சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன்

உப்பில்லாத சமுதாயம்

1943

“என்னண்ணே, தடுமாடுதே!” என்று சொல்லிக் கொண்டே, ராமசாமிக்குத் தோள் கொடுத்துத் தாங்கவாக நடத்திக் கூட்டிக்கொண்டு வந்தான் அவன் கூட்டாளி.

“என்னடா,உளரே? நான தடுமாடுதேன்? உனக்குத் தான் புத்தி சுவாதீனமில்லே. நாசிக்கிலே ஒரு முழு பாட்டிலை ஒரே மடக்கிலே உள்றத் தள்ளிட்டு, கல்லுப் புள்ளையார் மாதிரி இருந்தவனாக்கும் நான்?” என்று தடுமாறிக் கூறிக் கொண்டே தன்னுடைய அரும்பு மீசையை விரலால் கீறிக் காட்டி வீரம் பேசினான் ராமசாமி.

“தெரியாதா அண்ணே. இருந்தாலும் சாலைக்கரை யான் கடைச்சாராயமின்னா, ஒரு டிராம் போட்டாலும் இரண்டு டிராம் ஆட்டம் போடும்ணே” என்றான் தோழன்.

“எத்தனை கிளாஸ் போட்டாத்தான் என்ன? வீட்டுக்குப் போனா பெத்தவ படுத்திருக்க இடமும் தெரியும். பெஞ்சாதி படுத்திருக்க இடமும் தெரியும். இவ்வளவு அடிச்சிருக்கேனே. நாக்குப் பிறழுமா? வார்த்தை பிசகுமா? ஊஹும்” என்று கூறி முகத்தைச் சுழித்தான் ராமசாமி.

அதற்கு மேல் அவனுக்கு நாக்கு வளையவில்லை.

போதையேறி மரத்து, பெருங்கால் பிடித்தது போல் கனத்திருந்த கால்களைத் தூக்க முடியாமல் தூக்கி நடந்தான் ராமசாமி. மேலும் பட்டைச் சாராயத்தின் காரமான நெடி தொண்டைக் குழியிலிருந்து கமறலாக எழுந்து மூச்சைத் தாக்க, அவனுக்கு ஓங்கரிப்பு வந்தது. மறு நிமிஷம் குபுக்கென்று வாந்தியெடுத்தான்.

ராமசாமி ஒரு வருஷத்துக்கு முன்னால் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சண்டையிலே சேர்ந்து விட் டான். சேர்ந்துவிட்டால், பின்னால் திரும்பி வரும்போது இந்தியாவின் வைஸ்ராய் ஸ்தானம் தனக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற சாணக்கியத் தந்திரமோ, உலகை ஆக்கிரமிக்கத் துணிந்த பாஸிஸப் பேயை விரட்டி யடிப்பதில் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் செய்ய எண்ணும் லட்சியக் கனவோ அவனுக்குக் கிடையாது. அவன் கண் முன் நின்றது ஒன்றே ஒன்று தான். ஒரு சாண் வயிறு. ‘இலவச உடை; உணவு; இருப்பிட வசதி, இத்தனைக்கும் மேலாக சுளை சுளையாய்ப் பதினாறு ரூபாய் சம்பளமும்; படியும், என்ற விளம்பரந்தான் அவனை ராணுவத்தில் இழுத்துவிட்ட மந்திரமும் தந்திரமும். மேலும் லீவிலே தன் ஊருக்கு வந்து செல்லும் சிப்பாய்கள் தாட் பூட்டென்று “ஏக் தீன்கா சுல்தான்” ராஜ்யம் நடத்தி விட்டுத் திரும்பிச் செல்லும் வைபவமும் அவனுக்கு ராணுவத்தில் ஒரு மோகத்தைக் கிளப்பி விட்டது.

ராணுவத்திலே சேர்ந்து ஒரு வருஷ காலம் பயிற்சி பெற்ற பின்பு, இப்போது ஒரு மாச லீவில் – சம்பளத்தோடும் போகவர ரயில்வே வாரண்டும், வழிச்செலவும் தந்தனுப்பிய அந்த லீவில், – ராமசாமி சொந்த ஊருக்கு வந்திருந்தான். ஆனால் ஆசாமி பழைய மாதிரி இல்லை, ராணுவத்திலே விடிய விடிய ட்ரில் செய்து வயிறு வளர்க்கும் வேலை அவனுக்கு ஏதோ குபேர சம்பத்து போலத் தோன்றிற்று. அதன் விளைவாக அவன் வாயிலே எப்போதும், ஒயில்ட் உட்பைன், சிகரெட் புகைந்து புகைந்து கொடி வீசும். பக்கத்திலே நெருங்கினால் சாராய நாற்றமும் வாழ்க்கை அவனை எப்படி அடிக்கும். இந்த ஒரு வருஷ யெல்லாமோ மாற்றியிருந்தது. மஸ்துச் சாப்பாடான ‘டாலும்’ ‘ஆட்டா ரொட்டி’யும் கோஷும், அவன் உடம்பிலே புதுமெருகும் மினுக்கும் வலியும் ஊட்டியிருந்தன. மேலும், வாரா வாரம் ஹவில்தார் மேஜரிடம் அவுட் பாஸ் வாங்கிக்கொண்டு நாசிக்குக்குச் செல்வான்; “அண்ணா! ஆவ் ஜி இதர்!” என்று அருமையாய் ஒரே ஒரு தமிழ் வார்த்தைப் பிரயோகத்தோடு அழைக்கும் மராத்திய விபசாரிகளிடமும் அவன் சுகங் கண்டு பழகியிருக் கிறான்.

இத்யாதி அனுபவங்களோடு பசை போட்டுத் தேய்த்து விறைப்பேறி நிற்கும் காக்கிச் சட்டைப் பையில் அழுக்கையும் மடிப்பையும் அறியாத புது ரூபாய் நோட்டுகள் சர சரக்க அவன் பிறந்த ஊரில் ஒரு மாச காலம் மஜா பண்ண வந்திருந் தான். மிலிடெரியிலிருந்து வந்தும் அவன் தனது பூட்டுகளையும், காக்கிச் சட்டையையும் கழற்றவில்லை. அந்த உடையிலே திரிவதில் அவனுக்கு ஒரு தனிக் கௌரதை.

அன்றும் அவன் அப்படித்தான் தன்னுடைய கூட்டாளி ஒருவனுடன் சாலைக்கரையான் சாராயக் கடையில் ‘அமுத பானம்’ பண்ணிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

ராமசாமி வாந்தியெடுத்த பின் அவனுடைய தோழன் அவனைத் தூக்கி நிறுத்திப் பக்கத்திலுள்ள வாய்க்கால் பாலத்தருகே நடத்திச் சென்று உட்கார வைத்தான். சரக்கு வெளியேறிவிட்டதால் போதை ஓரளவு தெளிந்திருந்தது. ஒன்றும் பேசாமல் வாயில் கூடிவரும் எச்சிலைக் காறித் துப்பிக்கொண்டிருந்தான்.

அப்போது அந்த வழியாய் லக்ஷ்மி கூடையை இடையில் வைத்துக் கொண்டு பரக்கப் பரக்க அவர்களைக் கடந்து சென்றாள். அவள் செல்வதை ராமசாமி கண்டுவிட்டான். கனத்திருந்த கண்களைக் கொட்டக் கொட்டத் திறந்து கொண்டு, பக்கத்திலிருந்த நண்பனைக் கேட்டான்:

“யார்ரா, அவ?”

”அவளா? மேலத்தெருப்பெண்ணு. லக்ஷ்மின்னு பேரு”

“குட்டி ரதி மாதிரியிருக்காளே. அடிபாடு உண்டோ?”

“யாருக்குத் தெரியும்?”

அவசர அவசரமாய்ச் சென்றுகொண்டிருக்கும் லக்ஷ்மிக்கு இதெல்லாம் காதில் விழ நியாயமே இல்லை. யாரோ ரெண்டு குடிகார மட்டைகள் என்று எண்ணிக் கொண்டே அவள் பறந்தாள். அவள் மனசில் நின்றதெல்லாம் ஒரே ஒரு எண்ணம்; ஒரு படி அரிசி.

அந்த அரிசிக்காக மாரியம்மன் பூக்குழிக்குத் தன் தாய் தன் பேரில் நேர்ந்து மஞ்சள் துணியில் முடிபோட்டு வைத் திருந்த காசைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு அரிசிக் கடையை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.

அன்று அவளை ரக்ஷிக்கப்போவது மாரியம்மன் அல்ல; ஒரு படி அரிசி. அன்றும் கிடைக்கவில்லையானால், அவளும் அவள் தாயும் அவித்த சீனிக் கிழங்கையும், ஏழிலைக் கிழங்கையும் நிலக்கடலையையும் தின்று தான் வயிற்றுப் பாட்டைக் கழிக்க நேரும்.

அந்த ஒரு படி அரிசியைப் பெறுவதற்காக இன்று சமைந்து, பெரிய மனுஷியாகி வீட்டுக்குள் அடங்கியிருக்க வேண்டிய பதினாறு வயசுக் குமரி பட்டப் பகலில் பஜார் வீதியில் கூட்டத்திலே இடிபட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

அந்த “ஏழை மக்கள் அரிசிக் கடைக்”குச் செல்வது அவளுக்குப் புதிதல்ல. முன்னால் ஒன்றிரண்டு தடவை தன் தாயோடு சென்றிருக்கிறாள்.

அங்கு அவள் பெற்ற அந்த அனுபவங்கள்! அதை நினைக்க நினைக்க கடைக்கே செல்லாமல் திரும்பிவிடலாமா எனத் தோன்றும்.

அவள் நடந்தாள்…

அந்த அனுபவங்கள்–

அந்த அரிசிக் கடையில் ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு கடை மீது சாடுவார்கள். சமயத்திலே வாங்குகிற அரிசி கொட்டிப்போகும்; சமயங் களில் கையிலுள்ள காசே பிடி தவறி, சாக்கடையில் விழுந்து விடும்; சில சமயம் ஆட்களே விழுந்து விடுவார்கள். அன்றொரு நாள் கூட்டத்தில் இவளுடைய சேலை அகப்பட்டுக் கொண்டு தோளில் கிடந்த முன்தானை விலகி, தன் கட்டமைந்த மார்பும், உடம்பும் வெட்ட வெளிச்சமானதும், அதைக் கூர்மையுடன் பார்த்த அந்தப் போலீஸ்காரன் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்ததும், கடைக்காரன் அரிசியைக் கூடையிலே கொட்டும்பொழுது வேண்டுமென்றே இவள் மார்பில் இடித்ததும், காசு வாங்கும்போது கையைச் சுரண்டியதும்…

அவளுக்கு அதையெல்லாம் எண்ணினால் வெட்கம் உடம்பைப் பிய்த்துப் பிடுங்கும்.

அவள் விரைவாக நடந்தாள்; நடந்தாள்……

ஆனால் அந்தக் கடையைச் சேர்ந்தவுடன் தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. கடை முன்னால் சிந்திக்கிடந்த அரிசி மணிகளை ஒரு புறாக்கூட்டம் கொத்திப் பொறுக்கிக் கொண் டிருந்தது. ஒன்றிரண்டு சோமாறிப் பையன்கள் கடை முன்னுள்ள சாக்கடைச் சகதியை அள்ளி அள்ளி ஏதேனும் காசு கிடைக்காதா என்று துழாவிக் கொண்டிருந்தார்கள்.

அரிசி வி நியோகம் முடிந்து கடை சாத்தியாய் விட்டது.

அன்று லக்ஷ்மிக்கு அரிசி கிடையாது; அவள் தாய்க்கு கஞ்சி – அதுவும் கிடையாது. லக்ஷ்மிக்குக் கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

வேறு விதியின்றித் திரும்பி நடந்தாள்.

வருகிற வழியில் அந்த வாய்க்கால் பாலத்தில் அந்தக் குடிகார மட்டைகள் இன்னும் இருப்பதையும், அவர்கள் தன்னைக் குர்ரென்று பார்ப்பதையும் அவள் கவனித்தாள். உடனே வாழையிலைத் தார்போலக் கிழிந்து தும்பாய்ப் போன தன் சேலையால் தனது மார்பகத்தை மூட முயன்றுகொண்டு, அரிசிக் கூடையை அணைத்துக்கொண்டு, பாலத்தைக் கடக்க முனைந்தாள்.

“ஏய், லக்ஷ்மி! நில்லு!” என்று ராமசாமி கொடுத்த குரல் அவளைத் திடுக்கிட வைத்தது. தன்னையும் அறியாமல் அவள் நின்றாள். நெஞ்சு துடித்தது.

“என்னா சும்மாப் போரே. கம்மாக்கரைப் பக்கமா வாரியா?” என்று சிரித்துக்கொண்டே ஒரு புத்தம் புதுப் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான் அவன்.

அந்த சரஸப் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு லக்ஷ்மி சிறியவளல்ல.

“சீத் தூ! மாட்டுக்கறி தின்ன கொழுப்பா இப்படிப் பேசச் சொல்லுது!” என்று காறித் துப்பிவிட்டு நடையைப் போட்டாள்.

அதற்குள் ராமசாமி அவளை வழிமறித்தான். அவளுடைய களை பொருந்திய முகழம் கட்டுக் கலையாத தேக வனப்பும் அவனைக் கிண்டின.

“இந்தா பாரு, பத்து ரூபா சும்மா வராது!” என்று கூறிக்கொண்டே அவளை அணையப் போனான்.

“நீ நாசமாய்ப் போக!” என்று திட்டிக் கொண்டே லக்ஷ்மி அவனைத் தன் கூடையால் இடித்துத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.

கீழே விழுந்து எழுந்திருந்த ராமசாமி அடேயப்பா! பெரிய பத்தினித் தங்கந்தான்! குடுத்து வைக்காதவ. இவ இல்லாட்டா, ஊரிலே பொம்பளைகளே இல்லாமலா போயிட்டா! மாடத் தெருவுக்குப் போனா…. என்று முனகிக் கொண்டே அரும்பு மீசையை விரலால் கீறிக் காட்டினான்.

“என்னண்ணே ‘பிளேன்” இறங்கிட்டுதே!” என்று சலித்துக் கொண்டான் பக்கத்திலிருந்த தோழன்.

“சரி, வா, சாலைக்கரையான் கடைக்கு!’ என்று முனகிவிட்டு, அவன் தோளில் கையைப் போட்டான் ராமசாமி.

1947

-ஐந்து வருஷங்கள்!

திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் தென் திசை நோக்கி வந்துகொண்டிருந்த ராமசாமி தனது கடந்த ஐந்து வருஷ கால ராணுவ சேவையை எண்ணிப் பார்த்தான்…

பர்மாவில் ஜப்பானியரின் குண்டு மழைக்கிடையில் போராடிய ‘பதினாலாம் சேனையில் தான் செய்த சேவை; அக்யாப் போர்முனையில் பதினாறு மைல் தூரக் காட்டுப் பாதையில், தோளில் பெரிய மூட்டைகளைச் சுமந்து இரவோடு இரவாய் நடந்து சென்ற ரூட் மார்ச்; ஸெண்ட்ரி ட்யூடியில் பாம்புகள் நடமாடும் வனப் பிராந்தியத்தில் குளிரும் கொசுவும் வாதைப்படுத்த, இரவு முழுவதும் பாராக் கொடுத்த வைபவம்; இடையிலே ராணுவ ஆஸ்பத்திரியில் காய்ச்சலாய்க் கிடந்ததும், அப்போது அங்குள்ள நர்ஸ் ஒருத்தியைக் கையைப் பிடித்திழுத்ததும்; அதன் விளைவாகக் கிடைத்த இருபத்தொரு நாள் சிறைவாசம்; சிங்கப்பூரிலே கையிலிருந்த கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கிக் குடித்தது; ஆக்கின் லெக் துரை தன் கைப்படத் தன் சட்டையில் மாட்டிய வெள்ளிப் பதக்கம்…!

எத்தனை அனுபவங்கள்… எல்லாம் அவன் ஞாபகத்துக்கு வந்தன.

அவன் ராணுவ சேவையிலிருந்து விடுபெற்று வீடு திரும்பி வந்து கொண்டிருந்தான். கையிலே நானூறு ரூபாய் நோட்டுக்கள்; டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்; ஊரில் சென்று மீண்டும் “சிவில்” உத்தியோகத்தில் நுழைய காப்டன் ஐலண்ட் தம் கைப்பட எழுதிக் கொடுத்த சிபாரிசுச் சீட்டு; மெட்ராஸ் மூர்மார்க்கெட்டில் வாங்கிய டிரங்குப் பெட்டி; பழைய விலைப் புத்தகக் கடையில் வாங்கிய ஆங்கில சுயபோதினி; அழகிய ஆப்டோன் படங்களுடன் கூடிய ‘ரதி மன்மத லீலை விளக்கம்’ – இத்யாதி சகிதம் அவன் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

“ஊர் சென்றவுடன் என்ன பண்ணுவது?”

“இந்த நானூறு ரூபாயில் இருநூறு கொடுத்து முன்னே ஒத்திக்கு எழுதிக் கொடுத்த வீட்டைத் திருப்ப வேண்டும்.”

“பிறகு கிராம முனிசீப் ஐயாவுக்கு ஏதாச்சும் கொடுத்து தாசில்தார் எசமானுக்கு முன்னே புஞ்சை நில மானியத்துக்கு எழுதிப் போட்ட மனுப்படி நிலங்களைப் பெற வேண்டும்.

“பிறகு காப்டன் சாப் காயிதத்தை எக்ஸ்சேஞ் ஆபீஸில் கொடுத்து, தாலுகா ஆபீசிலே ஒரு பியூன் வேலையாவது பெறவேண்டும்… அதன்பின் ராஜாதான்..

இன்பக் கனவுகளில் மிதந்தவாறே ஊர் வந்து சேர்ந் தான். சேர்ந்தவுடன் இருநூறு ரூபாய் கொடுத்து வீட்டைத் திருப்பினான்.

மீதி இருநூறு….

புஞ்சை நில மான்ய மனு வெற்றி பெற கி.மு பிள்ளைக்கும், தாசில் சேவகனுக்கும் ஐம்பது வரை வாய்க் கரிசி அளந்தான். கடைசியில் நில மானியம் பகற்கன வாயிற்று.

பிறகு, சோல்ஜர்ஸ் போர்டுக்குள் இவன் நுழையவே முடியவில்லை. அங்குள்ள துவாரபாலகக் கிங்கரர்கள் அவனை அவ்வளவு லகுவில் அனுமதிக்கவில்லை. அந்தப் பணம் பிடுங்கிப் பிசாசுகளுக்கு இவன் அழுது தொலைக்க வேண்டியிருந்தது. ஆபீஸரையாவிடம் நேரில் அழைத்துப் போய் சிபாரிசு செய்வதாகச் சொல்லி அங்கிருந்த ‘நாயக் சாப்’ ஐம்பதுக்கு மேல் கரைத்துவிட்டான்.

பணம் கரைந்தது; வேலை கிடைக்கவில்லை.

இடையிடையே சாலைக்கரையான் தனக்குரிய கப்பத்தையும் வசூலித்துக் கொண்டிருந்தான்.

வேலை வேலை – வேலை; அது மட்டும் கிடைக்கவில்லை. அவனுடைய கனவுகள் நொறுங்கின.

அன்று கடைசியாய்த் தன் பையில் மிஞ்சிய இரண்டணாக் காசோடு அந்த ஆபீஸைப் படையெடுத்தான்; அந்த நாயக் அவனைப் பதம் பார்த்து, ஆசாமி ‘ஐ பி.’ என்று தெரிந்ததும் விஷயத்தை விளக்கமாகவே கூறிவிட்டான்.

“அட சர்த்தான் போய்யா.” நீங்க வருவீகன்னு இங்கு வேலையை வெத்திலை பாக்கு வச்சா தாங்குதாஹ? சண்டை காலத்திலே ஜாஸ்தியாய்ப் போட்ட ஆட்களையே தள்றதுக்கு வேட்டு வச்சிக்கிட்டிருக்காக. வேலை வேணுமா மில்லே வேலை! வீடு வாசலிருந்தாப் போய்ச் சேரு. வீணா எதுக்கு மாதாந்தம் வந்துகிட்டிருக்கே…!’ ராமசாமிக்கு அந்த வார்த்தையின் ஏளனமும், ஏமாற்றமும் கோபத்தைக் கிளறின.

“அட நாசமாப் போறவனே! எங்கிட்டப் பிடுங்கிப் பிடுங்கித் தின்ற திமிராடா இப்படிப் பேசச் சொல்லுது? உன் எழவுக்கு ரூபா நூறில்லே அழுது தொலைச்சேன்” என்றுசண்டை பிடித்தான்.

ஆனால் பலன்? இவனுடைய பிடரியைப் பிடித்துக் காம்பவுண்டுச் சுவருக்கு வெளியே தள்ளிவிட்டதுதான் மிச்சம். ரோட்டில் நின்றுகொண்டு வாய்க்கு வந்தவாறு திட்டினான். வாய் சளைத்தபின் மண்ணை வாரி இறைத்து விட்டு நடந்தான்.

பையிலோ டவுனுக்குப் பஸ் ஏறக்கூட ஒரு அணாக் கிடையாது.

ஒரு பீடி வாங்கக்கூடக் காசில்லை. பைத்தியம் மாதிரிக் கால் நடையாய் நடந்தான்.

ஊருக்குள் நுழைந்தவுடன் குறுக்குப் பாதைக்காக, “அந்தத் தெரு” வழியே திரும்பினான். மனசிலே பழைய நினைவு. முன்னொரு தடவை குடித்துவிட்டு, இந்தத் தெருவிலே மஜா பண்ணிய ..

“என்னப்பா, சும்மாப் போரே! வாரியா? ரொம்ப இல்லே ரெண்டு ரூபாத்தான்” என்று கூப்பிட்டுச் சிரிப்பது காதில் விழுந்தது.

குரல் வந்த திசையில் தலையைத் திருப்பினான். அங்கு ஒரு ‘சரக்கு’ நின்றுகொண்டிருந்தது.

நெற்றியிலே கால்துட்டு அகலத்திலே கருஞ்சாந்துப் பொட்டு; முகத்திலே பவுடர்; உதட்டிலே வெற்றிலைக் காவி; காதிலே ‘சாயம்’ வெளுக்க ஆரம்பிக்கும் கில்ட் லோலக்; கோணல் வகிடு எடுத்துக் கொண்டை போட்ட கூந்தலில் ஒரு மல்லிகைப் பூ ஆர்ச்; மார்பில் வரிந்து கட்டிய பாரசூட் சில்க் பாடீஸ்;

அந்த மேலாக்கு விலகி ராமசாமி ஏறிட்டுப் பார்த்தான்; கூர்ந்து பார்த்தான்.

“என்னப்பா முழிக்கிறே?” என்று கேட்டது அந்தப் பதினெட்டாம்படிப் பதுமை.

அவன் நினைத்தான்: “யார் இவள்?”

அவனுக்கு நினைவு வந்தது-அன்று ஒரு நாள் வாய்க்கால் பாலத்தில் நான் வழி மறித்தேனே அதே பெண்… அதே லக்ஷ்மி!

அவனுக்குத் தலை சுற்றியது. நெற்றிப் பொருத்தை அமுக்கிப் பிடித்தவாறு நடையை எட்டிப் போட்டான்.

-1947

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *