
இன்பவாழ்வு
இன்பவாழ்வு எது? பலர் பலவாறு கூறுப. நால்வருள் ஒருவரும், இரு மனைவிமாரோடு வாழ்ந்து இல்லற நடத்தி, அதன் வாயிலாக இன்ப அன்பைக் கண்டு, ஆண்டவனோடு தோழமை பூண்டவருமாகிய வன்றொண்டப் பெருந்தகையார் திருவாக்குகளுள் ஒன்று நினை விற்கு வருகிறது. அதைப் பீடிகையாகக்கொண்டு இக்கட்டுரை வரைவான் புகுகிறேன்.
தம்பிரான் தோழர் திருவாக்கு வருமாறு:-
“இறைகளோ டிசைந்த இன்பம்
இன்பத்தோ டிசைந்த வாழ்வு”
இத்திருவாக்கு பாட்டா? மலரா? திங்களா? அமிழ்தமா? டால்ஸ்டாயா? காந்தியா என்னென்று கொள்வது? ‘இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு’ என்றே கொள்ளல்வேண்டும். இறையே! இன்பமே! வாழ்வே! நீங்கள் வேறோ? உங்களுக்குள்ள தொடர்பை என்னென்று சொல்வது? அத்தொடர்பை உணர்வ தன்றோ அறிவு? இவ்வுலக வாழ்வு எற்றுக்கு வழங்கப்பட்டது?இன்பத்தை நுகரும் பொருட்டன்றோ? அவ்வின்பம், வாழ்வின் வழியன்றோ நுகர்தல்வேண்டும்? அவ்வின்பமே இறையின்ப மெனப்படும். இறையின்பம் என்பது மேலான இன்பம். அதைப் பேரின்பம் என்றுங் கூறுப. இன்பங்களுள் தலையாயது – அரசு போன்றது தனக்கு ஒப்பாகவும் உயர்வாகவும் பிறிதோர் இன்ப மில்லாதது – இறையின்பம். அவ்வின்பமே இன் பம்; அவ்வின்ப வாழ்வே வாழ்வு.
மனிதன், வாழ்வை ஒழுங்கான முறையில் நடத்தாமையால் துன்பத்துக்காளாகிறான். சிக்கலான வழியில் வாழ்வை நடத்தும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாடும் துன்பத்தையே அனுபவிக்கும். ஒழுங்கு பட்ட வாழ்வு ஏட்டுக் கல்வியால் செல்வத்தால் வருவதன்று. மனிதன் படிக்க வேண்டிய படிப்பைப் படித்தால், சேர்க்க வேண்டிய செல்வத்தைச் சேர்த்தால் அவன் ஒழுங்குபட்ட வாழ்வைப் பெறுவான்.
தற்காலம் சர்வ கலாசாலைப் படிப்பும், வலிமையால் ஈட்டுஞ் செல்வமும் மக்கள் வாழ்வைச் சீர்படுத்துமோ? இப்பொழுது போதிக்கப்படும் வித்தை ஒரு தேசத்தை நேசிக்க மற்றத் தேசங்களை அழிக்கச் சேனைகளில் சேரவும் கப்பல்கள் கட்டவும் கொலைக்கருவிகள் செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. செல்வம் எளியவரைத் துன்புறுத்துகிறது. இவ்வித்தையும் செல்வமும் இன்ப வாழ்வை நல்குவனவாகா.
மனிதன் இயற்கையைப் படிக்க வேண்டும். அப்படிப்பால் தன் உடலை, பொருளை, ஆவியை மற்றவர்க்கு அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். சர்வ கலாசாலைப்பட்டம் பெற்று உயர்ந்த உத்தியோ கத்திலுள்ள ஒருவன் வாழ்வை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவன் கல்வியாளன்; பொருளுடையான். ஆனால் அவன் வாழ்வு பெறாதவன்; இன்பமில்லாதவன்; இறைவனோடு பேசாதவன். அவ்வுத்தியோகஸ்தன் படுக்கையினின்று விழித்தெழுந்தது முதல் மீண்டும் உறக்கத்துக்குச் செல்லும் வரை அவன் பிறர் உதவியையே விரும்புகிறான்.
அவன் படுக்கையைச் சுருட்டுகிறவன் எவன்? அவன் உடம்பைக் கழுவுகிறவன் எவன்? அவனுக்கு உணவு அளிக்கிறவன் எவன்? அவன் வஸ்திரத்தைத் தோய்க்கிறவன் எவன்? எத்துணை பேர் உதவியை அவன் எதிர்பார்க்கிறான்! மற்றவர்க்காக வாழ வந்த இவன் மற்றவர் உழைப்பை ஏற்று வாழ்வது இயற்கையோடு மாறுப்பட்டு வாழ்வதன்றோ?
இத்துணை பேர் உழைப்பைப்பெறும் இவன் தான் ஈட்டும் செல்வப் பொருளைத் தன்னுடைக்கும் தன் உணவுக்கும் வேறு பல களிக் கூத்துக்கும் செலவழிக்கிறான். இச்செல்வன் தனக்கு உதவி செய்யும் தன்னைப்போன்ற மனிதர்கள் பட்டினிகிடக்க, கால் வயிறு அரை வயிறு உண்டு வருந்த, உடையின்றிக் குளிரால் மெலிய, அன்னார் உதவியால் தான் பெறும் பொருளை வேறு துறைகளில் செலவழிப்பது இயற் கைக்கு மாறுபட்டு நடப்பதாகும். இயற்கைக்கு, மாறுபட்ட வாழ்வை நடத்தும் ஒருவன் கல்வி கல்வியாமோ? அவன் செல்வம் செல்வமாமோ?
பிறர்க்கு எவ்வழியிலுந் துன்பந்தாராது, தான் பிறர்க்கு உழைக்க முயல்பவன் வாழ்வே இயற்கை வாழ்வாகும். அண்டைவீட்டில் ஏழைகள் பட்டினி கிடப்பதைக் கவனியாது, ஒருவன் தான் அறுசுவையோடு கூடிய உணவை உண்பதும், பக்கத்து வீட்டுப் பெண்மக்கள் ஆடையின்றி வருந்துவதைக் கண்ணோக்காமல் ஒருத்தி தான் விலையுயர்ந்த பட்டாடைகளையும் மாணிக்கக் கற்கள் பதித்த நகைகளையும் தரிப்பதும், ஏழைகள் ஆண்டவன் அளித்த இரண்டு கால்களால் நடந்து செல்ல, ஒருவன் அவர்கள் கண்களில் தூசு நிரம்ப மோடார் வண்டியில் ஊர்ந்து செல்வதும் இயற்கை வாழ்வாகுமோ?
ஏழைகள் உழைப்பால் பெறும் பொருளைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது இயற்கை அறமாகாது. அவன் வாழ்வு இயற்கை வாழ்வாகாது. அவன் உள்ளத்தில் அன்புமலராது; அருட்டேன் பிலிற்றாது.
ஏழைகள் உழைப்பால் பெரும் பொருள் சேர்த்து அதனால் வாழ்பவன் கடவுள் அடியவனாகான். அவன் எத்துணை ஆலயங்கள் கட்டினாலும், எத்துணை முறை க்ஷேத்திரயாத்திரை செய்தாலும், எத்தனை தீர்த்தங்கள் படிந்தாலும், எத்தனை மணியுருட்டினாலும்,நாடோறும் வேத பாராயணஞ் செய்தாலும் அவன் உள்ளத்தில் இறைவன் கோயில் கொள்ளமாட்டான்.
நாடோறும் நெற்றி நீர் நிலத்தில் விழ வேலை செய்து, பெறும் ஊதியத்தை மனைவிமக்களோடு உண்டு, ஒரு காசும் சேர்த்து வையாமல் மீண்டும் அடுத்த நாள் வேலைக்குச் செல்லும் ஒருவன் உள்ளத்திலன்றோ ஆண்டவன் கோயில் கொள்வான்? அவன் தனக்கென்று பொருள் சேர்க்கவில்லை. தான் கஷ்டப் பட்டுப்பெற்ற கூலியை மனைவிமக்களென்னுஞ் சில உயிர்களுக்கு உதவுகிறான்.
அதற்கு மேல் அவன் பெற்றால் மற்றவர்க்கு உதவுவான். அவன் ஊழியர்களைத் தேடுகின்றானில்லை; களியாடல்களுக்குச் செல்கின்றானில்லை. இயற்கை அவனுக்கு ஊழியஞ் செய்கிறது. இயற்கை வழி அவன் வாழ்வு நலமுறுகிறது. அவனைப் பேராசை அகங்காரம் உண்பதில்லை. பேராசை அகங்காரம் அவனைக்கண்டு வணங்கி ஓட்டம் பிடிக்கின்றன.அவனல்லவா அரசன்? அவனல்லவா ஆண்டவன்?
வாழ்வைப்பேராசையில் – அகங்காரத்தில் தோய விடாது இயற்கை வழிச்செலுத்த முயலல் வேண் டும். தான் சுகமாக வாழவேண்டும் என்ற நினைவின் உதயமே மனிதனைப் பேயாக்கி அவன் வாழ்வைக் குலைக்கிறது. வாழ்வு குலைந்தால் இறையேது? இன்பமேது? பிறர் உழைப்பால் பெறும் பொருளைத் தன்னுடையதாகக் கருதி, அதை மற வழியில் செலவழித்து இறுமாப்புக் கொண்டு திரிபவன் இன்பவாழ்வுக்கு அடி கோலுபவனல்லன். இன்ப வாழ்விற்கு அடிகோலுபவன் சென்றது கருதாமலும் சேர்வது நினையாமலும் மற்றையோர் உழைப்பை எதிர் நோக்காமலும் அடங்கி வாழ்வான்.
பிறர் உழைப்பால் பொருளீட்டுவோனிடம் மன அடக்கம் உண்டாதல் அரிது. மனம்போன வழியெல்லாம் உழலுகிறவன் இறைவனோ டிசைந்த இன்பவாழ்வை எவ்வாறு நடத்தக்கூடும்? அவன் பணச்செருக்கால் பிறரை அடிமை கொள்ளவும், தான் உல்லாசமாக வாழவும் நினைப்பான்; தன்னைப் பிறர் ஆண்டவன் என்று நினைக்க வேண்டுமென்ற கருத்தும், நினைத்தனவெல்லாம் செய்யவேண்டு மென்ற திமிரும் அவனுக்கு இயல்பாக உண்டாகும். அவன் தன்னுடைய உடலை- பொருளை – ஆவியைக் கடவுளுக்கு அர்ப்பணஞ் செய்யமாட்டான்;
அதாவது மற்றவர்க்காகத் தான் வாழ்வதாகக் கருதமாட்டான். கொலை களவுகள் காமம் பொய் எல்லாப் பாவங்களும் அவனைச் சூழ்ந்து நிற்கும். இவ்வளவுக்குங் காரணம் தன்னலங் கருதும் வாழ்வேயாகும்.
தன்னலங்கருதா வாழ்வை நடத்த வேண்டுமென்பதே நம் முன்னோர்கள் நோக்கம்.அதையே நம் முன்னோர்கள் வாழ்வில் வலியுறுத்தி வந்தார்கள். எந்த நூலை எந்தச் சாத்திரத்தை யெடுத்தாலும் அவைகளில் தன்னல மறுப்புப் பேசப்படுவது காணலாம். மனிதன் பண்டை நாளில் தன்னலமறுப்பைப் பற்றிய வித்தையையே பயின்று வந்தான். அது காலை அவன் பொருளா தார நூல்களைப்பயின்றானில்லை. பொருளாதார நூல் பயிற்சி தன்னலத்தை – தன் குடும்ப நலத்தை – தன் தேச நலத்தை வளர்ப்பதாகும். பொருளாதார நூல் பயின்றவர்க்குத் தேசபக்தி ததும்பி வழியலாம். அத்தேச பக்திக்குப் பொருள் யாது?
பிறதேசங்களை வருத்துவது என்பதே. பிறதேசங்களை வருத்தி அவைகளிலுள்ள பொருள்களை வலிந்து திரட்டிவரும் தேசபக்தி போதிக்கப்படும் கலாசாலைகளில் ஞானவாணி வீற்றிருப்பளோ? பேயன்றோ அக்கலாசாலைகளில் வாழும்? நம் முன்னோர்கள் அறஞ்செய விரும்பு” என்றன்றோ பிள்ளைகளுக்குப் போதித்து வந்தார்கள்? நம்மவர்கள் கல்வி தன்னலங் கருதாக் கல்வியென்பதைப்பற்றி ஈண்டு விரித் துரைக்க வேண்டுவதில்லை. தன்னலங் கருதாத பேரறத்தை ஊட்டுங் கல்வி இளமை உள்ளத்தில் பதிந்தால் முதுமை வாழ்வு மற்றவர்க்குரிய வாழ்வாக முடியும்.
கல்விக்குப் பின்னர் கட்டழகியோடு கலந்து அக்கல்வியின் பயனாகிய இறைவனோடிசைந்த இன்ப வாழ்வைப்பெற முயலல்வேண்டும். “இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு” என்று அருளிச்செய்த பெரியார் இல்லறத்தில் வாழ்ந்து பெண்ணின்பத்தைப் பேரின்பமாகக் கண்டவர்.”பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெரு மானே மற்றாரை யுடையேன் ” என்று ஓதியிருத்தல் காண்க.
தன்னலங் கருதி – கேவலம் மிருக சுகங் கருதி- ஒரு பெண்ணை விவாகஞ் செய்கிறவன் இறைவனோ டிசைந்த இன்பம் நுகரமாட்டான். பெண்ணை இழிவாகக் கருதுகிறவன் அன்பை அறியாதவன்; இன்பத்தை உணராதவன். உலகத் தோற்றத்துக்குக் காரணமாக உள்ள தெய்வமாகிய பெண்ணைப் பேயெனக் கருதுவதும் நாயென நினைப்பதும் இன்பத்துக்குக் கேடு சூழ்தலாகும். பெண்ணை – இல்லறத்தை – இயற்கை வாழ்வை ஆண்டவன் நெறியை – வெறுப்பதும் அறியாமை. நம்முன்னோர்கள் “கேவலம் மிருக இன்பங்கருதி எவன் பெண்ணை மணஞ் செய்கிறானோ அவன் நரகடைவான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
புத்திரப்பேறு கருதியே பெண்ணை மணஞ்செய்தல் வேண்டுமென்று நம் பெரியோர்கள் வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள். ஆன்மா தேகந் தாங்குவதற்கு முன்னர் எந்நிலையிலிருந்ததென்பது நமக்குத் தெரியாது. பலர் பலவாறு ஊகஞ் செய்துரைக்கலாம். ஆனால் ஆன்மா தேகந் தாங்கிய பிறகு அறிவு விளங்கிப் பற்பல ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டு இன்பத்தை நுகர்கிறது. அறிவு விளக்கத்துக்குக் கருவியாக உள்ள உடல் முளைக்கும் பூமி எது? நம்மை ஈன்ற அருமைத் தாயல்லவா?
அவளையா பேய் என்று கூறுவது? நாயென்று பேசுவது? பெண்ணை வெறுக்கிறவன் உயிர்கள் சிருஷ்டியை வெறுக் கும் பாவியாவன். தான் தேகந்தாங்கி இன்ப நுகர்வதைப் போல ஏனையோர் தேகந்தாங்கி இன்ப நுகர எண்ணங்கொள்ளாத ஒருவனைப் யாவியென்றழைக்கலாம். பெண்ணோடுகூடி வாழும் அற நெறியில் பரோபகார சிந்தை வளர்வதை விரிக்கிற் பெருகும்..
சில ஞானிகள் பெண்களை மிக இழிவாகக் கூறியிருப்பதென்னை என்று சிலர் வினவலாம். அதற்கு, உடலின்பமூட்டும் வேசைமார்களையே ஞானிகள் இழித்துக் கூறியுள்ளார்களென்று பதிலிறுத்தல் வேண்டும். காதலின்பமூட்டும் நாயகியை ஒரு நாளும் பெரியோர் இகழமாட்டார். காதலென்பது இருவர் உயிர் பற்றி நிகழ்வது. அவ்வின்பமே பேரின்பமென்பது. காதல் இன்பம் நுகர்வோர் தொகை அருகிவருமிந்நாளில் இக்கூற்று பித்தர் கூற்றாகவே கருதப்படும். ஆன்மநேய ஒருமைப் பாட்டுக்கு அடிகோலும் இல்லறம் இறைவனோடி சைந்த இன்பவாழ்விற்கு அடிப்படை.
பெண் என்பதும் ஏனைய இயற்கைப் பொருள்களைப்போன்றது. மனிதன் இன்பவாழ்விற்கு மண் நீர் காற்று நெருப்பு ஆகாயம் எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு பெண்ணும் இன்றியமையாதவள். அவ்வாறே பெண்ணுக்கு ஆணும் இன்றியமையாதவன். இன்றியமையாத பெண்ணை ஆண் வெறுப்பதும் ஆணைப் பெண் வெறுப்பதும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வாகும். அவ்வாழ்வில் இன்பம் விளையாது; இன்ப மில்லாவிடத்தில் இறைவனில்லை. இயல்பாக மனிதனுக்கு ஏற்பட்டுள்ள இன்பக் கிளர்ச்சியை அடக்குவதும், ஒருத்தியோடுகூடி உயிர் களை உண்டுபண்ணும் பரோபகார சிந்தை கொள்ளாது வேசைமாரிடத்தணைவதும், வேறு பல தீயொழுக்கங்களில் நுழைவதும், இயற்கையோடு எதிர்த்துநிற்குஞ் செயல்களாம்.
இயற்கையோடு கலந்து வாழாதவனுக்கு இன்பமெங்கே? இறைவ னெங்கே? வாழ்வெங்கே?
இயற்கை இறை இன்பம் என்று தொடர்பு படுத்தித் கூறிவருவதைக் குறித்துச் சிலர் ஐயுறலாம். இயற்கை சடம்; இறைவன் சித் இரண்டையும் ஒன்றுபடுத்துவது நாத்திகமென்று சிலர் கூறுப. இயற்கையை இறைவன் சாய லென்றும், அதைக் கடவுள் உடலென்றும், அதையே கடவுளென்றும் தத்துவஞானிகள் கொண்டிருக்கிறார்கள். இவர்கொள்கை சொல்லால் மாறுபட்டாலும் பொருளால் மாறுபடுவதாக எமக்குத் தோன்றவில்லை.
அவ்வாதத்தை ஈண் டெழுப்பவேண்டுவதும் அநாவசியம். இயற்கை இறைவன் சாயலாயினுமாக; அஃது இறைவன் உடலாயினுமாக; அல்லது அதுவே கடவுளாயினு மாக.
இயற்கை இறைவனை விடுத்துத் தனித்து இயங்குவதில்லை என்பதும், இயற்கைச் செயல் களெல்லாம் இறைவன் செயல்களென்பதும், இயற்கையோடு கலந்து வாழ்வது இறைவனோடு கலந்து வாழ்வதென்பதும், அவ்வாழ்வில் விளை வதே இன்பமென்பதும் மறுக்கப்படாத உண்மை கள். ஆதலால் இயற்கை இறைவன் இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இயற்கை யின்பத்தையுளிக்கும் பெண்ணை வெறுப்பது இறைவனை வெறுப்பது போன்றதென்பது கவனிக்கற்பாலது.
பெண்ணை வெறுப்பது ஆண்டவன் படைப்பு நோக்கத்துக்கு முரண்பட்டு நிற்பதாகும். சராசரங்களெல்லாம் ஆண்பெண் வடிவமாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்டவன் பெண்ணுலகைச் சிருஷ்டி செய்யாமலிருக்கிறானோ ? பெண்ணால் உலகம் நடைபெற வேண்டியிருத்தலால் இறைவன் பெண்ணைப்படைக்கிறான். உலகம் என்றும் நடைபெறுவதற்கே பெண் படைக்கப்படுகிறாள். உலக வளர்ச்சிக்குக் கருவியாக ஆண்டவனால் அளிக்கப்பெற்ற பெண்ணை வெறுப்பது, படைப்பு நோக்கத்துக்கு முரண்பட்டு நிற்பதாகும்.
காட்டுக்குச் சென்று, தான் ஒருவனே வீடு பேறெய்தவேண்டும் என்னும் எண்ணங் யோகஞ்செய்கிறவனைப் பார்க்கிலும், ஒருமாதை மணந்து சில உயிர்களைத் தோற்றுவிக்கிறவன் சீவகாருண்ய முடையவனாவான். இல்லறம் ஜீவகாருண்ய நெறி ஒம்பும் அறம் என்பது வெளிப்படை. ஆதலால் பெண்ணை வெறுக்கும் வாழ்வு இன்ப வாழ்வாகாது.
பெண்ணோடு கூடி வாழாதவன் அடிக்கடி நோய் வாய்ப்படுவன். உற்றவயதில் நுகரவேண்டிய இன் பத்தை நுகராதொழிவது துன்பத்தை விலைக்கு வாங்குவதாகும். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாதல்போல இல்லற இன்பத்தையும் அளவாக நுகர்தல்வேண்டும். வரம்பு கடந்தால் பெருந்துன்பம் விளையும் என்பது நிச்சயம். விவா கத்துக்கு முன்னர்ச் சிலர் பலவித நோய் வாய்ப் பட்டு வருந்துகிறார். அன்னார் மனைவாழ்க்கை பெற்றதும் நோய் தீரப்பெறுகிறார்.
எனவே நோய்க்கு மருந்தாக உள்ள பெண்ணை வெறுப்பது தன்னுடலைத்தானே கொல்வதாக முடியும். இன்ப வாழ்விற்குப் பெண் இன்றியமையாதவள் என்பதை விரித்துக்கொண்டு சென்றால் இக்கட்டுரை பெண்ணைப் பற்றியதாகவே முடியும். ஆதலால் பெண்ணை இவ்வளவோடு நிறுத்துவது நலம்.
கல்வி பயிலுதற்கும், தன்னலமறுப்புக்கும் பெண்ணின்பம் நுகர்தற்குங் கருவியாயிருப்பது நமது அரிய உடல். உடல்காணியன்று; பூமியன்று; பொன்னன்று; பொருளன்று. அஃது ஆன்மாவிற்கு ஆண்டவனளித்த ஒரு பெரும் இருப்பு. எல்லாப் பொருள்களும் ஆன்மாவிற்கு விவகார நிலையில். வேறாக விளங்குகின்றன. உடலோ ஆன்மாவோடு நெருங்கிய உறவுகொண்டு உடன் உறைகிறது. அத்தகை உடலை நாம் எவ்வாறு ஓம்புதல்வேண்டும்? காணியை, பூமியை, பொன்னை, பொருளை நாம் எவ்வளவு பற்றுக் சொண்டு பாதுகாக்க முயல்கிறோம்? இவைகளினும் கோடிபங்கு உயர்ந்த உடலிடத்தில் எவ்வளவு பற்றுக்கொண்டு அவ்வுடலை ஓம்பவேண்டு மென்பதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ?
உடல் இருந்தால் தான் மண் பொன் பெண் இன்பத்தை நன்கு நுகரலாம். உடல் மெலிவுற்றுத் தளர்ச்சியடைந்தால் இன்பமே நுகர இயலாது. இன்ப நுகர்விக்குங் கருவி உடலன்றோ? அவ்வுடலை ஓம்பாது விடலாமோ? உடலை நல்லவழியில் பாதுகாவாதவன் ஆண்டவன் அருளுக்கு உரியவனாகான். இயற்கையின்பத்தை நுகர்ந்து தன்னின்பத்தைப் பெறும் பொருட்டு ஆண்டவன் உயிர்க்கு உடல் நல்குகிறான். அவ்வுடலை ஓம்பாதுவிடின், இயற்கை யின்பமேது? இறையின்பமேது? இன்ப வாழ்வேது? உயிர் உடலோடுகூடி இன்பத்தை நுகர்வது வாழ்வெனப் படும். வாழ்வு என்பதே உடலை ஒட்டி நிற்கிறது. உடலை வெறுப்பது வாழ்வைவெறுப்பதாம். ஆகவே உடலை ஓம்புவது இன்பவாழ்வைப் பெறக் கால்கொள்வதாகும்.
உடலை ஓம்ப உ உறுதி கொள்வோர் வயித்தியனை, மருந்தை விலக்கி வாழ்தல் வேண்டும். இயற்கை வழி வாழ்வை நடத்துபவனுக்கு வயித்தியனும் வேண்டுவதில்லை; மருந்தும் வேண்டுவ தில்லை. மனிதன் நீரிலும் காற்றிலும் சூரிய ஒளியிலும் நாடோறும் முறைப்படி மூழ்கிவருவானாயின், அவனை நோய் அணுகாது. இம்மூன்றை யும் ஒழுங்குபடப் பயன்படுத்திக் கொள்ளாது, பெரும் திண்டியால் உடல் உரம் பெறுமென்று வேளை நாழி கவனியாது, விரும்பியவற்றை உண் பவன் உடலில் நோய் ஆனந்த நடம்புரிந்து கொண்டே நிற்கும். ‘அமித உணவின் விளைவு மரணம்’ என்பது கவனிக்கத்தக்கது.
சீரண சக்திக்கேற்றவாறு உணவுகொள்ளல் வேண்டும். பசி யெடுக்கிறதோ எடுக்கவில்லையோ அதைக் கருதாது மணியைப் பார்த்து உணவு கொள்வோர் உடலை ஓம்புவோராகார். பசியெடுத்த பின் சீரணிக்கக்கூடிய பொருளை உண்டு வாழ்வது நல்ல வாழ்வாகும். வைகறையெழுந்து நீரில் மூழ்கி இளஞ்சூரியனைக்காணாது உறங்குவோரது ஆயுள் குறைந்து விடும். விரதமிருப்பதாலும் உடல் நலம்பெறும். விரதத்தால் உடலுக்கு விளையும் நலன்களைப் பக்கம் பக்கமாக வரையலாம்.
ஈண்டு விரிக்கிற் பெருகும். நமது நாட்டுப் பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விரதங்களை முறையாக அனுஷ்டித்தால் வச்சிரதேகமன்றோ உண்டாகும்! பன்றிகளைப் போலத் தின்பதால் மரண நோய் விரைவில் அடர்ந்து கொல்கிறது. உடலோம் புதல் இன்பவாழ்விற்கு இன்றியமையாதது.
இயற்கை வழி வாழ்கிறவன் இறைவன் நியதி வழி வாழ்கிறவனாவன். இயற்கையை விடுத்து இறைவனைப் பிடிப்பது உண்மை நீரைக் கான லாகக் கருதியுங் கானலை உண்மை நீராகக் கருதியுமிடர்ப்பட்டவன் கதையாக முடியும். இறைவனை இயற்கையினின்றும் வேறு பிரித்து வழிபடும் வழிபாடு இறைவனுக்குச் செல்லுதலரிது. இயற்கையை இறைவனாகக் கொண்டு வழிபடலாம். இவ்வுண்மை தெளிவோர்க்கு இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு” என்ற திருவாக்கின் செம்பொருள் இனிது புலனாகும்.
இறைவனோடிசைந்திருப்பது இன்பம்; அவ்வின்பத்தோடு இசைந்திருப்பது வாழ்வு. இதை இறையின்பவாழ்வு என்று சுருங்கக்கூறலாம். இறையே இன்பம்; இன்பமே இறையாதலால் இன்ப வாழ்வு’ என்று கொள்ளப்பட்டது. மனிதன் தன்னல மறுத்து இயற்கையோடு வாழ்வானாயின், அஃதவனுக்கு இறையின்பமாகவே தோன்றும். தன்னல மறுக்கிறவன், பிறர்க்குத் தான் உழைக்க வேண்டுமென்று வாழ்கிறவன்.
தன்னலமறாதவன் பிறர் உழைப்பைத் தன்னலத்துக்கெனக் கொள்கிறவன். தன்னலமறுப்பும் பிறர்க் குழைக்கும் பெருந்தகையும் பொலியும் உள்ளம் காம குரோத முதலிய ராட்சத குணங்களால் விழுங்கப்படாமலிருத்தலால், அதன்கண் அரும்பும் இன்பம் இயற்கையின்பமெனப்படும். அவ்வுள்ள முடையார் நீரையுங் காற்றையும் ஞாயிறோ ளியையும் பெண்ணையும் பிறவற்றையும் இறையாகவே கொள்கிறார். அவைகளை யிறைவனாகக் கொண்டு அவைகளோடு கலக்கும்போது பிறக்கும் இன்பம் இறையின்பமாகும். நீரை,காற்றை, சூரிய ஒளியை ஆண்டவனாக ஏற்பது இறைவனோ டிசைந்த இன்பம் நுகர்வது. அஃது இன்பவாழ் வெனப்படும்.
மணந்த மனைவியைக் கடவுளாகக்கொண்டு இன்பநுகர்வது ஆன்மநேய ஒருமைப்பாடென் கடவுளாகக் கருதாது நுகரும் இன்பம் மிருக இன்பமாகும். பண்டைக்காலத்தில் நாயகன் நாயகியை உந்தியில் தியானிப்பதும் நாயகி அவ்வாறே நாயகனைத் தியானிப்பதும் வழக்கத்திலிருந்தன. அத்தியானத்தின் பின்னர் நுகருமின்பத்தில் ஒருவித அகவின்பம் விளையும். ஆண்டவனை நாயகநாயகி முறையில் வழிபடுவது எல்லா வழிபாடுகளிலுஞ் சிறந்ததாம். நாயக நாயகி யாவனையே இப்பொழுது அறுந்துவிட்டது.
மனைவியை வேலைக்காரியாகப் பாவிக்கப்படுங்காலம் தோன்றியிருக்கிறது. இக்காலமொழிக.நாயகன் நாயகியை ஆண்டவனாகக் கருதுவதும்,அவள் அவனை அவ்வாறே பாவிப்பதும் இறைவனோடி சைந்து நிற்றலாம். இவ்விசைவு இன்ப வாழ் வெனப்படும்.
இன்ப வாழ்வையளிக்கும் மனைவியை ஏன் துறந்து ஓடுதல்வேண்டும்? ஒவ்வொரு வீட்டிலும் உலவும் உயிர்களைக் கடவுளாகப் போற்றாது, வேறிடங்களில் கடவுள் இருக்கிறார் என்று ஓடுவது ஞானிகள் செயலாமோ? வீட்டிலுள்ள மனைவிமக்களை – தாய்தந்தையர்களை – பிறரை ஏன் மனிதராகப் பாவிக்கவேண்டும்? அவர்களை ஏன் தெய்வமாக வணங்குதலாகாது?
