கண்ணகி தேவி 
ஆ. கார்மேகக் கோனார்

கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

வீரபத்தினியாகிய கண்ணகி தேவியின் வரலாறு, தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்ச் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்துள் விரித்துக் கூறப் பெறுவது. இஃது ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் காவிரிப்பூம் பட்டினம், மதுரை, வஞ்சி என்னும் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்கள் மூன்றின் சம்பந்தமும் பெற்ற உண்மைச் சரித்திரமாகும். இச்சரிதம் கடந்த காலமும் இதனைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காவியமாகப் பாடிய இளங்கோவடிகள் காலமும் ஒரே காலமாகும்; இதனுள் இச்சரித்திரம், உண்மைக்கு எவ்வளவு மாறுபடாததாயிருக்குமென்பது கூறவேண்டுவதில்லை.

கண்ணகி தேவி சரிதையில், பெண்களின் உயர்வும், கற்பின் தெய்வத்தன்மையும், ஒழுக்கத்திறனும், வினையின் விளைவும் முதலாய பல நீதிகளும் பொருளும் அமைந்திருக்கின்றன.

கண்ணகி தேவியின் வணக்கம் முற்காலத்துத் தமிழ்நாட்டிலன்றிப் பிற நாடுகளிலும் பிரபலம் பெற்றிருந்ததென்று இச்சரித்திரத்தால் அறியப்படுதற்கேற்ப, இப்போதும் தமிழ் நாட்டிலும், இலங்கையிலும், வடநாட்டிலும் பழைய பத்தினி கோயில்கள் ஆங்காங்குக் காணப்படுகின்றன. அன்றியும், மதுரை வடக்குக் கோட்டை வாயிலிலுள்ள செல்லத்தம்மன் என்னும் துர்க்கை கோயில் அர்த்த மண்டபத்தில் தனிச் சந்நிதியோடு கண்ணகி விக்கிரகம்பிரதிஷ்டிக்கப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். இவ்விக்கிரகம் இடக்கையில் சிலம்பு

பிடித்து மண்டியிட்ட கோலத்தோடு மிகுந்த உக்கிர ரூபத்துடன் விளங்குகிறது. இக்கண்ணகி படிமம் நெடுஞ்செழியனுக்குப் பிறகு சிம்மாதனம் ஏறிய வெற்றிவேற்செழியனால் பிரதிஷ்டை செய்ததாய் இருக்கலாமென்று கருதுதல் பொருந்தும்.

கண்ணகியின் வரலாற்றை இக்காலத்து நாடக ரூபமாக நடிக்கின்றவர்கள் உண்மைக்கு மாறாய்ப் பிழைபட நடித்துக் காட்டி வருகின்றனர். இக்கண்ணகி தேவி சரிதையைச் சிலப்பதிகாரத்தில் உள்ளவாறே மாணவர் அறிய வேண்டுமென்று கருதி, சிலப்பதிகார மூலத்தையும் அடியார்க்கு நல்லார் உரை நடையையும் பின்பற்றிச் செம்பாகமான நடையில் எழுதி வெளியிட்டுள்ளேன்.

இச்சிறு நூலைப் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழி அறிவும், வசனநடைப் பயிற்சியும் அடைவதுடன் நம் தமிழ் நாட்டுப் பழைய வழக்க ஒழுக்க நாகரிகங்களையும், அறிந்து இன்புறுவார்களென்பது எனது துணிபாம்.

இங்ஙனம்,
ஆ. கார்மேகக் கோன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *