சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்

கூண்டுக் கிளி

சறுக் சறுக்கென்று கேட்டுக் கொண்டிருந்த பாதக் குரடு களின் ஓசை நின்றது. அதைத் தொடர்ந்து பாராக்காரன் ஓங்கியடித்த பதினோரு மணி ஓசையும் கேட்டது. கப்பிக் கவிந்து கனத்துத் தொங்கிய இருளைப் பிளந்துவந்த அந்த மணியோசை காற்றோடு கலந்து மடிந்து மறைவது பயங்கர மாகத்தானிருந்தது.

மணிச் சத்தம் கேட்டதும் பிளாக்குக்கு வெளிப்பக்க முள்ள வராந்தா மூலையில் வாடை தாங்காது கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த வார்டர் விளக்கை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஸெல்லாகப் புள்ளி குத்தி வர எழுந்தான். இரும்புக் கிராதிக்குப் பக்கத்திலுள்ள சுவரில் மாட்டப்பட்டிருந்த புகை மண்டும் விளக்கின் சுடர் அமைதி இழந்து நெளிந்து கொடுத்தது.

மணியோசை காதில் விழுந்ததும் ஏற்கெனவே அரைத் தூக்கத்திலிருந்த நான் எழுந்து உட்கார்ந்தேன்.

ஸெல்லுக்குள்ளே கொசுக்களின் காதையடைக்கும் இரைச்சல். எழுந்திருந்து கதவின் பக்கம் வந்து அமர்ந்து முட்டைக் கட்டிக் கொண்டேன். தூக்கம் கலைந்துவிட்ட போதிலும் கண்ணின் கனம் இறங்க வில்லை. காயவைத்த புளியம் பசைபோல் கண்ணிமை கள் இறுகின. ஊதை வாடையும் கொசுக் கடியும் உடலை வருத்தின. வாடை தாங்காமல் கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டேன். ஆனால், கம்பளியிலுள்ள செள்ளுப் பூச்சிகளின் அரிப்பைத் தாங்க முடியா மல், கம்பளியையும் சுருட்டி மூலையில் எறிந்தேன். சொக்கி வரும் தூக்கத்தில் சிறைச் சுவரில் சாய்ந்து கொள்ளலாம் என்றால், அதில் புதிதாக அடிக்கப் பெற் றிருந்த கீலெண்ணெய் இன்னுங் காய்ந்த பாடாய்க் காணோம். ஆதலால் முட்டைக் கட்டியவாறே, முகத் தைக் கால்களுக் கடியில் புதைத்துத் தூங்க முயன்றேன்.

சுவரிலிருந்த புகை மீண்டும் விளக்கிலிருந்து ஒரு ஒளித் துண்டம் சிறைக் கம்பிகளால் வகிரப்பட்டு ஸெல்லுக்குள் விழுந்தது. பிளாக்குக்கு வெளியே உள்ள வான வெளியில் தூறல் பிசு சுத்து அழுதது. கூரைச் சரிவிலிருந்து வடிந்து விழும் நீர் சொட்டுச் சொட்டாகப் பக்கத்து வாதாம் மரத்திலைகளில் விழு கூடக் கேட்டது. மழையின் சிணு சிணுப்பு;

எங்கோவிட்டு விட்டுக் கடூரமாய்க் கத்திக் கொண்டிருக்கும் மடைத் தவளைகளின் முணுமுணுப்பு ஸெல்லுக் குள்ளே நீங்காரிக்கும் கொசு இரைச்சல்; பக்கத்து அறைகளிலே தூங்கும் கைதிகளின் பயங்கரமான குரட்டைச் சப்தம் – எல்லாம் எனக்குப் பழகிப் போன பாவத்தால் பயத்தை மூட்டாவிட்டாலும் எரிச்சலைக் கிளறி விட்டன.

எழுந்து சென்ற வார்டர் ஒவ்வொரு ஸெல்லாகப் புள்ளி குத்தி விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

“வார்டரையா, வத்திப் பெட்டி இருக்குதா?” என்ற குரல் விளக்கொளியோடு மிதந்து வந்தது. வார்டர் நின்றான்.

“யாரது? சிந்தாமணித் தேவனா?” என்று குரல் கொடுத்தான் வார்டர். ஆமோதிப்பு வந்தது. “டே, பீடி இருக்குதா ?” என்று கைதியிடம் கேட்டான்.

“ஒரு கட்டை இருக்குது. எட்டு வாடரு கொணாந்திரதாகச் சொன்னாரு. அவர் தான் சாயங்காலம் பைலுக்குக் கூட வரலியே” என்று அங்கலாய்த்துக் கொண்டான் கைதி.

“அவரு எங்கே போவாரு? மளெ நேரமில்லே. சாராயக் கடை கூப்பிட்டிருக்கும்.. ம் – எங்கிட்ட வத்திப்பெட்டி இல்லை. இந்தா -விளக்கிலே பத்தவச்சிக்க. டேய், அணைச்சிப் போடாதே, பிறவு இருட்டிலே கிடந்து மாளமுடியாது” என்று விளக்கை அறைப்பக்கம் வைத்துவிட்டு நின்றான் வார்டர்.

அறைக்குள்ளிருந்த கைதி விளக்கைத் தூக்கிப் பிடித்துத் தன் பீடியைப் பற்றவைத்துக் கொண்டான். விளக்கை எடுத்துக்கொண்டு வார்டர் திரும்பிவரும்போது “என்ன வார்டர்? இரண்டாம் பாரா முடிஞ்சிட்டுதா?” என்று கேட்டான்.

‘இன்னம் நாலு புள்ளி குத்தணுமே. பதினோரு மணி தானே ஆச்சி, மளெ வேறே சிணுங்கிக்கிட்டிருக்கு” என்று சலித்துக் கொண்டான் வார்டர். பிறகு தன் பையைத் துழாவி பீடி ஒன்றை எடுத்து விளக்கில் பற்ற வைத்துக் கொண்டான். பிறகு “என்ன சார். நாளைக்கி நீங்க வீட்டுக் குப் போயிருவிய, ஜெயிலரையா நேரத்தோடேயே வந்துட் டாருன்னா, சீக்கிரமே அனுப்பிச்சிருவாக” என்றான்.

நான் வெறுமனே தலையை ஆட்டினேன்.

“வந்ததுக்கு இப்ப நீங்க ரொம்ப இளைச்சித்தான் போனிய சார்?” என்று பரிதாபத்தோடு சொன்னான் வார்டர்.

“அப்படித் தெரியலே” என்று பேச்சைச் சுருக்கினேன். வீணாகப் பேச்சை வளர்த்துக் கரும்பு போல் வரும் தூக்கத்தைக் கெடுத்துக் குரங்காயிருக்க விரும்பவில்லை.

வார்டரும் விளக்கை எடுத்துக்கொண்டு வராந்தா மூலைக்குச் சென்றான்.

விடிந்தால் விடுதலை

நான் இந்தச் சிறைக்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வருட காலமாகிறது. திருடியோ, கன்னம் வைத்தோ நான் ஜெயிலுக்கு வரவில்லை. நான் செய்த குற்றத்தின் பெயர்- தேச பக்தி. இந்தச் சிறைவாசமும் எனக்குப் புதிதல்ல. ஏற்கனவே முன்னொரு தடவை இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனை பெற்று, சிறைவாசம் அனுபவித்தேன். நாடு விடுதலை பெறவேண்டும் என்ற ஆர்வம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை; பெண்டு பிள்ளைகளை நினைக்கச் செய்யவில்லை. இன்றோ அவர்கள் – என் மனைவியும் மக்களும் – சொத்துச் சுகங்களை விற்றுத் தின்றுவிட்டு, தன் பலத்தை நம்பி அரைவயிறும் குறை வயிறுமாய்க் காலம் கழிக்கிறார்கள். நேற்றுக்கூட, அவளிடமிருந்து பஞ்சப் பாட்டுப் பாடிக் கடிதம் வந்தது. நான் விடுதலை யடைந்து வரப்போவதை எண்ணி மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தாள். என்னத்தைத் தெரிவித்து என்ன பண்ண? ‘காலிலே ஒரு கட்டையைக் கட்டிப் போட் டால் பையன் சீராகி விடுவான்’ என்றுதான் எனக்கு அவள் கையைப் பிடித்துத் தந்தார்கள். என்னால் நாட்டுக்காக உழைப்பதை, அதனால் சிறைவாசம் தடியடி பெறுவதைத் தடுக்க முடியவில்லை. என் போன்ற தொண்டர்கள் எல்லாம் சேவை செய்தே மடிய வேண்டியவர்கள் தானா…?

போன தடவை என்னுடன் சிறைக்கு வந்தவர்கள் எல்லாம் தியாகிகள்; இளைஞர்கள். அரசியலைத் தெரிந்தோ தெரியாமலோ, நாட்டுக்கு, நாட்டு விடுதலைக்குச் சிறை செல்லவேண்டும் என்ற ஒரே குருட்டு ஆர்வத் துடன் உழைத்து உள்ளே வந்தவர்கள். குறிக்கோளைப் பற்றித் தெளிவு பெற்ற ஞானமில்லா விட்டாலும், கண்முன் தெரியும் பாதையில் செல்லத் தயங்காத வீரர்கள். இந்தத் தடவை ஜெயிலுக்கு வந்துள்ள அந்தக் “குருட்டு” வீரர்கள் அல்ல. அறிவும் அனுபவமும் பெற்று லட்சியப் பாதையின் தடத்தைத் தடவி அறிந்தவர்கள். குறிக்கோளை நோக்கிச்செல்லும் பாதையில் இடை வழிகளிலுள்ள சத்திரஞ் சாவடிகளிலேயே தங்கிவிடக் கூடியவர்களும் இருந்தார்கள்; பதவி வகித்தவர்களும் வந்திருந்தார்கள். இவர்களிடம் பழைய வெறி இல்லை; நிதானம் இருந்தது. ஒன்றிரண்டு பேர் களிடம் சுயநலத்தால் விளைந்த கயமையும் கூட இருந்தது.

இவர்களிடமெல்லாம் பழகிப் பழகி எனக்குக்கூட என்னுடைய லட்சிய வேட்கையின் காங்கை குறைந்தது. பிரச்சினை எழுந்தது. “நாளைக்கு இவர்களை யெல்லாம் விட்டு நான் மட்டும் பிரிந்து செல்கிறேன். ஆனால் வெளியே சென்ற பிறகு?” இந்தப் பிரசினை என்னை அலட்டியது. அதன் மர்மத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் வெளியில் சென்று தீர்மானிக்க வேண்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்து கொண்டேன்.

இந்தத் தடவை சிறைக்குள் வரும்போது எனக்குப் பழைய உத்ஸாகம் இல்லை. முன்னைப்போல் சிறைக் கம்பிகள் கைநீட்டி வரவேற்றதாகத் தெரியவில்லை. சிரிப்பதாகத் தோன்றிற்று. வெறும் சிரிப்பல்ல; ஏளனச்சிரிப்பு.

ஜெயில் சூப்பிரண்டென்ட் உத்தரவு கொடுத்து நான் சிறைக்குள் வரும்போது மணி நாலடித்து விட்டது. சிறை வார்டர் என்னை உள்ளே அழைத்துச் சென்றான்.

சிறைக்குள் தலைவர்களும், ஊழியர்களும் அலுமினியத் தாளங்களை வைத்துக்கொண்டு பருக்கை கொரித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே இருந்த தேச பக்தர்களைக் கண்டதும் என் மனதில் மகிழ்ச்சி துள்ளாடியது. எல்லோரும் என்னை மலர்ந்த முகத்தோடு வரவேற்றனர். அந்த ஒரு தலைவர் மட்டும் என்னை நோக்கிச் சிரித்தார். சிரிப்பிலே விஷம் கலந்திருந்தது. எனக்கு என்னவோ போலிருந்தது. அவருடைய போக்கை என்னால் தாங்க முடியவில்லை. என்னை யெல்லாம் ஊக்குவிக்க வேண்டிய தலைவனிடமிருந்தா நான் ஏதோ செய்யத் தகாததைச் செய்து விட்டதை ஏளனம் செய்வது போல், சிரிப்புப் பிறக்க வேண்டும்?

வயிற்றில் பசி இல்லை. பிரயாண அலுப்பில் வயிறு மந்தித்துப் போயிருந்தது. அதனால் பக்கத்து வாதாம் மரத் தடியில் அமர்ந்து மற்றவர்கள் உணவருந்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கைதிகள் சாப்பிடும் நேரம் இந்தக் காக்கை குருவிகளுக்கு எப்படித் தெரியுமோ? மதில் சுவரைத் தாண்டிப் பறந்து வந்து வாதாம் மரத்தடியில் அமர்ந்து கொண்டன.

நான் தலைநிமிர்ந்து பார்த்தேன். என் மனசில் என்னையும் அறியாமல் ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. என்னால் பாடத்தானே முடியும்? பறக்க முடியுமா?

மரத்திலிருந்த காக்கைகள் கீழிறங்கி இரை பொறுக்கி விட்டு, மதிலைத் தாவிப் பறந்து வானவெளியில் நீந்திச் சென்றன.

நான் யோசித்தேன்: “இந்தச் சிறைக்குள் பறந்து வந்த பறவைகள் அவ்வளவு லகுவில் இதைக் கடந்து போய் விடுகின்றன. ஆனால் தேச பக்தர்களாகிய நாமோ காலில் கட்டிய அடிமைத் தளையின் கனத்தால் பூமிப் புழுதியில் தான் புரள்கிறோம். இந்தச் சிறையிலிருந்து விடுதலை பெற்றால்கூட நமக்குச் சுகமில்லை. வெளியுலகம் எவ்வளவே விசாலமானதாயிருக்கலாம்; இமயம் முதல் குமரிவரை அகண்டு பரந்ததாயிருக்கலாம். இருப்பினும் சிறை சிறைதானே!”

என்னுடைய விடுதலை விசாரத்தைத் தேசபக்தர்கள் கலைத்து விட்டார்கள்.”சரி, ரயிலில் வந்த அலுப்பு இருக்கும். இங்கேதான் இருக்கப் போகிறாரே” என்று ஒருவர் இடை மறித்துக் கூற, எங்கள் சந்திப்புச் சிதறியது.

ஹெட்வார்டர் என்னை நாலாம் நம்பர் ஸெல்லுக்கு அழைத்துச் சென்றான். ஸெல்லுக்குள் விட்டுக் கதவைப் பூட்டியதும் எனக்கு விலங்கிட்ட உணர்ச்சி ஏற்பட்டது; உட்கார்ந்தேன்.

ஜெயிலின் பர பரப்பு ஒழிந்து அமைதி குடி கொண்டது. மாலை வெயில் ஸெல்லுக்குள்ளிருந்த திட்டிச் சன்னல் வழி யாகப் பாய்ந்து விழுந்தது. சாயந்திரம் ஆறுமணியடிக்கும் ஓசையும் கேட்டது.

மறுநாள் முதல் நான் கீலெண்ணெய் நாற்றம், அளிக் கதவின் முனகல், பைலில் உட்காருவது, கஞ்சி குடிப்பது, மதியமும், மாலையும் மண்கலந்த சாப்பாடு, முள்ளங்கி, பூசணி, தடியங்காய், சுரைக்காய் என்ற சதுர்விதக் காய்களை விட்டு வேறு கறியற்ற குழம்பு, உளுத்துக் காம்பிப்போன பழம் பருப்பின் நெடி, மோர் என்ற தத்துவத்தையே மறைத்து விட்ட குழாய்த் தண்ணீர், காணத் துவையல், புழுக்கள் சினை படரும் ஊறுகாய் — இத்தனை சம்பிரமங்களுடன் சாப்பாடு, 20X18 ஆக 360 சதுர அடிப் பரப்புள்ள சிறைத்தளத்தின் சீதம், மதியம் வேப்பமரத்தடியில் நடைபெறும் அரசியல் வகுப்பு – இத்தியாதி நிகழ்ச்சி நிரலை அனுபவிக்க ஆரம்பித்து அங்குள்ள பலரில் ஒருவனாகி விட்டேன்.

ஆனால் சிறைவாசத்தின் கசப்பைவிட அங்கிருந்த அந்தத் தலைவர் – என்னைப் பார்த்துச் சிரித்தாரே அந்தத் தலைவர் – மனசில் ஊட்டிய கசப்பைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. அரசியலோடு அரசியலாய் அவர் அந்தக் கருத்தை இடைச் செருகல் பண்ணினார். ஜெயிலுக்கு வந்து என்னத்தைக் கண்டோம்? நாம் ஜெயிலுக்கு வர வர வெள்ளையனுக்குக் கொண்டாட்டந்தான். நமக்குச் சோறு போட வேண்டும் என்ற கவலைகூடக் கிடையாது. எலியைப் பிடித்துப் பத்தயத்துக்குள் அடைப்பது மாதிரி அடைத்து விடுகிறான். இனிமேலும் நாம் அவனோடு மல்லாடிக் கொண் டிராமல் சமரசப்பான்மையோடு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதுதான். நாடு ஆபத்துக்குள் சிக்கியுள்ள இந்த வேளையில் நாம் கைகட்டி இருப்பது சரியல்ல. ஆகவே விரைவில் நாம் விடுதலை பெற்று நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அதிகாரம் பெறவேண்டும்.’

ஆனால் இந்த உபதேசத்திற்குப் பின்னால், என் கண் காலியாகத் நாற்காலிகள் தான் காலியாகத் தெரிந்தன.

‘இப்படிக் கருதும் தலைவர்கள் உள்ளேயே வந்திருக்க வேண்டாமே’ என்று நான் கருதினேன். “தேச பக்தர்களின் சதையும், எலும்பும், ரத்தமும், இந்தியத்தாயின் சுதந்திரக் கோயிலை எழுப்பத்தானே ஒழிய இப்படிப்பட்ட தலைவர் களின் வீட்டு முற்றத்துக்குத் தளவரிசை போடுவதற்கல்ல” என்று சிந்தித்தேன். இங்குள்ள வீரர்கள் பலரின் கனவுகள் சட்டசபை நாற்காலிகளோடு நின்றுவிடக் கூடாதே என்ற பயமும் மனசில் முளைவிட்டது.

இத்தாலியப் போராட்ட வீரன் கரிபால்டி எப்போதோ சொன்னானாம்: “இளைஞர்களே ! என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். வந்தால் சிறைத் தண்டனை, அடிதடி எல்லாம் ஜென்ம தண்டனை, தூக்குமேடை, கிடைக்கும்; கடைசியில் உங்கள் நாட்டுக்கு சுதந்தரம் கிடைக்கும் !”

இந்தப் பொன் மொழிகளைத் தெரிந்தோ தெரியாமலோ காதில் வாங்கி, போர்க்களம் சென்ற புனித பரம்பரையில் வந்தவனாகவே நானும் விளங்க வேண்டும் என்பது என் ஆவல் ; ஆசை, ஆனால், இந்தத் தலைவரின் யோசனையைக் கேட்டால் இனி ஜெயிலையே மறந்துவிட வேண்டியது தானோ?

அன்றொரு நாள் வெட்டுக் கேஸில் அகப்பட்ட சிந்தாமணித் தேவனுக்குத் தீர்ப்பளித்து விட்டார்கள். கொலை செய்ய முயன்றதாக ஏழு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, மீண்டும் ரிமாண்டுக் கொட்டடிக்கு வந்து சேர்ந்தான். ஆனால் வரும்போது அவன் முகத்தில் கொஞ்சங்கூட வருத்தமில்லை. அவனைப் பார்த்து நான், “என்னப்பா, உன் தீர்ப்பு என்ன ஆச்சி?” என்று கேட்டேன்.

அந்தக் கேள்விக்கு அவன் சொன்ன பதில் என்னைத் திடுக்கிட வைத்தது.

“என்ன சாமி. அந்தப் படுவாப்பயலைத் தீர்த்துப் புடனும்னுதான் நெனைச்சேன். வெட்டு என்னவோ தவறிப் பூடிச்சி. இங்கே உள்ளே வந்து பதினாலு கம்பியையும் எண்ணி யாச்சி. ஏழு வருஷம் போட்டுட்டாங்க. ஆனா இந்த ஏழு வருஷத்தையும் ஏழு நாளாத் தவம் கிடந்திட்டு, பழையபடி அந்தப் பய மவனை வேலையைச் சாய்க்காட்டா நான் கொண்டயங் கோட்டையனா சாமி ? இதனாலே கழுத்துக்கே கயிறு வந்தாலும் சரிதான்.”

சிந்தாமணித் தேவனின் இந்தப் பதிலைக் கேட்டதும், அன்றைக்கு என் மனசிலே ‘கொலைகாரப் பாவி’ என்று திட்டத்தான் தோன்றியது. ஆனால் இன்றைக்கோ- விடுதலை யடைந்து சென்று நாளை என்ன பண்ணுவது என்ற யோசனை இல்லாமல் தவிக்கும் இன்று இரவிலோ – அவனுடைய பேச்சில் அர்த்த புஷ்டி இருப்பதாகத் தோன்றியது. தேச சுதந்திரத்தைக் குறிக் கோளாகக் கொண்ட தேசிய வாதிகள் பலருடைய கனவுகள் பதவியோடேயே நின்று விடுகின்றன. ஆனால் இந்தப் பாமரனின் குறிக்கோள் எதிரியின் உயிரை வாங்குவதுதான். ஏழு வருஷம் போட்டாலும் நெஞ்சம் கலங்காமல் சிறைக்குள்ளே எப்போதோ வரப்போகும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கித் தவம் கிடக்கிறானாம், தவம்.

“கோழைத் தனத்தைவிட பலாத்காரமே சிறந்தது” என்ற மகாத்மா காந்தியடிகள் கூற்றும் எனக்கு அப்போது தான் புரிந்தது.

அப்படியானால் நான் நாளை இங்கிருந்து சென்றவுடன் மீண்டும் இங்கேயே வரவா ?……

“என்ன சார், இன்னம் தூங்காமலா இருக்கியா?” என்று கேட்டுக்கொண்டே அளிப்பக்கம் வந்தான் வார்டர். மணியும் இரண்டு அடித்தது. என்ன கடேசிப் பாராவா ?” என்றேன்.

“இல்லே ஸார், இப்ப அஞ்சாம் பாரா. படுத்துக்கிங்க. இன்னம் மூணு நாளி நேரந்தானே — காலையிலே பைலுக்கு எழுந்திரிக்கணும் பாருங்க ” என்று கூறிவிட்டுப் புள்ளிகுத்தப் போனான் வார்டர்

வெளியில் தூறல் நின்றுவிட்டது. மழை வாடை மட்டும் தாங்க முடியவில்லை. மார்கழி மாசக் குளிருக்கு இப்போதே அடிபோட ஆரம்பித்திருந்தது. ஸெல்லுக் குள்ளே உள்ள தொண்டு வழியாய் வானைப் பார்த்தேன், வானத்தில் நட்சத்திரங்கள் பிரகாசமாகச் சுடர் விட்டன: எனினும் இருளின் பயங்கரம் மாயவில்லை. தவளைகளின் முணமுணப்பும், கொசுக்களின் இரைச்சலும் நிற்கவில்லை.

முட்டைக் கட்டி உட்கார்ந்திருந்த நான் யோக நிலை கலைந்து எழுந்திருந்தேன். கிட்டி வந்த தூக்கம் கண்ணில் ஈயக் கனத்தை ஏற்றியது. வேறு வழியின்றி அப்படியே முடங்கிச் சுருண்டு தூங்க ஆரம்பித்தேன். மறு நிமிஷமே நினைவு மங்கியது.

இடையில் எந்த மணியோசையும் காதில் விழவில்லை. அத்தனை மயக்கம்.

“பைல்! பைல்!” என்று கடைசிப் பாரா வார்டர் கத்திக் கொண்டு வந்தான். மணிச் சப்தமெல்லாம் காதில் தாக்கிக் கைதிகளின் தூக்கத்தைக் கலைக்கா விட்டாலும், காலையில் வார்டரின் “பைல்” என்னும் கிங்கரக்குரல் அவர்களை யெல்லாம் எப்படியோ எழுப்பி விடும். உள் நெஞ்சம் அந்த ஒரு சொல்லுக்கு மட்டும் எந்தத் தூக்கத்திலும் காதைத் தீட்டி வைத்துக் கொண் டிருக்கும்.

மணி ஆறு அடித்தது. ஸெல்லுக்குள்ளே ஒரே பரபரப்பு, ‘ஒரு நாள் கழிந்தது’ என்றே திருப்தியோடு கைதிகள் எழுந் திருந்தனர். நானும் ‘ஒரு மட்டும் கழிந்தது’ என்ற தெம் போடு எழுந்து உட்கார்ந்தேன்.

ஆட்டுக்கிடையை எண்ணுவதுபோல் வார்டர் எங்களை எண்ணி, நபர் எண்ணிக்கையைச் சரிபார்த்து விட்டுப் போனான்.

எழுந்தவுடன் மனசில் ஒரு நிம்மதி. ‘இன்று மாலை சாப்பாடு கிளப்பில்; ஜெயிலிலல்ல என்ற நினைப்பில் ஒரு அர்த்தமற்ற எக்களிப்பு.நாட்டுக்காக நரகவாசம் செய்து புனிதமடைந்ததாக, மீண்டும் தியாகத்துக்குப் புது வலிவு பெற்றதாக, ஒரு பெருமிதமும் கிளர்ந்தது.’

காலைக் கஞ்சி முடிந்ததும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டேன். அந்தத் தலைவரிடமும் சொன்னேன். அவர் தமது கொள்கையை அந்த வேளையிலும் ‘இக்கன்னா’ வைத்துப் பேசி, “பழையபடியும் இங்கே வராதே” என்று சொல்லாத குறையாய் உபதேசம் செய்தார்.

நான் வெறுமன தலையை அசைத்துவிட்டு ஸெல்லுக்குத் திரும்பினேன்.

ஒரு மணி நேரத்துக்குள் ஹெட் வார்டர் அங்கு வந்து, “வாங்க சாமி, ஜெயிலரு கூட்டியாரச் சொன்னாரு” என்று அழைத்தான். கதவைத் திறந்தான். உள்ளே யிருந்த படுக்கை, குவளை முதலியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். வார்டர் கதவை இழுத்து மூடினான். கதவின் கிரீச்சிட்ட சப்தம் ‘போய்விட்டு வா’ என்று சம்பிரதாய வக்கணை குறையாமல் சொல்வது போலிருந்தது.

– என்ன? போய்விட்டு வரவா?

“வாங்க சார்- விட்டுட்டுப் போறதுக்கு மனசில்லையா ?” என்று கேட்டான் வார்டர்

சிறைக் கதவுக்குப் பின்னால் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்ற சிந்தாமணித் தேவன் கேட்டான்; “என்ன சாமி போறீங்களா?””

அப்படியானால் போகக்கூடாதா! சிந்தாமணித் தேவனைப் போல் எனது லட்சியம் நிறைவேறும் வரை இங்கேயே வந்து கொண்டிருக்க வேண்டுமா? என்போன்ற ஊழியர்கள் மீண்டும் மீண்டும் சிறைக்குள்ளே வந்து சேர வேண்டியது தான், சிறைதான் எங்கள் அன்னை பாரதத் தாயின் மடி !…

நான் ஜெயிலரிடமிருந்து எனது சாமான்களைப் பெற்றுக் கொண்டபோது என் மனசில் இந்த மாதிரியான கரப்போட்டங்கள் தான் அசைந்தன.

ஆம். மீண்டும் வரவேண்டியதுதான்! இன்று நான் உபதேசம் பெற்றது தேச பக்தரான தலைவரிடமிருந்து அல்ல; கொலைகாரனான சிந்தாமணித் தேவனிடமிருந்து தான் !

என்னுடைய எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது போல், ஜெயிலின் எட்டு மணி ஓசையவைகள் தேவநாதமாக ஆமோதித்து ஒலித்தன.

-1945.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *