பலிபீடம் நோக்கி
கலைஞர் மு. கருணாநிதி

பலிபீடம் நோக்கி

இமயத்தின் பனிப்பாறைகள், சேரன் செங்குட்டுவனின் வீரம் தீட்டிய ஏடுகள். கனக விசயரின் வளைந்த கழுத்துக்கள், அவன் வரலாற்றை விளக் கும் ‘கார்டூன்’ ஓவியங்கள். ஆர்யாவர்த்தத்தில் உருண்ட தலைகள், அவன் படை வலியைப் பாராட்டிய விமர்சன எழுத்துக்கள். தமிழகத்தில் எழுந்த கண்ணகியின் சிலை, அவன் கலையார்வத்தின் சின்னம்.

வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழ்ந்த வேங்கைப் புலி சேரன் செங்குட்டுவன் தம்பி அமைத்துத் தந்த தமிழச்சியின் கலைக்கு சிலை அமைத்தவன். அரசியல் துறையில் ஆரியத்தை எதிர்த்து, அதன் கொழுப்பேறிய இருதயத்தைத் துவைத்துப் பிழிந்த கோமான்.

அந்த வீராதி வீரன் வீழ்ந்தான்.

சிங்கத்தை சுண்டெலி வெற்றி கண்டது போல – வேங்கையை வெள்ளாடு வீழ்த்தியது போல – வாளின் கூர்மை வைக்கோல் வீச்சால் மழுங்கியது போல ஆரியத்திடம் அவன் அடிமைப்பட்டான். மறவேந்தன் மண்புழு போல் நெளிந்தான். மண்டியிட்டான்.

எந்த ஆரியத்தை அரசியல் துறையில் எதிர்த்து தமிழ்நாட்டுக் கற்பின் சார்பில் வென்று, போர்க் கைதியாகப் பிடித்தானோ, அதே ஆரியத்திற்குத் தெண்டனிட்டான். அஞ்சலி செய்தான். அருள் வேண்டி நின்றான்.

மறக்குல வேந்தனை சாய்த்தவன் ஒரு மறக்குல மழவனல்ல! சேரனை சாய்த்தவன் அவன் இனத்த வன் பாண்டியனல்ல! அந்த சூரனை சாய்த்தவன் சோழனுமல்ல!

சோறும்,சூதுமன்றி எதுவுமறியா ஒரு சோதா, சேரன் செங்குட்டுவனை வீழ்த்தினான். வீரத்தை விலை கேட்கும் ஒரு ‘விருதா’ சேரன் செங்குட்டுவனை வீழ்த்தினான்.

வீழ்த்திய முறை பெருமைக்குரியதா ? இல்லை ! போர் முனையிலா? இல்லை ! போகசாலையை மட்டும் காட்டியா? இல்லை!

யாகசாலையில்!… வீழ்ந்தான்!… வீழ்ந்தான்! வீழ்ந்தது தமிழன் மறம்! வீழ்ந்தது தமிழன் கொற்றம்!

குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கவில்லை. வேழப் படையின் வெற்றி முரசமில்லை. காலாட் படையின் கடுமையான தாக்குதலில்லை. ஊரும் தேருமில்லை. இவை ஒன்றுமே இல்லாமல் சேரன் கோட்டையில் ஆரியம் நுழைந்தது. படைத் தலை வன் மாடலவறையன். ஆம், அந்தக் காலத்து ”மஹா கனம்!”. அரசியல் துறையில் வெற்றி கண்ட ஆண்மையாளனைப் பழி தீர்த்துக்கொள்ளப் பலி பீடம் அமைத்தான் அவன்!

அந்த பலி பீடம் நோக்கி சேரனை இழுத்துச் சென்றான்.

ஆரியத்தின் அஸ் திரங்கள் சேரனின் அங்கங் களை அறுத்திருக்கலாகாதா? சிந்திய ரத்த அணுக்களிலிருந்து சிங்கத் தமிழர் படை ஒன்று தோன்றி யிருக்குமே!… அவன் நெஞ்சைப் பிளந்திருக்கக் கூடாதா? அந்த வெடிப்பில் ஒரு புது சமுதாயம் முளைத்திருக்குமே!… அது ஆரியத்தின் கருவை அப் பொழுதே அறுத்திருக்குமே ? …

அந்த அஸ்திரங்கள் செங்குட்டுவனின் மானத்தையல்லவா துளைத்து மகிழ்ந்தன யாக நெருப்பில் அவனே பாய்ந்து ‘ஆண்டவனு’க்குத் தன்னை அர்ப்பணித்திருக்கலாகாதா ?

தமிழனின் தனிப்பண்பு, தன்மானம்! அதை யல்லவா தணலில் வேக வைத்தான்.

கனகவிசயர் தலையில் கல் !

மாடலவறையன் தலையில் பண மூட்டை !

அது அரசியல் ! இது மத இயல் ! ஆரியம் ஆனந்த நர்த்தனம் செய்தது. பலிபீடத்தில் தமிழரைத் தள்ளுவதற்குப் பல வழிகள் அமைத்தது ! எங்கும் வரவேற்பு பலகைகள்… ஆரியத்தின் அன்பு (?) அழைப்புகள்.

‘சொர்க்கம் செல்லும் மார்க்கம்,’ ‘தேவலோகத் திற்குப் பாதை,’ ‘வைகுண்ட வழி…’ எல்லாக் கைகாட்டிகளும்… பாதைகளைப் பிரித்துக் காட்டி, கடைசியில் ‘பலி பீடம் நோக்கி’ தமிழரை இழுத்துச் சென்றன.

இந்த ஆட்டு மந்தைகளும் சேரன் சென்ற திக்கில் பயணம் வைத்தன. ஆரிய பலிபீடத்திற்கு அணி வகுத்தன. அணிவகுப்பில் எத்தனை அரசர்கள்… எத்தனை ஆண்மையாளர்கள் … ? அய்யகோ…! எந் நாட்டுத் தோழரீர்!… அங்கே பெருகி ஓடும் உதிர ஆறுகளைப் பாருங்கள். நீங்களும் பலிபீடம் நோக்குங்கள்.

வீழ்ந்துபோக அல்ல!… வாழ்ந்து வர! பலிபீடம் நோக்கிகளே!… இதோ மாடலவறையன் மரபிலே ஒருவர்!

வேதியர் வெங்கண்ணா! திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறார்… படக்காட்சி ஆரம்பமாகிறது பாருங்கள். படம் உங்களுக்கு ஒரு பாடம் தரட்டும்.

திரையில் ஒரு எரிமலை குமுறுகிறது. ‘குபீர் குபீர்’ என்று நெருப்புக் குழம்பை வாரி வீசுகிறது. அந்த நெருப்பு அபிஷேகத்திற்கு ஆளாகி இடிந்து சரியும் ஆலயங்களின் கோபுரங்கள், மடாலய மதிற் சுவர்கள், பண்ணைக்காரரின் களஞ்சியங்கள் அனந் தம்..அனந்தம்! பயங்கரப் பின்னணி சங்கீதம் ‘கட கடா… குடு குடு..’ என்ற அகோர இரைச்சல்.

எரிமலையைச் சுவராகக்கொண்டு பல எழுத்துக்கள் உருள்கின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *