கண்ணகி தேவி
ஆ. கார்மேகக் கோனார்

கோவலன் வாழ்க்கை

அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பெருங்குடியர் மரபிலே பேரீகையாளன் மாநாய்கன் என்பான் ஒருவனிருந்தான். அவன் மகள் கண்ணகி என்னும் பெயரினள். அங்நகரத்திலே மாசாத்துவான் என்னும் மற்றொரு வணிகர் குலதிலகனும் இருந்தனன். அவன் குமாரன் கோவலன் என்னும் பெயரினன். கண்ணகி வளர்ந்து, கற்பால் அருந்ததியையும் பொற்பால் திருமகளையும் நிகர்த்து விளங்கினாள். கோவலன் அழகிற்சிறந்த ஆடவர் திலகனாய், நூல் பல பயின்று நுண்ணிய அறிவினனாய், வணிகத்துறையிலும் மற்றைய துறைகளிலும் தேர்ச்சிபெற்று, மிக்க புகழுடன் விளங்கினன். இவன் பளிங்குபோன்ற களங்கமற்ற உள்ளமுடையவன்; பிறர் கூறுகின்றவற்றை யெல்லாம் மெய்யென்றே கருதும் தூயகுணமுடையவன் தருமமும் தண்ணளியும் மிகுந்தவன். இத்தகைய கோவலனுக்குப் பதினாறாண்டும் கண்ணகிக்குப் பன்னீராண்டும் நடவாநிற்கையில்,அவர்தம் பெற்றோர், அவர்களது திருமணத்தைப்பற்றிப் பேசி, முடிவிட்டுத் தம்மக்கட்கு மணமென்று ஊரார்க்கு அறிவித்தனர். பின்பு வயிரமணித்தூண்கள் நிரை நிரையாகப் பொருந்திய மண்டபத்தில், நீலப்பட்டு மேற்கட்டியின் கீழ் நிறுத்தின முத்துப்பந்தரில், உறவின் முறையார் சூழ்ந்திருக்க, இன்னிசை வாத்தியங்கள் இயம்ப, புரோகிதன் சடங்கு காட்டக் கோவலன் கண்ணகியை அங்கியங்கடவுள் சான்றாக மணந்தனன். உறவு மகளிர்கள் அட்டமங்கலம் ஏந்தி, மணமக்களிருவரையும், ‘பல்லாண்டு வாழ்க !’ என்று வாழ்த்தி, அரசனையும் வாழ்த்தினர்.

கோவலனும் கண்ணகியும், மலரும் அதன் நறுமணமும், அமிர்தும் அதன் தீஞ்சுவையும்போல உள்ளங் கலந்து, ஒருமித்து அன்புடன் இன்புற்று வாழும் நாளில், கோவலன் தாயாகிய பெருமனைக்கிழத்தி என்பவள், தன் மகனும் மருகியும் சேர்ந்து இல்லறத்தைச் செவ்விதாக நடத்திக் கைதேர்ந்து உயர்ச்சி பெற்று விளங்குதலைக் காண விரும்பி, வேறொரு மாளிகை நிருமித்து, அதில் வேண்டும் பண்டங்களை நிரப்பி, ஏவலாளரையும் நியமித்து, அவர்களை அங்கு வாழும்படி செய்தனள். அவர்கள் அம்மாளிகையில் இருந்து இல்லறத்திற்குரிய அன்பும் அருளுமுடைய வராய், இன்சொல் வழங்கி விருந்து போற்றியும், உத்தமர்க்கு உபகரித்தும், அந்தணரைப் பாதுகாத்தும், துறவிகளை எதிர் சென்று உபசரித்தும் இல்லறத்தை இனிதாக நடத்தி வந்தனர். இவ்வாறு சிலவாண்டுகள் கழிந்தன.

அந்நாளில் காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திராபதி யென்பாள் ஒரு நாடகக் கணிகை இருந்தாள். அவள் மகள் மாதவி என்பவள். அவள் ஊர்வசியின் அமிசமாய்ப் பிறந்தவள்; அவள் ஐந்தாண்டில் ஆடல் பாடல்களை ஆசிரியரிடத்துப் பயிலத்தொடங்கி, ஏழாண்டுவரை பயின்று, அவற்றில் மிக்க தேர்ச்சி பெற்று, அழகுடன் விளங்கிப் பன்னிரு பிராயம் அடைந்தாள். அவளது தேர்ச்சியைச் சோழன் கரிகாற்பெருவளத்தான் சபையில் ஆடலாசிரியனும் பாடலாசிரியனும் கூடி அரங்கேற்றுவித்தனர். அரங்கேற்றத்தைக் காணுமாறு அரசன் முதல் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ற இருக்கைகளில் வந்து அமர்ந்தனர். மாதவி நாடகமேடையை அடைந்து, முதிய கணிகையர் தெய்வப்பாடல்கள் பாட, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவிகள் அதனதன் வழி நின்று இன்னிசை எழுப்ப, பல வகைக் கூத்துக்களை உட்கருத்து வெளியிற் புலப்படும்படி அபிநயித்து நடித்துக் காட்டினாள். அரசன் கண்டு மகிழ்ந்து, மாதவியின் தகுதிக்கு ஏற்பத் தலைக்கோல் பட்டம் அளித்து, ஒரு பச்சை மாலையுடன் ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னும் பரிசமாகக் கொடுத்தான்.

இவற்றைப்பெற்ற மாதவி,தன்னுடைய வீடு சென்று, ஒரு கூனியை அழைத்து, “இப்பச்சை மாலை ஆயிரத்தெண்கழஞ்சு பொன் பெறுவதாகும்: இவ்விலையைக் கொடுத்து இம்மாலையை வாங்கி அணிகின்றவர் எவரோ, அவரே மாதவிக்குக் கணவராதற்குத் தக்கோராவர்,” என்று கூறும்படி சொல்லி, அவள் கையில் அம்மாலையைக் கொடுத்து, விலைக்கு விற்பார் தன்மையில் அவளை நகரின் பெருந்தெருவில் நிறுத்தினாள். மாதவியின் அரங்கேற்றத்தைக் கண்டு மகிழ்ந்து அவளை விரும்பியிருந்த கோவலன், ஆயிரத்தெண்கழஞ்சு பொன்னையும் கொடுத்து அம்மாலையை வாங்கி அணிந்துகொண்டு, கூனியுடன் மாதவியின் மனை புகுந்து, தன் மனையையும் மனைவியையும் மறந்து, அவளுடன் அளவளாவியிருந்து, அவளுக்குத் தன் செல்வமெல்லாவற்றையும் நாடோறும் கொடுத்துக்கொண்டு, அங்கேயே வாழ்வானாயினான், கோவலனுக்கு மாதவி வயிற்றில் மணிமேகலை என ஒரு மகளும் பிறந்தாள். இக்காலத்தில் இவன் செய்த புண்ணிய தானங்களும், பிறர்க்குச் செய்த உபகாரங்களும் பல.

கண்ணகியோ, கவினழிந்து தனது ஆருயிர்க்காதலன் பிரிவினால் வருந்தி, அவ்வருத்தம் வெளியில் புலப்படாது மறைத்துக் கணவன் மீது சிறிதேனும் வெறுப்பின்றி, மாமன் மாமியருக்குச் செய்யவேண்டி பணிகளை வழுவாது செய்துகொண்டிருந்தாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *