
சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்
ஒரு முழக் கயிறு
விக்டோரியா மியூஸியம் வந்ததும் டிராமை விட்டு இறங்கினேன். இத்தனை நேரமும் ஆபீசுக்குள் வெந்து புழுங்கிய உடலுக்கு, கடற் காற்றாவது ஓரளவு இதம் கொடுக்கும் என்று நினைத்தேன். எனவே வேறு யோசனை எதுவுமின்றிக் கடற்கரையை நோக்கி நடந்தேன்.
எனக்கு எதிரே, தூரத்திலே தெரியும் கடல் பரப்பின் அடி விளிம்புக்கு மேலே மேலை வானத்தின் செக்கர் ஒளி மட்டுமே மிஞ்சி நின்றது. சூரியன் மேலை நாடுகளுக்கு ஒளி வழங்கப் போய்விட்டான். இருள் படம் விரித்து உலகை விழுங்கத் தொடங்கியிருந்தது. கடலின் அலை வெள்ளம் முழுவதும் ஈயக் கலப்புக்கொண்ட செம்புக் குழம்பு மாதிரி தகதகத்துத் துடித்தது. அந்த ஜோதிப் படலத்தின் முன்னே இந்தியாவின் தலைவாசல்’கன்னங்கரியதாக விளிம்பு கட்டித் தோன்றியது.
அந்தத் தலைவாசலை நெருங்கியதும் கடலை அணைத்துக் கரையாக நிற்கும் சுவரின்மீது உட்கார்ந்து, அந்த வாசலை நிமிர்ந்து பார்த்தேன்.
இந்தியாவின் தலைவாசல் – Gateway of India! நல்ல பெயர். அற்புதமான கட்டிடம்! ஆம் தலைவாசல் தான்! இந்திய மக்கள் வெளிநாட்டாரோடு – மேல் திசை மக்களோடு, எகிப்து, இத்தாலி, ஹங்கேரி,ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் முதலிய சகல நாட்டு மக்களோடும் கூடிக் குலவுவதற்கு, கலா சாரப் பரிவர்த்தனை செய்வதற்கு, அவர்களது இன்ப துன்பங் களில் பங்கெடுப்பதற்கு… அகில உலக சகோதரத்துவத்துக்கும் வழி திறந்து நிற்கும் ஆசார வாயில் போலல்லவா நிற்கிறது…”
கிரீச் சென்ற சப்தம் என் காதோடு உராய்ந்துகொண்டு சென்றது. ஏறிட்டுப் பார்த்தேன். வலப்புறத்தில் நீர் மட்டத்தில் கட்டிப் போட்டிருந்த தோணியின் பாய்மரக் கொம்பிலிருந்து கடற் பறவைகள் திடீரென்று என் தலைக்கு மேலாக ஜிவ்வென்று பறந்து தண்ணீருக்குள் பாய்ந்தன!
என் சிந்தனையும் தடம் மாறிவிட்டது.
நான் மீண்டும் அந்தத் தலைவாசலைப் பார்த்தேன்.
‘ஆனால் இந்தத் தலைவாசல் அதற்காகவா கட்டப் பட்டது? இல்லையே! ஜார்ஜ் மன்னன் இந்தியாவுக்கு, டில்லி தர்பாரில் மகுடாபிஷேகம் பண்ணுவதற்காக வந்தபோது அந்த மன்னன் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்க, இந்தியாவுக்குள் புகுந்து சக்கரவர்த்தி என்று பிரகடனப் படுத்துவதற்காகக் கட்டப் பெற்ற தலைவாசல்தானே இது; அந்த மன்னனுக்கு விரித்த கல்லான நடை பாவாடைதானே இந்தக் கட்டிடம்! தலைவாசலா, இல்லை விலை வாசலா?… ஆம். அவமானம், அவமானம்!” என்று எங்கிருந்தோ ஒரு கனத்த குரல் எதிரொலிப்பது மாதிரி இருந்தது. அறுபட்டுத் தொங்கும் சிந்தனையோடு நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
“அவமானம், அவமானம்!” என்று கத்திக்கொண்டே என்னை நோக்கி ஒரு மனிதன் வந்தான். தெரிந்த நண்பனோ என்று கூர்ந்து நோக்கினேன்; அந்த இருளில் முகம் தெரியவில்லை. ஆனால் அவன் அருகில் நெருங்கி வந்ததுமே நான் திடுக்கிட்டுப் பின்வாங்கினேன்.
அந்த மனிதனை எனக்கு முன்பின் தெரியாதது மட்டு மல்ல, அவனது தோற்றமே எனக்குப் பயம் அளிப்பதாக இருந்தது. மண்டி வளர்ந்து முகத்தில் பெரும்பாகத்தை மறைத்து நிற்கும் கரிய தாடி மீசை – எண்ணெய்ப் பசையே அறியாது வறண்டு போய் முள்ளம்பன்றியைப் போல் சிலிர்த்து நிற்கும் தலைமயிர் – பாசி படிந்து ஆழக்குழி விழுந்து மங்கிப் பிரதிபலிக்கும் கண்கள்- தாறுமாறாகக் கிழிந்து அலங் கோலமாய்க் கிடக்கும் சட்டை -மஞ்சள் பூத்து விகாரமாகத் தெரியும் பற்கள்-
ஒரே கணத்தில் நான் அவன் தோற்றத்தை அளவிட்டு உணர்ந்து கொண்டேன்.
“பைத்தியமோ?”- என் மனம் இந்தச் சிந்தனையில் ஈடுபடும் முன்னரே, அந்தச் சிந்தனையை வலியுறுத்தி என்னைப் பயமுறுத்தவும் செய்தது, அவன் கையில் தொங்கிய அந்தப் பொருள்! அதுதான் — ஒரு முழக்கயிறு.
தூக்குப் போடுவதற்காகச் சுருக்கிட்டுத் தொங்கலிட்ட மாதிரி அவன் அந்தக் கயிற்றைக் கையில் தூக்கிப் பிடித்து ஊசலாட்டிக் கொண்டே வந்த- ன். எனக்கு ஒரே பயமாகி விட்டது ‘ஒரு வேளை இந்த மனிதன் தூக்குமேடையிலிருந்து தப்பி வந்துவிட்டானா? அல்லது தூக்குப் போடும்போது இந்தக் கயிறு அறுந்துபோய் விட்டதா?… மரணத்தின் பிடியி லிருந்து தப்பி வந்தவனா? இல்லை, வேறு யார் கழுத்திலேனும் இந்தக் கயிற்றை மாட்டப் போகிறானோ? ஒரு வேளை என் கழுத்துக்கேதானா?’…அந்தப் பைத்தியத்திடமிருந்து தப்பிப் பிழைத்தால் போதுமென்று இருந்தது.
“பயப்படாதீங்க ஸார். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். அவன்தான் அப்படிச் சொன்னான்! அவள் தான் அப்படிச் சொன்னாள்! எனக்கா ஒரு முழக்கயிறுக்கு விதி யில்லை? இதோ இருக்கு ஸார்! இதோ இருக்கு…அவனுக்குத் தான் ஸார் விதியில்லை! அவனுக்குத்தான் இல்லை…”
என் வாய் என்னையுமறியாமல் “எவனுக்கு” என்று கேட்டுவிட்டது.
“அதைச் சொல்லத்தானே வந்தேன். ஓடாதிங்க ஸார். நான் உங்களை ஒன்றும் பண்ணமாட்டேன். இதோ பாத்திங் களா கயிறு !.. என்னைப் பார்த்தா உங்களுக்குப் பயமாயிருக்கா? பயப்படாதிங்க…. நானும் உங்களை மாதிரி மனுஷன்தான் உங்களை மாதிரி நாலு எழுத்துப் படிச்சவன் தான். உங்களை மாதிரி வேலை பார்த்தவன்தான்.. உங்களை மாதிரி பெண்டாட்டி பிள்ளைகளோடு குடித்தனம் பண்ணியவன் தான்…
அவனுடைய உங்களை மாதிரி சீக்கிரத்தில் நிற்காது மாதிரி தோன்றியது. எனவே நான் குறுக்கிட்டேன். மேலும் அவன் அப்படி ஒன்றும் முழுப்பைத்தியமாகத் தோன்றவில்லை. எனவே நானும் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்து அவன் என்னதான் சொல்ல விரும்புகிறான் என்பதை அறிய முயன்றேன்.
இருள் பரிபூரணமாகக் கவிந்துவிட்டது. வானத்தில் பொட்டுப் பொட்டாக நட்சத்திரங்கள் வெடித்துப் பூத்தன. தூரத்தில் ஒரு கப்பலின் வெளிச்சம் தெரிந்தது. கடற்கரை அருகேயுள்ள மின்சாரக் கம்பங்களிலிருந்து மங்கிய நீல ஒளி சோகக் கண்ணீர் வடிப்பது போல் அழுது வடிந்து கொண் டிருந்தது. அவன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
“நானும் பி.ஏ. வரையிலும் படிச்சிருக்கேன் சார். முன்னாலே நம்ம காந்தி, நேரு முதலியவர்களையெல்லாம் வெள்ளைக்காரன் ஜெயில்லே புடிச்சி அடைச்சானே, அப்போ நானும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சொன்னேன்! போராட்டத்தில் சேர்ந்தேன். தடியடியும் கிடைச்சிது ; ஜெயிலும் கிடைச்சிது.
“அப்புறம்?”
“நானும் பெண்டாட்டி பிள்ளையோடு குடித்தனம் பண்ணினேன் ஸார். வயிற்றுப் பிழைப்பு ஒன்று இருக்கே. அதனாலே நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் வந்த பின்னாலே நானும் சர்க்கார் உத்தியோகத்துக்கு மனுப் போட்டேன் ஸார்.””
“வேலை கிடைக்கலையா?”
“கிடைச்சிது ஸார். கிடைச்சிது. வியாபார வரி ஆபீஸிலே அஸிஸ்டெண்ட் ஆபீஸர் உத்தியோகம் கிடைச் சிது. வேலையும் பார்த்தேன்… சரி. ‘கள்ள மார்க்கட்காரனை லாந்தர் கபத்திலே தூக்குப்போட வேண்டும்’ என்று சொன்னது யார் தெரியுமா, ஸார்?”
“தெரியும், தெரியும். நீ பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போ” என்று அவசரப்படுத்தினேன் நான்.
‘தெரியாதவங்க யாருதான் இருக்கா? ஒருத்தருமில்லை’ என்று கூறிக்கொண்டே அவன் ஒரு பெருமூச்செறிந்தான். பிறகு “அந்தப் பேச்சைக் கேட்டுத்தான் ஸார், இந்தக் கதிக்கு ஆளானேன் ஸார்” என்றான் அவன்.
“நான் வேலை பார்த்து வந்த இடத்திலே ஒரு பெரிய மில் இருந்தது. அது நம்ம நாட்டிலுள்ள பெரிய பணக்காரன் ஒருத்தனுடைய மில். அந்த மில் கணக்கைச் சரி பார்க்க வேண்டிய கடமை எனக்கு நேர்ந்தது. பார்த்தேன். ஆனால் கள்ள மார்க்கெட் பண்ணாத வியாபாரி எவன் ஸார் இருக்கான்? அதிலும் பணக்காரன் என்றால் கேட்க வேண்டுமா? கணக்கிலே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு விவரமே இல்வே ஸார். அந்த ஒரு கோடி ரூபாயை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. அதனாலே நான் எல்லாக் கணக்குப் புத்தகத்தையும் கொண்டு வரும்படி உத்தரவு போட்டேன் ஸார். போட்ட தேதிக்கு எந்தக் கணக்குமே வரலை ஸார்'”
“அப்புறம்?”
“அப்புறம் கணக்குக்குப் பதிலாக அந்த மில்லின் மானேஜரே என் வீட்டைத் தேடி வந்தான். கட்டுக் கட்டாக லட்ச ரூபாயை என் மூன்னாலே நீட்டி அதை வஞ்சமாக ஏற்றுக்கொள்ளச் சொன்னான். ஏற்றுக் கொண்டு அந்த விவகாரத்தை அப்படியே அமுக்கி விடும்படி கேட்டான் ஸார். நீங்களே சொல்லுங்க, லஞ்சம் வாங்கிப் பிழைக்கிறவனை மனுஷன்னு சொல்லலாமா? கள்ளமார்க்கெட் காரனைத் தூக்கிலே போட்டால், லஞ்சம் வாங்குகிற அதிகாரியைக் கழுவிலே போடவேண்டியதுதான். இல்லையா?”
“ஆமாம், ஆமாம். சரி . நீ மேலே சொல்லு.”
எனக்குப் பெரிய குடும்பம் ஸார். என்னை நம்பி வாழ்ந்த வங்க எத்தனையோ பேரு ஸார். வாங்குகிற சம்பளம் வயிற் றுக்கே பத்தறதில்லை. சம்பளம் பத்தலேன்னா, சண்டை போட்டு அதிகமாகக் கேக்கலாமே ஒழிய லஞ்சம் வாங்கலாமா? அப்படி வாங்கின கைதான் உருப்படுமா? அவன் கொடுத்த பணத்தை நான் வாங்க மறுத்துவிட்டேன். “மரியாதையாக கணக்கை எடுத்துக் கொண்டு வா. நீங்க பண்ணியிருக்கிற கள்ள மார்க்கெட் இருக்கே, அது லேசுப்பட்டதல்ல. உன்னையும் உன் முதலாளியையும் தூக்கிலே தொங்கவிட எனக்குத் தைரியமுண்டு, தெரியுமா?” அப்படின்னு சொன்னேன். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“கன்னம் சாத்துற இடமும், சாத்தாத இடமும் உனக்குத் தெரியலை.எங்களை யாருன்னு நினைச்சிக்கிட்டிருக்கே? பீடம் தெரியாமல் சாமி ஆடாதே; மரியாதையாகப் பணத்தை வாங்கிக்கொண்டு காரியத்தை முடி. இல்லேன்னா நீதான் தொந்தரவுக்கு ஆளாகப் போறே! அப்படின்னு மிரட் டினான் ஸார்.”
“அப்புறம்?”
“அப்புறமென்ன? ‘அப்பா, இது உங்க வெள்ளைக்கார எசமானோட ராஜ்யமில்லே. இது எங்க ராஜ்யம். இந்த ராஜ்யத்திலே உன்னை லேசிலே விடமாட்டோம். உன்னைக் கம்பி எண்ண வைக்காத போனா, என் பேரையே மாத்தி வய்யி!’ அப்படின்னேன் நான்.”
“அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? இது அவங்க ராஜ்யம்தானாம். அவங்களை ஜெயில்லே அடைக்கிற திறத்தைப் பார்த்துப்பிடுவாராம்; அது மட்டுமா சொன்னான்? இந்த மாதிரி நான் நடவடிக்கை எடுக்க நினைக்கிறதைவிட, ஒரு முழக் கயிற்றை எடுத்துத் தூக்குப் போட்டுக்கிட்டுச் சாகலாம், அப்படின்னான் ஸார். எனக்கா ஸார் ஒரு முழக் கயிற்றுக்குப் பஞ்சம்? நானா கள்ளமார்க்கெட் செய்தேன்? நானா லஞ்சம் கொடுத்தேன், நானா லஞ்சம் வாங்கினேன்? நானா….”
“சரி,சரி.அப்புறம் சொல்லு” என்றேன் நான்.
“அப்புறம் என்ன? அவன் வந்த வழியே திரும்பிப் போனான் ஸார். இரண்டு நாள் கழிச்சி எங்க மேலாபீஸர் என்னைக் கூப்பிட்டுவிட்டார்; அந்த மில் விஷயமாக நான் எடுத்துக்கொண்ட நடவடிக்கையையெல்லாம் விசாரித்தார். சொன்னேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? அந்த நடவடிக்கையை மேலும் தொடராமல் அப்படியே விட்டுவிட வேணுமென்று சொன்னார். ‘அதெப்படி முடியும்?” என்று கேட்டேன் நான். ‘முட்டாள்! முட்டாள்! மலையோடே மோதினால் மண்டைதானே சிதறும்? நீ ஏதாவது மேல் நடவடிக்கை எடுத்தால், உன் வேலைக்கே ஆபத்து’ என்று சொன் னார் அவர். கடமையைச் செய்தேன். இதில் எனக்கென்ன பயம்? என்ன ஆபத்து?’ அப்படின்னேன் உடனே எனக்கு ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார் அவர்.
“என்ன கடிதம்?”
“அந்த மில் விஷயத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று ஒருவர் எழுதியிருந்தார். அந்த ஒருவரின் கையெழுத்தைப் பார்த்ததுமே எனக்குக் கண்ணே இருண்டு போய்விட்டது, ஸார்.”
“யாரது?”
”யாரா? நீங்களும் நானும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து உயர்ந்த பதவிக்கு ஆளாக்கி வைத்திருக்கிறோமே- அப்படிப்பட்ட தேச பக்தர் ஒருவர்தான் ஸார், அதை எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு ஆபீஸரிடம் திருப்பிக் கொடுத்தேன். ‘பார்த்தாயா? நீயும் நானும் என்ன செய்யக் கிடக்கு? வந்ததை வரப்பத்திக்கொண்டு, நாமும் பிழைச்சிப் போறதுதான் மரியாதை. தெரிஞ்சுதா? அப்டின்னார் ஆபீஸர். ஆனால் எனக்கோ மான உணர்ச்சி நெஞ்சைக் குத்தி வாங்கியது. ‘முடியவே முடியாது. நான் நட எடுக்கத்தான் செய்வேன்’ என்றேன். நட வடக்கை வடிக்கை அவங்க மேலேயா? இல்லை, உன்மேலேயா? வீணாப் பழைப்புக்கு உலை வச்சிக்கொள்ளாதே. நீ பொண்டாட்டி சொல்றேன்’ புள்னைக்காரன், உனக்கு நல்லதைத்தான் என்றார் ஆபீஸர். அதற்காக என் மானத்தை விற்க முடியாது சர்க் ஸார் அப்படின்னேன் நான். ‘முட்டாள். முட்டாள்! காரே அவங்க சர்க்கார்தான். அவங்களோடு மோதிக் கொள் வதைவிட ஒரு முழக்கயிற்றைப் போட்டுத் தூக்குப் போட்டுக் சொன்ன திட்டுச் சாகலாம். அதற்குமா விதியில்லை? போ, படி செய்’ என்று கடுமையாகச் சொன்னார் ஆபீஸர். நீங்களே சொல்லுங்க ஸார். நானா ஒருமுழக் கயிற்றினால் தூக்குப் போடணும்? எனக்கா விதியில்லை? இதோ இருக்குது ஸார் கயிறு? எனக்கா விதியில்லை…?”
அவன் மீண்டும் உணர்ச்சிப் பரவசத்துக்கு ஆளாகிப் பைத்திய நிலைக்கு வந்துவிட்டான். நான் அவன் நிதானம் பெறும் வரையிலும் மௌனமாக இருந்தேன்.
இருள் நன்றாகக் கவிந்துவிட்டது அணைப்புச் சுவருக்குக் கீழே எதையோ எண்ணி உறுமி உறுமி மோதிக்கொண்டிருக் கும் அலைச் சப்தம் ஒன்றே அங்கு நிலவிய அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. தூரத்திலே நகருக்குள் பம்பாய் நகரத்தின் ஒளி முட்டம் பளிச்சென்று வான மண்டலத்தில் புரையோடிப் பாய்ந்திருந்தது. இடப்புறத்தில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலின் ஜன்னல் கதவுகள் அனைத்தும் ஒளி பெற்று ஆயிரங் கண்கொண்ட அரக்கனைப்போல் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அங்கிருந்து மெல்லிய ஆங்கில வாத்திய சங்கீதம் மங்கிக் கரைந்து அலை வெள்ளத்தோடு சங்கமித்துக் கொண்டிருந்தது.
நான் ஒரு பெருமூச்செறிந்தவாறே அவன் பக்கம் திரும் பினேன். அவன் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டே என் பக்கம் திரும்பினான்.
‘சரி, அப்புறம்?’
‘இரண்டு நாள் கழிந்தது ஸார். நான் பாட்டுக்கு மேல் நடவடிக்கைக்கான காரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று எனக்கு ஒரு உத்தரவு வந்தது ஸார். எனக்கு அந்த இடத்திலிருந்து மாற்றுதல் உத்தரவு. இருபத்தி நாலு மணிநேரத்துக்குள் சார்ஜை மாற்றிக் கொடுக்க வேண்டும்; மாற்றுதலான இடத்துக்குப் போய் வேலையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு வந்தது. உத்தரவுக்குப் பணிந்து அந்த இடத்துக்குப் போனேன். ஆனால் கள்ளமார்க் கெட்காரன் எங்கேதான் ஸார் இல்லை? கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் நான் கடவுளை எங்குமே காணவில்லை. ஆனால் கள்ளமார்க்கெட்காரனோ? நான் மாற்றிப் போன இடத்திலும் இதேமாதிரி ஒரு கேஸ் வந்தது ஸார்.”
“அங்கேயுமா?”
“எங்கேதான் ஸார் இல்லை? அங்கும் நான் என் கடமையைச் செய்தேன். அதற்கு எனக்கு என்ன கிடைத்தது தெரியுமா? எனக்கு ‘சஸ்பெண்ட்’ உத்தரவு ஸார், சஸ்பெண்ட் உத்தரவு! எனக்கா ஸார் ஒரு முழக் கயிறு இல்லை இதோ இருக்கிறது,பாருங்கள், இதோ இருக்கிறது!….”
“பிறகு?”
“பிறகா? சஸ்பெண்ட் உத்தரவுக்குப் பணிந்து வேலையில்லாமல் இருந்தேன் ஸார். ஆனால் அத்தோடு நிற்கவில்லை. சஸ்பென்ஷன் காலம் முடிவதற்குள்ளேயே என் வீடு தேடி டிஸ்மிஸ் உத்தரவும் வந்து விட்டது ஸார்!”
“டிஸ்மிஸ்ஸுக்கு என்ன காரணம்?’
“காரணமா? என் வேலை திருப்திகரமாக இல்லையாம். அத்துடன் நான் அரசாங்க அலுவலில் இருந்து கொண்டே அரசியலில் பங்கெடுத்துக் கொண்டேனாம். யாரோ பேசிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேனாம். அப்படிப் போகக் கூடாதாம். இதுதான் என்மீது குற்றம்…? நான் செய்தது குற்றமா?”
மீண்டும் அவன் தன்னிலை யிழந்து புலம்பினான். நான் ஒன்றுமே பேசவில்லை. எங்கோ தூரத்தில் ஒரு ஆலைச் சங்கு நைட் ஷிப்டுக்காகத் தொழிலாளர்களை அறைகூவி அழைத்தது; இந்தியாவின் தலைவாசல் ஆடாது அசையாது வாய் பிளந்து நின்றது.
அவன் மீண்டும் பேசத் தொடங்கினான்
“குழந்தை குட்டிகாரனுக்கு வேலை போய்விட்டால் பிறகு அவன் என்ன ஸார் செய்வான்? எவ்வளவு நாள்தான் கடன் வாங்கிப் பிழைப்பது? கடன் கொடுத் தவனிடம் எவ்வளவு நாள்தான் தவணை சொல்வது? கடன் கொடுத்தவனெல்லாம் என்னைப் பார்த்து என்ன கேட்டான் தெரியுமா? வாங்கின கடனைச் சொன்ன தேதியில் திருப்பித் தர வக்கு இல்லேன்னா ஒரு முழக் கயிற்றைக் கட்டித் தொங்கிக் கொண்டு சாகலாமே என்று சொன் னார்கள் ஸார். ஒரு முழக் கயிற்றுக்குமா விதியில்லை? என்று கேட்டான் ஸார், பால்காரன். நீங்களே சொல்லுங்கள் ஸார், எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதியில்லை? இதோ இருக்கிறது ஸார். கயிறு! இதோ இருக்கிறது….”
“அப்புறம் எங்குமே வேலை கிடைக்கவில்லையா?”
“வேலையாவது? யோக்கியமானவனுக்கு எவன் வேலை கொடுக்கிறான்? தான் செய்யும் அயோக்கியத்தனத் துக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்குத் தான் வேலை.எனக்கு வேலை கிடைக்குமா ஸார்?” என்று வாய்விட்டுப் புலம்பினான் அவன்.
“பிறகு? உன் மனைவி? குழந்தைகள்? அவர்கள்-“
“மனைவியாவது, குழந்தையாவது? எல்லாம் இந்த வயிற்றுப் பிரச்சினைக்குப் பிறகுதான் ஸார். என் மனைவி ரொம்ப நல்லவள்தான். ஆனால் அவள் தான் எத்தனை நாளைக்குப் பட்டினி கிடப்பாள்? குழந்தைகள் பசி பசி என்று கதறும்போது அவளுடைய பெற்ற வயிறு கொதிக்காதா? ஒரு நாள் அந்தக் கொதிப்பு என்னையே தகித்து விட்டது ஸார். தகித்து விட்டது. என்னைக் கைப்பிடித்து மணந்த மனைவியே என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டாள் ஸார், கேட்டுவிட்டாள்! ‘நான்தான் சாகிறேன், பிள்ளைகளையும் சாக விடணுமா? கட்டிய மனைவியையும் பெத்தெடுத்த பிள்ளைகளையும் பட்டினி போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறதைவிட நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம். ஒரு முழக் கயித் துக்குமா விதியத்துப் போச்சு?” அப்படின்னு வாய் துணிஞ்சு கேட்டாள் ஸார். கேட்டே விட்டாள் ஸார்!
“எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதியில்லை? எனக்கா விதியில்லை? இதோ இருக்கிறது ஸார் ஒரு முழக் கயிறு!…”
“சரி, பிறகு என்ன செய்தாய்?”
“என்ன செய்தேனா? என்ன செய்வேன்? வீட்டை வீட்டு வெளியேறி எவ்வளவோ நாளாச்சு ஸார், நீங்களே சொல்லுங்கள்! எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதி யில்லை? இதோ இருக்கிறது. ஸார். நீங்களே சொல்லுங்கள்.இதோ இருக்கிறது. நானா கள்ள மார்க்கெட்காரனைத் தூக்கில் போட வேண்டும் என்றேன்? நானா கடமையைச் செய்யத் தவறினேன்? மார்க்கெட்காரனைத் தப்பவிட்டேன்? நானா சொன்ன சொல்லைத் தவறவிட்டேன் ? நானா குழந்தை குட்டிகளைப் பட்டினி போட்டேன்? நானா தேசத் துரோகம் தேன் ! நானா மக்களைக் காட்டிக் கொடுத்தேன்? நானா கள்ளமார்க்கெட் காரனுக்குப் பாதுகாப்புக் கொடுத்தேன்? எனக்கா ஒரு முழக் கயிறுக்கு விதியில்லை? எனக்கா சாவதற்கு விதியில்லை? இருக்கிறது ஸார். இதோ இருக்கிறது.”
அவன் ஆவேசம் அடைந்தவனைப்போல் கத்திக்கொண்டே எழுந்தான். அங்கிருந்து நகரை நோக்கி நடக்க ஆரம்பித் தான்.
அவன் செல்லும்போது அவன் கையிலே அந்த ஒரு முழக் கயிறு – சுருக்கிட்டுத் தொங்கும் ஒரு முழக் கயிறு — பயங்கர மாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
நானும் எழுந்து நடந்தேன். என் கண் முன்னால் செவிகளில் ‘எனக்கா ஒரு முழக் கயிறுக்குப் பஞ்சம்?’ என்ற அவனது சொற்கள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தன…
கடற்கரை உப்புக் காற்று என் உடல் புழுக்கத்தைத் தணித்துவிட்டது. ஆனால் அவன் என் உள்ளத்திலே ஏற்றி விட்ட புழுக்கம் — அது இன்னும் தணியவில்லை; தணியவே இல்லை!
-1951



