கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

இந்திர விழா

இவ்வாறு கோவலன் கண்ணகியைப்பிரிந்து மாதவியோடு மருவி வாழ்ந்து வருங்காலத்தில், புகார் நகரில் முன்பு அரசாண்ட தூங்கெயிலெறிந்த தொடித் தோட்செம்பியன் முதலாகப் பல சோழர்களாற் பரம்பரையாய் நடத்தப்பெற்று வருவதாகிய இந்திர விழாவை நடத்தும் காலமாகிய சித்திரா பௌர்ணமி வந்தது. அந்நாளில் பல சமயவாதிகளும் அரசன் அவையோரும் ஒருங்கு கூடி, “நாம் இந்திர விழாவை நடத்தாவிடின் முசுகுந்தனது துயரத்தைத் தீர்த்த நாளங்காடிப்பூதம் நகரமக்களுக்குத் துன்பத்தை உண்டாக்கும்; பாவிகளைப்பாசத்தாற்கட்டிப்படைத்துண்னும் சதுக்க பூதம் நகரை விட்டு நீங்கிவிடும். ஆதலால், நாம் விழாவை வழக்கம்போல நடத்துவோமாக!” என்று பேசி முடிவிட்டார்கள். பின்னர் விழா நடக்கப்போவதை முரசறைந்து நகரினர்க்குத் தெரிவிக்குமாறு வள்ளுவனுக்குக்கட்டளையிட்டனர். அவன் வச்சிரக்கோட்டத்திலுள்ள மங்கலமுரசை எடுத்து யானைப் பிடர்த்தலை ஏற்றி, இந்திரனது வாகனமாகிய ஐராவதம் நிற்கும் கோவில்வாயிலிற்சென்று விழாவின் தொடக்கமும் முடிவும் சாற்றி, வீதியிற் புகுந்தான்; புகுந்தவன்.”மூதூர் வாழ்க! வானம் மும்மாரி மொழிக! மன்னவன் செங்கோல் தழைக்க! அறிவின் மிக்கோரே, பெரியோர்கள் இந்திரவிழா நடாத்தத் துணிந்துள்ளார்கள். இந்திரவிழா நடக்கும் காலத்தில் தேவர்கள் யாவரும் தங்கள் சுவர்க்கம் பொலிவிழக்கும்படி இங்கு எழுத்தருள்வார்களாதலால், வீதிகளில் பூரண கும்பங்களும் பொற்பாலிகைகளும் பாவை விளக்குகளும் நிரைநிரையாக நிரப்புங்கள்; குலைக்கமுகும் குலைவாழையும் கட்டும் இடங்களிற் கட்டுங்கள், பத்தித் தூண்களில் முத்துத்தாமங்களை முறைமுறையாக நாற்றுங்கள்; விழா வீதிகளிலும் மன்றங்களிலும் பழமணல் மாற்றிப் புதுமணற் பரப்புங்கள், கொடிச் சீலை மகரதோரணங்களை மாடங்களிலும் வாயில்களிலும் சேர்த்து அலங்கரியுங்கள்; சிவபெருமான் முதல் சதுக்கபூதம் இறுதியாகிய தெய்வங்களுக்குச் சிறப்பும் பூசனையும் செய்யுங்கள். தருமோபதேசம் புரிபவர்கள் பந்தல்களிலும் அம்பலங்களிலும் நின்று பிரசங்கம் செய்யுங்கள். ஒட்டியசமயவாதிகள் பட்டிமண்டபங்களில் வாதம் புரியுங்கள்; யாருடனும் கோபமும் பகையும் கொள்ளாதீர்கள்.” என்று முதலில் ஊரையும் அரசனையும் வாழ்த்தி, முரசை முழக்கி விழாவைச் சாற்றினான்.

அவ்வளவில் நகரம் அலங்கரிக்கப்பட்டது. ஊரார் பலவித வாத்தியம் முழங்கச் சடங்குகளுடன் கற்பகத்தரு நிற்குங் கோயிலில் ஐராவத உருவமெழுதிய கொடியை ஏற்றி, தண்ணிய காவிரியின் புண்ணியநீரைப் பொற்குடத்துக்கொணர்ந்து, “உரைசால் மன்னன் கொற்றம் கொள்க!” என வாழ்த்தி, இந்திரன் முடியில் திருமஞ்சனம் செய்தனர். சிவபெருமான் திருமால் பலதேவன் முதலிய தெய்வங்கட்கும்

விதி முறை வழுவாது விழாச் செய்தனர். நகரத்தார் விழாக் களிப்பால் விண்ணவரே போல வீறு பெற்று விளங்கினர்.

திருவிழாவுக்குக் கொடியேறிய நாள் முதல் இருபத்தெட்டு நாட்கள் விழா, பலவிதக்காட்சியுடன் நடைபெற்றது. விழா முடிவில் பெளர்ணமித் திதியன்று நகரத்தார் அனைவரும் தத்தம் பரிவாரங்களுடன் கடலாடுதற்கு வழக்கப்படி கடற்கரை சென்றார்கள். கண்ணகி கவலைக்கடலுள் மூழ்கிக் கிடந்தாள். விழாக்காலங்களில் பலரது முன்னிலையில் மாதவி, ஆடல்பாடல்களைச் செய்வது, கோவலனுக்கு வெறுப்பைத் தந்துகொண்டிருந்தது. இதனைக் குறிப் பாலறிந்த மாதவி, பல வகை உபாயங்களால் கோவலனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தவள், தானும் கடல் விளையாட்டைக் காணுதற்கு விரும்பினாள். கோவலன் அவளை அழைத்துக்கொண்டு விளையாட்டு மகளிருடன் வைகறையில் கடற்கரையை அடைந்து, தாழையே வேலியாகச் சூழ்ந்த ஓரிடத்தின் நடுவிலிருந்த புன்னை மரத்தின் நிழலில் நல்ல மணற் பரப்பில் சித்திரத் திரையை வளைத்து, மேற்கட்டும் கட்டி, அதன்கீழ் இட்ட தந்தக்கட்டிலில் மாதவியுடன் இருந்தான். அதன் பின் மாதவி, பக்கத்தில் நின்ற வசந்தமாலை என்னும் தோழி கையிலிருந்த வீணையை வாங்கி, அதன் நரம்புகளை முறுக்கித் தனது மெல்லிய விரலால் தடவிச் சுரங்களை எழுப்பிச் செவியால் ஊன்றிக் கேட்டுணர்ந்து, யாழைத்திருத்தித் தான் வாசியாமல் கோவலன் கையில் கொடுத்தாள். கோவலன் அதனை வாங்கி ஆற்று வரி, கானல் வரி என்கின்ற இசைப்பாட்டுக்களைக் கண்டத்தாற்பாடிக் கொண்டு வீணையை இனிமையாய் வாசித்தான்.

இங்ஙனம் கோவலன் பாடி வாசித்த பாட்டுக்களைக்கேட்ட மாதவி, அப்பாட்டுக்கள் அகப்பொருட் சுவையுடையனவாயிருக்கக்கண்டு, “இவர் என்மேல் அன்பிலார்; வேறு மகளிரிடத்து அன்புள்ளார்.” என்று தன்னுள் நினைத்து, தன் கோபத்தை வெளிக் காட்டாது, கோவலன் கையிலிருந்த வீணையை வாங்கித் தனக்கு வேறொரு எண்ணமில்லாவிடினும் தான் வேறு கருத்துடையவள் போலக் கோவலனுக்குத் தோன்றும்படி, பல வகையான வரிப்பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வீணையை வாசித்தாள். அதனைக் கேட்ட கோவலன், “இவள் வேறொருவன் மேல் மனம் வைத்து இவ்விதம் பாடினாள்,”என்று எண்ணி ஊழ் வசத்தால் மாதவி மீது வெறுப்புக்கொண்டு அவளை விட்டுப் பிரிந்து, ஏவலாளர் புடைசூழப்புறப் பட்டுத் தன் அகம் நோக்கிச்சென்றான், அதன்மேல் செய்வது இன்னதென்று அறியாது மயங்கி மாதவியும், தோழிமார்களுடன் தன் இல்லம் சென்றாள்; சென்று கோவலனது பிரிவாற்றது வருந்தி, கோவலனுக்குத் திருமுகம் போக்கக்கருதி ஒருதாழைமடலில் தனது பிரிவாற்றாமையைக் குறிப்பிட்டுப் பன்னிப் பன்னி எழுதி,அதனை வசந்த மாலைகையிற்கொடுத்து, “இதனைக் கோவலர்க்குக் காட்டி அழைத்து வருக” என்று ஆவளை அனுப்பினாள். வசந்தமாலையும்சென்று கோவலனைக் கூல வீதியிற்கண்டு, திருமுகத்தைக் கொடுக்க நெருங்கினாள். அவன் அதனை வாங்காது, “வசந்தமாலாய், பொய்யை மெய்யாகக் காட்டி யொழுகும் மாய்கைச் செய்கை, நாடக மகளாகிய மாதவிக்கு இயற்கையன்றோ?” என்று வெறுத்துக்கூறி மறுத்துவிட்டான். வசந்தமாலை சென்று இதனைத் தெரிவிக்க, மாதவி கேட்டு வருந்தி, “கோவலர் என் மீது மாறாத அன்புள்ளவராகையால், மாலையில் வருவார்; மாலையில் வாராராயினும், காலையில் வருவார்.” என்றே சொல்லிக்கொண்டு, அவல நெஞ்சத்தோடு மஞ்சத்தில் படுத்தபடியே இமையோடு இமை பொருந்தாது கிடந்தாள்.

இவை இங்கனமாக, கண்ணகிக்குத் தேவந்தி என்னும் பார்ப்பனத்தோழி ஒருத்தியிருந்தாள்.அவள் இளமையில் கண்ணகியின் தங்தை மாநாய்கன் மனையில் உடன் வளர்ந்தவள். அவள் கண்ணகிக்குக் கணவன் பிரிவால் நேர்ந்த துன்பத்தை உணர்ந்து வருக்தியவளாதலின், ஒருநாள் மிக்க வருத்தம் உடையவளாய்த் தான் தினந்தோறும் சென்று வழிபட்டு வரும் பாசண்டச்சாத்தன் கோயிலுக்குச் சென்று, அறுகு, சிறுபூளைப்பூ, கெல் முதலியவற்றைத் தூவித் தொழுது, “கண்ணகி விரைவில் கணவனைப் பெறல் வேண்டும்!” எனப் பிரார்த்தித்துப் பின்பு கண்ணகியிடம் சென்று அவளை நோக்கி, “நீ உன் கணவரைப் பெறுவாயாக!” என்றாள்.

இதனைக்கேட்ட கண்ணகி, “தோழி, உன் ஆசி பொய்க்காது; நான் என் கணவரைப் பெறுவேன்; ஆயினும், நேற்றிரவு நான் கண்ட கனாவினால், என் நெஞ்சம் ஐயமுறுகின்றது! அதனேக்கேள் : கனவின் கண் கணவர் என் கையைப்பற்றி இவ்வூரை விட்டு அழைத்துப்போக, யாங்கள் ஒரு பெரிய நகரில் புகுந்தோம்; அங்கனம் புகுந்த நகரிடத்தில் எங்கட்கு ஏலாததாரு படிற்றுரையை (பொய்ப்பழிச் சொல்லை) இடுதேள் இடுமாறுபோல, (பொய்த்தேளை மேலே வைத்தல்) அவ்வூரார் எம்மேல் இட்டனர்; அப்பழியால் கோவலர்க்கு ஒரு தீங்கு நேர்ந்ததென்று சிலர் சொல்லக்கேட்டு, அதுபொறாமல், ஆண்மக்கள் முன்னர்ச் செல்லாதேன், அவ்வூர் அரசன் முன் சென்று, வழக்குரைத்தேன். ஆதலால், அவ்வரசனேடு அவ்வூர்க்கும் உற்றதோர் தீங்குண்டு; பின்னர் நிகழ்ந்த கனா தீக்கனவாதலின், அதனை உனக்கு யான் விரித்துரையேன் ; கடைசியாக நான் என் கணவரோடு பெற்ற நற்செய்தியை நீ கேட்பாயாயின், அது நம்புந்தன்மையது அன்றாகலின், உனக்கு நகையைத்தரும்,” என்று கனாத்திறம் கூறினாள்.

அப்பால் தேவந்தி கூறுவாள், “கண்ணகி, நீ கண்ட கனாத் தீயதென்று நினைந்து வருந்தவேண்டா, நீ கணவரால் வெறுக்கப்பட்டவளும் அல்லை; நீ முற்பிறப்பிற் கணவர் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பு தவறினை; அதனாலேயே இத்துன்பம் வந்தது. இது தீரும் பரிகாரம் ஒன்றுண்டு:காவிரி நதிகடலோடு கலக்கும் துறையில் நெய்தற் கானலிடத்தில் சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் இரண்டு தடாகமுள்ளன; அத்தடாகங்களில் மூழ்கிக் காமவேள் கோட்டத்தில் (மன்மதன் கோவில்)புகுந்து அத்தெய்வத்தை வழிபடுவோர், இப்பிறப்பில் நாளெல்லாம் தம் கணவரோடு பிரிவின்றியிருந்து இவ்வுலகத்தில் இன்பமுறுவர்; மறுமையிலும் தம் கணவரோடு உறைந்து மகிழ்ந்து வாழ்வர்; ஆதலால், நாமும் ஒரு நாள் அத்தடாகத்தில் மூழ்கி அத்தெய்வத்தைத் தொழுவோம்,” என்று கூறினாள். அவள் கூறியவற்றைக் கேட்ட கண்ணகி தேவி, “அவ்விதம் புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கித் தெய்வந்தொழுதல் நற்குடியிற்பிறந்த கற்புடை நங்கையர்க்கு இயல்பன்று; ‘குலமகட்குக் கொண்டானிற் சிறந்த தெய்வம் வேறில்லை’, என்ற நீதி அறிந்ததன்றோ?” என்று சொன்னாள்.

இவ்வளவில் மாலைப்பொழுது வந்தது. வீடு தோறும் மனையாட்டியர் மணி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை முல்லை மலரும் நெல்லும் தூவி வணங்கித் தங்களைக் கோலஞ் செய்து கொண்டனர். அப்போது கண்ணகியின் தாதி, அவளிடம் அணுகி, “கோவலர் தமது தலை வாயிலில் வந்துள்ளார்,” என்றனள். அவ்வளவிலே கோவலன் உட்புகுந்தான். கண்ணகி தொழுதாள். கண்ணகியுடன் அவன் பள்ளியறை யுட்சென்று, அவளது வாடிய மேனியையும் நெஞ்சின் வருத்தத்தையுங் கண்டு வருந்தி, “எல்லோரிடத்தும் பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் மாயப்பரத்தையோடு மருவி வாழ்ந்த காரணத்தால், நம் முன்னோர் நெடுங்காலமாய்த் தேடிவைத்த மிகுந்த செல்வத்தையெல்லாம் தொலைத்து வறுமையுற்றேன்; இவ்வறுமை, எனக்கு மிக்க நாணத்தைத் தருகின்றது,” என்றான். கண்ணகி, “மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமை பற்றியே இங்கனம் தளர்ந்து கூறுகின்றார்,” எனக் கருதிப் புன்முறுவல் பூத்து, கோவலனை வணங்கி, “என்னிடம் இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன; அவற்றை எடுத்துக்கொள்க,” என்று சொன்னாள். அதற்குக் கோவலன், நீ சொன்ன இச்சிலம்பை நான் வாணிப முதலாகக்கொண்டு, மதுரை சென்று, இது காறும் அழித்த அணிகலன்களையும் பொருள்களையும் ஈட்டக் கருதுகின்றேன்; கண்ணகி, நீயும் என்னுடன் புறப்பட்டு வைகறையில் வருதல் வேண்டும்.” எனக் கூறினான். கண்ணகியும் உவப்புடன் உடன் பட்டிருந்தனள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *