கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

புகார் நகரச் சிறப்பு

நம் தமிழ் நாடானது பண்டைக்காலத்தில் சேர நாடு, சோழநாடு, பாண்டி நாடு என மூன்று பிரிவினதாய்ச் சேரர், சோழர், பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவராலும் ஆளப்பட்டு வந்தது. சோழநாடு, கோடைகாலத்திலும் வெள்ளப் பெருக்குக் குன்றாத பொன்னி என்னும் காவிரியாறு பல கால்களாய்ப் பிரிந்து பாய்தலால், கன்னலும் செந்நெல்லும், இஞ்சியும் மஞ்சளும், வாழையும் கழுகும், தெங்கும் பலாவும், வயல்கள் எங்கும் செழித்து வளர்ந்து நிலமடங்தையின் நெற்றியிலிட்ட திலகம் போல விளங்கும். மருதநிலத்தூர்களின் அருகிலெல்லாம் கரும்பாலைகளும் நெற்கூடுகளும் கவின் பெற விளங்கும். காவிரி தன் தாயகமாகிய குடகு மலையினின்றும் பல்வகைப்பொருளையும் ஏந்திக்கொணர்ந்து சொரிதலால் மலைவளமும்,கீழ்த்திசையில் கடல் சூழ்ந்திருப்பதால் கடல் வளமும் உடையதாகும் இந்நாடு. எந்நாட்டினும் இந்நாட்டின் நெல் மிகுதி பற்றி இதனைப் புலவரெல்லாம் ‘சோழ வளநாடு சோறுடைத்து,’ எனப் புகழ்ந்து பேசுவர்.

இந்நாட்டில், இசையால் திசையெல்லாம் அறிந்து, போக புண்ணியங்களால் வசையின்றிப் பொலிந்து விளங்குவது பூம்புகார் என்னும் பட்டினம். இது காவிரி கடலோடு கலக்கும் சங்கமுக மென்னும் துறையில் அமைந்திருப்பதால் காவிரிப்பூம் பட்டினம் எனவும், ககந்தன் என்பான் ஆண்டமை பற்றிக் காகந்தி எனவும் பெயர் பெறும், இது சோழ மன்னர் பரம்பரையாய் முடி சூடி வீற்றிருக்கும் தலை நகராகவும், சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் விளங்க முற்றிருந்தது.

இந்நகர், புறநகர் அகநகர் என இரு பிரிவாய் அமைந்திருந்தது. புறநகர் மருவூர்ப்பாக்கம் எனவும் அகநகர் பட்டினப் பாக்கம் எனவும் பெயர் பெறும். புறநகரில் நிலா முற்றங்களும் மான்கண் சாளரங்களும் அமைந்த மாடங்கள் சோலைகளுக்கிடையே ஆங்காங்கு விளங்கிக்கொண்டிருக்கும். கூலவீதிகளில் நெல் முதலிய தானியங்களும், கடை வீதியில் முத்து, பவளம் முதலிய இரத்தின வகைகளும், பொன், பொற்பணி முதலியவைகளும், பட்டாடை முதலிய ஆடைவகைகளும் இவ்வளவென்று கணிக்கமுடியாத அளவு குவித்தும், தொகுத்தும் வைக்கப்பட்டிருக்கும். பூ, ஆரம், முகவாசம், சக்தனம், அகில் முதலிய வாசனைப் பொருள்கள் விற்பார் வீதிதோறும் திரிவர். பட்டினாலும் பருத்தியாலும் எலி மயிராலும் ஆடை, கம்பளங்கள் நெய்யும் காருகர்களும், கொல்லர், தச்சர், கன்னார், சிற்பிகள், சித்திரகாரிகள் முதலிய தொழின்மாக்களும் வசிக்கும் வீதிகள் ஒரு பக்கத்திலிருக்கும்; பாணர், சிற்பியர், செம்மார், மீன்விலைஞர், உப்பு வாணிகர் முதலியோர் இருப்புக்களும் மற்றொரு பக்கமிருக்கும். அலைவாய்க்கரைகளில் வியாபாரத்தின் பொருட்டு மரக்கலங்களில் வந்திறங்கிய யவனர் (கிரேக்கர், ரோமர், எகிப்தியர்) என்னும் பரதேசிகளது சேரிகள் தனியாகச் செல்வத்தாற் சிறந்திருக்கும். சோழனது புலி முத்திரையிட்ட பொதிகளும், மூடைகளும் குவிந்து கிடக்கும் சுங்கச் சாலையும் (Custom House), கப்பல்களை அழைக்கும் கலங்கரை விளக்கமும் (தீபஸ்தம்பம்-Light House) கடற்றுறையில் அழகுடன் விளங்கும்.

அகநகரின் நடுவே அரசவீதி விழா விதிகளில், அரச மாளிகைகளும் அவற்றைச் சூழப் புரோகிதர், அந்தணர், மந்திரிகள், மருத்துவர், சேனதிபதிகள் முதலியோர் இருப்புக்களும், அறங்கூறும் அவையங்களும் (நியாய ஸ்தலம்) விளக்கமுற்றிருக்கும். இவற்றை அடுத்து ஆவண விதிகளும், அருகில் வணிகர், வேளாளர், கோபாலர் முதலியோர் இல்லங்களும் சூழவிருக்கும். ஒரு பக்தலில் நாடகக் கணிகையர் வீடுகளும் இசைக்கருவியாளர் உறைவிடங்களும் காணப்படும். சூதர், மாகதர், சோதிடர் முதலியோரும் சில இடங்களில் வாழ்ந்தனர். ஆறு கிடந்தது போன்ற வீதிகளில் யானை, குதிரை, தேர் முதலியன இடைவிடாது சஞ்சரித்துக்கொண்டிருக்குமாதலால், மனிதர்கள் கவனமாகச் செல்லவேண்டியிருக்கும். அகநகர்க்கும், புறநகர்க்கும் இடையிலுள்ள பொதுவிடம் ‘நாளங்காடி’ என்று சொல்லப்படும். அதில், பகற்காலத்தில் பெரிய கடைகள் கூடும்; பண்டங்களை விற்போர் ஓசையும், கொள்வோர் ஓசையும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும். அவ்விடத்தில் அற்புதம் நிறைந்த பல வகை மன்றங்களும், மண்டபங்களும் உண்டு. பழமரங்களும், பூஞ்செடி வகைகளும் நிழலுக்கும் அழகுக்கும் நிரைநிரையாக வளர்க்கப் பெற்றிருக்கும்.

நகரத்தில் திருமால் கோயிலும், பலதேவன் கோயிலும், சிவன் கோயிலும், வாசவன் கோயிலும், வச்சிரக் கோட்டமும், குமரகோட்டமும், அருகன் கோயிலும், புத்த விகாரமுமாகிய தேவாலயங்கள், ஆங்காங்குச் சிறு சிறு குன்றுகள் போல விளங்கித் கொண்டிருக்கும். வித்தியா மண்டபங்களில் துறவிகளும் பண்டிதர்களும் புராணங்கள் படித்தும், வாதங்கள் புரிந்தும் அமர்ந்திருப்பர். சுருங்கச் சொல்லு மிடத்து இக்காலத்து ஓர் இராசதானிக்கு எவ்வெவ் வகையான நாகரிகங்களும் அமைப்புக்களும் அவசிய மென்று கருதப்படுகின்றனவோ, அவையெல்லாம் அந்நகரில் அக்காலத்தில் அமைந்திருந்தனவென்று சொல்லலாம். அந்நகரத்தை அத்தகைய நாகரிகம் பெறத் திருந்திய முறையில் அமைத்து அரசாண்டவன், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த வெற்றிவேந்தனகிய கரிகாலன் என்னும் சோழ சக்கரவர்த்தியாவன்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *