

பலிபீடம் நோக்கி
கலைஞர் மு. கருணாநிதி
புத்தகத்தைப் பற்றி
‘எரிமலை’யின் மூன்றாவது பொறியாகப் பிறக்கிறது ‘பலிபீடம் நோக்கி.’ புரட்சிகரமான சிந்தனையும் புதுமையான போக்கும் மிளிர்கின்றன இந் நூலிலே. கருத்திலும் சொல்கின்ற முறையிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார் இதன் ஆசிரியர்.
தோழர் மு. கருணாநிதியின் பெயரை தமிழுலகம் நன்கறியும். நாடகாசிரியர். புதுயுகம் காண விரும்பும் இளைஞர்.
தீவிரமான கருத்துக் களை இதயத்திலே படும்படி எடுத்துச் சொல்லும் திறமை பெற்ற எழுத்தாளர். அவரது திறமைக்கு அருமையான சான்று இந்த நூல்.
குள்ளநரிச் செயல்களுக்குக் கும்பிடு போடும் உலுத்தர் கும்பல் பேனாப் பிடிக்கும் போது, தமிழுக்கும் தமிழகத்துக்கும் வீழ்ச்சி வகுத்த வெங்கண்ணாக்களை ராஜதந்திரி, மேதை நிபுணன் என்று உயர்த்தி வைத்து வந்துள்ளது. உண்மையை ஒளிப்படம் போல், அழகாகக் காட்டுகிறார் தோழர் கருணாநிதி இந் நூலிலே.



