
கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்
கோவலன் மதுரை கண்டது
செந்தமிழ் நாட்டின் இராசதானி எனப்படும் மதுரைமாநகரம் வழி வழியாகப் பாண்டியகுல மன்னர்கள் முடி சூடி வீற்றிருந்த பழைமையும் சிறப்பும் வாய்ந்தது பாண்டியர்கள் அரசர்க்குரிய அஞ்சாமையும் ஈகையும் அறிவும் ஆற்றலும் அறமும் மறமும் ஆகிய குணங்களிற் சிறந்தவர்கள். கண்ணகி காலத்தில் மதுரையில் ஆட்சி புரிந்த பாண்டியன் நெடுஞ்செழியன், அவன் மனைவி கோப்பெருந்தேவி என்று
சொல்லப்படும் அறக்கற்புடைய மாது. கூடலம்பதி எனக் கூறப்படும் அந்நகரின் நடுவில், சிவபெருமான் கோயிலும் அதனைச் சூழத்திருமால்கோயில், துர்க்கை கோயில், முருகவேள் கோயில் முதலிய தேவர்கோட்டங்களும், அரசன் மாளிகையும், அறவோர் பள்ளிகளும் பொலிவுற்று விளங்கும்; பல்வேறு வருணத்தார் வாழும் வீதிகளும், இரதவீதி, விழாவீதி முதலியனவும் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்து விளங்கி அழகு செய்யும். முச்சந்தியும் நாற்சந்தியும், பலிபெறு மன்றுகளும் அங்கங்கே காணப்படும். நாளங்காடி, (பகற்காலத்துக் கடைவீதி) அல்லங்காடி (அந்திக் கடை) எனப்படும் கடைவீதிகளில், பல்வகை இரத்தினக்கடை பொன்கடைகளின் செல்வத்தாலும் புடைவைக் கடைகளின் அடைவாலும் கூலக் கடைகளின் கோலத்தாலும் இந்திரனுடைய அருங்கலச்செப்பைத் திறந்து வைத்தது போல விளங்கும்.
காலை முரசமும் மாலை முரசமும் வீரமுரசமும் கொடை முரசமும் ஒலிக்கும் ஓசையும், அந்தணர் வேதமோதும் ஓசையும், கூட்டில் அடைபட்ட புலி, கரடி, சிங்கம் முதலியவற்றின் முழக்கமும், மக்களின் பேச்சின் ஒலியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாய்க் கேட்கும்.
வான் அளாவ நகரின் நாற்புறத்தும் விளங்கும் மதிலும் கோபுரமும் மலையும் சிகரமும்போலத் தோன்றும். இதனைச் சூழ்ந்த அகழி, கடல் போல ஆழ்ந்து அகன்றிருக்கும். இம்மதிலுக்கு ஒருபுறத்து அகழாய் விளங்குவது வையைமாநதி. அந்நதியின் வளத்தால் அதன் கரையின் புறமெல்லாம் குரவமும், மகிழும், கோங்கும், கடம்பும் பூத்துப் பூந்துகில் போர்த்தது போலக் காணப்படும். மதிற்புறத்துள்ள புறஞ்சேரி,
ஏரியும் பண்ணையும் கழனியும் சூழ்ந்து, தபோதனர் பள்ளிகளுடன் விளங்கும்.
இப்புறஞ்சேரியில் முனிவர் பள்ளியுள் கவுந்தியுடன் தங்கிய கோவலன் கவுந்தியடிகளைக் கைதொழுது, “தவத்தீர், ஒழுக்கமுடைய விழுக்குடியிற் பிறந்தவர்கள் மகளிரோடு நீண்டவழி நடவார் என்று பெரியோர் கூறுவர்; அங்ஙனமாகவும் நான் என் மனைவி மிகுந்த துன்பமுறும்படி முன்பு கனவிலும் நினைத்தறியாத தேசத்தில் அருவழி நடந்து திரிந்து துன்பமுழந்து சிறுமையுற்றேனே! இத்துன்பம்யான் அடைதற்கு என்ன பாவம் செய்தேனோ! அடிகளே, இனி நான் வந்த காரியத்தைச் செய்தற்கு மதுரையினுட்சென்று அங்குள்ள வணிகர்க்கு என்னிலைமையைத் தெரிவித்து வரக் கருதுகிறேன்; தங்கள் பாதுகாப்பில் இருக்கும் இவட்கு இனி ஏதமும் உண்டோ? விடையருள்க” என்று விண்ணப்பித்துநின்றான். அது கேட்ட கவுந்தி, “ஐய, கவலற்க. நீ முற்பிறப்பில் நல்வினையை மிகச் செய்து பின்பு சிறிது தீவினையும் செய்தாயாதலால் உன் சுற்றத்தாரையும் தந்தையின் செல்வத்தையும் விட்டுக் காதலியோடு தனித்துத் துயரடைந்தாய். தீவினை, தவறாது தன் பயனை ஊட்டுமாதலால் அதற்கு இரங்குதல் அறிவுடைமையாகாது. இத்தகைய துன்பமுற்றோர் முன்னரும் எத்தனையோ பேர் உண்டு. காதலியைக் கானகத்தே கைவிட்டு வருந்திய நளன், இராமன் முதலியோர் துன்பத்தினும் காதலியைப் பிரியாது வாழும் வாழ்க்கையைப் பெற்ற உன் துன்பம் பெரிதன்றே!” என்று சொல்லிக் கோவலனைத் தேற்றினாள்.
இவ்வாறு கவுந்தி அம்மையால் தேற்றப்பட்ட கோவலன் விடை பெற்று, வாளேந்திய யவனர்கள் (Romans) காவல் புரியும் கோட்டை வாயிலைக் கடந்து, உள் நகரில் சென்று, பல்வேறிடங்களின் காட்சிகளைக் கண் கொள்ளாவகை கண்டுமகிழ்ந்தான். அம்மகிழ்ச்சி மிகுதியால், தாங்கள் அமருதற்கேற்ற இடந்தேடச் சென்றவன், அக்காரியத்தை மறந்து மீண்டு வந்து, புறஞ்சேரியிலுள்ள தபோதனர் இருக்கை புகுந்து, கவுந்தியடிகளிடம் மதுரையின் அழகினையும் பாண்டியன் கொற்றத்தையும் புகழ்ந்து கூறிக்கொண்டிருந்தான்.
இச்சமயத்தில், காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தென்மேற்குத்திசையில் சிறிது துரத்திலுள்ள தலைச்செங்காடு என்னும் ஊரில் வாழ்பவனாகிய மாடலன் என்னும் மறையோன், பொதியமலையை வலங் கொண்டு குமரித்துறைத்தீர்த்தம் ஆடி மீண்டு வருகின்றவன், வழி வருத்தம் ஆறுவதற்குக் கவுந்தியடிகள் இருக்கும் முனிவர் பள்ளியில் வந்து சேர்ந்தான். அம்மறையவன், கோவலனது பழைய நண்பனாதலால், கோவலன் அவனை வணங்கினான். உடனே மாடலன், கோவலனையும் கண்ணகியையும் கண்டு திடுக்கிட்டு, “கோவல, மெல்லியலான இத்திருமகளுடன் நீ இங்கு வந்ததற்குக் காரணம் என்ன? உன் போல்வார்க்கும் இத்தகைய துன்பம் எய்துவதோ? முன்பு, உன்னால் காதலிக்கப்பட்ட மாதவி வயிற்றிற் பிறந்த மகளுக்கு, நீ மணிமேகலையெனப் பெயரிட்டு மங்கலங் கொண்டாடிய நாளில், நீ அள்ளி அள்ளிக் கொடுக்கும் சுவர்ண தானம் பெறுமாறு ஒரு மறையவன் மூப்பினால் முதுகு வளைந்து தளர்ச்சியினால் தண்டூன்றித் தள்ளாடி வருகையில், பாகனை மீறி ஒடி வந்த மதயானை, அக்கிழ மறையோனைக் கையால் வளைத்து எடுத்ததாக, அப்போது நீ யானையை அதட்டி அதன் கையிலகப்பட்ட மறையவனை விடுவித்துத்தக் தந்தத்தைப்பற்றி ஏறி, பிடரில் அமர்ந்து அம்மதயானையை வலி தொலைத்தாய். அஃதன்றியும், பூம்புகார் நகரில் பார்ப்பனி ஒருத்தி, தான் வளர்த்த கீரிப்பிள்ளையையும் தன் பிள்ளையையும் வீட்டில் வைத்து வெளியிற் சென்றாளாக, அப்போது படுத்திருக்கும் பிள்ளை யருகில் ஓர் அரவம் வருதலைக்கண்ட நகுலம் அதனைத் துணிந்து, இரத்தம் பூசிய முகத்துடன் வாயிலில் வர, பார்ப்பனி தன் பிள்ளையையை அது கடித்துவருகின்ற தென்று பதறி, கையிலிருந்த பாண்டத்தைக் கீரியின் தலையில் போடக் கீரி உடனே மாண்டது. இதனை அறிந்த அவள் கணவன், வந்த பாவத்துக்கு வருந்தி, கங்கையாட வடதிசைநோக்கிப் புறப்பட்டான். புறப்பட்ட கணவனை மனைவி பின் பற்றிச் செல்ல, அவன், ‘இனி, பாவியான உன் கையால் உணவு கொள்ளேன்,’ என்று கடிந்துரைத்து, ஓரேட்டில் வடமொழி வாசக மொன்றை எழுதிக்கொடுத்து, ‘இதனைக் கடனறிந்த மாந்தர் கையிற்கொடுக்க,’ என்று சொல்லிப் போயினான். போகவே, பார்ப்பணி அவ்வோலேயைக் கைக் கொண்டு வணிகர் வீதியிலும் பிற வீதியிலும், இவ் வேட்டை வாங்கி என் பாவம் தொலைத்துப் பயன் கொள்ளுங்கள்,’ என்று கூறிச்சென்றாள். நீ அழைத்து அந்த ஏட்டை வாங்கி வாசித்து அவளைத்தேற்றி அவளது கொலைப் பாவம் தீர முறைப்படி தானங்களைப் புரிந்தாய், அஃதோடமையாது, அவள் கணவனையும் வரவழைத்து, அவர்கள் இன்புற்று வாழச் செய்து வேண்டிய செல்வத்தையும் அவர்கட்கு வழங்கினாய்.
“இன்னும், காவிரிப்பூம்பட்டினத்தில் பத்தினி யொருத்தியை ஒழுக்கங் கெட்டாளென்று அறிவில்லான் ஒருவன் அவள் கணவனுக்குப் பொய்ச்சான்று கூறினான். அவ்வளவிலே, பொய்க்கரியாளரைப் புடைத்துத் தின்னும் சதுக்க பூதத்தின் கைப்பாசம் அவனைக்கட்டி இழுத்துச்செல்ல, அவன் தாய் தன் ஒரு மகனையும் இழப்பதற்கு ஆற்றாது அரற்றி அழுதாள். அதைக் கண்டு இரக்கங்கொண்ட நீ, அப்பாசத்தில் புகுந்து, ‘பூதநாதனே, உனக்கு உணவாக என்னுயிரைக்கொண்டு அந்த ஏழை உயிரை விடுக,’ என இரந்தாய்; பூதம்
நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி விழக்கும பண்புஈங் கில்லை.
‘ஆதலால், நீ இங்ஙனம் வேண்டற்க’ என்று சொல்லி, உன் முன்னே அவனைப் புடைத்துத் தின்ன, அதனைப் பொறாத அவன் தாய்கொண்ட சோகத்தை நீ தவிர்த்து, அவள் சாகுமளவும் அவளைப் பசிப்பிணி தீர்த்துப் பாதுகாத்தாய்.
“இவ்வாறு நீ இப்பிறப்பில் பண்ணியவையெல்லாம் புண்ணிய தானங்களாகிய நல்வினையாகவே யிருக்கவும், உனது இத்துன்பத்துக்குக் காரணம், முற்பிறப்பின் தீவினையே போலும்!” என்று கூறி இரங்கினான்.
அவனை நோக்கிக் கோவலன், “ஐயரே, நான் சொல்வதைக் கேளும்: ஒரு கீழ்மகனால், இந்நகரில் கண்ணகி துயரமுற நான் உடுத்திய ஆடை பிறரால் கவரப்பட்டு, ஓர் எருமைக்கடாவின்மீது ஏறவும், தவசிகள் பெறும் மோக்ஷத்தை இவளோடு நான் பெறவும், மணிமேகலையை மாதவி புத்ததேவரிடம் ஒப்புவிக்கவும் இன்றிரவு வைகறையில் ஒர் கனவு கண்டேன். அது விடியற்காலத்துக் கனவாகவின், தப்பாது பலிக்குமோ என அஞ்சுகின்றேன்!” என்றான். மாடலனும் கவுந்தியும் அதனைக்கேட்டு, ‘இத்தவப் பள்ளியில் இல்லறத்தோர் இருத்தல் பொருந்தாது. உன் தந்தையின் பெயர் சொன்னால் உன்னே உபசரிப்பார் பலர் இந்நகர வணிகருள் இருப்பர்; இன்று பொழுது மறையுமுன் மனைவியுடன் நீ மதுரை நகர்க்குள் சென்றுவிடு,” என்றனள்.
அவ்வாறு கூறுங்கால் இடையர் குலத்திற் பிறந்தவளாகிய மாதகி என்னும் முதுமகள் ஆரியாங்கனை என்னும் தெய்வத்துக்குப் பாற்சோறு கொண்டுபோய் நிவேதித்து வழிபட்டு வருகின்றவள், கவுந்தியைக் கண்டு வந்து வணங்கினாள். அது கண்ட கவுந்தி, ‘புனிதமான பசுவினங்களைக் காத்து, அவற்றின் பால் முதலிய பயனை யாவர்க்கும் அளித்து உபகரிக்கும் தருமகுணமுடைய இடையரது இல்வாழ்க்கையில் கொடுமை சிறிதுமில்லை; அஃதன்றியும், இம்மாதரி அழுக்காறு பொய்ம்மை முதலிய தீயகுணங்கள் இல்லாதவள்; அருள் மிகுந்தவள்; மேலும் வயது முதிர்ந்தவள்; இற்றைக்கு இந்த இடைக்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தால் யாதொரு தீங்கும் அடையாது,’ என்றெண்ணி, மாதரியை நோக்கிக் கூறுவாள் :
“இம்மங்கையின் கணவனது தந்தை பெயரைக் கேட்டால், இந்நகரத்து வணிகர், பெறுதற்கரிய பொருளைப் பெற்றதுபோல மகிழ்ந்து, நல்விருந்தாய் எதிர்கொண்டழைத்துத் தம் மனையில் வைத்துக் கொள்வர்; அவ்வண்ணம் அவர்கள் இவர்களை அழைத்துக்கொள்ளும் வரை, இம்மங்கையர்க்கரசியை உன்னிடம் அடைக்கலமாகத் தருகின்றேன். நீ இவளை நீராட்டி அலங்கரித்துத் தோழிகளும் செவிலித்தாயும் நற்றாயும் நீயேயாயிருந்து, இவளைத் தாங்குவாயாக; இதற்குமுன் இவள் பாதம் பூமியைக் கண்டறியாது; பாவம் தன் கால்கள் வெயிலின் வெம்மையால் கொப்புளங்கொண்டிருக்கவும், அதற்கு வருந்தாது, தன் கணவன் வெயிலின் கொடுமையால் மெய்வருந்தியதற்கே மிகுந்த துயருற்று, நாவும் புலரும்படி வாடி, கணவன் துயரன்றித் தன் துயரென்று வேறு காணாத பத்தினி தேவி இவள்;
‘இன் றுணை மகளிர்க்(கு) இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் ;
வானம் பொய்யாது; வளம்பிழைப் பறியாது ;
நீணில வேந்தன் கொற்றஞ் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த காடு.’
என்று பத்தினிப் பெண்டிர்களைப்பற்றிச் சொல்லும் நல்லோரது அறநூல் நீதி நீயறிந்ததன்றோ? தவசிகள் கொடுத்த அடைக்கலப் பொருள், அப்போது சிறிதாயினும், பின்பு மிக்க பேரின்பம் தரும். இதனை ஒரு வரலாற்றால் விளக்குகின்றேன் ; கேள் :
“காவிரிப்பூம்பட்டினத்தில் முன்பு ஒருநாள் பிண்டி மர நிழலிலிட்ட சிலாதலத்தில் சாரணர் ஒருவர் அமர்ந்து சாவகர் (அருகரில் இல்லறத்தார்) சூழ்ந்து கேட்கத் தருமோபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது, பூமாலையும் பொன்னாபரணமும் அணிந்து அழகு மிகுந்த தோற்றத்தோடு, தேவன் ஒருவன் அங்கு வந்து தோன்றினான். அங்கிருந்து தருமம் கேட்டவர்கள், அவனது அழகிய தெய்வ வடிவத்தில் ஒரு கை குரங்கின் கையாய் இருப்பதைக் கண்டு வியப்புற்று, ‘இவன் யார்? வரலாறென்ன ?’ எனச் சாரணரைக் கேட்டனர். அதற்குச் சாரணர், சபையோரே, கேளுங்கள்: எட்டிப் பட்டம்பெற்ற பெருஞ்செல்வனான சாயலன் என்னும் வணிகன் ஒருவன் இந்நகரில் இருந்தனன். அவன் அகத்துக்கு ஒரு நாள் உண்டியருந்த வந்த ஒரு முனிவரை, வணிகன் மனைவி எதிர்சென்று உபசரித்தழைத்து வந்து உண்பித்தாள். அப்போது ஊரில் துரத்தப்பட்டு உணவு பெருது வருந்தி வந்த ஒரு குரங்கு, சாயலன் மனையிற்புகுந்து,
முனிவர் உண்ட உணவின் எச்சிலை உண்டு, அவர் கை கழுவிய நீரைப் பருகிப் பசி தணிந்து, தனது நன்றியை முனிவர்க்குக் காட்டுவது போல, அவர் முகத்தைக் கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தது. அதனைக் கண்டு இரக்கங்கொண்ட அம்முனிவர், சாயலன் மனைவியை நோக்கி, ‘உத்தமியே, இதனைக் குரங்கென்று கருதாது உன் பின்ளைகளிலொன்றாகப் பாதுகாத்து வருவாயாக,’ என்று கூறிக் குரங்கை ஒப்பித்தார். அவளும் அந்நாள் முதல் அதனைப் பிள்ளையாகப் பாவித்து வளர்த்து இதற்கென்று தன் பொருளில் ஒரு பாகமும் ஒதுக்கி வைத்தாள். சின்னாளின் பின்னர்க் குரங்கு மரித்துவிட, சாயலன் மனைவி அதற்கென்று பிரித்து வைத்த பொருளையெல்லாம் ‘இதற்கு இக்குரங்காம் இழிபிறப்பு ஒழிக,’ என்று சொல்லித் தானம் செய்தாள். அத்தானப் பயனால் அக்குரங்கு மத்திம தேசத்தில் வாரணவாசி என்னும் நகரத்தில் உத்தரகௌத்தன் என்னும் அரசனுக்கு அறிவும் உருவும் திருவும் நிரம்பிய மகனாய்ப் பிறந்தது. பிறந்த மகன் பருவமுடையவனாய்த் திருமுடிகவித்து முப்பத்திரண்டு வருடம் செங்கோலோச்சி விளங்கி இறந்தான். இவன் அரசனாய் விளங்கிய காலத்துச் செய்த அரிய தானத்தின் பயனால் இத்தெய்வ யாக்கை பெற்றான். இவன் சாவக நோன்பிகளான உங்கட்கெல்லாம், ‘சாயலன் மனைவி தானத்தின் பலனாலே நான் இத்தன்மையன் ஆனேன்’, என்பதனை அறிவிக்கவே இத்தேவ வடிவத்திற்கலங்த குரங்குக் கையுடன் வந்துள்ளான்,’ என்று அவர்களுக்கு விளங்க உரைத்தான்,’ என்று கூறி, ‘மாதரி, நேரமாகின்றது. இவர்களை அழைத்துச் செல்,” என்று வேண்டிக்கொண்டாள்.
மாதரி, மகிழ்ச்சியுடன் அதற்குடன் பட்டுக் கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக்கொண்டு, கண்ணகியின் அழகைக் கண்டு வியந்த ஆயர் ஆய்ச்சிகள் சூழ மதில் வாயிலைக் கடந்து தன் மனைபுக்காள்; தன் இல்லத்தின் அருகில் புதிதாய்க் கட்டியதும் செம்மண் பூசிப் பந்தரோடு விளங்கியதுமான ஒரு சிறு வீட்டில் கோவலன் கண்ணகி இருவரையும் இருக்கச் செய்தாள்; பின்னர்க் கண்ணகியை நீராட்டி, அலங்கரித்துத் தன்மகள் ஐயை என்பானைத் தொழிலாட்டியாகக் கொடுத்து, “கண்ணகி, ஒன்றற்கும் நீ கவல வேண்டா; இனி இவ்விடத்தில் உன் கணவர்க்குத் துன்பமுறுதலும் உண்டோ ?” என்று இனிய மொழி பகர்ந்து, கண்ணகியைத் தேற்றினாள். அப்பால் மாதரியின் கட்டளைப்படி ஆய்ச்சிகள், உணவு சமைத்ததற்குப் புது மட்கலங்களோடு பலாக்காய், வெள்ளரிக்காய், கொம்மட்டி, மாதுளங்காய், வாழைக்கனி, மாங்கனி, அவரை, துவரை, செந்நெல்லரிசி, பால், தயிர், நெய் முதலிய தூய உணவுப்பொருள்களைக் கண்ணகியிடம் கொண்டுவந்து கொடுத்தனர். ஐயை அடுப்பில் வைக்கோலால் தீ மூட்டினாள். கண்ணகி ஐயையுடன் உணவுப்பொருள்களை உண்ணுதற்கினியவாய்ப் பாகம் பெறச் சமைத்தாள். பின்பு கண்ணகி, கோவலனது அடிகளை நீரால் விளக்கி, அமுது செய்யவேண்டினாள், கோவலன் பனங்குருத்தோலையாற்செய்த தடுக்கில் உண்பதற்கு உட்கார்ந்தான். தேவி, தரையில் தண்ணீர் தெளித்து, ஈனா வாழைக்குருத்தை விரித்து இட்டு, அதில் வகை வகையாய் உணவுகளை வட்டித்தாள். அவன் அறுசுவை உண்டியை விரும்பி இனிதாக உண்டான். பக்கத்தில் நின்ற ஐயையும், மாதரியும், “இந்த மதுரையில் இவ்வாயர்பாடியில் யாம் பெற்ற இந்நல்லமுதம் உண்கின்ற இந்த நம்பி, அந்த மதுரையில் அவ்வாயர்பாடியில் அசோதை பெற்ற அந்த நல்லமுதம் உண்ட பூவை வண்ணனாகிய கண்ணனோதான் ! இவன் துயர் தீர்த்த இந்த நங்கை, காளிந்தி ஆற்றின் கண் மணிவண்ணனைத்துயர் தீர்த்த
நப்பின்னைப்பிராட்டியோதான்!’ என்று கூறி உவகை பொங்கி, “இவர் காட்சி நம் கண்களில் அடங்கா!” எனப் புகழ்ந்துகொண்டனர்.
இவ்வாறு உண்டு, வாய் பூசி, நீர் பருகி அமர்ந்க கோவலனுக்குக் கண்ணகி, அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து அருகில் நின்றாள். கோவலன், அவளை ‘வருக’ என்று தழுவிக்கொண்டு, ‘வேடர் வழிப்பறிக்கும் பாலைவனத்தில் பருக்கைக் கற்களின்மீது அடி விட்டு கடப்பது கண்ணகிக்கு இயலுமோ!’ என்று எமது தாய் தந்தையர் என்ன இடும்பை உற்றார்களோ! யாம் இவ்விதம் துயரம் அடைந்தது, கனவோ! கனவாயின், முன் செய்த தீவினைப்பயன்தானோ! உள்ளம் மறுகுதலால், இப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நாளெல்லாம் வீணரோடும் துஷ்டரோடும் கூடி, நல்வினை செய்ய மறந்து, பிறரைப் புறங்கூறி, வெடிசிரிப்புச் சிரித்து, நல்லொழுக்கங் கெட்டேன்; இனி எனக்கு நற்கதி உளதாகுமோ! பெற்றோர்க்குச் செய்யும் பணியை இழந்தேன்; உனக்கும் துன்பம் செய்தேன்; இவ்வழுவான ஒழுக்கம் இழுக்கமென்பதைச் சிறிதும் நினைத்திலேன். யான் இத்தன்மையனாகவும் ‘மதுரைக்கு எழுக’ என்றேனாக, அதற்கு முறையன்று என மறுக்காது உடனே உடன்பட்டு என்னோடு வந்தாய். பாவாய், என்ன காரியம் செய்தாய்! “கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும், கொண்டானே அல்லால் அறியாக் குலக் கொடியே!” என்று இரங்கிக் கூறினான். அதற்குக் கண்ணகி, “நீர் என்னைப் பிரிந்தமையால் அறவோர்க்களித்தலும், அந்தணரைக் காத்தலும், விருந்து போற்றுதலுமாகிய இல்லற ஒழுக்கத்தை இழந்திருந்த யான், உமது பிரிவினால் எனக்கு உண்டான வெறுப்பையும் துன்பத்தையும் புறத்தில் தோன்றாது நெஞ்சில் அடக்கி அதனை மறைக்க எப்போதும் முக
மலர்ச்சி காட்டி, ஒழுகினேன்; உம்முடைய தாயும் தந்தையும் அதனைக் குறிப்பாற்கண்டு, உள்ளத்தில் உதித்த அன்போடு கூடிய மொழிகளால் என் பொறுமையைப் பாராட்டி வருந்தினர்; அவர்கள் அங்கனம் வருந்துமாறு நீர் போற்றா ஒழுக்கத்தில் பொருந்தியிருந்தீர்; ஆயினும், உம்முடைய மொழியினைச் சிறிதும் மறுக்காத உள்ள வாழ்க்கையுடையேனாதலின், உமது கட்டளைப்படி உம்முடன் எழுந்து வந்தேன்; கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை அன்றோ?” என்றாள்.
இம்மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில் கோவலன், அழலில் இட்ட மெழுகென உருகி, “பாவம்! நீ தாய்தந்தை முதலிய சுற்றத்தாரையும் ஏவல்மகளிரையும் செவிலித்தாயரையும் தோழிகளையும் நீங்கி நாணம், மடம், அழகு, கற்பு என்னும் நான்கையும் அவர்க்கீடாகத் துணைக்கொண்டு என்னோடு வந்து, என் தனிமை களைந்தாய் ;
‘பொன்னே ! கொடியே ! புனைபூங் கோதாய் !
நாணின் பாவாய் ! நீணில விளக்கே !
கற்பின் கொழுந்தே ! பொற்பின் செல்வீ !
உன் சிலம்புகளுள் ஒன்றை நான் கொண்டு போய் விற்றுவருகின்றேன்; நான் வருந்துணையும் நீ தனிமையால் வருந்தாதொழிக,” என்று சொல்லிக் கண்ணகியை மீண்டும் தழுவிக்கொண்டான். ஆய்ச்சியர் யாவரும் குரவை ஆடப் போயிருந்தமையால், அருகில் ஒருவருமின்றிக் கண்ணகி தனித்திருத்தலை நினைந்த கோவலன், மனம்வெதும்பிக் கண்ணீர் சொரிந்தான்; கண்ணகி அதனைக் காணின் மிக வருந்துவாளென்று எண்ணிக் கண்ணீரை அவள் காணாவண்ணம் மறைத்தான்; சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு, மாதரி வீட்டினின்றும் பறப்பட்டான். கண்ணகியை விட்டும் பிரியமாட்டாமையால் மனஞ்சுழன்று வருந்தி, நடக்க மாட்டாது நடந்து தெருவில் சென்றான். இவ்வாறு கோவலன் செல்லுகையில், அவனை ஓர் எருது பாய வந்தது. கோவலராயின், அதனைத் தீநிமித்தம் என் அறிந்து செல்லாமல் மீள்வர். கோவலன் அதனை ஆராயாது, தாதெரு மன்றங்களைக் கடந்து, தனித்தெருவின் நடுவே போய்க் கடை வீதியை அடைந்தான்.



