
சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்
காதல் கதை!
அன்புள்ள பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு,
நமஸ்காரம்.
ஆண்டு மலருக்கு என்னிடமிருந்து அருமையான காதல் கதை ஒன்றை எதிர்பார்ப்பதாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றி விடுவது என்ற வைராக்கிய சித்தத்தோடுதான் நானும் நாலு நாட்களாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறேன். இந்த நிமிஷம் வரை ஒரு இழவு காதலும் உதயமான பாட்டைக் காணோம். மேலும் இப்போது எனக்கிருக்கும் தொல்லைகளில் காதலைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. இப்போது என் சிந்தனையில் இருப்பது காதல் அல்ல; கத்தரிக்காய்தான். ஏனெனில் மத்தியானச் சமையலுக்குக் கத்தரிக்காயோ வேறு என்ன இழவுக் காயோ வாங்கிவர மார்க்கெட்டுக்குச் சென்று வரவேண்டும். இந்த அழகில் கைப்பிடித்த அருமை மனைவி அருகில் இருந்தாலும்கூட, காதலைப் பற்றி எங்கே நினைக்க முடியும்?
மனைவியோ மத்தியானச் சமையலுக்கு செலவு பட்ஜெட்டுடன் வந்து நிற்கிறாள்! கையிலிருக்கின்ற ஒன்றரை அணாவையும் செலவழித்து விட்டால், அப்புறம் யாரிடமாவது கைமாத்து வாங்கிவர, கார்ச் செலவுக்குக் கூடச் சில்லரை இராதே என்ற கவலை எனக்கு. மனைவியோ கத்தரிக்காய் வாங்குவதற்காக, பணம் கேட்டு நிற்கிறாள்; நீங்களோ காதல் எழுதித் தந்தால் பணம் தருவீர்கள். எனவே இந்தச் சமயத்தில் நான் காதலாவது கத்தரிக்காயாவது என்று அசிரத்தையாய் இருக்க முடியாதுதான். ஏனெனில் என்னைப் பொறுத்தவரை. இந்த சந்தர்ப்பத்தில் காதல் இல்லை யென்றால், கத்தரிக்காயும் இல்லை அல்லவா…?
இருங்கள் ஏதோ கூச்சல் கேட்கிறது. என் வீட்டுக்கு எதிர்த்தாற்போலுள்ள ரேஷன் கடையில் காலை ஆறு மணிக்கே வந்து ஆறவுன்ஸ் அரிசிக்காக, க்யூ வரிசையில் தவம் கிடக்கின்ற ஜனங்களின் கசமுசப்புத்தான். இந்த அதிகாலைப் பொழுதிலேயே அந்த அடைத்த கடையின் முன்னால் புழுத்த அரிசிக்காக ஆணும் பெண்ணும் தவம் புரிகிறார்கள். தவத் துக்குப் பயந்து பிரசன்னமாகிக் கேட்டு வரத்தைத் தந்து விட்டுப் போக, ரேஷன் கடைக்காரன் தெய்வமா என்ன? அவன் எப்போதெப்போது வந்து சேர்கிறானோ? அதோ அந்த க்யூ வரிசையில் எத்தனை எத்தனை வாலிபர்கள் நிற்கிறார்கள்! அழகான யுவதிகளும் தான் நிற்கிறார்கள்! “அவர்களில் இருவரை ஆணும் பெண்ணுமாகப் பொறுக்கி, காதல் கதை யைத் தட்டிவிடுங்களேன்! கற்பனைக்கா பஞ்சம்?” என்று தாங்கள் கூசாமல் சொல்லலாம். கண்டதும் காதல் என்ற கதைதான் இப்போது ‘அவுட் ஆப் டேட்டாகப் போச்சே. மேலும், அங்கு கால் கடுக்க நிற்கும் வாலிப உள்ளங்களில் ஆறு அவுன்ஸ் அரிசியைத் தவிர ஏதாவது சிந்தனை இருக்கவா போகிறது? அவர்களைப் பார்த்தவுடன் எனக்கும் கூட ஆறவுன்ஸ் சிந்தனைதான் மேலிடுகிறது. நானும்தான் இந்த வார ரேஷனை வாங்கியாக வேண்டும். ஆனால் ரேஷன் வாங்குவதற்கு முன்னால், முதலில் பணம் பார்த்தாக வேண்டும். பணம் பார்த்தாக வேண்டுமென்றால், தற்சமயம் தங்களுக்கு ஒரு காதல் கதை எழுதியாக வேண்டும். எப்படிப் பட்ட தர்ம சங்கடம் பார்த்தீர்களா?
சரி. நான் இப்படியே கதையளந்து கொண்டு போனால், நீங்கள் பணமும் கொடுக்கப் போவதில்லை; என்னு டைய பணத் தேவையும் மறைந்துவிடப் போவதில்லை. எனவே நான் இப்போது எப்பாடுபட்டேனும் ஒரு காதல் கதையை, கதைத்துத்தான் தீர வேண்டும்.
சரி கதைக்கிறேன்…
காதல் கதை எழுதுவதற்கு ஒரு ஆணும் பெண்ணும் நிச்சயம் வேண்டும். இல்லையா? இதோ அவர்கள்…
மீனாட்சி அழகான யுவதி. எலுமிச்சம் பழம் போன்ற மேனி; எள்ளுப்பூ போன்ற நாசி; கார்மேகம் போன்ற கூந்தல்; கயல்மீனைப் போன்ற கண்கள்; குங்குமப்பூப் போன்ற இதழ்கள்; கொடி போன்ற திருமேனி…
வருணிக்கத் தொடங்கினால், அதற்கு ஓர் எல்லை கிடையாது. ஆனால், என் வயிற்றுப் பசிக்கு எல்லையுண்டு. எனவே…
மீனாட்சியைப் பற்றியா சொன்னேன்! அவள் பருவ யுவதி. வயது பதினாறுக்கு மேலிருக்கும். அவள் தனது பருவத்தைப் பற்றிக் கவலை கொள்வதைவிட, அவளுடைய பெற்றோர்களுக்குத்தான் அதைப் பற்றி அதிகப்படியான கவலை. ஏனெனில் அவள் வீட்டுக்குள் அடங்கி உட்கார்ந்து மூன்று வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் அவளுக்குக் கல்யாணப் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெற வில்லை. ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு கல்யா ணத்தைப் பண்ண வேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல் கிறார்கள். மீனாட்சியின் பெற்றோர்கள் ஆயிரம் பொய்களைச் சொல்வதற்கு அஞ்சவில்லை ஆனால், ஆயிரம் பொய்களோடு கையிலும் ஆயிரம் ரூபாயாவது வேண்டாமா? அது மட்டும் இல்லை.
ஏழைக் குடும்பம். உருப்படி அதிகம். தகப்பனார் சம்பாதித்துக் கொண்டு வந்து கொட்டும் பணம் வயிற் றுக்குள் கொட்டுவதற்கே சரியாகிவிடும். இந்த அழகில் பெண்ணுக்கு வரன் பார்த்துச் சீர் சிறப்புச் செய்து கல்யாணம் செய்து வைப்பது எவ்வாறு சாத்தியம்? மீனாட்சி என்னவோ கண் நிறைந்த அழகியாகத்தான் இருந்தாள், இருந்தாலும், கையைப் பிடிக்க வருபவன் அழகை மட்டும் தானா கவனிக்கிறான்? கழுத்து நிறைந்த நகைகள் கிடந்தால் மந்திப் பிறவிகளைக்கூட, மகாலக்ஷ்மிகளாக மதிக்கும் இன்றைய உலகில் அவள் உடம்பில் ‘அஞ்சு களஞ்சித் தங்கமாவது வேண்டாமா?’
இந்த உலகமே ஒரு தினுசானது. பணம் படைத்தவர்கள் வீட்டுப் பெண்கள் வருஷக் கணக்காய் வீட்டுக்குள் அடங்கியிருந்தாலும், அக்கம்பக்கத்தார் கொஞ்சங்கூட வாயசைக்க மாட்டார்கள். ஆனால் இல்லாதவன் வீட்டுப் பெண், எளியவனி வீட்டுப் பெண்ணுக்குச் சீக்கிரத்தில் கல்யாணமாகாவிட்டால், ஊரில் நாலு தினுசாய்ப் பேச் சுக்களில் ஒரு தினுசுப் பேச்சாவது மீனாட்சியின் பெற்றோர் களின் காதில் விழாமலா போகும்? விழத்தான் செய்தது. பெண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்க வகை யில்லையே என்று அவர்களும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால், மீனாட்சிக்கு இப்போது வேறு கவலை. அது என்ன என்று சொல்வதற்கு முன் உங்களுக்கு இன்னொரு விஷயத்தை முதலில் சொல்லியாக வேண்டும்.
காதல் காதல் என்று துடிக்கிறீர்களே! அந்தக் காத லால் வந்த கவலைதான் அவளுக்கு. மீனாட்சியின் கவலை யைப் பற்றி உங்களுக்கென்ன கவலை? காதல் வந்து விட்டதல்லவா? இனிமேல், நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து சுவாரசியமாகப் படிக்கத் தொடங்க வேண்டியதுதானே! சரி, கதையைச் சொல்லுங்கள் என்று நீங்கள் அவசரப் படுவது எனக்குத் தெரியத்தான் செய்கிறது. சொல்லி விடுகிறேன்…
இரண்டு மாதங்களுக்கு முன்னால், பட்டணத்திலிருந்து மீனாட்சி வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். சும்மா இரண்டு மாச லீவைப் போக்க வந்தவன் அவன். எதிர் வீட்டுச் சாம்பசிவ மாமாவின் அண்ணா பிள்ளை அவன். அவன் தானே கதாநாயகன் என்று கேட்கிறீர்களா? ஆமாம், அவனேதான். பெயர்? நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்துக் கொள்ளுங்களேன்! ராமசாமி – “சேச்சே! அதைவிட சொக்கலிங்கம் என்றே வைத்துக் கொள்வோம். பேர்ப் பொருத்தமாவது இருந்து தொலையட்டுமே!
சொக்கலிங்கம் ஆடவர் பெண்மையை அவாவும் அழகள்தான். குறுகுறுவென்று விழிக்கும் கரிய கண்மணிகள்; உதடுகள்; கற்றைச் புன்னகை தவழும் வடிவார்ந்த சுருள்கள் கொண்ட அழகிய கிராப். மன்மத அவதாரம் தான் போங்கள்!”
சொக்கலிங்கம் ஊரிலிருந்து வந்து சேர்ந்த அன்றைத் தினத்தில் மீனாட்சி வீட்டு ஜன்னலருகே நின்று வண்டியை விட்டு இறங்கிய சொக்கலிங்கம் மீனாட்சியைக் கவனித்தான்; மீனாட்சியும் அவனைக் கவனித்தாள். இருவர் கண்களும் ஒரு கணம் எதிரெதிராக வந்த அம்புகள் ஒன்றுக்கொன்று மோதி விழுவதுபோல் கீழே நோக்கின.
கதையை அதிகம் விரிப்பானேன்? அன்று முதல் மீனாட்சியின் கண்களும் சொக்கலிங்கத்தின் கண்களும் இப்படியே பல தடவை மோதி மோதி விழுந்தன.
பிறகு கேட்பானேன்? காதல் பிறந்தேவிட்டது? கண்களிலே ஆரம்பித்த காதல், பிறகு உதடுகளில் நெளிந்த புன்னகையால் பேசிக் தெம்பு பெற்றது; ஊராரும் உற்றாரும் அறியாமல் இருவரும் ரகசியமாகப் பேசிக் கொள்ளும் பேச்சினால் வளர்ச்சி பெற்றது; வாய்க்கால் கரை படித்துறையில் ஒருவரை யொருவர் தொட்டுப் பழகிய ஸ்பரிச சுகத்தில் மின்சாரமாகச் சில்லிட்டுப் பரந்தது; அந்தி யிருளில் மெல்லிய நிலவொளியிலே ஐக்கியம் கண்டது. இப்படியாக அவர்கள் இருவரது காதலும் அந்த நிலவைப் போலவே வளர்ந்து பெருகிப் பூர்ணிமை மயமாகப் பரிண மித்தது. ஆனால் அந்தக் காதலின் பூர்ணிமைப் பரிணமிப்புக்கு முன்பே, மீனாட்சியின் கருப்பையிலும் ஓர் உயிர் பரிணமித்து உருப்பெறத் தொடங்கிவிட்டது?
ஆம். இரண்டு மாத காலத்தில் மீனாட்சி கர்ப்பவதியாகி விட்டாள்.கலியாணமாகாத கன்னி கர்ப்பவதி, சொக்கேசன் தந்த வரப்பிரசாதம்; வயிற்றிலே இரண்டு மாதம்! மசக்கை தலை காட்டியது. வாயும் மனமும் குமட்டியது. வீட்டுக்குத் தெரியாமல் அவள் அந்தக் குமட்டலை மூடி மறைக்க அரும் பாடு பட்டாள்; தவியாய்த் தவித்தாள். அந்தத் தவிப்பை வருணிப்பானேன்? காதல் கதையில் அபசுரம் போல் அந்தக் கண்றாவிகளெல்லாம் எதற்கு?
மீனாட்சி சொக்கலிங்கத்தை எவ்வளவோ வேண்டிக் கொண்டாள்; காலில் விழுந்து மன்றாடினாள், தன்னைக் கல்யாணம் செய்துகொண்டு தன் மானத்தைக் காப்பாற்றும் படி கெஞ்சினாள்; வற்புறுத்தினாள். ஆனால் காதல் விவகாரத்தில் அஞ்சா நெஞ்சனாக இருந்த சொக்கலிங்கமோ, கல்யாணம் என்றதும், கோழையாக மாறிவிட்டான். இருந்தாலும், மீனாட்சியின் பரிதாபமும், அவனது மனச்சாட்சியும் அவனை மனிதனாக்க முயன்றன.
கடைசியில் ஊர்ப் பொல்லாப்புக்கு அஞ்சித் தவித்த மீனாட்சியும், உற்றார் உறவினரை எதிர்த்து நிற்கத் தைரிய மில்லாத சொக்கலிங்கமும் ஒருநாள் இரவு ஊரைவிட்டே ஓடி விட்டார்கள். மறுநாள் முதற்கொண்டு, எதிர் வீட்டுப் பையனோடு ஓடிப்போய்விட்ட மீனாட்சியைப் பற்றிப் பேசுவது, சும்மா கிடந்த ஊர் வாய்க்கு அவல் கிடைத்த வெற்றியாகி விட்டது. “இரண்டுபேரும் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?” என்று எல்லோரும் மூக்கின்மேல் விரலை வைத்து வியந்தார்கள். அவர்கள் இருவரும் தங்கள் இரண்டு பேருக்காக மட்டும் ஓடவில்லை, அழையா விருந்தாளியாக வந்து புகுந்துவிட்ட மூன்றாவது பேர்வழிக்காகத்தான் ஓடினார்கள் என்பது அந்தக் காதலர்களைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
மீனாட்சியின் பெற்றோருக்கு ஏற்பட்ட தலைக் குனிவைப் பற்றிச் சொல்லவே நீதமில்லை. மேலும், காதலர்கள் அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, நமக்கு மட்டும் அங்கு என்ன வேலை! காதலர்களை நாமும் பின் தொடர்வோம்
காதலர்கள் பட்டணத்துக்கு ஓடி வந்துவிட்டார்கள். அப்புறம் இதற்குமேல் கதையை எப்படித் தொடர்வது? பட்டணத்துக்கு ஓடிவரும் காதலர்கள் என்ன ஆனார்கள்? என்ன ஆவார்கள்?
பட்டணத்துக்கு ஓடிவரும் கள்ளக் காதலர்களுக்கு வர வேற்பு அளித்து விருந்துபசாரம் செய்யப் பட்டணத்தில் பங்களாவா கட்டி வைத்திருக்கிறார்கள்? சித்தப்பா வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட வந்த சொக்கலிங்கத்துக்கும் பெற்றோர் சம்பாதித்துப் போடும் சோற்றைத் தின்று வளர்ந்த மீனாட்சிக்கும் எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியதும் வரவேற்க, பசிதான் காத்திருந்தது.
கையிலிருந்த காசுக்கு ஏதோ சாப்பிட்டார்கள். அப்புறம் அவர்கள் இருவரும் எங்காவது தங்குமிடம் கிடைக்குமா என்று யோசித்தார்கள். சொக்கலிங்கம் ஒரு நண்பனின் வீட்டில் சில நாள் பாட்டுக்கு இடம் பிடித்தான். ஆனால், காதல் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? காதல் பிழைப் பதற்குக் கையில் காசு வேண்டாமா? சொக்கலிங்கம் எங்கெங்கோ வேலை தேட முயன்றான். ஒரு இடத்திலும் வேலை கிடைக்கவில்லை. தெய்விகக் காதலுக்கு ஆளான அந்த இளந்தம்பதிகள் பட்டினி கிடந்து மாளக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தோடு எந்தத் தீனதயாபரன் சொக்க லிங்கத்தை வெற்றிலை பாக்கு வைத்து வேலைக்கு அழைக் கிறான்?
கையிலிருந்த நோட்டுகள் வெள்ளிப் பணமாகி சில்லரையாகி,செப்புக் காசாகி நாளுக்கு நாள் கரைந்து கொண்டே வந்தது. இருவர் உடலும் நாளுக்கு நாள் மெலிந்தும் வந்தது. ஆனால் மீனாட்சியின் வயிற்றுக்குள் இருந்த சிசு மட்டும் பெற்றோரின் கவலையையே அறியாமல் நிர்விசாரமாய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக வளர்ச்சி பெற்று வந்தது.
ஒரு நாள் இரவு சொக்கலிங்கத்துக்குப் புதியதொரு ஞானோதயம் பிறந்துவிட்டது. காதலை விட, மீனாட்சியை விட, அவள் வயிற்றில் வளரும் தன் ரத்த பந்தமான சிசுவைவிட, தன் உயிராசைதான் பெரிது என்ற உண்மை அவன் உள்ளத்தில் உதயமாகி விட்டது. அந்த ஞானபோதம் பிறந்தவுடனேயே, சொக்கலிங்கேசுவரர் அந்தர்த்தியான மாகிவிட்டார்! ஆம், சொக்கலிங்கம் அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் விட்டான்!
மீனாட்சியின் கதி நிர்க்கதியாயிற்று!
நடுத்தெருவில் விடப்பெற்ற மீனாட்சி நாதியற்றுப் புலம்பினாள். புலம்பினால் வயிறு நிறைந்துவிடுமா? கடைசியாக, அவளும் எப்படியோ நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் துலக்கித் தன் வயிற்றைக் கழுவினாள். ஆனால், வயிற்றிலுள்ள பிண்டத்தைக் கழுவவில்லை; கழுவ விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லை
அப்புறம்……
மாதங்கள் சென்றன.
ஒரு நாள் காலையில் மீனாட்சி தர்ம ஆஸ்பத்திரியில் ஒரு அழகிய ஆண் மகவுக்கு, அப்பன் முகத்தை அப்படியே உரித்து வைத்திருந்த ஆண் பிள்ளைச் சிங்கத்துக்கு, பரணி நட்சத்திரத்தில் பிறந்த பாலகனுக்குத் தாயானாள்.
ஆஸ்பத்திரி என்பது நோய்க்கு மருந்து கொடுக்குமே தவிர, பசிக்குச் சோறு கொடுக்கும் அன்னச் சத்திரம் அல்லவே! எனவே ஒருநாள் காலையில் மீனாட்சி தன் கைக்குழந்தையே துணையாக, ஆஸ்பத்திரியை விட்டு நடுத் தெருவுக்கு வந்தாள். பழையபடியும் வயிற்றுப் பிரச்னை தலை தூக்கியது. முன்னர் வேலை பார்த்த வீடுகளுக்குச் சென்று வேலை கேட்டாள். கைப்பிள்ளைக்காரியை வேலைக்கு வைத்துக்கொண்டு கஷ்டப் பட, நாகரிகம் தெரிந்த பட்டணத்து வாசிகளுக்குப் பைத்தியமா, என்ன?
எங்கும் வேலை கிடைக்கவில்லை. பசி! பட்டினி!
அவள்தான் பட்டிளி கிடந்தாள்; அவள் மகனோ தாயின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சித் தீர்த்தான்; பசியாறினான்! ஆனால் பட்டினி கிடந்து மாளும் தாயின் மார்பிலிருந்து வற்றா வளஞ் சுரக்க, அவளென்ன அமுத சுரபியா? அட்சய பாத்திரமா?
குழந்தைக்கும் போதிய பாலில்லை. அவள் வேலைக்காக அலைந்தாள்; குழந்தைக்கு அரை ஆழாக்குப் பாலுக்காக அலைந்தாள். ஆனால் எங்கெங்கோ கை நீட்டிக் கேட்டும். கண்ணீர்விட்டுக் கெஞ்சியும் அவளுக்கு எதுவும் கிட்டவில்லை, அழவும் சீவனற்று அடங்கி ஒடுங்கிப்போன கைக் குழந்தையோடு, எய்த்துக் களைத்துச் சோர்ந்துபோய் இருள் சூழ்ந்து கிடக்கும் தெரு மூலையில் நாதியற்றுப் போய் நின்று கொண்டிருந்தாள். ஏனென்று இரக்கப்பட்டுக் கேட்க ஒரு மனிதப் பிறவியைக்கூடக் காணாது மயங்கி நின்றுகொண்டி ருந்தாள்.
அந்தச் சமயத்தில்தான் அந்தக் குரல் அவள் காதில் விழுந்தது.
”என்னாம்மே! சும்மா நிக்கிறே?”
அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள். அவள் அருகே ஒருவன் கையில் மணிப்பர்சுடன் அவளையே வெறித்து நோக்கியவாறு நின்றான். அவள் மடியிலே அந்தப் பரணி நட்சத் திரப் பாலகன் புடலம்பூவாய் வாடிக் கிடந்தான். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வானாமே! ஆனால் இந்தப் பாலகன் தரணியை ஆள்வதற்கு முன்னால், முதலில் அதில் தரித்து உயிர் பிழைத்திருக்க வேண்டுமே!
“என்னாம்மே! வார்ரியா?” என்று கேட்டான் அந்த ஆசாமி.
“ஐயா! குழந்தைக்கு அரை ஆழாக்குப் பால் வாங்கித் தாருங்களேன்” என்று கம்மிய குரலில் கேட்டாள் மீனாட்சி. “வாம்மா. பால் தானா? பாதம்கீரே வாங்கித் தாரேன்” என்று கெக்கலிச் சிரிப்புடன் அபயம் கூறினான் அந்த ஆபத் சகாயன்!
மீனாட்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது.
ஒருதரம் சிந்தித்தாள். இரண்டு தரம் சிந்தித்தாள். மீண்டும் மீண்டும் சிந்தித்தாள். தன் குழந்தை உயிரோடு இருக்க வேண்டுமானால், தான் உயிரோடு இருக்க வேண்டும்; தான் நன்றாகச் சாப்பிட்டால்தான் தன் குழந்தைக்கும் பால் கொடுக்க முடியும்; அதைக் காப்பாற்ற முடியும்……
“என்னாம்மே! பிகு பண்றே!”
அவன் அவள் கையை எட்டிப் பிடித்தான்; அவள் கையை உதறிப் பிடுங்கவில்லை….
மீனாட்சி தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்றி விட்டாள்; காப்பாற்றிக் கொள்வதற்குக் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துவிட்டாள்! இனிமேல் தானும் வயிறார உண்ண முடியும்; தன் குழந்தைக்கும் வயிறாரப் பாலூட்ட முடியும் …….
மாதங்கள் இரண்டு கழிந்தன.
ஒருநாள் மீனாட்சி சோற்றை வாயருகே கொண்டு போனாள்: சோறு நாக்கில் படுமுன்னமே திடீரென்று குமட்டலும் வாந்தியும் குமுறிக்கொண்டு வந்தது! அவள் வறட்டுத்தனமாக ஓங்கரித்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அந்த மாதக் கெடு கழிந்து பல நாட்களாகிவிட்டன.
மீனாட்சி திடுக்கிட்டாள்,
தினம் தினம் வாய் குமட்டியது.
குமட்டியது. வாந்தி வந்தது. மார்பிலும் நாளுக்கு நாள் பால் வற்றத் தொடங்கிவிட்டது. கைக்குழந்தைக்குக் கிடைத்து வந்த பாலை அந்தக் கருக் குழந்தை அபகரித்து விட்டது!
மீனாட்சி பயந்தாள், கையிலே ஒன்று!-… வயிற்றிலே ஒன்று ம்……
ஐயா, பத்திரிகை ஆசிரியரே! தயை செய்து என்னை இத்தோடு விட்டுவிடுங்கள். நீங்கள் காதல் எழுதச் சொன்னது போதும். காதலாம் காதல்! நான் படைத்து விட்ட அந்தப் பேதை மீனாட்சியின் கதியைப் பற்றி என்னால் இதற்குமேல் கற்பனை செய்ய இயலாது. இந்தக் கதையை நீங்களோ அல்லது உங்கள் அருமை வாசகர் திருக்கூட்டமோ எப்படி வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளுங்கள். அவளது கதியைப் பற்றி நினைக்கவே எனக்குப் பயமா யிருக்கிறது!
தயை செய்து இந்த அரைகுறைக் கதையை ஏற்றுக் கொண்டு தங்கள் சன்மானத் தொகையை உடனே அனுப்பி வைத்து உதவுங்கள். இல்லையென்றால், இந்த வாரம் எங்கள் ரேஷன் அரிசியின் கதி என்னவாகும் என்று எனக்குத் தெரியாது.
அன்புள்ள
ரகுநாதன்
-1952
★ ★ ★



