னந்தோப்பு வழியாகத் தப்பித்து ஓடி, இன்னொரு ‘வளை’யை நாடி ஓடினேன்… போகும்போதே நினைத்தேன்: ‘அப்பா! மாரியின் தியாகம் எவ்வளவு மகத்தானது! அதைவிட, அந்தப் பாலகன் ஜீவா!…. அந்த நள்ளிரவில் எங்கள் செங்கொடி மேலும் சிவப்பேறியது. அந்தப் பச்சைப் பசும் பாலகனின்
தியாகத்துக்கு எங்கள் கட்சி முழுதுமே தலை வணங்க வேண்டும்!’
எப்படி இருக்கிறது பார்த்தாயா?
‘அட, பாவிகளா! ஒரு மனிதன் ஆபத்திலிருந்து தப்புவதற்காக, ஒரு தாய் தன் மகனையே கொல்வாளா? இது எங்கேயும் நடக்கக்கூடியதா?’ என்று நினைக்கலாம். ஆம், ‘கற்பனையைவிட அதிசயமாகத்தான் இருக்கிறது உண்மை!’
ரகுநாதா, என்ன இருந்தாலும் நீ ஒரு கதாசிரியன். ஆனால் இன்றைய கதாசிரியர்களான நீயும் உன் சகாக்களுமோ…..? நீங்கள் இன்றும் எதைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? தான் பெற்றெடுத்த குழந்தையின் பசி முகத்தைக் காணப் பொறுக்காத தாய் அந்தக் குழந்தையை நல்லதங்காளைப் போல் கிணற்றில் தள்ளிக் கொலை புரியும் அவல நிலையை உருக்கமாகச் சித்திரிக்கிறீர்கள். வாழ்வுப் போராட்டத்தில் வழிவகை தெரியாது இருளில் கிடந்து மாண்டு மடியும் அப்பாவி மக்களின் துன்பங்களை வருணிக்கும் அழுகுணிச் சித்தர்களாக வேஷம் போடுகிறீர்கள்.
ஆனால், இன்றைய உலகம் அதுவல்ல. உங்கள் ‘அனுதாப’த்துக்குரிய அந்த மக்கள் உங்களைப்போல் இன்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கவில்லை. நமது பெண்கள் மகோன்னதமாக வளர்ந்துவிட்டார்கள். தான் பெற்றெடுத்த பிள்ளையை நேசிப்பதுபோல், உலக மக்கள் அனைவரையும் நேசிக்கும் தாய்மார்கள் தோன்றிவிட்டார்கள், ஐயாயிரம் தொழிலாளிகளின் நலனுக்காக, தங்கள் வர்க்கத்தின் நலனுக்காக, வெற்றிக்காக, தம்மையும் தம் குழந்தைகளையும் பலியிடும் வீரத் தாய்மார்கள் தோன்றிவிட்டார்கள்!
அவள்-மாரி செய்தது கொலைதான்!
ஆனால் அடுத்த தடவை அவளை நான் சந்தித்தபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா? “என்னங்க இந்தப் புள்ளெ பெத்திடுவேன், ஆனா, நம்ம சங்கம் செத்தா…” என்று கம்மியடைத்த குரலில் கூறியவாறே கண்ணீர் பெருக்கினாள் மாரி.
ஆம்… அவள் புரட்சிப் பாதையிலே வீரநடை போட்டுச் செல்லும் புதுமைப் பெண்! அந்தப் பாலகனின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் மஹிராவணனைப்போல் ஆயிரமாயிரம் வீரர்கள் தோன்றுவார்கள். எங்கள் கருத்துக்களே உனக்கு வெறும் ரத்த வெறியாகப் படலாம். கதாசிரியர்களான நீங்கள் கம்பன் அன்றே பொதுவுடைமைக் கனவு கண்டுவிட்டான் என்பீர்கள். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று வெறுமனே பஜனை பாடுவீர்கள். ஆனால் அந்தக் கனவைப் பிரத்தியட்ச உண்மையாக்கும் போரட்டத்தில், ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போட முன்வரமாட்டீர்கள். சமூகம் தானாகவே மாறும் என்று சொல்லும் வர்க்கப் போராட்டத்தின் வைரியான் கிரென்ஸ்கீய சமரசவாதியல்ல நான். சமூகத்தை நாமேதான் மாற்றியமைக்க வேண்டும் மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிற முற்போக்குவாதி நான்.
நித்தம் நித்தம் செத்துக்கொண்டிருக்கும் சாவுப் போராட்டத்தில் வெற்றி பெறுவதைவிட, வாழ வேண்டும் என்ற உரிமைப் போரட்டத்தில் செத்து மடிந்தாலும் அதுவே வெற்றி. இந்த உண்மையைத்தான் மாரியும் அவளது வர்க்கமும் தங்கள் தியாகத்தின் மூலம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
ஆனால், இந்தக் கருத்துக்களையெல்லாம் நீ எவ்விதம் ஏற்றுக்கொள்ளப் போகிறாயோ? எங்கள் வாழ்க்கையில் இதுபோல ஏடும் நாடும் அறியாத எண்ணற்ற தியாக சரித்திரங்கள். அவற்றை அறிந்துகொண்டால்-?
சொன்னதையே நான் சொல்கிறேன். நான் கலைஞன் அல்ல. நான் நீயாக முடியாது. ஆனால் நீ நானாக முடியும்.
ஆகவே, வாழ்வின் குரூர வசீகரங்களைக் காண என்னிடம் வருகிறாயா? வா, வா, உன்னை மட்டுமல்ல. உங்கள் குலத்தையே அழைக்கிறேன். அன்புள்ள,………..
1947.