வீட்டிலுள்ள மனைவிமக்களென்னும் ஒரு சில உயிர்களைத் தன் னலங்கருதாது, அவர்கட்கு வேண்டுவசெய்து, அவர்களை வழிபடுவது நாளடைவில் முதிர்ந்து, அது சுற்றத்தார் வழிபாடாய், கிராமத்தார் வழிபாடாய், தேசத்தார் வழிபாடாய், முடிவில் எல்லா உயிர்கள் வழிபாடாய் முடியும்.அவ் வழிபாடு செய்கிறவன் உலகத்தையே இறைவனாக வழிபடுகிறவனாவான். அவன் மனமொழி மெய்- அவன் வாழ்வு – என்றும் இறைவனோ டிசைந்து நிற்கும்.
இத்தகைவாழ்வை நடத்தவே மனிதன்: படைக்கப்பட்டான். அவ்வாழ்விற்கெனவே அவனுக்குத் தனுகரணபுவன போகங்கள் வழங்கப் பட்டன. இந்நாளில் அந்நோக்கம் நிறைவேறுகிறதா? இந்நாளில் உலகத்தில் ‘இறைகளோடி சைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு நடைபெறுகிறதா? சுய நலமென்னும் பேய், பேராசை என்னும் பைசாசம், உலகத்தை அலைத்துச் சாத்தானோடு வாழ்வைப் பிணித்து மக்களைக் கெடுத்து வருகின்றன. இவ்வழி யுழல்வோரால் உலக காரியங்கள் நடத்தப்படுகின்றன.
அவர் செயலால் சாத்தான் கல்வி, பேய்மணம், பைசாச வாழ்வு, கொடிய ஆட்சி முறைகள் பெருகுகின்றன். உலகம் வருந்துகிறது; இயற்கை அலமருகிறது; வாழ்வு குலைகிறது; இன்பத்தைக் காணோம்; தருமம் தலை சாய்ந்து விட்டது; பரோபகாரம் படுத்துவிட் டது. இந்நாளில் நாம் வாழ்கிறோம். நமது வாழ்வு இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத் தோடிசைந்த வாழ்வாவது எப்பொழுது? அவ் வாழ்வை உயிர்ப்பிக்க எவ்வறிஞர் முயல்கிறார்? பட்டம் உத்தியோகம் முதலிய துன்பங்களை இன்பமாகக் கருதுவோர் கூட்டம் பெருகு நாளன்றோ இந்நாள்? இவ்வேளையில் எவர் அம் முயற்சியில் தலைப்படுவார்?
உலகம் சுய நலத்துக்கும் பேராசைக்கும் இரை யாகி வருந்தும் வேளைகளில் கடவுளருளால் மகான்கள், தோன்றுவது வழக்கம். இதுகாறும் மகான்கள் பலர் உலகத்தில் தோன்றினர். இந் நாளில் உலகத்தைச் சாந்தி செய்ய மகாத்மா காந்தி தோன்றியிருக்கிறார். அவர் உபதேசத் தால் உலகம் உய்யும் என்பதில் ஐயமில்லை. அவர் உபதேசத்தை உலகம் ஏற்றுக்கொண்டால் மனிதனை இப்பொழுது பிடித்தாட்டும். தற்கால நாகரிகப் பேய் ஒழிந்து போகும். உலகத்திலுள்ள மனிதர்கள் தூய்மை பெறுவார்கள். அரசாங்கங் களுஞ் சுத்தப்படும்.
காந்தியடிகள் “இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வைக் கொள்ளுமாறு போதிக்கிறார். அவர் உபதேசத்துக்கு மாறாக நிற்பது தற்கால நாகரிகம். தற்கால நாகரிகம் மனிதன் வாழ்வை இயந்திர வாழ்வாக்கியிருக்கிறது; தற்கால நாகரிகம் செல்வத்தை ஒரு கூட்டத்தாரிடத்தில் திரட்டிச் செலுத்துகிறது; தற்கால நாகரிகம் முதலாளி தொழிலாளி என்ற வகுப்பை உண்டுபண்ணி யிருக்கிறது. சுருங்கக் கூறின் தற்கால நாகரிகம் மனிதனுக்கும் கடவுளுக்குமுள்ள தொடர்பை அறுத்திருக்கிறது என்று கூறலாம். அத்தொடர்பை மீண்டும் புணைக்க மகாத்மாகாந்தி தோன்றியிருக்கிறார். அவர் இவ்வுலகையே இன்பமயமாக்க முயன்று வருகிறார்.
உலகம் அவர் வழிநின்று “இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்” வைப் பெறுமாறு ஆண்டவன் அருள் செய்வானாக.
★ ★ ★



